29 July 2017

வானமே எல்லை : அன்னி திவ்யா

விஜயவாடாவைச் சேர்ந்த அன்னி திவ்யா (வயது 30) தன் கனவுகளை நினைவாக்க அதிகம் உழைக்க வேண்டியிருந்தது. இளம் பருவத்திலிருந்தே எனக்கு ஒரு விமான ஓட்டியாக ஆகவேண்டும் என்ற ஆசை இருந்தது. ஆனால் அவ்வாறு ஆவதற்கான வழிமுறைகள் என்னவென்று எனக்குத்தெரியாது”  என்று கூறும் அவர் போயிங் 777 விமானத்தின் உலகிலேயே முதன்முதலாக இளம் பெண் கேப்டன்களில் ஒருவர் என்று பாராட்டப்பெறுகிறார். அவரைச் சந்திப்போம்.


எனக்கு 737 ஓட்ட வாய்ப்பு கிடைத்தது. ஆனால் நான் 777ஐ ஓட்டவே ஆசைப்பட்டேன். அந்த நன்னாளுக்காக நான் அதிகம் காத்திருக்க வேண்டியதாயிற்று என்று கூறும் அவர் மற்ற பெண்கள் தாம் நினைத்தைச் சாதிக்கும் முயற்சியிலும், தம் கனவுகளை நனவாக்கும் முயற்சியினை மேற்கொள்ள வேண்டும் என்கிறார்.

அன்னி பிறக்கும்போது அவளுடைய குடும்பம் பதன்கோட்டின் அருகேயுள்ள படைத்தளத்தில் இருந்தது. படை வீரராக ராணுவத்தில் பணியாற்றிய அவருடைய தந்தை நாடெங்கும் பல இடங்களில் பல பிரிவுகளில் பணியாற்றிவிட்டு, 19 வருட பணிக்குப் பிறகு விருப்ப ஓய்வு பெற்று விஜயவாடாவில் தங்கினார்.  அன்னியின் அம்மாவுக்கு தன் மகள் வளரும்போது ஒரு பைலட்டாக ஆக வேண்டும் என்ற ஆசை இருந்தது. அப்போதைக்குக் கற்பனைக்கெட்டாதது. அதற்கான வாய்ப்பையும் எவ்வாறு ஏற்படுத்திக்கொள்ளவேண்டும் என்ற வழியும் தெரியாத நிலை. அருகிலுள்ளோர் எள்ளி நகையாடினர். அம்மா தன் கனவை மகளிடம் வெளிப்படுத்த, மகளுக்கு அந்த இளம் வயதில் அந்த எண்ணம் துளிர்க்க ஆரம்பித்தது.

நான்காம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு படித்த வரை அன்னி சாதாரண மாணவியாகவே இருந்தார். அவர் 100 மதிப்பெண் வாங்கினாலும் சரி, சுழியம் வாங்கினாலும் சரி, அம்மா ஒன்றும் சொல்ல மாட்டார்களாம். அதுவே அவரை முன்னுக்கு வர வாய்ப்பு தந்தது. ஒன்பதாம் வகுப்பு படிக்கும்போது அவருடைய ஆசிரியர்களில் ஒருவர், அன்னி சாதிக்க விரும்புவதைப் பற்றிக் கேட்டபோது அன்னி தான் சாதிக்க விரும்புவதாக சமஸ்கிருதம் கற்றல், சட்டம் படித்தல், இசை பயிலுதல், நடனம் கற்றுக்கொள்ளல் போன்ற 10 இலக்குகளைக் கொண்ட விருப்பப்பட்டியலைத் தயாரித்தார். அவளுடைய இலக்குகளில் பைலட்டாக ஆக வேண்டும் என்பது முதல் இலக்காக இருந்தது. அன்னியால் அதனைச் சாதிக்க முடியாது என்று கூறி பலர் கேலி செய்தார்கள். ஆனால் அவர் அலட்டிக்கொள்ளவில்லை.  தாங்கள் என்னவாக வர ஆசைப்படுகின்றீர்கள் என்று மாணவர்களிடம் ஆசிரியர் கேட்டார். மற்ற மாணவர்கள் பொறியாளர்களாகவும், மருத்துவர்களாகவும், பிற தொழில் வல்லுநர்களாகவும் ஆக விரும்புவதாகக் கூறினர்.  அன்னி, வகுப்பில் நிமிர்ந்து நின்று தான் ஒரு பைலட்டாக ஆகவேண்டும் என்ற தன் விருப்பத்தைத் தெரிவித்தபோது. அனைவரும் வியந்து நோக்கினர். 


அன்னி 11ஆம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தபோது, பைலட்டாக ஆவதற்கு 90 விழுக்காடு மதிப்பெண் தேவை என்று யாரோ கூறவே (உண்மை அதுவல்ல என்று பின்னர்தான் அறிந்தார்) பெரும்பாலான பாடங்களில் 100 விழுக்காடு பெற்றார். ஆங்கிலத்தில் 92 விழுக்காடும், சமஸ்கிருதத்தில் 98 விழுக்காடும் பெற்றார். 12ஆம் வகுப்பில் நன்கு படித்து தேர்ச்சி பெற்று மற்ற மாணவிகளுக்கு வகுப்பெடுக்கும் நிலைக்கு உயர்ந்தார்.

12ஆம் வகுப்பு நிறைவு செய்த பின் பெற்றோர் அவரை பொறியாளர்களுக்கான தேர்வினை எழுதும்படி கூறினர். ஆனால் அன்னிக்கு அதில் உடன்பாடில்லை. வேறுவழியின்றி விஜயவாடாவிலுள்ள ஒரு பொறியியல் கல்லூரியில் சேர்ந்தார். உரிய கட்டணங்கள் செலுத்தினார். விருப்பமின்றி வகுப்புக்குச் சென்றார். ஆனால் பெற்றோரிடமும், மற்றவர்களிடமும் தான் ஒரு பைலட்டாக ஆவப்போவதாகவே கூறிவந்தார். 
இந்திரா காந்தி ராஷ்ட்ரிய ஊரன் அகாதெமியிலுள்ள விமானப் பயிற்சிப்பள்ளியின் விளம்பரத்தைப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. அதற்கு விண்ணப்பிக்க முன்பெல்லாம் ஆரம்ப கால பறக்கும் அனுபவம் தேவையாக இருந்தது. தற்போது பறக்கும் அனுபவம் தேவையில்லை என்று அறிந்த அவர் அதற்கான தேர்வை புதுதில்லியில் எழுத விரும்பினார். தந்தையோ அந்த அளவிற்கு செலவு செய்யமுடியாது என்றார்.  தாயாரும் சகோதரியும் அவளுடைய விருப்பத்திற்கு ஆதரவு தந்தனர். கிட்டத்தட்ட இரண்டு நாள்கள் புகைவண்டிப்பயணம் புதுதில்லிக்கு நின்றுகொண்டே, முன்பதிவின்றி. 

