26 October 2021

சத்யஜித்ரே நூற்றாண்டு நினைவு சிறப்பிதழ் : ப்ரண்ட்லைன்

ப்ரண்ட்லைன் சத்யஜித்ரே சிறப்பிதழை (The World of Ray, Frontline, A CommemorativeIssue, November 5, 2021) நேற்று காலை அஞ்சல்வழியாகப் பெற்றேன். 132 பக்கங்கள் கொண்ட இதழை நேற்று படிக்க ஆரம்பித்து சுமார் மூன்று அமர்வில் எட்டு மணி நேரத்தில் இன்று மதியத்திற்குள் முழுமையாகப் படித்துவிட்டேன். வழக்கமாக சிறப்பிதழுக்குத் தருகின்ற முக்கியத்துவத்தோடு இவ்விதழ் தயாரிக்கப்பட்டதைக் காணமுடிந்தது.அட்டைப்படம் தொடங்கி அனைத்துப்பக்கங்களும் ரசனையோடு அமைக்கப்பட்டுள்ளது இதன் சிறப்பாகும். இதழாசிரியர் இதழ் உருவாக மேற்கொண்ட முயற்சிகளைச் சுருக்கமாகக் கூறியுள்ளார். ஓர் இமாலய முயற்சியை சிறப்பாக நிறைவேற்றியுள்ள அவர்களுக்கு முதல் பாராட்டு. பொருளடக்கப் பக்கத்தில் சிகப்பு வண்ணத்தில் தலைப்பு, தொடர்பான புகைப்படம், கட்டுரையின் செறிவான தேர்ந்தெடுக்கப்பட்ட வரிகள், கட்டுரையாளர்/பேட்டியாளரின் பெயர், பக்க எண் தரப்பட்ட விதம் மிகவும் அருமை. சில முழுப்பக்க புகைப்படங்களைப் (பக்.6, 7, 8, 33, 68, 72-73, 130) பார்த்துக்கொண்டே இருக்கலாம். ஒவ்வொரு கட்டுரைக்கும் பெரிய எழுத்தில் கட்டுரையின் பொருண்மையை உணர்த்தும் வகையில் தரப்பட்டுள்ள நடுவில் அமைக்கப்பட்டுள்ள தலைப்பு, தேவைப்படும் இடங்களில் ஒற்றை மேற்கோளுடன் தலைப்பு, தொடர்ந்து அதன்கீழ் உட்தலைப்பாக சில சொற்களில் கட்டுரையின் சுருக்கம், முற்றிலும் வாசகருடைய படிப்பின் ஆர்வத்தை மிகுவிக்கும் வகையில் பெரிய எழுத்தில் கட்டுரையின் முதல் வரி, பேட்டிகளில் கேள்விகள் தடித்த எழுத்திலும் பதில்கள் சாதாரண எழுத்திலும் தந்துள்ள விதம் என்ற வகையில் எந்த அளவிற்கு கவனம் செலுத்தப்பட்டுள்ளது என்பதை அறியமுடிகிறது. கட்டுரையின் உள்ளே ஆங்காங்கே தரப்பட்டுள்ள பெட்டிச்செய்திகள், அதற்கான புகைப்படங்கள், அவற்றுக்காக தனியாக எழுத்துரு மிகவும் நல்ல உத்தி. வாசிப்பில் அயற்சி தராமல் இருப்பதற்காக சில பதிவுகள் நீல நிறப் பின்புலத்தில் அமைக்கப்பட்டுள்ள விதம் அருமை.

இத்தகைய பின்புலத்தில் அமைந்துள்ள இதழுக்கு உரிய செய்திகளையும், புகைப்படங்களையும் திரட்ட ஆசிரியர் குழுவினர் மேற்கொண்ட முயற்சி பெரிதும் போற்றத்தக்கது. இதழாசிரியர் கூறியதைப் போல உரிய நேரத்தில் ஆண்ட்ரியூ ராபின்சனின் தொடர்பு ஒரு முக்கியமான இடத்தைப் பெறுகிறது. பல்துறைச் சார்ந்தோருடைய நினைவலைகள் ஒவ்வொரு கண்ணோட்டத்தில் உள்ளதை அவருக்கு சூட்டப்பட்ட புகழாரங்கள் உணர்த்துகின்றன.

