24 November 2018

அயலக வாசிப்பு : அக்டோபர் 2018

அக்டோபர் 2018இல் அயலகச் செய்தியில் கார்டியன், சன், இன்டிபென்டன்ட், அப்சர்வர் ஆகியவற்றில் வெளிவந்த சில செய்திகளைக் காண்போம்.


ஆளில்லா வானூர்தி எடுத்த, வியப்பினையும் அழகினையும் வெளிப்படுத்தும் கண்ணைக்கவரும் படங்களில் இந்தோனேஷியாவில் கடலில் தன் சிறு படகில் நீந்தும் மீனவர், கோடைக்காலத்தில் உருகும் பனியைக் கடக்கும் போலார் கரடி, பார்சிலோனாவில் கடற்கரையில் சூரியக்குளியலில் இளைப்பாறுவோர், தனியாளாக ஆழமான நீர்ப்பகுதியில் குதிக்கத் தயாராகுபவர், இத்தாலியில் அசிசி என்னுமிடத்தில் மேகங்களுக்கு மேலேயிருந்து காணும் காட்சி. இலங்கையில் காட்டில் பெரிய மலைக்குன்றின்மீது கட்டப்பட்ட பழங்கால அரண்மனை, லண்டன் அருகே பிரைட்டன் என்ற இடத்தில் சூரிய அஸ்தமனம், உலகின் உயர்ந்த கட்டட அமைப்பாகக் கருதப்படுகின்ற துபாய் மெரினா, இத்தாலியில் சின்க் டெர்ரி என்னுமிடத்தில் மென்மையான சூரிய அஸ்தமனம், வட நார்வேயின் சூரிய உதயம் போன்ற சிலவற்றைப்பார்ப்போம்.ஆஸ்திரேலிய ஆய்வாளர்கள் ஒரு புதிய கருவியை உருவாக்கியுள்ளனர். தேர்வின்போது அது மிகவும் உதவுமாம். அது ஒரு வகையான எழுத்துரு. அதன் பெயர் Sans Forgetica என்பதாகும். வாசகர்கள் தகவல்களை மனதில் எளிதாக நினைவில் வைத்துக்கொள்ள உதவுகிறது. நினைவாற்றலை தக்கவைத்துக்கொள்ள புதிய உத்தியாக இதனைக் கொள்ளலாம். இந்த எழுத்துருவினைப் பற்றி மற்றொரு பதிவில் விரிவாகக் காண்போம்.
 
பருவ நிலை மாற்றம் என்னும் பேரழினைக் கட்டுப்படுத்த இன்னும் 12 ஆண்டுகளே உள்ளன என்று எச்சரிக்கும் ஐ.நா. உரிய முயற்சி எடுக்காவிட்டால் பஞ்சம், வெள்ளம், அதிக வெப்பம், லட்சக்கணக்கானோர் வறுமைக்கு தள்ளப்படும் நிலை என்பனவற்றால் பாதிக்கப்படுவோம் என்கிறது.

பேங்க் ஆப் இங்கிலாந்து விரைவில் பிளாஸ்டிக்கில் £50 வங்கி பணத்தாள்களை (banknotes) வெளியிடவுள்ளது. £5 மற்றும் £10 போலவே இதுவும் அதே பாலிமரில் அச்சடிக்கப்படவுள்ளது. வழக்கமான பணத்தாள்களைவிட (paper notes) பாலிமர் பணத்தாள்கள் (Polymer notes) 2.5 மடங்கு காலத்திற்கு நீடிக்கும். (இந்தியாவில் ரூ.10 பணத்தாள்களை இவ்வாறு அச்சடிக்க 2014இல் பாராளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து மார்ச் 2017இல் இந்தியாவில் ஐந்து நகரங்களில் இவ்வித பிளாஸ்டிக் பணத்தாள் வெளியிடப்படுவது தொடர்பாக பேசப்பட்டது. The Hindu 17 மார்ச் 2017)

வட மேற்கு இங்கிலாந்தைச் சேர்ந்த ஏழு வயதாகும் கால்பந்தாட்ட குட்டி வீராங்கனை டார்சி புகழ் பெற்ற விதம் எப்படித் தெரியுமா? கால் பந்தாட்டம் முடிந்தபின்னர், சகதிகள் நிறைந்த செருப்புகளை கையில் எடுத்துக்கொண்டு பெருமையோடு வெற்றி பெற்றுவந்தபோது அவளோடு விளையாடிய பையன்களும், அவர்களுடைய பெற்றோர்களும் அவளோடு கைகுலுக்க மறுத்தார்களாம். அவளுடைய வெற்றியைப் பகிர்ந்துகொள்ள அவர்களுக்கு மனம் ஒப்பவில்லை. மற்ற குழுவினரும், பெற்றோரும் கொடூரமான கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார்களாம். கால் பந்து விளையாட்டு அவளுக்கு மிகவும் பிடித்த விளையாட்டு என்று கூறும் அவளுடைய தாயார் சாரா, பிள்ளைகள் மிகவும் சிரமப்பட்டு விளையாடுகின்றபோதிலும் தன் மகளைப் பொறுத்தவரை அவளுக்கு உரிய அங்கீகாரம் அவளுடன் விளையாடுவோரால் தரப்படுவதில்லை என்கிறார். இளம் பையன்களைக் கொண்ட அந்த கால் பந்துக்குழுவில் அவள் மட்டுமே பெண். விளையாட்டுத் திறமையின் அடிப்படையில் அவள் இங்கிலாந்து மகளிர் கால் பந்தாட்டக்குழுவின் (England's Lionesses) சின்னமாக அறிவிக்கப்பட்ட பின்னர் நிலைமை மாறி, அவளுக்குப் பாராட்டுகள் குவிய ஆரம்பித்துவிட்டதாக அவளுடைய தாயார் பெருமையோடு கூறுகிறார்.

ஆங்கில அகராதிக்கு இந்த ஆண்டு Brextra (Brexit + extra) என்ற புதிய சொல் கிடைத்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வர கூடுதல் நேரமாகலாம் என்ற செய்தியை கார்டியன் பின்வருமாறு கூறுகிறது. ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் விலகுவதை தெரசா மே 2021 இறுதி வரை தாமதப்படுத்தலாம் என்ற சூழல் இங்கிலாந்தில் பல நாளிதழ்களின் முகப்புப்பக்கங்களில் கோபத்தின் வெளிப்பாடாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது. புருஸ்ஸேல்சில் அவர் மாற்றத்திற்கான காலம் நீட்டிக்கப்படலாம் என்று கருத்துரைத்திருந்தார். டெய்லி மெயில் (Another year in Brixit limbo), சன் (UK could be under control of EU for one more year Brextra time), இன்டிபென்டன்ட் (May open to Brexit extension in bid to save deal), டெய்லி டெலிகிராப் (May offers to extend transition by a year), கார்டியன் (சற்றே வித்தியாசமாக Brexit deadlock as May 'offers no ideas' at EU summit) என்ற வகையில் முகப்புச்செய்திகளை வெளியிட்டிருந்தன. டெய்லி எக்ஸ்பிரஸ், டெய்லி மிர்ரர், டைம்ஸ் பிற செய்திகளை முகப்புகளாகக் கொண்டிருந்தன.

