23 June 2016

தஞ்சாவூர் நிசும்பசூதனி கோயில் குடமுழுக்கு

தஞ்சாவூரில் அமைந்துள்ள கோயில்களில் முக்கியமான இடத்தைப் பெறுவது நிசும்பசூதனி கோயில். வடபத்ர காளி என்றும், ராகுகால காளி என்றும் இவர் அழைக்கப்படுகிறார். தஞ்சாவூர் கீழவாசல் பூமால் ராவுத்தர் கோயில் தெருவில் பூமால் ராவுத்தர் கோயிலுக்கு அருகே இக்கோயில் உள்ளது.

அமைப்பு
கருவறையில் அம்பிகை காணப்படுகிறார். அண்மையில் நடைபெற்ற திருப்பணியின்போது புதிதாக முன் மண்டபம் கட்டப்பெற்று கோயில் புதுப்பொலிவினைப் பெற்றுள்ளது. கருவறையின் மேல் புதுப்பிக்கப்பட்ட விமானம் கோயிலுக்கு அழகினைத் தருகிறது. இத்திருப்பணியின் மூலமாக கோயில் முழுவதுமே புதிய வடிவம் பெற்று காட்சியளிக்கிறது.


"சும்பன், நிசும்பன் என்ற அரக்கர்களை அழித்து வெற்றிவாகை சூடிய நிசும்பசூதனி என்ற காளிதேவியை அங்கு (தஞ்சை நகரில்) பிரதிஷ்டை செய்தான். தேவர்களாலும், அசுரர்களாலும் பூஜிக்கப்பட்ட பாதங்களையுடைய அத்தேவியின் அருளால், நான்கு கடல்கள் ஆகிய ஆடைய அணிந்து ஒளி வீசுகின்ற பூமியை, ஒரு மாலையை அணிவது போலச் சுலபமாக ஆண்டுவந்தான்" என்னும் திருவாலங்காட்டுச் செப்பேட்டு வரிகளால் தஞ்சை நகரில் சோழர் ஆட்சி மலரும் போதே நிசும்பசூதனியாம் தேவியின் திருக்கோயிலும் எழுந்தது என்று வரலாற்றறிஞர் குடவாயில் பாலசுப்பிரமணியம் (தஞ்சாவூர், ப.22) கூறுகிறார். 


காளியின் திருவுருவம்
காளியின் திருவுருவத்தை அவர் பின்வருமாறு கூறுகிறார். "ஆறு அடி உயரத்திற்கும் மேலுள்ள இவர் அமர்ந்த நிலையில் காணப்படுகிறாள். பல கரங்கள். அக்கரங்களில் பல படைக்கலன்கள். தலையில் கேசம் தீச்சுடர் போல் மேலே எழுகிறது. முகத்தில் ஓர் உறுதி. அசுரப் பூச்சிகளை அழிக்க வேண்டும் என்னும் சீற்றம். வலது காதில் பிரேத குண்டலம். இடக்காதில் பெரிய குழை. சதை வற்றிய உடல். அவள் உடலில் சதையேயில்லை. வெறும் எலும்புதான். ஆயினும் திண்மையான நீண்டு தொங்கும் மார்பகங்கள். அவற்றைச் சுற்றிலும் பாம்பு கச்சாகச் சுழல்கிறது. மண்டை ஓடுகள் பூணூலாக அவள் உடலில் திகழ்கின்றன. 
புகைப்படம் நன்றி : குடவாயில் பாலசுப்ரமணியன், தஞ்சாவூர்
எட்டுக் கரங்கள். அவை சூலம், வில், மணி, கத்தி, பாசம், கேடயம், கபாலம் தரித்துள்ளன. ஓர் இடக்கரம் காலின் கீழ் கிடக்கும் அசுரரைச் சுட்டுகிறது. அவளது வலது அடி துண்டிக்கப்பட்ட ஒரு தலையின்மீது ஊன்றியுள்ளது. அந்தத் தலையே பெரிதாக உள்ளது.  அதன் மீது ஊன்றியுள்ள  அவளது காலில், எலும்பாக இருந்தாலும், அழுத்தும் வலிமையைக் காணலாம். அவளது இடக்காலை அசைத்துக் கிடத்தியுள்ளாள். அவ்விருக்கையின் கீழ் நான்கு அசுரர்கள் சிக்கித் தவிக்கின்றார்கள். மூச்சுத் திணறுகிறார்கள். ஓடுகிறார்கள். என்ன பெருமிதமான சிற்பம். மயிர்க்கூச்செறியும் அமைப்பு. சண்டன், முண்டன், சும்பன், நிசும்பன் என்னும் அசுரர்கள் நால்வரும் வதைபடும் காட்சியைக் காணக் கண்கோடி வேண்டும். தீமையை அழித்து அடியவர்களுக்கு அன்னை அருளமுது அளிக்கின்றாளோ எனக் கருதுமாறு கம்பீரமாக அமர்ந்துள்ளாள். இதனை ஒத்ததொரு வடிவம் தமிழகத்தில் வேறு எங்கும் கிடையாது. மத்தியப் பிரதேசத்தில் இதே வடிவில் அன்னை எலும்புருவில் காட்சி அளிக்கும் மற்றொரு சிற்பம் இருப்பதாகச் சிற்பவியல் வல்லுநர்கள் கூறுகிறார்கள். இவள்தான் விஜயலாயன் வடித்த நிசும்பசூதனி".  (தஞ்சாவூர், ப.24)

எங்கும் காணக்கிடைக்காத கோலத்தில் பக்தர்களுக்கு அருள் பாலிக்கும் வகையில் அமைந்துள்ள தேவியைப் பார்க்கப் பார்க்க மனம் நிறைவடையும். சன்னதியில் சிறிது நேரம் நின்று தேவியைப் பார்த்தாலே மன மாசுக்கள் அகன்று மனத்தூய்மை அடைவதை உணரமுடியும். 


