19 September 2020

கும்பகோணம் நண்பர் செல்வம் (8.5.1958-13.9.2020)


எங்கள் 50 ஆண்டு கால குடும்ப நண்பரும், அறிஞர் அண்ணா அரசு மேல்நிலைப்பள்ளியிலும், கும்பகோணம் அரசு ஆடவர் கல்லூரியில் புகுமுக வகுப்பிலும் ஒன்றாகப் படித்தவரும் ஆன திரு எம்.செல்வம் (தொழில்நுட்பப் பணியாளர், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம், மயிலாடுதுறை கிளை, பணி நிறைவு) சிறுநீரகத்தொற்று காரணமாக 13 செப்டம்பர் 2020 அன்று இயற்கையெய்தினார் என்பதைக் கனத்த மனத்துடன் பகிர்கிறேன். 

என்னை ‘டேய், ஜம்பு!’ என்று உரிமையோடு அழைக்கும் ஒரு சில கும்பகோணம் நண்பர்களில் அவரும் ஒருவர். அவருடைய பிரிவு என்னையும், எங்கள் குடும்பத்தையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

அவருடைய ஆத்தா, அக்கா, தங்கைகள் என்மீது பாசமாக இருப்பார்கள். அதைப்போலவே அவன் எங்கள் வீட்டில் ஒரு குடும்ப உறுப்பினராகவே இருந்து வந்தார். திருமணத்திற்குப் பிறகு அவருடைய மனைவி, மகன்கள், மருமகள்கள் என்ற வகையிலும் நட்பு தொடர்ந்தது. அவனுடைய மகன்கள் எங்களை மாமா அத்தை என்றும், என்னுடைய மகன்கள் அவர்களை மாமா, அத்தை என்றும் அழைப்பர். அவனுடைய மருமகள்கள் என்னை அப்பா என்று அழைக்கின்றனர்.

கும்பகோணத்தைவிட்டு தஞ்சாவூர் வந்துவிட்டபோதும், ஒவ்வொரு முறை கும்பகோணம் செல்லும்போதும் என்னுடைய நண்பர்கள் அனைவருடைய வீட்டிற்கும் சென்றுவருவதை வழக்கமாகக் கொண்டுள்ளேன். அந்த வகையில், கொரோனாவிற்கு முன்பாக, 15 மார்ச் 2020அன்று எங்கள் பள்ளியில் நடைபெற்ற நூற்றாண்டு விழா தொடர்பான கூட்டத்திற்குச் சென்றுவிட்டு அவரைப் பார்த்து சந்தித்து நெடுநேரம் பேசிவிட்டு வந்தேன்.

அவருடைய இளைய மகன், அவர் தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரியில் மருத்துவமனையில் உடல்நிலை சரியில்லாமல் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறியதையடுத்து, குடும்பத்துடன் பார்க்கச் சென்றோம். எங்களைப்பார்த்து உணர்ந்துகொள்ளும் நிலையில் அவர் இல்லை. எப்படியும் இயல்புநிலைக்குத் திரும்பிவிடுவான் என்று பேசிக்கொண்டு வீட்டிற்குத் திரும்பினோம். சிறிது நேரத்தில் அவர் இறந்த செய்தி எங்களுக்கு வந்தது. அவனை இழந்து வாடும் அவன் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

அந்த நாள் நினைவுகள்


6, பழைய அரண்மனைத்தெரு, சிதம்பர நாடார் சந்து, கும்பகோணம். இளமைக்காலம் முதல் நான் செல்லும் இடங்களில் ஒன்றான, எங்கள் நண்பர் திரு செல்வம் அவர்களின் இல்லமாகும். அவருடைய தாத்தாவான சிதம்பர நாடார் அவர்களின் பெயரில் உள்ள தெருவில் உள்ளது. நாங்கள் அறிஞர் அண்ணா அரசு மேல்நிலைப்பள்ளியில் (1972-75) ஒன்றாகப் படித்தோம். பள்ளி செல்லும்போது அவர் வீட்டில் சிறிது நேரம் இருந்துவிட்டு அங்கிருந்து நண்பர்களுடன் ஒன்றாகச் செல்வோம். அப்போது எங்களுடன் தயாளன் (சாரங்கபாணி தெற்கு வீதி), இளஞ்சேரன் (மாணவர் விடுதி), ராஜு (பழைய அரண்மனைத்தெரு), சண்முகசுந்தரம் (அண்ணாலக்ரகாரம்), மனோகரன், குமாரராஜா (தாராசுரம்), பாலகிருஷ்ணன் (மல்லுக செட்டித்தெரு), ஜான்முகமது (மணிக்காரத்தெரு), பாஸ்கர் (கவரத்தெரு), அன்பழகன், ராதாகிருஷ்ணன் (தோப்புத்தெரு) உள்ளிட்ட பல நண்பர்கள் படித்தனர்.