தேசிய அளவிலான அத்தேர்வில் 30 பேரே தேர்ந்தெடுக்கப்படுவர். நுழைவுத்தேர்விலும், நேர்முகத்தேர்விலும் தேர்ச்சி பெற்ற நிலையில் அன்னி தேர்ந்தெடுக்கப்பட்டார். இத்தேர்வுகளுக்காக பெற்றோர் அவளுடன் உத்திரப்பிரதேசத்திலுள்ள ராய் பெரேலிக்குச் சென்றனர். தொடர்ந்து விஜயவாடாவில் நடைபெற்ற நேர்முகத்தேர்வின்போது அவருடைய 11ஆம் வகுப்பு ஆசிரியர் உடன் சென்றார்.

இச்சூழல் அவருடைய பெற்றோரின் மனதை நெருட வைக்க, அவர்கள் அவருடைய விருப்பத்திற்கு இசைவு தெரிவித்தனர்.  வங்கியிலிருந்தும், உறவினர்களிடமிருந்தும் ரூ.15 இலட்சம்  கடன் பெற்றார். பயிற்சி தொடங்கியது. 2 வருடங்கள் மூன்று மாதங்கள். பயிற்சிக்காலத்தில் ஆங்கில உச்சரிப்பு மற்றும் புரிதலை மேம்படுத்திக்கொண்டார். 17 வயதில் விமானப்பள்ளியில் சேர்ந்த அவர் தன் 19 வயதில் பயிற்சியை நிறைவு செய்தார்.

அவருக்கு தெலுங்கும் இந்தியும் பேசத்தெரியும். ஆங்கிலத்தில் படிக்கவும் எழுதவும் தெரியும், ஆனால் அருகிலுள்ளோர் யாரும் பேசாத நிலையில் பள்ளிக்காலத்தில் அவரால் ஆங்கிலம் பேச முடியவில்லை. சொல்  உச்சரிப்பின்போது அதிகம் சிரமப்பட்டுள்ளார். அப்போது அவரை பலர் கேலி செய்துள்ளனர். அவர் எதையும் பெரிதுபடுத்தாமல்  முன்னுக்கு வர வேண்டும் என்ற எண்ணத்துடன் தொடர்ந்து பேசினார், செயல்பட்டார்.  மொழியில் இருந்த குறையும் அவரை விட்டு நீங்கியது.

பண்பாட்டுச்சிக்கலையும் அவர் எதிர்கொள்ளவேண்டியிருந்தது. கிராமத்துப் பின்னணியில் வளர்ந்த அவர் தில்லியிலும் மும்பாயிலும் இருந்து பயிற்சிக்கு வந்திருந்த சக நண்பர்களிடம் பழக வேண்டியிருந்தது. மொழி தொடர்பாக அவரைப் பலர் கிண்டல் செய்ய ஆரம்பித்தனர்.  தவிரவும் அவர்களுடைய வித்தியாசமான நகைச்சுவை உணர்வு அன்னிக்கு ஏற்றதாக அமையவில்லை. இருந்தாலும் எதையும் எதிர்கொள்ளும் மன தைரியத்தை வளர்த்துக்கொண்டார். பயிற்சிக்காலத்தில் விடுமுறையின்போதுகூட அவர் தன் சொந்த ஊருக்குச் செல்லவில்லை. போக்குவரத்துச் செலவு ஒரு புறமிருக்க, அதே காலகட்டத்தில் பயிற்சிக்கூடத்தில் இருந்தால் மென்மேலும் கற்றுக்கொள்ளலாம் என்ற விருப்பமும் அதற்குக் காரணமாகும். பெரும்பாலான அவருடைய நண்பர்கள் விமானத்தில் பணிபுரியும் கேப்டனின் பிள்ளைகளாக இருந்தனர். அவளுக்கு இவ்விதப் பின்புலம் இல்லாத நிலையை எதிர்கொள்ள விடுமுறைக்கால கூடுதல் பயிற்சி உதவியது. அவருடைய இந்த முயற்சி அவர் பயிற்சியில் அனைவரையும்விட முன்னுக்கு வர வைத்ததோடு, பிறர் பொறாமைப்படும் அளவு ஆக்கியது. பயிற்சியின்போதான உழைப்பு அவர் பயிற்சிக்கான உதவித்தொகையை பெறவும் உதவியது.  
  
19 வயதில் பயிற்சியை முடித்த அவருக்கு 2006இல் எர் இந்தியாவில் தகுதி அடிப்படையில் வேலை கிடைத்தது. பணியில் சேர்ந்து படிப்படியாக உயர்ந்தார். தொடர்ந்து எர் இந்தியாவில் பணியாற்றும்போதே பி.எஸ்.சி. (ஆகாய விமானம் ஓட்டுதல்) பட்டம் பெற்றார். பயிற்சி பெறுவதற்காக ஸ்பெயினுக்குச் சென்றார். முதன்முதலாக வெளிநாட்டுப் பயணம் அதுவே. தன் ஊதியத்தின் ஒரு பகுதியை, முன்னர் வாங்கியிருந்த கடனை அடைத்தார். ஆஸ்திரேலியாவில் படித்த தன் சகோதரர்களுக்கும்,  அமெரிக்காவில் படிக்கும் தன் சகோதரிக்கும் பண உதவி செய்துள்ளார்.  அவருடன் பணியாற்றுபவர்கள் சொத்து வாங்கும்போது இவர் தன் சம்பாத்தியத்தை தன் உடன் பிறந்தோரின் படிப்புக்காகச் செலவிட்டுள்ளார். பெற்றோருக்காக வீடும் வாங்கினார்.  


