29 March 2014

தாத்தா தோட்டத்து வெள்ளரிக்காய் : இராய.செல்லப்பா

அண்மையில் நான் படித்த நூல் வலைப்பூ நண்பர் திரு இராய.செல்லப்பா அவர்களின் தாத்தா தோட்டத்து வெள்ளரிக்காய். இவர் இமயத்தலைவன் மற்றும் செல்லப்பா தமிழ் டயரி ஆகிய வலைப்பூக்களை மிகவும் சிறப்பாக நடத்திவருபவர். 12 சிறுகதைகளைக் கொண்ட தன் நூலின் முன்னுரையில் அவர் கூறுகிறார்: ".........கல்வியின் காரணமாகவும், பணியின் நிமித்தமாகவும் பதினைந்து ஊர்களில் வாசம் செய்திருக்கிறேன். சில ஆயிரம் பேர்களையாவது சந்தித்திருக்கிறேன். அப்படி என்றால் எத்தனை ஆயிரம் நினைவுகளை நான் இந்த நாற்பது ஆண்டுகளாகச் சுமந்துகொண்டிருக்கவேண்டும்? அவற்றில் சிலவற்றையே இக்கதைகளில் சுமையிறக்கியிருக்கிறேன்........" 

அவர் இறக்கியது அவருக்குச் சுமையாக இருக்கலாம். ஆனால் அந்த சுமையின் வழியாக ஒருவகையான பிணைப்பை  நம்முடன் அவர் ஏற்படுத்துவதை அவருடைய கதைகளில் காணமுடிகிறது. ஒவ்வொரு கதையும் பின்புலம், போக்கு, அமைப்பு, முடிவு என்ற ஒவ்வொரு நிலையிலும் மனதில் பதியும்படி உள்ளது. வாழ்வின் நிகழ்வுகளை நாட்குறிப்பிலிருந்து எடுத்து சில கற்பனை கதாபாத்திரங்களை உட்புகுத்தி மெருகூட்டி வடிவம் தந்ததைப் போல ஒவ்வொரு கதையும் அமைந்துள்ளது.

மான் குட்டி மூலமாக வெளிப்படுத்தப்படும் தாய்ப்பாசம் (கண்ணே கலைமானே), கொடிய வறுமையிலும் செய்த உதவியை கடனாகக் கொள்ளக்கூடாது என்ற எண்ணம் (கடன்), கடித நடையிலேயே வாழ்வின் யதார்த்தங்கள் உணர்த்தப்படல் (பிருந்தாவனமும் மந்தாகினியும்), பிள்ளையை இழந்தவர் தாம் இழந்த பிள்ளையைப் போல ஒரு பிள்ளையைக் கருதி அன்பை வெளிப்படுத்தல் (இரண்டாவது கிருஷ்ணன்), உலகமயமாக்கலாலும், தொழில்நுட்பத்தாலும், அறிவியல் வளர்ச்சியாலும் நாம் இழந்துவிட்டவைகளில் ஒன்றான மண்ணின் பெருமை (தாத்தா தோட்டத்து வெள்ளரிக்காய்), நல்ல போதனையின் விளைவால் பக்குவமாகும் ஒரு மனம் (அன்னையைத்தேடி), உண்மை நிகழ்வின் பின்னணியில் ஓர் உண்மையான இதயத்தைப் புரிந்துகொண்ட மற்றொரு இதயம் (ஊன்றுகோல் நானுனக்கு), தாயன்புக்காக ஏங்கி தன்னைத் தானே ஏமாற்றிக்கொண்டு நாடக வாழ்க்கை வாழ்ந்து தோற்கும் மகனின் ஏக்கம் (பழமா, பாசமா), கடமை வழுவாமல் இருக்கும் புரோகிதரின் கனவை நினைவாக்கும் எதிர்பாரா திருப்பம் (சாந்தி நிலவவேண்டும்), பரிதவிக்கும் ஒரு பெண்ணுக்கு உதவ முயன்றும் பயனில்லா நிலையில் தத்தளிக்கும் ஒரு நல்ல மனம் (முடிவுற்ற தேடல்கள்),  பல சோதனைகளைச் சந்தித்து எதிர்பார்த்த வாழ்வினை பொறுமையாக எதிர்கொள்ளும் இரு இதயங்கள் (மனோரமா), வேலைக்காக அலையும் ஒருவன் வேலையில் சேரும் காலத்தில் எதிர்கொள்ளும் எதிர்பாரா நிகழ்வுகள் (ஏழு இரவுகள்) என ஒவ்வொரு கதையும் அழகான கருவினை கொண்டு அமைந்துள்ளது.       