எஸ்.எஸ்.எல்.சி. (11ஆம் வகுப்பு) நிறைவு செய்தபின் விடுமுறையில் என் தாத்தா கும்பகோணம் பெரிய தெருவில் இருளப்பன் மிளகாய் மண்டியில் வேலைக்கு சேர்த்துவிட்டார். எங்கள் குடும்ப சூழ்நிலை காரணமாக என் வீட்டார் என்னை கல்லூரியில் சேர்க்கவில்லை. அங்கு நான் வேலைக்குச் சென்றுகொண்டிருந்தேன்.  அவ்வப்போது செல்வம் வீட்டிற்குச் செல்வது வழக்கம். பள்ளிக்காலம் முடிந்து கும்பகோணம் அரசினர் ஆடவர் கல்லூரிக்கு அவர் விண்ணப்பித்திருந்தார். விண்ணப்பம் வந்தபோது அவரும் நானும் இணைந்து அவருடைய விண்ணப்பத்தினைப் பூர்த்தி செய்தோம். விண்ணப்பத்தில் அரசு ஆடவர் கல்லூரி என்றிருந்தது. அப்போது அவர் இனி நான் ஆடவர் என்று கூறி சிரித்துக்கொண்டே பூர்த்தி செய்தது இன்னும் நினைவிருக்கிறது. (கல்லூரி தொடங்கி நடைபெற்றுக்கொண்டிருந்த நேரத்தில், படிப்பின்மீதான அதீத ஆர்வம் காரணாக, வீட்டிற்குத் தெரியாமல் நான் விண்ணப்பித்து  அதே கல்லூரியில் சேர்ந்தது தனிக்கதை).

கல்லூரியில் புகுமுக (பி.யு.சி.)  வகுப்பில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு பாடத்தில் சேர்ந்தோம். நான், செல்வம், பதினாறுகட்டு ராஜசேகரன், பேட்டை பொன்னையா, கும்பேஸ்வரர் திருமஞ்சன வீதி மதியழகன், சிங்காரம் செட்டித்தெரு மோகன் என்று ஒரு பட்டியலே நீளும். பள்ளிக்குப் பின் பள்ளி நண்பர்களான நாங்கள் கல்லூரி நண்பர்களாகி படித்தது பி.யு.சி. மட்டுமே.

அப்போது பாபி (Bobby) என்ற இந்தித் திரைப்படம் வந்த காலகட்டம். செல்வம் ஆர்வத்தோடு அப்போது பிரபல்யமான பாபி காலரை வைத்து சட்டை அணிந்தது இன்னும் நினைவில் உள்ளது. அவரைப் பார்த்து இன்னும் சில நண்பர்கள் பாபி காலருடன் சட்டை போட ஆரம்பித்தனர். எங்கள் அனைவருக்கும் பொது ஒற்றுமை அதிகமாக முடி வளர்த்திருந்தோம்.          

அப்போது காவிரியாற்றுக்கு செல்வம், பாஸ்கரன், நாகராஜன் உள்ளிட்ட நண்பர்கள் நீந்தச் செல்வார்கள். எனக்கும் ஆசை வந்து நீந்தச் சென்றேன். பாஸ்கரனும் பிற நண்பர்களும் எனக்கு நீந்த கற்றுத் தர ஆரம்பித்தனர். நான் ஆற்றுக்குச் செல்வது வீட்டிற்குத் தெரிந்துவிட எங்கள் தாத்தா ஆற்றில் சென்று நான் மூழ்விவிடுவேனோ என்ற பயத்தில் ஆற்றுப்பக்கமே போகக்கூடாது என்று தடை விதித்துவிட்டார்.

