28 April 2023

தட்டச்சு ஒரு கலை

தட்டச்சு என்பது ஒரு கலை. தட்டச்சு கற்பது வளரும் தலைமுறையினருக்கு மிகவும் பயனளிக்கும். அதிக வேகம், அதே சமயம் நிதானம் போன்றவற்றை தட்டச்சுப்பயிற்சியில் பெறலாம். புதிய சொற்களைத் தெரிந்துகொள்ள வாய்ப்பு கிடைக்கும். நினைவாற்றல் மேம்படும். மொழியறிவு வளரும். தட்டச்சுத் தேர்வினை எழுதிவிட்டு, கணினியில் தட்டச்சு செய்தால் இன்னும் பல உத்திகளைக் கைக்கொள்ள வாய்ப்பு கிடைக்கும். மாணவர்களும், பணிக்கு விண்ணப்பிப்போரும் தம் தகுதியை மேம்படுத்திக்கொள்ள தட்டச்சுப் பயிற்சியை மேற்கொள்ளலாம். இந்தக் கோடை விடுமுறையை நன்கு பயன்படுத்தும் விதமாக மாணவர்கள் தட்டச்சுப்பயிற்சியில் இப்போதே ஈடுபட ஆரம்பிக்கலாம்.

50 ஆண்டு கால தட்டச்சு இப்போது எனக்குத் தந்த ஓர் அனுபவத்தைப் பகிர்வதில் மகிழ்கிறேன். நான் தட்டச்சு பயின்ற கும்பகோணம் ஈஸ்வரன் தட்டெழுத்துப் பயிற்சி நிலையத்தையும், கும்பகோணம் பாரத் தட்டெழுத்துப் பயிற்சி நிலையத்தையும் நன்றியோடு நினைவுகூர்கிறேன்.

சோழ நாட்டில் பௌத்தம் நூலின் மேலட்டை


2018இல் பாரத் தட்டெழுத்துப்பயிற்சி நிலையத்தில் நிறுவனர் திரு பாஸ்கரன் அவர்களுடன்

அண்மையில் என்னுடைய சோழ நாட்டில் பௌத்தம் நூல் (புது எழுத்து, 2/203, அண்ணா நகர், காவேரிப்பட்டிணம் 635 112, செப்டம்பர் 2022, அலைபேசி: +91 9842647101, +91 6374230985, மின்னஞ்சல் : editorpudhuezuthu@gmail.com) வெளியானது. அந்நூலை ஆங்கிலத்தில் எழுதும் முயற்சியில் எதிர்கொண்ட அனுபவங்களில் ஒன்று தட்டச்சு தொடர்பானது.

ஆங்கில நூலுக்கான முதல் மெய்ப்பினை (ஒரு பகுதி மட்டும்/சுமார் 80 பக்கங்கள்/ஏ4 தாள்) திருத்தும் பணியில் தற்போது ஈடுபட்டுள்ளேன். இதனை மொழிபெயர்த்துக் கணினித்தட்டச்சு செய்யும்போது நான் கூகுளையோ, ஸ்பெல்செக்கரையோ பயன்படுத்தவேயில்லை. முழுக்க முழுக்க நேரடியாக மொழிபெயர்த்துவருகிறேன். ஐயமேற்படும்போது அகராதிகளைத் துணைகொள்கிறேன். தேவைப்படும் இடங்களில் கூடுதலாகச் செய்தியைச் சேர்க்கிறேன். இவ்வாறாக 80 பக்கங்களின் மெய்ப்புத் திருத்தப்பணியை மேற்கொண்டபோது இரு இடங்களில் மட்டுமே தட்டச்சுப்பிழை (Only two words were found with spelling mistake) இருந்தது. இவ்விரு இடங்களைத் தவிர எங்கும் சொற்பிழை காணப்படவில்லை என்பதை எனக்கு வியப்பினைத் தந்தது. வந்த சொல் பலமுறை வருதல், கூறியது கூறல், சொற்கள் இடம் மாற்றம், சாய்வெழுத்து அமைப்பு, அடிக்கோடுடன் சொல் அமைப்பு, போன்றவற்றில் பல தவறுகளும், விடுபாடுகளும் காணப்பட்டாலும் மிகவும் குறைவான சொற்பிழையே இருந்தது. இதற்குக் காரணம் கடந்த 50 ஆண்டுகளாக நான் ஈடுபட்டுவரும் தட்டச்சுப்பணி அனுபவமே என நினைக்கிறேன்.