“சத்யஜித்ரேயின் திரைப்படங்கள் அரிய கருவூலங்கள். திரைப்பட ஆர்வலர்கள் அவற்றை அவசியம் பார்க்க வேண்டும்….ரேயின் சிறந்த திரைப்படங்களை ஒவ்வொரு முறை பார்க்கும்போதும் அவை புதிய பரிமாணங்களைத் தருகின்றன” (ஆண்ட்ரியூ ராபின்சன், ப.9),

“இரு நிலைகளும் எனக்கு ஒன்றுதான். பல மணி நேரங்கள் என்னால் பேசாமல் இருக்கமுடியும். அவ்வாறே ஒரே சமயத்தில் தொடர்ந்து 17-18 மணி நேரங்கள் பணியாற்றவும் முடியும்.” (ஆண்ட்ரியூ ராபின்சன் பேட்டி, ப.22),

“இத்துணைக்கண்டத்தின் பண்பாட்டு உலகில் ரே முக்கியமான இடத்தைப் பெறுகிறார். நூற்றாண்டின் ஆரம்பக்காலக்கட்டத்தில் ரவீந்திரநாத் தாகூரைத் தவிர வேறு எவரும் தேசிய அளவிலும், உலகளவிலும் அத்தகைய பெருமையைப் பெறவில்லை.” (மிகிர் பட்டாச்சார்யா, ப.26),

இந்திய சினிமாவில் பன்முகத்திறன் கொண்டவர் ரே…ரசிகர்களை இழுக்கவேண்டும் என்பதற்காக அவர் தன் கொள்கையை சமரசம் செய்துகொள்ளவில்லை… ஒவ்வொன்றிலும் முழுக்கவனமும் செலுத்துவார். (ஆடூர் கோபாலகிருஷ்ணன் பேட்டி, ப.29),

வங்காள சினிமாவில் வண்ணத்திரைப்படங்கள் அரிதாக இருந்த காலகட்டத்தில் ஒரு வண்ணப்படத்தை எடுத்து, அதற்கான காரணத்தையும் அவர் கூறினார். (மோய்நக் பிஸ்வாஸ், ப.32),

“அவருக்கு வந்த கடிதங்களுக்கு அவரே மறுமொழி எழுதுவார். அப்போது வருகின்ற கடிதங்கள் மறுமொழி அட்டையுடனே வரும். அதில் அவர் பதில் எழுதி அனுப்புவார்.” (சந்திப் ரே பேட்டி, ப.37),

“அவர் தனிமையிலே இருப்பார், அவரை நெருங்கமுடியாது என்று பலர் கூறக்கேட்டிருக்கிறேன். ஆனால் அப்படியல்ல…அவர் வீட்டு வாசலில் உள்ள அழைப்பு மணியை அடித்துவிட்டு அவரைச் சந்திக்கலாம்.” (கௌதம் கோஷ், ப.53),

“ரே ஒரு அதீத வாசகர். அவருடைய இலக்கிய ஆர்வம் பன்முகத்தன்மையுடையது. உடல் நலன் குன்றியபோது, செயலாற்ற முடியாத நிலையில், அவருக்குப் படிக்க அதிக நேரம் கிடைத்தது..” (தீர்த்திமன் சட்டர்ஜி, ப.74),

“அவர் மிகவும் அரிதாக அரசியல் தொடர்பான அறிக்கைகளை வெளியிடுவார். இருந்தபோதிலும் தன் நிலைப்பாட்டினை திரைப்படத்தில் காட்சிகளிலும், வசனங்களிலும் தெளிவாகக் கொணர்ந்துவிடுவார்.” (சுக்ரித் சங்கர் சட்டோபாத்யாய், ப.77),

