22 May 2015

கலையியல் ரசனைக் கட்டுரைகள் : குடவாயில் பாலசுப்ரமணியன்

அண்மையில் நான் படித்த நூல் குடவாயில் பாலசுப்ரமணியன் எழுதியுள்ள கலையியல் ரசனைக் கட்டுரைகள். 

மரபின் மைந்தன் முத்தையா அவர்களை ஆசிரியராகக் கொண்டு கோவை மாநகரிலிருந்து வெளிவந்த ரசனை என்னும் திங்களிதழில் 2006 முதல் 2011 வரை எழுதப்பெற்ற கலையியல் சார்ந்த ரசனைக் கட்டுரைகளில் 30 கட்டுரைகள் இதில் அடங்கியுள்ளன. கல்வெட்டு, சிற்பம், ஓவியம், கலை, இலக்கியம் என்ற பல கூறுகளை உள்ளடக்கி ஒன்றோடொன்று பொருத்திக்காட்டி பல இடங்களுக்கு நம்மை அழைத்துச் செல்கின்றார் ஆசிரியர். 

இந்நூலின் மூலமாக நூலாசிரியர் நம்மை தஞ்சாவூர், கங்கைகொண்டசோழபுரம், தாராசுரம், மேலக்கடம்பூர், திருநாவலூர், மாமல்லை, நாமக்கல், திருமெய்யம், காஞ்சீபுரம், பழையாறை, பட்டீஸ்வரம், கொடும்பாளூர், திருப்பிடவூர், திரிலோக்கி, குடுமியான்மலை, புள்ளமங்கை, திருமழபாடி, குடந்தைக் கீழ்க்கோட்டம் (நாகேஸ்வரன் கோயில்), தில்லை, திருச்சி மலை, நாமக்கல் மலை, திருக்கோகர்ணம், மகாபலிபுரம், வழுவூர், தண்டலைச்சேரி, பனைமலைக்கோயில், திருவாலங்காடு, பல்லவனீச்சரம், திருவாரூர், உதயகிரி, பாதமி, எல்லோரா, கோடியக்கரை, தக்கோலம், அமண்குடி, திருவாஞ்சியம், திருக்கொள்ளம்புதூர், நல்லூர், திருவலஞ்சுழி, தென்காசி, திருவையாறு, பெண்ணாடகம், பட்டடக்கல், திருபுவனம் உள்ளிட்ட பல கோயில்களுக்கு அழைத்துச் சென்று கலையின் நுட்பத்தை மிக எளிதாகப் புரிந்துகொள்ளும் வகையில் தந்துள்ளார். அவருடன் இப்போது சில கோயில்களுக்குச் செல்வோம்.


கங்கைகொண்ட சோழீச்சரம்
உலகில் வேறு எந்த சிவாலயத்திலும் காணமுடியாத மிகப்பெரிய சண்டேஸ்வர பிரஸாத தேவர் சிற்பமும், அதனைச் சுற்றி சுவரில் சண்டேஸ்வரர் புராணக் காட்சிகளும் இடம்பெற்றுள்ள இடம் கங்கைகொண்ட சோழீஸ்வரர் கோயிலாகும். தாராசுரம், மேலக்கடம்பூர், திருநாவலூர் போன்ற திருக்கோயில்களிலும் சண்டேஸ்வரர் புராணக்காட்சிகள் உள்ளன. இவை அனைத்தையும் தொகுத்துநோக்கும்போது கங்கை கொண்ட சோழபுரத்துப் படைப்பே முதலிடம் வகிப்பதாகும். (பக்.12,13).

எல்லோரா
எல்லோரா கைலாசநாதர் கோயிலில் நுழைந்தவுடன் முதலாவதாக நம்மை எதிர்கொண்டழைப்பது திரு என்னும் தெய்வம் உறையும் தாமரைத் தடாகக் காட்சியே. உயிரோட்டமாகத் தாமரைத் தடாகம் விளங்குவதையும் அங்கு நான்கு யானைகள் திருமகளைத் திருமஞ்சனம் ஆட்டுவதையும் காணக் கண் கோடி வேண்டும். (ப.37).

