28 December 2020

மறக்கமுடியா ஆவணப்பதிவு : 2020இல் எங்கள் வெளியீடுகள்

 எங்கள் குடும்பத்தார் அனைவரும் நூல்களை எழுதி வெளியிட்ட வகையில் 2020ஆம் ஆண்டு எங்கள் இல்லத்தைப் பொறுத்தவரை ஒரு முக்கியமான ஆண்டாகக் கருதுகிறோம்.  கொரோனா நேரத்தை நல்லமுறையில் பயன்படுத்த விரும்பி தன் தந்தையைப் பற்றிய நூலைத் தொகுத்து எழுதியுள்ளதை என் மனைவி திருமதி ஜ.பாக்கியவதி தன்னுடைய "அப்பாவுக்காக..." நூலில் குறிப்பிட்டுள்ளார். 

ஒவ்வோராண்டும் அந்த ஆண்டு நிறைவு பெற்றபின் அந்த ஆண்டிற்கான என் கோப்பினை ஒருங்கமைத்து, நூற்கட்டுக்குத் தந்து பாதுகாத்து வருகிறேன். 1976 முதல் இப்பணியினை நான் செய்து வருகிறேன். ஆரம்பத்தில் பொருளடக்கம் இடுவதில்லை. நாளடைவில் இட ஆரம்பித்தேன். என் ஆண்டுக்கான என் கோப்பில் அந்தந்த பொருண்மை தொடர்பான கடிதங்கள் ஒவ்வொரு பகுதியாகப் பிரித்து பொருளடக்கம் இட்டு ஆவணப்படுத்தப்பட்டிருக்கும். 

ஆய்வில் தடம் பதித்தபின்னர் கல்விப்பணிகள் என்ற ஒரு பகுதி ஆரம்பமானது. அதில் நான் கலந்துகொண்ட கருத்தரங்குகள், இதழ்களில் வெளியான கட்டுரைகள் பற்றிய விவரங்களைச் சேர்ப்பேன். பிற பதிவுகளாக முதலில் தமிழ்ப் பல்கலைக்கழகம், கோயில் உலா, விக்கிப்பீடியா, குறிப்பிடத்தக்க சாதனைகள் என்ற வகையில் நானே என்னை சுயமதிப்பீடு செய்து கொள்வேன். எந்த இடத்தில் குறையுள்ளதோ அதனை உற்றுநோக்கி சரிசெய்ய இந்த உத்தி எனக்கு உதவியாக இருப்பதை நான் உணர்ந்து வருகிறேன்.

2020ஆம் ஆண்டின் கோப்பில் சிறப்பாகவும்  வித்தியாசமாகவும் நான் பதிந்தது எங்கள் வீட்டில் அனைவரும் நூல் எழுதியதைப் பற்றிய குறிப்புகள் ஆகும். அந்த வகையில் இது மறக்கமுடியாத ஆவணப்பதிவாக அமைந்துவிட்டது.பா.ஜம்புலிங்கம் (விக்கிப்பீடியா 1000 : பதிவு அனுபவங்கள்/மே 2020/மின்னூல்), எங்கள் மூத்த மகன் முனைவர் ஜ.பாரத் (கடவுள்களுடன் தேநீர்/ஜுன் 2020/மின்னூல், அச்சு நூல்), என் மனைவி திருமதி ஜ.பாக்கியவதி (அப்பாவுக்காக/நவம்பர் 2020/அச்சு நூல்), எங்கள் இளைய மகன் திரு ஜ.சிவகுரு (100 நூறு வார்த்தை கதைகள்/டிசம்பர் 2020/மின்னூல், அச்சு நூல்) என்ற வகையில் இந்த ஆண்டு எங்கள் குடும்பத்து உறுப்பினர்கள் நூல்களை வெளியிட்டுள்ளோம். 

2020ஆம் ஆண்டு எங்கள் நினைவில் நிற்கும் ஆண்டாக அமைந்துவிட்டது. கொரோனா எதிர்மறையை நேர்மறையாக்கி, எங்கள் எழுத்துப்பணிக்குத் துணைநின்ற நண்பர்கள், உறவினர்கள் அனைவருக்கும் என் சார்பாகவும், எங்கள் குடும்பத்தார் சார்பாகவும் மனம் நிறைந்த நன்றி.

நூல்களைப் பெற : 

1) விக்கிப்பீடியா 1000 : பதிவு அனுபவங்கள் மின்னூல் : அமேசான்

2) அப்பாவுக்காக,,, 
அச்சு வடிவம்: முதல் பதிப்புநவம்பர் 2020, தமிழ்க்குடில் பதிப்பகம்தஞ்சாவூர்ரூ.150, தொடர்புக்கு : +91 9488969722,  tamilkudilpathipagam@gmail.com.

3) கடவுள்களுடன் தேநீர் 
மின்னூல் : அமேசான்
அச்சு வடிவம் : முதல் பதிப்புஜுன் 2020, ஜீவா படைப்பகம்காஞ்சீபுரம்  ரூ.120, தொடர்புக்கு : +91 9994220250  jeevapataippagam@gmail.com.

4) 100 நூறு வார்த்தைக்கதைகள் 
மின்னூல் : அமேசான்
அச்சு வடிவம் : முதல் பதிப்புடிசம்பர் 2020, ரூ.120, தொடர்புக்கு : +91 9488969722, tamilkudilpathipagam@gmail.com.

நன்றி  : எழுத்துக் குடும்பம், இந்து தமிழ் திசை, 2 ஜனவரி 2021


2 ஜனவரி 2021இல் மேம்படுத்தப்பட்டது

19 December 2020

சாதனைச்சிறுமி கீதாஞ்சலி ராவ்

1927ஆம் ஆண்டு முதல் ஆண்டின் மிகச்சிறந்த நபர் விருதினை அளித்து வரும் டைம் இதழ் முதன்முதலாக அப்பெருமையை இந்த ஆண்டுக்கு ஒரு பெண் குழந்தைக்குச் சூட்டி பெருமைப்படுத்துகிறது. 2019இல் டைம் இதழ் மிகக்குறைந்த வயதில், அதாவது 16ஆம் வயதில், ஆண்டின் மிகச் சிறந்த நபராக கிரேட்டா தன்பர்க்கை அறிவித்தது நினைவிருக்கலாம். கிட்டத்தட்ட அவரை நினைவுபடுத்துகின்ற மற்றொருவரை 2020இல் கிட் ஆஃப் தி இயர்  (Kid of the year), என்று அவ்விதழ் அறிவித்துள்ளது.

