28 December 2019

ஏடகம் வரலாற்று உலா : 7 டிசம்பர் 2019 : கல்வெட்டுகள் கண்டெடுப்பு

கடந்த வாரம் கோயில் உலா சென்ற நாம், இந்த வாரம் வரலாற்று உலா செல்வோம். வாருங்கள்.
தஞ்சாவூரில் இயங்கி வருகின்ற கல்வி சமூக மேம்பாட்டு மையமான ஏடகம் அமைப்பின் சார்பாக கானாடுகாத்தான் அரண்மனை, ஆத்தங்குடி அரண்மனை, ஆத்தங்குடி மீனாட்சிசுந்தரேசுவரர் கோயில், அரண்மனை சிறுவயல் மருதுபாண்டியர் கோட்டை, மருதுபாண்டியர் நினைவிடம், காளையார்கோயில் சொர்ணகாளீஸ்வரர் கோயில் ஆகிய இடங்களுக்கு வரலாற்று உலா சென்றோம். அப்போது இரு பாண்டியர் காலக் கல்வெட்டுகளைக் கண்டோம். கல்வெட்டு கண்ட அனுபவத்தை இப்பதிவில் காண்போம்.
எங்கள் உலாவின்போது கானாடுகாத்தான் தொடங்கி பல ஊர்களுக்குச் சென்றோம். மருதுபாண்டியர் நினைவிடத்தைப் பார்த்துக்கொண்டிருக்கும்போது உள்ளூரைச் சேர்ந்த திரு பாரதிதாசன் என்பவர் எங்களுக்கு அறிமுகம் ஆனார். அவர் அப்பகுதியில் இரு கல்வெட்டுகள் இருப்பதாகக் கூறினார். எங்களின் வரலாற்று உலா, தேடல் உலாவாக மாறியது.  
அவருடைய வழிகாட்டலில் சுமார் 1 கிமீ தொலைவிற்கு நடந்து சென்றோம். உலாவின் போது வந்த பல நண்பர்கள் கல்வெட்டினைக் காணும் ஆர்வத்தோடு உடன் வந்தனர். பாதையே தெரியாமல் செடிகளுக்குள் புகுந்து சென்றது வித்தியாசமான அனுபவமாக இருந்தது. சிறிது தூரம் சென்றபின்னர் அவர் அங்கு இடிபாடான நிலையிலிருந்த ஒரு கட்டடத்தைக் காண்பித்தார். 
முன்னரே அந்தக் கல்வெட்டைப் பார்த்தாகக் கூறிய அவர், எங்கிருக்கிறது என்பதை மறந்துவிட்டார். பின்னர் அவருடன் நாங்களுக்கும் அந்தக் கட்டடத்தைச் சுற்றி வந்தும், உள்ளே சென்றும் தேடினோம். இறுதியில் அதனைக் கண்டோம்.  அவ்வாறே அங்கிருந்து மற்றொரு இடத்திற்கு எங்களை அவர் அழைத்துச்சென்று அங்கும் ஒரு கல்வெட்டினைக் காண்பித்தார். எங்களோடு அவர் ஆர்வமாக வந்ததும், கல்வெட்டினைப் பற்றிக் கூறியதும், தேடியதும் எங்களை வியக்க வைத்தன. கல்வெட்டுகளைச் சுத்தம் செய்து அவற்றிலிருந்து குறிப்புகளை எடுக்க அவரும் நண்பர்களும் பெரிதும் உதவினர். அவருக்கு நாங்கள் நன்றி கூறிவிட்டு எங்கள் பயணத்தைத் தொடர்ந்தோம்.  



