29 October 2023

11ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு : சிறப்பு மலர் 21-23 சூலை 2023

21-23 சூலை 2023இல் கோலாலம்பூரில் நடைபெற்ற 11ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டையொட்டி வெளியான மாநாட்டுச்சிறப்பு மலர் பண்பாடு, கலை மற்றும் வரலாறு, இசை, இலக்கியம், சிறார் இலக்கியம், பதிப்பியல், அறிவியல் மற்றும் கணினி அறிவியல், தொல்லியல் ஆகிய பொருண்மைகளில் 390 பக்கங்களில் கட்டுரைகளைக் கொண்டுள்ளது. 



மலேசியப் பிரதமர், கல்வியமைச்சர், உயர்கல்வித்துறை அமைச்சர், துணைக்கல்வியமைச்சர், மனித வளத்துறை அமைச்சர், தொழில் முனைவோர் மேம்பாட்டு கூட்டுறவு அமைச்சகத் துணையமைச்சர், மாநாட்டுத்தலைவர் ஆகியோரின் வாழ்த்துகள் இம்மலரில் இடம்பெற்றுள்ளன. 

வரலாற்றறிஞர்கள், தொல்லியல் அறிஞர்கள், கவிஞர்கள், கலைஞர்கள், துறைசார்ந்த அறிஞர்கள், எழுத்தாளர்கள் உள்ளிட்ட ஒவ்வொருவரின் பங்களிப்பினையும் இம்மலர் அருமையாக முன் வைக்கிறது. ஒவ்வொரு வகையிலும் ஒவ்வொரு கட்டுரையும் தனித்துவம் பெறுகிறது. மலரின் சில கட்டுரைகளிலிருந்து.......

"இன்றைய உலகமயமாக்கல் முறையில் பன்னாட்டு உறவால் சிலருக்கு தாய்மொழிமீது உள்ள பற்று குறைந்து வருகிறது. இது ஆபத்தான நிலைக்குத் தள்ளிவிடும்.." (ப.35)

"சங்க, காப்பியக் காலத்தில் பெருவழக்குப் பெற்றிருந்த துடி பத்திமைக் காலத்தில் உடுக்கை என்றும் அழைக்கப்பெற்றுச் சோழர் காலத்தில் ஆடலுக்குகந்த இசைக்கருவியாகத் திகழ்ந்ததுடன், சிவபெருமானின் சில கோலங்களிலும் இடம்பெற்றது... " (ப.73)

"கடல் கடந்தும் காரைக்கால் அம்மையார் பயணித்திருக்கிறாள். கம்போடியாவில் உள்ள பண்டிஸ்ரீ கோவிலில் சிவநடனக் காட்சியில் அம்மை காட்டியிருப்பது சிறப்பு.." (ப.76)

"சேவல்தான் முதன்முதலில் காலத்தால் முந்திய நூல்களில் முருகனது அடையாளம். இது ஓர் இனக்குழுக்குறி. மயில் பின்னால்தான் வருகிறது." (ப.94)

"இசை என்பது ஒன்றுதான். மெலடி, மெட்டு, சேர்ந்திசை, தூய சங்கீதம், வர்ணம், பதம், நிரவல், நம் வசதிக்காக ஏற்படுத்திக்கொண்டவை.. " (ப.105)

"பேச்சு முதலில் தோன்றியது என்பதும் எழுத்து பிறகு காலவரிசையில் மனிதர்கள் கண்டுபிடித்திருப்பார்கள் என்பதும் எல்லோரின் நம்பிக்கை.." (ப.134)

"காலனியக் காலத்தில் அறிவியல் சொல்லாடல்களால் கட்டப்பட்ட தேசியம் என்ற கருத்தியலுக்கு ஏற்ப இறைபக்தி, தேசபக்தியாக மடைமாற்றம் அடைந்தது. அதனால், பக்தி இயக்க மரபு தமிழில் நிகழ்ந்த வேதமதம் சார்ந்த வைதீக உணர்வை பரவலாக்கிறது." (ப.187)

"மூல மொழி தெரிந்தால் அதிலேயே படிப்பதே மேல். ஆங்கிலம் தெரிந்தால் ஆங்கிலத்திலேயே படிப்பதே மேல். அவ்வாறில்லாமல், தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட ஒரு படைப்பை வாசிப்பவர்கள், மொழிபெயர்ப்பாளர்களடம் குறைகாண்பதையே நோக்கமாகக் கொண்டு அதை அணுகவேண்டாம்." (ப.200)

"தமிழர்கள் பன்னிரண்டு மாதங்களின் பெயர்களை, சூரியன் இயங்கும் உடுக்கணத்தின் பெயர்களாகக் கொண்டிருந்தனர்..." (ப.298)