முதல் உலகப்போரின் மறக்கப்பட்ட குரல் : முதல் உலகப்போரின்போது காலனியாதிக்க ஆணையின்பேரில் போரிட்டு, எவ்வித பலனுமின்றி பல இந்தியர்கள் தம் இன்னுயிர் ஈந்தனர். 1914 முதல் 1918 வரை நடைபெற்ற இப்போரில் அதிகமான இந்தியர்கள் போரிட்டனர். ஐரோப்பா, ஆப்பிரிக்கா மற்றும் மத்தியக்கிழக்கு நாடுகளின் யுத்தக்களங்களில் 34,000க்கும் மேற்பட்ட இந்திய சிப்பாய்கள் மாண்டனர். அவர்களின் பங்களிப்பானது வரலாற்றில் மறைக்கப்பட்டுவிட்டது.

Cat walks the catwalk ரசனையான தலைப்பு. துருக்கியில் மாடல் அழகிகள் குறுகிய மேடையில் (Catwalk) வரிசையாக நடந்துகொண்டிருந்தபோது திடீரென அங்கு வந்த ஒரு பூனை அவர்களின் குறுக்கே சென்று குறும்பு செய்தது. பார்வையாளர்கள் வியப்பாகப் பார்க்க, அழகிகள் தொடர்ந்து எவ்வித சலனமுமின்றி நடந்துவந்தார்கள். (catwalk பொருள் : a platform extending into an auditorium, along which models walk to display clothes in fashion shows, a narrow walkway or open bridge, especially in an industrial installation.)

மனித சமுதாயம் 1970 முதல் 60 விழுக்காடு விலங்கினத்தை அழித்துள்ளதாக அறிக்கை கூறுகிறது. 

17 November 2018

இந்திரா காந்தி : ஒரு வாழும் மரபு : ரகு ராய்

இந்திரா காந்தியின் வாழ்வில் பல்வேறு காலகட்டங்களில் புகைப்படக்கலைஞர் ரகு ராய் எடுத்த புகைப்படங்களைக் கொண்ட நூல் இந்திரா காந்தி : ஒரு வாழும் மரபு  (Indira Gandhi: A Living Legacy, Raghu Rai) என்ற நூலாகும். 
புகைப்படக்கலைஞர் ரகு ராய் (பி.1942) எடுத்த புகைப்படங்களைக் கொண்ட தாஜ்மகால் (Taj Mahal) நூலினை 1980களின் இடையில் தமிழ்ப்பல்கலைக்கழக நூலகத்தில் முதன்முதலில் பார்த்தேன். அந்நூலில் அவர் தாஜ்மகாலை பல கோணங்களில், பல்வேறு நிலைகளில் எடுத்திருப்பார். அடுத்து, இந்திரா காந்தி இயற்கையெய்தியபோது India Today இதழில் A Photographic Tribute by Raghu Rai என்ற தலைப்புடன் அவர் எடுத்த, இந்திரா காந்தியின் பல புகைப்படங்களைக் காணமுடிந்தது. அப்போதுமுதல் ரகுராயின் புகைப்படங்கள், அதனைப் பற்றிய செய்திகளை ஆர்வமாகப் படிக்க ஆரம்பித்தேன். 
ரகு ராய் (நன்றி : மெக்னம் போட்டோஸ்)
ஸ்டேட்ஸ்மென்  (1966-76), சன்டே (1977-80), இந்தியா டுடே (1982-91) உள்ளிட்ட பல இதழ்களில் புகைப்படக்கலைஞராக பணியாற்றியவர். 1971இல் பாரிஸில் நடைபெற்ற அவருடைய புகைப்படக் கண்காட்சியின்போது புகழ்பெற்ற புகைப்படக்கலைஞர் ஹென்றி கார்ட்டர் பிரஸ்ஸன் என்பவரால் ஈர்க்கப்பட்டு உலகப்புகழ் பெற்ற மேக்னம் போட்டோஸ் புகைப்படக்கூட்டமைப்பில் நியமிக்கப்பட்டார். பல இந்திய, அயலக விருதுகளைப் பெற்றுள்ளார். லண்டன், பாரிஸ், நியூயார்க், ஹாம்பர்க், பிரேக், டோக்யோவிலுள்ள பங்கமூரா அருங்காட்சியகம், ஜுரிச் மற்றும் சிட்னி உள்ளிட்ட பல இடங்களில் புகைப்படக் கண்காட்சிகளை நடத்தியுள்ளார். இந்தியாவின் உயரிய விருதான பத்மஸ்ரீ (1971), அமெரிக்காவில் சிறந்த புகைப்படக்காரர் விருது (1992) உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றுள்ளார். அவருடைய புகைப்படக்கட்டுரைகள் டைம், லைப், நியூயார்க் டைம்ஸ், சன்டே டைம்ஸ், நியூஸ்வீக், இன்டிபென்டன்ட், நியூயார்க்கர் உள்ளிட்ட பல வெளிநாட்டு இதழ்களில் வெளிவந்துள்ளன. புகைப்படப் பத்திரிக்கையாளரான இவர் 18க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். இந்நூல் இந்திரா காந்தியைப் பற்றிய அவருடைய மூன்றாவது நூலாகும். தொடர்ந்து மேக்னம் போட்டோஸ் அமைப்பிற்கு பங்களித்து வருகிறார்.

144 பக்கங்களைக் கொண்ட இந்நூலுக்கு இந்தர்ஜித் பத்வார் முன்னுரை (ப.11-22) வழங்கியுள்ளார். பல்வேறு சூழல்களில் ரகு ராய் எடுத்துள்ள இந்திரா காந்தியின் புகைப்படங்கள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. 1964இல் நேரு இறந்தபோது அவருக்குப் பின்னால் யார் என நாடு ஏங்கிக்கொண்டிருந்த வேளையில் லால் பகதூர் சாஸ்திரி பொறுப்பேற்றது, அவர் தன் அமைச்சரவையில் இந்திரா காந்தியை தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சராக்கியது, அதற்கு முன்பாக அவர் நேருவுக்கு உதவியாக இருந்தது, ஆரம்பத்தில் தயக்கத்தோடு காணப்பட்ட இந்த இளம் பெண்மணி பின்னர் நேருவின் அரசியல் வாரிசாக வந்தது என்ற சூழ்நிலைகளில் தொடங்கி அப்போது ஸ்டேட்ஸ்மேன் இதழில் புகைப்படக்காரராகத் தன் பயணத்தைத் தொடங்கியதைப் பற்றிக் குறிப்பிடுகிறார் ரகு ராய். 