சிவகங்கையிலிருந்து கிழக்கில் 18 கி.மீ. தொலைவிலும், காரைக்குடியிலிருந்து தெற்கில் 30 கி.மீ. தொலைவிலும் காளையார்கோயில் உள்ளது. இவ்வூரின் பழம் பெயர் கானப்பேரெயில், திருக்கானப்பேர், தலையிலங்கானம் என்பனவாகும். சங்க காலத்தில் வேங்கைமார்பன் என்ற மன்னனால் ஆட்சி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து பாண்டியர்களாலும், மதுரை நாயக்க மன்னர்களாலும், ராமநாதபுரம் சேதுபதி மன்னர்களாலும், சிவகங்கை மன்னர்களாலும் ஆட்சி செய்யப்பட்டது. மருது சகோதரர்களுக்கு பலமிக்க கோட்டையாகத் திகழ்ந்தது. பிறகு ஆங்கிலேயர்களால் கைப்பற்றப்பட்டது.
பாண்டிய நாட்டின் பாடல் பெற்ற தலங்களில் திருக்கானப்பேர் என்று அழைக்கப்படும் காளையார் கோயிலில் உள்ள சிவாலயத்தில் காளீஸ்வரர், சோமேஸ்வரர், சுந்தரேஸ்வரர் என்ற மூன்று சன்னதிகள் உள்ளன. சோமேஸ்வரர் சன்னதிக்கு எதிரே அமைந்துள்ள ராஜகோபுரம் மருது சகோதரர்களால் கட்டப்பட்டது. சுந்தரேசர் ஆலயமும், காளீஸ்வரர் ஆலயம் முன்னுள்ள கோபுரமும் வரகுணபாண்டியனால் தோற்றம் பெற்றதாகும்.
சங்க காலத்தில் பாண்டிய நாட்டில் கானப்பேரெயில் என்ற அரண் அமைத்து சிங்களப்படைகளை வென்று ஆட்சி செய்த மன்னன் வேங்கைமார்பன் ஆவான். இம்மன்னன் காலத்தில் ஆழம் நிறைந்த அகழியினையும், நிகர்ந்த பெரும் மதில்களையும், அடர்ந்த காவற்காட்டினையும் உருவாக்கி பகைவர் எளிதில் கைப்பற்ற முடியாத ஒரு பேரூராக காளையார்கோயிலைத் தோற்றுவித்தான். கடைச்சங்க காலப் பாண்டிய மன்னன் விக்கிரபெருவழுதி, பெரும்படையுடன் கானப்பேரெயிலைக் கைப்பற்றினான். கானப்பேரெயிலை சுற்றி இருக்கும் காடுகளின் அடர்த்தி தமிழக வரலாற்றில் முக்கியத்துவம் பெற்ற ஒன்றாகும். சோழப் பேரரசு காலத்திலும் இக்காட்டுப் பகுதி பரந்து விரிந்திருந்தது. புதுக்கோட்டை மாவட்டம் திருமெய்யம் வரையிலும், அதேபோல் திண்டுக்கல், அழகர்கோயில் வரையிலும் பரந்த பகுதியாகும். இதன் வடக்கு எல்லையாய் கானாடுகாத்தான் அமைந்துள்ளது.
மாமன்னன் ராஜராஜனும் ராஜேந்திரனும் தங்களின் பெரும் படையினை இவ்வூரின் வழியே வழிநடத்தி ஈழம் சென்றிருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். கி.பி.1325இல் வருகை தந்த அரபு நாட்டுப் பயணி திமிஸ்கி என்பார் இவ்வூரை காய்ன் என்ற பெயரால் குறிப்பிட்டுள்ளார். அவர்தம் பயணக்குறிப்பில் தென்னகத்தின் சிறந்த ஊர்களில் ஓர் ஊராக இவ்வூரினைப் பதிவு செய்துள்ளார்.

முதல் கல்வெட்டு:
காளையார்கோயில் சிவன் கோயிலிலிருந்து 1 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள மிகப்பெரும் கண்மாயின் உள் பகுதியில்,  பிற்காலத்தில் மருதுபாண்டியர்களால் கட்டப்பெற்ற நாணயசாலைக் கட்டடம் பழுதுற்று புதர் மண்டிக் கிடக்கின்றது. அதன் வாயிற்படியில் பாண்டியர் காலத்தைச் சேர்ந்த, உடைந்த நிலையில் உள்ள துண்டுக் கல்வெட்டு கண்டறியப்பட்டது. இக்கல்வெட்டு 13ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகும்.





