27 August 2016

தோற்றம் பின்னுள்ள உண்மைகள் : தேனுகாவின் கலை இலக்கியப்படைப்புகள்

க.நா. சுப்ரமணியன்,  எம்.வி.வெங்கட்ராம், கரிச்சான்குஞ்சு, விட்டல்ராவ், சி.என்.ராஜராஜன், தஞ்சை ப்ரகாஷ், ரவிசுப்ரமணியன், ம.மதியழகன், பிரேமா நந்தகுமார் ஆகியோர் உள்ளிட்ட பலர் விமர்சிக்கும் தேனுகா என்றழைக்கப்படும் சீனிவாசன் கலையுலகின் பெரும் ரசிகன். 
தான் ரசித்ததை பிறரும் ரசிக்கவேண்டும் என்ற எண்ணம் கொண்டவர். மேற்கத்திய பாணி, நமது நாட்டுப்பாணி என்ற எதுவாயினும் ஆழ ஊன்றிப் பார்த்து, படித்து தோய்ந்து, அனுபவித்து அதனை பகிர்ந்துகொள்வதில் அவருக்கு நிகர் அவரே. கலையை அவர் ரசிக்கும் விதத்தை நாம் அதிகமாக ரசிக்கலாம். ரசனையே உன் பெயர் தேனுகாவா? என்று நாம் வியக்கலாம், பாராட்டலாம். அதே சமயத்தில் நாமும் அவ்வாறே ஆகிவிடுவோம். அத்தகைய ஈர்ப்பு அவருக்கு உண்டு. கலைக்கு ஏதாவது பங்கம் என்ற நிலையில் அவரது எழுத்தில் வெளிப்படுத்தும் கோபம் நியாயமானதாகவே இருக்கும். கும்பகோணத்தில் வங்கிப்பணியாற்றிக் கொண்டே தமிழனின், கலையின், பண்பாட்டின் பெருமையை வெளியுலகிற்குக் கொணர்ந்த அவர் பல ரசிகர்களை உருவாக்கிச் சென்றிருக்கிறார் என்பதே உண்மை. 

சந்திக்கும்போதெல்லாம் அவருடைய பேச்சு கலை, கோயில், ரசனை என்ற நிலையில் அமையும். நம் கலைகள் தொடர்ந்து பாதுகாக்கப்படவேண்டும் என்ற ஆதங்கத்தை வெளிப்படுத்துவார். அவருடனான நட்பு எனக்கு கலை மீதான ஆர்வத்தை மேம்படுத்தியது. சோழ நாட்டில் பௌத்தம் என்ற எனது ஆய்வினை பாராட்டியவர்களில் ஒருவர். நான் கண்டுபிடித்த புத்தர் சிலைகளைப் பற்றிய செய்தி நாளிதழ்களில் வெளிவரும்போது தொலைபேசியில் அழைத்து பாராட்டுவார். நம்மைவிட்டுச் சென்றுவிட்டாலும் அவருடைய எழுத்துக்கள் மூலமாக இன்னும் நம்மிடையே இருக்கிறார். அவர் எழுதி நமக்காக விட்டுச் சென்ற தோற்றம் பின்னுள்ள உண்மைகள் : தேனுகாவின் கலை இலக்கியப்படைப்புகள் என்ற நூலிலிருந்து சில பகுதிகளைப் பகிர்வதில் மகிழ்கின்றேன்.  
கும்பகோணம் வெற்றிலை பாக்கு
தஞ்சை மாவட்டத்தில் அதிலும் குறிப்பாக கும்பகோணத்தில் வெற்றிலை பாக்கு புகையிலை வாயில் அடக்கிக்கொண்டு ஊமைகளாகிவிடும் மனிதர்களிடம் எந்த கேள்விக்கும் பதில் வருவதில்லை. பதில் சொல்ல வேண்டுமென்றால் வெற்றிலை எச்சிலை துப்பிவிட்டுத்தான் அவர்களால் பதில் சொல்ல முடியும். தொழில் செய்யும் நேரம் தவிர மற்ற நேரங்களில் சீவலுக்கு வாசனை சேர்த்தல், புகையிலை கத்த காம்புகளை பதப்படுத்துதல், நாக்கை துளைக்காத சுண்ணாம்பைத் தயார் செய்தல், கொழுந்து வெற்றிலை பாக்கு அதன் நரம்புகளை எடுத்துவிட்டு துடைத்து மீண்டும் வெற்றிலை பாக்கு போடுவது துப்புவது மீண்டும் போடுவது என்றே அவர் வாழ்க்கைப் பொழுதுகளாகிவிடும். இதனால்தான் நாதஸ்வர வித்வான்கள் வாய்விட்டும் பேசுவதில்லை. அவர்களது வாசிப்பை புகழ்ந்து பேசினாலும் வெறும் தலையாட்டந்தான். இவர்களை இயக்கச் செய்வது எப்படி என்று நினைத்தபோது எனக்கு பயமாகிவிட்டது. (நாதஸ்வரப்படம் என் அனுபவங்கள், ப.39)

