27 November 2016

ஃபிடல் காஸ்ட்ரோ : எங்களது வாசிப்பில்

வாழும்போதே வரலாறு படைப்பவர்கள், நம் மனதில் நினைப்பவர்கள் சிலரே. அவ்வாறானோரில் ஒருவரே பிடல் காஸ்ட்ரோ. அவரது கொள்கை, மன உறுதி, பிற நாடுகளுடன் நட்புறவு, தன் நாட்டை அனைத்து நிலைகளிலும் உயர்த்துதல் என்ற நிலைகளில் அவருடைய தனித்துவம் அனைவரையும் கவர்ந்ததாகும். எங்களை ஈர்த்த வெளிநாட்டுத்தலைவர்களில் முக்கியமான இடத்தைப் பெற்றவர்களில் ஒருவர் காஸ்ட்ரோ. மற்றவர்கள் யாசர் அராபத் மற்றும் நெல்சன் மண்டேலா. எங்களது வாசிப்பில் அவரைப் பற்றிய செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து வாசிப்போம். 

1983, புதுதில்லி வருகை
1983இல் புதுதில்லியில் கூட்டுசேரா நாடுகளின் உச்சி மாநாடு நடைபெற்றபோது முதன்முதலாக பிடல் காஸ்ட்ரோ அறிமுகம். அந்த மாநாட்டு ஏற்பாடு தொடங்கி நடைபெற்றது வரை The Hindu நாளிதழில் செய்திகளை முழுமையாக வாசித்தபோதுதான் இவ்வாறாக ஒரு தலைவர் இருக்கிறார் என்பதை அறிந்தேன். கியூப புரட்சிக்குப் பின் 1959இல் காஸ்ட்ரோ தலைமையிலான கியூப சோசலிச அரசு அமைந்த போது அதற்கு ஆதரவுக்கு கொடுத்த முதன்மையான நாடுகள் என்ற நிலையில் இந்தியா முக்கியத்துவம் பெற்றிருந்ததுபற்றி பேசப்பட்ட நிலையில் அவரைப் பற்றித் தெரிந்துகொள்ள ஆரம்பித்தேன். அக்காலகட்டத்தில் தொடர்ந்து சேகுவாராவின் புதுதில்லி வருகை, காஸ்ட்ரோவை நேரு நியூயார்க்கில் கூட்டுசேரா உச்சிமாநாட்டில் சந்தித்தது (1960) என்ற நிலைகளில் அறிந்தேன். 
   
காஸ்ட்ரோவின் இந்தியாவுடனான வரலாற்று சிறப்புமிக்க உறவானது கூட்டுசேரா இயக்கத்தை வலுவடைய வைத்தது. அதற்கான வித்திட்டவர் அப்போதைய பிரதமர் ஜவஹர்லால் நேரு.  ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் அப்போது காஸ்ட்ரோ, என்னை முதலில் காணவந்தவர் நேரு. அவருடைய அக்குணத்தை நான் என்றும் மறக்கமாட்டேன். அப்போது எனக்கு வயது 34. என்னைப் பற்றி யாரும் அதிகமாக அறிந்திருக்கவில்லை. மிகவும் இறுக்கத்தோடு இருந்தேன். நேரு என் மனதிற்குத் தெம்பினைத் தந்தார். என்னுடைய இறுக்கம் தளர்ந்தது".  
Courtesy: The Hindu, 22 February 2008
இந்திரா காந்தி பிரதமாக இருந்த காலகட்டத்தில், 1983இல் காஸ்ட்ரோ இந்தியாவிற்கு வந்தபோது அவர் 1970களில் இந்தியாவிற்கு வந்ததைப் பற்றி படித்த நினைவு. 1985இல் ராஜீவ் காந்தி, 2006இல் மன் மோகன் சிங்கும் காஸ்ட்ரோவைச் சந்தித்தது இன்னும் எனக்கு நினைவில் உள்ளது. புதுதில்லியில் நடைபெற்ற கூட்டுசேரா உச்சி மாநாட்டில் அந்த அமைப்பின் தலைமைப்பொறுப்பை திருமதி இந்திரா காந்தியிடம் ஒப்படைத்தார். அந்நிகழ்வு மறக்கமுடியாத ஒன்றாகும். 

2008 காஸ்ட்ரோ ஓய்வு
2008இல் பிடஸ் காஸ்ட்ரோ ஓய்வு பெற்றபோது The Hindu  நாளிதழில் தொடர்ந்து நான்கு நாட்கள் செய்திகள் வந்தன.பிடலைக் குறித்து தொடர்ந்து செய்திகள் வெளியானதைப் பாராட்டி The Hindu நாளிதழுக்கு கடிதம் எழுதினேன். அக்கடிதம் அவ்விதழில் வெளியாகியிருந்தது. 

20.2.2008 : Photograph of Fidel with caption "End of an era" (p.1), Cartoonscape on Castro (p.10). Life and times of Fidel Castro (p.16), Fidel Castro steps down" (p.16) and "Will not accept position: Castro" (p.16)
21.2.2008 : Cuba's future depends on next US President/Ignacio Ramonet (p.11)
22.2.2008 : The one and only Fidel/K/Natwar Singh (p.11)
23.2.2008 :  A Hero of our times, Editorial (p.10)
 