கல்லூரிக்காலத்தில், சுமார் 10 பேராக, நாங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து பார்த்த ஒரே படம் பாலசந்தரின் அபூர்வ ராகங்கள். அப்போது நூர் மஹால் (பின்னர் செல்வம் தியேட்டர் என்றானது) தியேட்டரில் ஓடிய திரைப்படத்தை அனைவரும் ஒன்றாகச் சேர்ந்து பார்த்தோம். அதற்கு முன்னரோ பின்னரோ இவ்வளவு பேராகச் சேர்ந்து நாங்கள் படம் பார்த்ததில்லை. அந்த வகையில் இந்த திரைப்படத்தை நாங்கள் அடிக்கடி நினைவுகூர்வதுண்டு.

பி.யு.சி.யில் நான் மட்டுமே தேர்ச்சி பெற இளங்கலை பொருளாதாரத்தில் சேர்ந்து நிறைவு செய்தேன். அக்காலகட்டத்தில் நண்பர்கள் அனைவரும் திசைக்கு ஒருவராகப் பிரிந்தோம். இருந்தாலும் எங்களின் நட்பானது தொடர்ந்து கொண்டேயிருந்தது, தொடர்ந்துகொண்டேயிருக்கிறது. அவருடைய இளைய மகன் பாலாவிடம் தொலைபேசியில் பேசியபோது, “மாமா, எப்போது கும்பகோணம் வந்தாலும் அப்பாவைக் காண வருவீர்கள். இனியும் எப்போது கும்பகோணம் வந்தாலும் வழக்கம்போல நீங்கள் எங்கள் வீட்டிற்கு வந்துகொண்டேயிருங்கள்” என்று என்னிடம் பேசியது எங்கள் நண்பன் இன்னும் ஆத்மார்த்தமாக எங்களோடு இருக்கிறான் என்ற எண்ணத்தைத் தந்தது.  

(இ-வ) பாஸ்கரன், ஜம்புலிங்கம், ராஜசேகரன், செல்வம், ராஜசேகர்  
(இ-வ) ஜம்புலிங்கம், நாகராஜன், ராஜசேகரன், செல்வம் 

அண்மையில் எங்களைவிட்டுப் பிரிந்த கும்பகோணம் நண்பர் அன்பழகன். கும்பகோணம் செல்லும்போதெல்லாம் எப்படியாவது நாங்கள் சந்திக்கின்ற வாய்ப்பு கிடைத்துவிடும். பேசும் சில நிமிடங்களில் குடும்பம், நண்பர்களைப் பற்றி நாங்கள் இருவரும் பேசிக்கொள்வோம். கும்பகோணம் நட்புகள் எங்களை விட்டுப்பிரிவது 
பெரும் துயரைத் தருகிறது.   

12 September 2020

ஆங்கில விக்கிப்பீடியா : 300 பதிவுகள்

ஆங்கில விக்கிப்பீடியாவில் அண்மையில் 300 பதிவுகளை நிறைவு செய்துள்ளேன். 2015இல் எழுத ஆரம்பித்து 2019 வரை ஐந்து ஆண்டுகளில் 134 பதிவுகளையும், 2020இல் சுமார் எட்டு மாதங்களில் 166 பதிவுகளையும் எழுதியுள்ளேன். இதில் விக்கிப்பீடியா இந்தியா/10,000 கட்டுரைக்கான சவால் (WikiProject India/The 10,000 Challenge)இல் கலந்துகொண்டு எழுதிய 70 பதிவுகளும் அடங்கும். இவற்றில் பெரும்பாலானவை பாடல் பெற்ற தலங்கள், வைப்புத்தலங்கள் மற்றும் புதுக்கோட்டை மாவட்டக் கோயில்கள் ஆகும். 



பல நண்பர்களும், ஆய்வாளர்களும் தமிழில் உள்ள பல கட்டுரைகள் ஆங்கிலத்தில் இருப்பதில்லை என்றும் கூறியதன் அடிப்படையில் தற்போது தமிழ் விக்கிப்பீடியாவில் ஒரு புதிய பதிவினைப் பதியும்போதே அதனை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து ஆங்கில விக்கிப்பீடியாவில் எழுத ஆரம்பித்துள்ளேன். அத்துடன் ஆரம்பத்தில் நான் தமிழில் எழுதியவற்றையும் மொழிபெயர்த்து எழுதுகிறேன்.

