23 September 2017

கோயில் உலா : மயிலாடுறை கோயில்கள்

காவிரி புஷ்கர ஏற்பாட்டை காண்பதற்காக 4 செப்டம்பர் 2017 அன்று மயிலாடுதுறை துலாக்கட்டத்திற்குச் சென்றபோது காவிரியின் வட கரையிலும், தென் கரையிலும் உள்ள கோயில்களுக்குச் செல்லும் வாய்ப்பு கிடைத்தது. 

காவிரி புஷ்கரத்திற்காகத் தயாரான துலாக்கட்டம்

மயிலாடுதுறையில் உள்ள ஏழு காசி விசுவநாதர் கோயில்களில் மூன்று கோயில்களுக்கு இப்பயணத்தின்போது சென்றேன். இதற்குமுன் தேவாரப்பாடல் பெற்ற, மயூரநாதர் கோயிலுக்கு நவம்பர் 2016இல் சென்றுள்ளோம். இப்போது இந்த நான்கு கோயில்களுக்கும் செல்வோம். 

1) வட கரை : காசி விசுவநாதர் கோயில்
காசி விசுவநாதர்-விசாலாட்சி
கன்வ மகரிஷியால் பூசிக்கப்பட்ட விஸ்வநாதர் என்ற பெருமையுடைய இக்கோயிலில் சிதம்பரத்து ரகசியம் யந்திர வடிவமாக உள்ளது. 16 செப்டம்பர் 2013 அன்று இக்கோயிலின் குடமுழுக்கு நடைபெற்றுள்ளது.

2) வட கரை : கேதாரநாதர் கோயில்
கேதாரநாதர்-கௌரி அம்மன்
 
மிகச் சிறிய அளவில் அமைந்துள்ள இக்கோயிலின் விமானம் வித்தியாசமான முறையில் அமைந்துள்ளது. அண்மையில் குடமுழுக்கு நடைபெற்றதை அறியமுடிந்தது. 

3) தென் கரை : காசி விசுவநாதர் கோயில்
காசி விசுவநாதர்-விசாலாட்சி

தருமபுரம் ஆதீனத்திற்குச் சொந்தமான இக்கோயில் லாடகம் என்னுமிடத்தில் அமைந்துள்ளது. ஐப்பசி மாதம், துலா மாதப் பிறப்பு,  துலா அமாவாசை, கடைமுக தினத்தில் பஞ்சமூர்த்திகளுடன் எழுந்தருளி காவிரியில் தீர்த்தம் கொடுப்பதால் சிறப்பு பெற்றது. ஏழு காசி விஸ்வநாதர் கோயில்களில் இக்கோயில் முதன்மையான கோயிலாகக் கருதப்படுகிறது. கோயிலின் விமான அமைப்பு காசியில் உள்ளதைப் போன்று உள்ளது.

4) தென் கரை : படித்துறை காசி விசுவநாதர் கோயில்
படித்துறை விசுவநாதர்-விசாலாட்சி கோயில்
 
இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகத்தில் கீழுள்ள இக்கோயில் பாலக்கரையில் அமைந்துள்ளது. மூன்று நிலைகளைக் கொண்ட கோபுரத்துடன் உள்ளது.

மேற்கண்ட நான்கு கோயில்களும் பிற சிவன் கோயில்களைப் போன்ற அமைப்பில் உள்ளன. இவை துலாக்கட்டம் அருகே அமைந்துள்ளன.அனைத்து கோயிலும் விமானங்களுடனும், கோஷ்ட தெய்வங்களுடனும் காணப்படுகின்றன.  வாய்ப்பு கிடைக்கும்போது தொடர்ந்து மயிலாடுதுறையிலுள்ள பிற காசி விசுவநாதர் கோயில்களுக்குச் செல்வோம்.


டெக்கான் க்ரானிக்கல் இதழில் 11 செப்டம்பர் 2017இல் வந்த செய்தியை இன்றுதான் கண்டேன், பகிர்வதில் மகிழ்கிறேன். 
"144 ஆண்டுகளுக்குப் பிறகு கொண்டாடப்படுகின்ற நிலையில் காவிரி புஷ்கரம் முக்கியத்துவம் பெறுகிறது என்று கும்பகோணத்தைச் சேர்ந்தவரும், தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் பணி நிறைவு பெற்ற உதவிப்பதிவாளருமான ஜம்புலிங்கம் கூறினார்." (நன்றி : டெக்கான் க்ரானிக்கல், 11 செப்டம்பர் 2017) 


26 செப்டம்பர் 2017இல் மேம்படுத்தப்பட்டது.