 

எட்டு வயது முதல் 16 வயதிற்குட்பட்ட, அமெரிக்காவைச் சேர்ந்த 5,000 சிறுவர்களிலிருந்து முதன்முதலாக ஆண்டின் சிறந்த சிறுமியாக டைம் இதழ் தேர்ந்தெடுத்துள்ள அறிவியலாளர் கீதாஞ்சலி ராவ் (15) ஆவார். கூர்ந்து கவனித்தல், கருத்து உதிர்ப்பு, ஆய்வு மேற்கொள், கட்டுமானம் செய் மற்றும் தொடர்புகொள்ளல் என்பதே இவருடைய செயல்பாட்டு அம்சங்கள் ஆகும்.  உலகில் பரவலாகக் காணப்படுகின்ற அசுத்தமான குடிநீர் தொடங்கி அபினி  போதைப்பழக்கத்திற்கு அடிமையாதல் மற்றும் இணைய அச்சுறுத்தல் உள்ளிட்ட அனைத்து வகையான பிரச்னைகளுக்கும் தீர்வினைக் கொண்டுள்ளார் இந்தச் சிறுமி. 

2005இல் அமெரிக்காவின் தென்மேற்கு மத்தியப் பகுதியில் அமைந்துள்ள கொலராடோவின் தலைநகரான டென்வர் நகரில் பிறந்த இவர் பல வகையான புதிய தொழில்நுட்பங்களை, பல துறைகளில் கண்டுபிடித்துள்ளார். அவற்றுள் முக்கியமானவை குடிதண்ணீரில் கலந்திருக்கின்ற ஈயத்தின் அளவைக் கண்டறியும் கருவி, இணைய அச்சுறுத்தலை எதிர்கொண்டு நுணுக்கமாகக் கண்டுபிடிக்கின்ற செயலி மற்றும் க்ரோம் விரிவாக்கம் போன்றவையாகும்.

 

டைம் இதழில் இவர், ஏஞ்சலினா ஜோலிக்கு அளித்த இணைய வழியிலான பேட்டி வெளியாகியுள்ளது. அறிவியலாளர் என்றால் இப்படித்தான் இருக்கவேண்டுமென்பதில்லை. வழக்கமாக தொலைக்காட்சியில் ஒரு அறிவியலாளரைப் பார்க்கும்போது அவர் மிகவும் வயதானவராகவே இருப்பார். பெரும்பாலும் ஒரு வெள்ளையர்தான் அறிவியலாளராக இருப்பார். மக்கள் அவ்வாறாக ஒரு முத்திரையைக் குத்திவிடுகின்றனர். உலகில் பரவலாகக் காணப்படுகின்ற பிரச்சினைகளை தீர்ப்பது மட்டுமன்றி மற்றவரையும் அவ்வாறு செய்யத் தூண்டவேண்டும் என்பதே தன் இலக்கு என்கிறார் அவர். தன்னுடைய சொந்த அனுபவத்தின் அடிப்படையில் என்னால் செய்ய முடியும் என்றால் உங்களாலும் செய்ய முடியும். அதனை மற்றவர்களாலும் செய்ய முடியும் என்று நம்பிக்கையோடு கூறுகிறார் அவர். அனைவருடைய முகத்திலும் புன்சிரிப்பைக் காணவேண்டும் என்பதே இந்த இளம் அறிவியலாளரின் ஆவலாகும்.  அனைவரையும் மகிழ்ச்சியோடு இருக்க வைப்பதையே தன்னுடைய விருப்பமாகக் கொண்டுள்ளார்.

 

சமூக மாற்றத்திற்கு ஏற்றவாறு அறிவியலையும் தொழில்நுட்பத்தையும் பயன்படுத்திக் கொள்ள ஆரம்பித்து சாதனை படைத்தவர் அவர். கார்பன் நானோடியூப் சென்சார் தொழில்நுட்பம் தொடர்பாக ஆய்வு செய்ய தன்னுடைய விருப்பத்தினை பெற்றோரிடம் தெரிவித்தபோது அவருடைய வயது 10. 2014இல் முதன்முதலாக அமெரிக்காவில் மிச்சிகனில் உள்ள கிளிண்ட் என்ற இடத்தில் ஏற்பட்ட குடிநீர் மாசு இவருக்கு ஓர் ஆரம்பமாக அமைந்தது. அப்போதுதான் குடிநீரில் உள்ள ஈயத்தின் அளவினைக் கணக்கிட்டார். கீதாஞ்சலியின் கண்டுபிடிப்புக்கு தேதீஸ் (Tethys) என்ற, சுத்தமான நீரைக்குறிக்கின்ற, கிரேக்க பெண் கடவுளின் பெயர் சூட்டப்பட்டது.

 

கைன்ட்லி (Kindly) எனப்படுகின்ற செயலி மற்றும் க்ரோம் விரிவாக்க சேவை மூலமாக இணைய அச்சுறுத்தலை, அதன் ஆரம்ப நிலையிலேயே செயற்கை நுண்ணறிவின் துணைகொண்டு கண்டுபிடிக்க முடியும் என்கிறார் அவர். அச்சுறுத்தல் தொடர்பான சில சொற்களுக்கான குறியீடுகளை முதலில் அமைத்துக்கொண்டு அதனை அவருடைய பொறி மூலமாக அனுப்பும்போது, அதையொத்த சொற்களை அடையாளப்படுத்த முடிந்தது என்கிறார் அவர். இந்த உத்தி மூலமாக ஒரு சொல்லையோ சொற்றொடரையோ தட்டச்சு செய்யும்போது  அது அச்சுறுத்தல் தொடர்பானதா என்பதை விளங்கிக்கொள்ள முடியும் என்கிறார் அவர். அச்சுறுத்தல் தொடர்பான சொல்லாக இருந்தால் அச்சொல்லை எடிட் செய்யவோ, உள்ளது உள்ளபடி அனுப்பவோ முடியும் என்றும், தம்முடைய இலக்கு தண்டிப்பதற்கு அல்ல என்று கூறுகிறார்.


3எம் என்ற நிறுவனத்தின் அறிவியலாளருடன் இணைந்து தம் சோதனைகளை மேற்கொண்டார். 2017இல் அமெரிக்காவில் நடைபெற்ற இளம் அறிவியலாளர் சவாலில் வெற்றி பெற்றார். தம் கண்டுபிடிப்புகளுக்காக போர்ப்ஸ் நிறுவனத்தால் பாராட்டு பெற்றார். 2018இல் நடைபெற்ற மாநாட்டில் தம் கருத்தினை பகிர்ந்துகொண்டார். டெட் தளத்தில் மூன்று முறை உரையாற்றியுள்ளார். செப்டம்பர் 2018இல் ஐக்கிய அமெரிக்க சுற்றுச்சூழல் பாதுகாப்பு நிறுவனத்தின் இளைஞருக்கான சுற்றுச்சூழல் விருதினைப் பெற்றார். மே 2019இல் டிசிஎஸ் இக்னைட் இன்னொவேசன் மாணவர் சவாலில் கலந்துகொண்டு உயரிய விருதினைப் பெற்றார்.  அமெரிக்காவிலுள்ள அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் ஆகியவற்றை உள்ளடக்கிய ஸ்டெம் திட்டத்தில் உறுப்பினராக உள்ளார்.

