25 September 2015

ஃபீடல் காஸ்ட்ரோவின் எண்ணப்பிரதிபலிப்புகள்

ஃபீடல் காஸ்ட்ரோவின் கட்டுரைகளைக் கொண்ட Battle of Ideas: Reflections by Fidel Castro என்ற நூலை நான்கு மணி நேரத்தில் படித்து முடித்தேன். 2009வாக்கில் முதன் முறையாகப் படித்தேன். அண்மையில் மறுபடியும் படித்தேன். இந்த மூன்று மாத காலத் தொகுப்புக் கட்டுரைகளில் (28.3.2007 முதல் 30.6.2007 வரை) அவர், உலக நடப்பின் பொது நிலையை மிக சிறப்பாக முன்வைக்கிறார். காந்தியின் சத்தியசோதனை, நேருவின் உலக வரலாறு, அப்துல் கலாமின் அக்னிச்சிறகுகள் போன்ற நூல்களில் காணப்படுகின்ற, வாசகரை உடன் அழைத்துச் செல்லும் நடையினை இந்நூலில் காணமுடிகிறது. அவருடைய எழுத்து இளைஞர்களை ஊக்குவிக்கும் விவேகானந்தரின் எழுத்தினைப் போல உள்ளது. தன் நாட்டுப் பல்துறை முன்னேற்றம், ஆதிக்க சக்தி எதிர்ப்பு உள்ளிட்ட பல நிகழ்வுகளை நம் ஒவ்வொருவரின் வீட்டுப் பிரச்னைகளைப் போலத் துல்லியமாக அலசுகிறார். படிப்பவர் மனதில் ஒரு எழுச்சியினை இவ்வெழுத்துக்கள் உண்டாக்குகின்றன. கட்டுரைகளைப் படிக்கும்போது சில இடங்களிலும், இறுதிப்பகுதியிலும் நம்முடன் அவர் நேரிடையாக உரையாடுவதைப் போலுள்ளது. வரலாற்று நாயகன், வரலாற்றின் மகன் என்று புகழப்படுகின்ற இவருக்கு இணை இவரே. அவருக்கு மார்த்தியும், சேகுவாராவும் கிடைத்தது அவர் வரலாறு படைக்க உதவியாக இருந்தது என்பதில் ஐயமில்லை. அவரது எழுத்துக்களில் சிலவற்றைக் காண்போம். அவருடைய கட்டுரைகளைப் படிப்போம்.


"நம் தோழர்களின் மனதினை நல்ல எண்ணங்களால் நிரப்பும் முயற்சியை மேற்கொள்ளவேண்டும். அப்போதுதான் அவர்கள் அவற்றை இளைஞர்களிடமும் பிறரிடமும் கொண்டுசேர்ப்பர்." (பக்கம் 21)

"உலகிலுள்ள பணக்கார மற்றும் ஏழை நாடுகள் அனைத்தும் இன்கேன்டசன்ட் பல்புகளுக்குப் பதிலாக ஃப்ளோரசன்ட் பல்புகளைப்  பயன்படுத்தினால் அதிக எரிபொருளை மிச்சப்படுத்தமுடியும். க்யூபாவில் அனைத்து வீடுகளிலும் இவ்வாறான முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது." (.54)

"பள்ளியில் நாம் கற்றுக்கொள்ளும் சாதாரண கணக்கை நடைமுறை வாழ்வில் பயன்படுத்த கற்றுக்கொள்ளவேண்டும்." (.62)

"கணினித்துறையிலோ தகவல் தொழில்நுட்பத்திலோ அதிகம் முன்னேறாத காலகட்டத்தில் நிராயுதபாணியாக இருந்த மக்களின் மீது இரு அணுகுண்டுகள் வீசப்பட்டன. அரசியல் காரணங்களுக்காகவே இச்செயல் மேற்கொள்ளப்பட்டது." (.67)