"உலக அளவில் தனியாகப் பல வணிகச்சின்னங்கள் இருந்துவருகின்றன. சூப்பர்மென், அயர்ன்மேன், ஸ்பைடர்மேன் என நாளுக்கு நாள் அயல்நாட்டு வணிகச்சின்னங்களை கொண்டுசெயல்பட்டு வருகின்றோம். ஆனால் நமது தமிழிலிருந்து வரலாற்றுச் சின்னங்களை, கதாநாயகர்களை அடிப்படையாகக் கொண்டு, வணிகச்சின்னங்களை நாம் உருவாக்கவில்லை என்பதே உண்மை." (ப.324)

"தமிழ் விக்கிப்பீடியா தொகுப்பு குறித்துத் தமிழ்நாட்டின் எழுத்தாளர்கள் ஆய்வாளர்கள், ஆசிரியர்களிடையே உரிய விழிப்புணர்வு இல்லாமல் இருக்கும் நிலை மாறவேண்டும்." (ப.329)

சங்க இலக்கியம் தொடங்கி இக்காலம் வரையிலான பல்துறை சார்ந்த மிக நுட்பமான கட்டுரைகளைக் கொண்டுள்ள இந்த மலரானது ஆய்வாளர்கள் முதல் அறிஞர்கள் வரை அனைவரும்  பாதுகாக்கப்படவேண்டிய மலராகும். தேவையான இடங்களில் அடிக்குறிப்புகளும், படங்களும் வாசகருக்கு  தெளிவினைத் தருகின்றன. படிக்க அயர்ச்சி தராத எழுத்துரு, வாசிப்பு வேகத்தை மேம்படுத்த ஆங்காங்கே படங்கள், கோட்டோவியங்கள், வேறுபடுத்திக்காட்ட தடித்த எழுத்துரு என்ற வகையில் ஒரு கலையியல் ரசனையாடு அமைந்துள்ளது இம்மலர். சிறப்பான முறையில் மலரை வெளிக்கொணர்ந்த மலர்க்குழுவினருக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள்.














11ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு சிறப்பு மலர்
வெளியிட்டோர் : உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் இந்தியக்கிளை, 9, சாரங்கபாணி தெரு, தியாகராய நகர், சென்னை 600 017, தொலைபேசி 044 28340488, மின்னஞ்சல் : 11worldtamilconf@gmail.com, www.iatrinternational.org.
மலர் தேவைக்கு : 
மலராசிரியர் திரு சுகவன முருகன், அலைபேசி 98426 47101, muruguarch@gmail.com

15 October 2023

அத்தையின் ரசனை

எங்கள் அத்தையின் குணங்களில் நான் அதிகம் ரசித்தது அவருடைய அழகியல் ரசனை ஆகும். அத்தையின்  ரசனைத்தன்மை என்னை இயல்பாகப் பற்றிக்கொண்டுவிட்டது. கும்பகோணத்தில் பல ஆண்டுகளுக்குப் பின்னர் எனக்கு இவ்வாறான ஒரு ரசனையை ரசிக்கும் குணம் உடையவராக நண்பர் திரு தேணுகா அவர்களைக் கண்டேன்.  

ஒவ்வொரு நவராத்தியின்போது கொலுவின் முதல் நாள் முதல் நிறைவு நாள் வரை முழு ஈடுபாட்டுடன் இருப்பார் எங்கள் அத்தை திருமதி இந்திரா. கும்பகோணத்தில் எங்கள் வீட்டில் அழகாக கொலு அமைய அவரே காரணம். கொலுப்படியின் இரு ஓரங்களிலும் உரிய பொம்மைகளை அளவிற்கும், வண்ணத்திற்கும் தக்கபடி முதல் படி முதல் கடைசிப்படி வரை சரியாக வைத்தல், தசாவதாரம் போன்றவற்றை உரிய வரிசையாக அமைத்தல், இல்லாத பொம்மைகளை ஒவ்வொரு ஆண்டும் வாங்கிச் சேர்த்தல், உடைந்த பொம்மைகளுக்குப் பதிலாக புதிதாக வாங்குதல் என்ற வகையில் அவருடைய ஈடுபாடு இருந்தது.   

சுமார் 50 ஆண்டுகளுக்கு முன் கும்பகோணத்தில் எங்கள் இல்லத்தில் நவராத்திரி கொலுவின்போது இடம்பெற்ற, அத்தை வாங்கிய, அம்மா பின்னிய பொருள்களில் உள்ளவற்றில் சில மட்டும் இன்று எங்கள் இல்ல காட்சிப்பேழையில் உள்ளது. 