யாகசாலை முகப்பு

யாகசாலை 


அலங்கரிக்கப்பட்ட உற்சவமூர்த்திகள்

 

குடமுழுக்கு நிகழ்வுகள்
குடமுழுக்கு காணும் கோயிலின் வளாகம்

கோயில் முகப்பு
குடமுழுக்கு காணும் பக்தர்கள்
இக்கோயிலின் குடமுழுக்கு 23 சூன் 2016 காலை சிறப்பாக நடைபெற்றது. அதிக எண்ணிக்கையிலான பக்தர்கள் விழாவில் கலந்துகொண்டு நிகழ்வினை மன நிறைவாகக் கண்டுகளித்தனர். 

நன்றி  
நிசும்பசூதனி, தஞ்சையம்பதி வலைப்பூ
தினமலர் கோயில்கள்
குடவாயில் பாலசுப்ரமணியன், தஞ்சாவூர்,  அஞ்சனா பதிப்பகம், தஞ்சாவூர், 1997

18 June 2016

உமாமகேசுவரம் : கரந்தை ஜெயக்குமார், கரந்தை சரவணன்

தன்னலங் கருதாப் பொதுநலத் தொண்டர்
தமிழ்ப்புல வோர்கள் தம்பெருந் தோழர்
எண்ணில் சிறார்க்கு கண்ணருள் அன்னை
உடல்பொருள் உயிரெல்லாம் உரிமையாக்கித்
தமிழ்த்தொண் டாற்றிய சங்கத் தலைவர்
செந்தமிழ்ப் புரவலர் தமிழவேள் த.வே.உமாமகேசுவரனார்

இத்தகு பெருமையுடைய மாமனிதரைப் பற்றிய அரிய பதிவை வலைப்பூவில் வரலாறு படைத்து வரும் கரந்தை ஜெயக்குமாரும், வலைப்பூவில் எழுத ஆரம்பித்துள்ள கரந்தை சரவணனும் இணைந்து தமிழ்கூர் நல்லுலகிற்காக அளித்துள்ளார்கள். 

நன்றிக்கடன் என்ற சொல்லுக்கு உரிய பொருளாக இந்நூலைக் கொள்ளலாம். தாம் பணியாற்றும் நிறுவனத்திற்கு அடித்தளமாக விளங்கிய தமிழவேளின் வரலாற்றை, பல ஆதாரங்களைத் தேடிப் பிடித்து, நுணுக்கமாக ஆராய்ந்து படைத்துள்ள விதம் பாராட்டத்தக்கதாகும். மாபெரும் தமிழறிஞரின் வரலாற்றை வளர்ந்துவரும் தமிழ் ஆர்வலர்கள் நமக்கு அளித்துள்ள விதம் நம்மை வியக்க வைப்பதைப் படிக்கும் போது உணரமுடியும்.   வாருங்கள் நூலைப் படிப்போம்.

"நாங்கள் பயின்ற சங்கம், எங்களை வளர்த்த சங்கம், எங்களுக்கு வாழ்வளித்த சங்கம். இத்தகு சங்கத்திற்கு, இதுநாள் வரை நாங்கள் என்ன செய்திருக்கிறோம்? எங்களால் என்ன செய்ய இயலும்? எண்ணிப் பார்த்தோம். சங்கம் பற்றி எழுதுவதைவிட, சங்கத்தின் புகழினைப் பறைசாற்றுவதைவிட வேறு என்ன, எங்களால் செய்ய இயலும்? தமிழின் இழந்த பெருமைகளை மீட்டெடுக்க, தமிழவேள் ஆற்றிய அருந்தமிழ்ப் பணிகளை எங்களால் இயன்றவரை ஏட்டில் எழுத முற்படுகின்றோம்" என்று நன்றியுரையில் கூறும் நூலாசிரியர்கள், இந்நூலின் மூலமாக தமிழுக்கும், தமிழறிஞருக்கும், கரந்தைத் தமிழ்ச் சங்கத்திற்கும் பெருமையினைச் சேர்த்துள்ளார்கள். ஓர் அரிய முயற்சியில் களமிறங்கி வெற்றி பெற்றுள்ள அவர்களுக்கு நாம் நன்றி கூறுவோம். அவர்களுடைய நூலிலிருந்து உமாமகேசுவரனாரின் பெருமைகள் சிலவற்றைக் காண்போம்.