"...உடல் நலனில் கவனம் வைக்காவிட்டால் சிக்கலே. பல்வேறு காலகட்டங்களில் உடல்நலனுக்கு நான் முக்கியத்துவம் கொடுக்கவில்லையோ என நினைக்கிறேன். இப்போதெல்லாம் எதைச் செய்யவேண்டுமோ அதை மட்டுமே செய்கிறேன். குறிப்பாக முக்கியமான பிரச்சினைகள் குறித்து எழுத ஆரம்பித்துள்ளேன். நான் செய்ய வேண்டியது நிறைய இருக்கிறது. புகைப்படங்களுக்காக என் முடியையும், தாடியையும் மீசையையும் சரி செய்வதற்கோ, தினமும் ஆடைக்கு முக்கியத்துவம் தருவதற்கோ எனக்கு நேரமில்லை. அவ்வாறு செய்ய ஆரம்பிக்கும்போது பேட்டிகள் கேட்டு அதிகமான வேண்டுகோள் எனக்கு வர ஆரம்பிக்கும். இப்போது என் உடல் நலன் தேறிவிட்டது....ஊடகங்களுடனும், தொலைக்காட்சி நிறுவனங்களுடனும் என் எண்ணப் பிரதிபலிப்புகளை மிகவும் சுருக்கமாக பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். மற்ற நேரத்தில் படிக்கிறேன், தகவல்களைப் பெறுகிறேன், தோழர்களுடன் பேசுகின்றேன், என் உடல் நலனுக்கு முக்கியத்துவம் தருகிறேன். எனக்குத் தெரிந்த அனைத்தையும் பேசவோ,  குறை சொல்லவோ நான் விரும்பவில்லை. அவ்வாறு நான் செய்ய ஆரம்பித்தால் மனித உறவுகளும், உலகளாவிய உறவுகளும் பாதிக்கப்படும். அவர்கள் இல்லாமல் நாம் எதுவும் செய்துவிட முடியாது. எக்காலகட்டத்திலும் பொய்யை எழுதக்கூடாது என்பதில் மிகவும் உறுதியாக உள்ளேன்." (.98)

"க்யூபா ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு தற்போது மருத்துவர் பயிற்சியை அளித்து வருகிறது.  ஆப்பிரிக்காவிலுள்ள ஒரு கிராமத்திலும்கூட ஒரு கியூப மருத்துவர் அந்த கிராமத்தையோ அருகிலுள்ள நகராட்சியையோ சேர்ந்த இளைஞர்களுக்கு சூரிய சக்தியின் உதவியுடன் செயல்படும் உபகரணங்களைக் கொண்டு கணினியின் துணையுடன் மருத்துவப் பயிற்சி அளித்துவருகிறார். அவ்விளைஞன் தன் ஊரைவிட்டு வெளியே செல்லவேண்டிய அவசியமில்லை. அவ்வாறே பெரிய நகரங்களுக்கு வந்து நகர வாழ்க்கையால் பாதிக்கப்படவேண்டிய அவசியமுமில்லை." (.126)

"ஷேக்ஸ்பியரின் நாடகமொன்றில் வாழ்வதா, சாவதா என்ற வசனம் வரும். இந்த மாதிரியான எண்ணம்தான் இப்போதைய இளைஞர்களிடம் காணப்படுகிறது. அவ்வெண்ணத்தை ஒதுக்கிவிட வேண்டும்....இளைஞர்கள் தோற்றுவிட்டால் அனைத்துமே தோற்றுவிடும் என்பதை மனதில் கொள்ளவேண்டும். க்யூப இளைஞர்கள் சூழலை நன்கு எதிர்கொள்வார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு. நான் அவர்கள் மீது நம்பிக்கை வைத்துள்ளேன்." (.140)

Cuba Newsஇன் முதன்மை ஆசிரியரான வால்ட்டர் லிப்மேன், காஸ்ட்ரோவைப் பற்றிக் கூறுகிறார். "காஸ்ட்ரோ மணிக்கணக்கில் பேசிகொண்டேயிருப்பார். இப்போது சில பத்திகள் எழுத ஆரம்பித்துள்ளார். அவருடைய ஒவ்வொரு வார்த்தையையும் நாங்கள் கவனமாகப் படிப்போம். உலகில் வேறு எந்தவொரு தலைவரும்  ஃபீடல் காஸ்ட்ரோவைப் போல ஈர்க்கவில்லை. ஒரு பெரிய புரட்சிக்கு வித்திட்ட வகையில் அவர் அனைவருடைய கவனத்தையும், மரியாதையையும் பெற்றார். இப்போது அவர் க்யூ மட்டுமன்றி உலகிலுள்ள அனைத்து மக்களுக்கும் தன் எளிய, நேரிடையான, அருமையான சிந்தனைகள் மூலமாக பயிற்றுவிக்க ஆரம்பித்துள்ளார்."