மல்லாரி இசை வாசிப்பு
ஒரு நாட்டு ராஜா அல்லது சக்கரவர்த்தி வெளியில் வரும்போது சாதாரணமாக வருவார். ரதகஜதுரகபதாதிகள் புடைசூழ வீதிக்கு கிளம்புவது போன்று, சுவாமியின் வீதியுலாக்காட்சி மக்களின் மனக்காட்சிகளாய் விரியும். சுவாமியின் புறப்பாட்டைத் தெரிவிக்க எக்காளம், திருச்சீரனம், டவுண்டி, மிருதங்கம், முகபடாம் பூட்டிய யானையின் அம்பாரி என்றும் சுருட்டி வாசமாலை ஏந்தி வரும் நபர்கள் என்று விதவிதமான காடசிகளின் தொகுப்பாக இவை அமையும். இந்த நேரத்தில்தான் மக்களுக்கு உணர்வூட்டும்படியாக நாதஸ்வரக் கலைஞர் குழு மல்லாரி இசையை வாசிப்பார்கள். (நாதஸ்வரப்படம் என் அனுபவங்கள், ப.39)

தேரோட்ட அழகு
தேரோட்டத்தின்போது தேரில் அமர்ந்து வாசிக்கும் தேர் மல்லாரியை படமெககத் திட்டமிட்டோம். தேருக்கு எங்கு செல்வது என்று நினைத்துக்கொண்டிருக்கையில் நல்ல வேளையாக திருவாரூரில் ஆழித்தேர் புறப்பட்டது. பிரம்மாண்டமான இவ்வாழித்தேர் முன்னே நான்கு குட்டித் தேர்கள் சென்றுகொண்டிருக்கின்றன ஆழித்தேரில்  தியாகராஜ சுவாமிக்கு அருகில் உள்ள மரத் தூண்களுக்கு இடுக்கில் தேர் மல்லாரி வாசித்துவருகிறார்கள் நாதஸ்வரக் கலைஞர்கள். ஊரே அசைந்து தேராக வீதிகளில் உலா வந்ததோ என்று வியக்கம் வண்ணம் மக்கள் வெள்ளத்தில் அவ்வாழித்தேரைப் படம் பிடித்தோம். (நாதஸ்வரப்படம் என் அனுபவங்கள், ப.50)

நண்பர்களாக ஆசிரியர்கள்
உலகின் சகல வசதிகளை விரல் நுனி தொடுதிரையில் பெறும் அதி அற்புத உலகம் இது என்று விஞ்ஞானிகள் இன்றைய உலகத்தை வர்ணிக்கின்றனர். செல்பேசிக்குள்ளேயே தொலைக்காட்சி, இணைய தள வசதிகள்  முழுமையும் பெறுவதற்கான தொழில்நுட்பங்கள் அதிவேகமாக வளர்ந்துகொண்டிருக்கின்றன. வகுப்பறையில் உலகப்படத்தைக் காண்பித்து நாடுகளையும் காடுகளையும், கடல்களையும் காண்பித்த காலம் மர்றி, கூகுள் எர்த் மூலம் உலகத்தின் மாதிரி உருவத்தை உருட்டித் திரட்டி நம் கண்முன் காட்டிவிடுகின்ற வித்தியாசமான உலகம் இது. இணையத்தில் இப்போது தஞ்சை பிரகதீஸ்வரர் கோயிலைப் பார்க்கவேண்டுமென்றால் அதனை மேலிருந்து பார்ப்பதபோல் தஞ்சையின் நிலப்பரப்போடு கோயிலையும் காட்டிவிடுகிற வினோத உலகம் இது. ஆசிரியர்கள் இவ்வுலகில் இதுபோன்ற தகவல் சேகரிப்பின் மன்னர்களாகத் திகழ வேண்டும். நமக்குத் தெரிந்த தகவல்களை மாணவர்களுக்க பகிர்ந்து அளிக்கும் நல்ல நண்பர்களாக ஆசிரியர்கள் மாறவேண்டும்.  (காணாமற் போனத் தமிழகக் கதைச்சொல்லிகள், ப.61)