15 September 2017

Tamil library celebrates centenary of founder : The New Indian Express

தமிழ்ப்பல்கலைக்கழகம் 37ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் இந்நாளில், கும்பகோணத்தில் பள்ளிக்காலம் தொடங்கி நான் சென்று வரும் சிவகுருநாதன் செந்தமிழ் நூல் நிலையத்தைப் பற்றி இன்றைய இந்தியன் எக்ஸ்பிரஸ் இதழில் வெளியான கட்டுரையில் பதிவான என் வாசிப்பு அனுபவங்களைப் பகிர்வதில் மகிழ்கிறேன், அவ்விதழுக்கு நன்றியுடன். (N.Ramesh, Tamil library celebrates centenary of founder, City Express, The New Indian Express, Trichy Edition, 15th September 2017, p.3) 

கும்பகோணம் சிவகுருநாதன் செந்தமிழ் நூலகத்துடனும் அதன் நிறுவனருடனும் இருந்த தொடர்பை நினைவுகூர்ந்தபோது, பள்ளிக்காலத்தில் அந்நூலகத்தில் முதலில் வரலாற்றுப் புதினங்கள் வாசிக்கத் தொடங்கியதாக  சிட்டி எக்ஸ்பிரஸ் இதழிடம் ஆய்வாளரும் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் பணிநிறைவு பெற்ற உதவிப் பதிவாளருமான ஜம்புலிங்கம் கூறினார்.  எந்த வகையான நூல்களை வாசிக்கவேண்டும் என்பது தொடர்பான ஆலோசனையை நிறுவனரிடம் பெற்றதாகவும், கல்லூரியில் படிக்கும்போதுகூட  நூல்களை வாசிக்க அந்நூலகத்திற்கு வந்ததாகவும் அவர் கூறினார். "1993இல் நான் பௌத்த ஆய்வு மேற்கொள்ளத் தொடங்கிய காலகட்டத்தில் அடிக்கடி இந்நூலகத்திற்கு வந்து அங்குள்ள அரிய நூல்களை வாசித்தேன்" என்றும்  ஜம்புலிங்கம் கூறினார்.  


கட்டுரை வெளியான 3ஆம் பக்கம்


City Express, The New Indian Express, Trichy Edition, 15th September 2017, p.3

"Swaminatha Chettiar visited the mutt when he was the trustee of the Kumbeswarar temple and he had arranged the car festival of the temple", says B.Jambulingam, a researcher and the retired Assistant Registrar of Tamil University.


13 September 2017

மைக்ரோசிப் : அனுசரணையா? ஆபத்தா?

பத்திரிக்கை.காம் இதழில் வெளியான கட்டுரையின் மேம்படுத்தப்படுத்தப்பட்ட வடிவம். என் கட்டுரையை வெளியிட்ட பத்திரிக்கை.காம் இதழுக்கு என் மனமார்ந்த நன்றி.


அமெரிக்காவில் விஸ்கான்சில் உள்ள த்ரி ஸ்கொயர் மார்க்கெட் (Three Square Market) என்ற நிறுவனம் தம்மிடம் பணியாற்றும் 40 பணியாளர்களிடம் மைக்ரோசிப்புகளைச் செலுத்தியுள்ளது தொடர்பாக அண்மையில் செய்தி வெளியாகியிருந்தது. 
அச்செய்தியைப் பற்றி முந்தைய ஒரு பதிவில் படித்தோம். அந்த மைக்ரோசிப்பைப் பற்றி சுவாரசியமான தகவல்களைக் காணமுடிந்தது. உரிய பணியாளர் அறைக்குள் செல்லும்போது அங்கு பணியாற்றும் சக பணியாளர்களுடைய மைக்ரோசிப்புகளுடன் இணைப்பு கிடைக்கும். திரையில் அவர்களைப் பார்க்கலாம், அவர்களுடைய பணிகள், குணநலன்கள், நடந்துகொள்ளும் முறை, குறைகள் நிறைகள் உள்ளிட்டவற்றை அறியலாம். 

"இது ஒரு மைக்ரோசிப் மட்டுமே. ஒருவர் நாள் முழுதும் 24 மணி நேரத்திற்கு ஒரு தொலைபேசியை வைத்திருந்தாலே அவர் மைக்ரோசிப் வைத்துள்ளதாக பொருள் கொள்ளலாம். அவ்வகையில் இதனைப் பற்றி எவரும் கவலை கொள்ளவேண்டாம்" என்று அந்நிறுவனம் கூறியுள்ளது. (நன்றி : இன்டிபென்டன்ட்)
(நன்றி : https://www.sciencealert.com)
(நன்றி : https://www.usatoday.com) 
இதுவரை ரோபோக்கள் நம் பணிகளை மேற்கொள்வதைப் பார்த்துள்ளோம். இது சற்றே மாறுபட்டது.  கட்டை விரலுக்கும் பெருவிரலுக்குமிடையே பொருத்தப்படுகின்ற இந்த மைக்ரோசிப்பானது ஒரு அரிசி அளவானது. கையைத் தூக்காமலேயே பல பணிகளை எளிதாகச் செய்யமுடியும். இம்முறை அறிமுகப்படுத்தவுள்ளது என்று கேள்விப்பட்டபோது பல பணியாளர்கள் வியந்தார்களாம், சற்றே யோசித்தார்களாம். பின்னர் பலர் இந்த முறையை ஏற்றுக்கொண்டார்களாம். ஒரு நபருக்குப் பொருத்த 300 அமெரிக்க டாலர் செலவாவதாகவும், அச்செலவினை அந்நிறுவனமே ஏற்றுக்கொள்வதாகவும் இம்முறையினால் எந்த தீங்கும் கிடையாது என்றும் அந்நிறுவனம் கூறியுள்ளது. இந்த முறை பாதுகாப்பானது என்பதை நிரூபிப்பதற்காக முதலில் தன் மனைவிக்கும் குழந்தைகளுக்கும் பொருத்தப்படவுள்ளதாக அந்நிறுவனத்தின் அலுவலர் தெரிவித்துள்ளார். பணியாளர்கள் மனம் மாறி தனக்கு அது தேவையில்லை என்று நினைத்தால் அதனை வெளியில் எடுத்துவிடலாம். இன்டர்நெட் இணைப்பு அதற்குக் கிடையாது என்றும் இதுவும் ஒரு வகையான கிரடிட் கார்ட் போலவே என்கிறது அந்நிறுவனம். அலுவலக அறையின் கதவைத் திறத்தல், நகலெடுக்கும் இயந்திரத்தினைப் பயன்படுத்துதல், கணிப்பொறியில் புகுபதிகை (log in) செய்து உள்ளே செல்லல், தொலைபேசிகளைத் திறத்தல் (unlock), வணிக நோக்கிலான அட்டைகளை பரிமாறிக்கொள்ளல், மருத்துவ/உடல் நலம் பற்றிய தகவல்களைப் பதிந்துவைத்துக்கொள்ளல் என்ற பல நிலைகளில் இது உதவும்.  (நன்றி : For the first time, a US company is implanting microchips in its employees, https://www.sciencealert.com/for-the-first-time-a-us-company-is-implanting-microchips-in-its-employees)  இம்முறை மூலமாக பேரழிவினை நோக்கி நாம் செல்கின்றோமா என்ற ஐயமும் எழுந்துள்ளது. (நன்றி : 'Mark of the beast?' Microchipping employees raises apocalyptic questions, https://www.usatoday.com