 

துணை நின்றவை

Gitanjali Rao (Scientist), Wikipedia 
Gitanjali Rao, Inventor, Lone Tree, Colorado, Forbes, Young Scientist Challenge, 2017
Gitanjali Rao: Girl of 11 takes US young scientist prize, BBC News, 19 October 2017
7 Young inventors who see a better way, Time
Kid of the Year: Gitanjali Rao, 15, Lone Tree, Colo, Time
Gitanjali Rao: Time magazine names teenage inventor its first ‘kid of the year’, Guardian, 4 December 2020
A Young Girl Scientist's Guide to Innovation, TED.com talks

12 December 2020

ஆக்ஸ்போர்டு காற்புள்ளி (Oxford comma)

கும்பகோணம் அரசு ஆடவர் கல்லூரியில் (1976-1979) இளங்கலை படித்தபோது இந்தியப்பொருளாதார வளர்ச்சி என்ற பாடத்திற்கான ஆசிரியர் திரு கண்ணன் பொது அறிவு சார்ந்த பல செய்திகளைப் பகிர்ந்துகொள்ள சில நிமிடங்களை ஒதுக்குவார். அவர் கூறியவற்றில் ஒன்று காற்புள்ளி இடுவதைப் பற்றியதாகும். “காற்புள்ளி (கமா) போடும்போது மிகவும் கவனமாக இருக்கவேண்டும். இல்லாவிட்டால் அது சிக்கலில் விட்டுவிடும்” என்று கூறுவார். “மை ஒய்ப் கு ஈஸ் இன் மெட்ராஸ் கம்ஸ் டுமாரோ” (My wife who is in Madras comes tomorrow) என்பதற்கும், “மை ஒய்ப், கு ஈஸ் இன் மெட்ராஸ், கம்ஸ் டுமாரோ” (My wife, who is in Madras, comes tomorrow) என்பதற்கும் உள்ள வேறுபாட்டை அடிக்கடிக் கூறுவார். முதல் சொற்றொடர் “சென்னையிலுள்ள என் மனைவி நாளை வருகிறார்” என்பதையும், இரண்டாவது சொற்றொடர் “என் மனைவி, சென்னையில் இருப்பவர், நாளை வருகிறார்” என்பதையும் குறிக்கும் என்றும், இரண்டாவது சொற்றொடருக்கான பொருள் அந்த நபருக்கு பல ஊர்களில் மனைவிகள் இருப்பது போலவும், அவர்களில் சென்னையில் இருப்பவர் நாளை  வருவது போலவும் பொருள் கொள்ளும் வகையில் அமையும் என்றும் கூறியிருந்தார். அப்போது முதல் காற்புள்ளியை இடும்போது மிகவும் கவனமாக இருந்துவந்துள்ளேன். அண்மையில் இலண்டன் 50 பென்ஸ் நாணயத்தை வெளியிட்டபோது இந்த நிகழ்வு எனக்கு நினைவிற்கு வந்தது. ஐரோப்பிய கூட்டமைப்பில் உறுப்பு நாடாக இருந்த பிரிட்டன் அதிலிருந்து 31  னவரி 2020இல் வெளியேறியதைக் குறிக்கின்ற பிரெக்ஸிட் நினைவாக ‘ஜனவரி 31’ என்ற தேதியைக் கொண்ட அரை பவுண்ட் மதிப்புள்ள 50 பென்ஸ் நாணயத்தை “Peace, prosperity and friendship with all nations” (அமைதி, செழிப்பு மற்றும் அனைத்து நாடுகளுடன் நட்புறவு) என்ற சொற்களோடு  வெளியிட்டது. “இந்த நினைவு நாணயமானது ஒரு புதிய அத்தியாயத்தின் துவக்கம்” என்றார் கருவூலத்தின் தலைவரான சஜிட் டேவிட்.

 

பிரபல புதின எழுத்தாளரான பிலிப் புல்மான் உள்ளிட்டோர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். புல்மான், “பிரெக்ஸிட்டின் 50 பென்ஸ் நாணயத்தில் ஆக்ஸ்போர்டு காற்புள்ளி இடம்பெறவில்லை. ஆதலால் கல்வியறிவுள்ள அனைவரும் இந்த நாணயத்தை புறக்கணிக்க வேண்டும்,” என்றார். “செழிப்பு (prosperity) என்ற சொல்லுக்கு அடுத்தபடியாக காற்புள்ளி இல்லாத நிலை என்னை வதைக்கிறது” என்றார் டைம்ஸ் இலக்கிய இணைப்பிதழின் ஆசிரியரான ஸ்டிக் ஆபெல்.


இது 1801இல் அமெரிக்க ஜனாதிபதியாக தாமஸ் ஜெபர்சன் பதவியேற்றபோது உரையாற்றிய, அவருடைய அரசின் முக்கியக் கொள்கைகளாக கூறியனவற்றுள் இருந்த, “Peace, commerce, and honest friendship with all nations, entangling alliances with none” (அமைதி, வணிகம், மற்றும் அனைத்து நாடுகளுடனும் நட்புறவு எந்த நாடுகளுடனும் சிக்கல் இல்லா கூட்டு)” என்பதை எதிரொலித்தது.  இதில் வணிகம் (commerce) என்ற சொல்லை அடுத்து காற்புள்ளி இடம்பெற்றிருந்தது. இங்கு காற்புள்ளியின்  பயன்பாட்டினையும் முக்கியத்துவத்தையும் கவனத்தில் கொள்ள வேண்டியது மிகவும் அவசியமாகும்.