வலமிருந்து:  ஜம்புலிங்கம், மணி.மாறன், பாரதிதாசன், தில்லை கோவிந்தராஜன்

  


இக்கல்வெட்டின் வரிகள் பின்வருமாறு உள்ளது.   
1.    ……………….கும் நெய்யமுது
2.    ஞ் திண்புறமாக(ம்)
3.    தொம் உடையார்
4.    டிஇமமாள்ளான அகொர
5.    பிர மா காரயன் எழுத்து
6.    இப்படிக்கு பாண்டியதேவ பிரமராயன்
உள்ளது. இது கோயிலுக்கு நெய்யமுது போன்ற தானம் வழங்கப்பட்டதைக் குறிப்பிடுகின்றது.

இரண்டாவது கல்வெட்டு:
இவ்வூரில் முத்துவடுகநாத தேவர் நினைவிடத்திற்கு அருகில் மற்றொரு பாண்டியர் காலத்து கல்வெட்டு ஒன்றின் உடைந்த பகுதி கண்டறியப்பட்டது. 



இக்கல்வெட்டின் வரிகள் பின்வருமாறு உள்ளது.   


1.    ஸ்வதிஸ்ரீ ஸ்ரீதிரிபுவன……………
2.    கொனெரிமை கொண்டான்……………
3.    சதுர்போதி மங்கலம் உ……………
4.    தெவர்கு யாண்டு இரண்டு…………..
5.    ஙய கூல பொகம்…………
6.    திருவிடையாட்டம்………

உள்ளது. பாண்டியர் காலத்தில் வழங்கப்பட்ட திருவிடையாட்டம் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.
காளையார்கோயிலில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் மூலம் புதிய இரண்டு துண்டுக் கல்வெட்டுகளைக் கண்டறிய முடிந்தது. இவை முழுமையாக இல்லை. இதன்மூலம் வரலாற்று ஆர்வலர்களுக்கும், ஆய்வாளர்களுக்கும் புதிய செய்திகள் கிடைக்க வாய்ப்பு ஏற்படும் என்ற நம்பிக்கையோடு அங்கிருந்து கிளம்பினோம். அன்றைய நாளில் நாங்கள் உலா சென்றதைப் பற்றிய அனுபவங்களை பிறிதொரு பதிவில் காண்போம். 

 






நன்றி:
  • ஏடகம் நிறுவனர் முனைவர் மணி.மாறன்
  • திரு தில்லை. கோவிந்தராஜன்
  • கல்வெட்டுகளைக் கண்டுபிடிக்க உதவிய திரு பாரதிதாசன்
  • உடன் வந்ததோடு, புகைப்படம் எடுத்து உதவிய நண்பர்கள்
  • செய்திகளை வெளியிட்ட நாளிதழ்கள்
31.12.2019 அன்று மேம்படுத்தப்பட்டது

21 December 2019

கோயில் உலா : 21 செப்டம்பர் 2019

21 செப்டம்பர் 2019 அன்று முனைவர் ஜெயபால் அவர்களின் குழுவோடு கோயில் உலா சென்றோம். இந்த உலாவின்போது 10 கோயில்களுக்குச் சென்றோம். அவற்றில் திருக்கண்ணபுரம் சௌரிராஜப்பெருமாள், திருக்கண்ணமங்கை பக்தவத்சலப்பெருமாள் ஆகிய இரு கோயில்களும் முன்னர் நான் பார்த்த கோயில்களாகும்.
காலை 6.30 மணி வாக்கில் தஞ்சையைவிட்டுக் கிளம்பினோம். எங்களது காலைச்சிற்றுண்டியினை  தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் வட்டத்திலுள்ள ஆண்டலாம்பேட்டை மூங்கிலாண்டவர் கோயிலில் நிறைவு செய்தோம்.