(நன்றி : https://www.nytimes.com)
இத்திட்டமானது த்ரி ஸ்கொயர் மார்க்கெட் நிறுவனத்தாலும் ஸ்வீடன் நாட்டு நிறுவனமான பயோகாக்ஸ் இன்டர்னேஷனல் நிறுவனத்தாலும் இணைந்து மேற்கொள்ளப்படுகிறது. அமெரிக்காவில் முதன்முறையாக இங்குதான் அறிமுகப்படுத்தப்படுகிறது என்று கூறப்பட்டபோதிலும், ஸ்வீடனைச் சேர்ந்த எபிசென்ட்டர் என்ற நிறுவனம் இந்த முறையை முன்னரே அறிமுகப்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது. பிரைவசி மற்றும் உடல் நலன் என்ற நிலையில் பல கேள்விகளை இந்த முறையானது எழுப்புகிறது. முதலில் ஏதோ சதி என்று நினைக்கப்பட்டபோதிலும் பின்னர் அது அவ்வாறல்ல என்பதும் பணியாளர்கள் இதனை ஏற்பதாகவும் கூறப்படுகிறது. (நன்றி : Microchip implants for employees? One company says yes, New York Times) 

கருப்புப்பூனை (Black Cat) திரைப்படம் 
இந்த மைக்ரோசிப் பற்றிய செய்தியைப் படித்தபோது 1991இல் நான் பார்த்த The Black Cat என்ற திரைப்படம் நிறைவிற்கு வந்தது. ஸ்டீபன் ஷீன் (Stephen Shin) தயாரித்த அத்திரைப்படத்தில் ஜேட் லியூங், காத்தரினாக நடித்துள்ளார். எதிர்பாரா விதமாக அவர் ஒரு டிரக் டிரைவரை கொன்றுவிடுகிறார். விசாரணையிலிருந்து தப்பிக்கும்போது அவர் பிடிக்கப்படுகிறார். அவருடைய மூளையில் கருப்புப்பூனை சிப் ("Black Cat" chip) செலுத்தப்படுகிறது. அவர் முழுக்க முழுக்க அமெரிக்க உளவுத்துறையின் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிடுகிறாள். அது அவளை எரிக்கா எனப்படுகின்ற உளவுத்துறை ஏஜென்டாக மாற்றிவிடுகிறது.   (புகைப்படமும் செய்தியும் நன்றி : ஆங்கில விக்கிபீடியா). 
அவ்வப்போது கதாநாயகி, அவளுக்கு இடப்படுகின்ற ஆணைக்கேற்ப உரிய நபரைக் கொலை செய்வார். அவ்வாறான இலக்கில் ஒருவர் நீச்சல் குளத்தில் குளித்துக்கொண்டிருப்பார்.  சிறிது நேர இடைவெளியில் குளத்திற்கு வெளியே வந்து வெளியில் உட்கார்ந்துகொண்டு குளத்தில் இரு கால்களையும் விட்டுக் கொண்டு அமர்ந்திருப்பார். கதாநாயகி நீச்சல் குளத்தில் நீரின் அடியாக வந்து யாரும் எதிர்பாராத வகையில் அவரைக் கொன்றுவிடுவார். அவருக்கோ அருகில் உள்ளவர்களுக்கோ என்ன நடந்தது என்றே தெரியாது. அதற்காக அவர் மேற்கொள்கின்ற உத்தி ஒவ்வொரு முறையும் வித்தியாசமாக இருக்கும். அப்பணி முடிந்தபின் சிப் மூலமாக பெறுகின்ற கட்டளையின்படி திரும்ப வந்துவிடுவார். ஒவ்வொரு முறையும் இவ்வாறாகக் பணியை முடித்த பின் தலையைப் பிடித்துக் கொண்டு அழுவார், துடிப்பார். பார்க்க வேதனையாக இருக்கும். அவள் செய்தது, செய்துகொண்டிருப்பது, செய்யப்போவது அவளுக்கே தெரியாது. 
   
