23 May 2020

விக்கிப்பீடியா 1000 : பதிவு அனுபவங்கள் மின்னூல்

விக்கிப்பீடியாவில் ஜுலை 2014இல், எழுத ஆரம்பித்து ஏப்ரல் 2020இல் 1000ஆவது பதிவினை நிறைவு செய்தேன். விக்கிப்பீடியாவில் எழுதுவது மிகவும் எளிது என்பதை நாளடைவில் உணர்ந்தேன். கட்டுரைகள் எழுதியபோது பெற்ற அனுபவங்களை மின்னூலாக வெளியிட்டுள்ளேன். என் முயற்சியில் துணை நின்ற அனைவருக்கும், அமேசான் தளத்திற்கும் என் மனமார்ந்த நன்றி.

விக்கிப்பீடியாவில் எழுத ஆரம்பித்தபோது தமிழுக்கான சிறந்த பங்களிப்பாக உணர்ந்தேன். கட்டுரை நீக்கப்படவுள்ளதாக தகவல் வந்தபோது குறைகளை நீக்கி, பதிவினை  மேம்படுத்தினேன். பின்னர் அவை ஏற்கப்பட்டன. எவற்றைச் செய்வது என்பதைவிட எவற்றைச் செய்யக்கூடாது என்பதை கவனத்தில் கொண்டேன். விக்கிப்பீடியாவின் நற்பழக்க வழக்கங்கள், கொள்கைகள், வழிகாட்டல்களை முறையாகக் கடைபிடித்து, நெறிமுறைகளின்படி எழுதும்போது கட்டுரைகள் ஏற்கப்படுவதை அனுபவத்தில் அறிந்தேன். எழுத ஆரம்பித்த முதல் கடந்த மைல்கற்களைக் காண்போம்.

 • பயனராகாமல் முதல் பதிவு, நீக்கம், ஜுன் 2013
 • என்னைப் பற்றி எழுதுதல், தலைப்புப் பிரிப்பு, பயனர் ஆதல்
 • முதல் பதிவு எழுதி, மேம்படுத்துதல், 6 ஜுலை 2014
 • முந்தைய மாத 250 தொகுப்புகளுக்காக பாராட்டு பெறல், ஆகஸ்டு 2014
 • அசத்தும் புதிய பயனர், விடாமுயற்சியாளர், தொடர் பங்களிப்பு (ஆகஸ்டு 2014), சைவ சமயப் பங்களிப்பு (அக்டோபர் 2014) ஆகியவற்றுக்கான பதக்கங்கள் பெறல்.
 • விக்கிகாமன்சில் முதல் படிமம் பதிவு, 15 செப்டம்பர் 2014
 • முதற்பக்கத்தில் “உங்களுக்குத் தெரியுமா?” பகுதியில் நான் ஆரம்பித்த/ மேம்படுத்திய சரபேந்திர பூபாலக் குறவஞ்சி (15 அக்டோபர் 2014), ஆதுர சாலை (29 அக்டோபர் 2014), கங்கா ஆரத்தி (நவம்பர் 2014),  ஆழித்தேர் (17 ஜுன் 2015), தஞ்சைப் பெருவுடையார் கோயில் (20 ஜனவரி 2016)  கட்டுரைகளிலிருந்து தகவல்கள் வெளிவரல்
 • புதுக்கோட்டை கணினி தமிழ்ச்சங்க வலைப்பதிவர் திருவிழாவில் முன்னோடி விக்கிப்பீடியா எழுத்தாளர் விருதினைப் பெறல், அக்டோபர் 2015
 • முகப்புப்பக்கத்தில்  பங்களிப்பாளராக அறிமுகமாதல், 1 நவம்பர் 2015
 • “Writer of 250 articles in Tamil Wikipedia” செய்திக் கட்டுரை வெளிவரல்,  TheNew Indian Express,13 November 2015
 • என் கணக்கு தற்காவல் பயனர் உரிமைக்கு மாற்றப்படல், ஜுலை 2016
 • விக்கிக்கோப்பை வெற்றியாளர், 253 பதிவுகள், மூன்றாம் இடம், 2017
 • “விக்கிப்பீடியா போட்டியில் மூன்றாமிடம் பெற்ற தமிழ்ப் பல்கலைக்கழகக் கண்காணிப்பாளர்” செய்தி வெளிவரல்,  தினமணி, 7 மார்ச் 2017
 • வேங்கைத்திட்டம் வெற்றியாளர், 260 பதிவுகள், மூன்றாம் இடம், 2019
 • ஆசிய மாதம் வெற்றியாளர், 115 பதிவுகள், இரண்டாம் இடம், 2019
 • “வியக்க வைக்கும் விக்கிப்பீடியா பதிவர்” கட்டுரை வெளிவரல், புதிய தலைமுறை, 13 பிப்ரவரி 2020
 • விக்கிப்பீடியாவில் 1000 பதிவுகள் நிறைவு, ஏப்ரல் 2020
 • ஆங்கில விக்கிப்பீடியாவின் முதல் பக்கத்தில், “Did You Know?” பகுதியில், நான் ஆரம்பித்த Thukkachi Abatsahayesvar temple கட்டுரையிலிருந்து வெளிவரல், 20 ஆகஸ்டு 2017 
 • ஆங்கில விக்கிப்பீடியாவில் கோயில்கள் தொடர்பான 190 உள்ளிட்ட 210 பதிவுகள் நிறைவு, மே 2020
 • ஆங்கில விக்கிப்பீடியாவின் WikiProject India/The 10,000 Challenge (மே 1, 2020-ஜுலை 31, 2020) திட்டத்தில் கலந்துகொள்ளல்
 • ஆங்கில விக்கிப்பீடியாவில் முதன்முதலாக The Special Barnstar பதக்கத்தினைப் பெறல்