அவருடைய அழகியல் ரசனையானது நவராத்திரி கொலுவில் மட்டுமல்ல. அழகான பொருள்கள் கிடைத்தால் ஆர்வத்தோடு வாங்குவார். நகையாகட்டும், ஆடையாகட்டும், அழகான பொம்மைகளாகட்டும் எதுவாக இருந்தாலும் வாங்கி விடுவார். ஆடை வகைகளை அணிந்து அழகு பார்ப்பார். என் தாயாரும் அத்தையும் மணி பின்னல் தொடங்கி காட்டன் துணி விதம் விதமாகப் பின்னுதல் மற்றும் எம்ப்ராய்டரி வேலைகள் செய்வர்.

கும்பேஸ்வரர் கோயில் தேரோட்டத்தின்போது தேரானது தெற்கு வீதியிலிருந்து மேல வீதிக்கும், அங்கிருந்து வடக்கு வீதிக்கும் திரும்பும்போது அதனை நின்று ரசிப்பார். தேரின் அழகினைத் திரும்பும்போது பார்க்கவேண்டும் என்பார்.

உறவினர்கள், நண்பர்களின் மகள்களுக்கு ஆர்வமாக விதம்விதமாக பூ தைப்பார். சாதாரணமாக பூ தைத்தல், தாழம்பூ வைத்து தைத்தல், வங்கி மாடல், பல வகைகளில் பூ தைக்கும் அழகே அழகு. வாழைப்பட்டையை சமமாக அறுத்தெடுத்து, கோர்த்த பூவை அதில் வங்கி மாடல், நேர் மாடல் என்ற வகைகளில் தைப்பார்கள். சில சமயங்களில் அழகான ஈர்க்குச்சிகளை எடுத்துக்கொண்டு அதில் வரிசையாக பூவினைச் செருகி சடையின் இரு பக்கங்களிலும் அமைத்து, நடுவில் அழகழகான வண்ணப் பூக்களை வரிசையாக அமைத்து, இடையே வண்ண நூல்களை பூப்போல சுருட்டி அமைத்து, நடுவில் மாறுபட்ட வண்ணத்தில் இடத்திற்குத் தக்கவாறு பூவையோ வண்ண நூலையோ அமைப்பார். அனைத்து வகையான பூக்களும் அதில் இடம்பெற்றுவிடும். சில சமயங்களில் கருப்பு திராட்சைப்பழம் வைத்தும் தைப்பர். நான்கு அல்லது ஐந்து மணி நேரங்கள்கூட பூ தைப்பார்கள். பூப்பு நீராட்டு, வளைகாப்பு போன்ற சிறப்பு நிகழ்வுகளின்போது அவர் சடை பின்னப் பார்த்திருக்கிறேன். தலை முழுக்க பூவும், வண்ண நூலும் மட்டுமே. தலையில் வட்ட வடிவ கல் பதிந்த ராக்கடி, இரு புறமும் கல் பதிந்த வட்ட வடிவ சூரியன், பிறை வடிவிலான சந்திரன் வைப்பர். நடுவில் வட்டமாக மூன்றடுக்கில் பின்னிய மல்லிகைச்சரத்தை ரிங் பால் வடிவில் அமைக்கப்பட்ட கொண்டையைச் சுற்றி அடியில் முடிச்சுப் போடுவர்.  பூ தைக்கப்படுகின்றவர் பல மணி நேரம் ஒரே இடத்தில் ஆடாமல், பொறுமையாக இருப்பார். பூ தைத்து முடிந்தபின் பூ தைக்கப்பட்டவர் நண்பர்கள், உறவினர்களிடம் சென்று காண்பித்துவிட்டு வருவார். அதனை ஆர்வமாகப் பார்த்து அவர்கள் கருத்து கூறுவர். சில சமயங்களில் போட்டோ ஸ்டுடியோக்களில் சென்று போட்டோவும் எடுப்பர். பூ தைத்தவர், தைக்கப்பட்டவர் என்ற ஒரு பிணைப்பானது அடுத்தடுத்த குழந்தைகளுக்கு ஆர்வத்தினை இயல்பாகவே உண்டாக்கிவிடும். எப்போதாவது பூ தைத்துப் பெண் குழந்தைகளைக் காண நேரும்போது அதனை அத்தை பின்னியதோடு ஒப்புநோக்கிப் பார்த்துவிடுகிறேன்.

வளையலணி விழாவிற்காக பூ தைக்கும்போது அந்தப்பெண் அதிக நேரம் உட்கார இயலா நிலை ஏற்படும். அச்சூழலில் விழாவின் முதல் நாளே வாழைப்பட்டையில் அளவெடுத்து வெட்டி அதில் பூவை வைத்துத் தைத்து ஈரத்துணியில் சுற்றி வைத்துவிட்டு, மறுநாள் தலையில் வைத்துத் தைப்பர்.  