உமாமகேசுவரனாரின் திருவுருவம்
"சிவமணக்கும் இன்சொல், உருமணக்கும் திருநீறு, இயலருள் ஒழுகும் கண்கள், அருள் மணக்கும் திருநோக்கு, இளநகை செவ்வாய், சொற்பொறுக்கும் செவிகள், வீரவுரை நவிலும் நாக்கு, செம்பாகத் தமிழ் பேசிச் சிரிப்புக் காட்டும் முகம், எடுப்பான திருவுருவம் உடையவர் உமாமகேசுவரனார்." (ப.12)

அரிய குணங்கள்
"பெயர்ப் பலகைக் கூடத் தொங்கவிடாமல், ஏறத்தாழ 32 ஆண்டுகள் திறம்பட வழக்கறிஞராகப் பணியாற்றியவர். பணத்தைவிட பேரும் புகழும் அடையவேண்டும் என்ற ஆர்வம், இடையறா உழைப்பு, உண்மைக்காகவும், நேர்மைக்காகவும் மட்டுமே வாதிடும் உயரிய குணம். அச்சம் என்பதை என்னவென்றே அறியாத உள்ளம் இவையே வழக்கறிஞர் உமாமகேசுவரனாரின் அரிய பண்புகள்." (ப.13)

சங்க நூலகம்
சங்கம் தொடங்கப்பெற்ற முதலாண்டிலேயே சங்கத்திற்கென்று தனியொரு நூலகம் அமைக்கும் பணியைத் தொடங்கியவர். (ப.17)

நீராருங் கடலுடுத்த...
கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் விழாக்களை தமிழ்ப் பெருமையினை பறைசாற்றும், ஓர் இனிய பாட்டுடன் தொடங்கும் எண்ணம் கொண்டு, அவருடைய உள்ளத்தை உருக்கிய மனோன்மணீயம் சுந்தரம் அவர்களின் நீராருங் கடலுடுத்த என்னும் பாடல் சங்க மேடையில் ஒலிக்கச் செய்தவர். சங்கம் துவங்கிய இரண்டாம் ஆண்டிலேயே இம் முயற்சி தொடங்கப்பட்டது. (ப.23)


ஏழூர்த் திருவிழா
உமாமகேசுவரம்விள்ளை அவர்கள் வெண்ணீறும், உருத்திராட்ச மணி மாலையும், புன்முறுவலும் பூத்த பொன் மேனியராய், இடையில் கட்டிய வேட்டியும், இதன் மேல் சுற்றிய வெண்ணிற துண்டுடன், அடியார்கள் புடை சூழ, ஏழூர் முழுதும் நடந்தே செல்வார். அடியார்களை ஆங்காங்கே சமயச் சொற்பொழிவாற்றச் செய்வதோடு, தாமும் சொற்பொழிவாற்றுவார். (ப.46)

தமிழ்ப் பல்கலைக்கழகம்
கரந்தைத் தமிழ்ச்சங்கத்தின் 10ஆம் ஆண்டு விழாவின்போது (1921) "தமிழ் மொழிக்கென ஒரு தனிப் பல்கலைக்கழகம் இருக்கவேண்டுவது இன்றியமையாததென்று இக்கூட்டத்தார் துணிபுற்று, இம்முயற்சியில் ஈடுபட வேண்டுமென, தமிழ் மக்கள் அனைவரையும் கேட்டுக்கொள்வதுடன், இதனை மேற்கொண்டு செய்விக்க வேண்டுமென அரசியலாரையும் வேண்டிக்கொள்கிறார்கள் எனும் தீர்மானம் உமாமகேசுவரனால் அவர்களால் நிறைவேற்றப்பட்டது". (ப.54)


தமிழ்ப்பொழில்
பத்திரிக்கை ஒன்றினைத் தொடங்குவதற்காக 1914இல் அவரால் தொடங்கப்பெற்ற முயற்சியானது 11 ஆண்டுகளுக்குப் பின்னரே நிறைவேறியது. 1925ஆம் ஆண்டு சித்திரைத் திங்களில் தமிழ்ப்பொழில் இதழின் முதல் இதழ் அச்சிடப்பெற்றது... இதழாசிரியர் என்பதற்குப் பதிலாக பொழிற்றொண்டர் என்றே அச்சிடச்செய்தார். (ப.67)


காந்தியுடனான சந்திப்பு
நீதிக்கட்சியைச் சார்ந்த உயர் தலைவர்களான சர் ஏ.டி.பன்னீர்செல்வம் அவர்களும் உமாமகேசுவரனார் அவர்களும் காந்திஜியைச் சந்தித்துப் பேசிய உரையாடல் சுதேசமித்திரன் இதழில் அந்தக் காலத்திலேயே விவரமாக வெளியாகியிருந்தது.
(ப.78)

மொழிபெயர்ப்பு
தமிழ்  மொழியில் தக்க புது நூல்கள் வெளிவரவேண்டும் என்பதும், பிற மொழி நூல்களை தமிழில் மொழிபெயர்க்கவேண்டுமென்பதும் உமாமகேசுவரனாரின் நோக்கமாகும்...1921ஆம் ஆண்டிலேயே உமாமகேசுவரனாரால் தமிழ்ச்சங்கத்தின் மூலம் மொழிபெயர்க்க வேண்டிய தமிழ்ச் சொற்களைத் தேடவும், ஆக்கவும், தக்க தமிழறிஞர்கள் கூடிய ஒரு கழகம் கட்டும் பணிக்குத் தமிழ்ச் சங்கங்களையும், தமிழறிஞர்களையும் கேட்டுக்கொள்வதெனத் தீர்மானம் அனுப்பிவைத்தார்.  (ப.114)

148 பக்கங்களைக் கொண்ட இந்நூலில் உமாமகேசுவரனாரின் பன்முக ஆளுமைகளை நன்கு உணர முடிகிறது. இந்த அரிய நல்ல நூலை வாசித்து, தமிழன்னைக்குப் பெருமை சேர்த்த பெரியாரின் நினைவைப் போற்றுவோம். 