புதிதாக எழுத வருபவர்களுக்கு இந்நூல் மிகவும் உதவியாக இருக்கும் என்று நம்புகிறேன். வாய்ப்பு கிடைக்கும்போது நூலை வாசித்து கருத்தினை அமேசான் தளத்தில் தெரிவிக்க வேண்டுகிறேன். நூலைப் பெற கீழ்க்கண்ட இணைப்பினைச் சொடுக்க வேண்டுகிறேன்.

இந்நூலைப் பற்றிய நண்பர்களின் மதிப்புரைகள், அவர்களுக்கு நன்றியுடன் :
திரு கரந்தை ஜெயக்குமார் சாதனையாளரை வாழ்த்துவோம்  


21 ஜனவரி 2021இல் மேம்படுத்தப்பட்டது,

16 May 2020

2019ஆம் ஆண்டின் சிறந்த சொற்கள்-அகராதிகளின் தெரிவு : தினமணி

2019ஆம் ஆண்டின் சிறந்த சொற்கள்-அகராதிகளின் தெரிவு என்ற தலைப்பில் என்னுடைய கட்டுரை தினமணி  தளத்தில் (11 மே 2020) வெளியாகியுள்ளது. அதனைப் பகிர்வதில் மகிழ்கிறேன், தினமணி இதழுக்கு நன்றியுடன்.


2019இன் சிறந்த ஆங்கிலச்சொற்களாக கிளைமேட் எமர்ஜென்சி (ஆக்ஸ்போர்டு), அப்சைக்கிளிங் (கேம்பிரிட்ஜ்), தே (மெரியம் வெப்ஸ்டர்), கிளைமேட் ஸ்ட்ரைக் (காலின்ஸ்) ஆகிய சொற்களை அகராதிகளும், எக்சிஸ்டென்சியல் என்ற சொல்லை டிஸ்னரி இணைய தளமும் தெரிவு செய்துள்ளன.  சம்விதான் என்ற சொல்லை சிறந்த இந்தி சொல்லாக ஆக்ஸ்போர்டு அகராதி தேர்ந்தெடுத்துள்ளது. 2019க்கான சிறந்த ஆங்கிலச் சொற்கள் தெரிவு செய்ததற்கான பின்புலத்தினைப் பற்றி அந்த அகராதிகள்  கூறுவதைக் காண்போம்.   