ஆக்ஸ்போர்டு காற்புள்ளியை (Oxford comma) சீரியல் காற்புள்ளி (serial comma) என்றும் அழைப்பர். ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் வாசகர்கள், ஆசிரியர்கள், எழுத்தாளர்களால் பயன்படுத்தப்படுவதால் இது ஆக்ஸ்போர்டு காற்புள்ளி என்ற பெயரினைப் பெற்றது. மேற்கோள் குறிகளை எங்கெங்கு பயன்படுத்தவேண்டும் என்று தெளிவாக விதி உள்ளது. ஆனால் இதனைப் பொறுத்தவரை தெளிவு எதுவுமில்லை. கிராமர்லி தளத்தின் ஆசிரியர் பிரிட்னி ரோஸ், “பொதுமக்கள் அதனை விரும்புகிறார்கள், அல்லது வெறுக்கிறார்கள், அல்லது அது என்னவென்றே தெரியாமல் இருக்கின்றார்கள்” என்கிறார். ஆக்ஸ்போர்டு அகராதி, “மூன்றோ மூன்றுக்கும் மேலோ உள்ளவற்றைக்குறிப்பிடும்போது, கடைசியாக உள்ள சொல்லுக்கு முன்னே காணப்படுகின்ற ‘மேலும்’ அல்லது ‘அல்லது’ என்ற சொல்லுக்கு முன் இடம்பெறுகின்ற காற்புள்ளியைக் குறிக்கும்” என்கிறது.

 

“நான் இன்று என் பள்ளி நண்பர்கள், குமரன், மேலும் முருகன் உடன் உணவகம் சென்றேன்” என்ற சொற்றொடரில் பள்ளி நண்பர்கள், குமரன், ராமன் என்பது வெவ்வேறு நபரை/நபர்களைக் குறிக்கிறது. குமரனும் ராமனும் பள்ளி நண்பர்கள் இல்லை என்பதை தெளிவுபடுத்த ‘குமரன்’ மற்றும் ‘மேலும்’ என்பதற்கிடையே காற்புள்ளி இடப்பட்டுள்ளது. குமரன் மற்றும் ராமன், பேசப்படுபவரின் பள்ளி நண்பர்கள் அல்ல, அவர்களுடன் உணவகம் வரும் நண்பர்கள். குமரன் மற்றும் ராமன் பள்ளி நண்பர்களாக இருந்திருந்தால் அப்போது என்னுடைய பள்ளி நண்பர்கள், குமரன் மற்றும் ராமன் என்று குறிப்பிட்டிருக்கலாம்.

 

பிரிட்டிஷ் ஆங்கிலத்தில் காற்புள்ளியை பயன்படுத்தலாம், அல்லது பயன்படுத்தாமல் விட்டும்விடலாம். ஆனால் அமெரிக்க ஆங்கிலத்தில் அது பொதுவாக பரவலாகக் காணப்படுகிறது. அமெரிக்க உளவியல் அமைப்பின் கையேடு (APA manual), கார்னரின் நவீன அமெரிக்கப் பயன்பாடு (Garner’s Modern American Usage), நவீன மொழிச் சங்கத்தின் நடைக் கையேடு (The MLA Style Manual), ஸ்ட்ரங் மற்றும் ஒயிட்டின் நடைக்கூறுகள் (Strunk and White’s Elements of Style), அமெரிக்க அரசின் அச்சக அலுவலக நடைக் கையேடு (The U.S. Government Printing Office Style Manual) ஆகியவை ஆக்ஸ்போர்டு காற்புள்ளியின் பயன்பாட்டைக் கட்டாயம் என்று கூறுகின்றன.  

 

அசோசியேட்டட் ஊடக நடை நூல் (The Associated Press Stylebook)  இதன் பயன்பாடு தேவையில்லை என்கிறது. மாறாக, சிகாகோ நடைக்கையேடு (The Chicago Manual of Style) இது தேவை என்கிறது.  “அசோசியேட்டட் பாணியா சிகாகோ பாணியா என்று பார்க்கும்போது பாணி என்ற சொல்லின் முக்கியத்துவத்தை பெரும்பாலானோர் மறந்துவிடுகிறார்கள் என்று நினைக்கிறேன். பாணி எப்போது ஒத்துவரவில்லையோ, உங்களுக்கு ஒத்துவருவதை ஏற்கவேண்டும்,” என்கிறார் ரோஸ். ஆங்கில மொழியில் மிகவும் குழப்பமான இலக்கண விதிகள் பட்டியலில் ஒன்றாக ஆக்ஸ்போர்டு காற்புள்ளி அமைந்துவிடுகிறது. தி டைம்ஸ் நடை கையேடு (The Times style manual) "ஆக்ஸ்போர்டு காற்புள்ளியைத் தவிர்த்துவிடுங்கள். 'அவன் ரொட்டி, வெண்ணெய், மற்றும் ஜாம் சாப்பிட்டான்' என்பதற்கு பதிலாக 'அவன் ரொட்டி, வெண்ணெய் மற்றும் ஜாம் சாப்பிட்டான்' என்றே கூறுங்கள்." மாறாக, கார்டியன் நடைக் கையேடு (The Guardian style guide), “நேரடியாகப் பொருளைத் தரும் வகையில் அமையும்போது ஆக்ஸ்போடு காற்புள்ளி தேவையில்லை. ஆனால் சில சமயங்களில் வாசகர்களுக்கு அது அதிகம் உதவுகிறது என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும். சில நேரங்களில் அது முக்கியமாக தேவைப்படுகிறது. ‘‘நான் இந்த நூலை என் பெற்றோர், மார்ட்டின் அமிஸ், மற்றும் ஜேகே ரௌலிங்-க்கு அர்ப்பணிக்கிறேன்’ என்பதை ‘நான் இந்த நூலை என் பெற்றோர், மார்ட்டின் அமிஸ் மற்றும் ஜேகே ரௌலிங்-க்கு அர்ப்பணிக்கிறேன்’.” என்பதோடு ஒத்துப்பார்க்கும்போது வேறுபாட்டையும் காற்புள்ளியின் தேவையையும் உணரலாம்.


ஒரு தெளிவினைத் தரும்நிலையிலும்கூட காற்புள்ளியை பலர் பயன்படுத்த விரும்புவதில்லை. குறிப்பாக அதிக இடத்தைப் பிடித்துக்கொள்ளும் என்பதால் ஊடகவியலாளர்கள் இதனைப் பயன்படுத்துவதில்லை. பள்ளிக்காலம் தொடங்கி அவ்வாறே சொல்லித்தருவதால் பலர் இதனை எப்போதும் பயன்படுத்துவதில்லை. இருந்தாலும் காற்புள்ளியை எளிதாகக் கருதிவிட முடியாது. இடத்திற்குத் தகுந்தாற்போல் அது உணர்த்தும் தனித்தன்மையை மனதில் கொள்ள வேண்டியது அவசியமாகும். அண்மைக்காலத்தில் இந்த காற்புள்ளியின் முக்கியத்துவத்தை உணரவைத்த பெருமை பிரெக்ஸிட் நாணயத்தையே சாரும். பயன்பாட்டு நோக்கில் பார்க்கும்போது ஆக்ஸ்போர்டு காற்புள்ளி ஒரு முக்கியமான இடத்தை வகிக்கிறது என்பதைத் தெளிவாகக் கூறலாம். குழப்பமற்ற பொருளைத் தருவதால் முடிந்தவரை நாம் ஆக்ஸ்போர்டு காற்புள்ளியைப் பயன்படுத்த முயல்வோம்.