இலண்டனில் உலகின் பெரிய விமானமான போயிங் 777இல் பறந்து சாதனை படைத்தார்.  அவர் இயக்குகின்ற போயிங் 777 மிகப்பெரிய விமானமாகும். உலகிலேயே இளம் வயதில் போயிங் 777 விமானத்தை இயக்கும் பெண்மணி என்ற பெருமையைப் பெற்று தன் இலக்கினை அடைந்துள்ளார்.  நியூயார்க், சிகாகோ, சான் பிரான்சிஸ்கோ ஆகிய நகரங்களுக்கு தொடர்ந்து விமானம் ஓட்டிக்கொண்டிருக்கிறார் இந்த வீராங்கனை.

எர் இந்தியா நிறுவனத்தைச் சேர்ந்த மூத்த அலுவலரும் அவருடைய வழிகாட்டிகளில் ஒருவரும் அவரைப் பாராட்டுகிறார். "அன்னி மிகத் திறமையானவர். அவ்வாறு ஒரு நிலைக்கு வர அவர் கடினமாக உழைத்துள்ளார் என்கிறார். பயிற்சிக்காலத்தின்போது மற்ற அனைவரையும்விட முன்னுக்கு வந்தவர்". தன் விடாமுயற்சியாலும், மன உறுதியாலும் சாதித்துக்கொண்டிருக்கும் அன்னியைப் பொறுத்தவரை வானமே எல்லை.

துணை நின்றவை: 

22 July 2017

எட்டாம் திருமுறை : திருவாசகம் : மாணிக்கவாசகர்

2012 முதல் நாளொரு பதிகம் வாசித்து வரும் நிலையில் ஏழாம் திருமுறையைத் தொடர்ந்து அண்மையில் எட்டாம் திருமுறையில் திருவாசகத்தை (மாணிக்கவாசகர்) நிறைவு செய்துள்ளேன். திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகியோரின் திருமுறைகளுடன் நோக்கும்போது அதிகமான மெய்யியல் சார்ந்த கருத்துகளை திருவாசகத்தில் காணமுடிகிறது. அதனால்தான் திருவாசகத்திற்கு உருகார் எவ்வாசகத்திற்கும் உருகார் என்று கூறுகின்றார்கள் போலுள்ளது. திருவாசகப் பாடல்களில் சிலவற்றைப் பொருளுடன் வாசிப்போம், வாருங்கள். 

5.திருச்சதகம்,  7.காருணியத்திரங்கல் (கருணையாலே இரங்கும்படி இறைவனை வேண்டுவதைக் குறிப்பது)
ஒருவனே போற்றி ஒப்பில் அப்பனே போற்றி வானோர்
குருவனே போற்றி எங்கள் கோமளக் கொழுந்து போற்றி
வருகஎன்று என்னை நின்பால் வாங்கிட வேண்டும் போற்றி
தருகநின் பாதம் போற்றி தமியனேன் தனிமை தீர்த்தே. (72)

தனிப்பெரும் முதல்வனே! வணக்கம்! நிகரில்லாத தந்தையே வணக்கம்! தேவர்களுக்குக் குருவானவனே வணக்கம்! எங்களுடைய அழகிய சோதியே, வணக்கம்! “இங்கே வா” என்று அடியேனை உன்னிடம் நீ அழைத்து ஏற்றுக் கொள்ள வேண்டும். வணக்கம்! துணையற்ற என்னுடைய தனிமையை நீக்குக. உன்னுடைய திருவடித் துணையைத் தந்தருள்க வணக்கம்!

10.திருக்கோத்தும்பி, சிவனோடு ஐக்கியம் (அரச வண்டை அழைத்து இறைவன் திருவடிக் கமலத்தின்கண் சென்று ஊதவேண்டும் என்று கூறுவது போல அமைந்தது. இறைவன் திருவடிக்கண் பிரிவின் நிற்கும் பண்பு)
ஒன்றாய் முளைத்தெழுந்து எத்தனையோ கவடுவிட்டு
நன்றாக வைத்தென்னை நாய்சிவிகை ஏற்றுவித்த
என்தாதை தாதைக்கும் எம்மனைக்கும் தம்பெருமான்
குன்றாத செல்வற்கே சென்றுஊதாய் கோத்தும்பீ. (222)

அரச வண்டே! ஒரு பொருளாய் முளைத்துத் தோன்றியவன். எத்தனையோ கிளைகளாக விரிந்த எனக்கு நன்மை உண்டாக வைத்தவன். நாயைச் சிவிகையில் ஏற்றினாற் போல எனக்குச் சிறப்பு செய்தவன். என் தந்தைக்கும் தந்தையானவன். என் தாய்க்குத் தலைவன் போன்றவன். குறைவுபடாத அச் செல்வனிடத்தே சென்று நீ ரீங்காரம் செய்வாயாக!

15.திருத்தோணோக்கம், பிரபஞ்ச சுத்தி (தோணோக்கம் என்பது மகளிர் விளையாட்டுகளில் ஒன்று. மகளிர் ஒருவர் தோளை மற்றொருவர் அன்பொழுகத் தொட்டும் தட்டியும் மகிழ்ந்து விளையாடும் விளையாட்டாகும். உலகம் நிலையற்றது என்பதை உணர்ந்துஇறைவன் திருவருளால் அவன் திருவடிப்பேற்றினைப் பற்றி வாழ்வது பிரபஞ்ச சுத்தியாகும்.)
ஏழைத் தொழும்பனேன் எத்தனையோ காலமெல்லாம்
பாழுக்கு இறைத்தேன் பரம்பரனைப் பணியாதே
ஊழிமுதற் சிந்தாத நன்மணிவந் தென்பிறவித்
தாழைப் பறித்தவா தோணோக்கம் ஆடாமோ. (327)

அறிவில்லாத அடியேனாகிய நான் பல காலம் மேலான கடவுளை வணங்காமல் வீணாகக் கழித்தேன். அவ்வாறு இருந்தும் ஊழிமுதல்வனும் என்றும் அழியாத சிறந்த மாணிக்கம் போன்றவனுமாகிய எம் இறைவன் தானே எழுந்தருளி வந்து என் பிறவியின் வேரை பிடுங்கிக் களைந்தான். அதனைப் ப்டித் தோள் நோக்கம் ஆடுவோமாக.

