23 December 2022

சமர்ப்பணம் : இந்திரா அத்தை

"எப்படியும் வாழலாம்னு இருக்கு. இப்படித்தான் வாழலாம்னு இருக்கு. இவன் இப்படித்தான் வாழணும்னு இருக்கான். வாழ்க்கைல எப்படி பொழைக்கப்போறானோ?" என்று என் அத்தை திருமதி இந்திரா (அப்பாவின் தங்கை) என்னைப்பற்றி அடிக்கடிக் கூறிய வார்த்தைகள் என்னை பள்ளிக்காலம் முதல் பக்குவப்படுத்தியதோடு மன உறுதியையும், நம்பிக்கையையும் தந்துவரும் வார்த்தைகளாகும். என் பெற்றோரும் என்னை வளர்த்த என் தாத்தாவும், ஆத்தாவும் என் மீது அன்பு காட்டியபோதிலும் அத்தை வைத்திருந்த பாசமானது சற்றே அதீதமானது.

  பல வருடங்கள் அத்தை குழந்தையின்றி இருந்ததால் தன் அண்ணனின் குழந்தைகளான எங்கள்மீது இயல்பாகப் பற்று ஏற்பட்டது. குழந்தை வேண்டி வேண்டுதல்களை மேற்கொண்டபோது அவருடன் சக்கரபாணி கோயிலுக்கும், வடக்குத்தெரு நந்தவனத்து மாரியம்மன் கோயிலுக்கும் பல முறை சென்றுள்ளேன். கோயிலுக்குச் செல்வதற்காக என்னை அழைக்க வரும்போது "பெரியவனே...." என்று வாசலிலிருந்து அழைப்பார். அடுத்த சில நொடிகளில் அவருடன் கோயிலுக்குக் கிளம்பிவிடுவேன். கோயிலுக்குச் செல்லும்போதும், பிரகாரத்தைச் சுற்றிவரும்போதும் புத்திமதி கூறுவதும் உண்டு. அவருடைய பிரார்த்தனைக்கு விடை கிடைத்தது. அத்தைக்கு மகள் பிறந்த (1972) பின்னர்கூட என்மீது காட்டிய  அன்பு குறையவில்லை.

  1960களின் நிறைவு முதல் 1970களின் நிறைவு வரை அவர் என்மீது அதிக தாக்கத்தை உண்டாக்கியிருந்தார். கும்பேஸ்வரர் திருமஞ்சன வீதி பள்ளியில் ஆறாம் வகுப்பு படிக்கும்போது ஒரு அவுன்ஸ் அளவு இங்க் பிடிக்கும் அளவிலான பெரிய இங்க் பேனாவை வாங்கித் தந்தது, எட்டாம் வகுப்புத் தேர்வு ஈ.எஸ்.எல்.சி. தேர்வின்போது ஆங்கில அகர வரிசையான, ஏ முதல் இசட் வரையுள்ள எழுத்துக்களைப் பதிந்த இங்க் கண்ணாடிப் பேனாவை வாங்கித் தந்தது, எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் தேர்ச்சி பெற்றதும் வீட்டிலுள்ள பலர் நான் கல்லூரியில் சேரக்கூடாது, சேர்ந்தால் கெட்டுவிடுவேன் என்று கூறியபோது எனக்கு பக்கபலமாக இருந்தது, இடைவெளிக் காலத்தில் மிளகாய் மண்டிக்கு வேலைக்குப் போன போது முதன்முதலாக எனக்கு வேஷ்டி எடுத்துத் தந்தது, கல்லூரிக்காலத்தில் தட்டச்சுக் கற்றுக்கொள்ள மாதாமாதம் பணமும், பின்னர் தேர்வுகளுக்குப் பணமும் கட்டியது...இவ்வாறாக சொல்லிக்கொண்டே போகலாம். என் வயதையொத்தவர்களை ஒப்புநோக்கி என்னைப்பற்றிப் பெருமையாகப் பேசும்போது அவருடைய சொற்களைக் காப்பாற்றவேண்டும் என்று நினைக்க ஆரம்பித்தேன்.           