1970களின் இடையில் முதன்முதலாக ஆங்கிலத்தட்டச்சு சேர்ந்த காலகட்டத்திலேயே தட்டச்சுத்தேர்வுக்குத் தயாராகும்போது வைக்கப்படுகின்ற வகுப்புத்தேர்வில் பல முறை நான் பிழையே இன்றி தட்டச்சு (Typed matter with NIL mistake) செய்துள்ளேன். நான் தட்டச்சு செய்தவற்றில் எத்தனை பிழைகள் உள்ளன என்பதைக்கூட கூறிவிடுவேன். அப்போதெல்லாம் தட்டச்சு செய்யும்போதே எந்த இடத்தில் தவறு வருகிறது என்பதையும் மனதில் கொண்டு, தட்டச்சு செய்யப்பட்ட தாளில் இவ்வளவு எண்ணிக்கையில் தவறு உள்ளது என்று உறுதியாகக்கூறுவேன். நான் சொல்லுமளவிற்கு தட்டச்சுப்பிழையின் எண்ணிக்கை இருக்கும். அப்பழக்கம் என்னையும் அறியாமல் இன்னும் தொடர்கிறது.

25 April 2023

சென்று வாருங்கள், ராண்டார் கை

தி இந்து ஆங்கில நாளிதழில் நான் தொடர்ந்துவிரும்பி வாசித்த பத்திகளில் ஒன்று ராண்டார் கை எழுதிவந்த திரைப்படம் தொடர்பான மதிப்புரைகள். அப்பதிவுகள் மூலமாக அவருடைய நினைவாற்றலையும், மொழி ஆழத்தையும் அறிந்து வியந்தேன். தொடர்ந்து அடுத்த வாரம் அவருடைய பத்தி எப்பொழுது வெளியாகும், எந்தப் படமாக இருக்கும், எந்த வகையில் எழுதுவார் என்ற எண்ண ஓட்டங்களோடு காத்திருப்பேன். தி இந்து ஆங்கில நாளிதழை தொடர்ந்து 50 வருடங்களாக நான் படித்துவருவதற்குக்காரணம் இவரைப் போன்ற எழுத்தாளர்களின் எழுத்துக்களும் முக்கியக் காரணம். அவருடைய அப்பதிவுகள் மூலமாக பல புதிய ஆங்கிலச்சொற்களைக் கண்டு வியந்ததுண்டு. As there is nobody to compete with him, he is competing with himself (இயக்குநர் பாலசந்தரின் திரைப்படம் பற்றிய ஒரு பதிவில்), The first scene will bring to you to the edge of the seat (பாலசந்தரின் புன்னகை மன்னன் திரைப்படம்), She had been to yonder blue (நடிகை பண்டரிபாய் இறந்தபோது என நினைக்கிறேன்), Reams have been written about him (நாகேஷ் பற்றிய பதிவில்), The title of film is spelt with capital V (referring to violence, வன்முறையை முதன்மையாகக் கொண்ட ஒரு திரைப்படத்திற்கு). இவர் எழுதிய கட்டுரைகளில் ஒரே பதிவில் அதிகமான புதிய வார்த்தைகளை நான் பார்த்தது ஸ்ரீவித்யா இறந்தபோது என நினைக்கிறேன். அதனைப் பல முறை படித்தேன், இவருக்காகவும், ஸ்ரீவித்யாவிற்காகவும்.

கட்டுரை வெளிவரும் நாளன்று ராண்டார் கை எழுதியுள்ள மதிப்புரையை முதலில் படித்துவிட்டு, பின்னர்தான் தி இந்து நாளிதழின் முதன்மைப்பக்கங்களைப் படிக்க ஆரம்பிப்பேன்.நான் பல முறை ரசித்துப் பார்த்த திரைப்படங்களில் ஒன்று பத்து கட்டளைகள்(Ten Commandments) ஆங்கிலத்திரைப்படம். அத்திரைப்படம் வெளியான 50ஆவது ஆண்டு நினைவாக அவர் இவ்விதழில் (A Randor Guy, Memorable Milestone, The Hindu, Friday Review, 8.6.2007, p.1) எழுதிய கட்டுரையை அப்போது நான் நேரடியாக மொழிபெயர்த்தேன், அவருடைய எழுத்தின்மீது உள்ள ஆர்வம் காரணமாக. இன்னும் அதனைப் பாதுகாத்து வருகிறேன். இந்த மொழிபெயர்ப்பினை நேரடியாக நான் 70 நிமிடங்களில் மொழிபெயர்த்தேன். (இந்த மொழியாக்கத்தில் நிறைகுறைகள் இருக்க வாய்ப்புள்ளது), நான் மொழிபெயர்த்த, நினைவில் நிற்கும் பதிவுகளில் இதுவும் ஒன்று.