1970களின் இடையில் தொடங்கி The Hindu நாளிதழை நான் படித்து வந்த வகையில் இவ்வாறாக ஒருவரைப் பற்றி தொடர்ந்து நான்கு நாள்கள் செய்திகளோ கட்டுரைகளோ வந்ததாகப் படித்த நினைவு எனக்கு இல்லை.  
இவ்வாறாக செய்திகள் வந்த நிலையில் நான் தொடர்ந்து வரவுள்ள Frontline இதழிலும் இவ்வாறாக அதிகமான கட்டுரைகளும் புகைப்படங்களும் வரும் என்று கூறியிருந்தேன். என் குடும்பத்தாரும் நானும் எதிர்பார்த்தவாறே அவ்விதழ் A soldier in the battle of ideas என்ற தலைப்பில் காஸ்ட்ரோவைப் பற்றிய சிறப்பிதழாக The practical moralist (pp.4-15), The interview of Herbert Matthews with Fidel (pp.14-24). Intrviewe of Saeed Naqvi (pp.25-27) என்ற தலைப்பில் கட்டுரைகளையும் பேட்டிகளையும் கொண்டு வெளியானது.
அவ்விதழையும் காஸ்ட்ரோவைப் பற்றியும் நான் எழுதிய கடிதம் அவ்விதழில் வெளியானது. என் கடிதம் வெளியானதைவிட கூடுதலாக மற்றொரு சிறப்பாக Frontline ஆசிரியர் திரு என்.ராம் திருச்சி The Hindu அலுவலகத்திலிருந்து ஒருவரை (Mr S.Narayanan, Sales Executive, The Hindu, Trichy) இதற்காகவே என் இல்லத்திற்கு 10.3.2008 அன்று அனுப்பி என் கடிதத்திற்காக பாராட்டு தெரிவித்திருந்தார். 
2006 மன்மோகன்சிங் சந்திப்பு
இந்தியப்பிரதமர் மன்மோகன்சிங் காஸ்ட்ரோவை சந்தித்தபோது"எக்காலத்திற்கும் பொருந்தும் ஒரு பெருந்தலைவன் முன்னிலையில் இருப்பதை நான் உணர்கிறேன்" என்று கூறியிருந்தார். காஸ்ட்ரோ அவரிடம் "கூட்டுசேரா உச்சி மாநாடு இன்னும் இரு நாள்கள் கழித்து நடத்தப்பட்டிருந்தால் நான் அம்மாநாட்டிற்கு தலைமை தாங்கியிருப்பேன்" என்றார். இருவரும் சேர்ந்து புகைப்படம் எடுத்துக்கொண்டதும் காஸ்ட்ரோ கோடிக்கணக்கான மக்களால் இந்த புகைப்படம் பார்க்கப்படவேண்டும் என்ற தன் ஆவலை மன்மோகன் சிங்கிடம்வெளிப்படுத்தினார். 
Courtesy: The Hindu, 19 September 2006

2013 அன்சாரி சந்திப்பு
துணை ஜனாதிபதி அன்சாரி காஸ்ட்ரோவை ஹவானாவில் சந்தித்தார். அப்போது பலதரப்பட்ட பொருண்மைகளில் காஸ்ட்ரோ அவருடன் விவாதித்தார். இந்த பயணத்தைப் பற்றியும் மன்மோகன் சிங்கின் பயணத்தைப் பற்றியும் நான் எழுதிய கடிதம் The Hindu இதழின் தளத்தில் வெளியானது. 

Courtesy: The Hindu, 31 October 2013

அவரைப் பற்றிய எங்களது வாசிப்பு தொடர்ந்துகொண்டிருந்த நிலையில் ஒபாமாவின் கியூப பயணம் பற்றியும், காஸ்ட்ரோவைக் கொல்ல மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் குறித்தும் தி இந்து இதழில் புளோரிடாவிலிருந்து ஹவானாவிற்கு என்ற தலைப்பில் வெளியான எனது கட்டுரையில் எழுதியிருந்தேன். காஸ்ட்ரோவைப் பற்றி எழுதவேண்டும் என்ற நெடுநாளைய ஆசை அப்போது பூர்த்தியானது. வாசகர் கடிதத்திலிருந்து கட்டுரை எழுதும் அளவிற்கு அந்தத் தலைவனைப் பற்றிய எண்ணங்கள் எங்கள் மனதில் உயர்ந்து அதிக அளவில் இருந்ததை நினைக்கும்போது வியப்பு மேலிடுகிறது. 
அவரைப் பற்றிய எங்களது வாசிப்பு அவரை ஒரு மிகச் சிறந்த முன்னுதாரண தலைவராக அடையாளப்படுத்தியது, அந்த வாசிப்பானது இன்னும் தொடர்கிறது. இவரையொத்த, சற்றொப்ப இவரோடு ஒப்புநோக்கும் அளவிலோ இப்பூமிப்பந்தில் எந்தவொரு தலைவரும் இல்லை என்பது அனைவரும் அறிந்த உண்மை. வயது பாரபட்சமின்றி அனைவரும் இவரைப் பாராட்டவும் நினைவுகூறவும் காரணம் அவருடைய மன உறுதியே. சிங்கத்தைப் போன்ற தோற்றம், நடை, பேச்சு என்ற நிலையில் சிம்ம சொப்பனமாகவே விளங்கினார், தன் இறுதி மூச்சு வரையிலும். அந்த மாமனிதருக்கு வணக்கம் செலுத்துவோம். 

பிடல் காஸ்ட்ரோவைப் பற்றிய என்னுடைய பிற பதிவுகள்:

26 November 2016

இலக்கிய மாமணி திரு அழகிரி விசுவநாதன்

தஞ்சாவூரிலுள்ள மூத்த எழுத்தாளர் திரு அழகிரி விசுவநாதன் அவர்களைச் சந்தித்து நெடுநாள் ஆகியிருந்தது. 19 நவம்பர் 2016 காலை சென்னையிலுள்ள அவரது மகன் திரு சோமசுந்தரம் (டி.வி.எஸ்.சோமு) என்னிடம் பேசினார். அவர் பேசியபின் ஐயாவை சந்திக்க வேண்டும் என்ற ஆர்வம் அதிகமானது. தொலைபேசியில் தொடர்புகொண்டு "சந்திக்க வரலாமா" என்று கேட்டேன். "வாருங்கள், நீங்கள் வருவது மகிழ்ச்சியே" என்றார். 