  மாமா இறந்தபின்னர் தன் மாமியார் வீட்டிலிருந்து அத்தையும், அத்தை மகளும் எங்கள் வீட்டிற்கு வந்தனர். அவருடைய பெற்றோர் (என் ஆத்தா, தாத்தா), அண்ணன், அண்ணி (என் அப்பா, அப்பா) அவருக்கு ஆதரவாக இருந்தனர். அத்தையும், அத்தை மகளும் நம்முடனே இருக்கப்போகிறார் என்றதும் எங்கள் வீட்டில் அனைவருக்கும் மகிழ்ச்சி. 

  ஆயுள் காப்பீட்டுக்கழகம், வங்கிப்பணிகள் தொடர்பாக ஆங்கிலப்பயன்பாடு தேவை என்று கூறி, சில ஆங்கில வார்த்தைகளையும், சொற்றொடர்களையும் கற்றுக்கொடுக்க என்னிடம் கேட்டார். ஒவ்வொரு நாளும் எங்கள் வீட்டில் பெரிய கூடத்தில் நாங்கள் எதிரெதிராக அமர்ந்துகொள்வோம். சில முக்கிய ஆங்கிலச்சொற்களை நான் கூறியபோது அவற்றை எழுதவும், படிக்கவும் பழகினார். நான் படிக்க ஆசைப்பட்டவருக்கு, சொல்லித்தந்ததைப் பெருமையாக நினைத்தேன்.. 

  சில நாள்களில் தாத்தா இறந்தார். சில உறவினர்களும், நண்பர்களும் அத்தையின் மனதை  மாற்றி, பிறிதொரு ஊருக்கு அழைத்துச் சென்றுவிட்டனர். மகளுக்காக அம்மாவும் (என் ஆத்தா) உடன் சென்றுவிட்டார். எங்களைவிட்டுச் சென்றது எங்களுக்கு அதிர்ச்சியைத் தந்தது.  

  என் பெற்றோரிடம் அவர் கடிதத்தொடர்பு வைத்துக்கொள்ளவில்லை. என் கல்லூரி முகவரிக்குக் கடிதங்கள் எழுதினார்.  அவருடைய கடிதங்களில் பல அறிவுரைகள் இருந்தன. ஒரு கடிதத்தில், "நான் செத்தபின்னர் எனக்குப் பிறந்த இடத்துக்கோடி போட வேண்டாம். நீ நல்லா படி. உன் படிப்புக்கு ஏதாவது பணம் வேணும்னா எனக்கு எழுது". என்று அவர் எழுதிய வரிகள் என் மனதில் ஆழப்பதிந்துவிட்டன. பிறந்த இடத்துக்கோடி என்றால் எனக்கு அப்போது தெரியாது. ஆனால் எங்கள் குடும்பத்தின்மீது வெறுப்பு தோன்றுமளவு அவர் மனதை சிலர் மாற்றியதை அறியமுடிந்தது. 

  இதற்கிடையில் என் கல்லூரிப்படிப்பு நிறைவடைந்தது. கல்லூரித்தேர்வுக்கு சில மாதங்களுக்கு முன்னர், அவர் சென்ற ஒரு வருடத்திற்குள் அவர் நினைவாகவே என் தந்தை இயற்கையெய்தினார். இறக்கும் முன்பாக எக்காரணம் கொண்டும் அத்தையைப் பார்க்கப் போய்விடாதீர்கள் என்று எங்களிடம் கூறினார். அத்தையை பாப்பா என்றே எங்கள் அப்பா, தாத்தா, ஆத்தா அனைவரும் அழைப்பர்.