காணாமற் போன்ற கதை சொல்லும் மரபு
அறம் சார்ந்த நீதிக்கதைகளையும், பாடங்களையும் பாடத்திட்டத்தில் சேர்க்கவேண்டும். அக்காலத்தில் ஆசிரியர்கள் நடத்தி வந்த மகாபாரதக் கதைகளில் வரும் கர்ண மோட்சம்,  அரவானை களத்தில் பலியிட்டு தொடங்கும் பாரத யுத்தம், அர்ஜுனனின் விதவிதமான வில்வித்தைகள், சூரிய அஸ்தமனத்தில் அம்புராப் படுக்கையில் உயிர் விடும் பீஷ்மரின் மரணக் காட்சி, விதுர நீதி, யட்ஷ பிரச்னம் போன்ற கதைகள் இன்று தர்க்கத்திற்கு உரியவைகளாக மாறியிருப்பதும், அறிவுச் சார்ந்த கேள்விகளால் இவை தேவையற்றது என்றாகிவிட்டதும் வேதனைக்குரிய ஒன்றாகும். பொம்மலாட்டம், கூத்து, நாடகம், அம்மானை, குறவஞ்சி, பள்ளு, பறையாட்டம், பாகவதமேளா போன்ற நாடக ஆடல்,பாடல் வழி தமிழர்களின் கதை சொல்லும் மரபு காணாமற் போய்விட்டது. (காணாமற் போனத் தமிழகக் கதைச்சொல்லிகள், ப.62)

கதை சொல்லி ஆசிரியர்கள்
இளம் வயதில் கதை கேட்பது மனதிற்கு எவ்வளவு குளுமை தருகிறது. பாரதப்போரே நம் கண்முன் நிகழ்வதாகத் தோன்றுகிறது. ஆழ்பகை, வஞ்சினம், தர்மம், கொடை, காதல், வீரம் என்ற மனித மனத்தின் மனக்காட்சிகளை அற்புதமாக விவரிக்கும் கதைகள் எங்கே போனது. தாயை மணக்கும் மகன், அவளது  மமகளை மணக்கும் தகப்பன், இவர்களுக்கு குழந்தை பிறந்தால் என்ன முறையிட்டு அழைப்பார்கள், என்ற வினாவை எழுப்பும் முறைதெரியா விக்ரமாதித்தன் கதையை நினைத்தால் இன்றைக்குக் கூட அவிழ்க்க முடியாத புதிராக உள்ளது. காத்தவராயன் கதையில் ஆரிய மாலா பிறக்கும்பொழுதே பூமியை வெடித்து வெளிவரும் கழுமரம் நாட்டிற்கு வரும் மிகப் பெரிய விபரீதத்தை காட்டுகின்ற கதை எங்கே? மகாபாரதக் கதைகள், விக்ரமாதித்தன் கதைகள், பேசாமடந்தைக் கதை, திரைச்சீலைச் சொல்லும் கதைகள், அவற்றுள் வரும் அண்டரண்ட பட்சிகளின் கதை, பரமார்த்த குரு கதை போன்ற அற்புதமான கதைகளை மாணவர்களுக் சொல்லிக்கொடுத்த கதைச்சொல்லி ஆசிரியர்கள் எல்லாம் எங்கே மறைந்தார்கள். (காணாமற் போனத் தமிழகக் கதைச்சொல்லிகள், ப.63)

புதியதோர் கலை உலகம்
இன்றைய மாணவர்கள், ஒரே நேரத்தில் பல்துறை, பல்கலை, பல மொழி அறிவைப் பெறும் திறன் படைத்தவர்களாக விளங்குகின்றார்கள். வெறும் எழுத்து சார்ந்த படிப்பைவிட உருவ அருப காட்சிப்பார்வைகள் சார்ந்த உலகத்தின் பயன்களை மாணவர்கள் அனுவித்துக் கொண்டிருக்கின்றார்கள்.  இன்றைய மாணவர்களுக்கு அபரிமிதமான படைப்புத்திறன்கள் தேவைப்படுகின்றன.  கதைகள் கேட்டல், நாடகம், நாட்டுப்புறக்கதைகளில் ஈடுபடுதல் போன்றவற்றால் விதவிதமான படைப்பு ஆற்றல்களை வளர்க்கும் மாணவர்களை ஆசிரியர்கள் உருவாக்கவேண்டும். உணர்வு சார்ந்த அறிவே இன்றைய உலகத்திற்குத் தேவையானது என்று அறிஞர்கள் வற்புறுத்தும் இந்நேரத்தில் குழந்தை, சிறுவர், மாணவர்களுக்கான புதியதோர் கலை உலகத்தை நாம் படைக்க வேண்டும்.  (காணாமற் போனத் தமிழகக் கதைச்சொல்லிகள், ப.66)