Granmaவில் அவர் அண்மையில் எழுதிய கட்டுரை செப்டம்பர் 2014இல் வெளிவந்துள்ளது. கட்டுரையின் ஆரம்பமும், இறுதியில் அவரது கையொப்பமும் இதோ. 


Battle of Ideas : Reflections  by Fidel Castro, Part I (29 March to 30 June 2007), New Century Book House, 41B, Sidco Industrial Estate, Ambattur, Chennai 600 098, Phones: 26359906, 26251968, 2007, Rs.100

தமிழ் இந்து நாளிழின் ஆண்டுவிழாவினையொட்டி அவ்விதழைப் பற்றி நான் எழுதிய கடிதம் 27.9.2015இல் வெளியாகியுள்ளது. அதைப் பகிர்வதில் மகிழ்கிறேன்.
பதிவு, 29.9.2015இல் மேம்படுத்தப்பட்டது.

20 September 2015

கோயில் உலா : கும்பகோணம் : செப்டம்பர் 2015

விக்கிபீடியாவில் சூன் 2014இல் கோயில்களைப் பற்றி எழுத ஆரம்பித்தபோது முதலில் கும்பகோணத்திலுள்ள கோயில்களைப் பற்றி எழுத ஆரம்பித்தேன். அவ்வகையில் 6.9.2015 அன்று கும்பகோணத்திலுள்ள சில கோயில்களுக்குச் சென்றதை இப்பதிவில் பகிர்கிறேன். 20.6.2014இல் மேற்கொண்டு ஒரு ஆண்டு நிறைவடைவதை நினைவுகூறும்வகையில் பகிரப்படுகிறது. 

தமிழ் விக்கிபீடியாவில் கும்பகோணம் கோயில்கள் வார்ப்புரு
விக்கிபீடியாவில் கும்பகோணம் கோயில்கள்
இவ்வாறான பயணங்கள் முன்னரே உள்ள கோயில்களைப் பற்றிய கட்டுரைகளை மேம்படுத்தவும், இல்லாத கோயில்களைப் பற்றி புதிதாகக் கட்டுரைகள் எழுதவும், புகைப்படங்களைச் சேர்க்கவும் உதவுகின்றன. 2016 மகாமகத்திற்காக பல கோயில்களில் கும்பாபிஷேகம் ஆகும் நிலையில் அவற்றையும் முடிந்தவரை இணைக்க முயற்சிக்கிறேன். இவ்வாறான முயற்சியின்போது விக்கிபீடியர் ஒருவர் கும்பகோணம் கோயில்கள் என்றொரு வார்ப்பு உருவாக்கலாம் என்று கருத்து தெரிவித்தார். அவர் கூறிய மாதிரியை வைத்துக் கொண்டு உருவாக்கி, அனைத்துக் கோயில்களையும் அதில் ஒருங்கிணைக்க ஆரம்பித்தேன்.

கோயில்களுக்கான ஆதாரங்கள்
கோயில்களுக்கான விவரத்தை அறிய கும்பேசுவரர் திருக்கோயிலும் மகாமகத் திருவிழாவும்  (கோ.மு.முத்துசாமிபிள்ளை, தமிழ்ப்பல்கலைக்கழகம், தஞ்சாவூர், முதற்பதிப்பு 1992) என்ற நூலை அடிப்படையாகக் கொண்டேன். நூலாசிரியர் பெருமுயற்சி எடுத்து அந்நூலில் 59 கோயில்களைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார். சிலவற்றில் ஒரே இடத்தில் இரு கோயில்களின் பெயர்கள் உள்ளன. சிலவற்றில் தெருவின் பெயரோ, இறைவனின் பெயரோ தெளிவின்றி உள்ளது. முடிந்தவரை தெளிவுபடுத்திக் கொண்டு பயணத்தை மேற்கொண்டு வருகிறேன். அவ்வகையில் நூலாசிரியர் கூறியுள்ளனவற்றில் 50 விழுக்காட்டிற்கும் மேலுள்ள கோயில்களுக்கு இதுவரை சென்றுள்ளேன். இப்பயணத்தின்போது கீழ்க்கண்ட கோயில்களுக்கு சென்றேன்.   