15 March 2023

வரலாறு கூறும் "திருநல்ல கூரூர்" : கும்பகோணம் ஆ.கோபிநாத்

அண்மையில் நான் வாசித்த நூல் கும்பகோணம் வட்டார வரலாற்று ஆய்வுச் சங்கத்தின் நிறுவனர் மற்றும் செயலாளரான திரு கும்பகோணம் ஆ.கோபிநாத் எழுதியுள்ள வரலாறு கூறும் "திருநல்ல கூரூர்" (கூகூர் அருள்மிகு ஆம்பரவனேஸ்வரர் திருக்கோயில் வரலாறு) என்னும் நூலாகும்.இந்நூல் ஊர் வரலாறு, கோவில் அமைவிடம், கோவிலின் கட்டடக்கலை அமைப்பு, கோவிலின் சிற்பக்கலை அமைப்பு, கோவிலின் கல்வெட்டுகள் கூறும் செய்திகள், கோவிலின் வரலாறு சொல்லும் மஹாபாரதம், வழிபாட்டு முறைகளும் திருவிழாக்களும் ஆகிய தலைப்புகளைக் கொண்டுள்ளது. நூலில் துணைநூற்பட்டியலும், கோவிலின் வரைபடமும், கோவிலின் புகைப்படங்களும் இடம்பெற்றுள்ளன. நூலில் ஊரின் வரலாறும், கோவிலின் வரலாறும் சிறப்பாகத் தரப்பட்டுள்ளன. இந்நூலிலிருந்து சில பகுதிகளைக் காண்போம். மற்றவற்றை நூலை வாங்கிப் படித்துப் பகிர்வோம்.

கும்பகோணத்திலிருந்து 16 கி.மீ. தொலைவில் நாச்சியார்கோயில் வழியாக நந்னிலம், நாகூர் செல்லும் சாலையில் அமைந்துள்ள கூகூர் வரலாற்றின் திருநல்ல கூரூர் என்றழைக்கப்பட்டுள்ளது. ஆம்பரவரனேஸ்வரர் கோவிலில் உள்ள கல்வெட்டுகளில் இவ்வூர் சத்திரிய சிகாமணி வளநாட்டு திருநறையூர் நாட்டு கூற்றத்து கூரூர் என வழங்கப்பட்டுள்ளது. (ப.9)

இங்குள்ள ஆம்பரவனேஸ்வரர் கோயில் காலத்தால் மிகவும் பழமையானதாக உள்ளது என்பதற்குச் சான்றாக அங்குள்ள கல்வெட்டுகளையும், செம்பியன் மாதேவியின் திருப்பணிகளுக்கு உட்பட்ட அழகிய நடராசர் சிலையையும் கூறலாம். (ப.11)

கருவறை முதல் மகா மண்டபம் வரை கோவிலைச்சுற்றி 53 கல்வெட்டுகள் உள்ளன. அவற்றில் சோழ மன்னர்களான மதுரை கொண்ட கோப்பர கேசரி பராந்தக சோழன், ஆதித்த சோழன் (முதலாம் ஆதித்தன்? ஆதித்த கரிகாலன்?), உத்தம சோழன், முதலாம் ராஜராஜ சோழன், முதலாம் ராஜேந்திர சோழன், முதலாம் குலோத்துங்க சோழன், அதிராஜேந்திரன் ஆகியோரின் கல்வெட்டுகள் காணப்படுகின்றன. (ப.31)