ஆக்ஸ்போர்டு அகராதி தேர்ந்தெடுத்த சொல் “கிளைமேட் எமர்ஜென்சி” (climate emergency/கால நிலை அவசர நிலை) என்பதாகும். இச்சொல்லின் பயன்பாடு பல நூறு மடங்கு (10,796 விழுக்காடு) உயர்ந்ததோடு, தற்போதுள்ள அவசர நிலையை வெளிப்படுத்துவதாகவும், இந்த ஆண்டில் கால நிலை என்ற சொல் அவசரம் என்பதோடு இணைந்து, ஆரோக்கிய அவசரம் என்பதைவிட மூன்று பங்கு பயன்படுத்தப்பட்டுள்ளது. 2019இல் நூற்றுக்கணக்கான நகரங்களும், நாடுகளும் பருவநிலை அவசர நிலையை அறிவித்துள்ளன. இச்சொல் கால நிலை நெருக்கடி, கால நிலை நடவடிக்கை, கால நிலை மறுப்பு, அழிவு, புவி வெப்பமயமாதல் போன்ற சொற்களுடன் போட்டியிட்டு முதலிடத்தைப் பெற்றுள்ளது. பருவ மாற்றத்தைக் குறைக்கவோ கட்டுப்படுத்தவோ, அதனால் விளைகின்ற சுற்றுச்சூழல் தாக்கத்தைத் தவிர்க்கவோ எடுக்கப்படுகின்ற நடவடிக்கையை இது குறிக்கிறது. ஐக்கிய நாடுகள் செயலர் இதனை இக்காலகட்ட முக்கியமான பிரச்னை என்று கூறியுள்ளார். இச்சொல் பற்றிய விவாதத்தோடு மட்டுமன்றி, அதிகமான செயல்பாடுகளும் பரவலாகக் காணப்படுகின்றன. 2019இல் அதிகம் பயன்படுத்தப்பட்ட சொல்லாக ஆக்ஸ்போர்டு கார்பஸ் தொகுப்பிலும் காணப்பட்டது. 2018ஐவிட 2019இல், செப்டம்பர் 2019 வரை இதன் பயன்பாடானது 100 விழுக்காடு அதிகரித்துள்ளது. இந்த வகையில் தான் எமர்சென்ஜி என்ற சொல் முக்கியத்துவம் பெறுகிறது.
சம்விதான் என்ற இந்திச்சொல்லை இந்த ஆண்டின் சிறந்த சொல்லாக இவ்வகராதி தேர்ந்தெடுத்தது. சம்விதான் என்றால் அரசியல் அமைப்பு என்று பொருளாகும்.

கேம்பிரிட்ஜ் அகராதி தேர்ந்தெடுத்த சொல் “அப்சைக்ளிங்” (upcycling/மறுசுழற்சி) என்பதாகும். பழைய அல்லது பயன்படுத்தப்பட்ட பொருள்களைக் கொண்டு உருவாக்குகின்ற புதிய தளவாடங்களையோ பொருள்களையோ உருவாக்குவதைக் குறிக்கின்ற இச்சொல் இவ்வகராதியின் இன்ஸ்டாகிராம் ரசிகர்களின் தேர்வு அடிப்படையில் தெரிவு செய்யப்பட்டது. 4 ஜுலை 2019ஆம் நாளன்று பகிரப்படும்போது மற்ற சொற்களைவிட இதற்கு அதிகமான ஆதரவு கிடைத்தது. வாசகர்கள் இதனை ஒரு சொல்லாகக் கருதுவதோடு மட்டுமன்றி, அதனை ஒரு நேர்மறை உத்தியாகவே கருதுகின்றனர் என்கிறார் இவ்வகராதியின் பதிப்பக மேலாளர். ஒரு தனிப்பட்ட நபரால் மேற்கொள்ளப்படுகின்ற உறுதியான செயல்பாடான அப்சைக்ளிங், ஒரு வேறுபாட்டையே உண்டாக்குகிறது என்கிறார் அவர். 2011 டிசம்பரிலிருந்து இச்சொல்லின் பயன்பாடானது 181 விழுக்காடு அதிகரித்துவிட்டதாகவும் கடந்த ஆண்டு மட்டும் இச்சொல்லுக்கான தேடல் இரு மடங்காகிவிட்டது என்றும் அவர் கூறுகிறார்.