1) விசுவநாத சுவாமி கோயில் (மேட்டுத்தெரு)
இக்கோயிலின் மூலவர் லிங்கத்திருமேனியாக உள்ளார். அவர் விசுவநாதசுவாமி என்றழைக்கப்படுகிறார். மூலவர் சன்னதியின் வடப்புறம் விசாலாட்சி அம்மன் சன்னதி உள்ளது- மூலவருக்கு முன்பாக உள்ள முன் மண்டபத்தில் வலது புறம் விநாயகர் உள்ளார். இடது புறம் சுப்பிரமணியர் உள்ளார். இங்குள்ள இவ்விநாயகர் செங்கழுநீர் விநாயகர் என அழைக்கப்படுகிறார். விசுவநாதசுவாமி என்பதைவிட செங்கழூநீர் விநாயகர் கோயில் என்றே உள்ளூரில் இக்கோயிலை அழைக்கின்றனர். இக்கோயிலில் நவக்கிரக சன்னதியும், ஆஞ்சநேயர் சன்னதியும் உள்ளன. கருவறை கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி, அடிமுடி காணா அண்ணல், துர்க்கை ஆகியோர் உள்ளனர். 

2) விசுவநாதசுவாமி கோயில் (பேட்டை வினைதீர்த்தத் தெரு)
இத்தெரு தற்போது பேட்டை வினைதீர்த்தத் தெரு என்றழைக்கப்படுகிறது. முதன்மையான கோயிலாக விசுவநாதசுவாமி கோயில் உள்ளது. கருவறையில் லிங்கத்திருமேனியாக மூலவர் உள்ளார். இடது புறம் விசாலாட்சியம்மன் சன்னதி உள்ளது. இருவர் சன்னதிகளுக்கும் முன்பாக நந்தியும், பலிபீடமும் உள்ளன.  தற்போது இக்கோயிலில் குடமுழுக்கிற்கான ஆயத்தப்பணிகள் நடைபெற்றுவருகின்றன. பழைய செங்கல் கட்டுமானம் பார்ப்பதற்கு கண்ணைக் கவரும் வகையில் உள்ளது. இக்கட்டுமானத்தைப் பார்த்தபோது கும்பகோணம் வீரசைவ மடத்தின் அருகேயுள்ள வீரபத்திரர் கோயிலை நினைவூட்டியது. 
இக்கோயிலுக்கு எதிரே ஒரு விநாயகர் தனியாக உள்ளார்.  (வினைதீர்த்த செட்டி அக்கிரகாரம் விசுவநாதசுவாமி மற்றும் ராஜேந்திரபிள்ளையார் கோயில் என நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது, வ.எண்.42, பக்கம்.62). 

3)பொய்யாத விநாயகர் கோயில் (நெல்லுக்கடைத்தெரு)
மூலவராக விநாயகர் உள்ளார். அவர் பொய்யாத விநாயகர் எனப்படுகிறார். முன் மண்டபம், கருவறை, திருச்சுற்றுடன் உள்ள கோயில். சற்றே உயர்ந்த தளத்தில் உள்ளது. (காவேரிக் கரைத்தெரு என நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது, வ.எண்.52, பக்கம்.63. காவேரிக்கரைத்தெரு அங்கிருந்து அருகில் உள்ளது. காவேரிக்கரைத் தெருவில் அவ்வாறான பெயரில் கோயில் இல்லை). 

