18 September 2022

கோயில் உலா : திருவஞ்சைக்களம் : 5 ஆகஸ்டு 2022

5 ஆகஸ்டு 2022 கோயில் உலாவின்போது முனைவர் வீ.ஜெயபால் அவர்கள் தலைமையில் கேரளாவில் உள்ள ஒரே தேவாரப் பாடல் பெற்ற தலமான, திருச்சூர் மாவட்டத்தில் உள்ள, திருவஞ்சைக்களம் சென்றோம். சுந்தரமூர்த்தி சுவாமிகள், சேரமான் பெருமான் நாயனார் ஆகியோரின் குரு பூஜை நாளன்று சென்ற வகையில் எங்களின் இப்பயணம் குறிப்பிடத்தக்கதாக அமைந்தது. 

கோயிலுக்கு முன் வீதியின் நடுவில் உள்ள மேடையை யானை வந்த மேடை என்று கூறுகின்றனர். கோயிலின் முதன்மை வாயில் மேற்கு நோக்கியதாக இருந்தபோதிலும், மூலவர் சன்னதி கிழக்கு நோக்கி உள்ளது. கேரள முறைப்படி இத்தலத்திலும் வெடி வெடித்து பிரார்த்தனை செய்யும் வழக்கம் உள்ளதாகக் கூறினர்.

சுந்தரர் பாடல் பெற்ற இத்தலத்தின் மூலவர் அஞ்சைக்களத்தீஸ்வரர், மகாதேவர் என்று அழைக்கப்படுகிறார். உமையம்மை என்றழைக்கப்படும் இறைவிக்குத் தனிச் சன்னதி கிடையாது. மூலவர் வழக்கமாக தமிழ்நாட்டுக் கோயில்களில் காணப்படுவதைப் போலன்றி சற்று வித்தியாசமாக இருப்பதைக் காணமுடிந்தது. கோயில் அமைப்பும் கேரள பாணியில் உள்ளது. 

சுந்தரர் கயிலை சென்ற ஆடி சுவாதி நன்னாளில் சுந்தரருக்கும் சேரமானுக்கும் சிறப்புப் பூஜை செய்வதைக் காணமுடிந்தது. அந்நாளில் மட்டும் தமிழ்நாட்டு முறைப்படி பூஜை செய்யப்படுகிறது. திருச்சுற்றில் உள்ள சுந்தரர், சேரமானின் திருமேனிகளைக் கொண்ட சன்னதியில் உள்ளே நுழைய முடியாத அளவிற்குக் கூட்டம் காணப்பட்டது.  இச்சன்னதி கோயிலில் காணப்பட்ட பிற சன்னதிகளைப் போலன்றி சுற்று மண்டபத்தில் அமைந்திருந்தது.
கோயில் வளாகம் முழுவதும் சைவ அன்பர்கள் தேவாரம் ஓதுதல் ஆங்காங்கே தனியாகவும், குழுவாகவும் ஈடுபட்டிருந்தனர். நாதஸ்வர இசை உள்ளிட்ட இசை காதில் ஒலித்துக்கொண்டே இருந்தது. கோயில் வளாகத்தில் சொற்பொழிவு நடைபெற்றுக்கொண்டிருந்ததைக் காணமுடிந்தது. வரிசையாகச் சென்று கருவறையில் இறைவனைப் பார்த்துவிட்டுத் திரும்ப சற்றே சிரமப்பட்டோம். இறைவனைக் காணவேண்டும் என்ற ஆவல் பக்தர்களிடம் இருப்பதைக் காணமுடிந்தது.

திருவஞ்சிக்குளம் செல்வதற்கு முன்பாக திருச்சூர் மாவட்டத்திலுள்ள கொடுங்கல்லூர் பகவதி அம்மன் கோயிலுக்குச் சென்றோம்.   இக்கோயில் வடக்கு பார்த்த நிலையில் உள்ளது. வடக்கு நோக்கிய கருவறையில் பகவதி எட்டு கரங்களுடன் இருந்து அருள் பாலிக்கிறார். இவரை கொடுங்கல்லூர் அம்மை என்றும் அழைக்கின்றனர்.அடுத்து திருச்சூரிலுள்ள வடக்குநாதர் கோயிலுக்குச் சென்றோம். இங்கு பூரம் திருவிழா வாண வேடிக்கைகளுடன் சிறப்பாகக் கொண்டாடப் படுகிறது. இத்தலத்து லிங்கத்திருமேனி முழுவதும் நெய்யால் ஆனதால் நெய்லிங்கம் என்றழைக்கின்றனர். சிவராத்திரியின்போது கோயிலைச் -சுற்றி லட்சதீபம் ஏற்றப்படுகிறது. நாங்கள் சென்ற நாளில் அவ்வப்போது மழை பெய்த போதிலும் எவ்வித பாதிப்பும் இன்றி வழிபாட்டினைத் தொடர்ந்தோம். பயணத்தின் ஒரு கூறாக அன்பர்கள் கடற்கரையில் சென்று மணலால் லிங்கத்திருமேனியை அமைத்து வழிபட்டனர்.