பிள்ளைகளின் நடவடிக்கைகள், பேச்சுகளை மனம் லயித்து ரசிப்பார். தாயக்கட்டை, பல்லாங்குழி, ஆடுபுலி, பரமபதம், பம்பரம், ஏழாங்கல், உப்புமூட்டை, கூட்டாஞ்சோறு, கோலிகுண்டு, கிச்சுகிச்சு தாம்பலம்,  கிட்டிப்புல், ஒத்தையா ரெட்டையா, ஒருகுடம் தண்ணி ஊத்தி, குலைகுலையாம் முந்திரிக்கா, நொண்டி விளையாட்டு, கேரம் போர்டு என்ற விளையாட்டுகளை  நாங்கள் விளையாடும்போது ஆர்வமாகப் பார்ப்பார். அதிக நேரம் விளையாடும்போது திட்டியதும் உண்டு.

மீன் குழம்பு ஊற்றி சாப்பிடும்போது நமக்கும் சாப்பிட ஆசை வந்துவிடும். பொறுமையாக நிதானித்து மீனின் முள்ளை எடுத்து லாவகமாக ருசித்துச் சாப்பிடுவார். இன்னும் மீன் குழம்பை நான் அதிகம் விரும்பிச் சாப்பிட அவரே காரணம். 

மருதாணி போடுவதில் ஆர்வம் காட்டுவார். உள்ளங்கையினை அடைத்து முழுமையாகப் போடுதல், நடுவில் மட்டும் போட்டு சுற்றி சிறு ரவுண்டு வைத்தல், அனைத்து கைகளுக்கும் மோதிரம் போடுதல் என்றவாறு விதம் விதமாகப் போடுவார். மருதாணி போட்டவர்களைக் கண்டால் எவ்வாறாக போட்டுள்ளார்கள் என்று ஆர்வமாகப் பார்ப்பேன். இன்றும் எனக்கு மருதாணி வைத்தலில் ஒரு ஈடுபாடு உண்டு.    

ஆடையில், குணத்தில், பழகும் முறையில், நடத்தையில் பிறரிடம் காணும்போது அவருடைய கலையியல் ரசனையை ஆர்வத்தோடு ரசிப்பேன். குறிப்பாகப் பெண் குழந்தைகளைப் பொறுத்தவரை கொலுசு அணிந்த குழந்தை, அழகான சடைப்பின்னல், தலை நிறைய பூ, பாவாடை தாவணி, புடவை கட்டி அழகுபார்த்தல், நெற்றியில் அழகான பொட்டு, அழகான ஆடை என்ற வகையில் அவருடைய ரசனையானது நீண்டுகொண்டே இருக்கும். தாத்தா, ஆத்தாவைப் போல குழந்தைகளும், வளரும் பிள்ளைகளும் அணியும் ஆடைகளையும், ஆடை அணியும் முறைகளையும் ரசிப்பார். பிள்ளைகள் உடல் தெரிவது போன்ற ஆடை, மெல்லிய ஆடை, கருப்பு வண்ண ஆடை, முட்டிக்காலுக்கு மேல் டவுசர், ஆண் பிள்ளைகள் அதிகமாக முடி வைத்திருத்தல் நீண்ட கிருதா வைத்தல் என்பனவற்றைக் கண்டிப்பார். ஒருவரின் பண்பினை நிர்ணயிப்பதில் ஆடைக்கும், தலை முடிக்கும் முக்கிய பங்கு உள்ளது என்பதை அவர்கள் எனக்கு உணர்த்தினர். அத்தகைய பண்பாடுகளைக் கடைபிடிக்கும்போது கண்ணியமும், ஒழுங்கும் இயல்பாக வந்துவிடும் என்பதையும், அவற்றைக் கடைபிடிக்காத நிலையில் பல விளைவுகள் உண்டாகும் என்பதையும் அவர்கள் உணர்த்தினர். இன்றும் அந்த ரசனைகளையும், ஆடை முறையையும் நினைக்கும்போது அத்தையின் நினைவு இயல்பாக வந்துவிடும். அந்த நாள்கள் பல பாடங்களைக் கற்றுக்கொடுத்த நாள்கள். அந்நாள்களையும் நவராத்திரி கொலுவையும் மறக்கவும் முடியுமோ?