தமிழரின் கட்டடக்கலை
உலகப் புகழ் பெற்ற கட்டடக்கலை விமர்சகர் கென்னத் பிராம்டன், நவீன கட்டடக்கலையின் தந்தை எனப்போற்றப்படும் பிராங்க்லாய்ட்ரைட் போன்றோர் தஞ்சாவூர் பெரிய கோயிலை பார்த்தபோது இது கட்டடக்கலையின் விந்தையே என்றே அழைத்த பெருமைக்குரியது. ஜவஹர்லால் நேரு காலத்தில் சண்டிகர் நகரை வடிவமைத்த கட்டடக்கலைஞர் லீகபூசியர் தஞ்சை பெரிய கோயில் நகரைப் பார்த்தபோது நகரிய வடிவமைப்பில் தமிழர்களே முதன்மையானவர்கள் என்று வியந்து ரசித்தார். பரந்த வெளியினை அமைத்து பகலில் சூரியனையும், இரவில் சந்திர நட்சத்திரங்களையும் கோயில் பிரகாரங்களிலேயே கண்டு ரசிக்கும் அழகில் மெய்மறந்த இந்தியக் கட்டடக்கலைக் கலைஞர் சார்லஸ் கொரியா தற்போது தான் கட்டிய போபால் சட்டசபை வளாகம், தில்லி, பெங்களூரு போன்ற இடங்களில் தான் கட்டி வரும் டைடல் பார்க் போன்ற கட்டிடங்களையெல்லாம் இவ்வாறு நீண்ட இடைவெளிவிடு சூரிய சந்திரர்களை கட்டடத்திற்குள்ளே காணும் அற்புதத்தை நிகழ்த்தி வருகிறார். (தேவாலய சக்கரவர்த்தி மாமன்னன் இராஜராஜன், ப.68)

தமிழர்களின் வீடுகள்
தமிழக மக்கள் வசிக்கும் வீடுகள் பல வகையானது, ஏன் விசித்திரமானதும்கூட. மக்கள் வாழும் இடம், அவர்கள் செய்யும் தொழில், நிலத்தின் தன்மை, சுதந்திரமான காற்று, சூரிய வெளிச்சம், இரவில் நிலவொளி போன்றவற்றால் சுகாதாரமான இவ்வீடுகள், அந்தந்த பகுதிக்கேற்ப விதவிதமாக அமைந்துவிடுகிறது. பட்டு நெசவுத்தொழிலை மேற்கொள்ளும் சௌராஸ்டிர  மக்களின் வீடுகளோ, சிகடா போட்டு பட்டுப்புடவைகளை நெய்யும் தறிகளுக்கேற்ற நீண்ட வீடுகளாக அமைந்துள்ளது. தஞ்சை பகுதியில் குடிசையில் வாழும் மக்களோ, ஆற்றுப்படுகையில் கிடைக்கும் வண்டல் மண்ணான களிமண்ணைக் கொண்டு வீட்டைக் கட்டி, அதனை சாணமிட்டு மெழுகி, தென்னங்கீற்று கூரையுடன் நிம்மதியாக வாழ்கின்றனர். தென்னங்கீற்றால் ஆன கூரையின் மேல் உள்ள சிறிய வெண் படலம், கோடை கால வெயிலை திருப்பி விசிறி அடித்து வீட்டினுள்ளே குளிர்ச்சியை உண்டு பண்ணுகிறது. மழைக் காலத்திலோ தண்ணீரை வெகு விரைவில் வெளியேற்றி வீட்டினுள் ஒரு கதகதப்பான வெட்பத்தை உட்செலுத்திவிடுகிறது. (தட்சிணசித்ராவில் தமிழக வீடுகள், ப.290)

தோற்றம் பின்னுள்ள உண்மைகள் : தேனுகாவின் கலை இலக்கியப் படைப்புகள்
பதிப்பகம் மதி நிலையம், 2/3, நான்காவது தெரு, கோபாலபுரம், சென்னை 600 086
தொலைபேசி : 044-28111506
ஆண்டு : 2012

21 August 2016

செவ்வியல் நூல்கள் 41 : பொன்மொழிகள் : முனைவர் இரெ.குமரன்

முனைவர் ரெ.குமரன் (களப்பாள் குமரன்) அவர்களின் செவ்வியல் நூல்கள் 41 : பொன்மொழிகள் அண்மையில் நான் படித்த சங்க இலக்கியம் தொடர்பான மற்றொரு நூல்.  41 செவ்வியல் நூல்களிலிருந்து குறிப்பிடத்தக்க சில வரிகளைத தெரிவு செய்து, சங்க இலக்கியங்களின் மேற்கோள் அடிகளுடன் பொருத்தமான தலைப்பிட்டுத் தந்துள்ளார் நூலாசிரியர். நன்னெறிக்கருத்துகள் தொடங்கி அகம் புறம் என அனைத்து நிலையிலான பொருண்மைகளும் அவற்றில் காணப் படுகின்றன. அவர் கூறும் 41 செல்வியல் நூல்களையும் அவற்றில் காணும் சில பொன்மொழிகளையும் காண்போம்.    