நூல் : உமாமகேசுவரம்
ஆசிரியர்கள் கரந்தை ஜெயக்குமார், கரந்தை சரவணன்
பதிப்பகம் : கரந்தை லோகநாதன் நூலாலயம், 1392, கிருஷ்ணன் கோயில் எடத்தெரு, கரந்தை, தஞ்சாவூர் 613 002
ஆண்டு : 2016
விலை : ரூ.150
--------------------------------------------------------------------------------
சோழ நாட்டில் பௌத்தம் என்ற தலைப்பிலான எனது முதல் வலைப்பூவில் 
சூன் 2016இல் வெளியான கட்டுரையைப் பின்வரும் இணைப்பில் காணலாம்.
--------------------------------------------------------------------------------
17 சூன் 2016 மாலை சேம்பர்ஸ் ஆப் காமர்ஸ் சார்பில் தஞ்சாவூர் ஞானம் விடுதியில் நடைபெற்ற நிகழ்வில் தி இந்து நாளிதழின் நடுப்பக்க ஆசிரியர் திரு சமஸ் அவர்களின் பொழிவினைக் கேட்கும் வாய்ப்பு கிடைத்தது. அரசியல் தொடங்கி பொருளாதாரம் என்ற நிலையில் பலதரப்பட்ட பொருண்மைகளில் அமைந்த அவருடைய பேச்சு அனைவரையும் ஈர்த்தது. என் எழுத்துக்கு ஊக்கம் தரும் நண்பர்களில் இவரும் ஒருவர் என்பது எனக்கு மகிழ்வினைத் தருகிறது.

 
 ------------------------------------------------------------------------------

11 June 2016

உறங்கச்செல்லும்முன் படிப்பதைக் குதூகலமாக்க 10 வழிகள் : ப்ரான்செஸ்கா சைமன்

எல்லாக் குழந்தைகளுக்கும் கதைகள் தேவை. கதைகளை குழந்தைகள் விரும்புவர். இருப்பினும் ஏழு வயதுக்குட்பட்ட குழந்தைகளைக் கொண்ட 2000 தாய்மார்களிடம் (என்ன? கணக்கெடுப்பில் அப்பா கிடையாதா?) அண்மையில் எடுக்கப்பட்ட ஒரு கணக்கெடுப்பின்படி 64 விழுக்காட்டினரே தங்கள் குழந்தைகளுக்கு உறங்கப்போகும் முன்பாகக் கதைகளைக் கூறுவதாகத் தெரியவந்துள்ளது. மிகுந்த மன அழுத்தம், அதிகம் களைப்படைதல் உள்ளிட்ட பல காரணங்களால் பலர் குழந்தைகள் தூங்கப்போகும் முன்பாகக் கதைகள் சொல்வதில்லை. பாதிக்கு மேற்பட்டோர் குழந்தைகளைக் கம்யூட்டர் விளையாட்டுக்களிலிருந்தும், தொலைக்காட்சியிலிருந்தும் மீட்டுக் கொண்டுவர முடியவில்லை என்று கூறியுள்ளனர்.


Mother and daughter reading
Courtesy: Guardian

நல்லது. சற்றுக் கடினமாக முயற்சி செய்யுங்கள். குழந்தைகளுக்குப் படித்துக் காட்டும் நேரமே பெற்றோரும் குழந்தைகளும் ஒரு சேர இருக்கும் நேரமாகும். நான் இதை ஒரு எழுத்தாளராக மட்டும் கூறவில்லை. வளர்ந்துவரும் மகனின் பெற்றோர் என்ற நிலையிலும் கூறுகிறேன். குழந்தைகளோடு அனுசரணையாக இருங்கள். அது மன அமைதியைத் தருவதோடு சொகுசையும் தரும். மன அழுத்தத்தைக் குறைக்கச் சிறந்த வழி 20 நிமிடங்களுக்கு மேல் ஒன்றாகச் சேர்ந்து படிப்பதேயாகும். நானும் என் கணவரும் இதனை நன்கு அனுபவித்துள்ளோம். இதனால் நாங்கள் முறைவைத்துப் படிக்க ஆரம்பித்தோம். அவர் எங்கள் மகனுக்குக் காலையில் படிப்பார். நான் மாலைப்பொழுதில் படிப்பேன்.