10 October 2023

பேராசிரியர் வே.இரா. மாதவன் (6.4.1952-8.10.2023)

தமிழ்ப் பல்கலைக்கழக ஓலைச்சுவடித்துறை முன்னாள் துறைத்தலைவர் பேராசிரியர் முனைவர் வே.இரா. மாதவன் அவர்கள் 8.10.2023 அன்று இறந்த செய்தி அறிந்து அதிர்ச்சியடைந்தேன். பழகுவதற்கு இனியவர், மிகச்சிறந்த பண்பாளர், மென்மையான பேச்சுக்குச் சொந்தக்காரர். அவரை இழந்து வாடும் குடும்பத்தார், உறவினர்கள், நண்பர்கள் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

1993இல் ஆய்வில் ஈடுபட ஆரம்பித்த பின்னர் பல ஆசிரிய, அலுவலக நண்பர்களுடன் அவ்வப்போது என்னுடைய ஆய்வினைப் பற்றிப் பேசுவதுண்டு. அவ்வாறு நான் ஆய்வு தொடர்பாக பேசி வந்த ஆசிரியர்களில் ஒருவர் திரு வே.இரா.மாதவன் அவர்கள். அவரிடம் பேசும்போது பெரும்பாலும் கோயில்களைப் பற்றிய செய்திகளைக் கேட்டறிவேன். கருத்துகளை அவர் நுணுக்கமாக எடுத்துக்கூறும் விதம் எளிதாகப் புரிந்துகொள்ளும் வகையில் இருக்கும். 15 ஆண்டுகளுக்கு அவருடைய நூல் தொடர்பாக நான் எழுதிய கடிதம் தி இந்து நாளிதழில் வெளியானது. சற்றே திரும்பிப்பார்ப்போம்.

2008இல் தி இந்து (ஆங்கிலம்) இதழில் வெளியான ஒரு கட்டுரையில் தமிழில் தல புராணங்கள் தொடர்பாக சொல்லிக்கொள்ளும் அளவிற்கு எந்த நூலும் இல்லை என்ற பொருளில் ஒரு கட்டுரை வெளியானது. ("..Nobody has done any serious work on Tamil sthalapuranams.", The Vandalization of Heritage, Interview, The Hindu, Magazine Section, 10.2.2008, p.7)




அவர் எழுதிய தமிழில் தல புராணங்கள் நூலை (தமிழில் தல புராணங்கள், முதல் பகுதி மற்றும் இரண்டாம் பகுதி, பாவை வெளியீட்டகம், சி1, முன்றில் சாலை, தமிழ்ப்பல்கலைக்கழகக் குடியிருப்பு வளாகம், திருச்சி நெடுஞ்சாலை, தஞ்சாவூர், 1995) நான் படித்துள்ளேன். நாளிதழில் நான் படித்த செய்தியை அவரிடம் கூறி, இது தொடர்பாக அவ்விதழுக்கு நான் கடிதம் எழுதவுள்ளதைக் கூறினேன். அப்போது அவர் அவ்விதழில் 1997இல் வெளியான நூல் மதிப்புரையின் (Sthalapuranas in Tamil, The Hindu, 14 October 1997) படியைத் தந்தார். தொடர்ந்து அவ்விதழுக்கு நான் எழுதிய கடிதம் (More on sthalapuranams, The Hindu, Magazine, 24 February 2008) வெளியானது.

அவரைப் போன்ற அறிஞர்களுடன் விவாதம் செய்தது என் ஆய்விற்கும், வாசிப்பிற்கும் மிகவும் துணையாக இருந்தது. அவருடைய மறைவு என்னைப் போன்றோருக்குப் பேரிழப்பு.

தொடர்ந்து தமிழ் விக்கிப்பீடியாவில் 2014இல் தமிழில் தல புராணங்கள் (நூல்) என்ற தலைப்பிலும், 2015இல் திருக்குடந்தை புராணம் என்ற தலைப்பிலும் பதிவுகளை ஆரம்பித்தேன்.

03 October 2023

விக்கிப்பீடியா 20 ஆண்டு நிறைவு : தஞ்சைக்கூடல்

தமிழ் விக்கிப்பீடியா தொடங்கி செப்டம்பர் மாதம் 20 ஆண்டுகள் நிறைவுற்று 21ஆம் ஆண்டு துவங்குவதைக் குறிக்கும் விழா தஞ்சாவூர், தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் 23-24.9.2023இல் சிறப்பாக நடைபெற்றது. நிகழ்வுகளை திரு மா.செல்வ சிவகுருநாதன் மற்றும் திரு பி. மாரியப்பன்  (சத்திரத்தான்) ஒருங்கிணைத்தனர்.