தனியொருவன் திரைப்படம்
அண்மையில் ஜெயம் ரவி நடித்து வெளியான தனியொருவன் திரைப்படத்திலும் இதுபோன்ற கதையமைப்பினைக் காணமுடிந்தது. அவருக்குத் தெரியாமல் அவருடைய உடம்பில் மைக்ரோசிப் பொருத்தப்பட்டு அவர் படாத பாடு படுவார். கதை விறுவிறுப்பாக இருக்கும்.

இவ்வாறான மைக்ரோசிப் தொடர்பான திரைப்படங்களோடு ஒப்புநோக்கும்போது இந்த முறையானது சாதகங்களைவிட அதிகமான பாதகங்களையே தருமோ என சிந்திக்கத் தோன்றுகிறது. மனிதர்களை இயந்திரங்களாக ஆக்கிக் கொண்டிருக்கின்றனர். அதே சமயத்தில் பிரைவசி என்று ஒரு பக்கம் கூப்பாடு போட்டுக் கொண்டும் இருக்கின்றார்கள்.  ஆபத்து இல்லை என்று நிறுவனங்கள் கூறும்போதிலும்கூட இம்மாதிரியான உத்திகளால் ஏற்படுகின்ற விளைவினை நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை. அணுகுண்டு கண்டுபிடிப்பு முதல் க்ளோனிங் எனப்படுகின்ற படியாக்கம் வரை அறிவியல் கண்டுபிடிப்புகளும் உத்திகளும் அறிமுகமாகும்போது எதிர்மறைக் கண்ணோட்டத்திலேயே பார்க்கப்பட்டன.  இப்போதும் நாம் அவ்வாறே அணுகும் கண்ணோட்டத்தில் உள்ளோம். இருந்தாலும் இதன் விளைவுகளை பொறுத்திருந்து பார்ப்போம்.
----------------------------------------------------------------------
என்னுடைய சோழ நாட்டில் பௌத்தம் வலைப்பூவில் 
செப்டம்பர் 2017 மாதப் பதிவு
----------------------------------------------------------------------

09 September 2017

அயலக வாசிப்பு : ஆகஸ்டு 2017

இம்மாத அயலக வாசிப்பில் வழக்கம்போல் கார்டியன், இன்டிபென்டன்ட், டெலிகிராப், டான் ஆகியவை இடம் பெற்றுள்ளன. சீனாவிலிருந்து வரும் குளோபல் டைம்ஸ் இதழிலிருந்து ஒரு செய்தியைக் காண முடிந்தது. மற்ற அனைத்தும் வழக்கமாக படிக்கும் இதழ்களே. பணியாளர்களிடம் சிப்பினை அமைத்தல் தொடர்பான செய்தியைப் படிக்கும்போது 1991இல் நான் பார்த்த திரைப்படம் நினைவிற்கு வந்தது. 