லால்பகதூர் சாஸ்திரியின் மறைவுக்குப் பின் இந்திரா காந்தி பிரதமராக பொறுப்பேற்கிறார். ஒரு புதிய சகாப்தம் ஆரம்பமாகிறது. இவ்வாறு தன் நூலில் ஆங்காங்கே உரிய குறிப்புகளோடு இந்திரா காந்தியின் புகைப்படங்களைத் தந்துள்ளார். முக்கிய அரசியல் பிரமுகர்கள், குடும்ப உறுப்பினர்கள், பொதுமக்களோடு இந்திரா காந்தி, பொது நிகழ்ச்சிகள், அரசு மற்றும் பிற விழாக்களில் அவர் கலந்துகொள்ளல், செங்கோட்டையில் பேச்சு என்று அவர் கலந்துகொண்ட நிகழ்வுகளில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இந்நூலில் உள்ளன. இந்திரா காந்தியின் குணாதிசயங்களை வெளிப்படுத்தும் வகையில் அவை காணப்படுகின்றன. இந்திரா காந்தியின் ஆளுமையை மதிப்பவர்களும், புகைப்படக்கலையை நேசிப்பவர்களும் இந்நூலை விரும்புவர்.  (கீழுள்ள புகைப்படங்களுக்குரிய செய்திகள் அவருடைய நூலில் உள்ளபடி தரப்பட்டுள்ளன)

அவரை பிரதமராக்கிய காமராஜருடன் 

மறுமொழிக்கு தகுதி எனக் கருதிய கடிதங்களுக்கு தனிப்பட்ட முறையில்
அவரே மறுமொழி அனுப்புவார்

ராஜ்காட்டில் தியாகிகள் தினத்தின்போது பிரார்த்தனைக்கூட்டத்தில் 

கிராமத்துப் பள்ளியில் தேநீர் அருந்துதல்
பாராளுமன்ற இல்லத்தில் அவருடைய அலுவலகத்தில் இரவில் பணியாற்றல்
அணிவகுப்பு மரியாதையை ஏற்றல்
வரலாற்று சிறப்புமிக்க செங்கோட்டையிலிருந்து உரையாற்றியபோது அதிக எண்ணிக்கையிலான மக்களை அவர் ஈர்த்தார் 

இந்திரா காந்தி இறந்தபோது வெளியான India Today இதழில் (10 நவம்பர் 1984) ரகு ராய் எடுத்த இந்திரா காந்தியின் படங்கள் (A Photographic Tribute by Raghu Rai, பக்.78-84) வெளியாகியிருந்தன. அந்த படத்தொகுப்பிற்கு அவர் தந்துள்ள முன்னுரையிலிருந்து : 

"1966இல் அவர் பிரதமரானபோது நான் தொழில்ரீதியாக புகைப்படம் எடுக்க ஆரம்பித்தேன். ஒரு நபர் என்ற நிலையிலிருந்து அவர் பிரதமராக உருவெடுப்பதைக் கண்டுபிடிப்பதில் ஆர்வமாக இருந்தேன்.  இந்தக் காலகட்டத்தில் அவரை மிக நெருக்கமாக புகைப்படம் எடுக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது...... அவரை புகைப்படம் எடுப்பது என்பதானது ஓடிக்கொண்டிருக்கும் ஒரு ஆற்றின் பல்வேறு நிலைகளைப் படம் பிடிப்பது போலிருக்கும்.....கடைசியாக நான் அவரை படமெடுத்தபோது அவருடைய முகத்தில் காணப்பட்ட அமைதி கலந்த வெளிப்பாடு ஏதோ ஒரு புதிரை என்னிடம் உண்டாக்கியது, அது எனக்கு வலியைத் தந்தது"  (19 நவம்பர் இந்திரா காந்தி பிறந்த நாள்) 
புகைப்படங்கள் நன்றி : ரகு ராய் 

17.நவம்பர் 2018 மாலை மேம்படுத்தப்பட்டது.

10 November 2018

11.11.11 நூற்றாண்டு நிறைவு

உலக வரலாற்றில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகளில் ஒன்றாகக் கருதப்படுகின்ற முதல் உலகப்போர் 1914 ஜுலை 28 முதல் 1918 நவம்பர் 11 வரை ஐரோப்பாவினை மையமாகக் கொண்டு நடைபெற்றதாகும்.

ஐரோப்பா, ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு நாடுகள், பசிபிக் தீவுகள், சீனா, தெற்கு மற்றும் வட அமெரிக்காவின் கடற்பகுதிகளில் நடைபெற்ற இப்போரின் முடில் ஜெர்மனி, ரஷ்யா, துருக்கி ஒட்டாமன் மற்றும் ஆஸ்திரிய ஹங்கேரிப் பேரரசுகள் வீழ்ந்தன. ஐரோப்பாவிலும் மத்திய கிழக்குப் பகுதிகளிலும் புதிய நாடுகள் உருவாயின. இப்போரில் 17 கோடி வீரர்களும், பொதுமக்களும் உயிரிழந்தனர்.

முதல் உலகப்போர் நிறைவுற்றதற்கான ஒப்பந்தம் கையொப்பமிட்டு ஒரு நூற்றாண்டு 11 நவம்பர் 2018 அன்று நிறைவு பெறுகிறது. அமைதிக்கான பேச்சுவார்த்தை மேற்கொள்வதற்கு முன்பாக சண்டையை நிறுத்தல் armistice எனப்பட்டது. இச்சொல்லுக்கு "தற்போதைய போர் நிறுத்தம், போர் ஓய்வு, போர் நிறுத்த நாள், 1918 முதல் ஆண்டுதோறும் முதலாவது உலகப்போர் நிறுத்தம் கொண்டாடப்பட்டு வரும் நாள் (நவம்பர் 11)" ஆங்கிலம்-தமிழ்ச் சொற்களஞ்சியம் (சென்னைப் பல்கலைக்கழகம், 1963, மறுபதிப்பு 2010) கூறுகிறது.  முதல் உலகப்போரைப் பொறுத்தவரை ஜெர்மானியருக்கும், நேச நாடுகளுக்கும் இடையே மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தமே அது. 
வரலாற்று சிறப்புமிக்க முதல் உலகப்போர் நிறுத்த ஒப்பந்தம்  11 நவம்பர் 1918இல் காலை 5.00 மணிக்கு கையொப்பமிடப்பட்டு, காலை 11.00 மணிக்குச் செயல்பாட்டிற்கு வந்தது. இதனை "Eleventh hour of the eleventh day of the eleventh month" என்றும், 11.11.11 என்றும் கூறுவர். போர் நிறுத்த செய்தி எதிர்நோக்கப்பட்ட விதத்தை அப்போதைய இதழ்கள் வெளியிட்டிருந்தன. இந்நிகழ்வினையொட்டி 11th Month, 11th Day, 11th Hour (Philip Julian), 11th Month, 11th Day, 11th Hour : Armistice day, 1918 (Joseph E.Persico) உள்ளிட்ட பல நூல்கள் வெளிவந்துள்ளன.