திரு இராய.செல்லப்பா
ஒவ்வொரு கதையிலும் கையாளப்பட்டுள்ள பல உரையாடல்கள், நம் அருகாமையில் நடப்பன போல அமைந்துள்ளன. நூலாசிரியர் கதாபாத்திரத்தை எந்த அளவு நம்மிடம் நெருக்கமாகக் கொணர்கிறாரோ அல்லது நாம் எந்த அளவு கதாபாத்திரத்திற்கு அண்மையில் செல்கின்றோமோ அந்த அளவு கதையின் வெற்றி அமைகிறது. அந்நிலையில் இந்நூலாசிரியர் வாசிப்பவருக்கும் கதாபாத்திரத்திற்கும் இடையே மிக நெருக்கத்தைக் கொண்டுவந்துவிடுகிறார்.

"........இது தோல்வியில்லடி கண்ணு. இதுதான் தாய்மையோட பலம். காலம் காலமா உயிர்கள் அழியாம இருக்கிறதுக்கு இயற்கை கொடுத்திருக்கிற வரம். மனுஷனோ மிருகமோ யாராயிருந்தாலும் தாய்மைக்கும் கொழந்தைக்கும் உள்ள உறவுதான் ரொம்ப ஒசந்த உறவுன்னு உனக்குப் புரிஞ்சிடுத்து இல்லையா" என்றார் ராஜம்மா, அவளை இறுக அணைத்தபடி"  (ப.20).

"...நவராத்திரி ஒன்பது நாட்களும் விமரிசையாக இருக்கும். தெருவில் மாக்கோலம், கதவெல்லாம் வண்ணக்காகிதங்களின் பூத்தோரணம், மல்லிகையும் மருக்கொந்தும் அடுத்த தெருவரை மணக்கும். எல்லாரும் கொலு வைத்திருப்பார்கள். ஏழு முதல் பதினோரு படிகள் வைத்து ஏராளமான பொம்மைகளை அலங்காரமாக நிறுத்தியிருப்பார்கள்........" (ப.22) 

"அதிர்ச்சியிலிருந்து மீள முடியாமல் என் கண்கள் குளமாயின. அசையாமல் நின்றேன். தனது சிறு துன்பத்தையும் ஊதிப் பெரிதாக்கி அனுதாபம் தேடும் உலகில், தன்னுடைய ஒரே குழந்தையைப் பறிகொடுத்ததையும் இயல்பாக எடுத்துக்கொண்டு, அடுத்தவருக்கு உதவ முன்வரும் நந்தாவைப் போன்றவர்களை அதிகம் பார்த்ததில்லை நான்...." (ப.43)

"...ஓ, நல்லமுத்து சாரின் போதனையின் விளைவா இது? அதனால்தான் அன்று அழுதானா? போட்டோவில்கூட இல்லாத அம்மாவை இருப்பவளாக்கி வியாபாரம் செய்கிறோமே என்ற குற்ற உணர்வா! அதனால்தான் போட்டோவைத் தேடி ஓடியிருக்கிறானா?....." (ப.62)


"....தன்னுடைய நிலத்தில் தன் கையால் விளைந்த நெல்லை அவள் இப்போது உண்ணப் போகிறாள். இரவானதும் சாராயக் கடைக்குச் செல்லும் மற்ற ஆண்கள் மாதிரி இல்லாமல் அவளுடைய கணவன் அவள் சொல்லுக்கு இணங்கி நல்ல ஒழுக்கமுள்ளவனாய் நடந்துகொள்கிறான். ஒரே குழந்தை. அதுவும் ஆண் குழந்தை. வேயெறன்ன வேண்டும் ஓர் ஏழைப் பெண்மணிக்கு? நாளை விடிந்ததும் மாரியம்மனுக்குக் கூழ் ஊற்றுவதாய் மனதிற்குள் நேர்ந்து கொண்டாள் அஞ்சலை....." (ப.94)

கதைகளைப் படிக்கும்போது நம் வீட்டிலோ, அருகிலோ நிகழ்ந்தது போன்ற உணர்வு ஏற்படுகிறது. மகிழ்ச்சி, கோபம், ஆற்றாமை என அனைத்துவகையான மன உணர்ச்சிகளையும் கதைகளில் காணமுடிகிறது. மனதில் நிற்கும் அட்டைப்படம். அவர் ரசித்த மற்றும் ருசித்த தாத்தா தோட்டத்து வெள்ளரிக்காய் நமக்கும்தான்.   இந்தச் சிறுகதைத் தொகுப்பை வாசிப்போமே. 