86 வயதாகும் அவர், 200க்கும் மேற்பட்ட சிறுகதைகளை பிரபல வார இதழ்களில் எழுதியவர். கவிதை, நாடகம், புதினம், சிறுகதை என்ற அனைத்து நிலைகளிலும் தடம் பதித்தவர். என்னுடைய ஆய்வினை மனம் திறந்து பாராட்டும் பெரியோரில் ஒருவர். அவரது மறதி வாழ்க (நாடகங்கள்)தமிழ் மொழி சீர்திருத்தம் வேண்டும் (கட்டுரைகள்) கமலி, இந்த எறும்புகள், ஆயிரம் ரூபாய் நோட்டு உள்ளிட்ட பல நூல்களைப் பற்றி நாம் முன்னர் விவாதித்துள்ளோம். எப்பொழுது சந்தித்தாலும் அரசியல், நாட்டு நடப்பு, நட்பு, எழுத்து, வாசிப்பு என்ற பல தளங்களில் பேசுவார். அவரிடம் பேச ஆரம்பித்தால் நேரம் போவதே தெரியாது. தான் மேற்கொள்ளவுள்ள பிற திட்டங்களைப் பற்றி பேசுவார். ரயில்வேத்துறையில் பணியாற்றி பணி நிறைவு பெற்ற அவர் நேர்மைக்கு ஓர் இலக்கணம். அவர் ஒரு திறந்த புத்தகம். அவரை வாசித்து நாம் கற்கவேண்டியது ஏராளம்.    

இவ்வாறான சிந்தனைகளோடு அவரிடமிருந்து மறுமொழி கிடைத்த 10 நிமிடத்தில் அவரது இல்லத்தில் நான். "நான் ஓட்டுப் போட்டு வந்துவிட்டேன். நீங்கள் ஓட்டு போட்டீர்களா? ஜனநாயகக் கடமையைச் செய்துவிட்டீர்களா?" என்றார். நேர்மறையான எனது பதிலுக்குப் பின் அவரைப் பற்றி அண்மையில் ஒருவர் ஆய்வு மேற்கொண்டதாகக் கூறி அந்த ஆய்வேட்டைக் காண்பித்தார். "அழகிரி விஸ்வநாதன் சிறுகதைகள் - ஓர் ஆய்வு" (திருச்சிராப்பள்ளி பாரதிதாசன் பல்கலைக்கழகத் தமிழ் முனைவர் பட்டத்திற்காக தஞ்சாவூர் அ.வீரையா வாண்டையார் நினைவு திரு புட்பம் கல்லூரியில் மேற்கொள்ளப்பட்டது) என்ற தலைப்பில்    த.கண்ணகி என்பவர் ஐயாவின் சிறுகதைகளைப் பற்றி ஆய்வினை மேற்கொண்டு நிறைவு செய்துள்ளார். முன்னுரை, முடிவுரை உட்பட பல இயல்களைக் கொண்டு அமைந்திருந்த அவ்வேட்டில் அவரிடம் ஆய்வாளர் எடுத்த பேட்டியும் இடம் பெற்றிருந்தது. தன் எழுத்தின் பெருமை ஆய்வேடாக வந்ததைப் பெருமையுடன் பகிர்ந்த அவர், தன் பெயர் விசுவநாதன் என்று குறிப்பிடப்பட்டிருக்கவேண்டும் என்றார்.   
அடுத்ததாக மற்றொரு இனிய செய்தி என்று கூறி, தன்னுடைய ரயிலே நில்லு நூல் இரண்டாம் பதிப்பு அண்மையில் வெளியானதைப் பகிர்ந்துகொண்டு, அந்நூலின் படியை என்னிடம் தந்தார். "முதல் பதிப்பு என்னிடம் உள்ளது" என்றபோது, "உங்களுக்கு ஒரு படி என் அன்பளிப்பாக வைத்துக்கொள்ளுங்கள். உங்களைப் போல எழுதுபவர்களையும் வாசிப்பவர்களையும் பார்க்கும்போது மனதிற்கு நிறைவாக இருக்கிறது" என்று கூறி அதில் கையொப்பமிட்டுத் தந்தார். நூலிற்கான தொகையைக் கொடுத்தபோது அன்புடன் மறுத்துவிட்டார். 

13 சிறுகதைகளைக் கொண்ட ரயிலே நில்லு இரண்டாம் பதிப்பின் முன்னுரையில் பின்வருமாறு குறிப்பிடுகிறார்.

"இந்தப் புத்தகத்தின் முதற்பதிப்பு 1997ஆம் ஆண்டு வெளியானது. இடையில் நீண்ட இடைவெளி. 20 வருடங்கள் சென்றுவிட்டன...முதற்பதிப்பு நாகப்பட்டினம் குமரி பதிப்பகத்தில் திரு ஜவஹர் வெளியிட்டார்கள். இந்த புத்தகம் வருடம் 50 பிரதிகள் ட்டும் விற்பனை ஆகியது. 1000 பிரதிகள் விற்பனை ஆக 20 வருடங்கள் பிடித்து இருக்கிறது. அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா முதலிய நாடுகளில் ஒரு எழுத்தாளர் ஒரு புத்தகம் எழுதினால் கோடீஸ்வரர் ஆகிவிடுகிறார். ஆனால் நமது நாட்டில் ஒரு எழுத்தாளர் 10 புத்தகங்கள் எழுதினாலும்கூட சோத்துக்கு லாட்டரி தான்.  ஏன் என்றால் வறுமைக் கோட்டிற்குக் கீழே 50 விழுக்காடு மக்கள் இருக்கிறார்கள். இந்த தமிழ் மக்கள் கையில் 40 ரூபாய் இருந்தல் ஒரு புத்கம் வாங்கலாம் என்று நினைக்க மாட்டார்கள். ஒரு கிலோ அரிசி வாங்கினால் இரண்டு நாட்கள் பொழுது போகுமே என்று நினைப்பார்கள். இப்படி தமிழ் மக்கள் இருக்கும்பொழுது எப்படி புத்தகம் விற்கும்? சந்தேகம் தான். அமெரிக்காவில் நியூயார்க் நகரில் ஒரு புத்தகம் வெளியாகிறது என்றால் இரவு மூன்று அல்லது நான்கு மணியிலிருந்து கியூவில் நிற்கிறார்கள் கையில் காசை வைத்துக்கொண்டு. புத்தகக்கடை காலை 9.00 மணிக்கு திறக்கப்படுகிறது. புத்தகத்தை வாங்கிக்கொண்டு செல்கிறார்கள். தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் நாம் அதனை எதிர்பார்க்கமுடியாது..."

