18 September 2022

கோயில் உலா : திருவஞ்சைக்களம் : 5 ஆகஸ்டு 2022

5 ஆகஸ்டு 2022 கோயில் உலாவின்போது முனைவர் வீ.ஜெயபால் அவர்கள் தலைமையில் கேரளாவில் உள்ள ஒரே தேவாரப் பாடல் பெற்ற தலமான, திருச்சூர் மாவட்டத்தில் உள்ள, திருவஞ்சைக்களம் சென்றோம். சுந்தரமூர்த்தி சுவாமிகள், சேரமான் பெருமான் நாயனார் ஆகியோரின் குரு பூஜை நாளன்று சென்ற வகையில் எங்களின் இப்பயணம் குறிப்பிடத்தக்கதாக அமைந்தது. 

கோயிலுக்கு முன் வீதியின் நடுவில் உள்ள மேடையை யானை வந்த மேடை என்று கூறுகின்றனர். கோயிலின் முதன்மை வாயில் மேற்கு நோக்கியதாக இருந்தபோதிலும், மூலவர் சன்னதி கிழக்கு நோக்கி உள்ளது. கேரள முறைப்படி இத்தலத்திலும் வெடி வெடித்து பிரார்த்தனை செய்யும் வழக்கம் உள்ளதாகக் கூறினர்.

சுந்தரர் பாடல் பெற்ற இத்தலத்தின் மூலவர் அஞ்சைக்களத்தீஸ்வரர், மகாதேவர் என்று அழைக்கப்படுகிறார். உமையம்மை என்றழைக்கப்படும் இறைவிக்குத் தனிச் சன்னதி கிடையாது. மூலவர் வழக்கமாக தமிழ்நாட்டுக் கோயில்களில் காணப்படுவதைப் போலன்றி சற்று வித்தியாசமாக இருப்பதைக் காணமுடிந்தது. கோயில் அமைப்பும் கேரள பாணியில் உள்ளது. 

சுந்தரர் கயிலை சென்ற ஆடி சுவாதி நன்னாளில் சுந்தரருக்கும் சேரமானுக்கும் சிறப்புப் பூஜை செய்வதைக் காணமுடிந்தது. அந்நாளில் மட்டும் தமிழ்நாட்டு முறைப்படி பூஜை செய்யப்படுகிறது. திருச்சுற்றில் உள்ள சுந்தரர், சேரமானின் திருமேனிகளைக் கொண்ட சன்னதியில் உள்ளே நுழைய முடியாத அளவிற்குக் கூட்டம் காணப்பட்டது.  இச்சன்னதி கோயிலில் காணப்பட்ட பிற சன்னதிகளைப் போலன்றி சுற்று மண்டபத்தில் அமைந்திருந்தது.








கோயில் வளாகம் முழுவதும் சைவ அன்பர்கள் தேவாரம் ஓதுதல் ஆங்காங்கே தனியாகவும், குழுவாகவும் ஈடுபட்டிருந்தனர். நாதஸ்வர இசை உள்ளிட்ட இசை காதில் ஒலித்துக்கொண்டே இருந்தது. கோயில் வளாகத்தில் சொற்பொழிவு நடைபெற்றுக்கொண்டிருந்ததைக் காணமுடிந்தது. வரிசையாகச் சென்று கருவறையில் இறைவனைப் பார்த்துவிட்டுத் திரும்ப சற்றே சிரமப்பட்டோம். இறைவனைக் காணவேண்டும் என்ற ஆவல் பக்தர்களிடம் இருப்பதைக் காணமுடிந்தது.

திருவஞ்சிக்குளம் செல்வதற்கு முன்பாக திருச்சூர் மாவட்டத்திலுள்ள கொடுங்கல்லூர் பகவதி அம்மன் கோயிலுக்குச் சென்றோம்.   இக்கோயில் வடக்கு பார்த்த நிலையில் உள்ளது. வடக்கு நோக்கிய கருவறையில் பகவதி எட்டு கரங்களுடன் இருந்து அருள் பாலிக்கிறார். இவரை கொடுங்கல்லூர் அம்மை என்றும் அழைக்கின்றனர்.







அடுத்து திருச்சூரிலுள்ள வடக்குநாதர் கோயிலுக்குச் சென்றோம். இங்கு பூரம் திருவிழா வாண வேடிக்கைகளுடன் சிறப்பாகக் கொண்டாடப் படுகிறது. இத்தலத்து லிங்கத்திருமேனி முழுவதும் நெய்யால் ஆனதால் நெய்லிங்கம் என்றழைக்கின்றனர். சிவராத்திரியின்போது கோயிலைச் -சுற்றி லட்சதீபம் ஏற்றப்படுகிறது. 