முதல் நாளன்று (23.09.2023) விக்கிப்பீடியாவின் சிஐஎஸ்-ஏ2கே அமைப்பும், தமிழ்ப் பல்கலைக்கழக அறிவியல் தமிழ் மற்றும் தமிழ்வளர்ச்சித் துறையும் இணைந்து நடத்திய கல்வியாளர்களுக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சியைத் தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர்  வி. திருவள்ளுவன் துவக்கிவைத்து தலைமையுரை ஆற்றினார். பதிவாளர் (பொ) முனைவர் சி. தியாகராஜன் வாழ்த்துரை வழங்கினார். வளர்தமிழ் புலமுதன்மையர் முனைவர் இரா. குறிஞ்சிவேந்தன் முன்னிலை வகிக்க, நோக்கவுரையினை திருவாரூர் கருவூல கூடுதல் அலுவலர் திரு கி. மூர்த்தி நிகழ்த்தினார். அறிவியல் தமிழ் மற்றும் தமிழ் வளர்ச்சித்துறைப் பேராசிரியர் முனைவர் இரா. இந்து வரவேற்புரையாற்ற விக்கிபீடியா நிர்வாகி ஸ்ரீபாலசுப்ரமணியன் நன்றியுரையாற்றினார். 

துணைவேந்தர் வி.திருவள்ளுவன் தொடக்கவுரையாற்றல். (உடன் இடமிருந்து : விக்கிப்பீடியர் பி.மாரியப்பன் (சத்திரத்தான்), விக்கிப்பீடியர் ஸ்ரீபாலசுப்ரமணியன், பதிவாளர் (பொ) சி.தியாகராஜன், வளர்தமிழ்புல முதன்மையர் இரா.குறிஞ்சிவேந்தன், விக்கிப்பீடியர் கி.மூர்த்தி, அறிவியல் தமிழ் மற்றும் தமிழ் வளர்ச்சித்துறைப் பேராசிரியர் இரா.இந்து)

மேம்பாட்டுப்பயிற்சியின்போது பதிவு செய்த கல்லூரி ஆசிரியர்களுக்கு விக்கிப்பீடியாவில் பயனராகப் பதிந்து, புதிய கட்டுரைகளை எழுதுவது தொடர்பான பயிற்சி அளிக்கப்பட்டது. தமிழகத்தை சேர்ந்த 75க்கும் மேற்பட்ட கல்லூரி பல்கலைக்கழக ஆசிரியர்கள் இதில் பங்கேற்று, புதிய பயனராகப் பதியும் முறையை அறிந்துகொண்டனர். அவர்கள் தமிழ் விக்கிப்பீடியாவில் இல்லாத இயற்பியல், வேதியியல், உயிரியல், தாவரவியல், விலங்கியல் உள்ளிட்ட துறைகளைச்சார்ந்த கட்டுரைகளைப் புதிதாகத் தொகுத்தனர். முன்னரே இருக்கும் கட்டுரைகளை மேம்படுத்தினர். ஆங்கில விக்கிப்பீடியாவில் உள்ள கட்டுரையை தமிழ் விக்கிப்பீடியாவில் தொடங்குவதற்கான உத்திகளும் அவர்களுக்குப் பயிற்றுவிக்கப்பட்டன. அதற்கு முன்பாக ஒவ்வொருவரும் தம் பெயரில் பயனர் கணக்கினைத் தொடங்கினர். அவ்வாறாகத் தொடங்கப்படும் கணக்கில் பதியப்படும்போது ஒவ்வொருவரின் பங்களிப்பும் அறியவரும் என்றும், அதனால் அந்த முறையிலேயே தொடர வேண்டும் என்றும் அவர்களுக்குப் பயிற்றுநர்கள் வலியுறுத்தினர். விக்கிப்பீடியாவில் எழுதுவது மிகவும் எளிது, மிகவும் அணுக்கமாக விக்கிப்பீடியாவை அணுகலாம், எழுதலாம் என்பதானது பயிற்சியாளர்களுக்குப் பயிற்றுவிக்கப்பட்டது. ஒவ்வொருவரிடமும் தாமும் அதிகமாகப் பங்களிக்க வேண்டும் என்ற ஓர் அவா இருந்ததைக் காணமுடிந்தது. விக்கிப்பீடியாவைப் பற்றியும், பிற திட்டங்களான விக்சனரி, விக்கிமூலம், விக்கி பொதுவகம், விக்கி நூல்களைப் பற்றியும் பயிற்றுனர்கள் சுருக்கமாக அறிமுகம் தந்தனர்.    

தமிழ் விக்கிப்பீடியா பயிற்றுநர்களாக பார்வதிஸ்ரீ, பா.ஜம்புலிங்கம், வெ.வசந்தலட்சுமி, தகவலுழவன், மா.செல்வகுருநாதன், ஞா.ஸ்ரீதர், பி.மாரியப்பன் ஆகியோர் செயல்பட்டனர். 

