6 ஜுலை
2014இல் தமிழ் விக்கிபீடியாவில் எழுதத் தொடங்கி, அண்மையில் 600 பதிவுகளை
நிறைவு செய்துள்ளேன். ஒவ்வொரு முறையும் கிடைக்கும் அனுபவம் வித்தியாசமாக உள்ளதை நான்
பதிவிடும்போது உணர்கிறேன். விக்கிபீடியாவில் நான் எழுதுகின்ற பதிவுகளில் இணைக்கப்பட்டுள்ள புகைப்படங்கள் என்னால் எடுக்கப் பட்டவையாகும். அனைத்துப் புகைப்படங்களையும் பொதுவகத்தில் (wikipedia commons) பதிந்துவிடுவேன். தொடர்ந்து கட்டுரையோடு இணைத்துவிடுவேன்.
ஜனவரி 2017இல் விக்கிபீடியா நடத்திய விக்கிக்கோப்பைப் போட்டியில் கலந்துகொண்டு 253 பதிவுகளை மேற்கொண்டேன். இதில், தஞ்சாவூர் மாவட்டத்தில், விக்கிபீடியாவில் இல்லாத கோயில்கள், தமிழ்நாட்டில் பிற மாவட்டங்களிலுள்ள கோயில்கள், வைப்புத்தலங்கள் பட்டியலை முழுமையாக்கல், தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானக் கோயில்கள், அறிஞர்கள் அறிமுகம் போன்றவை அடங்கும். இப்போட்டியில் மூன்றாம் இடத்தினைப் பெற்றேன்.
கல் நாதசுவரம் |
கும்பகோணத்தில் பிறந்து வளர்ந்த எனக்குக் கோயில்களின் மீதான ஈடுபாடு சற்றே அதிகம். பள்ளிக்காலத்தில் படிக்கும்போதே கும்பேஸ்வரர் கோயில், சார்ங்கபாணி கோயில், சக்கரபாணி கோயில் பிரகாரங்கள் எனக்கும் உடன் பயின்ற நண்பர்களுக்கும் அடைக்கலம் தந்தன. அதிகமாகப் படித்தது கும்பேஸ்வரர் கோயில் உள் பிரகாரத்தில்தான். அப்போது அக்கோயிலில் கல் நாதஸ்வரம் இருப்பதாகக் கேள்விப்பட்டுள்ளேன். ஆனால் பார்த்ததில்லை. அண்மையில் இக்கோயிலில் உள்ள கல் நாதஸ்வரம் வாசிக்கப்பட்டதைப் பற்றிய செய்தியைப் படித்தபோது அதனைப் பற்றிய பதிவு விக்கிபீடியாவில் இருக்கிறதா என்று தேடினேன், இல்லையென்றதும் உடன் பதிந்தேன்.
காவிரி புஷ்கரம் |
ஆகஸ்டு 2017 வாக்கில் காவிரியில் நடைபெறுகின்ற புஷ்கரம் பற்றிய செய்திகளை நாளிதழ்களில் படித்தேன். இதற்கு முன்னால் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறைபெறுகின்ற மகாமகம் பற்றியே கேள்விப்பட்ட நிலையில் இது எனக்குப் புதிதாகத் தெரிந்தது. விழாவில் முக்கியத்துவத்தினை அறிந்தபின் காவிரி புஷ்கரம் என்ற தலைப்பில் புதிய பதிவு ஆரம்பித்தேன். இதற்காக பல முறை மயிலாடுதுறை சென்றுவந்தேன். மகாமகம் 2016 பதிவினை விக்கிபீடியாவில் எழுதிவந்தபோது பயன்படுத்திய உத்தியை இதிலும் பயன்படுத்தினேன். முடிந்தவரை அவ்வப்போது செய்திகளைப் படித்து, உடன் பதிவுடன் இணைத்து பதிவினை மேம்படுத்தினேன். தொடர்ந்து கிருஷ்ணா, கங்கா, ப்ராணஹிதா, நர்மதா, சரஸ்வதி, யமுனா, துங்கபத்திரா, சிந்து உள்ளிட்ட அனைத்து புஷ்கரங்களைப் பற்றியும் 10க்கும் மேற்பட்ட பதிவுகளைத் தொடங்கினேன். பதிவில் இந்தியாவில் புஷ்கரங்கள் என்ற உட்தலைப்பினையும் தெளிவிற்காக எழுதினேன்.
தேங்காய் சுடும் விழா |
தேங்காய் சுடும் விழா தமிழகத்தில் பல இடங்களில் கொண்டாடப்படுவதைப் பற்றி நாளிதழ்களில் படித்தேன். காவிரி, அமராவதி ஆற்றங்கரையோரங்களில் சிறப்பாக நடைபெறுவதாக அறிந்தேன். இதுவரை நான் கேள்விப்படாததாக இருந்த நிலையில் அவ்விழாவினைப் பற்றி புதிய பதிவினை ஆரம்பித்தேன்.