தொல்காப்பியம், எட்டுத்தொகை (நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு), பத்துப்பாட்டு (திருமுருகாற்றுப்படை, பொருநராற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக்காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப்பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம்), பதினென்கீழ்க்கணக்கு (நாலடியார், நான்மணிக்கடிகை, இன்னாநாற்பது, இனியவைநாற்பது, கார்நாற்பது, களவழிநாற்பது, ஐந்திணைஐம்பது, ஐந்திணை எழுபது, திணைமொழிஐம்பது, திணைமாலை நூற்றைம்பது, பழமொழி, சிறுபஞ்சமூலம் திருக்குறள், திரிகடுகம், ஆசாரக்கோவை, முதுமொழிக்காஞ்சி, ஏலாதி, கைந்நிலை), சிலப்பதிகாரம், மணிமேகலை, முத்தொள்ளாயிரம், இறையனார் களவியல்  ஆகிய 41 நூல்களை செம்மொழி நூல்களாகக் குறிப்பிட்டுள்ளார். இவர் அகம், அச்சம், அரசன், அன்புடைமை, ஊழ்வினை, கனவு, போற்றுதல், வீரம் என்பவை போன்ற 55 தலைப்புகளில் பொன்மொழிகளைத் தந்துள்ளார். ஒரே பொருளில் பல செய்திகளை எளிதாகப் புரியும் வகையில் உட்தலைப்பிட்டு  நூலாசிரியர் தந்துள்ள விதம் பாராட்டும் வகையில் அமைந்துள்ளது. நூலின் நிறைவுப்பகுதியில் (பக்.236-256) அருஞ்சொற்பொருள் அகர நிரல் தரப்பட்டுள்ளது. முக்கியமான பல சொற்களுக்கு பொருள் தரும் வகையில் சிறப்பான வகையில் இந்நிரல் காணப்படுகிறது. 

அகம் 
மக்கள் நுதலிய அகன் ஐந்திணையும் 
சுட்டி ஒருவர் பெயர் கொளப் பெறாஅர் (தொல்.பொ.1: 54)
அகத்திணை மாந்தர்கள் :  மக்களின் ஒழுக்கலாறுகளைக் கூறுமி அகம் சார்ந்த ஐந்திணைப் பாடல்களில் இயற் பெயர் சுட்டி எவரும் குறிக்கப் பெறார். (ப.10)

அன்புடைமை 
யாதும் ஊரே யாவரும் கேளிர்  (கணியன் பூங்குன்றன், புறநா.192: 1)
எம் ஊரும் எம் மக்களும்;எவ்வூரும் எம் ஊரே, எல்லா மக்களும் எம் உறவினரே.  (ப.52)

இயற்கை 
பிறந்தார் மூத்தார் பிணி நோய் உற்றார்
இறந்தார் என்கை இயல்பே  (சீத்தலைச்சாத்தனார், மணி.24.103, 104)
இவ்வுலகில் பிறந்தா தனைவரும் மூப்புற்றார், நோயுற்றார், இறந்தார் என்று சொல்லப்படுவது இயல்பான நிகழ்வே.  (ப.71)

கனவு
நனவின் வாயே போலத் துஞ்சுநர்க்
கனவு ஆண்ட மருட்டலும் உண்டே... (கபிலர், அக.158: 10,11)
நனவில் தோன்றும் உண்மை நிகழ்வுகள் போன்று, உறங்குவோர் கனவிலும் நிகழ்வுகள் உண்மையெனத் தோற்றி மயக்கவும் கூறும்.  (ப.110)

கொடுங்கோன்மை
அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்று ஆவதூஉம்  (இளங்கோவடிகள், சிலப்.பதி.55)
அரசியலில் தவறிழைத்தோர்க்கு அறமே கூற்றாக அமையும்.  (ப.131)

சுற்றம்

உப்பு இலிப் புற்கை உயிர்போல் கிளைஞர் மாட்டு

எக் கலத்தானும் இனிது  (சமண முனிவர்கள், நாலடி.21: 6: 3,4)

தன்னை உயிரைப் போல நேசிக்கின்ற உறவினர் இடும் உப்பில்லாத புல்லரிசிக் கூழ் எந்தப் பாத்திரத்தில் கிடைப்பதாயினும் அது இனிமை உடையதாம்.  (ப.156)

நிலையாமை
வைகல் தோறும் இன்பமும் இளமையும்
எய் கணை நிழலின் கழியும் இவ் உலகத்து (......நற்.46: 1,2)
வில்லினின்று எய்யப்படும் அம்பின் நிழல் எப்படி மறையுமோ அப்படி இவ்வுலகத்தில் நாள்தோறும் இன்பமும் இளமையும் விரைந்து கழியும்.  (ப.175)