படிக்கும் வாசகருக்கு நூலைப் படித்தபின்னர் கோவிலுக்குச் செல்லும் ஆவல் இயற்கையாக எழுந்துவிடும் அளவிற்கு நூலாசிரியர் நேரில் சென்று தரவுகளைத் திரட்டி, பிற சான்றாதாரங்களையும் தந்து மிகவும் சிறப்பாக நூலினைப் படைத்துள்ளார். கல்வெட்டுகள், சிற்பங்கள், கட்டுமானங்கள் ஆகியவற்றை நுணுக்கமாக அணுகி உரிய விளக்கங்களோடும், படங்களோடும் சிறப்பாகத் தந்துள்ளார். மாணவர் முதல் பொதுமக்கள் வரை அனைவரும் பயனுறும் வகையில் நூலை அமைத்துள்ளார். முதல் நூலாக இந்நூலை வெளிக்கொணர அவர் மேற்கொண்ட முயற்சி பாராட்டத்தக்கது. அவர் இம்முயற்சியைத் தொடர மனம் நிறைந்த வாழ்த்துகள்.

இச்சீரிய பணியை அடியொற்றி அச்சங்கத்தின் பொறுப்பாளர்களும் உறுப்பினர்களும் இப்பணியில் தம்மை ஈடுபடுத்திக்கொண்டு பல நூல்களை வெளிக்கொணர எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

நூல் : வரலாறு கூறும் "திருநல்ல கூரூர்" (கூகூர் அருள்மிகு ஆம்பரவனேஸ்வரர் திருக்கோயில் வரலாறு)

ஆசிரியர் : கும்பகோணம் ஆ.கோபிநாத்  (அலைபேசி 98849 86937)
பதிப்பகம்: கும்பகோணம் வட்டார வரலாற்று ஆய்வு சங்கம், கும்பகோணம்,
பதிப்பாண்டு: முதல் பதிப்பு, மார்ச் 2023
விலை ரூ.100

இக்கோயிலைப் பற்றி விக்கிப்பீடியாவில் உள்ள கட்டுரையில் உள்ள ராஜகோபுரம் மற்றும் பிற ஒளிப்படங்கள் என்னால் எடுக்கப்பட்டு இணைக்கப்பட்டுள்ளன.


நூல் வெளியீட்டு நிகழ்வு

கும்பகோணம் அரசு கலைக்கல்லூரியும், கும்பகோணம் வட்டார வரலாற்று ஆய்வு சங்கமும் இணைந்து 3 மார்ச் 2023இல் நடத்திய தேசிய அளவிலான சோழர்கள் ஒரு மீள்புரிதல் என்ற தலைப்பிலான கருத்தரங்கில் இந்நூல் வெளியிடப்பட்டது.வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு நூலாசிரியரைப் பாராட்டினேன். நான் பயின்ற அக்கல்லூரியில் உள்ள ஆசிரிய நண்பர்களைச் சந்தித்தேன்.
27 February 2023

தமிழ்நாடு புலவர் பேரவை : தகைசால் தமிழர் விருது

“தமிழுக்கு மாறுவோம்” என்னும் இயக்கத்தை தமிழ்நாடு புலவர் பேரவை முன்னெடுத்து சீரிய பணிகளைச் செய்துவருகிறது. அதில் ஒரு பணியாக ஆங்கிலத்திலிருந்த முகநூல் கணக்கின் பெயரைத் தமிழுக்கு மாற்றுவதும் ஒன்றாகும். அதில் ஈர்க்கப்பட்டு பலர் தம்முடைய முகநூல் கணக்கின் பெயரைத் தமிழில் மாற்றி வருகின்றனர். நானும் என் முகநூல் கணக்கினை தமிழில் மாற்றம் செய்தேன்.

அவ்வாறு மாற்றம் செய்பவர்களுக்கு “தகைசால் தமிழர்” என்னும் தலைப்பிட்டு அவ்வப்போது அவர்கள் பெயருடன் நிழற்படத்தையும் முகநூலில் வெளியிட்டுப் பாராட்டிவருகின்ற சிறப்பான பணியைச் செய்கிறது தமிழ்நாடு புலவர் பேரவை. 
அவ்வகையில் உறுப்பினராக இருக்கும் 80 பேருக்கு தகைசால் தமிழர்” என்னும் விருதினை அளித்துச் சான்றிதழ் வழங்கியது இப்பேரவை. விருதுச் சான்றிதழ் வழங்கும் விழா தஞ்சை பெசண்ட் அரங்கில் 26 ஜனவரி 2023இல் நடைபெற்றது. இதே நாளில் விக்கிப்பீடியாவின் வேங்கைத்திட்டம் 2.0 பயிற்சிப் பட்டறையில் கலந்துகொள்ள ஆனைக்கட்டி சென்றதால் விருதினை நேரடியாகப் பெறமுடியவில்லை. என் சார்பாக என் மனைவி திருமதி பாக்கியவதி அவர்கள் விருதினைப் பெற்றுக்கொள்ள பேரவையினர் இசைந்தனர். விருதினை அவர் பெற்று வந்தார்.
தமிழ்நாடு புலவர் பேரவைக்கு என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். 