4) சஞ்சீவராயசுவாமி கோயில் (மோதிலால் தெரு)
இக்கோயிலின் மூலவராக ஆஞ்சநேயர் உள்ளார். இவர் முன்னர் சஞ்சீவராயசுவாமி என்று அழைக்கப்பட்டிருக்கலாம் என்று கோயிலில் கூறினர். கோயில் சற்று உயர்ந்த தளத்தில் உள்ளது. (சஞ்சீவிராயசுவாமி கோயில் என நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது, வ.எண்.26, பக்கம்.60, மோதிலால் தெருவில் அவ்வாறான பெயரில் கோயில் இல்லை).

5) மன்னார்சாமி கோயில் (பெசன்ட் ரோடு)
பெசன்ட் ரோட்டிலோ அருகிலுள்ள தெருக்களிலோ இவ்வாறான பெயரில் கோயில் இல்லை.

6) ஏகயோகீந்திர சுவாமிகள் கோயில் (சாரங்கபாணி கோயில் மேல சன்னதி)
சாரங்கபாணி கோயிலின் மேல சன்னதி, கீழ சன்னதி உள்ளிட்ட அனைத்து சன்னதிகளிலும் தேடப்பட்டது. அவ்வாறான பெயரில் எவ்வித கோயிலும் இல்லை.

இவ்வாறாகச் சென்றபோது கும்பகோணத்தில் அண்மையில் குடமுழுக்கு நடைபெற்ற கோயில்களுக்குச் செல்லும் வாய்ப்பு கிடைத்தது. 
1) விநாயகர் கோயில் (பேட்டை பஞ்சுக்காரத்தெரு)

மூலவராக விநாயகர் உள்ளார். முன் மண்டபம், கருவறை, திருச்சுற்றுடன் உள்ள கோயில். திருச்சுற்றில் துர்க்கையம்மன் சன்னதி உள்ளது. முன் மண்டபத்தில் இடப்புறம் லிங்கத்திருமேனி உள்ளது. அதற்கு முன்பாக நந்தியும் பலிபீடமும் உள்ளன. இக்கோயிலின் குடமுழுக்கு அண்மையில் நடைபெற்றது.

2) விநாயகர் கோயில் (கும்பகோணம் ரயிலடி அருகே
மூலவராக கற்பக விநாயகர் உள்ளார். இக்கோயிலின் குடமுழுக்கு 21.8.2015 அன்று நடைபெற்றது.

3) அரியலூர் மாரியம்மன் கோயில் (உப்புக்காரத்தெரு)
இக்கோயிலின் மூலவராக அரியலூர் மாரியம்மன் உள்ளார். பச்சைக்காளி, பவளக்காளி, மதுரை வீரன் ஆகியோர் இக்கோயில் வளாகத்தில் உள்ளனர். அண்மையில் இக்கோயிலின் குடமுழுக்கு நடைபெற்றது. 

முன்னர் சென்றவை
இவ்வாறான பதிவுகளுக்காக இதற்கு முன்னர் 20.9.2014 (25+) 28.2.2015 (30+) 2.6.2015 (14) ஆகிய நாள்களில் கும்பகோணம் சென்றேன். இவை மூலமாக கும்பகோணம் கும்பேஸ்வரர் கோயிலில் சட்டநாதருக்கு ஒரு சன்னதி, பல இடங்களில் திரௌபதி அம்மன் கோயில்கள், மேட்டுத்தெருவில் உள்ள கோயில் செங்கழுநீர் விநாயகர் கோயில் என அழைக்கப்பட்டாலும் அது ஒரு சிவன் கோயில் என்பன போன்ற பல புதியனவற்றை  அறியமுடிந்தது. தொடர்ந்து பயணிப்பேன், எழுதுவேன்.
------------------------------------------------------------------------
இவ்வுலாவின்போது கும்பகோணம் சிவகுருநாதன் செந்தமிழ் நூல் நிலையம் செல்லும் சென்றேன். அதனைப் பற்றி தனியாக ஒரு பதிவோடு சந்திப்போம்.
------------------------------------------------------------------------