12 நவம்பர் 1918 The Hindu
12 நவம்பர் 1918 மான்செஸ்டர் கார்டியன்

முதல் உலகப்போர் நிறைவுற்றபோது இங்கிலாந்து மற்றும் வேல்சில் 1,634 குழந்தைகளுக்கு போர் தொடர்பான, போர் நடைபெற்ற இடங்கள் தொடர்பான பெயர்கள் சூட்டப்பட்டன. அவை வெர்டன் (Verdun, பிரான்சில் உள்ள ஒரு இடம்), கிட்சனர் (Kitchener மற்றும் ஹைக் Haig, ஐக்கிய இராஜ்ஜியத்தில் அமைக்கப்பட்ட பிரிட்டிஷ் படையின் பெயர் கிட்சனர் படை), வெற்றி (Victory), அமைதி (Peace), 11 நவம்பர் 1918 அன்றோ, அந்நாளிலிருந்து ஒரு வாரத்திற்குள்ளோ பிறந்த குழந்தைகளுக்கு ஆர்மிஸ்டைஸ் (Armistice), பச்சென்டாலே (Passchendaele, பெல்ஜியத்தில் உள்ள இடம்), சோமே (Somme, பிரான்சில் உள்ள சோமே ஆறு அருகில்), ஒய்பிரஸ் (Ypres, பெல்ஜியத்தில் ஒரு இடம் ஒய்பிரஸ்), ஏமியன்ஸ் (Amiens, பிரான்ஸில் உள்ள ஏமியன்ஸ்) என்றவாறு அமையும்.

முதலாம் உலகப்போரின் நூற்றாண்டைக் குறிக்கும் நிகழ்வுகளில் ஒரு பகுதியாக முதலாம் உலகப் போரில் பங்கேற்ற பிரிட்டிஷ் ராணுவ வீரர்கள், போரின்போது எழுதிய நாட்குறிப்புகள் பிரிட்டனின் தேசிய ஆவணக் காப்பகத்தால் இணையத்தில் பிரசுரிக்கப்படுகின்றன. 1.5 மில்லியன் நாட்குறிப்பு பக்கங்கள் தேசிய ஆவணக்காப்பகத்தால் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளன. இவற்றில், ஐந்தில் ஒரு பங்கு பக்கங்கள் 2014 வரை டிஜிட்டல் முறையில் பாதுகாக்கப்பட்டுள்ளன.இந்த டிஜிட்டல் முறையில் பாதுகாக்கப்பட்ட 1944 நாட்குறிப்புகளில் எழுதப்பட்டிருக்கும் குறிப்புகள், பிரிட்டன் போரில் முதலில் பயன்படுத்திய மூன்று குதிரைப்படை மற்றும் ஏழு காலாட்படைப் பிரிவுகளின் அனுபவங்களை விளக்குகின்றன. அதிகாரபூர்வ நாட்குறிப்புகள் தவிர, போரில் பங்கேற்ற பிரிட்டிஷ் ராணுவத்தினர் எழுதிய தனிப்பட்ட நாட்குறிப்புகள் சிலவும் டிஜிட்டல் முறையில் பாதுகாக்கப்பட்டு இணையத்தில் வெளியிடப்படுகின்றன.முதல் பட்டாலியனின் கேப்டன் ஜேம்ஸ் பேட்டர்சன் எழுதி வைத்திருந்த சொந்த நாட்குறிப்பும் இது போல டிஜிட்டல் வடிவில் பாதுகாக்கப்படுகிறது.உலகின் கடைசி முதல் உலகப்போர் வீரர், க்லாட் சூல்ஸ் , ஆஸ்திரேலியாவில், தனது 110வது வயதில், 2011ல் காலமாதை ஒட்டி முதலாம் உலகப்போரின் போது பங்கேற்ற வீரர்கள் யாரும் உயிருடன் இல்லாத நிலையில், இந்த நாட்குறிப்புத் திட்டம் அவர்களது குரல்களை மக்கள் கேட்க வகை செய்யும் என்று கூறப்படுகிறது.

போரில் இறந்த ராணுவ வீரர்களை நினைவுகூறும் வகையில் லண்டனில் ஆயுதப்படை நினைவு நாள் கொண்டாடப்பட்டது. மறைந்த ராணுவ வீரர்களின் கல்லறைகளில் பொதுமக்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர். முதல் உலகப்போரில் இன்னுயிர் ஈந்தோரை நினைவுகூறும் விதமாக, அதன் நூற்றாண்டு நாளான 2018 நவம்பர் 11 அன்று விடியற்காலையில் இங்கிலாந்து, ஸ்காட்லாந்து, வேல்ஸ் மற்றும் வட அயர்லாந்தில் 3,000க்கும் மேற்பட்ட மணிக்கூண்டுகளில் மணி ஒலிக்கப்படவுள்ளது.  உலகம் முழுவதும் இந்த 100ஆவது ஆண்டு நாள் நினைவுகூறப்படுகிறது. முதல் உலகப்போரில் உயிர் துறந்தோரின் உறவினர்களும் நண்பர்களும் நூற்றாண்டு நிகழ்வுகளில் கலந்துகொள்கின்றனர். 

போரின் நூற்றாண்டு இந்தியாவில் நினைவுகூறப்படவுள்ளது. இந்தியாவின் பங்களிப்பினை வெளியுலகிற்கு வெளிப்படுத்த இது ஒரு நல்வாய்ப்பாக அமையும். அதற்கான முயற்சியை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சரவை உதவியுடன் யுனைடைட் சர்வீஸ் இன்ஸ்டிடியூஷன் மேற்கொண்டுள்ளது.  
முதல் உலகப்போர் நூற்றாண்டு நிறைவினையொட்டி வெளிநாட்டில் இந்திய வீரர்களுக்கான இரண்டாவது தேசிய போர் நினைவுச்சின்னம் துணை ஜனாதிபதி எம்.வெங்கய்யா நாயுடுவால் நவம்பர் 11, 2018இல் பிரான்ஸில் திறக்கப்படவுள்ளது.  
பெல்ஜியத்தில் போரிட்ட 1,30,000 இந்திய வீரர்களை நினைவுகூறும் வகையில் முதல் நினைவுச்சின்னம் அங்கு யைப்ரஸ் என்னுமிடத்தில் 2002இல் வடிவமைக்கப்பட்டது. அவர்களில் 10,000 வீரர்கள் போர்க்களத்தில் உயிர் துறந்தனர்.
1970களில் பதியப்பட்ட, இந்திய வீரர்களின் சுமார் 1,000 பக்கங்கள் அடங்கிய பேட்டியின் கையெழுத்துப்படிகள் பிரிட்டிஷ் நூலகத்திற்கு அளிக்கப்பட்டுள்ளது. சுமார் போரில் கலந்துகொண்ட பெரும்பாலும் கல்வியறிவற்ற, வட இந்தியாவைச் சேர்ந்த 1.5 மில்லியனுக்கு மேற்பட்ட இந்திய வீரர்கள் நடத்தப்பட்ட மோசமான விதம், கசையடி, விடுப்பிற்கான அனுமதி மறுப்பு, இன அடிப்படையில் வேறுபாடு உள்ளிட்ட நெஞ்சை உருக்குகின்ற நிகழ்வுகள் இதில் பதியப்பட்டுள்ளன.    