25.ஆசைப்பத்து, ஆத்தும இலக்கணம் (ஆசைப்பத்து என்பது இறைவன் திருவடியை அடைவதற்கு ஆசைப்படும் தன்மையாகும். ஆன்மாவின் இயல்பு இறைவனை அடைய விரும்புவதே. இதனைக் கூறுவது ஆத்தும இலக்கணம்.)
கருடக் கொடியோன் காண மாட்டாக் கழற்சே வடியென்னும்
பொருளைத் தந்திங் கென்னை யாண்ட பொல்லா மணியேயோ
இருளைத் துரத்திட் டிங்கே வாவென் றங்கே கூவும்
அருளைப் பெறுவான் ஆசைப் பட்டேன் கண்டாய் அம்மானே. (418)

தலைவனே! கருடக் கொடியை உடைய திருமாலும் காண முடியாத வீரக் கழலணிந்த திருவடி என்கிற செல்வத்தை எனக்குக் கொடுத்து, இங்கு என்னை ஆட்கொண்ட தொளையில்லாத மாணிக்கம் போன்றவனே! ‘ஓ’, எனது அறியாமையை நீக்கி “இங்கே வா” என்று வீட்டுலகிற்கு என்னை அழைக்கின்ற உள் அருளைப் பெற நான் பெரிதும் ஆசைப்பட்டேன்.

31.கண்ட பத்து, நிருத்த தரிசனம் (நடராசப்பெருமானது திருநடனத்தைக் கண்டு வியந்து பாடியது. திருப்பெருந்துறையில் கண்ட பெருமானைத் திருக்கழுக்குன்றத்திலே மீண்டும் கண்டார். அவருடைய அருட்கூத்தைத் தில்லையில் கண்டு பாடியது. அதுவே நிருத்த தரிசனம்.)
சாதிகுலம் பிறப்பென்னும் சுழிப்பட்டுத் தடுமாறும்
ஆதமிலி நாயேனை அல்லலறுத்து ஆட்கொண்டு
பேதைகுணம் பிறருருவம் யான்எனதென் னுரைமாய்த்துக்
கோதிலமுது ஆனானைக் குலாவுதில்லை கண்டேனே. (479)

சாதி, குலம், பிறப்பு என்கின்ற சுழலிலே அகப்பட்டு அறிவு தடுமாறும் நாய் போன்றவன் நான். என்னுடைய பிறவித் துன்பத்தைத் தொலைத்து அடிமை கொண்டு, பேதை குணத்தையும், அன்னியர் வடிவம் என்ற எண்ணத்தையும், நான் எனது என்று சொல்லும் வார்த்தைகளையும் அறவே ஒழித்தான். அத்தகைய குற்றமற்ற அமுதம் போன்றவனை அழகு பொருந்திய தில்லையம்பலத்தில் கண்டேன்.

35.அச்சப் பத்து, ஆனந்தம் உறுதல் (உலக மக்கள் உண்மையறியாது உழல்வதைக் கண்டு அஞ்சிப் பாடியது அச்சப்பத்து. இறைவனது திருவருள் இறவா இன்பம் நல்கும். எனவே இது இன்பம் பெறுதல் என்னும் பொருளமைந்த ஆனந்தம் உறுதலாம்.)
பிணியெலாம் வரினும் அஞ்சேன் பிறப்பினோ டிறப்பும் அஞ்சேன்
துணிநிலா அணியினான்தன் தொழும்ப ரோடழுந்தி அம்மால்
திணிநிலம் பிளந்தும் காணாச் சேவடி பரவி வெண்ணீறு
அணிகிலா தவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சு மாறே.  (520)

எத்தகைய நோய் வந்தாலும் நான் அஞ்ச மாட்டேன். பிறப்பு இறப்பிற்கும் நான் அஞ்ச மாட்டேன். பிறைச் சந்திரனைச் சூடியவன். தொண்டரோடு பொருந்தியவன். அந்தத் திருமால் தான் காணவேண்டுமென்று வலிமையான நிலத்தை அகழ்ந்து பார்த்தும் காண முடியாத சிவந்த திருவடியையுடையவன். அத்திருவடியைத் துதித்துத் திருவெண்ணீறு அணியாதவரைக் கண்டால், ஐயோ, நான் அஞ்சுகின்ற வகையை என்னவென்று சொல்வேன்!   

நன்றி:  
பன்னிரு திருமுறைகள்,  தொகுதி 11, மாணிக்கவாசகரின் திருவாசகம்,
உரையாசிரியர் புலவர் அ.மாணிக்கம்,
வர்த்தமானன் பதிப்பகம், சென்னை, 600 017
தொலைபேசி 28144995, 28140347, 43502995,
அலைபேசி :9094963125, 9941863542, 9380630192 (24 தொகுதிகள் ரூ.4500) 

15 July 2017

திருக்கட்டளை சுந்தரேஸ்வரர் கோயில்

புதுக்கோட்டை மாவட்டம் புகழ் பெற்ற சமணப் படுகைகளையும், அழகான கற்றளிகளையும் கொண்ட பெருமையுடையதாகும். அவற்றில் முக்கியமான கோயில் திருக்கட்டளை சோமசுந்தரேசுவரர் கோயிலாகும். புதுக்கோட்டைக்குக் கிழக்கே 5 கிமீ தொலைவில் திருவரங்கம் வட்டத்தில் உள்ள திருக்கட்டளை என்னுமிடத்தில் இக்கோயில் அமைந்துள்ளது. அண்மையில் இக்கோயிலுக்குச் செல்லும் வாய்ப்பு கிடைத்தது.

இக்கோயிலின் விமானத்தைப் பார்க்கும்போது கும்பகோணம் நாகேஸ்வரன் கோயில், புள்ளமங்கை பிரம்மபுரீஸ்வரர் கோயில், நார்த்தாமலை விஜயாலயசோழீச்சரம், திருவையாறு சப்தஸ்தானக் கோயில்களில் சில கோயில்கள் உள்ளிட்ட கோயில்கள் நம் நினைவிற்கு வரும். மிகவும் சிறிய கோயிலாக இருந்தாலும் கோயிலுக்குச் சென்று அந்த விமானத்தையும், திருச்சுற்றையும் பார்க்கும்போது அவற்றையே பார்த்துக்கொண்டிருக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்படும்.