“ரே ஒரு நூலை வாசிக்க ஆரம்பித்தால் அவருடைய மனதில் கதாபாத்திரங்கள் இயல்பாகத் தோன்ற ஆரம்பித்துவிடும்..” (பரூன் சந்தா, ப.83),

“மாணிக்டா (சத்யஜித் ரே) காட்சிகளைப் பற்றியும், அவை எடுக்கப்படவேண்டிய முறை பற்றியும் மிகவும் தெளிவாக இருப்பார். அவருடைய இலக்கிற்கு வடிவம் கொடுப்பதில் எங்களுக்கு எவ்விதச் சிக்கலும் இருந்ததில்லை.” (ஷர்மிளா தாகூர் பேட்டி, ப.89),

“அவர் எங்களை கதாபாத்திரமாக முற்றிலும் மாற்றிவிடுவார்” (அபர்னா சென் பேட்டி, ப.103),

“சினிமா சத்யஜித்ரேக்கு முன், சத்யஜித்ரேக்குப் பின் –ச.மு., ச.பி.,-. என்ற வகையில் அமையும்.” (ஷ்யாம் பெனேகல் பேட்டி, ப.109),

“அவர் யாரையும் குறை கூறியதில்லை.” (ரகுராய் பேட்டி, ப.122),

சத்யஜித்ரே இயற்கையெய்திய பின்னர் ஒரு காலகட்டத்தில் பிரண்ட்லைன் இதழ் மறுவடிவாக்கம் பெறப்பட்டபோது அவ்விதழில் “ரே உயிரோடிருந்திருந்தால் இந்த வடிவத்தை ரசித்திருப்பார்” என்று வாசித்த நினைவு. அதே கருத்து இச் சிறப்பிதழுக்கும் நூற்றுக்கு நூறு பொருந்தியிருக்கும் என நினைக்கிறேன்.

இவ்விதழின் அனைத்து சிறப்பிதழ்களையும் வாசித்த வாசகன் என்ற நிலையில் இதுவரை வந்த இதழ்களில் இது சிறப்பிடத்தைப் பெறுகிறது என்பதைப் பகிர்வதில் மகிழ்கிறேன். பாராட்டுகள், ப்ரண்ட்லைன் ஆசிரியருக்கும், குழுவினருக்கும்.

27 ஆகஸ்டு 2022இல் மேம்படுத்தப்பட்டது

13 October 2021

மனதில் பதிந்த நினைவுகள் : நவராத்திரி

ஒவ்வொரு நவராத்தியின்போதும் கொலுவின் முதல் நாள் முதல் நிறைவு நாள் வரை முழு ஈடுபாட்டுடன் இருப்பார் எங்கள் அத்தை திருமதி இந்திரா. கும்பகோணத்தில் எங்கள் வீட்டில் அழகாக கொலு அமைந்ததற்குக் காரணம் அவரே. எங்கள் வீட்டில் பெரிய பொம்மைகள் அதிகமாக இருக்கும்.  
கும்பேஸ்வரர் கோயில் கடைகளில் உள்ள கொலு அலங்காரத் தொகுப்பு, 2018 நவராத்திரி 

ஒவ்வொரு படியின் இரு ஓரங்களிலும் உரிய பொம்மைகளை வைத்தல், அதன் அளவிற்கும், வண்ணத்திற்கும் தகுந்தபடி அடுக்குதல், கண்களுக்கு எளிதாகத் தெரியும்படி பெரிய பொம்மை, சிறிய பொம்மை என்று அமைத்தல், தசாவதாரம் போன்றவற்றை அந்தந்த வரிசைக்கிரமப்படி வைத்தல், முதல் படி முதல் கடைசிப்படி வரை ஒவ்வொரு படியிலும் சரியாக அமைத்தல் என்றவாறு நுணுக்கமாகச் செய்வார். 