13 September 2015

கும்பகோணம் இராமசுவாமி கோயில்

கும்பகோணத்தில் இராமாயண சிற்பங்களைப் பார்க்கவேண்டுமா? குடந்தைக்கீழ்க்கோட்டம் என்றழைக்கப்படுகின்ற நாகேஸ்வரன் கோயிலுக்கு வாருங்கள். இராமாயண ஓவியங்களையும், சிற்பங்களையும் பார்க்க வேண்டுமா? இராமசுவாமி கோயிலுக்கு வாருங்கள். பள்ளி நாள்கள் தொடங்கி கும்பகோணத்தில் இக்கோயிலில் உள்ள ராமாயண ஓவியங்களைச் சுற்றிச் சுற்றி வந்து பல முறை தனியாகவும், நண்பர்களுடனும் பார்த்திருக்கின்றேன். 2016 மகாமகத்திற்காக திருக்குடமுழுக்கு நடைபெற்றபோது  இக்கோயிலுக்குச் சென்றுவந்தோம்.  


கும்பகோணத்திலுள்ள வைணவத் தலங்களில் முக்கியமான இடத்தைப் பெறுவது இராமசுவாமி கோயில். கி.பி.1600 முதல் கி.பி.1645 வரை தஞ்சாவூரை ஆட்சி செய்த ரகுநாத நாயக்க மன்னரால் இக்கோயில் கட்டப்பட்டது. ஸ்ரீராமன் என்னும் விஜயநகரப் பேரரசனுக்கு ரகுநாத நாயக்கர் கும்பகோணத்தில் பட்டாபிஷேகம் செய்துவைத்ததன் நினைவாகவே அவ்வரசர் இக்கோயிலைக் கட்டினார். 

வடக்கு நோக்கிய ஐந்து நிலை ராஜகோபுரத்துடன் கம்பீரமாக அமைந்துள்ள கோயில். இராஜகோபுரத்தை அடுத்து உள்ளே நாம் உள்ளே செல்லும்போது முதலில் தென்படுவது அலங்கார மண்டபம். அனைத்து தூண்களிலும் சிற்பங்கள். தாராசுரத்தில் ராஜகம்பீரன் மண்டபத்தை சற்றே நினைவுபடுத்துமளவு உள்ளது இக்கோயிலுள்ள மகாமண்டபத்தில் காணப்படுகின்ற சிற்பங்கள். தாராசுரத்தில் ஒவ்வொரு தூணிலும் மிகச்சிறிய அளவில் நுட்பமாக சிற்பங்கள் அமைந்துள்ளன. மாறாக இங்கோ ஆளுயர சிற்பங்கள் காணப்படுகின்றன. 62 தூண்களில் சிற்ப வேலைப்பாடுகள் மிகுந்து காணப்படுகின்றன.மேற்கண்ட நான்கு சிற்பங்களும் ஒரே தூணில் நான்கு பக்கங்களிலும் செதுக்கப்பட்டுள்ளன. தூணின் ஒவ்வொரு பக்கத்திலும் இராமர், சீதை, லட்சுமணர், அனுமார் என்ற நிலையில் அமைத்துள்ளனர். இம்மண்டபத்திலுள்ள வேறு சில தூண்களைக் காண்போம்.   

கர்ப்பகிரகத்தைச் சுற்றிவருகின்ற திருச்சுற்றில் இராமாயண ஓவியங்கள் மூன்று வரிசையாக வரையப்பட்டுள்ளன. மூன்று சுற்று நாம் சுற்றி வந்தால் முழுமையாக இராமாயணத்தைப் படித்துவிடலாம். அந்த வகையில் ஓவியங்கள் எழுதப்பட்டுள்ளன. அண்மையில் நடைபெற்ற குடமுழுக்கின்போது ஓவியங்களும் புதுப்பிக்கப்பட்டுள்ளன.கருவறையில் பட்டாபிஷேகக் கோலத்தில் ராமர், சீதை, லட்சுமணன், சத்ருகனன், அனுமார் இருக்கும் காட்சி நம்மை மெய்சிலிர்க்க வைக்கும்.  வடக்கு நோக்கிய கருவறையில் மூலவர் இராமரும் சீதைப்பிராட்டியும் பீடத்தில் அமர்ந்திருக்க, பரதன் குடை விரிக்க, இலக்குவன் அஞ்சலி பந்தத்துடன் நிற்க, சத்துருக்கனன் வெண்சாமரம் வீச, அனுமன் கையில் வீணையையும், சுவடியையும் ஏந்தியிருக்க அனைவரும் எழுந்தருளியுள்ளனர். இராம பிரான் இடது காலை மடக்கி வலது காலை பூமியில் தொங்கவிட்டு அமர்ந்துள்ள கோலம் மிக அருமை. எல்லா மூர்த்திகளும் பட்டாபிஷேக நிலையில் காட்சி தருவது கண்கொள்ளாக் காட்சியாகும்.