முதல் நாள் இரவு தஞ்சையிலிருந்து கிளம்பி நேரடியாக திருச்சூர் சென்று அங்கு பயணத்தை நிறைவு செய்து மறுநாள் இரவு அங்கிருந்து புறப்பட்டோம். பிற மாநிலத்திற்குச் சென்ற முதல் உலாவாக இவ்வுலா அமைந்தது.  உடன் வந்த அனைவருக்கும் மன நிறைவினை இப்பயணம் தந்தது. மகாதேவரைத் தரிசிக்கச் சென்று, உடன் வடக்குநாதரையும், பகவதியம்மனையும் தரிசித்த தருணங்கள் எங்கள் மனதில் நன்கு பதிந்தன.  இதற்கு முன்னர் இக்கோயில்களுக்கு நான் தனியாகவும், சபரிமலை பயணத்தின்போதும் சென்றபோதிலும் குழுவாகச் சென்று இறைவனைத் தரிசிப்பதில் கிடைக்கும் அனுபவம் சற்றே வித்தியாசமானதாக உள்ளதை உணரமுடிந்தது.  
3 செப்டம்பர் 2022
3 செப்டம்பர் 2022 கோயில் உலாவின்போது திருவாரூர் மாவட்டம் ஓகையூர் ஜகதீஸ்வரர் கோயில், திருவிடைமருதூர் மகாலிங்கசுவாமி கோயில், தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் கும்பேஸ்வரர் கோயில், நாகேஸ்வரர் கோயில், சோமேஸ்வரர் கோயில், திருவேதிகுடி வேதபுரீஸ்வரர் கோயில், திருவையாறு ஐயாறப்பர் கோயில் ஆகிய கோயில்களுக்குச் சென்றோம். இதில் ஓகையூர் தவிர பிற கோயில்கள் நான் பல முறை சென்ற கோயில்களாகும்.


துணை நின்றவை
  • பு.மா.ஜெயசெந்தில்நாதன், திருமுறைத்தலங்கள், வர்த்தமானன் பதிப்பகம்,  சென்னை, 2009
  • விக்கிப்பீடியா, திருவஞ்சிக்குளம் மகாதேவர் கோயில் (இக்கட்டுரையில் உள்ள ஒளிப்படங்கள் என்னால் இணைக்கப்பட்டவையாகும்)
  • தினமலர் கோயில்கள், அருள்மிகு வடக்குநாதர் கோயில்
  • வீ.ஜெயபால், சைவ நால்வரால் பாடல் பெற்ற திருத்தலங்கள்சைவ சித்தாந்த ஆய்வு மையம், 28 அம்மையப்பா இல்லம், கோவிந்தராஜ் நகர், சீனிவாசபுரம் விரிவாக்கம், தஞ்சாவூர் 613 009, டிசம்பர் 2014

14 September 2022

மனதில் நிற்கும் சுருக்கெழுத்து

கும்பகோணம் அரசு ஆடவர் கல்லூரியில் இளங்கலை படித்தபோது  கூடுதல் தகுதிக்காக சுருக்கெழுத்தினைக் கற்க ஆரம்பித்தேன். தட்டச்சினைப் போல இதையும்  ஆங்கிலத்தில் தொடங்கி தமிழில் தொடர்ந்தேன்.  
டிசம்பர் 1978 தேர்வுக்காக எடுக்கப்பட்ட ஒளிப்படம்

பயிற்சியின்போது ஒரு சொல்லுக்கான குறியீட்டை (stroke) குறைந்தது ஐந்து வரிகள் எழுத வேண்டும். ஒரு சொல் பயிற்சிக்குப் பின் பல சொற்கள், சொற்றொடர் என்ற வகையில் பழகவேண்டும்.  கல்லூரி நேரம் தவிர பிற நேரம் சுருக்கெழுத்துப்பயிற்சிக்கான நேரமாக அமைந்தது.  