தொடர்ந்து நாகப்பட்டினம் மாவட்டம் திருமருகல் ரத்னகிரீஸ்வரர் கோயில்,  திருப்புகலூர் அக்னீஸ்வரர் கோயில், அதே கோயில் வளாகத்தில் உள்ள திருப்புகலூர்  வர்த்தமானீசுவரர் கோயில் (வர்த்தமானீச்சரம்), இராமநந்தீச்சரம் ராமநாதசுவாமி கோயில்,  திருக்கண்ணபுரம் சௌரிராஜப்பெருமாள் ஆகிய கோயில்களுக்குச் சென்றோம்.  திருக்கண்ணபுரம் பெருமாள் கோயில் தரிசனத்திற்குப் பின் மதிய உணவு உண்டோம். பின் அருகேயிருந்த  அங்காளபரமேஸ்வரி அம்மன் கோயிலில் சிறிது நேரம் இளைப்பாறினோம்.
மாலை நாகப்பட்டினம் மாவட்டம் திருச்செங்காட்டாங்குடி உத்திராபதீஸ்வரர் கோயில், சீயாத்தமங்கை அயவந்தீசுவரர் கோயில், திருப்பயத்தங்குடி திருப்பயற்றுநாதர் கோயில், திருவாரூர் மாவட்டம் கரவீரம் கரவீரநாதர் கோயில், திருக்கண்ணமங்கை பக்தவத்சலப்பெருமாள் கோயில் ஆகிய கோயில்களுக்குச் சென்றோம். அங்கிருந்து புறப்பட்டு, இரவு 11.30 மணியளவில் தஞ்சாவூர் திரும்பினோம். 

திருமருகல், நாகப்பட்டினம் மாவட்டம்  
(மாணிக்கவண்ணர்-வண்டுவார்குழலி) (ஞானசம்பந்தர், அப்பர் பாடியது)
இக்கோயில் ஒரு மாடக்கோயிலாகும். இக்கோயிலின் இடப்புறம் மேடையுடன் வன்னி மரம் உள்ளது. இந்த மரத்தின் அடியில்தான் ஞானசம்பந்தர் விஷம் தீர்ந்து எழுப்யி செட்டி மகனுக்கும் செட்டிப் பெண்ணுக்கும் திருமணத்தை நடத்தி வைத்ததாகக் கூறுவர். இந்த ஊரில் பாம்பு கடித்து எவரும் இறப்பதில்லை என்று கூறுவர். 





  
திருப்புகலூர், நாகப்பட்டினம் மாவட்டம்  
(அக்னிபுரீஸ்வரர்-கருந்தார்குழலி) (ஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர் பாடியது)
கோயிலுக்குள் கோயில் என்ற வகையில் இக்கோயிலில் இரு கோயில்கள் உள்ளன. இங்கிருந்த முருக நாயனார் மடத்தில் சம்பந்தர், அப்பர், சிறுத்தொண்டர், திருநீலநக்கர் முதலியோர் கூடியிருந்து மகிழ்ந்ததாகக் கூறுகின்றனர்.





  


திருப்புகலூர் கோயிலிலுள்ள மற்றொரு கோயிலான திருப்புகலூர் வர்த்தமானீச்சரம்
(வர்த்தமானீஸ்வரர்-கருந்தார்குழலி) (ஞானசம்பந்தர் பாடியது)  
அக்னிபுரீஸ்வரர் சன்னதியை ஒட்டி, மூலவர் சன்னதியின் வட புறத்தில் வர்த்தமானீச்சரம் அமைந்துள்ளது. அக்னிபுரீஸ்வரர் சன்னதியில் மூலவர் அறைக்கு நுழையும்போதே அதே வாயில் வழியாக வர்த்தமானீச்சரம் செல்லலாம். 

இராமநந்தீச்சரம், நாகப்பட்டினம் மாவட்டம்  (ஞானசம்பந்தர் பாடியது)  
(ராமநதீஸ்வரர்-கருவார்குழலி) 
கண்ணபுரம் என்று அழைக்கப்படுகின்ற இந்த தலம், இராமன், இராவணனைக் கொன்ற கொலைப்பாவம் நீங்க இறைவனை வழிபட்ட தலம் என்ற பெருமையுடையது. ஆதலால் இராமநந்தீச்சரம் என்றழைக்கப்படுகிறது.   