வீட்டில் இல்லாத கொலுப்பொம்மைகளை வாங்கிச் சேர்த்தல் என்ற வகையில்  எனக்கு நினைவு தெரிந்து சேர்ந்த பொம்மைகளில் சிவனும் நந்தியம்பெருமானும், திருமண செட், தசாவதாரம், ராமர் பட்டாபிஷேகம், பொய்க்கால்க்குதிரை, காஞ்சி காமாட்சி, மதுரை மீனாட்சி போன்றவை அடங்கும். ஒவ்வோராண்டும் வாங்கிச் சேர்க்கச் சேர்க்க எங்கள் வீட்டில் கொலு பொம்மைகள் அதிகமாயின. உடையும் பொம்மைகளுக்குப் பதிலாக புதிய பொம்மைகளை எங்கள் வீட்டிற்கு அருகிலுள்ள கும்பேஸ்வரர் கோயிலில் உள்ள கொலுக்கடைகளில் வாங்கி வைத்துவிடுவார். 

கொலுவின்போது பலர் தலையில் கூடையில் பொம்மைகளை விற்றுக்கொண்டுவருவர். அவர்களிடமும் அவர் பொம்மை வாங்கிய நினைவு உள்ளது. கும்பேஸ்வரர் கோயில் மேலவீதியில் அவருடைய வீட்டில் திண்ணையில் நாங்கள் உட்கார்ந்திருந்தபோது ஒருவர் கொலு பொம்மைகளை விற்றுக்கொண்டு சென்றார். அவரை அழைத்தார். கூடையை இறக்க நான் உதவினேன். ராமர், சீதை, லட்சுமணர் நின்ற நிலையிலும் அனுமார் அமர்ந்த நிலையிலும் இருந்த பொம்மைகள் அவரை அதிகம் ஈர்த்தன. எங்கள் வீட்டுக்கொலுவில் இல்லாத அவர் வாங்க ஆசைப்பட்ட பொம்மைகள். ராமர் பொம்மையின்  உயரம் சுமார் ஒன்றரை அடி. மற்ற பொம்மைகள் அடுத்தடுத்து சற்றுச் சிறிதாக இருந்தன. அவற்றை நான்கு ரூபாய்க்கு வாங்கினார். வாங்கும்போது அந்த பொம்மைகளில் அடிக்கப்பட்டுள்ள வண்ணம் சீராக உள்ளதா என்று பார்த்து, ராமர் பச்சை சரியாக உள்ளது என்றார். அப்போதுதான் ராமர் பச்சை என்ற சொல்லை நான் அறிந்தேன்.  அப்போது நான் ஆறாம் வகுப்போ ஏழாம் வகுப்போ படித்தேன். ராமர் பச்சை கலரைக் காணும்போது கொலு வாங்கிய அந்த நாள் நினைவிற்கு வந்துவிடும். 
     
மற்றவர்களின் வீட்டிற்குக் கொலு பார்க்கச் செல்லும்போது எங்கள் வீட்டில் இல்லாத பொம்மைகள் அங்கிருந்தால் அதனைக் கவனித்து வாங்கி வைத்துவிடுவார். எந்த பொம்மைகளும் விடுபடக்கூடாது என்பதில் தெளிவாக இருந்தார். 

ஆரம்பத்தில் கள்ளிப்பெட்டிகளை அடுக்கி, மேலே துணியை விரித்துவைத்து அதில் கொலு பொம்மைகளை வைத்தோம். ஒரு நவராத்திரியின்போது எங்கள் அத்தை ஏழு மரப்படிகளை (ஏழோ, ஒன்பதோ மறந்துவிட்டேன்) இரு புறமும் பக்கப்படிகளுடன் வாங்கிவைத்தார். அதற்குப் பின் கொலுவின் அழகு இன்னும் பிரமிப்பாக இருந்தது.  