இந்தியாவின் 70ஆவது விடுதலை நாளை நினைவுகூறும் வகையில் கெட்டி இமேஜஸ் கேலரி (Getty Images Gallery) இந்தியாவின் அக்கால புகைப்படங்களைக் கொண்ட கண்காட்சியை பிரிட்டனில் நடத்துகிறது. புதுதில்லி நுழைவாயில் (1858), யமுனையிலிருந்து தாஜ் மகால் (1859), டார்ஜிலிங்கில் பௌத்த இசை வல்லுநர்கள் (1870கள்), காசியில் கங்கைக்கரையோரத்தில் மயானப் படித்துறை அருகே விஷ்ணு மற்றும் பிற கோயில்கள் (1865), இமயமலையில் லகாவூல் பள்ளத்தாக்கு (1866), உல்வார் மகாராஜா ஜெய்சிங் (1877), பம்பாயில் கிர்காம் சாலை (1890-1910) உள்ளிட்ட பல புகைப்படங்கள் அக்கண்காட்சியில் இடம்பெறவுள்ளன. (நன்றி : கார்டியன்) அமெரிக்காவில் விஸ்கான்சில் உள்ள த்ரிஸ்கொயர் மார்க்கெட் (Three Square Market) என்ற நிறுவனம் தன்னிடம் பணியாற்றும் 40 பணியாளர்களிடம் மைக்ரோசிப்புகளைச் செலுத்தியுள்ளது. அந்த பணியாளர் அறைக்குள் செல்லும்போது அங்கு பணியாற்றும் சக பணியாளர்களுடைய மைக்ரோசிப்புகளுடன் இணைப்பு கிடைக்கும். திரையில் அவர்களைப் பார்க்கலாம், அவர்களுடைய பணிகள், குணநலன்கள், நடந்துகொள்ளும் முறை, குறைகள் நிறைகள் உள்ளிட்டவற்றை அறியலாம். "இது ஒரு மைக்ரோசிப் மட்டுமே. ஒருவர் நாள் முழுதும் 24 மணி நேரத்திற்கு ஒரு தொலைபேசியை வைத்திருந்தாலே அவர் மைக்ரோசிப் வைத்துள்ளதாக பொருள் கொள்ளலாம். அவ்வகையில் இதனைப் பற்றி எவரும் கவலை கொள்ளவேண்டாம்" என்று அந்நிறுவனம் கூறுகிறது. (நன்றி : இன்டிபென்டன்ட்) இந்த மைக்ரோசிப் பற்றிய செய்தியைப் படித்தபோது 1991இல் நான் பார்த்த The Black Cat மற்றும் அண்மையில் ஜெயம் ரவி நடித்து வெளியான திரைப்படங்கள் நினைவிற்கு வந்தன. அவற்றைப் பற்றி தனியாக ஒரு பதிவில் பார்ப்போம்.  
பாகிஸ்தானைச் சேர்ந்த, அரிய இதய நோயைக் கொண்ட மூன்று வயது குழந்தை இந்தியாவில் சிகிச்சை பெற்று புதிய வாழ்வினைப் பெற்றுள்ளது. 2,00,000இல் ஒரு குழந்தைக்கு இந்நோய் வருவதற்கான சாத்தியக்கூறு உள்ளதாம். நோயுறும் பல பாகிஸ்தானியர்கள் மருத்துவ விசாவினைப் பெற்று இந்தியா வந்து செல்கின்றனர். டெல்லியிலுள்ள அப்பல்லோ போன்ற பல மருத்துவமனைகளுக்கு ஒவ்வொரு மாதமும் 500 நோயாளிகள் வந்துள்ளனர். பல நோயாளிகள் இதய நோய் சிகிச்சைக்காக சென்னைக்கு வந்து குணமாகின்றனர். (நன்றி : டான்) 

கேம் ஆப் த்ரோன்ஸ் (Game of Thrones) நட்சத்திரங்களைப் பற்றிய சொந்த தகவல்கள் கசியவிடப்பட்டுள்ளதாகவும், தொடர்ந்து இந்நிகழ்ச்சியின் பல காட்சிகளை முன்கூட்டியே கசியவிடப்போவதாகவும் அதனை ஹேக் செய்தவர்கள் கூறியுள்ளனர். எச்பிஓ (HBO) நிறுவனத்திற்கு அனுப்பியுள்ள ஐந்து நிமிட வீடியோ கடிதத்தில் 1.5 டெர்ராபைட்டுகளை திருடிய அவர்கள் தாம் ஓராண்டிற்கு 12 மில்லியன் டாலர் முதல் 15 மில்லியன் டாலர் வரை சம்பாதிப்பதாகவும், தமக்குரிய ஆறுமாத ஊதியத்தை பிட்காயினாக மூன்று நாள்களுக்குள் தரவேண்டும் என்றும் மிரட்டியுள்ளனர். எச்பிஓ நெட்வொர்க்கை உடைத்துப் புக அவர்களுக்கு ஆறு மாதங்கள் ஆனதாகவும் கூறியுள்ளனர். (நன்றி : கார்டியன்)
 

அண்ணன், அக்காவைவிட, தம்பி தங்கைகளே மிகச் சிறந்த ஓட்டுநர்களாகின்றார்களாம். மூத்த குழந்தைகள் வேகமாக காரை ஓட்டுவார்களாம், அபராதம் கட்டுவார்களாம், பெரும்பாலான சாலை விபத்துக்குக் காரணமாவார்களாம். மாறாக இளையவர்கள் காரை ஓட்டிச் செல்லும்போது மிகவும் கவனமாக இருப்பார்களாம். (நன்றி : இன்டிபென்டன்ட்)

38 வயதாகும் மாஷா-தாஷா மாஸ்கோவில் வசிக்கும் இரட்டையர். ஒரே உடலைக் கொண்டுள்ள இச்சகோதரிகளின் வாழ்வினைப் பின்புலமாகக் கொண்டு புதினத்தை எழுதியுள்ள நூலாசிரியர் தன் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்கின்றார். (சில ஆண்டுகளுக்கு முன் வெளியான தமிழ்த்திரைப்படம் மாற்றான் நினைவிற்கு வருகிறதா? சற்றொப்ப அதைப்போலவே) (நன்றி : டெலிகிராப்)
 
குறைந்த செலவில் சிகிச்சை, உயர் தர மருத்துவம், அதிநவீன மருந்து போன்றவை காரணமாக சீன நோயாளிகள் சிகிச்சை பெற இந்தியா வருகின்றனர். (நன்றி : குளோபல் டைம்ஸ்)

--------------------------------------------------------------------------------------
என்னுடைய சோழ நாட்டில் பௌத்தம் வலைப்பூவில் 
செப்டம்பர் 2017 மாதப் பதிவு
--------------------------------------------------------------------------------------