அவனுக்கு 11 வயது ஆகும் வரை, சொல்லப்போனால் எங்களை அவனுடைய அறையிலிருந்து விட்டு வெளியே அனுப்பும்வரை, நாங்கள் அவன் தூங்குவதற்கு முன் அவனுக்குக் கதை சொல்வோம். அவனுக்கு இப்போது வயது 24. அவன் அனுமதித்தால் இப்போதுகூட படிக்கத் தயாராக இருக்கிறேன். நான் ஒரு 'சூப்பர்' அம்மாவாக இருப்பதால் மட்டுமல்ல. அவனுக்குப் படித்துக் காட்டுவதையும், அவனோடு நாங்கள் இருப்பதையும் மிக நல்ல நேரங்களாகக் கருதியதால்தான்.

உங்கள் குழந்தைகளைப் படிக்கவைப்பதைக் குதூகலமாக ஆக்கிக்கொள்ள இதோ 10 மிகச் சிறந்த வழிகள்.

1. இளம் வயதிலேயே ஆரம்பியுங்கள்:
என் மகன் பிறந்த நான்காம் மாதத்திலேயே நான் அவனுக்காக நூல்களைத் தேட ஆரம்பித்தேன். எங்கள் இருவருக்கும் Helen Oxenbury எழுதிய Friends என்ற நூலைப் படிப்பதும், ஆடை அணிவதும், விளையாடுவதும் மிகவும் பிடிக்கும். அவனுக்கு ஏதாவது இரு நூல்களைப் படிக்க வாய்ப்பு தருவேன். பிடிக்காததை அவன் விட்டுவிடுவான். அவனுக்கு மிகவும் பிடித்தமானவை Peepo, The Baby's Catalogue. குழந்தைகளும் கருத்துக்களைக் கூற ஆர்வமாக இருக்கும். குழந்தைகளுக்கு, தனக்குப் பிடித்தவற்றைத் தெரிவிப்பதற்கான போதுமான வாய்ப்புகள் கிடைப்பதில்லை. ஆதலால் நூல்களைப் பார்ப்பதைப் பெரிதும் விரும்புகின்றன. 

2. குழந்தைகளுக்கு உங்களால் படித்துக்காட்ட இயலவில்லை என்று பணிப்பளுவைக் காரணமாகக் கூறாதீர்கள்:
இது எப்படியென்றால் குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுக்க போதுமான நேரம் இல்லை என்று சொல்வதைப் போலத்தான். அதிக நேரம் பணியாற்றுகின்றீர்களா? மிகவும் சோர்வுடன் காணப்படுகின்றீர்களா? இரவில் அதிகப் பணியா? குழந்தைகளுக்கு படுக்கை நேரத்தில்தான் படித்துக் காட்டவேண்டும் என்று எந்த சட்டமும் இல்லை. சற்று முன்கூட்டி படுக்கையைவிட்டு எழுந்திருங்கள். காலையில் குழந்தையுடன் சேர்ந்து படியுங்கள். என் கணவர் எப்போதும் பணிமுடிந்து தாமதமாக வருவார். அதனால் அவர் அவ்வாறு செய்தார்.

3. உங்கள் குழந்தைக்கு நூலக உறுப்பினர் அட்டையைப் பெற்றுக் கொடுங்கள்: 
தங்களுக்குப் பிடித்த 10 நூல்களை ஒரு வாரத்திற்கு எடுத்துச் செல்ல குழந்தைகளுக்கு வசதி உள்ளது. பின்னர் அடுத்த 10 நூல்களை எடுத்துச்செல்லலாம். இதன்மூலமாகக் குழந்தைகளுக்கு நல்லமுறையில் பொழுதை வெளியே செலவிட நல்ல வாய்ப்பு கிடைக்கிறது. மறுபடியும் அவர்களுக்கு தொடர்ந்து வாய்ப்புகளைக் கொடுங்கள். வீட்டுக்கு சில புதுமையான நூல்களை என் மகன் கொண்டு வந்தான். Tiddles என்ற சாரமற்ற ஒரு நூல் அவனுக்கு மிகவும் பிடித்திருந்தது. அதனால் என்ன? அவனுக்கு நாங்கள் அவன் விருப்பப்படி Goodnight Moon, The Very Hungry Caterpillar, Michael Rosen எழுதிய We are Going on a Bear Hunt, The Cat in the Hat, The Baby's Catalogue எழுதிய Mr Gumpy's Outing, Ahlberg எழுதிய Burglar Bill ஆகிய நூல்களை அவனுக்கு வாங்கித் தந்தோம். 

4. நீங்கள் குழந்தையாக இருந்தபோது படிக்கத் தவறிய நல்ல நூல்களைப் பற்றிச் சிந்தியுங்கள்:
இப்போது உங்களுக்கான நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது. நான் என் மகனுக்கு The Hobbit, Swallows and Amazons நூல்கள், The Wind in the Willows ஆகியவற்றைப் படித்துக் காண்பித்தேன்.