முப்பொருள் விளக்கம் : தி.மு.சுவாமிநாத உபாத்தியாயர்

தமிழுக்கும் சைவத்திற்கும் தொண்டாற்றிய திருக்களர் மு.சுவாமிநாத உபாத்தியாயர் 1911இல் எழுதிய முப்பொருள் விளக்கம் என்னும் நூலினை ரெ.குமரன் தற்போது மறுபதிப்பாக வெளியிட்டுள்ளார். இந்நூலில் பசு மகிமை, விபூதி மகிமை, உருத்திராக்க மகிமை சிறப்பாக ஆராயப்பட்டுள்ளது. நூறாண்டுகளுக்கு முன்புவெளியான இந்நூலைப் பதிப்பித்து ஓர் அரிய பணியை நிறைவேற்றியுள்ளார். தொடர்ந்து களப்பாள் சேத்திர விளக்கம் மற்றும் சைவ சமயமும் தமிழ்ப்பாடையும் என்னும் இரு நூல்களை மறுபதிப்பாக்கும் முயற்சியினை மேற்கொண்டுள்ளார். நூல்கள் மறுபதிப்பாக்க முயற்சிக்கு பொருள் உதவி செய்ய விரும்புவோர் அவரைத் தொடர்பு கொள்ள வேண்டுகிறேன்.

41 செவ்வியல் நூல்களில் கூறப்பட்டுள்ள கருத்துகளை எளிமைப்படுத்தித் தந்துள்ள அவரைப் பாராட்டுவோம். அரிய நூல்களை மறுபதிப்பாக்கும் அவருடைய முயற்சிக்குக் கைகொடுப்போம். அதற்கு முன்பாக வாருங்கள், இந்நூல்களை வாசிப்போம். 

செவ்வியல் நூல்கள் - 41 பொன்மொழிகள்  
நூலாசிரியர் : முனைவர் இரெ.குமரன் (பேசி 9443340426)
மின்னஞ்சல் kalappiran@gmail.com
பதிப்பகம் : கவின் பதிப்பகம், 18/17 காத்தூன் நகர், மூன்றாம் தெரு,
நாஞ்சிக்கோட்டை சாலை, தஞ்சாவூர் 613 006 (பேசி 9962721280)
பதிப்பாண்டு  : 2016

இவரது பிற நூல்களை பின்வரும் இணைப்பில் வாசிக்கலாம் :
சங்க இலக்கியம் அறிவோம் மற்றும் அல்லித்தீவு   


16 August 2016

தமிழ்ப் பல்கலைக்கழகப் பணியில் 35ஆம் ஆண்டு: 800+ பதிவுகள், 29 கண்டுபிடிப்புகள்

தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் 16 ஆகஸ்டு 1982இல் பணியில் சேர்ந்து 34 வருடங்களை நிறைவு செய்து இன்று (16 ஆகஸ்டு 2016) 35ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறேன். தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் கிட்டத்தட்ட மூன்று மகாமகங்கள் பணியாற்றிய நிலையில் பல்துறையிலான கட்டுரைகள் உள்ளிட்ட 800க்கும் மேற்பட்ட பதிவுகளைப் பகிர்வதில் மகிழ்கிறேன்.

தனியார் நிறுவனங்களில் சென்னை (25.7.1979-11.9.1979 இன்டர்னேஷனல் ஓர் அண்ட் பெர்டிலைசர் இந்தியா பிரைவேட் லிட், சுருக்கெழுத்தர்), தஞ்சாவூர் (26.9.1979-4.8.1980 பார்ம் புராடக்ட்ஸ் பிரைவேட் லிட், தஞ்சாவூர், சுருக்கெழுத்துத்தட்டச்சர்), சென்னை (20.8.1980-16.11.1980 லாய்டு இன்சுலேசன்ஸ் இந்தியா பிரைவேட் லிட், சுருக்கெழுத்தர்), கோயம்புத்தூர் (17.11.1980-15.8.1982 டி ஸ்டேன்ஸ் அண்ட் கம்பெனி லிட், தட்டச்சர் எழுத்தர்) ஆகிய இடங்களில் பணியாற்றிவிட்டு, தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் தட்டச்சுச் சுருக்கெழுத்தாளராக பணியில் (பணியாளர் எண்.36) சேர்ந்து, பல துறைகளில் அங்கு பணியாற்றினேன்.

என்னை பௌத்தம் மற்றும் சமணம் (57), பிற துறைகள் (63), சிறுகதைகள் (40) தமிழ் விக்கிபீடியா (297), ஆங்கில விக்கிபீடியா (104) சோழ நாட்டில் பௌத்தம் (75), முனைவர் ஜம்புலிங்கம் (128), கண்டுபிடிப்பு பற்றிய நாளிதழ் செய்திகள் (152) என்ற நிலையில் 800க்கு மேற்பட்ட பதிவுகள்/கட்டுரைகள் எழுதவும், புத்தர் (16) மற்றும் சமணர் (13) சிலைகளைக் கண்டுபிடிக்கவும் களம் அமைத்துத் தந்த தமிழ்ப்பல்கலைக் கழகத்திற்கு என் மனமார்ந்த நன்றி.