திருக்கட்டளை என்பது கற்றளி என்ற சொல்லிலிருந்து வந்ததாகவும் அவ்வகையில் இக்கோயில் அப்பெயரைப் பெற்றதாகவும் கூறுவர். கருங்கற்கட்டுமானத்தில் பல நூற்றாண்டுகளாக இருந்து நம் பெருமையினை உரக்கக் கூறிக்கொண்டிருக்கும் இக்கோயில் ஆதித்த சோழன் (கி.பி.870-907) காலத்தைச் சார்ந்ததாகக் கூறுவர். 

புதுக்கோட்டை மாவட்டத்தில் கற்றளிகள் அதிகமாக இருந்தாலும், இக்கோயில் அமைப்பில் வித்தியாசமானதாகும். பரிவார வகைக் கோயிலாகக் கூறப்படுகின்ற இக்கோயிலில் மூலவர் நடுவே இருக்க திருச்சுற்றில் சுவரை ஒட்டிய நிலையில் சிறிய சன்னதிகளில் பிற தெய்வங்களைக் காண முடியும்.  சுவரை ஒட்டியமைந்துள்ள ஒவ்வொரு சன்னதியும் ஒவ்வொரு சிறு கோயிலாகக் காணப்படுகிறது. அடுத்தடுத்து இவ்வாறாக சன்னதிகள் அமைந்துள்ளன. கோயிலுக்கு முன்பாக குளம் அமைந்துள்ளது. 
தமிழகத்தில் இதுவரை இவ்வாறான அமைப்பில் கோயிலைப் பார்க்காத நிலையில், இங்கு சென்ற அனுபவம் மறக்கமுடியாததாகும். இக்கோயிலுக்குச் செல்வதற்கான வாய்ப்பை உண்டாக்கிக் கொள்வோம். தமிழகத்தில், புதுக்கோட்டை மாவட்டத்தில் முற்றிலும் வித்தியாசமான பாணியில் அமைந்துள்ள இக்கோயிலைக் காணச் செல்வோம், வாருங்கள். 

இக்கோயிலுக்குச் சென்று வரும்போது அருகிலிருந்த திருவரங்குளம் அரங்குளநாதசுவாமி கோயிலுக்கும் சென்றோம். 

கோயிலுக்குச் செல்லும் முன்பாக இவ்விரு கோயில்களைப் பற்றியும் விக்கிபீடியாவில் பதிவினைத் தொடங்கினேன். கோயிலுக்குச் சென்றுவந்தபின் புகைப்படங்களைச் சேர்த்து அவற்றை மேம்படுத்தினேன்.  

விக்கிபீடியாவில் திருக்கட்டளை சுந்தரேசுவரர் கோயில்

விக்கிபீடியாவில் திருவரங்குளம் அரங்குளநாதர் கோயில்

08 July 2017

அயலக வாசிப்பு : சூன் 2017

சூன் 2017இல் அயலக வாசிப்பில் என்னை ஈர்த்த சில செய்திகளைப் பகிர்ந்துள்ளேன். சில ஆண்டுகளுக்கு முன்னர் ஜெர்மனியிலிருந்து வரும் இதழினைப் படித்துள்ளேன். தற்போது கெல்மத் கோல் இயற்கையெய்தியபோது அவரைப் பற்றி அவ்விதழில் வந்த செய்தி (டெ ஸ்பீகல்), 2018இல் கார்டியன் வடிவம் மாறப்போகின்ற செய்தி (கார்டியன்), ஆகாய விமானத்தில் பிறந்த குழந்தை தொடர்பாக, நம் நாட்டுச் செய்தி வெளிநாட்டு இதழில் வெளிவந்தது  (இன்டிபென்டன்ட்) உள்ளிட்ட பல செய்திகள் என்னை ஈர்த்தன. வாய்ப்பிருப்பின் கார்டியன் புது வடிவம் பெறுவது குறித்து தனி பதிவாக எழுதவுள்ளேன். 