5. தங்களுக்குத் தெரியாத சொற்களைப் பற்றிக் குழந்தைகள் பீதியடைவதில்லை:
Swallows and Amazons எளிதில் புரிந்துகொள்ள இயலாத நடையில் உள்ள நூலாகும். அந்நூலில் உள்ள பல சொற்களுக்கானப் பொருள் எனக்குத் தெரியாது. பயனிலாத் தகவலைக் கொண்டிருந்த அரை பக்கத்தைப் படித்ததும் நான் என் மகனிடம் பல சொற்களைப் புரிந்துகொள்ள முடியவில்லை என்றேன். "என்னாலும்தான் புரிந்துகொள்ள முடியவில்லை. இருந்தாலும் அதனைப் படிக்கச்சொல்லிக் கேட்பதை நான் விரும்புகிறேன்" என்று என் மகன் கூறினான்.

6. தேர்ந்தெடுக்கும் வாய்ப்பினை அவர்களுக்குக் கொடுங்கள்:
குழந்தைகள் வளர வளர அவர்களுக்கு ஐந்து நூல்கள் வாங்கிக் கொடுங்கள். நீங்களும் வாசிப்பை நேசிக்க ஆரம்பிப்பீர்கள். முதலில் சில பத்திகளை உரக்கப் படியுங்கள். பின்னர் உங்கள் குழந்தையின் முடிவுக்கு விட்டுவிடுங்கள். இது ஒரு வீட்டுப்பாடம் என நினைத்துக் கொள்ளாதீர்கள். இது குதூகலம் என நினைத்துக் கொண்டாடுங்கள்.

7. படிக்கக் கற்றுக்கொள்ளவேண்டும் என்பதற்காக குழந்தைகளுக்கு எதையும் படித்துக் காட்டாமல் உங்கள் குழந்தையை நீங்கள் தண்டிக்காதீர்கள்:
படிக்க மிகவும் கடினமாக உள்ள நூல்களைத் தாமாகவே படித்துக்கொள்ள குழந்தைகள் விரும்புவர். தனியாகப் படித்துப் புரிந்துகொள்ளும் நிலையை அடைவதற்குள்ளாகவே என் மகன் Harry Potter, Kevin Crossley-Holland எழுதிய Norse Myths, Little House on the Prairie ஆகிய நூல்களை அதிகம் விரும்பினான். 

8. மாறுபட்ட அத்தியாயங்கள்:
என் மகனும் அவருடைய தந்தையும் CS Lewis எழுதிய Narnia books, Philip Pullman எழுதிய His Darm Materials ஆகிய நூல்களை சேர்ந்தே படித்தார்கள். வேகமாகப் படித்து முடிப்பதற்காக ஒரு அத்தியாயத்தை ஒருவரும் அடுத்த அத்தியாயத்தை மற்றவரும் மாறிமாறி சத்தம்போட்டுப் படித்தார்கள். அதிலுள்ள கதைகள் மிகவும் அருமையாக இருக்கும். ஒரு நாளில் ஒரு அத்தியாயத்தைப் படிப்பது என்பது இயலாத காரியம். இவ்வாறான வாசிப்பு முறையினால் என் மகனும் பதட்டமின்றி நிதானமாக வாசித்து ஒரு சிறந்த வாசகனாக வர ஊக்கம் பெற்றான். 

9. தானாகவே படிக்க ஆரம்பித்தல்:
தானாகவே படிக்க ஆரம்பித்த நிலையில் என் மகன் மற்ற நூல்களைவிட The Horrible Stories போன்ற பொதுவான கதைகளையே விரும்பினான். அவன் இது போன்ற நூல்களையே படிக்கவேண்டும் என்பதே என் விருப்பம். ஆகையால் அவனுக்கு Roald Dahl எழுதிய நூல்கள், The Magic Faraway Tree, அதிக எண்ணிக்கையில் கட்டுக்கதைகள், வியப்பூட்டும் கதைகள் போன்றவற்றைப் படித்துக் காண்பித்தேன். அவனுக்கு மகிழ்ச்சி. எனக்கும் மகிழ்ச்சி.

10. அழ முயற்சிக்கவேண்டாம்:
Tom எழுதிய Midnight Garden நூலை இப்போதுகூட படித்து முடிக்கும்போது அழாமல் இருக்கமுடியவில்லை. அழுதுகொண்டே நான் படிப்பதை என் மகன் ஏற்கவில்லை. அவனுடைய தந்தையிடம் இப்பொறுப்பைக் கொடுத்தோம். சில பக்கங்கள் படித்ததும் அவரும் அழ ஆரம்பித்தார். கதையின் முடிவை எங்கள் மகன் தெரிந்துகொண்டானா என எனக்குத் தெரியவில்லை.தமிழாக்கம் : பா.ஜம்புலிங்கம்
நன்றி : The Guardian 

(கார்டியன் இதழில் வந்த கட்டுரையின் தமிழாக்கம். மூலக்கட்டுரையைப் பின்வரும் இணைப்பில் காணலாம்) 
Ten tips to make bedtime reading fun: Francesca Simon, Guardian
--------------------------------------------------------------------------------
சோழ நாட்டில் பௌத்தம் என்ற தலைப்பிலான எனது முதல் வலைப்பூவில் சூன் 2016இல் வெளியான கட்டுரையைப் பின்வரும் இணைப்பில் காணலாம்.
--------------------------------------------------------------------------------