மெரியம் வெப்ஸ்டர் அகராதி தேர்ந்தெடுத்த சொல் “தே” (they/அவர்கள்) என்பதாகும். நபர்களின் அல்லது பொருள்களின் பெயருக்குப் பதிலாக வருகின்ற பிரதி பெயர்ச்சொல் அல்லது சுட்டுப்பெயர்ச்சொல் தற்போது முக்கியமான இடத்தைப் பெறுகிறது. பொதுவாக செய்திகளில் கையாளப்படுவதன் அடிப்படையில் சொற்கள் தேர்ந்தெடுக்கப்பட்டாலும்கூட மொழியின் அடிப்படையில் நோக்கும்போது அகராதி என்பதானது ஒரு முதன்மை ஆதாரமாக அமைந்துவிடுகிறது. கடந்த ஆண்டைக்காட்டிலும் 2019இல் இச்சொல்லுக்கான தேடல் 313 விழுக்காடு உயர்ந்துள்ளது. கடந்த 600 ஆண்டுகளாக அவர்கள்/அவைகள் என்ற சொல் பயன்பாட்டில் இருந்து வந்துள்ளது. அண்மைக்காலமாக ஒரு நபரைக் குறிக்க பயன்படுத்தப்படும் இச்சொல் ஆங்கில மொழியில் பரவலாக நிறுவப்பட்ட நிலையில் அகராதியில் இணைக்கப்பட்டது.  இச்சொல்லை ஏப்ரல் 2019இல் வாஷிங்டன் மாநில இந்திய அமெரிக்க, அமெரிக்கக் கீழவை உறுப்பினரான பிரமிளா ஜெயபால் தன் குழந்தையின் பாலினத்தைப் பற்றிக் குறிப்பிடும்போதும், செப்டம்பர் 2019இல்  ஆங்கிலப் பாடகரான சாம் ஸ்மித் தனிப்பட்ட சுட்டுப்பெயரைக் குறிப்பிடும்போதும் பயன்படுத்தினர். அமெரிக்க உளவியல் சங்கத்தின் வலைப்பூ  அலுவல்பூர்வமாக அவன்/அவள் என்பதற்கு பதிலாக அவர்கள் என்ற சொல்லைப் பயன்படுத்தலாம் என்று பரிந்துரைத்துள்ளது. 

காலின்ஸ் அகராதி தேர்ந்தெடுத்த சொல் “கிளைமேட் ஸ்ட்ரைக்” (climate strike/கால நிலை வேலை நிறுத்தம்) என்பதாகும். பருவ நிலை வேலை நிறுத்தம் என்பது கடந்த ஓராண்டுக்கு முன்னர் சுற்றுச்சூழல் ஆர்வலரான கிரேட்டா தன்பர்க்கால் மேற்கொள்ளப்பட்ட உலகளாவிய இயக்கமாகப் பரவ ஆரம்பித்த, ஒரு விதமான எதிர்ப்பாகும். முதன்முதலாக இச்சொல் நவம்பர் 2015இல் பாரிஸில் ஐக்கிய நாடுகள் சவையின் பருவ நிலை மாற்ற மாநாடு நடைபெற்ற காலகட்டத்தில் முதல் நிகழ்வு நடைபெற்றபோது பதிவானது. அடுத்த ஓராண்டிற்குள் உலகம் முழுவதும் பருவ நிலை ஆர்ப்பாட்டம் பரவ ஆரம்பித்து, உலகின் பெரிய நகரங்கள்அதன் தாக்கத்தை உணர ஆரம்பித்தன. 2013இல் பிபிசி நடத்திய ப்ளூ ப்ளானட் இரண்டாம் பகுதியில் பருவ நிலை தொடர்பான செய்திகளையும், புகைப்படங்களையும் ரசிகர்கள் பார்க்க ஆரம்பித்தபின்னர் நான்கு மடங்கு அதிகரிக்க ஆரம்பித்த இச்சொல்லின் பயன்பாடானது, 2019இல் 100 மடங்கு உயர்ந்துவிட்டதாக காலின்ஸ் அகராதியின் அகராதியியலாளர்கள் கூறுகின்றார்கள்.