ஒளிப்படம் நன்றி : தமிழ்நாடு புலவர் பேரவை

முந்தைய விருதுகள்
சித்தாந்த இரத்தினம், 1997


அருள்நெறி ஆசான், 1998

பாரதி பணிச்செல்வர், 2001அருமொழி விருது, 2021
நிகரிலி சோழன் விருது, 2022

01 February 2023

வேங்கைத் திட்டம் 2.0 பயிற்சிப்பட்டறை : 26-28 ஜனவரி 2023

2023 ஜனவரி 26-28இல் விக்கிப்பீடியாவின் வேங்கைத் திட்டம் 2.0 பயிற்சிப்பட்டறை ஆனைக்கட்டியில் உள்ள ஸ்டர்லிங் உல்லாச விடுதியில் நடைபெற்றது. இதில் நான் கலந்துகொண்டு விக்கிப்பீடியாவிற்கு அப்பாற்பட்டு, அதன் சகோதர அமைப்பின் பணிகளையும் தெரிந்துகொள்ளும் வாய்ப்பினைப் பெற்றேன்.பயிற்சிப்பட்டறையின் முதல் நாளன்று பயனர் என்ற முறையில் என்னை அறிமுகப்படுத்திக்கொண்டேன். பிறரைப் பற்றியும் அறிந்தேன். தமிழ் விக்கிப்பீடியாவிலும், ஆங்கில விக்கிப்பீடியாவிலும் என்னுடைய பங்களிப்பினைப் பற்றியும், குடியரசு நாள் என்ற நிலையில் எங்கள் தாத்தா தொடங்கி வைத்த, எங்கள் இல்லத்தில் இன்றும் கொடியேற்றும் நிகழ்வினைப் பற்றியும் பேசினேன்.  
தொடர்ந்து விக்கிப்பீடியாவின் ஐந்து தூண்கள் பற்றிய அறிமுகம்  ஆரம்பமானது. ஐந்து குழுவாகப் பிரிந்து கருத்துகளைப் பரிமாறிக்கொண்டோம்.  உள்ளடக்கம் மற்றும் வார்ப்புரு சார்ந்த அடிப்படைப் பயிற்சி, தொழில்நுட்பம், விக்கி பொதுவகம், விக்கிமூலம், விக்சனரி, விக்கிசெய்திகள், விக்கிதரவு, விக்கிப்பீடியாவின் கொள்கைகள், தகவற்பெட்டி அமைத்தல் மற்றும் இணைத்தல், மேஜிக் வேர்ட்ஸ், மேப் உருவாக்கம்  உள்ளிட்ட பல தலைப்புகளில் தொழில்நுட்பக்கலைஞர்கள் மிகவும் சிறப்பாக உரையாற்றினர். பயனர்கள் கேட்ட பல ஐயங்களுக்கு அவர்கள் மறுமொழி அளித்து, தெளிவுபடுத்தினர். பலவற்றிற்கு உரிய இணைப்புகளைச் சொடுக்கிக் காண்பித்து, மனதில் பதிய வைத்தனர். புதியவர்களை கட்டுரை எழுத பழக்கப்படுத்துதல், ஊக்குவித்தல், அவர்கள் எதிர்கொள்ளும் ஐயங்களுக்கு விடை தரல் உள்ளிட்டவையும் விவாதிக்கப்பட்டன. பஞ்சாபி, வங்காள மொழியைச் சார்ந்த பயனர்களும் வந்திருந்தனர். அவர்களில் சிலர் உரையாற்றினர். 