திருச்செங்காட்டாங்குடி, நாகப்பட்டினம் மாவட்டம்  

(உத்தராபதீஸ்வரர்-குழலம்மை) (ஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர் பாடியது)
பிள்ளைக்கறியமுது அளித்து முக்தியடைந்த சிறுத்தொண்ட நாயனார் அவதரித்த தலமாகும். ஐயடிகள் காடவர்கோன் என்னும் பல்லவ மன்னன் சிறுத்தொண்டருக்கு இறைவன் அருள் செய்ததை அறிந்து, இங்கு வந்து, வழிபட்டு, உத்திராபதியாரின் தோற்றத்தைக் காண விரும்பினார். இறைவன், கோயிலை திருப்பணி செய்து உத்தராபதியார் திருவுருவம் அமைத்து சித்திரைத் திருவோணத்தில் குடமுழுக்கு செய்தால் தான் சண்பகப்பூ மணம் வீசக் காட்சி தருவாகக் கூறி, அவ்வாறே அருள் தந்ததாகக் கூறுவர். 



சீயாத்தமங்கை, நாகப்பட்டினம் மாவட்டம்  


(அயவந்தீஸ்வரர்-இருமலர்க்கண்ணம்மை) (ஞானசம்பந்தர் பாடியது)
ஊர் சீயாத்தமங்கை என்றும், கோயில் அயவந்தீசம் என்றும் அழைக்கப்படுகிறது. திருநீலநக்க நாயனார் அவதரித்த பெருமையுடைய தலமாகும்.

  
திருப்பயத்தங்குடி, திருவாரூர் மாவட்டம்
(திருப்பயற்றுநாதர்-காவியங்கண்ணி) (அப்பர் பாடியது)
நாற்கோண வடிவில் உள்ள ஆவுடையார் பார்ப்பதற்கு மிகவும் அழகாக உள்ளார். இத்தலம் பைரவ மகரிஷி வழிபட்ட தலமாகும்.

கரவீரம், திருவாரூர் மாவட்டம்
(கரவீரநாதர்-பிரத்யட்சமின்னம்மை)  (ஞானசம்பந்தர் பாடியது) 
கர வீரம் என்றால் பொன் அலரி என்று பொருளாகும். அலரியைத் தல மரமாகக் கொண்டதால் இந்த தலம் இப்பெயரைப் பெற்றது.

திருவாரூரில் கோயிலுக்குள் கோயில் கண்டுள்ளோம். அவ்வாறே, இந்த உலாவின்போது திருப்புகலூரில் கோயிலுக்குள் கோயிலைக் கண்டோம். இறைவன் இறைவி ஊடல் கொண்ட நிலையிலான சிற்பங்களை ஒரே நாளில் இரு கோயில்களில் கண்டோம். இந்தப் பயணத்தின்போது நாங்கள் கண்ட இறைவியின் பெயர்கள் மிகவும் அழகாக இருந்ததைக் கண்டோம். வழக்கம்போல இந்த உலா ஒரு மன நிறைவான உலாவாக இருந்தது. அடுத்து, பிறிதொரு உலாவில் சந்திப்போம்.
எங்களை அழைத்துச் சென்ற முனைவர் வீ.ஜெயபால் மற்றும் குழுவினருடன்

துணை நின்றவை
பு.மா.ஜெயசெந்தில்நாதன், திருமுறைத்தலங்கள், வர்த்தமானன் பதிப்பகம், சென்னை, 2009
வீ.ஜெயபால், சைவ நால்வரால் பாடப்பெற்ற திருத்தலங்கள், சைவ சித்தாந்த ஆய்வு மையம், தஞ்சாவூர் 613 009, 2014
சிவ.ஆ.பக்தவத்சலம், தேவாரத் திருத்தலங்கள் வழிகாட்டி, குடியேற்றம், 2005
விக்கிபீடியா