கும்பகோணத்தில் எங்கள் வீட்டில் கூடத்திலும், வாசல் திண்ணையிலும் உள்ள தூண்களில் சாய்ந்துகொண்டு எழுதுவது வழக்கம். அந்த இரு இடங்கள்தான் சுருக்கெழுத்து எழுதப் பயிற்சி எடுத்த பிரத்யேகமான இடங்கள். கணக்குப்பிள்ளையாக இருந்த எங்கள் தாத்தா பயன்படுத்திய சிறிய மேஜையை (writing desk) பயன்படுத்தினேன்.  சுருக்கெழுத்துச் பென்சிலை (Shorthand pencil) சரியாக கூர்மையாகச் சீவி எழுத வேண்டும். அவ்வாறாக ஒவ்வொரு பக்கத்திலும் எழுதியதைப் பார்க்கும்போது அழகான கோலம் போட்டதைப் போலவோ, கோயிலில் காணப்படுகின்ற சிற்ப வரிசையினைப் போலவோ இருக்கும்.  தட்டச்சுப் பயிற்சியைப் போலவே சுருக்கெழுத்துப் பயிற்சியும் ஒரு கலையியல் ரசனையோடு மேற்கொள்ளப்பட வேண்டியதாகும்.  

குறிப்பிட்ட மாதிரியான சொற்களுக்காக அதையொத்த சுருக்கக் குறியீடுகளை எழுதும்போது பல சொற்களைத் தெரிந்துகொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. பயிற்சிக்கால நிறைவில் ஒன்றுக்கு மேற்பட்ட சொற்களை ஒரே குறியீடாக  எழுதும் பழக்கம் இயல்பாக வந்துவிடும்.  

நோட்டின் நடுவே ஒரு கோட்டினை போட்டு இரண்டாகப் பிரித்துக்கொள்வேன். எந்த அளவிற்கு சுருக்கெழுத்துக் குறியீட்டை (Stroke for word/sentence) சிறிதாக எழுத முடியுமோ அந்த அளவிற்குச் சிறிதாக எழுதுவேன். புள்ளி வைக்கவேண்டிய இடங்களில் இடைவெளி விட்டுவிடுவேன். இவ்வாறான உத்திகள் குறிப்பிட்ட நிமிடத்தில் அதிகமான சொற்களை/சொற்றொடர்களை எழுத முடியும். சுருக்கெழுத்துப் பயிற்சியைப் பின்பக்கத்தில் எழுதுவதில்லை. பயிற்சியின்போது பின் பக்கத்தில் எழுதாமல் அடுத்த பக்கத்தில் எழுதுவது வழக்கம்.  பக்கங்கள் முடிவுற்ற பின் நோட்டை முழுதாகத் திருப்பி எழுதுவார்கள். ஒரு பக்கத்தை முடித்து அடுத்த பக்கத்தில் எழுதுவதற்காக தாளைப் புரட்டும்போது எவ்விதச் சலனமோ, பதட்டமோ இருக்கக்கூடாது. 

எழுதும் குறியீட்டில் ஐயமிருப்பின் சுருக்கெழுத்து அகராதியைப் பார்த்துக்கொள்வேன். அதிலுள்ள  சொற்களுக்குரிய குறியீடுகளைப் பயன்படுத்தும்போது புதிய சொற்களை அறிந்துகொள்ளவும், வேகத்தை அதிகப்படுத்தி எழுதவும் முடியும். 

என்னுடன் பல நண்பர்கள் சுருக்கெழுத்துப் பயிற்சி மேற்கொண்டபோதும் மிகச்சிலரே தொடர்ந்து எழுதினோம். டிசம்பர் 1978இல் சுருக்கெழுத்து கீழ் நிலைத் தேர்வினை (ஒரு நிமிடத்திற்கு 80 சொற்கள்) தட்டச்சுப்பயிற்சி நிறுவனம் மூலமாகவும், அடுத்தடுத்த தேர்வுகளை நேரடியாகவும் எழுதி வெற்றி பெற்றேன். 

பொறுமை, நிதானம், ஈடுபாடு உள்ளிட்ட குணங்கள் இருந்தால்தான் இப்பயிற்சியைத் தொடர முடியும். மிக எளிது என நினைத்து எழுதினால்  வெற்றி பெறலாம். எழுதுவது சிரமம் என நினைப்பவர் தொடர்வது அரிதே. கல்லூரியில் ஆசிரியர்கள் பாடம் நடத்தியபோதும், பின்னர் பணியில் சேர்ந்தபோதும், மாணவர்களுக்கு கற்றுத்தரவும் சுருக்கெழுத்து பெரிதும் உதவியது.  அது தொடர்பான அனுபவங்களைப் பிறிதொரு பதிவில் காண்போம்.

14 செப்டம்பர் 2022 மாலை பதிவு மேம்படுத்தப்பட்டது.