துணை நின்றவை
விக்கிபீடியா, முதலாம் உலகப்போர்
முதல் உலகப்போர் நூற்றாண்டு தினம் அனுசரிப்பு, தினமலர், 6 ஆகஸ்டு 2014
Soldiers' relatives mark centenary of first world wars forgotten battle, Guardian, 7 Aug 2018
Bells will ring out: world to mark end of first world war, 100 years on, Guardian, 12 Aug 2018
Indians in the trenches : voices of forgotten army are finally to be heard, Observer, 27 October 2018 
The forgotten million : on Indian soldiers in World War I, The Hindu, 6 November 2018 
லண்டனில் முதல் உலகப்போர் முடிவின் 100வது ஆண்டு நிறைவு நாள் அனுசரிப்பு, தினகரன், 8 நவம்பர் 2018
A sacrifice remembered, The centenary of the First World War has provided a welcome opportunity to recognise India's role, The Hindu, 9 November 20185 மார்ச் 2020 அன்று மேம்படுத்தப்பட்டது. 

06 November 2018

அது ஒரு பொற்காலம் : தித்திக்கும் தீபாவளி, தினமணி

தினமணி 4 நவம்பர் 2018 இதழில் நான் எழுதியுள்ள தீபாவளியைப் பற்றிய நினைவுகள் அது ஒரு பொற்காலம் என்ற தலைப்பில் வெளியாகியுள்ளது. 
தீபாவளி நாளான இன்று அதனைப் பகிர்வதில் மகிழ்கிறேன், 
அவ்விதழுக்கு நன்றியுடன்.  
தீபாவளி என்றதுமே நினைவிற்கு வருபவை பலகாரங்களும், வெடிகளும், புத்தாடைகளும்தான். கும்பகோணத்தில் எங்கள் வீட்டில் தீபாவளிக்கு 10 நாள்களுக்கு முன்பே  பலகாரம் செய்யும் பணி ஆரம்பித்துவிடும். திருமஞ்சன வீதியில் படித்துக்கொண்டிருந்த நேரம். பள்ளிவிட்டு வீட்டுக்குச் செல்வதிலேயே கவனமாக இருப்போம். எங்கள் ஆத்தா, எங்களை வளர்த்த அத்தை, எங்கள் அம்மா கூட்டாகச்சேர்ந்து பலகாரங்களைச்சுட ஆரம்பிப்பர். முறுக்கு, அதிரசம், ரவா உருண்டை, பச்சைப்பயறு உருண்டை, கெட்டி உருண்டை (எங்கள் ஆத்தா இதை புடலங்காய் உருண்டை என்பார்) ஆகிவற்றை ஆத்தா செய்ய ஆரம்பிப்பார். அரிசி மாவையும், உளுந்து மாவையும் கலந்து வாணலியில் உள்ள எண்ணெயில் ஊற்றிச் சுடும்போதே வாசனை மூக்கைத் துளைக்கும். முறுக்கினை வெவ்வேறு அச்சில் வைத்து சாதா முறுக்கு, முள் முறுக்கு என்று செய்வர். 

சாமி கும்பிட்டபின்னர்தான் தருவோம் என்று ஆத்தா கூறினாலும் நாங்கள் அருகில் பாவமாக நிற்பத்தைப் பார்த்ததும் தந்துவிடுவார். மாடிக்கோ, கொல்லைப்புறத்திற்கோ எடுத்துக்கொண்டு ஓடிவிடுவோம். தின்றுவிட்டு மறுபடியும் வந்து கேட்போம். போட்டு முடிந்தபின் அதற்காகவே உள்ள பெரிய பித்தளைக்குவளையில் வைத்து பத்திரமாக மூடி வைத்துவிடுவார். அதிரசம் செய்வதற்காக வைத்துள்ள மாவினைப் பார்க்கும்போது எச்சில் ஊறும். மிகவும் கெட்டியாக இல்லாமல், அதே சமயம் குழைவாகவும் இல்லாமலும் இருக்கின்ற மாவினை சிறிய உருண்டையாக உருட்டி ஆத்தா தரும்போது அதிக ருசியாக இருக்கும். அதிரசத்தைவிடவும் அந்த மாவினை நாங்கள் போட்டி போட்டு வாங்கி உண்போம். ரவா உருண்டை இனிப்பாக இருந்தாலும் எனக்கு அதிகம் பிடித்தது பச்சைப்பயறு உருண்டைதான். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பலகாரமாகச் செய்வார்கள். எங்கள் வீட்டில் பலகாரம் செய்யும்போதே அடுத்தடுத்த வீடுகளில் என்ன பலகாரங்கள் செய்கிறார்கள் என்று ஆர்வத்தோடு விசாரிப்போம்.   

நடுத்தரக்குடும்பத்துக்கும் சற்றே கீழான நிலையில் எங்கள் குடும்பம் இருந்ததால் ஆடம்பரமில்லாத, குறைந்த விலையிலான துணியில்தான் எங்களின் தீபாவளி ஆடை அமையும். அப்போதெல்லாம் குறைந்த விலை, அதிக விலை என்ற வேறுபாடோ, அதுதான் சிறந்தது இதுதான் சிறந்தது என்ற எண்ணங்களோ தெரியாது. தீபாவளிக்கு புதிய துணி என்ற மகிழ்ச்சியே அனைவரிடமும் இருக்கும்.  