துணை நின்றவை :

After Deadline, Philip B.Corbett, The New York Times Blog, 23 June 2015 

For Want of a Comma, Carmel McCoubrey, 16 March 2017

 What Is the Oxford Comma—And Why Can’t the Grammar World Agree on Whether to Use It?, Isabel Roy and Sam Benson Smith, The Reader’s Digest, 18 July 2019

Philip Pullman calls for boycott of Brexit 50p coin over 'missing' Oxford comma, Alison Flood, The Guardian, 27 Jan 2020

Rules for Comma usage, Grammarly Blog

Serial comma, Wikipedia                                                                      

What Is The Oxford Comma, Lexico

06 December 2020

உதிர்ந்தும் உதிராத : எஸ்.வி.வேணுகோபாலன்

பல துறைகளில் பரிணமித்து இயற்கையோடு இரண்டறக்கலந்த 24 முக்கிய நபர்களுக்கு அஞ்சலியாக அமைந்துள்ள கட்டுரைகளைக் கொண்டது எஸ்.வி.வேணுகோபாலன் அவர்களின் உதிர்ந்தும் உதிராத நூல். இலக்கியவாதிகள், கலைஞர்கள், நடிகர்கள், கவிஞர்கள், பாடகர்கள், சமூக ஆர்வலர்கள் என்ற அந்தப் பட்டியலில் உள்ளோர் நாம் அறிந்தவர்களே. ஆனால் அவர்களைப் பற்றி நாம் அறியாதனவற்றைத் தந்து அவர்களின் பெருமைகளை எழுத்தில் கொணர்ந்துள்ள ஆசிரியரின் முயற்சி பாராட்டத்தக்கதாகும்.


“எளிமையும் அசத்தலும் ஒருசேரக் கலந்த சாதனையாளர்தான் தென்கச்சி சுவாமிநாதன்” (ப.18)

“கண்ணாடி போட்டுக் கொண்டிருக்கும் குட்டிப் பெண்ணுக்கு கண்ணாடியே போட்டுக்கொள்ளாத பாட்டி அனாயாசமாக ஊசியில் நூல் கோத்துக் கொடுத்து உதவும் துணுக்கைப் பாருங்களேன், அதில் வேறு எத்தனை பாத்திரங்கள் எவ்வளவு முகபாவமும், உடல்மொழியும் காட்டுகின்றனர்!” (ஓவியர் கோபுலு, ப.21) 

“திருவாளர் பொதுஜனத்தை கார்ட்டூனில் 1957ல் உருவாக்கிக் கொடுத்து அரசியல் அபத்தங்களை, அத்து மீறல்களை, சமூக அவலங்களை அவரது தூரிகை வரைந்து தள்ளிக் கொண்டிருந்தது.” (ஆர்.கே.லட்சுமண், ப.25)

“பிறந்த குழந்தையின் கள்ளம் கலவாத புன்னகைக் கோடு போலவோ, ஒரு முதியவரின் பற்றற்ற உலர்ந்த சிரிப்பைப் போலவோ இருக்கும் பாடல்கள் அவருக்கு வாய்த்தது வியப்புக்குரிய விஷயம்.” (பி.பி. ஸ்ரீநிவாஸ், ப.60)

          “வாழ்க்கையின் அபத்தங்களை அனாயாசமாக நகைச்சுவை வசனங்களில் அபாரமன கற்பனையோடு கொண்டுவரும் திறமை அவரது தனித்துவமான அம்சங்களுள் ஒன்று.” (கிரேசி மோகன், ப.68)

          “கேலிச் சித்திரக்காரர்களுக்கு வரைவதற்குக் கொண்டாட்டமான பாங்கில் அப்படி ஒரு முகவாகு. பருத்த உடல். அதைவிடக் கனத்த உடல் மொழி. வசனத்தை உச்சரிப்பதில் ஒரு தனித்துவ ரசனையோடு ஒலிக்கும் ஒரு பாணி.” (நீலு, ப.71)

          “கருத்துச் சுதந்திரம் என்பது அவரைப் பொறுத்தமட்டில் வெற்று முழக்கமோ, முணுமுணுப்போ அல்ல. அது ஒரு போர்க்கொடி! ஜனநாயகத்தின் உயிர்! …..துணிச்சலின் பெயர்களில் ஒன்றாக இருந்தது அவர் பெயர்.” (கிரீஷ் கர்னாட், ப.102)

“மக்கள் இதயத்தை தொட நினைக்கும் கலைஞர்களுக்கு ருத்ரய்யாவின் பெயர் நிச்சயம் ஓர் உந்துவிசையாகவே இருக்கும்.” (ப.107)

 “குடியரசுத் தலைவர்கள் எல்லோரும் நினைவில் நிற்பதில்லை. இப்போது இருப்பவர் யார், முந்தைய குடியரசுத் தலைவர் யார் என்று கேட்டுப் பாருங்கள், முப்பது விழுக்காட்டுக்கு மேல் எனக்குத்தெரியாது என்று சொல்லிவிட்டுப் போவார்கள். கலாம் எப்படி நினைவில் நின்றுவிட முடிந்தது?” (ப.115)                   

மனோரமா, நா.முத்துக்குமார், டாக்டர் எஸ்.மாணிக்கவாசகம், மிருணாளினி சாராபாய், பாலு மகேந்திரா, டாக்டர் எம்.பாலமுரளி கிருஷ்ணா, மணிவண்ணன், வாலி, எம்.எஸ்.விஸ்வநாதன், வையம்பட்டி முத்துசாமி, டி.எம்.சவுந்திரராஜன், எஸ்.விசுவநாதன், கோவிந்த பன்சாரே, கௌரி லங்கேஷ், கிருஷ்ணா டா வின்சி உள்ளிட்ட பலருக்கு அஞ்சலி  செலுத்தியுள்ளார்.

ஒவ்வொருவரையும் பற்றிய ஒரு பறவைப்பார்வையை ஆசிரியர் தந்துள்ளதைப் படிப்பவர்கள் அவருடைய நினைவாற்றலைக் கண்டு பிரமிப்பர். ஒவ்வொருவரின் மேதைமைத் தன்மை, குணம், சாதனை போன்றவற்றை அலசி ஆராய்ந்து திரட்டித் தந்துள்ளார். இவர்களில், நேரில் சந்தித்தவர்களைப் பற்றிப் பகிரும்போது மேலும் நெகிழ்ந்துவிடுகிறார். சுருக்கமாகவும், நுணுக்கமாகவும் அவர்களை நினைவுகூர்ந்த வகையில் அப்பெருமக்களை நம் மனதில் இடம் பிடிக்க வைத்துவிட்டார் ஆசிரியர்.        