04 June 2016

கும்பகோணம் சப்தஸ்தானம் : தாராசுரம் ஆத்மநாதசுவாமி கோயில்

திருவையாற்றில் நடைபெறும் சப்தஸ்தான விழாவைப் பற்றி கேள்விப்பட்டுள்ளோம். கும்பகோணத்திலும் இவ்வாறான சப்தஸ்தான விழா நடைபெறுகிறது. திருவையாறு, கும்பகோணம், சக்கராப்பள்ளி, மயிலாடுதுறை, கரந்தை, நாகபட்டினம், திருநல்லூர், திருநீலக்குடி, திருக்கஞ்சனூர் உள்ளிட்ட பல இடங்களில் நடைபெறுகிறது. தஞ்சாவூர் சப்தஸ்தானம் சில ஆண்டுகளாக நடைபெறவில்லை. கும்பகோணத்தில் சப்தஸ்தான விழா அண்மையில் நடைபெற்றது.  400 ஆண்டுகளுக்கு முன்பு நாயக்கர் காலம் முதல் இந்தப் பல்லக்கு உற்சவம் நடைபெற்று வருவதாகக் கூறுகின்றனர். கும்பகோணம் சப்தஸ்தானப் பல்லக்கின் வெள்ளோட்டம் பிப்ரவரி 2016இல் நடைபெற்றது. தொடர்ந்து ஏழூர்ப் பல்லக்குத் திருவிழா ஏப்ரல் 2016இல் நடைபெற்றது. 

கும்பகோணத்தில் இவ்விழாவோடு தொடர்புடைய சப்தஸ்தானத் தலங்கள் பின்வருவன ஆகும். 
 இக்கோயில்களில் கும்பேஸ்வரர் கோயில், அமிர்தகலசநாதர் கோயில், கபர்தீஸ்வரர் கோயில், கோடீஸ்வரர் கோயில் ஆகிய நான்கு கோயில்களுக்கு அண்மையில் நடைபெற்ற மகாமகத்தின்போதும், பிற கோயில் உலாக்களின்போதும் சென்றுள்ளேன். சுவாமிமலை சுந்தரேஸ்வரர் கோயில் என்பது சுவாமிமலை முருகன் கோயிலைத்தான் குறிக்கிறது என்று தெரிவித்தனர். கும்பகோணம் சப்தஸ்தானத்தில் உள்ள இதுவரை நான் பார்க்காத தாராசுரம் ஆத்மநாதசுவாமி கோயிலுக்கும், மேலக்காவேரி கைலாசநாதர் கோயிலுக்கும் செல்லும் வாய்ப்பினை எதிர்பார்த்துக்கொண்டிருந்தேன்.  

 அந்த வாய்ப்பு 26 மே 2016 அன்று கிடைத்தது. தாராசுரத்தில் உள்ள ஐராவதேஸ்வரர் கோயில் சிற்பக்கலைக்குப் புகழ் பெற்ற கோயிலாகும். அக்கோயில் உலகப்புகழ் பெற்றதாகும். தாராசுரத்தில் ஆத்மநாதசுவாமி கோயில் எங்கிருக்கிறது என்று விசாரித்தேன். தாராசுரத்தில் உள்ள நண்பர்களே பலர் அவ்வாறாக எந்தக்கோயிலும் இல்லை என்று கூறினர். தாராசுரம் நண்பர் திரு நாகராஜனுடன் அக்கோயிலைப் பார்க்கச் சென்றேன். தாராசுரத்தில் இருந்த மற்றொரு நண்பர் சந்திரசேகர் தாராசுரம் கம்மாளத் தெருவில் காமாட்சியம்மன் கோயில் என்ற ஒரு கோயில் உள்ளது என்றும். அங்கு அண்மையில் ஏதோ விழா நடைபெற்றதாகவும் கூறினார். கோயிலைப் பற்றி விசாரித்துக்கொண்டே சென்றபோது ஒரு பெரியவர் அக்கோயில் சிவன் கோயில்தான் என்றும் காமாட்சியம்மன் கோயில் என்று சொன்னால்தான் தெரியும் என்றும் கூறினார். அவர்கள் சொன்ன அடையாளத்தை வைத்துக்கொண்டு கோயிலுக்குச் சென்றோம். 

கோயிலின் வாசலில் பந்தல்போடப்பட்டு பிரிக்கப்படும் நிலையில் இருந்தது. விசாரித்தபோது அண்மையில் நடைபெற்ற சப்தஸ்தான விழாவிற்காக போடப்பட்ட பந்தல் என்று கூறினர். கோயிலின் நுழைவாயிலில் ஆவுடையார் கோயில் காமாட்சி அம்மன் ஆலயம் என்ற பெயர்ப்பலகையைக் கண்டோம். 
நுழைவாயில்
அருகில் சுவற்றில் ஒட்டப்பட்டிருந்த ஓர் அறிவிப்பினைக் கண்டோம். அந்த அறிவிப்பில் 24.1.2016 காலை மீனாட்சி என்கிற சிவசக்தி அம்பாள் உடனுறை ஆவுடைநாதர் மற்றும் காமாட்சியம்மன் கோயில் விமானங்களுக்கான திருப்பணி தொடங்கப்படுவது பற்றி குறிப்பிடப்பட்டிருந்தது. அதே வளாகத்தில் இரு கோயில்கள் இருப்பதை அறிந்து உள்ளே சென்றோம். இக்கோயிலுக்கு வந்ததும் பட்டீஸ்வரம் கோயில் நினைவிற்கு வந்தது. பட்டீஸ்வரத்தில் ஒரே வளாகத்தில் தேனுபுரீஸ்வரர் கோயிலும், துர்க்கையம்மன் கோயிலும் அமைந்துள்ளன. முதன்மைக்கோயில் தேனுபுரீஸ்வரர் கோயில் என்றாலும் துர்க்கையம்மன் கோயில் என்றால்தான் பலருக்குத் தெரியும்.