05 September 2017

காவிரி புஷ்கரம் : மயிலாடுதுறை

அண்மைப்பதிவில் காவிரி புஷ்கரத்தைப் பற்றியும் இந்தியாவில் பிற இடங்களில் நடைபெறுகின்ற புஷ்கரங்களைப் பற்றியும் வாசித்தோம். தமிழ்நாட்டில் நடைபெறுகின்ற காவிரி புஷ்கரத்திற்காக மயிலாடுதுறை தயாராவதைக் காண அங்கு சென்றேன்.அடுத்த வாரம் காவிரி புஷ்கரம் நிகழவுள்ள, மயிலாடுதுறை துலாக்கட்டத்திற்கு நேற்று மாலை சென்றேன். நகரெங்கும் இவ்விழா பற்றிய பதாகைகள் அதிகமாகக் காணப்பட்டன. பேருந்து நிலையத்திலிருந்து அருகில் சீர்காழி சாலையில் காவிரியாற்றங்கரையில் உள்ள துலாக்கட்டம் என்னுமிடத்தில் தற்போது வறண்டு கிடக்கின்ற காவிரியாற்றில் குளம் போன்ற அமைப்பு  செவ்வக வடிவில் கட்டப்பட்டு வருகிறது. அதிகமான எண்ணிக்கையிலான தொழிலாளர்களும், இயந்திரங்களும் அதில் ஈடுபடுவதைக் காணமுடிந்தது. தற்போது அமைக்கப்படுகின்ற அந்த நீர்த்தேக்கத்தில் ஆங்காங்கே கிணறுகளும் அமைத்து வருகின்றனர். முழுவீச்சில் பணி நடைபெறுகிறது.

உள்ளூரிலிருந்தும், வெளியூரிலிருந்தும் அங்கு பலர் வந்து கண்டு செல்வதைக் காணமுடிந்தது. கும்பகோணம் மகாமகத்தின்போது காணப்படுகின்ற ஓர் எதிர்பார்ப்பினை அவர்களுடைய முகத்தில் காணமுடிந்தது. காவிரியாற்றில் தண்ணீர் இல்லாததே பெரும்பாலானோரின் குறையாகக் காணப்பட்டது. இவ்வாறு அமைக்கப்படுகின்ற நீர்த்தேக்கத்தை ஒரு செயற்கைத் தன்மையுடையதாகவே அவர்கள் நோக்குகின்றார்கள்.

வான் பொய்ப்பினும் தான் பொய்யாக் காவிரியாற்றின் நிலை குறித்து வேதனையடைந்து கொண்டே வந்திருந்த அவர்களுடன் சிறிது நேரம் அங்கு நடைபெறுகின்ற பணிகளை கவனித்தேன். தம் ஊரில் மிக சிறப்பாக இவ்விழா நடைபெறவுள்ளது என்பதை உள்ளூரைச் சேர்ந்தோர் பெருமையுடன் கூறிக் கொள்கின்றனர். காவிரியாற்றின் தென் கரையில் சிறிது நேரம் அமர்ந்து அப்பணிகளைப் பார்த்துவிட்டு காவிரியாற்றில் நடந்து சென்று எதிரே உள்ள வட கரையிலிருந்தும் அப்பணிகளைப் பார்த்துவிட்டு அருகேயுள்ள காசி விசுவநாதர் கோயில்களையும் கண்டேன். 

  

அக்கோயில்களுக்குச் சென்றுவிட்டுத் திரும்பும்போது இருட்டிவிட்டது. வருபவர்கள் கூட்டம் குறைந்தபோதிலும் பணி மும்முரமாகத் தொடர்ந்து விளக்கொளியில் நடைபெறுவதைக் காணமுடிந்தது.

கடந்த புஷ்கரம் 177 ஆண்டுகளுக்கு முன்பாக 12 செப்டம்பர் 1840இல் நடைபெற்றதாகக் கூறப்படுகிறது. (மாலை மலர், 26 ஆகஸ்டு 2017). 12 செப்டம்பர் 2017 (ஆவணி 27) அன்று கொடியேற்றத்துடன் மயிலாடுதுறையில் தொடங்கும் விழா 24 செப்டம்பர் 2017 அன்று விடையாற்றியுடன் நிறைவு பெறவுள்ளது.   இதே காலகட்டத்தில் (21 செப்டம்பர் 2017) நவராத்திரித் திருவிழாவும் தொடங்குகிறது. விழா நாட்களில் மயிலாடுதுறையின் சுற்றுப்புறக் கோயில்களிலிருந்து சுவாமி புறப்பாடு நடைபெறவுள்ளது. இந்நாட்களில் திருமுறை ஓதுதல், சொற்பொழிவுகள், கலை நிகழ்ச்சிகள் போன்றவை நடைபெறவுள்ளன. 


நிலவொளியில் காவிரியாற்றில் (மண்ணில்) நின்று பார்க்கும்போது அழகாக இருந்தது. மறுபடியும் சிறிது நேரம் அங்கிருந்துவிட்டு தஞ்சாவூரை நோக்கிக் கிளம்பினேன். அடுத்த வாரம் புஷ்கரம் நடைபெறும் நாட்களில், வாய்ப்பான நாளில் தமிழ்நாட்டில் மயிலாடுதுறைக்கோ வேறு ஏதாவது ஓர் இடத்திற்கோ செல்ல ஆவலோடு காத்திருக்கிறேன், 144 ஆண்டுகளுக்கொரு முறை நடைபெறுகின்ற அவ்விழாவினைக் காண.   