எஸ்.வி.வேணுகோபாலன் (94452 59691), பாரதி புத்தகாலயம், 7, இளங்கோ சாலை, தேனாம்பேட்டை, சென்னை 600 018 (044-24332424, 24332924, 24356935, thamizhbooks@gmail.com),  டிசம்பர் 2019, ரூ.135

நன்றி : புக்டே தளம், அத்தளத்தில் வாசிக்க : உதிர்ந்தும் உதிராத


21 November 2020

அப்பாவுக்காக... : ஜ. பாக்கியவதி

என் மனைவி திருமதி பாக்கியவதி தன்னுடைய இரண்டாவது படைப்பான  “அப்பாவுக்காக...'' என்ற நூலை அண்மையில் வெளியிட்டுள்ளார். அவருடைய தந்தையும் என்னுடைய மாமனாருமான திரு திருவண்ணாமலை  நாடார் (1927-1998) அவர்களைப் பற்றிய நினைவலைகளை தன்னுடைய சகோதர சகோதரிகளின் குடும்பத்தாரிடமிருந்து பெற்று ஒருங்கிணைத்துள்ளார்.  தன் தாயாரின் (திருமதி தி.தில்லையம்மாள் (1931-2017)) கைவைத்திய முறையைப் பற்றியும், இளம் வயதில் இறந்த தன் சகோதரரைப் பற்றியும் இதில் எழுதியுள்ளார். 


அவருடைய மகன்கள்/மருமகள்கள், மகள்கள்/மருமகன்கள், பேரன்கள்/பேத்திகள், கொள்ளுப்பேரன்கள்/கொள்ளுப்பேத்திகள் என்ற வகையில் சுமார் 70க்கும் மேற்பட்டோரைத் தொடர்பு கொண்டு மின்னஞ்சல், வாட்ஸ்அப், குரல்வழிப்பதிவு, கூகுள்வழிப்பதிவு என்ற பல நிலைகளில் பெற்றுள்ளார். 

பதிவுகள் தாமதமான நிலையில் உரியவர்களை அலைபேசியில் அழைத்து, நினைவூட்டி அவற்றைப் பெற்று இணைத்தார். அவ்வாறாகப் பெற்ற சுமார் 100க்கும் மேற்பட்ட பக்கங்களை மடிக்கணினியில் தானே தட்டச்சு செய்து, திருத்திய பின் மகன்களுக்கும், மருமகள்களுக்கும் திருத்தத்திற்காக அனுப்பினார். இறுதியாக ஒட்டுமொத்தமாக அதனைப் பார்க்கும்போது அவர் மேற்கொண்ட பணியினைக் கண்டு வியந்தேன்.நுணுக்கமாகவும், செறிவாகவும் இந்நூல் அமைய வேண்டும் என்ற நோக்கில் அவர் எடுத்த முயற்சி போற்றத்தக்கதாகும். 

ஒரு குடும்பத்தில் இருந்து வாழ்ந்து மறைந்தவரைப் பற்றிப் பதியும்போது அது இளம் தலைமுறையினருக்கு ஒரு பாடமாக அமையும். அவர்களின் பழக்கவழக்கங்கள், வழிகாட்டல்கள், நேர்மைத்தன்மை, மனித நேயம், குடும்பத்தை கட்டுக்கோப்பாக நடத்திச்சென்ற விதம் போன்றவற்றை வளரும் தலைமுறையினர் அறிந்து கடைபிடிக்க இது போன்ற பதிவு உதவும் என்பதில் ஐயமில்லை. இந்நூலைக் காண்போர் தம் பெற்றோரைப் பற்றி எழுத மிகவும் ஆர்வம் கொள்வர். கூட்டுக்குடும்ப முறை அருகி வருகின்ற இக்காலகட்டத்தில் அனைவரையும் ஒருங்கிணைத்த இந்த முயற்சி பாராட்டப்படவேண்டியதாகும்.

என் மனைவியின் உரையிலிருந்து : 

"...நான் ஒன்பதாம் வகுப்பு வரை படித்திருக்கிறேன். திருமணத்திற்குப் பிறகு என் கணவர் படிக்கச் சொன்னார். ஆனால் எனக்கு ஆர்வம் இல்லை. மகன்கள் படித்துக் கொண்டிருந்தபோது, எனக்கு கம்ப்யூட்டரில் தமிழ் டைப் அடிக்க கற்றுக்கொடுத்தார்கள் அவர்கள் வேலைக்குச் சென்றபிறகு தினமும் நாளிதழ்களும், நூல்களும் வாசிக்க ஆரம்பித்தேன். படிக்கவும் எழுதவும் ஆரம்பித்த நான் தொடர்ந்து என் கணவரும் மகன்களும் எழுதும் கட்டுரைகளையும், கதைகளையும் பிழைத்திருத்தம் செய்ய ஆரம்பித்தேன். தொடர் வாசிப்பு என்னை எழுதத் தூண்டியது..." 

"...கொரோனா நேரத்தை நல்ல முறையில் பயன்படுத்த எண்ணினேன்..... எங்கள் பெற்றோரைப் பற்றி எங்களைவிட பேரன்கள், பேத்திகள், கொள்ளுப்பேரன்கள், கொள்ளுப்பேத்திகள் எழுதியது என்னை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. அனைத்தையும் நேரடியாக நானே மடிக்கணினியில் தட்டச்சு செய்தேன்.... அப்போது எனக்கு ஆனந்தக் கண்ணீர் வந்துவிட்டது....." 

எங்கள் மகன்களின் அணிந்துரையிலிருந்து : 

"...அனைத்தையும் தட்டச்சு செய்து, ஒரு வடிவத்திற்குக் கொண்டு வந்த பணியை மேற்கொண்டவர் ஒன்பதாம் வகுப்பு வரையே படித்தவர் என்பதை அறியும்போது இதனை ஒரு பெரும் சாதனையாகத்தான் பார்க்கத் தோன்றுகிறது..." 

"நூலுக்கான வரைவை எங்களின் பார்வைக்கு அம்மா அனுப்பியதும், 'அக்னிச் சிறகுகள்' நூலில் அப்துல் கலாம் ஒரு நாள் இரவு முழுவதும் உட்கார்ந்து ராக்கெட்டின் வடிவமைப்பைச் செய்து முடித்து தன் துறைத் தலைவரிடம் ஒப்புதல் வாங்கும் காட்சிதான் எங்கள் நினைவிற்கு வந்தது....." 