இக்கூட்டத்தில் பல மூத்த பயனர்களையும், வளர்ந்து வருகின்ற இளம் பயனர்களையும் சந்தித்து அளவளாவும் வாய்ப்பு கிடைத்தது. பல ஐயங்களை மூத்த பயனர்களிடம் கேட்டறிந்தேன். இளைய பயனர்களோடு கருத்துகளைப் பரிமாறிக்கொண்டேன். பலரை நேரில் காணும் வாய்ப்பினைப் பெற்றேன்.  உள்ளடக்கம் என்பதற்கு அப்பாற்பட்டு தொழில்நுட்பம் என்ற வகையில் உரையாளர்கள் தத்தம் கருத்தினைப் பரிமாறிக்கொண்டபோது அதன் பரிமாணத்தை அறிந்து வியந்தேன். 

   . 

நிகழ்வினைச் சிறப்பாக நடத்திய பொறுப்பாளர்களுக்கு மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

விக்கிப்பீடியாவில் கட்டுரை எழுதுதல், பொதுவகத்தில் ஒளிப்படம் இணைத்தல் என்பதற்கு மேலாக விக்கிமூலம், விக்கிதரவு உள்ளிட்டவற்றில் பல நிலைகளில் பங்களிக்க ஓர் உந்துதலை இந்த பயிற்சிப்பட்டறை தந்துள்ளதை உணர்கிறேன். அத்தகைய உந்துதலை விரைவில் செயல்படுத்துவேன்.


இதற்கு முன் மதுரையில் 14 ஆகஸ்டு 2022இல் நடைபெற்ற விக்கிமேனியாவில் கலந்துகொண்டபோது பெற்ற அனுபவத்தைவிட இது சற்றே வித்தியாசமானதாக இருந்ததை அறியமுடிந்தது.ஒளிப்படங்கள் நன்றி  : சக விக்கிப்பீடியர்கள்

3 பிப்ரவரி 2023இல் மேம்படுத்தப்பட்டது. 

15 January 2023

தமிழ்நாட்டில் சமணம் (கி.பி.ஆறாம் நூற்றாண்டு வரை) : அனந்தபுரம் கோ. கிருட்டினமூர்த்தி

திரு அனந்தபுரம் கோ.கிருட்டினமூர்த்தி எழுதியுள்ள தமிழ்நாட்டில் சமணம் (கி.பி.ஆறாம் நூற்றாண்டு வரை) என்னும் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் ஆய்வுத்திட்டங்களுள் ஒன்றாகச் செய்தளிக்கப்பட்ட நூலாகும்.

கி.பி.ஆறாம் நூற்றாண்டு வரையிலான சமணத்தின் வரலாற்றை மிகச்சிறப்பாக இந்நூல் எடுத்துரைக்கிறது. தமிழ்நாட்டின் தொன்மை, தமிழ்நாட்டில் சமணப் பரவல், குகைத்தளக் கல்வெட்டுகளும் படுக்கைகளும், தமிழி கல்வெட்டுகளும் சமணமும், இலக்கியங்களில் சமணம், சமணக்கலைகள், சமணத்தின் வீழ்ச்சி ஆகிய உள் தலைப்புகளைக் கொண்டு இந்நூல் அமைந்துள்ளது.


நூலாசிரியருடன் ஜம்புலிங்கம் (டிசம்பர் 2022, சென்னை)

இந்திய சமயங்களை ஏகாந்தவாதம், அநேகாந்தவாதம் என இருவகையாகக் கூறுவர். ஜைன சமயம் தவிர்த்த பிற சமயங்களை ஏகாந்தவாத சமயம் என்பர். ஜைனம் மட்டுமே அநேகாந்த வாதசமயம் என்று கூறப்படுகிறது. ஜைனம் அசோக (பிண்டி) மரத்தைப் போற்றுவதால் பிண்டி சமயம் என்ற பெயரும் வழங்கப்பட்டுள்ளது. (ப.32)