நீண்ட நாள் சந்திப்புக்குப் பின் அவரிடமிருந்து விடை பெற்றேன். வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருக்கும்போது எனது அடுத்த திட்டங்களை என் மனம் பட்டியலிட ஆரம்பித்தது. அவருடன் பேசிய சில நிமிடங்கள் தந்த உத்வேகத்தை எண்ணி வியந்துகொண்டே இல்லம் வந்து சேர்ந்தேன். 
அவரைப் பற்றி விக்கிபீடியாவில் நான் ஆரம்பித்த பக்கம்

அவரது நூலைப் பெறவோ, கருத்து தெரிவிக்கவோ விரும்பும் நண்பர்கள் அவரது முகவரியிலோ (திரு அழகிரி விசுவநாதன், அழகுமலை பதிப்பகம், 114, கோயில் தெரு, டபீர் குளம் சாலை, கீழ வாசல், தஞ்சாவூர் 613 001)  அலைபேசி வழியாகவோ (9442871071) தொடர்புகொள்ளலாம். 

19 November 2016

பேராசிரியர் : தஞ்சை தமிழ்ச்செல்வன்

எங்களது இல்லத்தில் நாளிதழ் வாசிப்புக்காக தனியாக நேரம் ஒதுக்குவோம். முதலிடத்தைப் பெறுவது மூன்று மகாமகங்களுக்கு மேலாக நான் வாசித்து வரும் The Hindu நாளிதழ். என் மூத்த மகன் பாரத், இளைய மகன் சிவகுரு இருவரும் பள்ளியில் படிக்கத்தொடங்கிய காலம் முதல் அண்மையில் வேலைக்குச் சென்றது வரை இந்த வாசிப்பு தொடர்ந்தது. அவர்கள் வேலைக்குச் சென்ற பின்னரும் தினமும் செய்தித்தாளில் பார்க்கும் புதிய சொல்லின் பயன்பாட்டைக் குறித்துப் பேசுவது தொடர்கிறது. அதன் தொடர்ச்சியாக கடந்த இரு மாதங்களாக முகநூலில் புதிய சொற்களைப் பதிய ஆரம்பித்தேன். எங்களது வாசிப்பைப் பற்றி இளைய மகன் தன் தளத்தில் #thehinduநாளொருசொல் பற்றி பேராசிரியர் என்ற தலைப்பில் எழுதியுள்ள பதிவினைக் காண அழைக்கிறேன். 

எனக்கு விவரம் தெரிந்து நினைவில் உள்ள, நான் எழுதிய முதல் கட்டுரை, 3 அல்லது 4ஆம் வகுப்பு படிக்கும் போது ‘Science in our everyday life’ என்ற தலைப்பில் பள்ளியில் நடந்த கட்டுரைப்போட்டிக்காக எழுதியதாகும். அந்தக் கட்டுரைக்கு ‘We have to realize that science is a double-edged sword’ என்ற மேற்கோளை ஏதோ ஒரு புத்தகத்திலிருந்து எனக்கு எடுத்து தந்தது என் அப்பா தான். முழுவதும் எழுதித்தந்தது அவர் அல்ல. என்னையே எழுத வைத்தார். அதற்கு தேவையான மூலப்பொருட்களாக சில வாசகங்களையும், சில சிந்தனைகளையும்  தந்தார். நான் எழுதியதில் பிழை திருத்தம் செய்து தந்தார். ஆனால் எழுதியது நான் தான் (இன்று குழந்தைகளுக்காக பெற்றோர் செய்யும் பிராஜெக்ட்டுகள் போல அல்ல அது). அந்த கட்டுரைக்கு எந்த பரிசும் கிடைக்கவில்லை.

ஆங்கில வார்த்தைகளையும், விதவிதமான வித்தியாசமான பிரயோகங்களையும் எங்களுக்கு (எனக்கு, அண்ணனுக்கு, அம்மாவுக்கு) சொல்லித்தந்தது அப்பா தான். நான் முதல் வகுப்பு படித்துக்கொண்டிருந்தபோது (1995-1996இல்) தூர்தர்ஷன் ஆங்கில 8:00மணிச் செய்தியை நாங்கள் அனைவரும் பார்ப்போம். நானும் அண்ணனும் எங்களுக்கென்று உள்ள தனித்தனி நோட்டில் அன்றைய தேதியிட்டு, செய்தியில் வந்த, குறைந்தபட்சம் 10 வார்த்தைகளை எழுதுவோம். செய்தி முடிந்தவுடன் அதன் Spelling சரியா, அது அன்றைய செய்தியில் பயன்படுத்தப்பட்டதா என்று அப்பா சரிபார்ப்பார். தவறுகளை சரி செய்வார். நான் நிறைய நாட்கள் எண்ணிக்கையை சரிசெய்ய ICICI என்ற வார்த்தையை நிரப்பி வைத்தது இன்றும் நினைவில் இருக்கிறது. கவனிக்கும் திறனை (Listening Skill) வளர்வதற்கான பயிற்சி அது என்று அப்போது எனக்கு தெரிந்திருக்கவில்லை.