எங்கள் பள்ளிக்காலத்தில் நான் எங்கள் அத்தை கொலு வைக்கும் அழகினை ஆர்வத்தோடு பார்த்துள்ளேன். அதில் அவருடைய முழு ரசனையும் ஈடுபாடும் இருக்கும். இப்போதெல்லாம் ஒவ்வொரு நவராத்திரியின்போதும் பொறுமையாக கொலுவினைப்  பார்க்கிறேன். அவர் கூறியபடி சரியாக உள்ளதா என்று பார்க்கிறேன், ரசிக்கிறேன், லயிக்கிறேன். நவராத்திரி கொலுவில் வழிபாடு, நம்பிக்கை, கடவுள் பக்தி ஆகியவற்றுடன் ரசனை இழையோடிருப்பதை உணர்கிறேன். கும்பகோணத்தைவிட்டு நான் வந்தாலும், அவர் எங்களை விட்டுப் பிரிந்தபோதிலும் அவர் காட்டிய ஈடுபாடும், ரசனையும் ஒவ்வொரு கொலுவின்போதும் இயல்பாகவே என் மனதிற்குள் வந்துவிடுகிறது. மூன்று மாமாங்கங்களுக்கு மேலாகியும் மனதில் பதிந்த அந்த இளமைக்கால கொலு நினைவுகளும், ரசனையும் இன்னும் தொடர்கின்றன. 

நவராத்திரி தொடர்பான முந்தைய பதிவுகள் : 

14 அக்டோபர் 2021இல் மேம்படுத்தப்பட்டது.

02 October 2021

எங்கள் இல்லத்தில் காமராஜர்

எங்கள் தாத்தா திரு ரெத்தினசாமி அவர்கள்,  பெருந்தலைவர் காமராஜர் மீது மதிப்பும் மரியாதையும் வைத்திருந்தார். காமராஜர் இறந்த செய்தியைக் கேட்டபோது அவர் அதிர்ச்சியடைந்தது இன்னும் என் நினைவில் உள்ளது. கட்சிக்காரர்களும், உறவினர்களும் கும்பகோணத்தில் எங்கள் வீட்டில் துக்கம் விசாரிப்பதைப் போல எங்கள் தாத்தாவைப் பார்த்துச் சென்றனர். எங்கள் வீட்டில் காமராஜர் உள்ளிட்ட தலைவர்களின் புகைப்படங்கள் இருந்தன. அதன் நினைவாக தஞ்சாவூரில் எங்கள் இல்லத்தில் தலைவர்களின் படங்களை வைத்துள்ளேன். அவர்களைப் பற்றிய உணர்வினையும், நாட்டுப்பற்றையும் இளம் தலைமுறையினரிடையே ஊக்குவிப்பது நம் கடமையென்று கருதுகிறேன். கட்சியுடனான அவருடைய ஈடுபாடு என்னுள் சில தாக்கங்களை உண்டாக்கியது.    

எங்கள் இல்லத்தின் உள்ள காமராஜர், காந்தி படங்கள்

அப்போதைய தேர்தல்
எங்கள் தாத்தா அப்போதைய காங்கிரஸ்காரர். எங்களது வீட்டின் மாடியில் கட்சிக்காரர்கள் சேர்ந்து கூட்டம் போடுவார்கள். அப்போது நாங்கள் அருகில் இருந்து பார்த்துக்கொண்டிருப்போம். தேர்தல் நேரங்களில் சம்பிரதி வைத்தியநாதய்யர் தெருவில் எங்கள் வீடு தொடங்கி, தெருவில் இறுதி வரை காங்கிரஸ் கட்சி பேனர்களைக் கட்டுவார்கள். தேர்தலுக்குப் பின் அந்த பேனர்களை எங்கள் வீட்டு மாடி அறையின் உத்தரத்தில் வைத்துவிடுவார் எங்கள் தாத்தா. எனக்கு நினைவு தெரிந்து அவ்வாறாக ஐந்தாறு பேனர்கள் இருந்தன. வீட்டு வாசலில் கொடிக்கம்பத்தில் கொடி பறந்துகொண்டே இருக்கும். 