"ஒருவருடைய செல்வத்தை எடுத்துக்கொள்ள முடியும். ஒருவருடைய உழைப்பை எடுத்துக்கொள்ள முடியும். ஒருவருடைய பொருள்களை எடுத்துக்கொள்ள முடியும், ஆனால் ஒருவருடைய பெயரை மட்டும் நாம் எடுத்துக்கொள்ள முடியாது. ஆனால் எங்கள் தாத்தா தன் பெயரையும் முகவரி தெரியாத பல சிறு குறு வியாபாரிகளுக்காக விட்டுக் கொடுத்துள்ளார். இதைவிட பெரிய கொடை என்னவாக இருக்க முடியும்? அவருடைய கொடையும் நல்லெண்ணமும்தான் நம்மை இன்னும் வாழ வைத்துக் கொண்டிருக்கிறது."

நூல் விவரம்: அப்பாவுக்காக..., ஜ. பாக்கியவதி, முதல் பதிப்பு, நவம்பர் 2020, தமிழ்க்குடில் பதிப்பகம், தஞ்சாவூர், ரூ.150, தொடர்புக்கு : +91 9488969722, tamilkudilpathipagam@gmail.com. 


21 ஜனவரி 2021இல் மேம்படுத்தப்பட்டது.

14 November 2020

தீபாவளி நினைவுகள் : தினமணி

என் இளம் வயதில், எங்கள் வீட்டில் மளிகை சாமான் பட்டியலை என் ஆத்தா சொல்லச் சொல்ல நான் எழுதுவேன். அதில் முதலில் இடம் பெறுவது விரளி மஞ்சள் ஆகும். தொடர்ந்து பிற மளிகைப்பொருள்களின் பெயர்களை அவர் சொல்லச்சொல்ல எழுதுவேன். வழக்கமாக வீட்டில் பெரும்பாலான வேலைகளை என்னை வைத்தே எங்கள் ஆத்தா ஆரம்பிப்பார். பொருள்கள் வந்தவுடன் என்னைவிட்டுத் தான் அனைத்தையும் பிரிக்கவும், அடுக்கி வைக்கவும் சொல்வார். சில சமயங்களில் ஏதாவது ஒரு பொருளை மட்டும் எடுத்து தன் கையில் கொடுக்கச் சொல்வார். என் கை ராசி என்றும், அதனால் அவ்வாறு செய்வதாகவும் சொல்வார். சில சமயங்களில் மளிகை சாமான் பட்டியலில், எண்ணெய் உள்ளிட்ட சிலவற்றின் அளவில் அதிகமாகப் போடச் சொல்வார். அப்போது, அந்த மாதத்தில் ஏதோ ஒரு விழா வருவதை அறிந்துகொள்வோம். பண்டிகைக் காலங்களில்  இவ்வாறாக பட்டியலில் சில கூடுதல் பொருள்களும் சேரும். தீபாவளியின்போது முறுக்கு, அதிரசம், ரவா உருண்டை, பச்சைப்பயறு உருண்டை, கெட்டி உருண்டை போன்றவை எங்கள் வீட்டு பலகாரங்களில் முக்கிய இடம் பிடித்தவையாகும். கூடுதலாக, அதிக அளவிலான மளிகைப் பொருள்கள் வழக்கமான மாதாந்திரப் பட்டியலில் சேரும்போதே தீபாவளி நெருங்கிவிட்டதை உணர்வோம். 

கும்பகோணத்தில் சம்பிரதி வைத்தியநாதன் தெருவில் இருந்த எங்கள் இல்லத்தில் எனக்கு நினைவு தெரிந்த நாள்களிலிருந்து கொண்டாடிய பண்டிகைகளில் நினைவில் நிற்கும் பண்டிகைகளில் ஒன்று தீபாவளி. பாடல் பெற்ற தலங்களிலும், மங்களாசாசனம் பெற்ற தலங்களிலும், பிற கோயில்களிலும் தொடர்ந்து நடைபெறுகின்ற விழாக்களின் காரணமாக கும்பகோணம் ஒவ்வொரு நாளும் விழா நாளாகவே எங்களுக்குத் தோன்றும். 

சித்ராப் பௌர்ணமி, வைகாசி விசாகம், ஆடிப்பெருக்கு, ஆவணி அவிட்டம், புரட்டாசி நவராத்திரி, ஐப்பசி தீபாவளி, கார்த்திகை தீபம், தைப் பொங்கல், மாசி மகம், பங்குனி உத்திரம் என்று ஆண்டின் பெரும்பாலான மாதங்களில் ஏதாவது ஒரு விழா கொண்டாடப்படுவதைக் காணமுடியும். இல்ல விழாவாயினும், கோயில் விழாவாயினும் எங்களுக்குக் கொண்டாட்டம். 

இளமைக்காலத்தில் விழா என்றால் மகிழ்ச்சியைத் தருவதற்கு முக்கியமான காரணங்கள் உண்டு. அன்று பள்ளிக்குப் போக வேண்டியதில்லை. ஆசிரியர் தருகின்ற வீட்டுப்பாடங்களிலிருந்து தப்பித்துக்கொள்ளலாம். நண்பர்களோடும், குடும்பத்தினரோடும் பேசிக்கொண்டும் விளையாடிக்கொண்டும் இனிமையாகப் பொழுதைக் கழிக்கலாம். 

தீபாவளிக்கு 10 நாள்களுக்கு முன்பே  பலகாரம் செய்வதற்கான ஆயத்தங்கள் ஆரம்பமாகிவிடும். அதற்கு ஒரு மாதத்திற்கு முன்பாக தாத்தா, ஆத்தா, அம்மா, அப்பா, சகோதர சகோதரிகளுக்கு வாங்கப்பட்ட துணிகளை தைக்கக் கொடுத்துவிடுவோம். தைத்து வந்தபின் அவ்வப்போது அவற்றை ஆசையோடு எடுத்துப் பார்ப்போம். புத்தாடைகளைப் பற்றி தெரு நண்பர்களிடமும், பள்ளி நண்பர்களிடமும் பெருமையாகப் பேசிக் கொள்வோம். 