காமாட்சியம்மன் விமானம்
கருவறையில் காமாட்சி அம்மனைக் கண்டோம். கருவறையின் எதிரே பலிபீடம், நந்தியைக் காணமுடிந்தது. கருவறை வாயிலின் இரு புறமும் துவாரபாலகிகள் காணப்பட்டனர். கருவறை திருச்சுற்றினைச் சுற்றிவந்தோம்.  விமானம் திருப்பணிக்கான ஆயத்த நிலையில் இருப்பதைக் கண்டோம்.  

காமாட்சி அம்மன் சன்னதியின் இடப்புறமாக சற்றொப்ப ஒரு முழு கோயிலாக அதே வளாகத்தில் சிவன் கோயிலைக் காணமுடிந்தது. வாயிலின் இரு புறமும் விநாயகரும், வள்ளிதெய்வானையுடன் கூடிய முருகன் காணப்பட்டனர். வாயிலைக் கடந்து உள்ளே செல்லும்போது பலிபீடம், நந்தியைக் காணமுடிந்தது. கருவறை  வாயிலின் இரு புறமும் துவாரபாலகர்கள் உள்ளனர். கருவறையில் லிங்கத்திருமேனியாக ஆவுடைநாதரைக் கண்டோம். (இவரை ஆத்மநாதசுவாமி என்றும் அழைக்கின்றனர்) மூலவர் சன்னதியின் வலப்புறம் அம்மன் சன்னதியைக் கண்டோம்.  மூலவர் சன்னதியில் உள்ளதைப் போலவே அம்மன் சன்னதியின் எதிர் புறம் பலிபீடம், நந்தியைக் கண்டோம். திருச்சுற்றில் வரும்போது மூலவர் விமானம் மற்றும் அம்மன் விமானம் திருப்பணிக்கான ஆயத்த நிலையில் இருப்பதைக் கண்டோம்.  கருவறை கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி, அடிமுடிகாணா அண்ணல், பிரம்மா, துர்க்கை இருந்தனர். திருச்சுற்றில் விநாயகர், வள்ளி தெய்வானையுடன் கூடிய சுப்பிரமணியர், லிங்க பானம், பைரவர் உள்ளிட்ட சிற்பங்கள் இருந்தன. அருகே சண்டிகேஸ்வரர் சன்னதி இருந்தது. இறைவன் இறைவி சன்னதிகள் உள்ள முன் மண்டபத்தில் நவக்கிரக சன்னதி உள்ளது. பைரவர், விநாயகர், நாகம் உள்ளிட்ட பல சிற்பங்களை அங்கு காணமுடிந்தது.
அடுத்தடுத்து உள்ள ஆத்மநாதசுவாமி, மீனாட்சியம்மன் விமானங்கள் 
(சிறிதாக உள்ளது சண்டிகேஸ்வரர் சன்னதி)

மூலவர் விமானம்
   
ஒரே வளாகத்தில் இரு கோயில்கள்
(இடது சிவன் கோயில் நுழைவாயில்)
முன் மண்டபத்தில் நவக்கிரக சன்னதி உள்ளது. பைரவர், விநாயகர், நாகம் உள்ளிட்ட பல சிற்பங்களை அங்கு காணமுடிந்தது. இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு அண்மையில் சப்தஸ்தான விழா நடைபெற்றதாகவும் அப்போது சப்தஸ்தான பல்லக்கு இக்கோயிலுக்கு வந்ததாகவும் கூறினர். 

காமாட்சி அம்மனையும், இறைவனையும், இறைவியையும் வணங்கிவிட்டு வெளியே வந்து இரு கோயில்களின் வாயில்களும் தெரியும் வகையில் இருந்த அமைப்பினைக் கண்டு புகைப்படம் எடுத்தோம். பின்னர் அங்கிருந்து மன நிறைவோடு கிளம்பினோம். வாய்ப்பு கிடைக்கும்போது கும்பகோணம் சப்தஸ்தான கோயில்களில் நாம் இதுவரை அறிந்திராத மேலக்காவேரி கைலாசநாதர் கோயிலுக்குச் செல்வோம்.

ஆகஸ்டு 2014இல் சப்தஸ்தானம் என்ற தலைப்பில் தமிழ் விக்கிபீடியாவில் நான் தொடங்கிய கட்டுரையைக் காண அழைக்கிறேன். 

சோழ நாட்டில் பௌத்தம் என்ற தலைப்பிலான எனது முதல் வலைப்பூவில் சூன் 2016இல் வெளியான கட்டுரையைப் பின்வரும் இணைப்பில் காணலாம்.
தம்ம பதம்  : ப. ராமஸ்வாமி