வாக்குக் கேட்டது மற்றொரு அனுபவம். வாக்குக் கேட்பதற்காக கையில் கொடியை ஏந்திக்கொண்டு குழாய் போன்ற மைக்கை வைத்து "போடுங்கம்மா ஓட்டு, காளைச்சின்னத்தைப் பாத்து, போடுங்கய்யா ஓட்டு, காளைச்சின்னத்தைப் பாத்து" என்று சொல்லிக்கொண்டே ஓட்டுப்போடக் கேட்டு தெருத் தெருவாகச் செல்வோம். அப்போது ஒன்றுபட்ட காங்கிரஸின் சின்னமாக ரெட்டைக்காளைச்சின்னம் இருந்தது. 1960களின் இறுதி. அப்போது நான் நான்காம் வகுப்போ, ஐந்தாம் வகுப்போ படித்தேன். காங்கிரஸ் பிளவுபட்டு ஸ்தாபன காங்கிரஸ்/பழைய காங்கிரஸ் (ராட்டை நூற்கும் பெண் சின்னம்), இந்திரா காங்கிரஸ் (பசுவும் கன்றும் சின்னம்) என்றானது. காங்கிரஸ் உடைந்தது எங்கள் தாத்தாவுக்கு வருத்தத்தைத் தந்தது. இந்திரா காந்தியின் அபிமானியான அவர் ஸ்தாபன காங்கிரஸின் ஆதரவாளரானார். அதன் சின்னம் ராட்டை நூற்கும் பெண். தொடர்ந்து வந்த  தேர்தலின்போது எங்கள் வீட்டருகில் ராட்டை நூற்கும் பெண்ணின் படத்தை வரைந்து ஓட்டு கேட்டிருந்தார்கள். அந்தந்த கட்சிக்காரர்கள் இவ்வாறாக மாணவர்களை ஓட்டுக் கேட்க அழைத்துச்செல்வதைப் பார்த்திருக்கிறேன்.

பள்ளியில் படித்துக்கொண்டிருந்தபோது நாங்கள் ஓட்டுக் கேட்கச் சென்ற நினைவு உள்ளது. யாராவரு ஒருவர் கட்சியின் சின்னத்தை ஒரு குச்சியில் வைத்திருப்பார். அவர் முன்னே செல்ல மற்றவர்கள் பின் செல்வோம். கூட்டத்தில் உள்ளோர் கட்சியின் கொடியினைக் ஒரு குச்சியில் கட்டிக்கொண்டு வருவர். சம்பிரதி வைத்தியநாதய்யர் அக்கிரகாரத்தில் புறப்பட்டு, மேட்டுத்தெரு, மேல மேட்டுத்தெரு, சிங்காரம் செட்டித்தெரு, நேரமிருந்தால் கும்பேஸ்வரர் கோயில் மேல வீதி மற்றும் வடக்கு வீதிகளில் செல்வோம். அவ்வாறு ஒரு முறை நாங்கள் போகும்போது எங்களுடைய திருமஞ்சனவீதி நடுநிலைப்பள்ளியின் ஏழாம் வகுப்பு ஆசிரியர் (மேல மேட்டுத்தெருவிலிருந்த திரு கோபால்) பார்த்துவிட்டு மறுநாள் பள்ளியில் என்னை வெளுத்து வாங்கியது இன்னும் நினைவில் உள்ளது. அதற்குப் பிறகு தேர்தலுக்காக ஓட்டுக் கேட்டுச் செல்வோருடன் போவதே இல்லை. அரசியல் கட்சிகளைப் பற்றிப் பேசுவதும் இல்லை. 