நாங்கள் சென்ற நாளில் அவ்வப்போது மழை பெய்த போதிலும் எவ்வித பாதிப்பும் இன்றி வழிபாட்டினைத் தொடர்ந்தோம். பயணத்தின் ஒரு கூறாக அன்பர்கள் கடற்கரையில் சென்று மணலால் லிங்கத்திருமேனியை அமைத்து வழிபட்டனர்.

முதல் நாள் இரவு தஞ்சையிலிருந்து கிளம்பி நேரடியாக திருச்சூர் சென்று அங்கு பயணத்தை நிறைவு செய்து மறுநாள் இரவு அங்கிருந்து புறப்பட்டோம். பிற மாநிலத்திற்குச் சென்ற முதல் உலாவாக இவ்வுலா அமைந்தது.  உடன் வந்த அனைவருக்கும் மன நிறைவினை இப்பயணம் தந்தது. மகாதேவரைத் தரிசிக்கச் சென்று, உடன் வடக்குநாதரையும், பகவதியம்மனையும் தரிசித்த தருணங்கள் எங்கள் மனதில் நன்கு பதிந்தன.  இதற்கு முன்னர் இக்கோயில்களுக்கு நான் தனியாகவும், சபரிமலை பயணத்தின்போதும் சென்றபோதிலும் குழுவாகச் சென்று இறைவனைத் தரிசிப்பதில் கிடைக்கும் அனுபவம் சற்றே வித்தியாசமானதாக உள்ளதை உணரமுடிந்தது.  




3 செப்டம்பர் 2022
3 செப்டம்பர் 2022 கோயில் உலாவின்போது திருவாரூர் மாவட்டம் ஓகையூர் ஜகதீஸ்வரர் கோயில், திருவிடைமருதூர் மகாலிங்கசுவாமி கோயில், தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் கும்பேஸ்வரர் கோயில், நாகேஸ்வரர் கோயில், சோமேஸ்வரர் கோயில், திருவேதிகுடி வேதபுரீஸ்வரர் கோயில், திருவையாறு ஐயாறப்பர் கோயில் ஆகிய கோயில்களுக்குச் சென்றோம். இதில் ஓகையூர் தவிர பிற கோயில்கள் நான் பல முறை சென்ற கோயில்களாகும்.


துணை நின்றவை
  • பு.மா.ஜெயசெந்தில்நாதன், திருமுறைத்தலங்கள், வர்த்தமானன் பதிப்பகம்,  சென்னை, 2009
  • விக்கிப்பீடியா, திருவஞ்சிக்குளம் மகாதேவர் கோயில் (இக்கட்டுரையில் உள்ள ஒளிப்படங்கள் என்னால் இணைக்கப்பட்டவையாகும்)
  • தினமலர் கோயில்கள், அருள்மிகு வடக்குநாதர் கோயில்
  • வீ.ஜெயபால், சைவ நால்வரால் பாடல் பெற்ற திருத்தலங்கள்சைவ சித்தாந்த ஆய்வு மையம், 28 அம்மையப்பா இல்லம், கோவிந்தராஜ் நகர், சீனிவாசபுரம் விரிவாக்கம், தஞ்சாவூர் 613 009, டிசம்பர் 2014

14 September 2022

மனதில் நிற்கும் சுருக்கெழுத்து

கும்பகோணம் அரசு ஆடவர் கல்லூரியில் இளங்கலை படித்தபோது  கூடுதல் தகுதிக்காக சுருக்கெழுத்தினைக் கற்க ஆரம்பித்தேன். தட்டச்சினைப் போல இதையும்  ஆங்கிலத்தில் தொடங்கி தமிழில் தொடர்ந்தேன்.  
டிசம்பர் 1978 தேர்வுக்காக எடுக்கப்பட்ட ஒளிப்படம்

பயிற்சியின்போது ஒரு சொல்லுக்கான குறியீட்டை (stroke) குறைந்தது ஐந்து வரிகள் எழுத வேண்டும். ஒரு சொல் பயிற்சிக்குப் பின் பல சொற்கள், சொற்றொடர் என்ற வகையில் பழகவேண்டும்.  கல்லூரி நேரம் தவிர பிற நேரம் சுருக்கெழுத்துப்பயிற்சிக்கான நேரமாக அமைந்தது.  