நாங்கள் வளர வளர எங்களுக்கான ஆங்கிலப் பயிற்சி முறையும் மாறிக்கொண்டே வந்தது (எங்களுக்கே தெரியாமலேயே). ஆங்கில ‘தி இந்து’ நாளிதழை நாங்கள் எழுத்துக்கூட்டி படிப்போம், அதற்கு அப்பா தமிழ் அர்த்தம் சொல்லுவார். சில வருடங்களில், அண்ணன் படிக்க நானும், நான் படிக்க அண்ணனும் மாறி மாறி அர்த்தம் சொல்லுவோம். பின்பு ஆங்கிலத்தில் உள்ள செய்திகளில் கையை வைத்தபடியே தமிழில் படிப்போம். இவ்வாறாக, சொல்லாட்சி, எழுத்து நடை,  மொழிபெயர்க்கும் முறை என அனைத்தும் எங்களுக்குத் தெரியாமலேயே பயிற்றுவிக்கப்பட்டது.

அண்ணன் கல்லூரி முடித்து வேலைக்கு செல்லும் வரை (2008), ஒரு வாரம், ஒரு மாதம் என எத்தனை நாட்கள் ஆனாலும், நாங்கள் நால்வரும் ஒன்றாக உட்கார்ந்து படிக்கப்படாத இந்து நாளேடுகள் பழைய பேப்பர் போடும் இடத்துக்கு போனதேயில்லை.

அண்ணன் வேலைக்கு போன பிறகு, நான் அவ்வளவாக முன்புபோல படிப்பதில்லை. ஆனாலும் தினமும் மதிய உணவு இடைவேளை, பேருந்து பயண நேரம் என தனக்கு கிடைக்கும் ஓய்வு நேரங்களில் படித்த செய்திகளை Highlight செய்து வந்து வீட்டில் எனக்கும், தொலைபேசியில் அண்ணனுக்கும் அப்பா சொல்லுவார். எனக்கு தெரிந்த வரையில், ஒரு நாளேட்டை, 10ஆம் வகுப்பு மாணவன் பப்ளிக் பரீட்சைக்கு எப்படி படித்து Highlight செய்து படிப்பானோ, அப்படி படிப்பவர் அப்பா மட்டும்தான்.

நானும் வேலைக்கு வந்த பிறகு, முன்பு போல நானோ அண்ணனோ படிப்பதில்லை என்று அப்பாவுக்கு தெரியும். ஆனாலும் அப்பா விட்டுவிடவில்லை. தான் படிக்கும் செய்திகளையும், புதிய சொற்களையும், #thehinduநாளொருசொல் என்ற #HashTag உதவியோடு Facebookல் தினமும் பதிவிடுகிறார். நாங்கள் படிப்பதற்காகத்தான் அப்பா பதிவிடுகிறார் என்று எங்களுக்குத் தெரியும்.  நாங்கள் அதை படித்துவிடுவோம் என்று அப்பாவுக்கும் தெரியும். காலம், தொழில்நுட்பம் என எது மாறினாலும், பல வழிகளில் எங்களுக்கே தெரியாமல் பயிற்றுவித்த, பயிற்றுவிக்கும் அப்பாவும் அவர் பாடங்களும், எங்களது பேராசிரியர் என்ற நிலையும் என்றும் மாறப்போவதில்லை.

எங்களைப் போலவே நீங்களும் கற்க ஆவலிருந்தால் இந்த இணைப்பை தொடரவும்.


12 November 2016

தந்தையின் இதயத்தைத் தானமாகப் பெற்றவருடன் நடந்து வந்த மணமகள் : கட்டி ரோஜர்ஸ்

பத்தாண்டு கால இடைவெளியில் நடைபெற்ற கசப்பும் இனிப்பும் கலந்த ஒரு திருமணம் : 10 ஆண்டுகளுக்கு முன் ஜேனி ஸ்டீபியன் என்பவரின் தந்தை மரணமடைந்தபோது அவரது  இதயத்தைத் தானமாகப் பெற்றவர் ஜேனியின் திருமணத்தில் கலந்துகொள்வதற்காக நியூஜெர்சியிலிருந்து பென்சில்வேனியா வந்தார். திருமண நிகழ்வின்போது அவர் தேவாலயத்தில் ஜேனியுடன் நடந்துசென்று தன் அன்பை வெளிப்படுத்தினார். 
Photo courtesy: New York Times
ஆரம்பப்பள்ளியின் ஆசிரியையான ஜேனி தன்னுடைய தேனிலவிற்காக விமானத்தில் ஏறச்செல்லும்போது அளித்த பேட்டியில் ஸ்விஸ்வேல் நகரில் தன் தந்தை கொலை செய்யப்பட்ட இடமும், தனக்கு திருமணம் நடந்த இடமும் மிக அருகிலேயே இருந்தன என்றார். தன் தந்தையின் இதயத்தைத் தானமாகப் பெற்றவர் அங்கு வந்திருந்தபோது தன் தந்தையே தம்முடன் இருப்பதாக நினைத்துக்கொண்டதாக நெகிழ்ச்சியோடு கூறினார்.