தாத்தா தோட்டத்து வெள்ளரிக்காய், இராய.செல்லப்பா (அலைபேசி 9600141229/9840993592), அகநாழிகை பதிப்பகம், எண்.33, மண்டபம் தெரு, மதுராந்தகம் 603 306, தமிழ்நாடு (அலைபேசி 999 454 1010), ஜனவரி 2014, ரூ.120

14 March 2014

வீற்றிருந்தபெருமாள் கோயில் : வேப்பத்தூர்

சூன் 2010இல் வேப்பத்தூர் வீற்றிருந்தபெருமாள் கோயிலைப் பற்றிய ஒரு கட்டுரையினை தி இந்து ஆங்கில நாளிதழில் படித்தேன். பல்லவர் காலம், சோழர் காலம் மற்றும் விஜயநகர் காலம் என்ற மூன்று  காலங்களைச் சந்தித்த இக்கோயிலில் காணப்படும் ஓவியங்களைப் பற்றியும், கட்டடக்கலை நுட்பத்தைப் பற்றியும் படித்தபின்பு அக்கோயிலைக் காணவேண்டும் என்ற ஆவல் எழுந்தது. இருப்பினும் மார்ச் 2012இல் அங்கு செல்லும் வாய்ப்பு கிடைத்தது.     

 தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் அருகே வேப்பத்தூர் என்னுமிடத்தில் இந்த வீற்றிருந்த பெருமாள் கோயில் உள்ளது.  வைணவக்கோயில்களில் திருமாலை நின்ற கோலம், அமர்ந்த கோலம், சயன கோலம் அல்லது கிடந்த கோலம் என்ற மூன்று நிலைகளில் காணமுடியும்.  108 திவ்யதேசங்களில் திருமால் நின்ற கோலத்தில் உள்ள கோயில்களே அதிகம். அதைத்தொடர்ந்து சயன கோலம். மற்ற நிலைகளில் ஒப்பிடுமபோது அமர்ந்த கோலத்தில் திருமால் உள்ள கோயில்கள் குறைவே. ஒரே இடத்தில் மூன்று கோலங்களிலும் திருமாலை திருக்கோட்டியூரில் நாங்கள் பார்த்துள்ளோம்.

கோயிலுக்குச் செல்ல வழியை விசாரித்துக்கொண்டு சென்றபோது ஊரின் உட்பகுதியில் கோயிலைக் காணமுடிந்தது. அதனைக் கோயில் என்றே கூற முடியாது. இடிபாடுகளுடன் கூடிய ஒரு தொகுப்பான கட்டட அமைப்பே அங்கு இருந்தது. தரையிலிருந்து சுமார் 40 அடி உயரத்தில் கூரையால் மூடப்பட்ட விமானத்தைப் பார்த்தோம். தற்போது தமிழகத்தில் இவ்வாறாக செங்கல் கட்டுமானத்துடன் கூடிய விமானம் இருப்பதாகத் தெரியவில்லை.

வீற்றிருந்த பெருமாள் கோயில் விமானம்
ஆங்காங்கு சிதைந்த நிலையில் கட்டட அமைப்புகள். தரைப்பகுதியிலிருந்து மேடை போன்ற பகுதிக்குச் சென்றுவிட்டு பின்னர் விமானம் உள்ள பகுதியை அடையவேண்டும். பாதை நடக்குமளவு காணப்படவில்லை. எங்கு பார்த்தாலும் புல் மண்டிக் கிடக்க தரையிலிருந்து விமானப் பகுதியைக் காண ஏறிச்செல்வது என்பதே சிரமமாக இருந்தது.  
தரையிலிருந்து சற்று உயர்ந்த நிலையில் கட்டட அமைப்பு
கோயிலுக்குரிய அமைப்புகளான கோபுரம், திருச்சுற்று, முகமண்டபம், அர்த்தமண்டபம், கருவறை என்ற அமைப்புகள் அனைத்தும் கால வெள்ளத்தில் கரைந்துபோக தற்போது காணப்படுவது கருவறைக்கு மேல் காணப்படுகின்ற விமானம் மட்டுமே. கருவறையில் இருந்த மூலவரையும் பிற சன்னதிகளில் இருந்த சிற்பங்களையும் தனியாக ஒரு இடத்தில் வைத்துள்ளதைக் காணமுடிந்தது.   