தற்போது நேரடியாக மொழிபெயர்ப்பு கட்டுரைகளை எழுதி வருகிறேன். இவற்றை எழுதும்போது மொழிபெயர்ப்பிற்கு கூகுளை பயன்படுத்தவில்லை. நேரடியாக மொழிபெயர்க்கும்போது ஆங்கிலத்தில் ஆங்காங்கே சில பிழைகள் இருந்தாலும், மொழிபெயர்ப்பு மற்றும் நினைவாற்றலை மேம்படுத்த இந்த உத்தி உதவுவதை உணர்கிறேன். நேரடி மொழிபெயர்ப்பில் தட்டச்சு செய்துவரும்போதே ஒரு குறிப்பிட்ட தமிழ்ச்சொல்லுக்கான ஆங்கிலச் சொல் இயல்பாக தட்டச்சிடும் அளவிற்கு அமைந்துவிடுகிறது. முழுமையாகத் தெரியாத சொல்லுக்கான பொருளைத் தேட அகராதிகளைப் பயன்படுத்துகிறேன்.   

வலங்கைமான்மாரியம்மன் கோயில், தஞ்சாவூர் உஜ்ஜயினி மாகாளியம்மன், உவரி சுயம்புலிங்கசுவாமி கோயில், கும்பகோணம், தஞ்சாவூர், தீபங்குடியிலுள்ள சமணக்கோயில்கள், பட்டீஸ்வரம் துர்க்கையம்மன்கோயில், கும்பகோணம் மௌனசுவாமி மடம், மகாமகக்குளக்கரையில் உள்ள சோடச லிங்க மண்டபங்கள், நவபுலியூர் கோயில்கள் உள்ளிட்ட கோயில்களைப் பற்றியும்,  பிற தலைப்புகளாக மணப்பாறை முருக்கு, தஞ்சாவூர் பீரங்கி, கும்பேஸ்வரர் கோயிலிலுள்ள கல் நாதஸ்வரம், செங்கமேட்டில் உள்ள கலிங்கச்சிற்பங்கள், கும்பகோணம் பொற்றாமரைக்குளம், கானாடுகாத்தான்அரண்மனை உள்ளிட்ட பதிவுகளைத் தொடங்கியுள்ளேன். 





விழா என்ற வகையில் 100 ஆண்டுகளுக்குப் பின்னர் தஞ்சாவூரில் நடைபெற்ற தேரோட்டம் தொடர்பான நிகழ்வுகளுக்கு நேரில் சென்று தமிழில் ஆரம்பித்த கட்டுரையின் அடிப்படையில்  தஞ்சாவூர்பெரிய கோயில் தேரோட்டம் என்ற பதிவினைத் தொடங்கினேன்.

மகாமகத்தின்போது தீர்த்தவாரியில் மகாமகக்குளம், பொற்றாமரைக்குளம், காவிரியாறு, சைவ மற்றும் வைணவக் கோயில்களுக்குச் சென்று படமெடுத்து முன்னர் என்னால் ஆரம்பிக்கப்பட் 2016 மகாமகம் கட்டுரையில் இணைத்தேன். 



பெரும்பாலும் தமிழ் விக்கிப்பீடியாவில் உள்ள கட்டுரைகளில் அமைந்துள்ளவாறே கட்டுரைகளுக்கான பக்கத்தலைப்புகளை அமைத்துக் கொண்டேன். அந்தந்த பதிவுகளுக்கான தமிழ்க் கட்டுரைகளை ஆங்கில விக்கிப்பீடியாவின் முகப்புப்பக்கத்தில் கீழ்ப்பகுதியில் (Languages: தமிழ்) என்பதையும், ஆங்கிலக் கட்டுரைகளை தமிழ் விக்கிப்பீடியாவின் முகப்புப்பக்கத்தின் கீழ்ப்பகுதியில் (மற்ற மொழிகளில்: English) என்பதையும் சொடுக்கி வாசிக்கலாம்.