திருக்காட்டுப்பள்ளி
திருக்காட்டுப்பள்ளி தீயாடியப்பர்கோயிலில் சிவபெருமானும் உமாதேவியும் அமர்ந்தவாறு கடும் வேகத்தில் செல்லும் காட்சியை சிற்பி உருவாக்கியுள்ளான். பொதுவாக இடபாரூடர் நிற்கும் காளை மீது உமாதேவியோடு பக்கவாட்டில் அமர்ந்திருக்கும் காட்சிதான் திகழும். ஆனால் இச்சோழச் சிற்பியோ கடுநடையோடு காளை செல்லும் திசை நோக்கியவாறு கால்களை இரு புறமும் தொங்கவிட்ட நிலையில் இருவரும் அமர்ந்து செல்லும் உயிரோட்டமான சிற்பத்தைப் படைத்துள்ளான். (ப.49)

புள்ளமங்கை
கி.பி.9ஆம் நூற்றாண்டில் பராந்தக சோழன் எடுத்த புள்ளமங்கை (தஞ்சாவூர் மாவட்டம்) சிவாலயத்தின் கண்டபாதம் என்னும் அதிஷ்டானப் பகுதியில் இராமாயணம் முழுவதையும் சிற்பமாகப் படைத்தான் ஒரு சோழ நாட்டுச் சிற்பி.....கம்பனின் காப்பியம் காட்டும் வாலி வதத்தின் சோகத்தை விஞ்சும் வகையில் கம்பனுக்குக் காலத்தால் முற்பட்ட புள்ளமங்கைச் சிற்பம் உள்ளது என்பதுதான் உண்மை. (ப.55)

தஞ்சாவூர்
தமிழகத்திலுள்ள பல சிவாலயங்களில் இராவணானுக்கிரக மூர்த்தியின் சிற்பங்கள் இடம் பெற்றிருந்தபோதிலும் பழையாறை, தாராசுரம், கங்கைகொண்ட சோழபுரம், திருப்பூந்துருத்தி ஆகிய ஊர்களில் உள்ள சிவாலயங்களில் இடம் பெற்றிருக்கும் சிற்பப் படைப்புகளுக்கும், தஞ்சைப் பெரிய கோயிலில் உள்ள இராஜராஜ சோழன் காலத்து ஓவியத்தில் இடம் பெற்றுள்ள இராவணன் கயிலை மலையைப் பெயர்க்கும் காட்சிக்கும் இணையாக வேறு படைப்புகளை ஒப்பிடுதல் சற்றுக் கடினமே....வாய் பிளந்து இராவணன் அலறும் காட்சிக்கு ஈடாக வேறோர் ஓவியம் இவ்வையகத்தில் இல்லை எனலாம். (பக்.73, 78)

தாராசுரம்
பதினான்கு பாம்புகளை அணிகலன்களாகப் பூண்டு ஆடும் அகோரமூர்த்தி வடிவத்தினை தாராசுரம் ஐராவதீஸ்வரர் திருக்கோயிலிலன்றி தமிழகத்தில் வேறு எந்த சிவாலயத்திலும் காணல் அரிது. (ப.109)

திருமழபாடி
திருமழபாடித் திருக்கோயிலின் திருச்சுற்றில் தென் மேற்கு மூலையில் உள்ள சிறு கோயிலில் திருவாசியுடன் கூடிய சோமாஸ்கந்தர் திருமேனி கற்சிற்பமாக இன்றும் வழிபாட்டில் உள்ளது. இந்தஅழகுமிகு சிற்பப்படைப்பு விஜயநகர அரசு காலத்தில் வடிக்கப் பெற்றதாகும். (ப.137)

கும்பகோணம்
கும்பகோணம் வீர சைவமடத்து வீரபத்திரர் கோயில் கோபுரக் கட்டுமானம், தாராசுரத்திலுள்ள ஒட்டக்கூத்தர் சமாதி கோயிலின் இடிபாடுற்ற முன் மண்டபம், தஞ்சாவூர், திருவாரூர் பகுதியில் உள்ள பல மண்டபங்கள், திருக்கரைவீரத்து மண்டபம், திருக்கண்ணமங்கை திருக்கோயில் மண்டபம் என சோழ நாட்டில் எண்ணற்ற இடங்களில் இட்டிகையில் செய்த கலைப் படைப்புகளோடு இக்கலை மரபு ஒரு காலத்தில் தழைத்திருந்தது.  (இட்டிகை - சுட்ட மண் பலகை, வெந்த மண் கல் என்ற பாருள் பொதிந்த சொற்களால் சோழர் காலத்தில் கூறப்பட்டது)  (பக்.157, 163)வீரபத்திரர் கோயில் கட்டுமானம்
புகைப்படங்கள் பா.ஜம்புலிங்கம்