ஏதோ புதிர் போல இருக்கிறதல்லவா? இதன் ஆரம்பத்தைத் தெரிந்துகொள்வதற்கு நாம் செப்டம்பர் 2006க்குச் செல்வோம். 53 வயதான மைக்கேல் ஸ்டீபியன் ஜேனியின் தந்தை ஆவார். அவர் ஒரு உணவகத்தில் தலைமை சமையல்காரராகப் பணியாற்றி வந்தார். ஒரு நாள் பணி முடிந்து தன் வீட்டிற்கு அவர் திரும்பிக்கொண்டிருந்த சமயத்தில் 16 வயதுள்ள ஒருவன் துப்பாக்கி முனையில் அவரிடம் திருடிவிட்டு அவருடைய தலையில் சுட்டான். இக்கொலைக்காக லெஸ்லி எல் பிரவுன் என்ற பெயருடைய அவன் 40 வருட தண்டனையை அனுபவித்துவருகிறான்.

சுடப்பட்ட நிலையில் அவளுடைய தந்தை மருத்துவமனையில் மரணப்படுக்கையில் இருக்கும்போது அவளுடைய குடும்பம் தவிர்க்கமுடியாததைச் செய்ய ஒத்துக்கொள்ள முடிவெடுத்தது” என்று ஜேனி கூறினார். உறுப்பு மாற்ற மையம் என்ற நிறுவனத்தின் மூலமாக அவருடைய உடலுறுப்புகளைத் தானமாகத் தர அப்போது முடிவெடுக்கப்பட்டது.
உறுப்புதானத்திற்குப் பின்னர் தானம் கொடுத்த குடும்பமும் தானம் பெற்ற குடும்பமும் தொடர்பில் இருக்க அந்நிறுவனம் அனுமதிக்கிறது. மைக்கேல் ஸ்டீபியனின் இதயத்தை ஆர்தர் தாமஸ் பெற்றார். நான்கு குழந்தைகளுக்குத் தந்தையான அவர் நியூ ஜெர்சியில் லாரஸ்வில்லியில் வாழ்ந்துவந்தார். கொடிய இதய நோயால் பாதிக்கப்பட்டு மரணத்தை நெருங்கிக்கொண்டிருந்த நிலையில் மைக்கேல் ஸ்டீபியனின் இதயம் தாமஸுக்குப் பொருத்தப்பட்டதாக  ஜேனி கூறினார்.
இதயத்தை தானமாகப் பெறுவதற்கு 16 ஆண்டுகளுக்கு முன்பாக அவர் மருத்துவ சிகிச்சை மேற்கொண்டபோது  72 வயதான தாமஸின் இதயத்தில் இருந்த குறை தெரிய ஆரம்பித்தது. அந்த நேரத்தில் மாற்று இதயம் கிடைத்த இனிய செய்தியை மருத்துவர்கள் தெரிவித்தனர்.  
உறுப்பு மாற்றம் பெறுவோர் பட்டியலில் முதலிடத்தைப் பிடிப்பது சற்று சிக்கலாக இருந்ததாகவும் உறுப்பு மாற்றம் செய்யப்பட்டபின்பு அக்குடும்பத்தாருக்கு நன்றிக்கடிதம்  அனுப்ப விரும்பியதாகவும் தெரிவித்தார்.
புதிய நட்பிற்கான ஆரம்பம். தொலைபேசி அழைப்புகள், மின்னஞ்சல்கள், கடிதங்கள் என்ற நிலையில் இரு குடும்பத்தினரும் நட்புடன் பழக ஆரம்பித்தனர். ஸ்டீபியனின் தாயார் பெர்னிஸ் தாமஸுடம் அவ்வப்போது தொடர்பு கொண்டு நட்பை மேம்படுத்திக்கொண்டார். பிறந்த நாள்களுக்கு பூக்கள் அனுப்புதல், கிறிஸ்துமஸ் தினத்தைச் சிறப்பாகக் கொண்டாடுதல் என்ற நிலையில் அவ்விரு குடும்பத்தாரின் பிணைப்பு தொடர்ந்தது. சில நேரங்களில் அவர்கள் குழந்தை வளர்ப்பு தொடர்பான உத்திகளைக்கூட ஒத்துநோக்கிப் பகிர்ந்துகொண்டனர்.  ஆனால் அக்டோபர் மாதத்தில் 33 வயதான ஜேனிக்கு  34 வயதான பொறியாளரான பால் மேனரை திருமண உறுதி செய்யும் நாள் வரை அவ்விரு குடும்பத்தினரும் நேரில் சந்திக்கும் வாய்ப்பினைப் பற்றி நினைத்துப் பார்க்கவில்லை.
ஜேனியின் திருமணம் தொடர்பான பேச்சுகள் ஆரம்பித்த நிலையில் அவளுடைய சிந்தனைகளில் முதன்மையான இடத்தைப் பிடித்த சிந்தனை அவளுடைய திருமண நாளில் தேவாலயத்தில் அவளுடன் தன் தந்தையின் இதயம் தனக்கு மிக நெருக்கமாக இருக்கப்போவதை எண்ணி அவள் வியப்பில் ஆழ்ந்தாள்.
வருங்கால கணவருடைய ஆலோசனைப்படி ஜேனி, தாமஸ் குடும்பத்திற்குக் கடிதம் எழுதினார். அதில் திருமண நிச்சய நாளன்று அந்தப் பாதையில் அவருடன் நடந்து வர அவரைக் கேட்டுக்கொண்டார். அவளுடைய விருப்பத்தை தாமஸ் தன் மகள் ஜாக்கியிடம் பகிர்ந்துகொண்டபின், ஜேனியின்  விருப்பத்தை பூர்த்தி செய்யப்போவதாகச் சம்மதித்தார்.
அது ஒரு அருமையான யோசனை என்று தன் தந்தையிடம் கூறிய ஜாக்கி அவர் தேவாலயத்தில் நடந்துசெல்வதற்கு முன்கூட்டியே பயிற்சி எடுத்துக்கொள்ளவேண்டும் என்று கருத்து தெரிவித்தார். (திருமணத்திற்கு முன்பாக ஒரு முறை இவ்வாறாக பயிற்சி எடுத்துக்கொண்டதாக அவர் கூறினார்.)
ஒரு கல்லூரியில் ஆலோசகராக இருந்து ஓய்வு பெற்ற தாமஸ் முன்னர் லாரன்ஸ்வில்லியில் ஒரு பள்ளியில் வேலை பார்த்தவர்.  அவர் ஜேனியிடம் தன்னுடைய அதிகபட்ச உணர்வுகள் அப்போது வெளிப்படும் என்று கூறினார்.
அவர் நினைத்தவாறே தானும் நினைப்பதாக கூறிய ஜேனி உறுதியாக அவரோடு அங்கு இருக்கப்போவதாகக் கூறினார்.
ஸ்வில்வேல் என்னுமிடத்தில் ஜேனின் பெற்றோருக்குத் திருமணம் ஆன அதே தேவாலயத்தில் திருமணம் நடைபெற்றது. தாமஸும் மணமகளும் ஒரு நாள் முன்னதாகச் சந்தித்துக் கொண்டனர். அந்த சந்திப்பின்போது அவர் தன் மணிக்கட்டை உறுதியாகப்  பிடித்துக்கொள்ளும்படி அவளிடம் கூறியபோது, அவருடைய நாடித்துடிப்பு அதிகமாக இருந்தது.
தந்தையுடைய இதயத்துடிப்பு என்ற நிலையில் அவள்  தன் தந்தைக்கு மிகவும் நெருக்கமாக இருப்பதை உணர்வதற்கு அது ஒரு நல்ல உத்தி  என்றார் தாமஸ்.
திருமண நாளில் தேவாலயத்தில், தாமஸின் மார்பினைத் தொட்டுக்கொண்டு நின்ற நிலையில் மணமகளைப் புகைப்படமெடுத்தனர். வரவேற்பு விழா நிகழ்வில் அவர்கள் இணைந்து நடனமாடினர். வந்த விருந்தனர்கள் தாமஸுடனும் அவருடைய மனைவி நான்சியுடனும் கலந்துகொண்டனர். இரு குடும்பத்தினரும் தொடர்ந்து தொடர்பில் இருக்கவேண்டும் என்றும்,  முடிந்தவரை இறுக்கம் குறைவான சூழலாக அது அமையட்டும் என்றும் தம் எண்ணத்தை பரஸ்பரம் வெளிப்படுத்திக் கொண்டனர்.
அவளுடைய தந்தையின் இதயத்துடன் பிட்ஸ்பர்க்குக்கு வந்தது தனக்குப் பேரதிசயமாக இருந்தது என்ற தாமஸ், நடந்துவர வேண்டிய ஒரு சூழல் அமைந்திருந்தால் நடந்துகூட வந்திருப்பேன் என்றார் பெருமையுடன்.