தமிழகத்தில் வேறெங்கும் இல்லாத அளவிற்கு சிறப்பாக அமைந்துள்ள இராமபிரானின் பட்டாபிஷேகக் கோலத்தினை இராமசுவாமி கோயில் வருக. 
(கோயில் திறந்திருக்கும் நேரம் : காலை 6.00-12.30 மணி மாலை 4.00-இரவு 8.30)

திருக்கோயில்கள் வழிகாட்டி, தஞ்சாவூர் மாவட்டம், தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை, 2014
முனைவர் த.சந்திரகுமார், கும்பகோணம் இராமசுவாமி கோயில் ஒரு சிற்பக் கலைக்கூடம், மகாமகம் சிறப்பு மலர் 2004
மகாமகப்பெருவிழா 2014, இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை, தமிழ்நாடு அரசு, 2004

09 September 2015

இராமசுவாமி கோயில், கௌதமேஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்

இன்று (9.9.2015) கும்பாபிஷேகம் காணும் கும்பகோணம் ராமசுவாமி கோயிலுக்குச் செல்ல திட்டமிட்டு, இதே நாளில் கும்பாபிஷேகம் காணும் மேலும் இரு கோயில்களைப் பார்த்து வந்தோம். நாங்கள் கண்ட கும்பாபிஷேகக் கோயில்களைக் காண அழைக்கிறோம். வாருங்கள். 

2016 மகாமகத்தை முன்னிட்டு கும்பகோணத்திலுள்ள பல கோயில்கள் கும்பாபிஷேகம் காண்கின்றன. மகாமகத்திற்காக காவேரிசக்கரப் படித்துறையில் தீர்த்தவாரி அளிக்கும் வைணவக் கோயில்கள் சார்ங்கபாணி கோயில், சக்கரபாணி கோயில், ராமசுவாமி கோயில், ராஜகோபாலசுவாமி கோயில் மற்றும் ஆதிவராகப்பெருமாள் கோயில் ஆகியனவாகும். அண்மையில் சார்ங்கபாணி கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இன்று (9.9.2015) ராமசுவாமி கோயில் கும்பாபிஷேகம். 

கி.பி.1600 முதல் கி.பி.1645 வரை தஞ்சாவூரை ஆட்சி செய்த ரகுநாத நாயக்க மன்னரால் இக்கோயில் கட்டப்பட்டது. ஸ்ரீராமன் என்னும் விஜயநகரப் பேரரசனுக்கு ரகுநாத நாயக்கர் கும்பகோணத்தில் பட்டாபிஷேகம் செய்துவைத்ததன் நினைவாகவே அவ்வரசர் இக்கோயிலைக் கட்டினார். வடக்கு நோக்கிய ஐந்து நிலை ராஜகோபுரத்துடன் கம்பீரமாக அமைந்துள்ள கோயில். 

காலை 4.00 மணிக்கு தஞ்சாவூரிலிருந்து புறப்பட்டு கும்பகோணம் சென்றடைந்தோம். நேரிடையாக கோயிலுக்குச் சென்றோம். 
எங்கு பார்த்தாலும் கூட்டம். ராஜகோபுரத்திற்கு முன்பாக நின்று கண்கொள்ளாக்காட்சிக்காகக் காத்திருந்தோம். மின்சார ஒளி வெள்ளத்திற்கிடையே இருந்த இருட்டினை விரட்டிவிட்டு விடியல் தொடங்கியது.  