முதல் நாள் நிகழ்வில் கலந்துகொண்ட பதிவாளர் (பொ), அறிவியல் துறைத்தலைவர், விக்கிப்பீடியர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள்

முதல் நாள் நிகழ்வில் கலந்துகொண்ட விக்கிப்பீடியா பயனர்கள்

விழாவின் இரண்டாம் நாளன்று (24.9.2023) நடைபெற்ற பயனர்கள் கூடல் நிகழ்வில் வரவேற்புரையாற்றும் வாய்ப்பினைப் பெற்றேன். சுருக்கமாக தஞ்சாவூரைப் பற்றியும், விக்கிப்பீடியாவில் என்னுடைய அனுபவத்தையும் பேசினேன். இதே மேடையில் தமிழ்ப் பல்கலைக்கழகப் பணியிலிருந்து ஏப்ரல் 2017இல் பணி நிறைவு பெற்றதையும் உரையில் குறிப்பிட்டேன்.
இரண்டாம் நாள் நிகழ்வில் வரவேற்புரை 

குறிப்பிடத்தக்க பணியாற்றிய பங்களிப்பாளர்கள் என்ற வகையில் மூன்று பிரிவில் ஆறு பயனர்களுக்கு நினைவுப்பரிசு வழங்கி சிறப்பு செய்யப்பட்டது.  அந்த வகையில் திரு மா.செல்வசிவகுருநாதன் அவர்களுக்கு சிறப்பு செய்தேன். இவ்வாறான விருதுகள் வளர்ந்து வரும் விக்கிப்பீடியர்களுக்கும்,  ஆர்வமாக செயலாற்றும் விக்கிப்பீடியர்களுக்கும் ஓர் உந்துதலாக இருப்பதோடு, பிற விக்கிப்பீடியர்கள் ஆர்வமாகப் பங்களிக்க உதவும் என்று நம்புகிறேன்.  
விருது பெற்ற பயனர்கள்:
செயல்நயம் மிக்கவர் 
பார்வதிஸ்ரீ, நீச்சல்காரன், செல்வசிவகுருநாதன்
5000+ கட்டுரை எழுதியவர்
ஸ்ரீபாலசுப்ரமணியன், சத்திரத்தான்
அறிமுகப்பயனர்
ஷா.பத்ருநிஷா  
மா.செல்வசிவகுருநாதனுக்கு நினைவுப்பரிசு வழங்கல்
(இடமிருந்து) சத்திரத்தான், கி.மூர்த்தி, மா.செல்வசிவகுருநாதன், பா.ஜம்புலிங்கம்

தொடர்ந்து சரஸ்வதி மஹால் நூலகப் பண்டிதர் முனைவர் மணி.மாறன் இலக்கியம், வரலாறு, தொல்லியல் நோக்கில் தஞ்சாவூரைப் பற்றிய ஒரு பறவைப்பார்வையை எடுத்துரைத்தார். 
மணி.மாறனுக்கு நினைவுப்பரிசு வழங்கல்
(இடமிருந்து) சத்திரத்தான், தேனி.மு.சுப்பிரமணி, மணி.மாறன், பா.ஜம்புலிங்கம்
தமிழகம் முழுவதிலுமிருந்து தமிழ் விக்கிப்பீடியாவில் தற்பொழுது எழுதிக்கொண்டிருக்கின்ற தன்னார்வப் பயனர்கள், நிர்வாகிகள் கலந்துகொண்டு, தமிழ் விக்கிப்பீடியாவின் 20 ஆண்டு கால வளர்ச்சி, கட்டுரைப் பதிவில் முன்னேற்றம், நெறிமுறைகள், தொழில்நுட்ப மேம்பாடு, அடுத்தகட்ட நகர்வு, கட்டுரைகளின் எண்ணிக்கைகளை அதிகமாக்க மேற்கொள்ளப்படவேண்டிய முயற்சி உள்ளிட்டவற்றைப் பற்றி விவாதித்தனர்.