20 August 2022

மனதில் நிற்கும் தட்டச்சு

1975இல் பள்ளி விடுமுறையில் கற்க ஆரம்பித்த தட்டச்சுப் பயிற்சியானது, கல்லூரியில் சேர்ந்தபின்னரும் தொடர்ந்தது. மேல்நிலைத் தட்டச்சில் ஆங்கிலத்திலும், தமிழிலும் வெற்றி பெற்றேன். குடும்ப சூழல் காரணமாக பள்ளியில் படித்தபோதே கூடுதல் தகுதிகளைப் பெறவும், வேலையில் சேர்வதற்கு தயார்படுத்திக்கொள்ளவும் தட்டச்சு, இந்தி,  சுருக்கெழுத்து ஆகியவற்றைக் கற்றதோடு, தஞ்சாவூர் வேலை வாய்ப்பகத்திலும் பெயரைப் பதிவு செய்தேன். 

மே 1976 தேர்வுக்காக எடுக்கப்பட்ட ஒளிப்படம்

முதலில் ஈஸ்வரன் தட்டெழுத்துப் பயிற்சி நிலையத்திலும் (கும்பகோணம் ரெட்டியார் குளத்தின் கீழ்க்கரை), பின்னர் பாரத் தட்டெழுத்துப் பயிற்சி நிலையத்திலும்  (கும்பேஸ்வரர் திருமஞ்சன வீதி) ரெமிங்டன்,  ஹால்டா, காட்ரேஜ் ஆகிய தட்டச்சுப்பொறிகளில் பயிற்சி பெற்றேன்.

2018இல் பாரத் தட்டெழுத்துப் பயிற்சி நிலைய நிறுவனர் திரு பாஸ்கரன் உடன்


தட்டச்சு செய்யும்போது தட்டச்சு செய்யப்படும் செய்தியைத்தான் (The matter to be typed) கண்கள் கவனிக்கவேண்டுமே தவிர தட்டச்சுப் பொறியில் நாம் அடிக்கும் எழுத்து விழுவதையோ (Typed matter on the paper), விசைப்பலகையையோ (Keyboard) பார்க்கக்கூடாது. முதல் வரிசையில் உள்ள எண்களைத் தட்டச்சு செய்யும்போதுகூட அவற்றைப் பார்க்காமல் தட்டச்சு செய்தால்தான் தட்டச்சின் வேகம் அதிகமாகும். வலது கை விரல்களுக்குரிய எழுத்துகளையும், இடது கை விரல்களுக்குரிய எழுத்துகளையும் சீரான வேகத்தில் தட்டச்சிட வேண்டும். ஆள்காட்டி விரல் மூலமாகக் கொடுக்கப்படும் வேகமே சுண்டு விரலால் அடிக்கும்போதும் தரப்படவேண்டும். 

தட்டச்சு செய்த தாளில் கிட்டத்தட்ட எத்தனை தவறுகள் உள்ளன (typos in the typed matter) என்று சொல்லும் அளவிற்கான அனுபவத்தை எளிதில் பெறலாம். தட்டச்சின்போது பிழை ஏற்படும் சூழல் எழும்போது வேகத்தைக் குறைத்து தவறாகத் தட்டச்சிட உள்ள எழுத்தில் உள்ள விரலைப் பின்னோக்கி இழுத்து பிழைகளைத் தவிர்க்க முடியும். 

வாராந்திர, மாதாந்திரத் தேர்வுகளின்போது கீழ்நிலை, மேல்நிலை என்ற இரு பிரிவுகளில்  மதிப்பெண்ணும் தகுதியும் பட்டியலாகவும், பிழையே இல்லாமல் இருப்போர் தட்டச்சிட்ட தாள்களும் (Typed matter with NIL mistake)  அறிவிப்புப்பலகையில் வைக்கப்படுவது வழக்கம்.  நான் தட்டச்சு செய்த தாள்கள் பல முறை அங்கு இடம் பெற்றிருந்தன.  

தட்டச்சு செய்பவர் எண்ணம் முழுக்க அதில் மட்டுமே இருக்கவேண்டும் என்றும்,  தரப்படும் மூலம் (Original in handwritten script) கையெழுத்துப்படியாக இருந்தால் அதைத் தட்டச்சு செய்யும்போது ஏதேனும் தவறு இருந்தால் அதனையும் திருத்தி சரியாக தட்டச்சிடவேண்டும் என்றும் எங்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டது.  ஏதாவது குறுக்கீடு இருந்தால் தட்டச்சிடுவதை நிறுத்திவிட்டு, நிலைமை சீரானபின்னர் தொடரலாம். தட்டச்சு செய்கின்ற பொருண்மையிலும், தட்டச்சு முறையிலும் கவனமாக இருக்கவேண்டும்.  