தீபாவளியன்று காலை கங்கா ஸ்நானம் எனப்படுகின்ற குளியலுக்காக பெற்றோர் எங்களை எழுப்பிவிடுவர். குளிப்பதற்குத் தயாராக நாங்கள் வரிசையாக நிற்கவேண்டும். ஆத்தா தன் கையில் எண்ணெயை ஊற்றி தலையின் உச்சியில் நச்சென்று வைத்து ஒவ்வொருவருக்கும் தேய்த்துவிடுவார். அப்போது கிடைக்கின்ற சுகத்திற்கு ஈடு இணை எதுவுமேயில்லை. சாமியறையில் அனைத்து சாமி படங்களுக்கு முன்பாக புதிய துணிகள், பலகாரங்கள், பழங்கள், வெற்றிலை பாக்கு போன்றவை வைத்துப் படைப்பார்கள். புதிய ஆடைகளில் மஞ்சள் தடவி வைத்திருப்பார்கள். பூசை முடிந்ததும்  ஒவ்வொருவருக்காக தட்டில் அவரவர்களின் ஆடைகளுடன் சில்லறை காசினை வைத்துத் தருவார்கள். ஆத்தா, தாத்தா கால்களிலும் பெற்றோர் கால்களிலும் விழுந்து வணங்கி அதனைப் பெற்றுக்கொள்வோம். எங்களுக்கு நெற்றியில் திருநீறு பூசிவிடுவார்கள். வீட்டில் எங்களுக்கு காசு போட்டு வைப்பதற்காக தரப்பட்டுள்ள சிறிய பெட்டிகளில் அவர்கள் கொடுத்த காசுகளை உடனே போட்டுவிடுவோம். பெரும்பாலும் அதில் நாலணா அதிகமாக இருக்கும். சேமிப்புப்பழக்கத்தை உண்டாக்கவும், பண மதிப்பை உணர்ந்துகொள்ளவும் அவர்கள் செய்த உத்தியை இப்போது உணரமுடிகிறது.

புத்தாடை அணிந்துகொண்டு அனைத்து உறவினர் வீடுகளுக்கும், நண்பர்கள் வீடுகளுக்கும், அண்டை வீட்டாருக்கும் நாங்கள் கொண்டுபோய் கொடுப்போம். கொண்டு செல்லப்படுகின்ற வீட்டில் உள்ளோரின் எண்ணிக்கைக்குத் தக்கபடி முறுக்கு, அதிரசம், உருண்டைகளின் எண்ணிக்கை அமையும். நாங்கள் தருவது போலவே அவர்களும் எங்கள் வீட்டில் கொண்டு வந்து தருவார்கள்.

வீட்டில் கொண்டாடிய பின்னர் நாங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வீடுகளுக்குச் செல்வோம். அவ்வாறே அவர்கள் எங்கள் வீட்டிற்கு வருவார்கள். நண்பர்களின் சகோதர சகோதரிகளோடும், பெற்றோரோடும் மனம் விட்டுப் பேசுவோம். பலகாரங்கள், புத்தாடைகள், மத்தாப்பு மற்றும் வெடிகளை மையப்படுத்தியும் பேசுவோம். சின்ன தாத்தா, சின்னாத்தா, சித்தி, சித்தப்பாக்கள், பெரிய தாத்தா, பெரியாத்தா, பெரியத்தை, பெரிய மாமா வீடுகளுக்குச் சென்று அவர்களிடம் ஆசி பெறுவோம். அங்கிருந்து சகோதர முறை உள்ளவர்களும், மாமன் மகள், அத்தை மகன் உறவு முறை உள்ளவர்களும் வருவார்கள். எங்கள் வீட்டில் தாத்தா, ஆத்தாவிடம் ஆசி பெற்றுச் செல்வார்கள். அவ்வாறு வரும்போது பெரியவர்கள் காலில் விழவேண்டும் என்று கூறுவார்கள். அனைவரும் காலில் விழுந்து அவர்களின் ஆசியைப் பெறுவர். பெரியவர்கள் எங்களுக்குத் தருவதற்காகவே சில்லறையாக காசுகளை வைத்திருப்பர். உறவினர் வீட்டுக்குச் செல்லும்போது போட்டி போட்டுக்கொண்டு வாங்கி, எங்கள் வீட்டு உண்டியலில் சேர்ப்போம். அவர்களிடம் இல்லாத வெடி மத்தாப்புகளைத் தந்து எங்களிடம் இல்லாததை அவர்களிடமிருந்து பண்டமாற்று முறையில் பெற்றுக்கொள்வோம். 

கல்லூரிக்காலம், தொடர்ந்து பணியில் சேரல், திருமணம் என்ற நிலையில் கூட்டுக்குடும்பத்திலிருந்து அனைவரும் பிரிந்தோம். வீட்டுப் பெரியவர்களும் ஒவ்வொருவராக இறந்துவிட தனிக்குடும்பங்களாக அனைவரும் பிரிந்துவிட்ட சூழலில் தற்போதைய தீபாவளிகள் கொண்டாடப் படுகின்றன.

எங்கள் வீட்டில் கடைபிடிக்கப்பட்டு வந்த வழக்கங்களை தொடரத் தொடங்கினார், என் மனைவி. முறுக்குக்கும், பச்சைப்பயறு உருண்டைக்கும் மில்லில் மாவு அரைத்து வந்து விடுவோம். பலகாரத் தயாரிப்பில் ஆரம்பத்தில் நானும், பின்னர் மகன்களும் இணைந்துகொண்டனர். எங்களுக்குத் தக்கவாறு பலகாரங்களை செய்வோம். தீபாவளியன்று புத்தாடை அணிந்ததும்  நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும், அண்டை வீட்டாருக்கும் கும்பகோணத்தைப் போல இல்லாவிட்டாலும்கூட தீபாவளி பலகாரங்களை கொடுத்தல், வாங்கல் தொடர்கிறது.

இருந்தாலும் அக்காலகட்டத்தில் காணப்பட்ட வெளிப்படைத்தன்மையை பெரும்பாலானோரிடம் காணமுடியவில்லை. ஒருசிலர் மட்டுமே மிகவும் அணுக்கமாகப் பழகுகின்றனர். புத்தாடையைப் பார்க்கும்போதே இது என்ன விலையிருக்கும் என்று மனக்கணக்குப் போடுவது, அது உயர்ந்தது, இது உயர்ந்தது, எந்தக்கடையில வாங்கியது என்ற எண்ணத்தில் இருப்பதையே காணமுடிகிறது. வீட்டிற்கு வரும் பிள்ளைகளில் பெரும்பாலும் மனம் திறந்து பேசுவதில்லை. கொடுக்கும் பலகாரங்களைக்கூட ஏதோ மேலைநாட்டவர் நாகரிகமாக உண்ணுவது போல சிறிதளவு கையில் வைத்துக்கொண்டு, உண்பதா வேண்டாமா என்ற நிலையில் இருப்பதைக் காணமுடிகிறது. குழந்தைகள் பெற்றோரின் முகத்தைப் பார்க்க அவர்கள் கண்கள் மூலமாக இடும் கட்டளைகளில் குழந்தைகள் எடுத்ததையும் கீழே வைத்துவிடுகின்றன. அல்லது பெற்றோரே குழந்தைக்கு அது ஒத்துக்கொள்ளாது இது ஒத்துக்கொள்ளாது என்று கூறுவதைக் காணமுடிகிறது. பல உறவினர்களின் வீட்டில் குழந்தைகள் முறையாக அறிமுகப்படுத்தப்படுவதும் இல்லை. அவர்களில் பெரும்பாலோர் தொலைக்காட்சியைப் பார்த்துக்கொண்டும், கைபேசியை வைத்துக்கொண்டும் வேண்டாவெறுப்பாக இருப்பதைக் காண முடிகிறது.   