டெக்கான் க்ரானிக்கல் இதழில் 11 செப்டம்பர் 2017இல் வந்த செய்தியை இன்றுதான் கண்டேன், பகிர்வதில் மகிழ்கிறேன். 
"144 ஆண்டுகளுக்குப் பிறகு கொண்டாடப்படுகின்ற நிலையில் காவிரி புஷ்கரம் முக்கியத்துவம் பெறுகிறது என்று கும்பகோணத்தைச் சேர்ந்தவரும், தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் பணி நிறைவு பெற்ற உதவிப்பதிவாளருமான ஜம்புலிங்கம் கூறினார்." (நன்றி : டெக்கான் க்ரானிக்கல், 11 செப்டம்பர் 2017) Welcoming the Cauvery Mahapushkaram, B. Jambulingam, a resident of Kumbakonam and former assistant registrar of Tamil University here, said that the festival assumes importance as it is celebrated after 144 years (Courtesy: The Deccan Chronicle, 11 September 2017). 
--------------------------------------------------------------------------------------
என்னுடைய சோழ நாட்டில் பௌத்தம் வலைப்பூவில் 
இம்மாதப் பதிவு
--------------------------------------------------------------------------------------
சோழ நாட்டில் பௌத்தம் : மேற்கோள்கள், பதிவுகள்

updated on 26th Sep 2017

02 September 2017

துக்காச்சி ஆபத்சகாயேஸ்வரர் கோயில்

26 பிப்ரவரி 2017 அன்று குடும்பத்துடன் கோயில் உலா சென்றபோது கட்டடக்கலைக்குப் புகழ் பெற்ற  துக்காச்சி ஆபத்சகாயேஸ்வரர் கோயில் சென்றோம். இக்கோயிலைப் பார்க்க வேண்டுமென்ற எனது நீண்ட நாள் ஆசை அன்று நிறைவேறியது. தமிழகத்தில் செங்கல் கட்டுமானத்திற்கும், கருங்கல் கட்டுமானத்திற்கும் புகழ் பெற்ற கோயில்கள் பல உண்டு. அத்தகைய பெருமையினைக் கொண்ட கோயில்களில் இக்கோயிலும் ஒன்றாகும். 

தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் அருகே உள்ள, உயர்ந்த அளவிலான விமானத்தைக் கொண்ட, இடிபாடுற்ற நிலையிலுள்ள வேப்பத்தூர் வீற்றிருந்த பெருமாள் கோயிலுக்கு 2012இல் நாங்கள் சென்று வந்த அனுபவத்தை மார்ச் 2014இல் பகிர்ந்துகொண்டது உங்களுக்கு நினைவிருக்கலாம்.  

துக்காச்சிக்குச் சென்றுகொண்டிருந்தபோது கோயிலின் அமைப்பு, கட்டுமான அமைப்பு போன்றவற்றைப் பற்றிய எண்ணங்கள் எழ ஆரம்பித்தன. வேப்பத்தூர் வீற்றிருந்த பெருமாள் கோயிலைப் போல இடிபாடான நிலையில் உள்ளதா, முற்றிலும் பார்க்க முடியாமா என்பன போன்ற எதிர்பார்ப்புகளோடு துக்காச்சி வந்துசேர்ந்தோம். இடிபாடான ராஜகோபுரத்தினை பார்த்ததும் கோயிலுக்கு வந்த மகிழ்ச்சி ஏற்பட்டது. அருகில் உள்ளோரிடம் விசாரித்து பூட்டியிருந்த கதவு திறக்கப்படும் வரை காத்திருந்தோம். நாங்கள் சென்ற நேரம் கிட்டத்தட்ட நண்பகலாக இருந்த நிலையில் திறப்பார்களோ, மாட்டார்களோ என்ற ஏக்கமும் எங்களை ஆட்டிவைத்தன. 
பூட்டு திறந்து உள்ளே வந்தபின் முதலில் உள்ள ராஜகோபுரத்தைக் கண்டோம். இனி எந்த யுகத்தில் இதுபோன்ற ஒரு கட்டுமானத்தைப் பார்க்கப்போகிறோம்?  
ராஜ கோபுரத்தின் நடுவே எங்கும் இதுவரை பார்த்திராத வகையில் நான்கு கருங்கல் தூண்களைக் கண்டோம். செடிகள் எங்கும் ஆக்கிரமித்திருக்க அதற்கிடையே ஆனையுரித்த தேவர் உள்ளிட்ட  அழகான சிற்பங்களைக் கண்டோம்.