டிஸ்னரி இணையதளம் தேர்ந்தெடுத்த சொல் “இருத்தலியல்” (existential /இருத்தலியல்) என்பதாகும். இச்சொல் இருத்தல்  மற்றும் மனித இருத்தல் தொடர்பானவற்றைக் குறிக்கிறது. 1600களின் இறுதியில் ஒருவரின்/ஒன்றின் இருத்தலுக்கான ஆபத்தை, குறிப்பாக ஓர் இனம் எதிர்கொள்கின்ற பேரழிவினை இச்சொல் குறித்தது. லத்தீன் மொழியில் வினைச்சொல்லான இச்சொல் ஜெர்மன் பெயரைக் கொண்ட, முதன்முதலில் 1919இல் பதிவான,  தத்துவ இயக்கம் என்பதிலிருந்து ஆங்கிலத்திற்கு வந்ததாகும். 2019இல் இருத்தலியல் என்பதானது காலநிலை மாற்றம், துப்பாக்கிக் கலாச்சாரம், ஜனநாயக நிறுவனங்கள் என்ற பரந்துபட்ட அளவில் விவாதிக்கப்பட்டது. பிப்ரவரி 25இல் அமெரிக்க ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரான பெர்னி சாண்டர்ஸ் பருவ நிலை மாற்றம் பற்றி விவாதித்தபோது இருத்தலியலுக்கான தேடல் 179 விழுக்காட்டிற்கு உயர்ந்தது. உலகளவில் நடைபெற்ற பருவ நிலை ஆர்ப்பாட்டங்களின்போதும், தன்னுடைய உரைகளின்போதும் செப்டம்பர் 2019இல் சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரேட்டா தன்பர்க் கூறியதையும் நினைவில் கொள்ளவேண்டும். குறிப்பாக அமெரிக்க காங்கிரசிடம் அவர் தனக்கு ஒரு கனவு உள்ளதாகவும், ஆட்சிப்பொறுப்பில் உள்ளவர்களும், ஊடகங்களும் பருவநிலை ஆபத்தை  இருத்தலியலின் அவசர நிலையாகக் கொண்டு செயல்பட ஆரம்பிக்கவேண்டும் என்று கூறியிருந்தார்.
ஒவ்வோராண்டும் ஆங்கில அகராதிகள் ஆண்டின் சிறந்த ஆங்கிலச் சொல்லாக ஆங்கிலச் சொற்களைத் தேர்ந்தெடுத்து வருகின்றன. ஆக்ஸ்போர்டு அகராதி கடந்த சில ஆண்டுகளாக ஆண்டின் சிறந்த இந்தி சொல்லைத் தேர்ந்தெடுத்து வருகிறது. இவ்வாறாக தமிழிலும் ஆண்டின் சிறந்த தமிழ்ச்சொல் தேர்ந்தெடுக்கப்படும் சூழல் அமையும் என்று நம்புவோம். தமிழகக் கல்வி நிறுவனங்கள், அகராதி அமைப்புகள் இதற்கான முன்னெடுப்புகளை மேற்கொள்ளலாம்.

துணை நின்றவை
Oxford Dictionary, Word of the Year 2019
Cambridge Dictionary announces ‘upcycling’ as World of the Year 2019
Merriam Webster, Word of the Year 2019
The Collins word of the year 2019 is climate strike  
Dictionary.com’s Word Of The Year 2019 For 2019 Is….

02 May 2020

விண்வெளி வீராங்கனை கிறிஸ்டினா கோச்

மத்திய ஆசியாவில் வாழ்கின்ற, குதிரையின்மீது அமர்ந்து சென்றுகொண்டிருந்த கசாக் எனப்படுகின்ற இனக்குழுவினர் நாசா விண்வெளி ஆய்வு மையத்தைச் சேர்ந்த அமெரிக்க விண்வெளி வீராங்கனையான கிறிஸ்டினா கோச் பூமியில் இறங்குவதை பார்த்தவர்களில் முக்கியமானவர்கள் ஆவர். 328 நாள் விண்வெளியில் தம் வாழ்நாளைக் கழித்த  கிறிஸ்டினா, கஜகிஸ்தானில் கசாக் புல்வெளியில் சோயுஸ் விண்கலத்திலிருந்து புன்னகை ததும்புகின்ற அழகான முகத்தோடு வெளியே வந்தார்.