பள்ளிக்காலத்தில் பெற்ற பயிற்சியானது பணிக்காலத்தில் டெலக்ஸிலும், மின்சாரத் தட்டச்சுப் பொறியிலும், தொடர்ந்து கணினித்தட்டச்சிலும் உதவியது. நண்பர்கள் என்னை ரிதமிக் டச் டைப்பிஸ்ட் (rhythmic touch) என்பர்.  அறைக்கு உள்ளே நான் தட்டச்சு செய்வதை வெளியில் இருந்துகொண்டே நான்தான் தட்டச்சு செய்வதாக அவர்கள் கூறுவதைக் கேட்டுள்ளேன். தட்டச்சினை ஒரு பணியாகவோ, பொழுதுபோக்காகவோ கருதாமல் ஒரு கலையாகவே நான் உணர்ந்துள்ளேன்.

1980களின் ஆரம்பத்தில், தமிழ்ப்பல்கலைக் கழகத்தில் தட்டச்சுப்பணியில்

என்னுடன் ராஜசேகரன், மோகன், மதியழகன், சங்கர், ஐயப்பன், லட்சுமிகாந்தன், தயாளன், நாராயணன் உள்ளிட்டோர் தட்டச்சு பயின்றனர். பலருடைய பெயர் நினைவில்லை. அப்போது பயின்ற மோகன் தற்போது சென்னையில் தட்டச்சுப் பயிற்சி நிலையம் நடத்திவருவது எங்களுக்குப் பெருமையாக உள்ளது. 

கும்பகோணம் கும்பேஸ்வரர் வடக்கு வீதியில்
பாரத் தட்டெழுத்துப் பயிற்சி நிலையம்
 
தட்டச்சுப் பயிற்சியின்போது மாதத்திற்கு முதலில் பயிற்சிக்கட்டணம் ரூ.5இல் தொடங்கி, ரூ.7, ரூ.10 என்றானது. அப்போது எங்கள் அத்தை திருமதி இந்திரா தருவார்கள். என் படிப்பை ஊக்குவித்தவர்களில் அவர் முதலிடத்தைப் பெறுகிறார். படித்து வெற்றி பெற்று முன்னுக்கு வரவேண்டும் என்று கூறிக்கொண்டே இருப்பார். படிப்பின் ஆரம்பக் காலம் முதல் கல்லூரியில் முதலாண்டு படித்தவரை அவர் தொடர்ந்து உதவி செய்தார். குடும்ப சூழல் காரணமாக அவர் எங்களை விட்டு  பிரிந்து  சென்றது ஒரு தனிக்கதை.

22 ஆகஸ்டு 2022இல் மேம்படுத்தப்பட்டது.

25 July 2022

திண்ணை : ஜ.பாரத்

எங்கள் மூத்த மகன் முனைவர் ஜ.பாரத் (9962065436) எழுதியுள்ள மூன்றாவது நூல் திண்ணை.

நேர்மையையும், ஒழுங்கினையும் கடைபிடித்து வாழும் ஒருவர் பிறருக்கு வித்தியாசமாகவே தோன்றுவார். இருந்தாலும் அவர் தன் இருப்பினை சமூகத்தில் ஆழமாகவே பதிந்துவிட்டுச்செல்வார், வெற்றிகரமாக. அதனை நுணுக்கமாக எடுத்துரைக்கிறது இப்புதினம். தஞ்சாவூரின் பறவைப்பார்வை, டெல்டா பகுதியின் செழிப்பு, வணிகத்தின் இரு பக்கங்கள், உழைப்பின் முக்கியத்துவம், உறவுகளின் சிறப்பு, நிகழ்வுகளை வாசகர் முன்கொண்டுவருகின்ற உத்தி ஆகியவற்றின் பின்புலங்களோடு அருமையான கருவைக் கொண்டு படைத்துள்ளவிதம் போற்றத்தக்கது.  

பாத்திரங்களின் படைப்பும், உரையாடலும், போக்கும் நம்மை நிகழ்விடத்திற்கு அழைத்துச்செல்வதை உணர்த்தும் பத்திகள் சிலவற்றைப் பார்ப்போம்.  