விமானத்தின் உட்புற அமைப்பு
கருவறைக்கு மேல் தஞ்சாவூர் பெரிய கோயிலின் விமான உட்புறத்தில் காணப்படும் கூடு போன்ற அமைப்பு காணப்பட்டது. பெரிய கோயிலில் வட்டவடிவமாக அந்த அமைப்பு காணப்படும். இக்கோயிலில் சதுரமாகக் காணப்பட்டது.

 
கருவறையின் உட்பகுதியில் ஓவியங்கள்
கருவறையின் உட்பக்கச் சுவர்களில் ஓவியங்களைக் காணமுடிந்தது. போதிய வெளிச்சமில்லாமையால் அந்த ஓவியங்களைத் தெளிவாகப் பார்க்கமுடியவில்லை.    
கருவறையின் மூலவர் இருந்த இடம் 
 கருவறையில் மூலவர் இருக்குமிடத்தின் கீழ்ப்பகுதி தோண்டப்பட்டிருந்தது. பெரிய பள்ளம் அங்கே காணப்பட்டது. விமானத்தின் உட்புறம் காணப்பட்ட கூடுபோன்ற பகுதி, மூலவர் இருந்த கருவறையின் உட்புறம் சுற்றி காணப்பட்ட ஓவியங்கள், மூலவர் இருந்த இடத்தின் தோண்டப்பட்ட பகுதி ஆகியவை எங்களுக்கு பிரமிப்பை உண்டாக்கின.
கருவறை வாயிலில் ஜம்புலிங்கம், சிவகுரு, பாக்கியவதி, பாரத்
ஒவ்வொரு பகுதிகளின் கட்டுமானத்தைப் பார்த்தபின் கருவறை வாயிலில் நின்று புகைப்படமெடுத்துக்கொண்டோம்.  நாங்கள் நின்ற இடம் தரையிலிருந்து சுமார் 10 அடி உயரத்தில் உள்ளது. அக்கோயில் தரையிலிருந்து சற்று உயர்ந்த இடத்தில் கட்டப்பட்டிருக்கவேண்டும் என்பதை அறியமுடிந்தது. 


விமானத்தின் பக்கவாட்டுத்தோற்றம்
 கருவறையின் வெளியே வந்தபின் விமானத்தை கட்டுமானத்திற்காக கட்டப்பட்டுள்ள மூங்கில்களுக்கிடையே பார்த்தோம். பெரிய செங்கற்களைக் கொண்டு மிக நேர்த்தியாக காணப்பட்ட அமைப்பினைக் கண்டு வியந்தோம். தமிழகத்தில் தற்போது இவ்வாறான ஓர் செங்கல் கட்டுமான விமான அமைப்பு இங்கு மட்டுமே உள்ளது என்பதை அறிந்தபோது ஒரு புறம் மகிழ்ச்சியாக இருந்தாலும், வரலாற்றின் ஒரு சுவடு கண்ணுக்கு முன் மறைந்து கொண்டிருப்பதை நினைத்து வேதனை அடைந்தோம்.  

சில மாதங்கள் கழித்து கும்பகோணம் சிற்பக்கலைஞர் நண்பர் திரு இராஜசேகரன் அவர்களுடன் இக்கோயிலுக்குச் செல்லும் வாய்ப்பு கிடைத்தது. அப்போதும் அக்கோயிலை அதே நிலையில்தான் காணமுடிந்தது. வீற்றிருந்த பெருமாளை கம்பீரமான வீற்றிருக்கும் கோலத்துடன் பார்க்கும் நாள் எந்நாளோ?