1 சூன் 2017
10 குழந்தைகளில் எட்டு குழந்தைகள் முறையற்று அமைக்கப்பட்டுள்ள காரின் இருக்கைகளால் பாதுகாப்பின்றி இருக்கின்றார்களாம். (நன்றி: சன்)  இது நம் நாட்டிற்கும் பொருந்தும் என எண்ணத் தோன்றுகிறது.
5 சூன் 2017
பிரிட்டனில் இன்னும் 15 ஆண்டுகளுக்குள் தானாக இயங்கும் கார்கள் வரவுள்ள நிலையில், இந்த ஆண்டு பிறக்கும் குழந்தைகள் கார் ஓட்டக் கற்றுக்கொள்ள வேண்டிய அவசியம் ஏற்படாது என்று இங்கிலாந்திலுள்ள இன்சூரன்ஸ் நிறுவனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார். 2032க்குள் இவ்வாறான தொழில்நுட்பம் வளர்ந்துவிடும் என்றும் அதன் காரணமாக இப்போது பிறக்கும் குழந்தைகள் கார் ஓட்டக் கற்றுக்கொள்ளவேண்டிய அவசியம் இல்லை என்றும் அவர் கூறினார். இன்சூரன்ஸ் நிறுவனங்கள் இவ்வாறான புதிய தொழில்நுட்பத்தை எதிர்கொள்ளும் அளவிற்கு தயாராக ஆகவேண்டும் என்று எச்சரித்துள்ள அவர், மனிதனால் இயக்கப்படும் வாகனத்தைவிட கணினியால் இயக்கப்படும் வாகனத்தால் விபத்துகள் நேரிட வாய்ப்புள்ளது என்று கூறியுள்ளார். (நன்றி : இன்டிபென்டன்ட்)
8 சூன் 2017
பெரும்பாலான போலிச் செய்திகளின் (fake news) மூலத்தைக் கண்டுபிடிப்பது சிரமமே. ஆனால் அதற்கும் விதிவிலக்கு உண்டு என்பதை நிரூபிக்கும் செய்தியைப் பற்றி அறிந்துகொள்வோம் (நன்றி  : நியூயார்க் டைம்ஸ்) தற்போது இதனையும் கடந்து போலிச் செய்திகளில்கூட எது உண்மையான போலி எது போலியான போலி என்று சொல்லுமளவிற்கு தற்போது விவாதம் நடந்துகொண்டிருப்பது மிகவும் வேதனையே. 
 13 சூன் 2017
"ருவாண்டா பாராளுமன்றத்தில் 61 விழுக்காட்டினர் பெண்கள். தென் ஆப்பிரிக்கப் பாராளுமன்றத்தில் 40 விழுக்காட்டினருக்கு மேல் பெண்கள். ஏழு ஆப்பிரிக்க நாடுகளில் 30 விழுக்காட்டினருக்கு மேல் பெண்கள். பாராளுமன்றத்தில் 34 விழுக்காட்டினர் பெண்கள் எ்ன்ற வகையில், உலகளவில் 195 நாடுகளில் உகாண்டா 31ஆவது இடத்தில் உள்ளது. இங்கிலாந்துப் பாராளுமன்றம் 30 விழுக்காடு பெண்களைக் கொண்டு 46ஆவது இடத்தில் உள்ளது.................."
"அரசியலில் உயர்ந்த இடத்தைப் பிடிக்க ஆப்பிரிக்கப் பெண்கள் எவ்வளவு சிரமப்பட்டுள்ளனர் என்பதை நான் என் அனுபவத்தில் அறிவேன். உகாண்டா அரசில் இளைய பெண்மணியாகவும், ஆப்பிரிக்காவின் இளைய பெண் மந்திரியாகவும் நான் உள்ளேன். உகாண்டாவிலும், குறிப்பாக ஆப்பிரிக்கா முழுவதிலும் பெண்களே சமூக மற்றும் பொருளாதாரத்தின் முதுகெலும்பாகத் திகழ்கின்றனர். ஆப்பிரிக்காவில் உள்ள சிறிய அளவிலான பண்ணை மற்றும் முறைசாரா வணிகர்களில் 80 விழுக்காட்டினருக்கு மேல் பெண்களே அங்கம் வகிக்கின்றனர். பெரும்பாலும் அவர்களே குடும்பத்தைக் கவனித்துக் கொள்கின்றார்கள். இவ்வாறான முக்கியமான பொறுப்புகளைச் சுமக்கின்ற நிலையில் கூட முடிவெடுக்கவேண்டிய அதிகாரம் என்ற நிலை ஏற்படும்போது நாங்கள் அதிகமே போராட வேண்டியிருக்கிறது......ஆப்பிரிக்காவில் பெண் ஜனாதிபதிகளும், பெண் மந்திரிகளும் அதிக அளவில் இடம் பெறப்போவதை என் வாழ்நாளில் காண்பேன் என்று நான் முழுமையாக நம்புகிறேன். இந்த நிலை மேற்கத்திய நாடுகளுக்கும்கூட பொருந்தும் என்பதே உண்மை..." ஈவ்லின் அனிட்டே, தொழிற்மயமாதல் மற்றும் தனியார் மயமாத்லுக்கான நிதியமைச்சர், உகாண்டா (நன்றி : கார்டியன்)

18 சூன் 2017
கெல்மத் ஹோல் (Helmut Kohl, 1930-2017): அரசியல் களத்தில் வெற்றிக்கனிகளை சுவைத்தவர். பெரும்பாலான பொறுப்புகளை இளமையில் ஏற்றவர். ஆனால் உயரமானவர்களில் ஒருவர், ஆம். அவரது உயரம் 6 அடி 4 அங்குலம். அவரது கட்சியில் சேரும்போது அவருக்கு வயது 16. இளம் வயதில் பாராளுமன்றத்தில் கட்சியமைப்பில் தலைமைப்பொறுப்பேற்றார். இளம் வயதில் ஆளுநரானார். அதுபோலவே இளம் வயதில் அதிபரானார். 16 ஆண்டுகள் அதிபராக இருந்த பெருமை பெற்றவர். மற்ற ஜெர்மானியத் தலைவர்களைவிட அதிக காலம் ஆட்சி புரிந்தவர். ஜெர்மனியை ஒன்றுசேர்த்தவர். ஐரோப்பிய ஒருங்கிணைப்பிற்கு அளப்பரிய பங்காற்றியவர். (நன்றி : டெ ஸ்பீகல், ஜெர்மனி) ஜெர்மனி ஒன்றான காலகட்டத்தில் நான் நாளிதழ்களைப் படித்தது இன்னும் நினைவில் உள்ளது. புகைப்படங்களில் இவர் தனித்து உயரமாக, கம்பீரமாகத் தெரிவார். பிற்காலத்தில் சில ஊழல்களில் சிக்கியவர். இருந்தாலும் தன் நாடு, தன் மக்கள் என்ற நிலையில் தனி முத்திரை பதித்தவர்.
20 சூன் 2017
பறந்த விமானத்தில் பிறந்த குழந்தை : நம் நாட்டிதழ்களில் வந்த, நம் நாட்டில் நடந்த செய்தி. இருந்தாலும் வெளிநாட்டு இதழில் அதனைப் பார்த்தபோது வியப்பு அதிகமானது. பறந்துகொண்டிருக்கும் விமானத்தில் பிறக்கும் குழந்தைக்கு அந்த விமானத்தில் அதன் வாழ்நாள் முழுவதும் இலவசமாகப் பயணிக்கும் வாய்ப்பு உண்டு என்று கேள்விப்பட்டுள்ளேன். தற்போது அதனைச் செய்தியாக இன்டிபென்டன்ட் இதழில் வாசிக்கும் வாய்ப்பு கிடைத்து. நடுவானில் பறந்துகொண்டிருந்த ஜெட் ஏர்வேய்ஸ் விமானத்தில் பிறந்த குழந்தை அதன் வாழ்நாள் முழுவதும் இலவசமாக அந்த விமானத்தில் பறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. அரேபியாவிலிருந்து கொச்சிக்கு வந்து கொண்டிருந்த விமானத்தில் அந்த ஆண் குழந்தை பிறந்துள்ளது. விமானம் மும்பாய்க்கு திருப்பிவிடப்பட்டு சென்று கொண்டிருந்த நிலையில் தாய்க்கு பிரசவ வலி அதிகமாக எடுத்து, குழந்தை பெற்றுள்ளார். விமானத்தில் இருந்த செவிலியர்களின் விரைவான நடவடிக்கை நல்ல பலனைத் தந்துள்ளது. விமானம் மும்பையில் தரையிறங்கும் முன்பே குழந்தை பிறந்துவிட்டது. தற்போது தாயும் சேயும் நலம். (நன்றி : இன்டிபென்டன்ட்)
 23 சூன் 2017
2018 முதல் கார்டியன் (Guardian) மற்றும் அப்சர்வர் (Observer) அச்சு இதழ்கள் டேப்ளாய்ட் (tabloid) வடிவில் வெளிவரவுள்ளன. 2005 முதல் பெர்லினர் (Berliner) வடிவில் இவ்விதழ் வெளிவந்துகொண்டிருக்கிறது. பெர்லினர் வடிவம் என்பதானது 315 × 470 மில்லிமீட்டர்/12.4 × 18.5 அங்குலம் அளவைக் கொண்டிருக்கும். அது broadsheetஐவிட சிறியதாகவும், tabloidஐவிட சற்று பெரியதாகவும் இருக்கும். கடந்த ஆறு மாதங்களாக இதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும், இந்த வடிவ மாற்றம் காரணமாக கார்டியன் இதழியல் மென்மேலும் வலிமை பெறும் என்றும், வடிவில் மற்றுமே மாற்றம் என்றும் அந்நிறுவனத்தார் கூறியுள்ளனர். (நன்றி : கார்டியன்)