கூட்டுக்குடும்பச் சிதைவு, பணமே வாழ்க்கை என்ற மன நிலை, மற்றவரோடு ஒப்புநோக்கி தாழ்வு மனப்பான்மையுடனோ, உயர்வு மனப்பான்மையுடனோ பழகுதல் என்பதானது இப்போது பெருகிவிட்டது. இவ்வாறான காலகட்டத்தில்கூட சில குடும்பங்களில் பழைய பழக்க வழக்கங்களைக் கடைபிடிப்பதைப் பார்க்கும்போது அந்த நாள்கள் நினைவிற்கு வரும். இளமைக்கால தீபாவளியை நினைக்கும்போது “நாம இன்னம் சின்ன பிள்ளையாவே இருந்திருக்கலாமோ?” என்று எண்ணத்தோன்றும்.

03 November 2018

அயலக வாசிப்பு : செப்டம்பர் 2018

செப்டம்பர் 2018இல் அயலகச் செய்தியில் கார்டியன், சன், இன்டிபென்டன்ட் ஆகியவற்றில் வெளிவந்த சில செய்திகளைக் காண்போம்.

பிரிக்சிட்டிற்குப் பிறகு பிரிட்டனின் ஏற்றுமதியை அதிகரிக்கும் முகத்தான் ஆப்பிரிக்காவிற்குச் சென்ற பிரிட்டன் பிரதமரான தெரசா மே ஏற்றுமதி செய்தது நடனம் தொடர்பான மீம்ஸ்களையே. முதன்முதலில் தென்னாப்பிரிக்கப் பள்ளியில் அவர் நடனமாடியபோது சமூக வலைத்தளங்களில் அது வைரலானது. தொடர்ந்து மறுபடியும் இரண்டாவது முறை நடனமாடினார். இவரைப்போல இதற்கு முன்பாக நடனமாடிய பிரிட்டிஷ் அரசியல்வாதிகள் இரும்புப்பெண்மணி என அழைக்கப்பட்ட மார்கரெட் தாச்சர், தொழிலாளர் கட்சியின் தலைவர் நீல் கின்னாக், பிரிட்டனின் முன்னாள் துணை பிரதமர் ஜான் பிரஸ்காட், பிரிட்டிஷ் கன்சர்வேட்டிவ் கட்சியைச் சேர்ந்த ஜான்ரெட்வுட், கன்சர்வேட்டிவ் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் அன்னி விட்டிகொம்பே, பிரிட்டனின் முன்னாள் பிரதமர் டேவிட் கேமரூன், பிரிட்டிஷ் அரசியல்வாதியும் சிறந்த வரலாற்றறிஞருமான போரிஸ் ஜான்சன், முன்னாள் பிரிட்டிஷ் பாராளுமன்ற உறுப்பினரான நீல் ஹேமில்டன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான எட் பால்ஸ் ஆகியோர் ஆவர். அனைவரும் பல நிலைகளில் பல சூழல்களில் நடனமாடியுள்ளபோதிலும் இதில் சிறப்பிடம் பெறுவது தெரசா மே மட்டுமே. அவரை மிஞ்ச முடியுமா?

ரயிலில் பயணிக்கும்போது யாரும் இருக்கை தராத நிலையில், தன் ஆறு மாதக் குழந்தைக்குப் பாலூட்டிய தாய் தன் கோப உணர்வுகளை இன்ஸ்டாகிராமில் வெளிப்படுத்தியுள்ளார். லண்டனிலிருந்து விக்போர்ட் என்ற இடத்திற்குச் சென்றபோது சுமார் அரை மணி நேரம் நின்று கொண்டே தன் குழந்தைக்குப் பாலூட்டியுள்ளார். தன் கோப உணர்வுகளைப் பகிர்ந்துகொண்டு கடைசியாக அவர் வைத்த வேண்டுகோள் : "அடுத்த முறை ரயிலில் குழந்தையோடு யாராவது இருப்பதைப் பார்த்தீர்களென்றால், நல்ல உடல்நிலையோடு இருப்பவராக இருப்பின், உங்களுடைய இருக்கையை அவருக்குக் கொடுங்களேன்!"

கிரிமியாவில் உள்ள சபாரி பார்க்கிற்கு சுற்றுலா சென்றோருக்கு ஒரு பயமுறுத்தும் ஆச்சர்யம் காத்திருந்தது. அவர்கள் பயணித்துக்கொண்டிருந்த பேருந்தில் ஒரு இளம் சிங்கம் ஏறியது. சில நாள்களுக்கு முன்னர்தான் அந்த பார்க்கில் ஒரு பெண்மணி ஒரு சிங்கத்தால் கொல்லப்பட்டார். ஆனால் இந்த சிங்கம் சற்றே வித்தியாசமாக நடந்துகொண்டது. சிங்கம் ஏறியதே என்று பயப்படவேண்டாம். அனைத்தும் நன்றாகவே முடிந்தது. அது அங்கிருந்த யாரையும் தாக்கவில்லை. மாறாக அங்கிருந்த பயணிகளை அன்போடு நக்க ஆரம்பித்தது. தன் அன்பை வெளிப்படுத்தும் விதமாக அதன் முகத்தை வைத்து தேய்க்க ஆரம்பித்தது. பயணியர் அந்த சிங்கத்தோடு விளையாட ஆரம்பித்துவிட்டனர். சிங்கத்தோடு அவர்கள் செல்பி எடுக்க ஆரம்பித்துவிட்டனர். இதுபோல் தினமும் யாரும் மிக அண்மையில் ஒரு சிங்கத்திற்கு நெருக்கமாக எளிதில் வரமுடியாது என்பதையும் மனதில் கொள்ளவேண்டும். இந்த பார்க்கில் கடந்த ஆண்டு அரிய வகை வெள்ளைச் சிங்கங்கள் பிறந்தன என்பது குறிப்பிடத்தக்க செய்தியாகும்.