02 March 2014

மறதி வாழ்க (நாடகங்கள்) : அழகிரி விசுவநாதன்

ஐயா அழகிரி விசுவநாதன் அவர்களின் 84ஆவது பிறந்த நாளை (2.3.2014) முன்னிட்டு அவரது நூல்கள் சலுகை விலையில் தரப்படுவதாக விளம்பரம் வெளியாகியிருந்தது. அச்செய்தி பற்றி தெரிவிப்பதற்காக அவர்களைத் தொடர்பு கொண்டபோது அவர் தனது ஒன்பதாவது நூல் விரைவில் வெளிவரவுள்ளதாகக் கூறினார். தனது இவ்வாறான வாழ்க்கைக்கும் எழுத்துப்பணிக்கும் இறையருளின் துணையே காரணம் என்றார். என் எழுத்துப்பணியையும், ஆய்வுப்பணியையும் ஊக்குவிப்பவர்களில் இப்பெரியவரும் ஒருவர்.

ஐயா அழகிரி விசுவநாதன் அவர்களின் அண்மைப் படைப்பான மறதி வாழ்க... என்ற நாடகத்தொகுப்பில் பொங்கல் பண்டிகைக்குப் பின், மிஸ்டர் மரகதம், மறதி வாழ்க, அனுபவ எழுத்தாளர் என்ற தலைப்புகளில் நான்கு நாடகங்கள் இடம்பெற்றுள்ளன. சிறுகதைத் தொகுப்பு, கவிதைத்தொகுப்பு, புதினம் என்ற துறைகளில் தடம் பதித்த ஐயா தற்போது நாடகங்கள் மூலமாக நம்மை இணைக்கிறார். பிற துறைகளில் எந்த அளவு ஈடுபாட்டோடு எழுத்துவீச்சினை வெளிப்படுத்துவாரோ அதைப் போலவே நாடகத்துறையிலும் தம் முத்திரையை சிறப்பாகப் பதித்துள்ளார் ஆசிரியர். 

 அவருடைய முன்னுரையிலிருந்து
".....மறதி வாழ்க..என்ற இந்தப் புத்தகத்தில் மொத்தம் நான்கு ஓரங்க நாடகங்கள் உள்ளன. எல்லாம் கலைமன்றம் வார ஏட்டில் வெளிவந்த நாடகங்களே. 1950, 1960களில் கலை மன்றம் இலக்கிய ஏடு வெகு பிரபலம். பிறகு ஏதோ பல காரணங்களால் நின்றுவிட்டது. அதன் விலை அன்றைக்கு (1960இல்) 25 காசுகள் தான். இப்பொழுது 50 ஆண்டுகள் கடந்துவிட்டன அல்லவா? இன்றைக்கு அந்த ஏடு இருந்தால் ஒரு ஏடு ரூ.15 என்று சொல்வார்கள். ஏனென்றால் அந்த அளவுக்கு விலைவாசி ஏறிவிட்டது. பேப்பர் விலை, இங்க் விலை எல்லாம் தாறுமாறாக ஏறிவிட்டன. அதாவது 60 மடங்கு அல்லது 70 மடங்கு விலை ஏறிவிட்டது....."

".....நாடகம், நாடகம் என்கிறார்க்ளே, அப்படி என்றார் என்ன? நாட்டில் நடக்கின்ற விஷயங்களைத் தன் அகத்தே கொண்டதுதான் நாடகம். உரைநடையைவிட, கவிதைகளைவிட நாடகங்கள் பார்ப்பவர் மனதில் நன்றாகப் பதிகின்றன....."
 
பொங்கல் பண்டிகைக்குப் பின் என்ற முதல் நாடகத்தில் கடனாளியான ஒரு எழுத்தாளர் படும் பாட்டை மிகவும் அநாயாசமாக எடுத்துவைத்துள்ளார். மிஸ்டர் மரகதம் இரண்டாவது நாடகம்.திருமணப் பத்திரிக்கையில்  மிஸஸ் அண்ட் மிஸ்டர் சுந்தரராஜன் என்பதானது மிஸ்டர் அண்ட் மிஸஸ் என மாற்றப்பட்டதன் காரணத்தை நகைச்சுவை உணர்வோடு வெளிப்படுத்தியுள்ளார்.  மூன்றாவது நாடகம் நூலின் தலைப்பான மறதி வாழ்க என்பதாகும். வாழ்க்கையில் இயல்பாகக் காணப்படும் மறதி நிலையை சில நிகழ்வுகளோடு ஒப்பிட்டு கதாபாத்திரங்களுடன் படிப்பவர்கள் மிக நெருக்கமாகும்படி செய்துள்ளார். அனுபவ எழுத்தாளர் என்ற தலைப்பிலான நான்காம் நாடகத்தில்  பெயர் பத்திரிக்கையில் வரவேண்டும் என்பதற்காக மேற்கொள்ளப்படும் முயற்சியின் விளைவுகளைப் பல திருப்பங்களைக் கொண்டு விறுவிறுப்பாக முடித்துள்ளார்.