  படிப்பு முடிந்து சென்னையில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலையில் சேர்ந்தேன். நான் வேலைக்குச் சேர காரணமான படிப்புக்கு அடித்தளமிட்ட அவரை நினைத்து, பணியில் சேர்ந்த முதல் விடுமுறையில் வட பழனி முருகன் கோயிலுக்குச் சென்று அத்தையின் பெயரில் அர்ச்சனை செய்தேன். 

  அத்தையைப் பார்க்கவேண்டாம் என்ற அப்பாவின் அறிவுரை, அத்தையைப் பார்க்கவேண்டும் என்ற ஆசை இரண்டிற்கும் நடுவில் பெற்ற பாசத்திற்கும், வளர்த்த பாசத்திற்கும் இடையில் சுமார் 40 ஆண்டுகளாக சிக்கித் தவித்தேன். ஒரு முறை உறவினரின் மரண நிகழ்வில் சந்தித்தேன். மனம் என்னென்னவோ பேச நினைத்தது. வார்த்தைகள் வெளிவரத் தவித்தன. சில நிமிடங்கள் என்னை மறந்தேன். அவரைப் பற்றியும், அத்தை மகளைப்பற்றியும் நலம் விசாரித்தேன். அதற்குப் பின்னர் அவரைப் பார்க்கவேயில்லை. 2021இல் என் உறவினர் மகள் திருமணத்திற்காகச் சென்னை சென்றபோது, அவர் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் இறந்ததை அறிந்தேன். அப்போது என் மனம் பட்ட பாடு சொல்லி மாளாது. 

  அத்தை மாறக் காரணம் என்ன? அப்பாவிற்குத் தன் தங்கைமீது வெறுப்புவரக் காரணம் என்ன? எந்நிலையிலும் எங்கள் குடும்பத்தை விட்டுக்கொடுக்காமல் இருந்தவர் தன் நிலையை மாற்றிக்கொள்ளக் காரணம் என்ன? நாளடைவில் அவர் எங்களை மறந்துவிட்டாரா? நாங்கள் ஏதும் தவறு செய்துவிட்டோமா? என்பன போன்ற விடை காணமுடியாத கேள்விகள் என் மனதை இன்னும் உறுத்துகின்றன. அப்பாவின் வார்த்தைக்கு மதிப்பளித்து கடைசி வரை அவரைப் பார்க்காமலேயே இருந்துவிட்டேன். எந்த ஒரு காரியத்தை ஆரம்பித்தாலும் அவர்களை நினைக்கிறேன். அவர் என்னருகில் இருப்பது போன்ற ஓர் உணர்வு இன்னும் இருந்துகொண்டே இருக்கிறது. என் வாழ்விற்கு அடித்தளமிட்ட  அவரைப் பற்றிய நினைவுகள் என்னை வாழவைக்கும், வாழவைக்கிறது.

  என்னுடைய சோழ நாட்டில் பௌத்தம் என்ற ஆய்வேட்டை 2002இல் புதுதில்லி நேரு டிரஸ்ட் அமைப்பிற்காக ஆங்கிலத்தில் எழுதியபோது அவருக்குச் சமர்ப்பணம் செய்தேன். பல வருடங்களாகப் பார்க்காத அத்தைக்கு சமர்ப்பணமாம் என்று என் மகன்கள் கூறியது நினைவுக்கு வருகிறது.

  அண்மையில் வெளியான சோழ நாட்டில் பௌத்தம் (புது எழுத்து, அலைபேசி 9842647101) என்ற என் நூலினை என் வாழ்வில், ஆய்வில், எழுத்துப்பணியில் துணைநிற்கும் என் மனைவிக்கு சமர்ப்பணம் செய்ய விரும்பினேன். ஆனால் என் மனைவியோ, புதுதில்லி நேரு டிரஸ்ட் திட்டத்தினை அத்தைக்கு முன்னரே சமர்ப்பணம் செய்ததால்  பெற்றவர்களுக்கும், வளர்த்தவர்களுக்கும் நூலை சமர்ப்பிக்கும்படி கூற, அவ்வாறே செய்தேன். அத்தையின் மனதைப் போலவே என் நலனில் அக்கரை செலுத்தும் என் மனைவியின் மனதும் பெரிதுதான்.   இன்றும் கோயில்களுக்குப் போகும்போது அத்தையுடன் கோயிலுக்குச் சென்ற நாள்கள் நினைவிற்கு வந்துவிடும். அவர் என்னுடன் பேசிக்கொண்டே, புத்திமதி கூறிக்கொண்டே வருவது போலிருக்கும். அந்த நினைவுகள் ஒரு பலத்தைத் தருவதை உணர்வேன். உண்மையான அன்பு என்பது இதுதானோ? 