தமிழ் விக்கிப்பீடியாவில் பெற்ற அனுபவத்தைப் போலவே, சக ஆங்கில விக்கிப்பீடியர் கூறும் கருத்தின் அடிப்படையில் உரிய திருத்தங்களை மேற்கொண்டு, பதிவுகளை மேம்படுத்துகிறேன். அவ்வாறு கருத்து கூறுவோர் பல நாடுகளைச் சேர்ந்தவர்களாக உள்ளனர். அவர்களின் ஒத்துழைப்பு நான் மென்மேலும் எழுத மிகவும் உதவுகிறது. குறிப்பிட்ட நிலை தொடர்பாக இயலாமையினைக் கூறும்போது அவர்கள் உரிய கருத்தினைக் கூறி, கட்டுரை சிறப்பாக அமைய உதவுகின்றார்கள். "ஆங்கிலத்தில் இணைப்புகள் அவசியம்", "இன்னும் மேம்படுத்தவேண்டும்", "தலைப்பிற்கேற்ற கருப்பொருளில் பதிவு அமையவில்லை", "ஆதாரமாக ஒரே இணைப்பு மட்டுமே உள்ளது", "தரப்பட்டுள்ள ஆதாரம் ஏற்கத்தக்கதாக இல்லை" என்றவாறு கருத்துகளை அவர்கள் கூறும்போது முடிந்தவரை என்னால் இயன்ற மறுமொழியினைக் கூறி, பதிவினை மேம்படுத்த முயற்சிக்கிறேன். உரிய இணைப்புகள் ஆங்கிலத்தில் கிடைக்க இயலா நிலையில் தமிழில் உள்ள இணைப்புகளைப் பயன்படுத்துகிறேன்.

சில கட்டுரைகளை எழுதும்போது அது தனித்த கட்டுரை (Orphan) என்ற அளவில் சக விக்கிப்பீடியர் கூறுகின்றனர். மாற்று வழியாக வார்ப்புருவினை (Template) அமைக்கும்படி அவர்கள் கூறவே, புதுக்கோட்டை மாவட்டக் கோயில்கள் என்ற தலைப்பில் ஒரு வார்ப்புருவினை உருவாக்கி, புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கட்டுரைகளை இணைத்து, தனித்த கட்டுரை என்ற குறிப்பினை நீக்கினேன். தமிழில் சப்தஸ்தானம் (ஆகஸ்டு 2014), மகாமகம் தீர்த்தவாரி கோயில்கள் (அக்டோபர் 2015), தஞ்சாவூர் கோயில்கள் (ஏப்ரல் 2016), இந்தியாவில் புஷ்கரங்கள் (ஆகஸ்டு 2017), புதுக்கோட்டை மாவட்ட கோயில்கள் (ஆகஸ்டு 2020) என்ற தலைப்புகளில் வார்ப்புருக்களை உருவாக்கிய அடிப்படையில் ஆங்கிலத்தில் புதுக்கோட்டை மாவட்ட கோயில்களுக்காக முதன்முதலாக வார்ப்புரு உருவாக்கப்பட்டது. 

ஆங்கில விக்கிப்பீடியாவில் இதுவரை இரு கட்டுரைகள் நீக்கப்பட்டிருந்தன. பிரகதீஸ்வரர் கோயில் தேர்த்திருவிழா என்ற முதல் ஆங்கில கட்டுரை மே 2015இல் நீக்கப்பட்டது (deleted). அண்மையில் உரிய மேற்கோள்களைத் தந்து, செறிவுபடுத்தி தஞ்சாவூர் தேர்த்திருவிழா என்ற தலைப்பில் புதிய பதிவினை ஆரம்பித்தேன். தேரோட்டத்தில் கலந்துகொண்டு நேரில் எடுத்த புகைப்படங்களை பதிவில் இணைத்தேன். மற்றொரு நீக்கப்பட்ட கட்டுரையான திருநீலக்குடி நீலகண்டேஸ்வரர் கோயில் பதிவானது சீர் செய்யப்பட்டு (Recreated) மறுபடியும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.  