"கல்லாவில் முருகேசன் அமர்ந்திருக்க, ஆதிமூலம் சீனிவாசனிடம், குறுக்கு வழியில் சம்பாதிக்க ஆயிரம் வழி இருக்கு தம்பி. நம்ம வியாபாரம் எப்பவும் அப்படிப்பட்டதில்ல........என்றார்." (ப.15)

"முழுவீச்சில் கணக்குப் புஸ்தகங்களையும், சிட்டாக்களையும் தேடிக்கொண்டிருந்தவருக்கு இந்த தடை பெரிய எரிச்சலையூட்டியது. இப்படி நிரூபித்து என்ன செய்யப்போகிறார்? வயது மூப்பு. முன் மாதிரி வேலையில் கவனம் இல்லாமை, சோர்வு. ஆனால், நேர்மையை மட்டும் விடாப்பிடியாகப் பிடித்துக்கொண்டிருந்தார் ஆதிமூலம்." (ப.21)

"அச்சச்சோ, அப்படியெல்லாம் இல்ல மாமா, மனசு கேக்க மாட்டுது. திண்ணையக் கடந்து காலையிலயும், சாயங்காலமும் வாசல் தொளிக்கப் போகும்போதெல்லாம் அவரு அங்க கெடந்தது நெனப்புக்கு வந்து நிக்கிது. என்ன செய்ய. நான் வாங்கி வந்த வரம் அப்படி. கோயிலுக்குப் போனா மனசு கொஞ்சம் தெம்பா இருக்கு." (ப.53)

"கல்யாணம் பண்ணிக்கிறதோ, கொழுந்த பெத்துக்கிறதோ வாழ்க்கையில்ல. அதுக்கெல்லாம் அப்பறம் நாம எப்படி வாழுறோங்கிறதுலத்தான் இருக்கு. அதுலத்தான் நீ எனக்கு வாங்கிக் கொடுக்கப்போற பேரு இருக்கு." (ப.57)


முனைவர் சு.மாதவன் அவர்களின் அணிந்துரையிலிருந்து:

திண்ணை என்னும் குறியீடாக வருபவர் இதில் வரும் தாத்தா கணக்குப்பிள்ளை ஆதிமூலம் ஆவார். ஒவ்வொரு திண்ணையும் ஒவ்வொரு விதம்; வீட்டின் குணத்திற்கு (வடிவம்) ஏற்ப திண்ணை அமைந்திருக்கும். ஆதிமூலம் வீட்டுத் திண்ணை நல்லறத் திண்ணை; சீனிவாசனின் திண்ணை பதுக்கலின் உரத்திண்ணைமுதலாளித்துவம் ஈவிரக்கமற்ற லாபம் பார்க்கும்; சேர்க்கும். தொழிலாளித்துவமும், நடுத்தட்டு வர்க்கமும் மனிதச்சேவை உணரும்; திணறும்

இந்நூல் ஒரு குறும் புதினம்தான்எனினும் இது அரும் புதினம்கீழவாசல் வணிக வாழ்க்கையை அப்படியே படம் பிடித்திருக்கிற இந்தக் குறும் புதினம் நம்மை அதனோடு வாசிப்பு வாழ்க்கை நடத்த வைக்கிறது. முதலாளி சீனிவாசனின் வணிக அதர்மமும் ஆதிமூலத்தின் வாழவியல் அறமும் உரசி உரசிக் கடைசியில் ஆதிமூலம் எனும் கணக்குப்பிள்ளையைக் காவு வாங்கிவிடுகிறது என்பதை எண்ணும்போதுகாசுஎன்றாலே பொய் என்பதன் உண்மையை உணரவைக்கிறது.

இப்புதினத்தைப் படிக்கப் படிக்க நெஞ்சம் முழுவதும் தஞ்சை நிறைகிறது. இப்புதினத்தை எடுத்துப் படிக்கத் தொடங்கியாரும் ஒரே மூச்சில் முடிக்க முடியும். அவ்வளவு மன நெருக்கத்தைத் தஞ்சையில் வாழ்ந்த எனக்குத்தந்தது. தஞ்சையில் வாழ வாய்ப்பில்லாமல் வேறு ஊர்களில் வாழ்பவரும் புதினத்துக்குள் புழக்க ஆரம்பித்துவிடுவார்கள். அந்த அளவிற்கு வரலாற்றுச் சித்திரமாக இப் புதினம் நெஞ்சில் விரிகிறது; காட்சியாக்கும் கலைச் சொற்களில் நிறைகிறது.