கும்பகோணத்தில் எங்கள் வீட்டில் கூடத்திலும், வாசல் திண்ணையிலும் உள்ள தூண்களில் சாய்ந்துகொண்டு எழுதுவது வழக்கம். அந்த இரு இடங்கள்தான் சுருக்கெழுத்து எழுதப் பயிற்சி எடுத்த பிரத்யேகமான இடங்கள். கணக்குப்பிள்ளையாக இருந்த எங்கள் தாத்தா பயன்படுத்திய சிறிய மேஜையை (writing desk) பயன்படுத்தினேன்.  சுருக்கெழுத்துச் பென்சிலை (Shorthand pencil) சரியாக கூர்மையாகச் சீவி எழுத வேண்டும். அவ்வாறாக ஒவ்வொரு பக்கத்திலும் எழுதியதைப் பார்க்கும்போது அழகான கோலம் போட்டதைப் போலவோ, கோயிலில் காணப்படுகின்ற சிற்ப வரிசையினைப் போலவோ இருக்கும்.  தட்டச்சுப் பயிற்சியைப் போலவே சுருக்கெழுத்துப் பயிற்சியும் ஒரு கலையியல் ரசனையோடு மேற்கொள்ளப்பட வேண்டியதாகும்.  

குறிப்பிட்ட மாதிரியான சொற்களுக்காக அதையொத்த சுருக்கக் குறியீடுகளை எழுதும்போது பல சொற்களைத் தெரிந்துகொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. பயிற்சிக்கால நிறைவில் ஒன்றுக்கு மேற்பட்ட சொற்களை ஒரே குறியீடாக  எழுதும் பழக்கம் இயல்பாக வந்துவிடும்.  

நோட்டின் நடுவே ஒரு கோட்டினை போட்டு இரண்டாகப் பிரித்துக்கொள்வேன். எந்த அளவிற்கு சுருக்கெழுத்துக் குறியீட்டை (Stroke for word/sentence) சிறிதாக எழுத முடியுமோ அந்த அளவிற்குச் சிறிதாக எழுதுவேன். புள்ளி வைக்கவேண்டிய இடங்களில் இடைவெளி விட்டுவிடுவேன். இவ்வாறான உத்திகள் குறிப்பிட்ட நிமிடத்தில் அதிகமான சொற்களை/சொற்றொடர்களை எழுத முடியும். சுருக்கெழுத்துப் பயிற்சியைப் பின்பக்கத்தில் எழுதுவதில்லை. பயிற்சியின்போது பின் பக்கத்தில் எழுதாமல் அடுத்த பக்கத்தில் எழுதுவது வழக்கம்.  பக்கங்கள் முடிவுற்ற பின் நோட்டை முழுதாகத் திருப்பி எழுதுவார்கள். ஒரு பக்கத்தை முடித்து அடுத்த பக்கத்தில் எழுதுவதற்காக தாளைப் புரட்டும்போது எவ்விதச் சலனமோ, பதட்டமோ இருக்கக்கூடாது. 

எழுதும் குறியீட்டில் ஐயமிருப்பின் சுருக்கெழுத்து அகராதியைப் பார்த்துக்கொள்வேன். அதிலுள்ள  சொற்களுக்குரிய குறியீடுகளைப் பயன்படுத்தும்போது புதிய சொற்களை அறிந்துகொள்ளவும், வேகத்தை அதிகப்படுத்தி எழுதவும் முடியும். 

என்னுடன் பல நண்பர்கள் சுருக்கெழுத்துப் பயிற்சி மேற்கொண்டபோதும் மிகச்சிலரே தொடர்ந்து எழுதினோம். டிசம்பர் 1978இல் சுருக்கெழுத்து கீழ் நிலைத் தேர்வினை (ஒரு நிமிடத்திற்கு 80 சொற்கள்) தட்டச்சுப்பயிற்சி நிறுவனம் மூலமாகவும், அடுத்தடுத்த தேர்வுகளை நேரடியாகவும் எழுதி வெற்றி பெற்றேன். 

பொறுமை, நிதானம், ஈடுபாடு உள்ளிட்ட குணங்கள் இருந்தால்தான் இப்பயிற்சியைத் தொடர முடியும். மிக எளிது என நினைத்து எழுதினால்  வெற்றி பெறலாம். எழுதுவது சிரமம் என நினைப்பவர் தொடர்வது அரிதே. கல்லூரியில் ஆசிரியர்கள் பாடம் நடத்தியபோதும், பின்னர் பணியில் சேர்ந்தபோதும், மாணவர்களுக்கு கற்றுத்தரவும் சுருக்கெழுத்து பெரிதும் உதவியது.  அது தொடர்பான அனுபவங்களைப் பிறிதொரு பதிவில் காண்போம்.

14 செப்டம்பர் 2022 மாலை பதிவு மேம்படுத்தப்பட்டது.