நவசக்தி, நாத்திகம் இதழ்கள்
எங்கள் வீட்டிற்கு நவசக்தி இதழ் வந்தது எனக்கு நினைவில் இருக்கிறது. அப்போதைய காங்கிரஸ்காரர்கள் அவ்விதழைப் படிப்பதைப் பார்த்துள்ளேன். அதன் முதன்மைச் செய்திகளைப் படித்துக் கூறச் சொல்வார் எங்கள் தாத்தா. போல்ஸ்டார் (போல்ஸ்டார் அல்லது நாத்திகம் என்பது இதழின் பெயர், சரியாக நினைவில்லை) என்ற இதழ் அப்போதே டேப்ளாய்ட் வடிவில் வந்தது இன்னும் நினைவில் உள்ளது. அதன் ஆசிரியர் நாத்திகம் ராமசாமி என்று நினைக்கிறேன். நாத்திகம் இதழின் செய்திக்கான தலைப்புகள் விறுவிறுப்பாக இருப்பதை நான் பார்த்துள்ளேன். ஏதோ ஒரு நிகழ்வினைப் பற்றி குறிப்பிடும்போது நில்லுங்கள், நிமிர்ந்து நில்லுங்கள், சொல்லுங்கள் துணிந்து சொல்லுங்கள் என்ற தலைப்பினைக் கண்டோம். (நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்த சிவந்த மண் வந்த காலகட்டம்). கல்லூரிக்காலத்தில் டேப்ளாய்ட் வடிவில் பிளிட்ஸ் ஆங்கில இதழை ஆர்வமாகப் படிக்க இவ்விதழ் காரணமாக அமைந்தது. 
எங்கள் தங்க ராஜா படத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நவசக்தி இதழுடன்
நன்றி : கோல்டன் சினிமா

அவ்வாறே நவசக்தியில் ஒரு செய்தி (மேலுள்ள ஒளிப்படம்) இன்னும் நினைவில் உள்ளது. அப்பா குடிக்கிறார், அம்மாவை அடிக்கிறார், பள்ளிக்கூடம் போகமுடியவில்லை என்று ஒரு சிறுவன் அழுதுக்கொண்டே கூறுவது தலைப்புச் செய்தியாக அப்போது வந்திருந்தது.  (இதே நாளிதழ் உள்ள காட்சி 1973இல் வெளிவந்த, சிவாஜிகணேசன் நடித்த எங்கள் தங்க ராஜா திரைப்படத்தில் இடம்பெற்றிருக்கும் அக்காட்சியில் பட்டாக்கத்தி பைரவன் விடுதலை என்ற செய்தியைக் கேட்டுக்கொண்டே நாகேஷ் பயந்து ஓடுவார்). சுமார் 50 ஆண்டுகளாக நாளிதழ் படிப்பதற்கு அடித்தளம் அமைத்துத்தந்தது அப்போது நாங்கள் படித்த இந்த நாளிதழ்களே.   

மூர்த்திக்கலையரங்கம்
நான் கும்பேஸ்வரர் திருமஞ்சன வீதி ஆரம்பப்பள்ளியில் படித்துக்கொண்டிருந்தபோது (நான்கு அல்லது ஐந்தாம் வகுப்பாக இருக்கலாம், அறுபதுகளின் இறுதியில்) கும்பகோணம் மூர்த்திக்கலையரங்கில் காமராஜர் கலந்துகொண்ட ஒரு கூட்டத்திற்கு எங்கள் தாத்தா எங்களை அழைத்துச்சென்றார். பெருந்தலைவரை நேரில் பார்த்தபோது எனக்குக் கிடைத்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. எங்கள் தாத்தா அவருடன் பேசிக்கொண்டிருந்ததை மிக அருகில் காணும் வாய்ப்பு கிடைத்தது. மறுநாள் பள்ளியில் அவரை அருகில் பார்த்ததைப் பற்றி பெருமையுடன் பேசிக்கொண்டேயிருந்தேன். ஒழுக்கம், நேர்மை என்பனவற்றை எங்கள் தாத்தா பெருந்தலைவரைப் பற்றியும், பிற தலைவர்களைப் பற்றியும் எடுத்துரைப்பார். சில ஆண்டுகளுக்கு முன்னர் விருதுநகர் சென்றபோது காமராஜர் இல்லம் சென்றேன். அனைவரும் பார்க்கவேண்டிய முக்கியமான இடம். எங்கள் தாத்தாவின் தாக்கம் என்னிடம் இன்னும் இருப்பதை உணர்கிறேன். 

காமராஜரைப் போன்ற பெருந்தலைவரைப் பற்றிய எண்ணங்களும், அவர் வழியிலான கொள்கைகளும் என்றென்றும் வீட்டையும் நாட்டையும் முன்னுக்கு எடுத்துச் செல்லும். 


9 அக்டோபர் 2021இல் மேம்படுத்தப்பட்டது.