நவநீத சேவை |
கும்பகோணத்தில் பெரிய தெருவில் ஒவ்வொரு ஆண்டும் கருட சேவை பார்த்துள்ளேன். தஞ்சாவூரில் கருட சேவை என்ற விழா நடைபெறுவதாகக் கேள்விப்பட்டுள்ளேன். வெண்ணெய்த்தாழி உற்சவம் என்றும் அழைக்கப்படுகின்ற இவ்விழாவின்போது தஞ்சாவூரில் 15 பெருமாள் கோயில்களைச் சேர்ந்த பெருமாள்கள் பல்லக்கில் வரிசையாக நான்கு வீதிகளையும் வலம் வருவதையறிந்து விழாவின்போது நான்கு வீதிகளையும் சுற்றி வந்து புகைப்படங்களை எடுத்து, உரிய செய்திகளை மேற்கோள்களுடன் இணைத்தேன்.
வெள்ளையாம்பட்டு சுந்தரம் |
தமிழ்நாட்டின் மிகச் சிறந்த பதிப்பாளரும், தமிழறிஞருமான திரு வெள்ளையாம்பட்டு சுந்தரம் அவர்கள் 31 மே 2017இல் இயற்கையெய்தினார். 1000க்கும் மேற்பட்ட நூல்களைப் பதிப்பித்த இவர், பல எழுத்தாளர்களை உருவாக்கியவர். தானே முன்வந்து கேட்டு நூல்களைப் பதிப்பிப்பார். என் ஆய்வினைப் பாராட்டியவர்களில் இவரும் ஒருவர். அனைத்தும் வரலாற்றில் பதியப்படவேண்டும் என்றும் நூல் வடிவம் பெறவேண்டும் என்றும் விரும்பியவர். அவரைப் பற்றிய செய்திகளைத் திரட்டி பதிவை ஆரம்பித்தேன்.
துக்காச்சி ஆபத்சகாயேஸ்வரர் கோயில் |
கும்பகோணம் வட்டத்தில் உள்ள துக்காச்சி ஆபத்சகாயேஸ்வரர் கோயில் கட்டடக்கலைக்கும், சிற்பக்கலைக்கும் புகழ்பெற்றது. இக்கோயிலைக் காணவேண்டும் என்ற அவா இந்த ஆண்டு நிறைவேறியது. அதனைப் பார்த்து, உரிய விவரங்களுடன் பதிந்தேன்.
ஆங்கில
விக்கிபீடியா அனுபவம்
இதே
காலகட்டத்தில் துக்காச்சி ஆபத்சகாயேஸ்வரர் கோயிலைப் பற்றி ஆங்கில விக்கிபீடியாவிலும்
பகிர்ந்தேன். 20 ஆகஸ்டு 2017 அன்று ஆங்கில
விக்கிபீடியாவின் முதல் பக்கத்தில் நான் ஆரம்பித்த, ஆங்கில விக்கிபீடியா கட்டுரையிலிருந்து
ஒரு வரி மேற்கோளாக, நான் எடுத்த புகைப்படத்துடன் "உங்களுக்குத் தெரியுமா" (Did
You Know?) பகுதியில் இடம் பெற்றது. அதற்கு அடுத்த நாள் எனக்கு வாழ்த்துகள் தெரிவித்து, அந்த முதற்பக்கம் 6635 பேரால் பார்க்கப்பட்டதாக சக ஆகில விக்கிபீடியர் செய்தி அனுப்பியிருந்தார்.
என் எழுத்துப்பணிக்குத் துணைநிற்கும் சக விக்கிபீடியர்கள், வலைப்பூ நண்பர்கள், பிற நண்பர்கள், உறவினர்கள், குடும்பத்தார் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி.
விக்கிபீடியா தொடர்பான பிற பதிவுகள்:
செப்டம்பர் 2014 : விக்கிபீடியாவில் 100ஆவது பதிவு
சூன் 2015 : விக்கிபீடியா 200ஆவது பதிவு, 5000ஆவது தொகுப்பு
ஆகஸ்டு 2015 : விக்கிபீடியாவில் பயனராவோம்
ஆகஸ்டு 2015 : விக்கிபீடியாவில் கட்டுரை எழுதுவோம்
அக்டோபர் 2015 : ஆங்கில விக்கிபீடியாவில் 100, தமிழில் 250 கட்டுரைகள் நிறைவு
அக்டோபர் 2015 : முன்னோடி விக்கிபீடியா எழுத்தாளர் விருது
நவம்பர் 2015 : விக்கிபீடியாவில் முதற்பக்கம் பங்களிப்பாளர் அறிமுகம்