01 July 2017

கோயில் உலா : 24 ஜுன் 2017

24 ஜுன் 2017 அன்று தஞ்சாவூர் சைவ சித்தாந்த ஆய்வு மைய நிறுவனர் முனைவர் வீ. ஜெயபால் அவர்களுடன் குழுவாக 10 கோயில்களுக்குச் சென்றோம். அவற்றில் ஒன்பது சிவன் கோயில்களும் தேவாரப்பாடல் பெற்றவையாகும் நாகை சௌந்தரராஜப்பெருமாள் மங்களாசாசனம் பெற்றது. இந்த 10 கோயில்களில் திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோயிலை மட்டுமே இதற்கு முன் பார்த்துள்ளேன். தற்போது ஒன்பது கோயில்களைப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது.
 • காலை 6.30 மணியளவில் தஞ்சாவூரிலிருந்து 15 பேர் அடங்கிய குழுவாக வேனில் புறப்பட்டோம்.
 • கீழ்வேளூர் கோயில் மிகவும் சிறப்பாகவும் கலைநுட்பமாகவும் அமைந்துள்ள பார்க்கவேண்டிய கோயில் (இதனைப் பற்றி தனியாக ஒரு பதிவு எழுதவுள்ளேன்). இக்கோயில் சிவபுராணம் பாடி பயணத்தைத் துவங்கினோம்.
 • திருக்கோஷ்டியூர் பெருமாளை நான்கு நிலைகளில் கண்டுள்ளேன். பிற இடங்களில் கருவறையில் நின்ற நிலையிலோ கிடந்த நிலையிலோ பார்த்துள்ளேன். நாகப்பட்டினம் சௌந்தரராஜப்பெருமாள் கோயிலில் மூலவர் சன்னதியில் நின்ற நிலையில் பெருமாள் உள்ளார். கருவறையின் இடது புறம் மற்றொரு சன்னதியில் கிடந்த கோலத்தில் உள்ளார். இவ்வாறாக ஒரே கோயிலில் இரு கோலத்தில் பெருமாளை இங்கு மட்டுமே பார்த்தேன்.
 • நாகப்பட்டினத்தில் காயரோகணேசுவரைவிட நீலாயதாட்சி அம்மனே பெரும்பாலும் பேசப்படுகிறார்.
 • திருநள்ளாற்றில் மூலவரான தர்பாரண்யேஸ்வரரைப் பெரும்பாலும் அனைவரும் மறந்துவிட்டது போலுள்ளது. அக்கோயிலை சனீஸ்வரர் கோயிலாக ஆக்கியுள்ளனர். கோயிலைச் சுற்றி வந்து சனீஸ்வரரைப் பார்த்துவிட்டு, மூலவரைப் பார்க்க வேண்டிய நிலை. அந்த அளவிற்கு வரிசையாக (கியூ) செல்லும்படி வைத்துள்ளனர்.
 • தருமபுரத்தில் ஒரு அம்மன் கோயிலில் மதிய உணவு உட்கொண்டு சற்று ஓய்வெடுத்தோம். 
 • காரைக்கால் பகுதியில் ஒரு தருமபுரம் இருப்பதை இப்போதுதான் அறிந்தேன்.
 • காரைக்கால் அம்மையார் கோயில் உள்ள தெருவின் கடைசியில் சற்றே உள்ளடங்கி கோவில்பத்து என்னுமிடத்தில் கோயிலைக் காணும் வாய்ப்பு கிடைத்தது இப்பயணத்தில்தான். காரைக்கால் அம்மையார் கோயிலுக்கும், அருகேயுள்ள பெருமாள் கோயிலுக்கும் பல முறை சென்றுள்ளேன்.
 • கடவூர் மயானம் பார்க்கும்போது சற்றே இருட்டி விட்டது. இருந்தாலும் பெரிய கோயிலை பொறுமையாகப் பார்த்தோம்.
 • திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோயிலுக்குச் சென்றால் எங்கும் சாம்பிராணிப் புகையே. சாம்பிராணி உடம்புக்கு நல்லதுதான். ஆனால் நாம் கோயிலில்தான் இருக்கிறோம் என்று நமக்குள் சொல்லிக் கொள்ள வேண்டும். 60 வயது முதல் அட்டவணை போடப்பட்டு திருமணங்கள் நடத்தப்படுவதைப் பார்த்தோம். பல கல்யாண வீடுகளுக்கு ஒரே நாள் சென்றுவந்ததுபோலிருந்தது. மூலவர் சன்னதி, அம்மன் சன்னதி என எங்கு பார்த்தாலும் தம்பதியர்களை குடும்பத்தாரோடு கண்டோம். வீட்டில் நடக்கும் நிகழ்வு போல அவரவர்கள் புகைப்படம் எடுத்துக்கொண்டும், பேசிக்கொண்டும் இருப்பதைக் கண்டோம். அனைத்தையும் பொறுமையாகப் பார்த்துக் கொண்டிருக்கின்ற மூலவரைக் கண்டோம்.  
 • எங்களை அழைத்துச் சென்ற முனைவர் ஜெயபால் அவர்கள் எங்களின் பயணத்தைப் பற்றி சுருக்கமாகக் கூறி நன்றி கூறினார். 
 • இரவு 11.30 மணியளவில் சுகமாக தஞ்சாவூர் வந்து சேர்ந்தோம்.