தமிழ் விக்கிப்பீடியாவில் இல்லாததே இல்லை என்ற இலக்கினை முன்வைத்து எழுத ஆரம்பித்து தமிழ்நாடு தொடர்பாகவும், பிற தலைப்புகளையும் தமிழில் எழுதத் தொடங்கி, அவ்வாறு எழுதியனவற்றில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு எண்ணிக்கையிலான கட்டுரைகளை ஆங்கிலத்தில் எழுதியது மறக்க முடியாத அனுபவம் ஆகும். தமிழர் அல்லாதோரும், தமிழ் மொழி அறிந்திராதோரும் நம் பெருமையை அறியும் வகையில் மேற்கொள்ளப்படுகின்ற இந்த முயற்சி தொடரும், உங்கள் அனைவரின் வாழ்த்துக்களுடனும், சக ஆங்கில விக்கிப்பீடியரின் ஒத்துழைப்புடனும்.

கீழ்க்கண்ட இணைப்புகளில், நான் ஆரம்பித்த கட்டுரைகளைக் காணலாம்.

ஆங்கில விக்கிப்பீடியாவில் இதுவரை ஆரம்பித்த கட்டுரைகள்

தமிழ் விக்கிப்பீடியாவில் இதுவரை ஆரம்பித்த கட்டுரைகள்

01 September 2020

அவள் விகடன் நேர்காணல்

எங்களின் திருமண நாளான இன்று (1 செப்டம்பர் 2020), அவள் விகடன் இதழில் மகளிர் தினத்தையொட்டி வெளியான என்னுடைய கருத்தினைப் பகிர்வதில் மகிழ்கிறேன், அவ்விதழுக்கு நன்றியுடன்.


தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் சுமார் 35 ஆண்டுகள் பணியாற்றி பணி நிறைவு பெற்றுள்ளேன். பணிக்காலம் தொடங்கி பணி ஓய்வு பெற்ற காலம் வரை பல சூழல்களை எதிர்கொண்டு வந்துள்ளேன். குடும்ப வாழ்க்கையில் திட்டமிடல் என்பதை முக்கியமானதாகக் கருதி வருகிறேன். அதற்குக் காரணம், என்னை வளர்த்த என் அத்தை கூறியதே. அவர், “இப்படித்தான் வாழ வேண்டும் என்று உள்ளது, எப்படியும் வாழலாம் என்றும் உள்ளது. இதில் இப்படித்தான் வாழ வேண்டும் என்று வாழ்பவர்கள் சற்றே சிரமப்படுவார்கள்” என்பார். இருந்தாலும் அதை ஒரு அடிப்படையாக எடுத்துக்கொண்டேன். அப்போது என்னால் மிகவும் இயல்பாக இருக்க முடிந்தது. பள்ளி, கல்லூரி, படிப்பு என்ற ஒவ்வொரு நிலையிலும் அவர்களுடைய அந்த உத்தியானது என்னை நெறிப்படுத்தியது.

அடுத்தபடியாக என்னுடைய வாழ்க்கையில் மிகவும் முக்கியமான இடத்தைப் பெறுபவர் என்னுடைய மனைவி. வளரும்போது நம் பெற்றோர், அத்தை என்ற நிலையில் இருந்து வளர்த்தார்கள். திருமணத்திற்குப் பின் மனைவியின் பங்களிப்பு மிகவும் அதிகம் என்பதை அறிகிறேன். சற்று நான் அதிகமாகக் கோபப்படுவேன். அவ்வாறு கோபப்படும்போது, “அவ்வளவு கோபப்பட்டால் அனைத்தும் கெட்டுவிடும், கொஞ்சம் நிதானமாக இருக்கவேண்டும்” என்று கூறுவார். என்னுடைய மனைவி பெரிய குடும்பத்திலிருந்து வந்தவர். அதனால் குடும்பத்தில் காணப்படுகின்ற ஏற்ற இறக்கங்களை அறிவார். சற்று நேர்மாறாக, என் குடும்ப சூழல் வேறு என்ற நிலையில் வளர்ந்த காலகட்டத்தில் பல சிரமங்களை எதிர்கொண்டேன்.