அவர்களுடைய பேச்சு, இன்னும் எழுதவேண்டும் என்ற ஒரு உத்வேகத்தைத் தந்தது. கேட்கப்பட்ட கேள்விகளுக்கும், ஐயங்களுக்கும் அவர்கள் மறுமொழி தந்தனர். அப்போது, ஒவ்வொரு நாளும் கற்கிறோம் என்பதைப் போல பல புதிய செய்திகளையும், உத்திகளையும்  கற்றேன். 
விக்கிப்பீடியாவில் பங்களிக்கின்ற முதுகலை மாணவர்களுடன் பா.ஜம்புலிங்கம்

மதியம்  நடைபெற்ற கலைப்பயணத்தில் தஞ்சாவூரின் வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களான அரண்மனை வளாகத்தில் உள்ள சரஸ்வதி மஹால் நூலகம், கலைக்கூடம், தர்பால் ஹால் உள்ளிட்ட இடங்களுக்குச் சென்று பார்வையிட்டனர். போதிய நேரமின்மையைப் பொருட்படுத்தாது அவர்கள் ஆர்வமாக அனைத்து இடங்களையும் பார்வையிட்டனர். 




நிகழ்வின் செய்திகள் ஊடகங்களில் இடம் பெற்றன. துணைவேந்தரவர்களின் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் 28 பிப்ரவரி 2024இல் உலகத்தமிழ் விக்கிப்பீடியா மாநாடு என்ற அறிவிப்பானது விக்கிப்பீடியர்களையும், தமிழின் மேன்மைக்காகப் பாடுபடுவோரையும் மகிழ்ச்சிக்குள்ளாக்கியது. அடுத்த இலக்கு நோக்கி நகர இந்த அறிவிப்பானது ஓர் உந்துகோலாக அமைந்தது.
இரண்டாம் நாள் நிகழ்வில் கலந்துகொண்ட விக்கிப்பீடியர்கள்
சுமார் 35 ஆண்டுகளாக நான் பணியாற்றிய, சுமார் 25 ஆண்டுகளாக ஆய்வினை மேற்கொண்ட தமிழ்ப் பல்கலைக்கழகத்தில், தற்போது முதுகலைப் பயிலும் மாணவர்களுடன் உரையாடியது ஒரு மறக்கமுடியாத அனுபவம். இம்மாணவர்கள் விக்கிப்பீடியாவில் பங்களித்து வருகின்றனர் என்பது பாராட்டப்படவேண்டியதாகும்.  

தி இந்து (ஆங்கிலம்), 23 செப்டம்பர் 2023


தினமணி, 24 செப்டம்பர் 2023


இந்து தமிழ் திசை, 24 செப்டம்பர் 2023

தினமலர், 25 செப்டம்பர் 2023

தினத்தந்தி, 25 செப்டம்பர் 2023


விழா அழைப்பிதழ்
 
இந்து தமிழ் திசை, 12 அக்டோபர் 2023


தினமணி, 12 அக்டோபர் 2023, ப.8


இதற்கு முன்னர் மதுரை, ஆனைக்கட்டி போன்ற இடங்களில் விக்கிப்பீடியா தொடர்பான கூடல்களில் கலந்துகொண்டபோதிலும் இதில் கலந்துகொண்டது நினைவில் நிற்கும் அனுபவமாகும். நூல் ஆய்வுப்பணி காரணமாக முழுமையாக செயல்பட முடியாவிட்டாலும், தொடர்ந்து விக்கிப்பீடியாவில் நான் எழுதி வருகிறேன். மூத்த விக்கிப்பீடியர்களின் பேச்சுகளும், வளர்ந்து வருகின்ற இளைய தலைமுறையினரின் ஆர்வமும் விக்கிப்பீடியாவில் பங்களிக்கும் ஆர்வத்தை மேலும் தூண்டிவிட்டது. நம்மால் முடிந்த வரையில புதிய கட்டுரைகளை எழுதுவோம், அதிலுள்ள கட்டுரைகளை மேம்படுத்துவோம்.  இரண்டு இலட்சத்திற்கும் மேற்பட்ட பயனர்களுடன் 1.57 லட்சம் கட்டுரைகளுடன் இந்தியாவின் மூன்றாவது பெரிய மொழி விக்கிப்பீடியாவான தமிழ் விக்கிப்பீடியாவினை அடுத்த இலக்கிற்கு முன்னோக்கி எடுத்துச்செல்ல ஒருமித்துப் பயணிப்போம். தமிழ் விக்கிப்பீடியாவினை முதன்மை இடத்திற்குக் கொணர நாம் அனைவரும் ஒன்று சேருவோம், வாருங்கள். 

விக்கிமேனியா, மதுரை, 14 ஆகஸ்டு 2022


விக்கிப்பீடியா வேங்கைத்திட்டம் 2.0 பயிற்சிப்பட்டறை, ஆனைக்கட்டி, 26-28 ஜனவரி 2023


நன்றி : நாளிதழ்கள், படங்களைப் பகிர்ந்தவிக்கிப்பீடியர்கள், நண்பர்கள்

12 அக்டோபர் 2023இல் மேம்படுத்தப்பட்டது.