இவருக்கு முன்னர் 288 நாட்களில் சாதனை படைத்த ஓய்வுபெற்ற விண்வெளி வீராங்கனையான பெக்கி விட்சன், கிறிஸ்டினாவிற்கு அதிக உற்சாகம் தந்தவர் ஆவார். "சாதனைகள் முறியடிப்பதற்காகவே படைக்கப்படுகின்றன. இது முன்னேற்றத்தின் அடையாளம்!" என்று பெக்கி விட்சன் கூறினார். ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு முதல் விண்வெளி நடையின் பயிற்சியில் கலந்து கொள்ள நேரம் ஒதுக்கிய தன் முன்னோடியான பெக்கி விட்சனின் சாதனையை முறியடித்த பின் அவரைத் தன்னுடைய கதாநாயகி என்றும் வழிகாட்டி என்று பெருமையோடு கூறினார் கிறிஸ்டினா. அடுத்த தலைமுறை ஆய்வாளர்கள் ஊக்குவிக்கப்படவேண்டும் என்ற தன் ஆர்வத்தையும் வெளிப்படுத்தினார்.
கிட்டத்தட்ட ஓராண்டு விண்கலத்தில் இருந்து விண்வெளியில் நீண்ட காலம் தங்கி ஆய்வு மேற்கொண்ட பெண்மணி என்ற பெருமையைப் பெற்றவர் கிறிஸ்டினா. மார்ச் 14, 2019ஆம் நாளன்று சோயுஸ் விண்கலம் மூலமாக விண்வெளி ஆய்வு மையத்திற்கு அனுப்பிவைக்கப்பட்ட அவர் 328 நாள்களுக்குப் பின் பிப்ரவரி 6, 2020 அன்று பூமியில் வந்திறங்கினார். அவருடன் தரையிறங்கியவர்கள் ஐரோப்பிய விண்வெளி நிறுவனத்தைச் சேர்ந்த லூசா பார்மிடானோ மற்றும் ரஷ்ய விண்வெளி நிறுவனத்தைச் சேர்ந்த அலெக்ஸாண்டர் ஸ்க்வோர்ட்சாவ் ஆவர். 
தான் உண்மையில் மிதந்து கொண்டிருந்ததை மறந்துவிட்டதாகவும், மிதக்கும் செயலை இயல்பாக்கிக் கொள்வதற்கு மனித மனதின் திறனை உணர்வது மிகவும் ஆச்சரியத்தைத்த் தந்தது என்றும், வலது பக்கமாக வேலை செய்வது போலவே தலைகீழாக இருந்துகொண்டு செய்வது மிகவும் சாதாரணமாகத் தெரிந்தது என்றும், விண்வெளி நிலையத்தில் இருந்தபோது பறந்துகொண்டே இருந்த தன் அனுபவத்தை கூறினார். 
மேலும் அவர் தம் உடல்கள் விண்வெளிச்சூழலுக்குத் தகுந்தவாறு தகவமைத்துக் கொள்வதைப் பார்க்கும்போது விண்வெளி வாழ்க்கை இயல்பானதாகத் தோன்றியது என்று தன் ஆச்சர்யத்தை வெளிப்படுத்தினார்.  விண்வெளியில் தான் அனுபவித்த தரைக்கும் விதானத்திற்கும் இடையே தான் மிதந்த அந்த ஜீரோ கிரேவிட்டி எனப்படுகின்ற அந்தரத்தில் நிற்கின்ற எடையற்ற தன்மையினை நினைவுகூர்ந்தார். 

புன்சிரிப்போடு   கிறிஸ்டினா தனக்கு கிடைத்த மறக்கமுடியாத பொருட்களைப் பற்றிக் கூறும்போது தன் கணவரிடமிருந்து கையால் எழுதப்பட்ட கடிதங்களைப் பற்றி ஆர்வமாகப் பேசினார். கடிதம் எழுதப்பட்ட காலத்திற்கும் அது விண்வெளி நிலையத்திற்கு வந்ததற்கும் இடையில் இருந்த அதிக தாமதம் ஒரு பொருட்டே அல்ல. “இந்தத் தருணத்திற்கு கடிதங்கள் அவசியமானவை அல்ல. இருந்தபோதிலும் அக்கடிதங்கள் மூலமாக வெளிப்படுகின்ற உணர்வுகள் முக்கியமானவையாக அமைந்துவிடுகின்றன. அப்போது நீங்கள் அதிகம் நேசிப்பது என்னவென்றால் பூமியில் நீங்கள் நேசிக்கும் ஒருவர் அனுப்பியதை உங்கள் கையில் வைத்திருப்பது உண்மையில் மிகவும் சிறப்பு வாய்ந்தது." என்றார்.