தமிழ்ப்பல்கலைக்கழகத் துணைவேந்தர் முனைவர் சி.பாலசுப்பிரமணியன் (1989-1992) அவர்களின் நேர்முக உதவியாளராக (புகைப்படம் :16.8.1991)


முதல் ஆய்வுக்கட்டுரை வெளியான இதழ் : தமிழ்க்கலை. மார்ச் 1994


முதல் ஆங்கிலக்கட்டுரை வெளியான இதழ் : Tamil Civilization. 1998


முதல் பேட்டி தமிழ் நாளிதழ் : தினமணி


முதல் பேட்டி ஆங்கில நாளிதழ் : Times of India


முதல் அணிந்துரை : மர்மவீரன் ராஜராஜசோழன், 2005

முதல் கண்டுபிடிப்பு செய்தி : தினமலர், 17.6.1999


முதல் சிறுகதை : குங்குமம், 9-15 சூலை 1993
------------------------------------------------------------------------------
நன்றி: வெளியிட்ட இதழ்கள்,
சக ஆய்வாளர்கள், அறிஞர்கள், குடும்பத்தார்
------------------------------------------------------------------------------

23.5.2026இல் மேம்படுத்தப்பட்டது.

06 August 2016

பழையாறை சோமநாதர் கோயில்

பழையாறை சோமநாதர் கோயிலுக்கு கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக தனியாகவும், நண்பர்களோடும் பல முறை சென்றுள்ளேன். ஆரம்பத்தில் இக்கோயிலைப் பார்த்தபோது இடிபாடுற்ற நிலையில் உள்ளே செல்வதே சிரமமாக இருந்தது. 29 ஜனவரி 2016இல் குடமுழுக்கு நாளன்று சென்றபோது புதிய உலகிற்குச் சென்றதைப் போல மிகவும் அருமையாகக் காட்சியளித்தது கோயில்.   

இக்கோயிலைப் பற்றி அறிய சில நூற்றாண்டுகளுக்கு முந்தைய வரலாற்றைப் பார்ப்போம். ஆறை, பழைசை, மழபாடி, பழையாறு என்ற பெயர்ககௌல்லாம் பழையாறைக்குரிய பண்டைப்பெயர்களாகும் என்றும், உறையூரைச் சோழர்கள் அரசியல் தலைநகராகக் கொண்டாலும் தங்கள் வாழ்விடமாகத் தேர்வு செய்தது பழையாறையே என்றும், இன்றைக்கு 1500 ஆண்டுகளுக்கு முன் நிறுவப்பெற்ற அவ்வூர் சோழப்ரேரசர்கள் ஆட்சி செய்த 430 ஆண்டுகள் வரலாற்றில் மிக முக்கியத்துவம் பெற்ற பெருநகராக விளங்கியதென்றும்,  ஈடு இணையற்ற அந்நகரம் பிற்காலத்தில் பழையார், பட்டீச்சரம், திருச்சத்திமுற்றம் அரிச்சத்நதிரபுறம், பாற்குளம், முழையூர், இராமநாதன் கோயில், சோழன் மாளிகை, தாராசுரம், திருமத்திடி, கோணப்பெருமாள்கோயில், ஆரியப்படையூர், பம்பப்படையூர், புதுப்படையூர், மணப்படையூர், நாதன் கோயில், உடையாளூர், இராசேந்திரன்பேட்டை எனப் பல சிறு கிராமங்களாகப் பிரிந்து கும்பகோணம் என்னும் நகரத்திற்கு வளம் சேர்த்து நிற்கின்றன என்றும், விஜயலாய சோழன் முதல் சோழப்பேரரசர்கள் இளமையிலிருந்து முதுமைக்காலம் வரை வாழ்ந்த மண் என்றும், கோவணக்கள்வனாக வந்த சிவபெருமானின் முன்பு தராசில் தன் மனைவி, மகனுடன் ஏறித் தன்னையே அவருக்கு அர்ப்பணித்து, அத்தட்டே விமானமாகச் செல்ல சிவபதம் பெற்ற அமர்நீதி நாயனார் பிறந்து வாழ்ந்த இடம் என்றும் வரலாற்றறிஞர் முனைவர் குடவாயில் பாலசுப்பிரமணியன் பழையாறைக்குப் புகழாரம் சூட்டுகிறார்.