தஞ்சாவூர், கங்கைகொண்ட சோழபுரம், தாராசுரம்
காமனைப் பொறுத்த நிலையில் தஞ்சாவூர், கங்கைகொண்டசோழபுரம், தாராசுரம் என்ற மூன்று திருக்கோயில் படைப்புகளிலும் வெவ்வேறு வகையான படைப்பு நுட்பங்களைக் காணமுடியும். தஞ்சை விமானத்துக் காட்சிப் படைப்பில் நெற்றிக் கண் திறந்ததால் வெளிப்படும் தீச்சுடர்களும், அதன் தாக்குதலால் காமன் படும் துன்பமும் உயிரோட்டமாய் காணலாம். கங்கைசொண்ட சோழீச்சரத்திலோ பிரம்மாண்டமும் கம்பீரமும் நம்மை வியக்க வைக்கின்றன. தாராசுரத்திலோ நம் கண் முன்பே காட்சி நிகழ்வு முழுவதையும் காண்கிறோம். (ப.192)

புள்ளமங்கை சிற்பங்கள், கும்பகோணம் வீர சைவமடத்துக் கட்டுமானம், திருக்காட்டுப்பள்ளியில் இறைவன் காளையில் இறைவியோடு வரல், பழையாறையில் இராவணன் கயிலையைப் பெயர்த்தெடுத்தல், திருமழபாடியில் சோமாஸ்கந்தர் சிற்பம் உள்ளிட்ட சில இடங்களை நான் நேரில் பார்த்துள்ளேன். நூலில் அவற்றைப் படிக்கும்போது நாம் பார்த்த சிற்பங்களும், ஓவியங்களும் இவ்வளவு காலத்தனவா என எண்ணி வியந்தேன். நூலாசிரியருடன்  பல சிற்பங்களைக் காணும் பேறு  பெற்றேன்.நூல் மூலமாக பல அரிய செய்திகளை அழகான புகைப்படங்களோடு காணும் வாய்ப்பினை மறுபடியும் பெற்றேன். 

 அருமையான இந்நூலைப் படிப்போம். நமக்கு அருகில் உள்ள கோயில்களுக்குச் சென்று அங்குள்ள சிற்பங்களையும், ஓவியங்களையும், கட்டட நுட்பங்களையும் ரசிப்போம். வாருங்கள். நல்ல வாய்ப்பை பயன்படுத்திக்கொள்வோம்.  

---------------------------------------------------------------------------------------------------
நூல் : கலையியல் ரசனை கட்டுரைகள்
ஆசிரியர் : குடவாயில் பாலசுப்ரமணியன் (9843666921)
பதிப்பகம் : அகரம், 1, நிர்மலா நகர், தஞ்சாவூர் 613 007,  (04362-239289)
ஆண்டு : 2014
விலை : ரூ.180
---------------------------------------------------------------------------------------------------

நாம் முன்பு வாசித்த இவரது நூல்கள்:

09 May 2015

விரும்பியதை அருளும் உவரி சுயம்புலிங்க சுவாமி! : ஜ. பாக்கியவதி


தினமணி 10.4.2015 இதழில் வெளியான, எனது மனைவி 
திருமதி பாக்கியவதி எழுதியுள்ள கட்டுரையை கூடுதல் புகைப்படங்களுடன் பகிர்வதில் மகிழ்கிறேன். இக்கட்டுரையை வெளியிட்ட தினமணி இதழுக்கு நன்றி.-------------------------------------------------------------------------------
-------------------------------------------------------------------------------
திருநெல்வேலி மாவட்டம், உவரி என்னுமிடத்தில் கடற்கரையோரத்தில் அமைந்துள்ளது அருள்மிகு சுயம்புலிங்கசுவாமி திருக்கோயில்!

இக்கோயில் உருவானதற்கு வாய்மொழியாக ஒரு கதை சொல்லப்படுகிறது. பால்காரர் ஒருவர் அருகேயுள்ள கூட்டப்பனை என்ற இடத்திலிருந்து இப்பகுதிக்கு தினமும் பால் விற்று வருவாராம். தினமும் அவர் உவரி வழியாகத் தான் செல்வாராம்.
நுழைவாயில்
ஒருமுறை இவ்வாறு சென்றுகொண்டிருந்தபோது, தற்போது சுவாமி இருக்கும் இடத்தருகே வந்ததும் கால் இடறி விழுந்து விடுவாராம். இதற்கு என்ன காரணம் என்று அவருக்கு விளங்கவில்லை. சற்று யோசித்தபின்னர், அங்குள்ள கடம்ப மரத்து வேர் தடுக்குவதால்தான் கால் இடறுகிறது என்பதை உணர்ந்திருக்கிறார்.