கும்பாபிஷேகம் காண காத்திருப்போர்
கும்பாபிஷேகம் காண காத்திருப்போர்

கும்பாபிஷேகம் நிறைவுற்றபின் உள்ளே செல்லும் பக்தர்கள்
புதிய பலிபீடமும் கொடிமரமும்
மூலவரை வழிபடக் காத்திருப்போர்

மண்டபத்தில் அலங்கரிக்கப்பட்ட நிலையில் உற்சவ மூர்த்திகள்
உற்சவமூர்த்திகளை ரசித்துக்கொண்டிருக்கும் பக்தர்கள்
பிரகாரத்திலிருந்த யாகசாலை
பிரகாரத்தில் இருந்த தசாவதாரக்காட்சி
கும்பாபிஷேக நாளன்று விமானம்
பலிபீடம், கொடிக்கம்பத்தை வணங்கிவிட்டு அங்கிருந்து கருவறைக்குச் சென்றோம். பிரகாரத்தைச் சுற்றி வந்து கருவறைக்குச் செல்லும்படி பாதை அமைத்திருந்தார்கள். உள்ளே இருந்த ராமாயண ஓவியங்களைப் பார்த்தோம். பின்னர் கருவறையில் உள்ள பட்டாபிஷேகக் காட்சியைக் கண்டோம். அலங்கார தூண் மண்டபத்தில் சற்றே அமர்ந்திருந்தோம்.

பின்னர் இன்று கும்பாபிஷேகம் காணும் மற்றொரு கோயிலான கௌதமேஸ்வரர் கோயிலுக்குச் சென்றோம். மகாமகக் குளத்தில் தீர்த்தவாரி கொடுக்கும் 12 சைவக்கோயில்களில் முதன் முதலாக இச் சைவக் கோயிலின் கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. அங்கு சென்று கௌதமேஸ்வரரையும், இறைவி சௌந்தரநாயகியையும் தரிசித்துவிட்டு, யாகசாலையைப் பார்த்தோம். என் ஆய்விற்காக கும்பகோணத்தில் பல இடங்களில் புத்தர் சிலைகள் பற்றிய விவரங்களைத் தேடிச் சென்றபோது பெயரின் காரணமாக இக்கோயில் பௌத்தம் தொடர்பானதாக இருக்குமோ என்று எண்ணிச் சென்று ஏமாந்தேன். அவ்வகையில் எனக்கு இக்கோயில் வித்தியாசமான அனுபவத்தைத் தந்திருந்தது. கௌதமர் என்று ஒரு முனிவர் இருந்தார் என்று கூறி அவர் தொடர்பான ஒரு கதையைக் கூறினர். பின்னர்தான் இக்கோயில் ஒரு சிவன் கோயில் என அறிந்தேன்.
கௌதமேஸ்வரர் கோயில் நுழைவாயில்
பிரகாரத்தில் யாகசாலை
மூலவர் விமானம்
கௌதமேஸ்வரைத் தரிசித்துவிட்டு மகாமகக்குளம் அருகே பேருந்து நிலையம் நோக்கிச் சென்றபோது குளத்தைக் கண்டோம். மகாமகத்திற்கான வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. அதைப் பார்ப்போம்.


அங்கு பார்த்துக்கொண்டிருக்கும்போது சுவாமிமலை நினைவிற்கு வரவே, இன்று கும்பாபிஷேகம் கண்ட சுவாமிமலைக்குச் செல்ல முடிவெடுத்து, சுவாமிமலை வந்தடைந்தோம். தொடர்ந்து பக்தர்கள் வந்த நிலையில் வரிசையில் நின்று முருகனை தரிசித்தோம். 
சுவாமிமலை கோயில் நுழைவாயில்
சுவாமிமலை கோயில் மற்றொரு நுழைவாயில்
சுவாமிமலை கோயில் உள்ளே ஓவியங்கள்
ஒரு கோயில் கும்பாபிஷேகத்தை நேரில் முழுமையாகப் பார்த்ததும், அதே நாளில் கும்பாபிஷேகம் ஆன வேறு இரு கோயில்களுக்குச் சென்றதும் மனதிற்கு நிறைவினைத் தந்தது.