தமிழாக்கம் : பா.ஜம்புலிங்கம்
நன்றி : The New York Times 

மூலக்கட்டுரையை நியூயார்க் டைம்ஸ் இதழில் வாசிக்க இணைப்பு :
Bride Is Walked Down Aisle by the Man Who Got Her Father’s DonatedHeart NYT 8 Aug 2016

19 நவம்பர் 2016 அன்று மேம்படுத்தப்பட்டது.

05 November 2016

பழையாறை மேற்றளி : திருமேற்றளிகை கைலாசநாதர் கோயில்

பழையாறை என்றால் நமக்கு நினைவிற்கு வருவது கல்கியின் பொன்னியின் செல்வனே. ஆறை, பழையாறை, மழபாடி, பழையாறு என்று அழைக்கப்படுகின்ற பழையாறைப் பகுதியில் அருகருகே கீழ்க்கண்டவை உள்ளிட்ட பல கோயில்கள் உள்ளன.

  • பட்டீஸ்வரம் தேனுபுரீஸ்வரர்
  • திருச்சத்திமுற்றம் சிவக்கொழுந்தீஸ்வரர் 
  • கீழப்பழையாறை சோமநாதர் (கீழ்தளி)
  • பழையாறை தர்மபுரீசர் கோயில் 
  • முழையூர் பரசுநாதர் கோயில் (தென்தளி)
  • திருமேற்றளி கைலாசநாதர் கோயில் 
  • நந்திபுரவிண்ணகரம் (நாதன்கோயில்)
  • இராஜராஜேச்சரம் (தாராசுரம் ஐராவதேஸ்வரர் கோயில்)
  • பஞ்சவன்மாதேவீச்சரம் (பள்ளிப்படை) 
பள்ளிக்காலத்தில் மிதிவண்டியில் நண்பர்களுடன் வரத்தொடங்கியது முதல் இவ்விடங்களுக்கு பல முறை சென்ற நிலையிலும் அப்பகுதியிலுள்ள திருமேற்றளிகை கோயிலுக்குச் செல்லவேண்டும் என்ற ஆவல் நெடுநாளாக இருந்து வந்தது. 