1) கீழ்வேளூர் கேடிலியப்பர் கோயில்
(கோயில் உலாவில் முதல் கோயில்)
(சிவபுராணம் பாடப்பெறல்)
கேடிலியப்பர்-வனமுலையம்மை (ஞானசம்பந்தர், நாவுக்கரசர்) பூமியிலிருந்து சுமார் 21 முழுவதும் கருங்கற்களால் அமைக்கப்பட்ட சித்திரக்கூட பர்வதம் என்ற பெயர் பெற்ற கட்டுமலையில் அமைந்துள்ளது. மூலவர் கருவறையுடன் கூடிய விமானம் கட்டட நுட்பங்களைக் கொண்டமைந்துள்ளது. இங்குள்ள அஞ்சுவட்டத்தம்மன் சன்னதி மிகவும் புகழ் பெற்றதாகும். உலாவின் முதல் கோயிலான இக்கோயிலில் அனைவரும் சிவபுராணம் பாடினோம். தொடர்ந்து அடுத்தடுத்த கோயில்களுக்குச் சென் (நாகப்பட்டினம் மாவட்டத்தில் திருவாரூர்-நாகப்பட்டினம் சாலையில் உள்ளது). 

2) நாகப்பட்டினம் சௌந்தரராஜப்பெருமாள் கோயில்
சௌந்தரராஜப்பெருமாள்-சௌந்தரவல்லி  (திருமங்கையாழ்வார்(நாகப்பட்டினம் நகரில் உள்ளது).

3) நாகப்பட்டினம் காயரோகணேசுவரர் கோயில்
காயரோகணேசுவரர்-நீலாயதாட்சி
(ஞானசம்பந்தர், நாவுக்கரசர், சுந்தரர்) (நாகப்பட்டினம் நகரில் உள்ளது).

4) திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயில்
தர்பாரண்யேஸ்வரர்-போகமார்த்தபூமுலையாள் (ஞானசம்பந்தர், நாவுக்கரசர், சுந்தரர்) (காரைக்கால்-கும்பகோணம் சாலையில் திருநள்ளாறில் உள்ளது). 

5) திருத்தெளிச்சேரி பார்வதீஸ்வரர் கோயில்
பார்வதீஸ்வரர்-பார்வதியம்மை (ஞானசம்பந்தர்) (காரைக்கால் நகரில் பாரதியார் சாலையில் கோவில்பத்து என்னுமிடத்தில் உள்ளது). 
   
6) தருமபுரம் யாழ்முரிநாதர் கோயில்
யாழ்முரிநாதர்-தேனமிர்தவல்லி (ஞானசம்பந்தர்)  9 பிப்ரவரி 2017 அன்று குடமுழுக்கு நடைபெற்றுள்ளது. (காரைக்கால் பகுதியில் திருத்தெளிச்சேரியிலிருந்து 2 கிமீ தொலைவில் உள்ளது)

7) கொட்டாரம் ஐராவதீஸ்வரர் கோயில்
ஐராவதீஸ்வரர்-வண்மார் பூங்குழலி  (ஞானசம்பந்தர்)
(திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வட்டத்தில் கோட்டாறு என்னுமிடத்தில் இக்கோயில் உள்ளது. கொல்லுமாங்குடியிலிருந்து நெடுங்காடு வழியாக திருநள்ளாறு செல்லும் மயிலாடுதுறை-காரைக்கால், கும்பகோணம்-காரைக்கால் பேருந்துகளில் சென்று வேலங்குடி பேருந்து நிறுத்தத்தில் இறங்கி சுமார்1 கிமீ சென்று இவ்வூரை அடையலாம். பேரளம்-காரைக்கால் பேருந்தில் ஏறி அம்கரத்தூரில் இறங்கி வடக்கே 1.5 கிமீ சென்றும் இவ்வூரை அடையலாம்.
  
8) வேட்டக்குடி சுந்தரேசுவரர் கோயில்
 
சுந்தரேசுவரர்-சௌந்தரநாயகி (ஞானசம்பந்தர்)
(நாகப்பட்டினம்-தரங்கம்பாடி சாலையில் வரிச்சிக்குடி என்னுமிடத்தில் இடப்பக்கம் பிரியும் கிளைப்பாதையில் 2 கிமீ சென்றால் கோயிலை அடையலாம். புதுச்சேரி மாநில எல்லையில் இக்கோயில் உள்ளது)

9) திருக்கடையூர்மயானம் பிரம்மபுரீஸ்வரர் கோயில்
பிரம்மபுரீஸ்வரர்-ஆம்லகுஜநாயகி (ஞானசம்பந்தர், நாவுக்கரசர், சுந்தரர்) 
(நாகப்பட்டினம் மாவட்டம் தரங்கம்பாடி வட்டத்தில், திருக்கடையூரிலிருந்து 2 கிமீ தொலைவில் உள்ளது).        

10) திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோயில்
அமிர்தகடேஸ்வரர்-அபிராமி  (ஞானசம்பந்தர், நாவுக்கரசர், சுந்தரர்) 
அட்டவீரட்டானத்தலங்களில் ஒன்று. எமனை உதைத்த காலசம்காரமூர்த்தி மூலவரின் வலப்புறம் தனிச் சன்னதியில் உள்ளார். (மயிலாடுதுறை-தரங்கம்பாடி சாலையில், ஆக்கூர் அருகில் உள்ளது).

நன்றி
திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளிலுள்ள பத்து கோயில்களுக்கும் எங்களை அழைத்துச்சென்ற முனைவர் வீ.ஜெயபால் அவர்களுக்கு எங்களின் மனமார்ந்த நன்றி. 

துணை நின்றவை
சிவ.ஆ.பக்தவச்சலம், தேவாரத் திருத்தலங்கள் வழிகாட்டி, குடியேற்றம், வேலூர் மாவட்டம், 2005