கடலோரத்தில் வட கரோலினாவின் ஜாக்சன்வில்லில் வளர்ந்த கிறிஸ்டினா, தான் வளர்ந்த பகுதியில் இருந்த தன் ஊரை விண்வெளியிலிருந்து முதன்முதலாக பார்த்ததைப் பெருமையோடு கூறினார். அண்டார்டிக் மற்றும் ஆர்க்டிக் பகுதிகளில் பல ஆண்டுகள் பணிபுரிந்தபோது தரையில் இருந்து பார்த்து துருவ ஒளிகளை விண்வெளி நிலையத்திலிருந்து பார்த்து ரசித்ததாகக் கூறினார்.  வட, தென் துருவங்களுக்கு அருகில் தோன்றுகின்ற அபூர்வ ஒளியானது பெரும்பாலும் இரவு நேரங்களில் தோன்றுகின்ற இந்த ஒளித் தோற்றமானது உலகம் தோன்றியகாலம் முதலே இருப்பதாக அறிவியலாளர்கள் நம்புகின்றனர்.   தன் கணவர் ராபர்ட் கோச்சுடன் டெக்சாஸில் வசிக்கின்ற கிறிஸ்டினா பேக் பேக்கிங், மலையேற்றம், பேட்லிங், படகோட்டம், ஓட்டம், யோகா, சமூக சேவை, புகைப்படம் எடுத்தல் ஆகியவற்றில் ஆர்வமுள்ளவர் ஆவார். 
தனது கேமராவில் அதிகமான புகைப்படங்களை நிரப்பிக்கொண்டு அவர் பூமிக்குத் திரும்பியுள்ளார். செவ்வாய் கிரகத்திற்கு நீண்ட காலமாக மனிதர்களைக் கொண்ட பயணத்திற்கான திட்டங்கள் மேற்கொள்ளப்படவுள்ள நிலையில் கிறிஸ்டினா சேகரித்துக் கொண்டு வந்துள்ள தகவல்கள் நாசா அறிவியலாளர்களுக்கு மிகவும் பயனுடையதாக இருக்கும். 
அக்டோபர் 18, 2019 அன்று, ஜெசிகாமீரும் இணைந்து அனைத்து பெண் விண்வெளிப்பாதையில் பங்கேற்ற முதல் பெண்கள் என்ற பெருமையைப் பெற்றார். டிசம்பர் 28, 2019 அன்று, விண்வெளியில் மிக நீண்ட நேரம் தொடர்ந்து இருந்த பெண் என்ற சாதனையைப் படைத்தார். இன்றுவரை, 1961 முதல் 560க்கும் மேற்பட்ட ஆண்கள் விண்வெளிக்குச் சென்று வந்துள்ளனர். அதே காலகட்டத்தில் 70க்கும் குறைவான பெண்களே சென்றுவந்துள்ளனர். இருப்பினும் அவர்களில் முக்கியமான இடத்தைப் பெறுகிறார் கிறிஸ்டினா கோச். 

நன்றி : புகைப்படங்கள்
ABC News, BBC, Guardian, Guinness World Record, NASA, New York Times, Space 
துணை நின்றவை
Nearing 328 Days Aboard Space Station, Christina Koch Shares Most Memorable 
Moments, NASA, Jan 31, 2020
விண்வெளியில் நீண்டகாலம் இருக்கும் பெண்மணி என்ற சாதனையை படைத்த கிறிஸ்டினா!, கிஸ்பாட், ஜனவரி 2, 2020
US astronaut Christina Koch returns to Earth after breaking record for female space flight, South China Morning Post, 6 February 2020
Christina Koch returns to Earth after record-breaking space mission, Guardian, 6 February 2020 
NASA Astronaut Returns To Earth After Record-Breaking Space Mission, NDTV, 7 February 2020
Christina Koch, Wikipedia
Christina Koch has just made new strides for women in space,  Guinness World Records, 6 February 2020
Christina Koch lands on earth, and crosses a threshold for women in Space, 
New York Times, 6 February 2020