நவம்பர் 2017இல் பிறந்தபோது அவள் (Vanellope Wilkins) உயிருடன் இருக்க வாய்ப்பில்லை என்று கருதப்பட்டது. ஏனென்றால் அவளுக்கு இதயம் உடலுக்கு வெளியே இருந்தது. தாயின் வயிற்றில் குழந்தை இருக்கும்போதே அதன் இதயத்தின் ஒரு பகுதி உடலுக்கு வெளியே வளர்வதை அறியமுடிந்தது. அப்போது பெற்றோரிடம் கர்ப்பத்தைக் கலைத்துவிடக் கூறியபோது அவர்கள் மறுத்துவிட்டனர். இவ்வகையில் இங்கிலாந்தில் பிறந்த முதல் குழந்தை இதுதான். 10 இலட்சத்திற்கு ஐந்து குழந்தைகள் இவ்வாறு பிறக்குமாம். குழந்தையைக் காப்பாற்ற பல முயற்சிகள் மருத்துவமனையில் உள்ள குழுவினரால் மேற்கொள்ளப்பட்டன. பிறந்த ஒரு மணிநேரத்திற்குள் அவளுக்கு முதல் அறுவை சிகிக்சை செய்யப்பட்டது. முதலில் லெய்செஸ்டர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, பின்னர் நாட்டிங்காமில் வீட்டிற்கு அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சையைத் தொடர்ந்தனர். ஒன்பது மாதம் மருத்துவமனையில் இருந்து சிகிச்சை பெற்ற அக்குழந்தை தற்போது குணமடைந்து. வீடு திரும்பியுள்ளது. அவளுடைய இரு சகோதரர்களுடனும், பெற்றோருடனும் அவள் மகிழ்ச்சியாக இருக்கிறாள்.

மின்சாரத்தில் ஓடுகின்ற சைக்கிள் (e-bike) தனக்கு மிகவும் பயனுள்ளதாக இருப்பதாக கார்டியன் இதழின் மூத்த வாசகர் ஒருவர் அவ்விதழில் கடிதம் எழுதியுள்ளார். ஆறு வருடங்களுக்கு முன் தன்னுடை 87ஆவது வயதில் வாங்கிய அந்த சைக்கிளில்தான் அவர் தினமும் பயணிக்கின்றார். சற்று உயர்ந்த மலைப்பகுதியில் வசிப்பதாகவும் அருகிலுள்ள பேருந்து நிலையத்திற்கும் பிற இடங்களுக்குச் செல்வதற்கும் மிகவும் சிரமமாக இருந்ததாலும் மின்சார சைக்கிளை ஓட்ட ஆரம்பித்துள்ளார். உயரமான பகுதிகளில் ஓட்டிச்செல்ல இந்த சைக்கிள் மிக உதவியாக இருப்பதாகக் தன்னைவிட இளையவர்கள் பெடலை அழுத்திக்கொண்டு சைக்கிளில் செல்லும்போது அவர்களை இவர் மிகவும் வேகமாகக் கடந்துவிடுவதாகவும் கூறுகிறார். இந்த சைக்கிள் பயணம் அவருக்கு மகிழ்ச்சியைத் தருவதோடு, வாழ்வில் சுறுசுறுப்பாக இயங்க உதவியாக இருக்கிறது என்றும் கூறுகிறார். பிரிட்டிஷ் சைக்கிளிங்க்கு ஊக்கம் தரப்படவேண்டும் என்றும், குறிப்பாக மின்சார சைக்கிள் பயணம் வயதானவர்களுக்கு மகிழ்ச்சியான, ஆரோக்கியமான, நீண்ட வாழ்க்கைக்கு உதவும் என்றும் அவர் கருதுகிறார்.

பிலிப்பைன்சில் மேரிஸ் என்பவருடைய வீட்டிற்கு உணவு டெலிவரி செய்யச் சென்றார் ஜோலிபி உணவக நிறுவனத்தைச் சேர்ந்த ஊழியர். அதைப் பார்த்த, அண்டை வீட்டாரான 92 வயதுள்ள பெண்மணி அவரிடம் அந்த பையில் என்ன இருக்கிறது என்று கேட்டு, தனக்கு அது தேவையென்றும், அதனை ஆர்டர் செய்ய விரும்புவதாகவும் கூறியுள்ளார். அப்பெண்மணிக்கு உதவ விரும்பிய அவர் வேறு எந்த விளக்கமும் தராமல், உடனடியாக அங்கிருந்தே தொலைபேசியில் அந்த மூதாட்டிக்காக ஆர்டரை அனுப்பியுள்ளார். அவருடைய அச்செயல் அங்கிருந்த அனைவரையும் நெகிழ வைத்துவிட்டது. அந்த நெகிழ்ச்சியான தருணத்தை தன் முகநூல் பக்கத்தில் மேரிஸ் பகிரவே, அந்த புகைப்படமும், அவருடைய செயலும் எங்கும் பரவி அவருக்குப் பாராட்டுகள் குவிந்தவண்ணம் உள்ளன.

கங்கை இன்னும் என்ன ஆகப்போகிறதோ தெரியவில்லை. கங்கையில் உள்ள 84 படித்துறைகளைச் சுற்றிக் காண்பிக்க விரைவில் சொகுசுக்கப்பல்கள் களமிறக்கப்படவுள்ளனவாம். தெய்வக்குற்றம், சுற்றுச்சூழல், உள்ளூர் தொழில் நசிவு, நீர் மாசுபாடு, போன்ற பல காரணங்களால் சொகுசுப் பயணத்திற்கு எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.

ஐக்கிய நாடுகள் அவையில் தன்னுடைய மூன்று மாத கைக்குழந்தையுடன் (Neve Te Aroha) வந்து வரலாறு படைத்துள்ளார் நியூசிலாந்தின் பிரதமரான ஜெசின்தா அர்டர்ன் (Jacinda Ardern). நியூயார்க்கில் நடைபெறுகின்ற கூட்டத்திற்கு கைக்குழந்தையுடன் வந்த முதல் பெண் தலைவர் இவரேயாவார். ஜுன் 21இல் அவருக்குக் குழந்தை பிறந்தது. ஆகஸ்டு முதல் வாரத்தில் பணிக்குத் திரும்பிய இவர், அதற்கு முன் ஆறு வாரங்கள் பேறுக்கால விடுப்பில் இருந்தார். தொடர்ந்து தன் குழந்தைக்குத் தாய்ப்பால் ஊட்டி வருகிறார். அவருடைய அக்குழந்தையானது தாயுடன் ஆறு நாள் பயணமாக நியூயார்க் வந்துள்ளது. பிரதமராக இருந்துகொண்டே குழந்தையை வளர்க்க தன்னால் முடிகிறது என்றும், இனி வரும் நாள்களில் அனைத்துப் பெண்களும் குழந்தையையும் பார்த்துக்கொண்டு பணியினையும் மேற்கொள்ள முடியும் என்று கூறியுள்ளார். இதற்கு முன் பணியில் இருக்கும்போது குழந்தை பெற்றவர் என்ற பெருமை பாகிஸ்தானின் முன்னாள் பிரதமரான பெனாசிர் பூட்டோ ஆவார்.