ராஜ கோபுரம், வலப்புறம்

ராஜ கோபுரம், இடது புறம்
அந்த கோபுரத்தின் இடது புறத்தில் சிறிய சன்னதி போன்ற அமைப்பில் செங்கல் கட்டுமானம் காணப்பட்டது.  
தனி சன்னதி போன்ற நிலையில் செங்கல் கட்டுமானம்
ராஜ கோபுரத்தைக் கடந்து உள்ளே சென்றபோது மற்றொரு கோபுரம் காணப்பட்டது. அக்கோபுரமும் சற்றொப்ப ராஜகோபுரத்தைப் போலவே செடிகள் அடர்ந்த நிலையில் காணப்பட்டது.   
அடுத்து அமைந்துள்ள கோபுரம்
இரு கோபுரங்களுக்கும் இடையில் இடது புறத்தில் கருங்கல்லால் ஆன அழகிய மண்டபம் காணப்பட்டது. இடிபாடான நிலையில் இருந்த அந்த மண்டபத்தில் அழகான தூண்களும், சிற்பங்களும் காணப்பட்டன.  உள்ளே சென்று புகைப்படம் எடுக்க மிகவும் சிரமமாக இருந்தது. எந்த நேரமும் விழுந்து விடுமோ என்ற நிலையில் ஓர் அச்சம் எங்களிடம் இருந்தது.  
 

சாவி எடுத்து வந்தவரிடம் கோயிலுக்கு உள்ளே செல்வதற்காகத் திறந்துவிடக் கேட்டபோது அதற்கான சாவி உள்ள பொறுப்பாளர் வெளியே சென்றிருப்பதாகவும், அன்று மாலைதான் அவர் வருவார் என்றும் கூறினார். வேறு வழியின்றி இரண்டாவது கோபுரத்தின் வாயிலில் இருந்தபடியே உள்ளே உள்ள மண்டபத்தைப் புகைப்படம் எடுத்தோம்.    
இக்கோயிலின் பெருமையை சற்றே அறிவோம். "பல்லவ மன்னனான இரண்டாம் நந்தி வர்ம பல்லவனின் (கி.பி.730-795) பட்டப் பெயரான விடேல் விடுகு என்ற பெயரில் துக்காச்சி என்று வழங்கப்படுகிறது. தென் காளத்தி என்ற பெருமையுடைய இக்கோயிலின் விமானம், தாராசுரம் ஐராவதேஸ்வரர் கோயிலைப் போல உள்ளது. மூலவரான ஆபத்சகாயேஸ்வரர் லிங்கத்திருமேனியாக கிழக்கு நோக்கி உள்ளார். அம்மன் சௌந்தரநாயகி தென் திசை நோக்கியுள்ளார். முதல் திருச்சுற்றில் உள்ள துர்க்கை தென் திசை நோக்கியுள்ளார். மகாமண்டபத்தில் சரபமூர்த்தி தென் திசை நோக்கியுள்ளார். தெற்கில் தட்சிணாமூர்த்தி, விநாயகர், முருகன் உள்ளிட்டோர் உள்ளனர். சண்டிகேஸ்வரர் வட திசை நோக்கி தனி சன்னதியில் உள்ளார்."  (தினமணி, 16 டிசம்பர் 2016)

சுமார் 1300 ஆண்டுகள் பழமை வாய்ந்த, தற்போது திருப்பணி காணுகின்ற இக்கோயிலை இயலும் விரைவில் சென்று பார்ப்போம். காலம் கடத்தவேண்டாம், நம் கலையழகினை ரசிப்போம், அது வேறு வடிவம் பெறுவதற்குள். 

கோயிலுக்குச் சென்ற நினைவாக நாங்கள் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள்


என் மனைவி திருமதி பாக்கியவதி, உடன் எங்கள் பேரன் தமிழழகன்
எங்கள் இளைய மகன் திரு ஜ.சிவகுரு

இக்கோயிலில் மே 2023இல் 12ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டது. அக்கல்வெட்டில் இவ்வூரின் தொன்மையைப் பறைசாற்றும் வாசகம் இடம்பெற்றுள்ளதாக கும்பகோணம் வட்டார வரலாற்று ஆய்வுச் சங்க நிறுவனர் ஆ.கோபிநாத் கூறினார். 

இக்கோயிலின் திருப்பணி நடைபெற்று, விரைவில் குடமுழுக்கு நடைபெறவுள்ளது. நிகழ்வில் கலந்துகொள்வோம், இறையருள் பெறுவோம்.விக்கிபீடியாவில் இக்கோயில் தொடர்பாக என்னால் ஆரம்பிக்கப்பட்ட பதிவு
ஆங்கில விக்கிபீடியாவில் இக்கோயில் தொடர்பாக என்னால் ஆரம்பிக்கப்பட்ட பதிவு20 ஆகஸ்டு 2017 அன்று முதல் பக்கத்தில் ஆங்கில விக்கிபீடியாவின் முதல் பக்கத்தில் இக்கோயில் பற்றிய, நான் ஆரம்பித்த, ஆங்கில விக்கிபீடியா கட்டுரையிலிருந்து ஒரு வரி மேற்கோளாக, நான் எடுத்துள்ள புகைப்படத்துடன் "உங்களுக்குத் தெரியுமா" பகுதியில் இடம் பெற்றது.

In Wikipedia's first page, under the column Did you know? (DYK) among others a sentence from the article written by me under the title Thukkachi Abatsahayesvar temple has been quoted: .."that the Thukkachi Abatsahayesvar temple (pictured) was greatly expanded by Vikrama Chola after he was supposedly cured of vitiligo by praying to the presiding deity for 48 days?"

20 ஜூலை 2023இல் மேம்படுத்தப்பட்டது.