  தொடர்புடைய பதிவு:

  12 December 2022

  கும்பேஸ்வரர் கோயில் பிரகாரம்

  பள்ளிக்காலம் தொடங்கி நாங்கள் படித்த, விளையாண்ட, பொழுதுபோக்கிய இடங்களில் ஒன்று கும்பகோணம் கும்பேஸ்வரர் கோயில். சுமார் 50 ஆண்டுகளுக்கு முன் நானும் என் நண்பர்களும் இக்கோயிலின் பிரகாரங்களை கிட்டத்தட்ட எங்களின் மற்றொரு வீட்டைப் போல நினைத்தோம். எட்டாம் வகுப்பு படிக்கும்போது இங்கு வர ஆரம்பித்து, பி.யு.சி.வரை தொடர்ந்தோம். நண்பர்கள் ஒவ்வொரு பக்கம் பிரிந்து சென்ற நிலையில் கல்லூரிக்காலத்தில் என் படிப்பு பிரகாரத்தில் தொடர்ந்தது. 

  கும்பேஸ்வரர் கோயிலின் மேலவீதி அருகில் சம்பிரதிவைத்தியநாதன் தெருவில் (தற்போது கே.ஜி.கே.தெரு) எங்கள் வீடு இருந்தது.  என் பள்ளி நண்பர்களின் வீடுகள் பெரும்பாலும் கும்பேஸ்வரர் கோயிலைச்சுற்றி  வடக்கு வீதி (கோவிந்தராஜன், பிச்சை, மாசிலாமணி, அசோகன், லலிதா), மேல வீதி (சாருஹாசன், காளிதாசன்), தெற்கு வீதி (முன்பிருந்த பாவஸார ஷத்திரிய மண்டலியை அடுத்து),  வடம்போக்கி (விட்டல்ராவ், தாரா) ஆகிய தெருக்களிலும், அருகிலுள்ள குட்டியாம்பாளையத்தெரு (ராஜு), சிங்காரம் செட்டித்தெரு (மோகன்,  சுரேஷ்தாஸ், விஜயகுமார், கோபாலகிருஷ்ணன், ரேவதி, பிருந்தா, நிர்மலா), பழைய அரண்மனைத்தெரு (செல்வம், நாகராஜன், ராஜு), மதகடித்தெரு (திருமலை), கும்பேஸ்வரர் திருமஞ்சனவீதி 16 கட்டு (ராஜசேகரன், மதியழகன்), கும்பேஸ்வரர் திருமஞ்சனவீதி சின்னகாளப்பேட்டை (மோகன், பொன்னையா, ராஜா, ஜெயராஜ்),  சாத்தாரத்தெரு (பாலு, பெரியய்யா. தேசிகாச்சாரி), மூர்த்திச்செட்டித்தெரு (சந்திரசேகர்), மௌனசாமி மடத்துத்தெரு (ஓமலிங்கம்),  வியாசராவ் அக்ரஹாரம் (சந்தானகிருஷ்ணன்) ஆகிய தெருக்களிலும் இருந்தன.