முதுமுனைவர் குடவாயில் பாலசுப்பிரமணியம் அவர்களுடன் சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்னர் இக்கோயிலுக்குச் சென்றுள்ளேன். அவர் இக்கோயிலைப் பற்றியும், திருமேற்றளிகையைப் பற்றியும் பின்வருமாறு கூறுகிறார்:
"காஞ்சி மாநகரில் ஒரு மேற்றளி திகழ்ந்ததுபோல பழையாறை மாநகரில் இருந்த மேற்றளியே திருமேற்றளிகை கைலாசநாதர் கோயில். திருநாவுக்கரசரும், ஞானசம்பந்தரும் இப்பெருமானை வழிபட்டதாக சேக்கிழார் கூறுகிறார். திருமத்தடி என் பேச்சுவழக்கால் குறிக்கப்பெறும் பழையாறையின் பகுதியில் இக்கோயில் உள்ளது.....தாராலிங்கம் எனும் பல்லவர் கால இலிங்க வடிவம் எழிலோடு அருள் தர அதே காலத்தைச் சார்ந்த சண்டீசர் திருமேனி அர்த்தமண்டபத்தில் உள்ளது.  கருவறையின் புறச்சுவரில் அமர்ந்த கோலத்தில் காணப்படுகின்ற இரு சிவ வடிவங்கள் லகுளீச பாசுபதர்கள் போற்றும் சிவ வடிவம் என்பது குறிப்பிடத்தக்கதாகும்......"

சுந்தரர் இக்கோயில் இறைவனைப் பாடும் விதம் நம்மை அவ்விடத்திற்கு அழைத்துச் செல்லும். 

அங்கம் ஓதியோர் ஆறை மேற்றளி
நின்றும்  போந்து வந்து இன்னம்பர்த்
தாங்கினோமையும் இன்ன தென்றிலர்
ஈசனார் எழு நெஞ்சமே
கங்குல ஏமங்கள் கொண்டு தேவர்கள் ஏத்தி
வானவர்தாம் தொழும்
பொங்குமால் விடை ஏறி செல்வப்
புறம் பயம் தொழப் போதுமே.

முன்னர் பராமரிப்பின்றி இருந்த இக்கோயில் வழிபாட்டில் உள்ளதை மார்ச் 2016இல் அங்கு செல்லும்போது கண்டோம். பட்டீஸ்வரம் தேனுபுரீஸ்வரர் கோயிலிலிருந்து மிகவும் அண்மையில் இக்கோயில் உள்ளது. சாலையிலிருந்து பார்க்கும்போது இக்கோயில் தெரிவதற்கு வாய்ப்பில்லை. முதன்மைச்சாலையிலிருந்து உள்ளடங்கி காணப்படுகின்ற இக்கோயில் தரையிலிந்து சற்றே உயர்ந்த தளத்தில் சற்றொப்ப கைலாசத்தையே நமக்கு உணர்த்துமளவு அமைந்துள்ளது இக்கோயில்.பட்டீஸ்வரத்திலிருந்து தஞ்சாவூர் செல்லும் சாலையில் இக்கோயில் அமைந்துள்ளது. மிகவும் சிறிய,  பார்ப்பதற்கு மிகவும் அழகான கருவறை மற்றும் அர்த்த மண்டபம், கண்ணைக்கவரும் விமானம், நந்தி மண்டபத்துடன் உள்ள கோயில்.  நாங்கள் சென்றிருந்த சமயம் கோயில் பூட்டியிருந்தது. சிறிது நேரம் காத்திருந்தபின் கோயில் திறக்கப்பட்டது. கருவறை விமானத்தையே கோயிலாகக் கூறுமளவு உள்ள இக்கோயிலின் முன்பாக காணப்படுகின்ற நந்தி மண்டபத்தில் நந்திகேசர் உள்ளார்.  


சிறிய கருவறையில் பெரிய அளவிலான லிங்கத்திருமேனியாக உள்ள மூலவர் கைலாசநாதர் என்றழைக்கப்படுகிறார். இறைவியின் பெயர் சபளநாயகி. காமதேனுவின் மகளான சபளி வழிபட்டதால் அவ்வாறாகப் பெயர் வந்தது என்று கூறினர். அர்த்தமண்டபத்தில் சூரியன், சண்டிகேஸ்வரர், விநாயகர், பைரவர், சபளநாயகி ஆகியோரின் சிற்பங்களைக் கண்டோம்.கோயிலின் வெளியே சுற்றிவரும்போது தேவகோஷ்டத்தில் அடிமுடி காணா அண்ணல் உள்ளிட்ட பல சிற்பங்கள் இருப்பதைக் கண்டோம். 
கோயிலுக்கு எதிரில் இடிபாடான நிலையில் உள்ள கோபுரம் போன்ற அமைப்பைப் பார்க்க அங்குள்ளவர்கள் கூறினர். அந்த அமைப்பைப் பார்த்தபோது இக்கோயில் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு ஒரு பெரிய கோயிலாக இருந்திருக்க வாய்ப்புண்டு என்பதை உணர்ந்தோம். அக்கோபுரம் அப்பகுதியில் காணப்படுகின்ற கோபிநாதப்பெருமாள் கோயில் மற்றும் பழையாறை சோமநாதசுவாமி கோயிலின் ராஜகோபுரங்களை நினைவூட்டியது.
மண்ணின் பெருமையையும், வரலாற்றின் பெருமையையும் நேரடியாக உணர, திருமேற்றளிகையில் அமைதியாக இருந்து அருள்பாலித்துக்கொண்டிருக்கும் கைலாசநாதரையும், பழையாறைப் பகுதியிலுள்ள பிற கோயில்களையும் காண வாருங்கள்.  

துணை நின்றவை
குடவாயில் பாலசுப்பிரமணியன், "பழையாறை மாநகர்",  பட்டீஸ்வரம் ஸ்ரீஞானாம்பிகை சமேத ஸ்ரீதேனுபுரீஸ்வரசுவாமி மற்றும் ஸ்ரீதுர்க்காம்பிகை திருக்கோயில் கும்பாபிஷேக மலர், 1999 
பு.மா.ஜெயசெந்தில்நாதன், தேவார வைப்புத்தலங்கள், வர்த்தமானன் பதிப்பகம், 2009

நன்றி
உடன் வந்த என் மனைவி திருமதி பாக்கியவதி, புகைப்படங்கள் எடுக்க உதவிய இளைய மகன் திரு சிவகுரு