படித்துக்கொண்டிருக்கும் காலத்தில் என் நண்பரின் சகோதரி சொல்லுவார், “நீ படித்துக் கொண்டிருக்கும்போதே உனக்கென்று பணம் சேர்த்துக்கொள்.  அப்பொழுதுதான் பின்னர் நீ வேலைக்குப் போகும்போது உதவியாக இருக்கும்.” எனக்கு அவர் சொன்ன வார்த்தைகள் எப்பொழுதும் என் மனதில் இருக்கும். இன்றுகூட நான் பணம் சிறிது சேகரித்து வைத்திருக்கிறேன், பணத்தில் சிறிது எச்சரிக்கையாக இருக்கிறேன் என்று சொன்னால் அதற்குக் காரணம் அவர் அப்போது கூறிய கருத்துதான்.

என் சகோதரியைப் போலவே, என் அத்தையைப் போலவே என் மனைவி எங்கெங்கெல்லாம் நான் கொஞ்சம்  தடம் மாறும்போது “இப்படிச் செய்வதைவிட அப்படிச் செய்யலாம்” என்று கூறுவார். அதனால் பிறருடைய கோபத்திற்கு ஆளாகாமலும், வாழ்க்கையில் சீராக நடத்தவும் முடிந்தது. கோபத்தை விடுத்து வாழ்க்கையில் இயல்பாக நடந்துகொள்வது அவசியம் என்பதை உணர்த்துவார். நாம் சாதிக்க வேண்டியது என்ன? என்பதைச் சிந்தித்து அதனை இலக்காக வைத்துப் பயணிக்க அவர் எனக்குத் துணையாக இருக்கிறார்.

விளையாடிக்கொண்டிருந்த காலத்தில், படித்துக்கொண்டிருந்த காலத்தில் நல்லாப் படி, சரியா நேரத்தை செலவு செய் என்று சொன்ன அக்கா, நம் மனதில் ஆரம்பத்தில் விதையை விதைத்த அத்தை, இப்பொழுது தொடர்ந்து இப்படி இருந்தால்தான் வாழ்க்கையை நல்லபடியாக நடத்தலாம் என்று சொல்கின்ற, வழிகாட்டலுக்கு முக்கியமாக உள்ள, என்னுடைய மனைவி. இவர்களெல்லாம் என்னுடைய வாழ்க்கையில் முக்கியமான பங்கை ஆற்றியிருக்கிறார்கள் என்று நான் நினைக்கிறேன்.  

இவர்களெல்லாம் இல்லாவிட்டால் நான் இந்த அளவிற்கு நான் வந்திருக்கமுடியாது. 1000க்கும் மேற்பட்ட கட்டுரைகள், ஏழு நூல்கள், 30 சிலை கண்டுபிடிப்புகள் என்ற அளவில் தமிழகத்தில் முக்கியமான நிலைக்கு வந்ததற்குக் காரணம் என் சகோதரி, என் அத்தை, என் மனைவி. இவர்கள் கூறிய கருத்து மிகவும் சிறியதாக இருக்கும். ஆனால் இளம் வயதில் எனக்கு ஆழமாகப் பதிந்துவிட்டது. அந்த ஓர் ஆழமான பதிவுதான் என்னை நல்ல நிலைக்கு அழைத்துச் செல்கிறது. இந்த நிலையில்தான் மற்றவர்களுக்கு நாம் உதாரணமாக இருக்க முடிகிறது. அலுவலகம் செல்வதாக இருக்கட்டும், ஆய்வுப்பணியாக இருக்கட்டும், எழுத்துப்பணியாக இருக்கட்டும், என் மனைவி என் அத்தையையும், என் நண்பரின் சகோதரியையும் தாண்டி இன்னும் கைகொடுத்துக் கொண்டு வருகிறார். அதனால்தான் வாழ்க்கையில் வெற்றி என்ற தளத்தின் இலக்கை நோக்கி இன்னும் நான் செல்கிறேன். எங்களுடைய குடும்பம் சீரான நிலையில், பணக் கஷ்டமின்றி, சிக்கனத்தைக் கடைபிடித்து ஒரு முன்னுதாரணமாக சென்றுகொண்டிருக்கிறோம். இந்த நிலையில் என் மனைவியை நான் நன்றியோடு நினைவுகூர்கிறேன்.  என் அத்தையையும் நினைவுகூர்கிறேன். இந்த இனிய நாளில் அனைவருக்கும் மகளிர் தின வாழ்த்துகளைத் தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன். நன்றி.

என் மனைவி ஜ.பாக்கியவதி எழுதியுள்ள நூல் கோயில் உலா