நூலினை சுமார் 40 ஆண்டு கால நண்பர் திரு.ந.பக்கிரிசாமி, [கண்காணிப்பாளர் (பணி நிறைவு), பொது நூலகத் துறை, தஞ்சாவூர்] அவர்கள் வெளியிடல்
(உடன் நூலாசிரியர்)

தொடர்புக்கு:   +91 99620 65436/+91 94889 69722,  tamilkudilpathipagam@gmail.com

நவம்பர் 2021, ISBN: 978-93-5578-276-2, 94 பக்கங்கள், ரூ.140


திண்ணையை எந்த அஞ்சல் கட்டணமும் இல்லாமல் நூல் விலையான ரூ.140ல் பெற ஆகஸ்ட் 2022க்கு முன் கீழுள்ள படிவத்தை நிரப்பி அனுப்பலாம். கூகுள் பே மூலம் பணம் அனுப்ப: UPI ID sindhumathionline@oksbi

9

21 July 2022

கோயில் உலா : 2 ஜூலை 2022

2 ஜூலை 2022இல் அன்று முனைவர் வீ.ஜெயபால் அவர்களின் குழுவோடு கோயில் உலா சென்றோம். இந்த, இவ்வாண்டின் மூன்றாவது கோயில் உலாவில் பரிதிநியமம், கோட்டூர், திருக்களர், சித்தாய்மூர், எட்டுக்குடி,  வலிவலம்,  கன்றாப்பூர், கச்சினம், தண்டலை நீள்நெறி, கற்பகநாதர்குளம் , தில்லைவிளாகம் ஆகிய இடங்களிலுள்ள கோயில்களுக்குச் சென்றோம். இவற்றில் எட்டுக்குடி (சுப்பிரமணியசுவாமி) மற்றும் தில்லைவிளாகம் (வீரகோதண்டராமர்) ஆகிய கோயில்கள் தவிர பிற கோயில்கள் தேவாரப்பாடல் பெற்ற காவிரியின் தென்கரைத் தலங்களாகும். தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் அமைந்துள்ள இக்கோயில்கள் அனைத்தும் நான் முதல் முறை பார்க்கின்ற கோயில்களாகும். 

பரிதிநியமத்தில் குழுவினர் சிவ புராணம் ஓத அங்கிருந்து கோட்டூர் சென்றோம். வளரும் இளம் நாதஸ்வரக்கலைஞர்களின் திறமையைக் கண்டு ரசித்தோம். பின் பயணத்தைத் தொடர்ந்தோம். எட்டுக்குடியில் மதிய உணவுக்குப் பின் சற்றே ஓய்வெடுத்தோம்.

1) பரிதிநியமம், தஞ்சாவூர் மாவட்டம்  
பரிதியப்பர்-மங்களநாயகி 
ஞானசம்பந்தர் பாடல் பெற்றது
தஞ்சாவூர்-பட்டுக்கோட்டை சாலையில் மேல உளூர் அருகில் உள்ள தலம். 

2) கோட்டூர், திருவாரூர் மாவட்டம்  
கொழுந்தீஸ்வரர்-தேனார்மொழியாள் 
ஞானசம்பந்தர் பாடல் பெற்றது
திருத்துறைப்பூண்டியிலிருந்தும், மன்னார்குடியிலிருந்தும் இத்தலத்திற்கு வரலாம். 3) திருக்களர், திருவாரூர் மாவட்டம்  
களர்முளைநாதர்-இளங்கொம்பன்னாள் 
ஞானசம்பந்தர் பாடல் பெற்றது
திருத்துறைப்பூண்டி மன்னார்குடி சாலையில்  உள்ள தலம். 

4) சித்தாய்மூர் (திருச்சிற்றேமம்), நாகப்பட்டினம் மாவட்டம்  
பொன்வைத்தநாதர்-அகிலாண்டேஸ்வரி 
ஞானசம்பந்தர் பாடல் பெற்றது
திருவாரூர் திருத்துறைப்பூண்டி சாலையில் ஆலத்தம்பாடியிலிருந்து  3 கிமீ தொலைவில் உள்ள தலம். 

5) எட்டுக்குடி , நாகப்பட்டினம் மாவட்டம்  
சுப்பிரமணியசுவாமி  

6) வலிவலம், நாகப்பட்டினம் மாவட்டம் 
மனத்துணைநாதர்-வாளையங்கண்ணி 
ஞானசம்பந்தர், நாவுக்கரசர், சுந்தரர் பாடல் பெற்றது
திருவாரூர் திருத்துறைப்பூண்டி சாலையில் கீவளூர் வழி சென்று இத்தலத்தை அடையலாம்.