அதனால் அம்மரத்தின் வேரை வெட்டி அகற்ற எண்ணிய அவர், அந்த வேரை வெட்டத் துவங்கியபோது திடீரென்று ஒரு இடத்தில் ரத்தம் பீறிட்டதாம். அதேசமயம், இறைவனும் அசரீராக வந்து, அந்த இடத்தில் தான் குடிகொண்டிருப்பதாகவும் தனக்கு கோயில் கட்டி வழிபாடு நடத்தும்படியும் கூறினாராம்.
இறைவனுடைய ஆணையை ஏற்று அங்கு முதலில் பனை ஓலையில் கோயில் கட்டினார்களாம். நாளடைவில் அந்த கோயில் பெரிய அளவில் உருப்பெற்றதாகக் கூறப்படுகிறது.
கருவறையை நோக்கிச்செல்லும் பக்தர்கள்

இக்கோயிலின் கருவறையில் சுயம்புலிங்கசுவாமியாக அருள்பாலிக்கின்றார் இறைவன்! 
 கன்னி விநாயகர் சன்னதி
பிரம்மசக்தி அம்மன் சன்னதி
கோயிலின் வெளிப்புறமாக வலது பக்கத்தில் கன்னிவிநாயகருக்கான தனிக் கோயில் அமைந்துள்ளது. கோயிலின் இடப்புறம் பிரம்மசக்தி அம்மன் சந்நிதி உள்ளது. 


பேச்சியம்மன் சன்னதி

இச்சந்நிதியில் முன்னடி சாமியும் அதற்கடுத்தபடியாக பேச்சியம்மனும் தனி சந்நிதி கொண்டு விளங்குகின்றனர். இச்சந்நிதியிலேயே மாடசாமி, இசக்கியம்மன் ஆகிய தெய்வங்களும் அமைந்து அருள்கின்றனர்.

சுவாமி தரிசனம் செய்யும் பக்தர்களின் வசதிக்காக முடிகாணிக்கை செய்யுமிடம் மிகவும் அருகில் அமைக்கப்பட்டுள்ளது. கடல் அருகில் கிணறும் உள்ளது. இதைப்பார்க்கும் போது ஆச்சரியமாக இருக்கிறது. கடல் பக்கத்தில் உள்ள கிணற்றில் நீர் உப்பாக இல்லாமல் குடிக்க ஏற்றதாக உள்ளது. இதுதான் இறைவனின் அருள்! இங்கு குழந்தைகளுக்கு காது குத்துதலும் சிறப்பாக நடைபெறுகிறது.


கோயிலிலிருந்து கடலின் காட்சி
கடலிலிருந்து கோயில்
கோயில் எதிரில் குளம்
இக்கோயிலில் வேண்டுதல் செய்பவர்கள் கடலில் சிறிது தூரம் சென்று கடல் மண்ணை அள்ளிக் கொண்டுவந்து கரையில் குவிக்கின்றார்கள். இதனால் அவர்கள் நினைத்த காரியம் நிறைவேறும் என்பது நம்பிக்கை! வருடா வருடம் இவ்வாறு மண் கொண்டு வருவது பெருகிக் கொண்டே போகிறது. அதோடு பொங்கல் வழிபாடும் இங்கு நடைபெறுகிறது. பல குடும்பங்களுக்கு இந்த சுயம்புலிங்கசுவாமி குல தெய்வமாக இருப்பதால், வண்டி கட்டிக்கொண்டு குடும்பம் குடும்பமாகச் செல்வோர் பலர்! முன்பு காடு போல காணப்பட்ட இவ்விடம் தற்போது சீரமைக்கப்பட்டுள்ளது. இப்போது, கார், ஜீப் என அவரவர் வசதிப்படி எளிதாக வந்து தரிசனம் செய்கின்றனர்.


மற்றொரு நுழைவாயில்
வைகாசி மாதம் விசாகத்தில் இக்கோயில் களை கட்டிவிடும். தமிழகம் முழுவதிலிருந்தும் அதிகமான எண்ணிக்கையில் அனைத்து இனத்தவரும் இக்கோயிலுக்கு வருகின்றனர். தை மாதத்தில் பூசம், அமாவாசை ஆகிய நாட்களிலும், பங்குனி உத்திரம், ஆடி அமாவாசை போன்ற தினங்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன. - ஜ.பாக்கியவதி.
-------------------------------------------------------------------------------
முன்னர் நாம் வாசித்த இவரது கட்டுரைகள் :