நாடகங்களில் அவர் பயன்படுத்திய பல சொற்களும், சொற்றொடர்களும் வித்தியாசமாகவும் மனதில் நிற்பவையாகவும் உள்ளன. "சரித்திரப் பிரசித்தி பெற்ற கல்கத்தா இருட்டறையை மிஞ்சும் தன்னுடைய ஆபீஸ் அறையில்" (ப.1),  "இந்த இடத்தில் மூன்றணாப் பேனாக்கட்டையைச் சொல்லவில்லை.. (ப.2), "கெடுவு என்கிற வார்த்தையே கடன்காரர்கள் கடன் கொடுத்தவர்களிடம் சொல்வதற்கு ஏற்பட்டதுதானே?" (ப.5),  வெறுங்கமிட்டி அங்கத்தினர்கள், அரட்டைக்கச்சேரி, நியூஸ்பேப்பர் பிரேமா (ப.8), "...உயர்தரமான கிளாஸ்ட் காகிதத்தில், நல்ல வெளிநாட்டு இங்க்கினால் அழகான, புது மாடல் இங்கிலீஷ் அச்சுகளால்தான் பிரிண்டாகிஇருக்கிறது..." (ப.9), "கணவன்-மனைவி என்ற விஷயத்தை விட்டு விட்டு ஸ்திரீபுருஷ சம உரிமை என்ற பிரச்சனை தலையிடும்போது, இப்படியெல்லாம் நடக்கத்தானே வேண்டியிருக்கிறது." (ப.11), "காலங்காத்தாலே உன் கடையைத் திறந்திட்டியா? ..போம்மா..உள்ளே போயி காபி என்னும் கழுநீரைக் கலக்கிற வேலையைப் பார்.." (ப.15),  "...நல்லா டீக்கா டிரஸ் செஞ்சிருக்கே, பட்டணத்து வேலையை பட்டணத்திலேயே காண்பிக்கிறேயே?" (ப.18), "கண்டக்டர் சொன்னது போல நீங்க டிராம் சீசன் டிக்கட்டை கைப்பைக்குள் வைச்சிட்டு, மறதியா வீட்டிலேயே விட்டுட்டு வந்துட்டோம்னு நினைச்சி, காசு கொடுத்து  ஒரு டிக்கட் வாங்கிட்டீங்க.." (ப.21), "பஜ்ஜி வெந்துகிட்டு இருக்கு. இந்த ஸொஜ்ஜிக்கு மஞ்சப் பவுடர் இல்லையே..மணிகிட்டே காசு கொடுத்து வாங்கிட்டு வரச்சொல்லேன்.." (ப.22),  "அடி மகளே, உனக்கு எங்கிருந்து இவ்வளவு வாய்த்துடுக்கும், திமிரும் வந்தது?...அரே ஆபத்பாந்தவா..நீதான் இவளைக் காப்பாத்தணும்.." (ப.25), "..அவன் மயான  காண்டம் ஹரிச்சந்திரனைப் போல், சோக ரசம் ததும்ப,  ஹைதர் காலத்துத் தமிழ்ச் சினிமா பாட்டு ஒன்றைக் கொஞ்சம் ரீ-மாடல் செய்து இந்தி மெட்டில் பாடிக்கொண்டிருக்கிறான்..." (ப.32).

மறதி வாழ்க (நாடகங்கள்), அழகிரி விசுவநாதன், அழகுமலை பதிப்பகம், 114, கோயில் தெரு, மராட்டியத் தெரு அருகில், டபீர் குளம் சாலை, கீழவாசல், தஞ்சாவூர் 613 001, அலைபேசி 9442871071, 2014, ரூ.32