ஜைனம் நான்கு பிரிவுகளைக் கொண்டுள்ளது. அவை திகம்பரம், சுவேதம்பரம், ஸ்தானகவாசி, யாப்பினியம் என்பதாகும். உலகப்பொருள்கள் அனைத்தையும் துறந்து வானத்தையே உடையாகக் கொண்டு, சிறிய ஆடையும் உடலில் அணியாது (நிர்வாணமாக) உடையவர் திகம்பரர். வெள்ளை ஆடை உடுத்தியவர் சுவேதம்பரர். ஸ்தான வாசிகர் உருவ வழிபாட்டை ஏற்காதவர். ஆகம நூல்களையே தீர்த்தங்கரர்களாகவும், அருகக் கடவுளாகவும் கருதி வழிபடுபவர் யாப்பன ஜைனர். திகம்பர சுவேதம்பர்களின் நற்கொள்கைகளை இணைத்து மந்திரம் தந்திரங்களை வழிபாட்டில் ஏற்றுக்கொண்டவர்கள். தமிழ் நாட்டில் திகம்பர ஜைனமே கி.பி.6ஆம் நூற்றாண்டு வரை நிலைத்திருந்தது. அப்போது ஸ்வேதம்பர ஜைனம் வட நாட்டில் மட்டும் இருந்தது. (ப.46)

தமிழ்நாட்டின் மலைக் குகைத்தளங்களில் கி.மு.மூன்றாம் நூற்றாண்டு முதல் கி.பி.நான்காம் நூற்றாண்டு வரையிலான தொல்தமிழ் எழுத்திலான 90 கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இக்கல்வெட்டுகள் அனைத்தும் இயற்கையாக அமைந்த குன்றுகளின், குகைத்தளங்களின் உள்ளேயும் வெளியேயும் செதுக்கப்பட்டுள்ளன. பெரும்பாலான கல்வெட்டுகள் கற்படுக்கைகள் அமைக்கப்பட்டதைக் குறத்தே உள்ளன. இக்கற்படுக்கைகள் கல்வெட்டுக் காலத்தில் வாழ்ந்த துறவிகளுக்கானது என்பது தெளிவாகத் தெரிகின்றன. (ப.79)

மகாவீரருக்குப் பிறகு ஜைன அமைப்பைப் பத்திரபாகு முனிவர் என்பவர் பொறுப்பு வகித்த காலத்தில்தான் ஜைன தமிழ்நாட்டிற்குப் பரவியதாகக் கூறப்படுகிறது. பத்திரபாகு முனிவர் கி.மு.317 முதல் கி.மு.297 வரை ஜைனத் தலைவராக இருந்திருக்கிறார்....தமிழ்நாட்டிலுள்ள தமிழி கல்வெட்டுகளையும், கற்படுக்கைகளையும் நோக்கும்போது ஜைனம் சங்க காலத்திற்குப் பிறகுதான் பெருமளவு வளர்ச்சி அடைந்திருக்கவேண்டும் என்று கருத வேண்டியுள்ளது. ஜைனர்களின் சமய இலக்கியங்கள், அவர்களின் வழிபாடு, கோயில் அமைப்பு, வழிபாட்டுச் சடங்குகள் குறித்து அறியும்போது கி.பி.3-4ஆம் நூற்றாண்டுக்குப் பிறகு ஜைனத் துறவிகள் தமிழ்நாட்டில் மிகுதியாகப் பரவியிருக்க வேண்டும். (பக்.334-336)

தொன்மைக்கல்வெட்டுகள் பல தமிழ்நாட்டிற்கு ஜைனம் பரவியதற்குப் பின்பு செதுக்கப்பட்டுள்ளன. அவற்றின் செய்திகளைக் குறித்து ஆராயும்போது ஜைனம் கி.பி.4-5ஆம் நூற்றாண்டில் பெருவளர்ச்சியடைந்திருந்தது தெரியவருகிறது. ஜைனம் குறித்த செய்திகள் பெரும்பாலும் வட்டெழுத்துக் கல்வெட்டுகளில் காணப்படுகின்றன. (ப.xiv)

கி.பி.ஆறாம் நூற்றாண்டு வரையிலான காலகட்டத்தில் சமணத்தின் போக்கினை களப்பணி மற்றும் பிற ஆதாரங்களோடு வெளிக்கொணர்ந்துள்ள நூலாசிரியரின் முயற்சி போற்றத்தக்கதாகும்.

நூல் : தமிழ்நாட்டில் சமணம் (கி.பி.ஆறாம் நூற்றாண்டு வரை)
ஆசிரியர் : அனந்தபுரம் கோ.கிருட்டினமூர்த்தி
பதிப்பகம்: செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம், செம்மொழிச்சாலை, பெரும்பாக்கம், சென்னை 600 100, தொலைபேசி 044 22540125
பதிப்பாண்டு: முதல் பதிப்பு, பிப்ரவரி 2022
விலை ரூ.500