7) கன்றாப்பூர் (கோயில் கண்ணாப்பூர்), திருவாரூர் மாவட்டம் 
நடுதறியப்பர்-மாதுமையம்மை 
நாவுக்கரசர் பாடல் பெற்றது
நாகப்பட்டினம் திருத்துறைப்பூண்டி சாலையில் சாட்டியக்குடி கூட்டுரோட்டில் பிரியும் சாலையில் 2 கிமீ சென்று ஆதமங்கலம் அடுத்து கோயில்கண்ணாப்பூர் கூட்டுரோடு என விசாரித்து அங்கிருந்து வலப்புறம் பிரியும் சாலையில் 1 கிமீ சென்றால் தலத்தை அடையலாம்.

8) கச்சினம் (கைச்சினம்), திருவாரூர் மாவட்டம்  
கைச்சினேஸ்வரர்-வெள்வளைநாயகி 
ஞானசம்பந்தர் பாடல் பெற்றது
திருவாரூர் திருத்துறைப்பூண்டி சாலையில் உள்ள தலம்.


9) தண்டளை நீள்நெறி (தண்டலச்சேரி), திருவாரூர் மாவட்டம்  
நீள்நெறிநாதர்-ஞானாம்பிகை 
ஞானசம்பந்தர், பாடல் பெற்றது
திருத்துறைப்பூண்டியிலிருந்து 3 கிமீ தொலைவில் உள்ள தலம்.


10) கற்பகநாதர்குளம் (கடிக்குளம்), திருவாரூர் மாவட்டம் 
கற்பகநாதர்-சௌந்தரநாயகி 
ஞானசம்பந்தர் பாடல் பெற்றது
திருத்துறைப்பூண்டி தொண்டியக்காடு சாலையில் இத்தலம் உள்ளது.11) தில்லைவிளாகம், திருவாரூர் மாவட்டம்  
வீர கோதண்டராமர் 


ஒவ்வொரு பயணத்திலும் கிடைக்கின்ற அனுபவங்கள் மனதில் நிற்கும் வகையில் உள்ளன. இந்த உலாவும் அவ்வாறே அமைந்தது.

vட்டுக்குடி சுப்பிரமணியசுவாமி கோயிலில் மூலவராக முருகன், வள்ளி தெய்வானையுடன் மயிலின்மீது அமர்ந்த கோலத்தில் உள்ளார். மூலவர் சன்னதிக்கு வலது புறத்தில் சௌந்திரேஸ்வரர் சன்னதியும், இடது புறத்தில் ஆனந்தவல்லியம்மன் சன்னதியும் உள்ளன. (எண்கண்ணில் மூலவராக  பிரம்மபுரீஸ்வரர் உள்ளார். முருகனுக்கு தனி சன்னதி உள்ளது.) வலிவலம் கோயிலைப் பார்த்தபோது கீவளூர் கேடிலியப்பர் கோயில் நினைவிற்கு வந்தது. சற்றொப்ப அக்கோயிலைப் போலவே இருந்தது. கற்பகநாதர் கோயிலில் நந்தி மண்டபம் கோயிலுக்கு முன் இருந்ததைக் கண்டோம். தில்லைவிளாகம் ராமர் கோயில் இப்பகுதியிலுள்ள பஞ்சராமர் தலங்களில் (முடிகொண்டான் ராமர், அதம்பார் கோதண்டராமர், பருத்தியூர் ராமர், வடுவூர் கோதண்டராமர் ஆகியவை பிற ராமர் கோயில்கள்). கருவறையில் உலோகத்திருமேனியாக இருந்த ராமர், சீதை, லட்சுமணர், அனுமார் சிற்பங்கள் எங்களை அதிகம் ஈர்த்துவிட்டன. முதன்முதலாக கருவறையில் இங்குதான் உலோகத் திருமேனியை பார்த்தேன். ராமபிரானை வழிபட்டுவிட்டு, உலாவினை நிறைவு செய்தோம். அங்கிருந்து கிளம்பி இரவு சுமார் 10.30 மணியளவில் தஞ்சாவூர் வந்து சேர்ந்தோம்.

துணை நின்றவை
  • வீ.ஜெயபால், சைவ நால்வரால் பாடல் பெற்ற திருத்தலங்கள்சைவ சித்தாந்த ஆய்வு மையம், 28 அம்மையப்பா இல்லம், கோவிந்தராஜ் நகர், சீனிவாசபுரம் விரிவாக்கம், தஞ்சாவூர் 613 009, டிசம்பர் 2014
  • சிவ.ஆ.பக்தவச்சலம், தேவாரத் திருத்தலங்கள் வழிகாட்டி, குடியேற்றம், வேலூர் மாவட்டம், 2005
  • பு.மா.ஜெயசெந்தில்நாதன், திருமுறைத்தலங்கள், வர்த்தமானன் பதிப்பகம், சென்னை, 2009 
  • விக்கிப்பீடியா