நாம் முன்னர் படித்த இவருடைய நூல்கள்    
இந்திய நாட்டில் வாழும் அலிகளுடைய வாழ்க்கை முறைகள், கஷ்டநஷ்டங்கள், அவமானங்கள், அவர்களுக்கு நல்வாழ்வு தருவதற்கான வழிமுறைகள். இவற்றைச் சொல்லும் ஒரு வித்தியாசமான நாவல் கமலி என்று தனது புதினத்தை அறிமுகப்படுத்துகிறார் அதன் ஆசிரியர் திரு அழகிரி விசுவநாதன் அவர்கள். இப்புதினத்தில் அவர் சமுதாயத்தில் தமக்கென ஓர் இடத்தைப் பெற்றுள்ள திருநங்கைகளின் உடல் மற்றும் உணர்வுப் பிரதிபலிப்புகளை மிகவும் தத்ரூபமாகப் படைத்துள்ளார். திருநங்கைகளை கடவுளின் குழந்தைகள் என அழைக்கும் அவர், தமது படைப்பாற்றல் மூலமாக அவர்களைப் பற்றிய ஓர் அருமையான பதிவை நம் முன் வைத்துள்ளார். அவர்களைப் பற்றிய புராண சித்தரிப்பு, வாழ்க்கை நிலை, உடற்கூறு சார்ந்த நிலை, அறிவியல் முன்னேற்றத்தின் துணையுடன் அவர்களுடம் இயல்பான வாழ்வினை மேற்கொள்ளலாம் என்ற கருத்து, அரசு மற்றும் சமுதாயம் அவர்களை நடத்த வேண்டிய முறை உள்ளிட்ட அனைத்தையும் வாசகர் மனதை வருடும்படி எழுதியுள்ளார். அனைத்திற்கும் மேலாக நம்மைப்போல அவர்களுக்கும் உணர்வு உண்டு, இதயம் உண்டு என்பதை வெளிப்படுத்தி படிப்பவர் மனம் நெகிழும்படி செய்துள்ளார். இந்நூலைப் படிப்பவர்களுக்குத் திருநங்கைகளால் எதையும் சாதிக்கமுடியும் என்ற சிந்தனை ஏற்படுவதோடு அவர்களைப் புதிய நோக்கில் பார்ககவும் எண்ணத்தோன்றும்.   

எனது அணிந்துரையிலிருந்து : சிறுகதைச்செம்மல் என்றால் நம் நினைவுக்கு வருபவர் மூத்த எழுத்தாளர் ஐயா திரு. அழகிரி விசுவநாதன் (1931). 200க்கும் மேற்பட்ட சிறுகதைகள் மூலம் வாசகர்களைத் தன் எழுத்தால் கவர்ந்த அவர் சிறுகதைத்தொகுப்புகள், நாவல்களைத் தொடர்ந்து தற்போது கவிதைத்தொகுப்பு வெளியிட்டுள்ளார். இக்கவிதைத் தொகுப்பினைப் படிக்கும்போது அவருடைய பல்துறை அறிவையும், கற்பனை வளத்தையும் புரிந்துகொள்ள முடிகிறது. 78 கவிதைகளைக் கொண்ட இத்தொகுப்பில் சமூக அவலம், தத்துவம், மனப்பக்குவம், நம்பிக்கை, ஆன்மிகம், இயற்கை, அரசியல், ஊழல், பயங்கரவாதம் உள்ளிட்ட பலவற்றைப் பற்றிய கவிதைகளைக் காணமுடிகிறது.

நூலின் அணிந்துரையிலிருந்து:  எழுத்தைச் சுவாசமாகக் கொண்டவர் மூத்த எழுத்தாளர் ஐயா திரு அழகிரி விசுவநாதன் (2.3.1931) அவர்கள். தற்பொழுது 15 சிறுகதைகளைக் கொண்ட ஆயிரம் ரூபாய் நோட்டு என்ற தலைப்பிலான இந்தச் சிறுகதைத் தொகுப்பின் மூலமாக வாசகர்களுடன் இன்னும் நெருக்கமாகிறார். இதற்கு முன்னர் நன்றிக்கடன், ரயிலே நில்லு, அப்பா இது நியாயமா? என்ற தலைப்புகளில் அவரது சிறுகதைத் தொகுப்புகள் வெளிவந்துள்ளன. ஒவ்வொரு கதையைப் படிக்கும்போதும் அடுத்து வரப்போவது என்ன என்ற ஆவல் படிக்கும் வாசகருக்கு எழுமளவு அவரது எழுத்துக்கள் உள்ளன.

அழகிரி விசுவநாதன் ஐயாஅவர்களுடைய புதிய வெளியீடுகள் குறித்த செய்தி  தினமணி, தஞ்சை, 2.3.2014, ப.3