பொங்கல் பண்டிகையைவிட தீபாவளியின்போது சற்று குறைவாகவே வீட்டைச் சுத்தம் செய்வோம். இரு திண்ணைகள், வரவேற்பறை, கூடங்கள், சாமியறை, சமையலறை, பிற அறைகள், மாடிப்பகுதி போன்றவற்றை ஒவ்வொன்றாக சுத்தம் செய்வோம். எங்கள் அப்பா செய்யும் வேலைக்கு நாங்கள் துணையாக இருப்போம். ஏணியின் கால்களை நானோ, தம்பியோ, தங்கையோ பிடித்துக் கொள்ள தென்னை விளக்குமாறால் எங்கள் அப்பா வீடு முழுவதும் ஒட்டடை அடிப்பார்கள். அப்போது அதிகமான தூசிகள் வரும். சமயங்களில் ஓட்டிலிருந்து தேள்கள் கீழே வந்துவிழும். கவனமாக ஒட்டடை அடிப்போம். இதே மாதிரியான வேலையை பொங்கலின்போதும், பிற முக்கியமான பண்டிகைகளின்போதும் செய்வோம். 

பட்டாசு கொளுத்தினாலோ, வெடி வெடித்தாலோ பேரப்பிள்ளைகளுக்கு ஏதாவது ஆகிவிடும் என்று எங்கள் தாத்தா, அப்பாவிடம் குறைவாகவே அவற்றை வாங்கச் சொல்வார். ஆதலால் எங்களின் தீபாவளிப் பட்டியலில் சிறிது அளவே வெடிகளும், பட்டாசுகளும் இருக்கும். இருந்தாலும் நண்பர்கள் மற்றும் உறவினர்களின் வீட்டிலிருந்து தீபாவளியன்று வருகின்ற அன்பளிப்பில் இருக்கும் பட்டாசுகளை தாத்தாவிற்குத் தெரியாமல் எடுத்துவைத்து, வெடிக்க ஆரம்பித்துவிடுவோம்.    

வீட்டு சுத்தம், புத்தாடைகள் ஒரு புறமிருக்க மளிகை சாமான்கள் மூட்டையாக வீட்டுக்கு வந்த பிறகு தீபாவளி பலகாரத்திற்கானவற்றை ஆத்தா தனியாக எடுத்து வைப்பார். பலகாரங்கள் செய்வதற்காக, வீட்டின் அருகில் உள்ள மில்லில் அரைப்பதற்காக அரிசி, ஜீனி என்று ஒவ்வொன்றாக ஒரு பாத்திரத்தில் போட்டுக் கொடுப்பார். அதனை நானோ என் சகோதர சகோதரிகளோ எடுத்துச் சென்று அறைக்கப் போவோம். மில்லில் யார் யார் வீட்டிலிருந்து அரைக்க வந்திருக்கிறார்கள், என்னென்னவற்றை அரைக்க வந்திருக்கிறார்கள் என்று கவனமாகக் கவனிப்போம். அவர்கள் அரைப்பது ஏதாவது நாங்கள் எடுத்துச் செல்லாவிட்டால் வீட்டில் வந்து கேட்டு, அது எந்த பலகாரத்திற்காக என்பதை அறிந்து அதையும் செய்து கொடுப்பதற்காகக் கேட்போம். இவ்வாறு பலகாரங்களின் பட்டியல் சில சமயங்களில் நீண்டு விடுவதும் உண்டு. 

பலகாரங்கள் செய்யும்போது ஆத்தாவுடன் எங்கள் அம்மா துணையாக இருப்பார். சில சமயங்களில் எங்கள் அப்பாவின் தங்கையான எங்கள் அத்தையும் வந்து சேர்ந்து கொள்வார். இவ்வாறாக பல வீடுகளில் பலகாரங்கள் தயாரிப்பதை நாங்கள் பார்த்துள்ளோம். தீபாவளி பலகாரங்களை நாங்கள் இருக்கும்போது செய்யச் சொல்வோம். நாங்கள் பள்ளியைவிட்டு வந்தபின்னர் அனைவரும் சேர்ந்து அவற்றைச் செய்ய ஆரம்பிப்பார்கள். அருகே இருந்து முறுக்கு, அதிரசம் என்று ஒவ்வொன்றாக செய்வதைப் பார்ப்போம்.  செய்யும்போதே அவர்களுக்குத் தெரியாமல் எடுத்து வெளியில் சென்று தின்றுவிட்டு வருவோம். பலகாரங்களை செப்புத்தவளைகளிலும், பிற பாத்திரங்களிலும் அடுக்கி உயரமான இடத்தில் வைத்துவிடுவார்கள். அவற்றில் ஒரு பகுதியை எடுத்து அவ்வப்போது நாங்களே எடுத்துத் தின்பதற்கு வசதியாக சிறிய பாத்திரத்தில் எங்கள் உயரத்திற்கு எட்டும்படியான இடத்தில் வைப்பார்கள். இவ்வாறாக தயாரிக்கப்படுகின்ற பலகாரங்கள் தீபாவளி முடிந்த பின்னரும்கூட பல வாரங்கள் இருந்துகொண்டே இருக்கும். சிறிது சிறிதாக அந்தந்த பாத்திரங்களிலிருந்து பலகாரங்கள் குறைய ஆரம்பிக்கும். அடுத்த தீபாவளிக்கான நாளை ஆவலோடு எதிர்பார்க்க ஆரம்பிப்போம். 

எங்கள் ஆத்தா செய்யும்போது அம்மாவும், அத்தையும் துணையாக இருப்பார்கள். ஆத்தாவிற்குப் பிறகு எங்கள் அம்மா அவ்வாறே செய்ய ஆரம்பித்தார்கள். தொடர்ந்து தற்போது எங்கள் வீட்டில் அவர்களைப்போலவே நாங்கள் வேலைகளைச் செய்யும்போது எங்கள் மகன்களும், மருமகள்களும் துணையாக இருப்பதைக் காண்கிறேன். 

இருந்தாலும் மளிகைப்பட்டியல் போடும்போதும், மில்லுக்குப் போகும்போதும் பலகாரங்கள் தயாரிக்கும்போதும் ஆத்தாவின் நினைவு வந்துவிடும். மளிகை சாமான் பட்டியலை எழுத ஆரம்பிக்கும்போதே பிள்ளையார் சுழி போடு என்று எங்கள் தாத்தா சத்தமாகக் கூறுவதைப் போல இருக்கும். இவ்வாறான நினைவுகள்தானே நம் பண்பாட்டையும், நல்ல பழக்க வழக்கங்களையும் அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்கின்றன. இந்த தீபாவளிக்காக, எங்கள் மகன் எங்கள் பேரன்களுக்காக பட்டாசு வாங்கப் பட்டியல் போட ஆரம்பித்தபோது, வெடியெல்லாம் வேண்டாம், பட்டாசு மட்டும் போதும் என்று சொன்னேன். அப்போது என் தாத்தா எனக்காக சொன்னது நினைவிற்கு வந்தது. 

நன்றி : தீபாவளி நினைவுகள், தினமணி, திருச்சி, 14, நவம்பர் 2020


31.10.2021இல் மேம்படுத்தப்பட்டது.