  கோயிலின் இரு பிரகாரங்களிலும், சில சமயங்களில் ராஜகோபுரத்தை அடுத்துள்ள மண்டபத்திலும் அமர்வோம். போட்டி போட்டுக்கொண்டு பாடங்களைப் படித்து எங்களுக்குள் ஒப்பித்துக்கொள்வோம். நாம் படிப்பதைவிட பிறரை படிக்கவைத்து நாம் உள்வாங்கிக்கொண்டால் எளிதில் மனதில் பதிந்துவிடும். அந்த உத்தியையும் பயன்படுத்திக்கொள்வோம். முதலில் எங்களுக்காகவும், பிறகு மற்ற நண்பர்களுக்காகவும் மாறி மாறி படித்துக்கொள்வோம்.


  பெரியவர்களிடம் வாங்கிய திட்டு, ஆசிரியரிடம் வாங்கிய அடி தொடங்கி அனைத்தையும் மனம்விட்டுப் பேசுவோம்.  சுமை குறைந்ததுபோல இருக்கும். அவரவர் குடும்பச் சூழ்நிலை, பொருளாதாரத்தை மேம்படுத்திக்கொள்வது, கல்வித்தகுதியை பெருக்கிக்கொள்வது,  பெற்றோருக்கு சுமையாக இருக்காமல் நம் காலில் நிற்பது, படித்தபின்னர் வேலைக்குச் செல்வது அல்லது வியாபாரத்தைத் தொடர்வது என்ற வகையில் ஒவ்வொருவரும் எங்களின் எதிர்காலத் திட்டங்களைப் பரிமாறிக்கொள்வோம்.  ஒளிவு மறைவின்றி  அனைத்தையும் வெளிப்படையாகப் பேசுவோம். 

  நடுப்பகல் கோயிலின் நடை சாத்தும்போது வீட்டுக்குச் சென்றுவிட்டு, மறுபடியும் மாலை நடை திறக்கும்போது திரும்புவோம். இருட்டும்வரை படித்துக்கொண்டே இருப்போம். தேர்வு நேரங்களில் பெரும்பாலும் இங்குதான் இருப்போம். 

  பள்ளிப்படிப்பு முடிந்ததும் சிலரே கல்லூரிப்படிப்பினைத் தொடரும் நிலை அமைந்தது. அடுத்தடுத்து பலர் வியாபாரத்தில்  ஈடுபட, என்னைப் போன்ற சிலர் வெளியூரில் பணியில் சேர்ந்தோம். வாய்ப்பு கிடைக்கும்போது அந்நாள்களை நினைவுகூர்வோம். எங்கள் வாழ்விற்கு அடித்தளமிட்ட வகையிலும், எங்களை நெறிப்படுத்திய வகையிலும் இக்கோயில் எங்கள் மனதில் பதிந்துவிட்டது.

  அண்மையில் கும்பகோணம் சென்றபோது, பல வருடங்கள் கழித்து அந்தப் பிரகாரங்களைச் சுற்றிவந்தேன். பழைய பேச்சுகள், உரையாடல்கள், வாசிப்புகள்  மனதில் வந்துசென்றன. ஒவ்வொரு இடத்திலும் சிறிது நேரம் தனியாக, அமைதியாக அமர்ந்துவிட்டு அங்கிருந்து கிளம்பினேன். அப்போது யாரோ என்னை "டேய்....ஜம்பு" என்றழைப்பதைப் போல இருந்தது. திரும்பிப்பார்த்தேன். ஒருவருமில்லை. அது என் நினைவே என்று சுதாரித்து, தொடர்ந்து நடக்க ஆரம்பித்தேன். 

  அன்றுமுதல் இன்றுவரை கும்பேஸ்வரரையும், மங்களாம்பிகையையும் தரிசிக்கும் பாக்கியம் தொடர்கிறது. எல்லாம் அவன் அருள்.  


  ஒளிப்படங்கள் : ஜுலை 2022இல் கும்பகோணம் சென்றபோது எடுக்கப்பட்டவை. (வெளிப்பிரகாரம், முன்மண்டபம்)  

  13 டிசம்பர் 2022இல் மேம்படுத்தப்பட்டது.