பழையாறை நகரிலும் அப்பகுதியைச் சுற்றிலும் வரலாற்றுசிறப்புமிக்க கோயில்கள் காணப்படுகின்றன. பார்மகிழ வாழும் பழையாறை ஊர் மேவும் சோமகலா நாயகி சேர் சோமேசா என்று பழையாறையின் பெருமையை உமாபதி சிவாச்சாரியார் எடுத்துக்கூறுகின்றார். திருநாவுக்கரசரால் பாடப்பெற்ற இத்தலம் தஞ்சாவூர் மாவட்டத்தில் கும்பகோணம் வட்டத்தில் அமைந்துள்ளது. காவிரியின் தென்கரையில் அமைந்துள்ள 24ஆவது தலம் என்னும் பெருமையையுடையது.  

இவ்வாறான பெருமைகளைக் கொண்ட பழையாறையில் அமைந்துள்ள சோமநாதர் கோயிலின் முகப்பில் பழமை மாறாத இடிபாடுற்ற ராஜகோபுரம் காணப்படுகிறது. அக்கோபுரத்தினை உள்ளது உள்ளவாறே பாதுகாத்து அப்படியே வைத்துள்ளதைப் பார்க்கும்போது இன்னும் மன நிறைவு ஏற்பட்டது.
பழமை போற்றும் வாயில் கோபுரம்
வாயில் கோபுரத்தில் யாளி சிற்பங்கள்

பழமை போற்றும் வாயில் கோபுரம் வழி உள்ளே செல்லல்

அக்கோபுரத்தினை அடுத்து உள்ளே செல்லும்போது பலிபீடமும், நந்தி மண்டபமும் காணப்படுகின்றன.
வலப்புறம் இக்கோயிலுக்கான இறைவியான சோமகமலாம்பிகை சன்னதி உள்ளது. 


அம்மன் சன்னதி

அம்மன் சன்னதியில் உள்ள சிற்பங்கள்
அம்மன் சன்னதியில் உள்ள சிற்பங்கள்
அம்மன் சன்னதியில் உள்ள சிற்பங்கள்
பலிபீடம், நந்தியை அம்மன் சன்னதியைக் கடந்து உள்ளே சென்றால் மூன்று தளங்களைக் கொண்ட புதிய ராஜகோபுரம் காணப்படுகிறது. 

அதற்கு அடுத்து உயர்ந்த தளத்தில் மூலவர் சன்னதி காணப்படுகிறது. அச்சன்னதி முன்மண்டபம், அர்த்தமண்டபம், கருவறை ஆகியவற்றைக் கொண்டு அமைந்துள்ளது. மூலவர் சன்னதிக்கு உயர்ந்த தளத்தில் படியேறி உள்ளே செல்லும்போது தாராசுரம் ஐராவதீசுவரர் கோயிலில் காணப்படும் ராஜகம்பீர மண்டபத்தைப் போல் உள்ளது. யானைகளும், குதிரைகளும் இழுத்துச்செல்லும் நிலையில் தேர் போன்ற அமைப்பினைக் காணமுடிகிறது. 
குடமுழுக்கு கண்ட மூலவர் சன்னதி
மண்டபத்தில் விநாயகர், இராவணன் கயிலை மலையைத் தூக்கும் நிலையில் சிவன் காணப்படுகின்றனர். உள் மண்டபத்தில் சூரியன், சந்திரன், ஞானசம்பந்தர், நாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர், சேக்கிழார், மங்கையர்க்கரசியார் சிற்பங்கள் காணப்படுகின்றன. கருவறையில் மூலவர் லிங்கத்திருமேனியாக உள்ளார். 
குடமுழுக்கிற்கு முன் விமானம்
குடமுழுக்கு நாளில் விமானம்
யானையும் தேரும் இழுத்துச்செல்லும் தேர் வடிவில் அமைந்துள்ள மண்டபத்துடன் கூடிய மூலவர் சன்னதி


அழகிய விமானத்துடன் கூடிய கருவறையைச் சுற்றி வரும்போது கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி, உமையொருபாகர்,பிரம்மா காணப்படுகின்றனர்.  திருச்சுற்றில் விநாயகர், வள்ளி தெய்வானையுடன் கூடிய சுப்பிரமணியர், சண்டிகேசுவரர், நவக்கிரக சன்னதிகள் காணப்படுகின்றன. 
அனைத்து சன்னதிகளையும் பார்த்துவிட்டு வெளியே வரும்போது மனதிலுள்ள சுமை குறைந்தது போல இருந்தது. பல்லாண்டுகளாக புதர் மண்டிக்கிடந்த, புல் பூண்டுகளுடன் காணப்பட்ட கோயில் வளாகம் அழகான நிலையில் காட்சியளித்ததைப் பார்க்கும்போது என்ன புண்ணியம் செய்தனை நெஞ்சமே என்ற நாவுக்கரசரின் பாடல் அடிகள் மனதில் ஒலிப்பதை உணரமுடிந்தது. கோயிலுக்குச் சென்றுவரும் அனைவரும் இவ்வாறே உணர்ந்திருப்பர்.