24 June 2017

தமிழ் மருத்துவ முறைகள் : மணி. மாறன் மற்றும் பயிற்சி மாணவர்கள்

சரசுவதி மகால் நூலகத் தமிழ்ப்பண்டிதர் நண்பர் மணி. மாறன்  (அலைபேசி 9443476597) அவர்களைத் தலைமைப் பதிப்பாசிரியராகவும், பயிற்சி மாணவர்களைக் கொண்டும் வெளியிடப்பட்ட, தமிழ் மருத்துவ முறைகள் நூல் நான் அண்மையில் வாசித்த நூலாகும். 

சித்த மருத்துவம் 
நூலின் முதற்பகுதியில் சித்த மருத்துவம் பற்றிய அறிமுகம் மிகவும் சிறப்பாகத் தரப்பட்டுள்ளது. மருந்து, சித்தர்கள், தமிழ் இலக்கியங்களில் சித்த மருத்துவம், சித்தர் காலம், கல்வெட்டுச் சான்றுகள், சல்லிய விருத்தி (அறுவை மருத்துவம்), ஆதுலர் சாலைகள் (மருத்துவ மனைகள்), சித்த மருத்துவமும் சீன மருத்துவமும், தாவரமும் மருந்தும், நாட்டு மருத்துவம், பழங்குடியினர் மருத்துவம் போன்ற பல தலைப்புகள் மூலமாக நல்லதொரு அறிமுகத்தைப் பெறமுடிகிறது. (பக்.i-xx) அவற்றில் சிலவற்றைக் காண்போம்:

உடலுக்கு வரும் துன்பத்தை உடல் நோய் என்றும் உள்ளத்திற்கு வரும் துன்பத்தை உள நோய் என்றும் குறிப்பிடுவது இன்றும் வழக்கத்தில் இருந்து வருகிறது. (ப.i)
சரித்திர ஆய்வுகளாலும், கல்தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன்தோன்றி மூத்தக்குடி என்று தமிழினத்தை அழைப்பதாலும் இந்திய மருத்துவத்திற்குள்ளும் முதன்மையாகத் தோன்றிய மருத்துவம் சித்த மருத்துவமே என்று நாம் பெருமை கொள்ளலாம். (ப.i)
இம்முறையை வகுத்தவர்கள் பதினெட்டு சித்தர்கள் என்றும், அவர்களில் முதன்மையானவர் அகத்தியர் என்ற செய்தியும் அறியலாகிறது. இதனால் சித்த மருத்துவ முறையை அகத்திய மருத்துவ முறை என்றும் கூறுவதுண்டு. (ப.ii)
தமிழக மருத்துவ மரபின் மிகச் சிறந்த தனித்தன்மை என்னவெனில் அது நாட்டு மருத்துவம் (நாட்டு வைத்தியம்), பழங்குடியினர் மருத்துவம், சித்த மற்றும் ஆயுர்வேத மருத்துவம் என்ற மூன்று வேறு பட்ட நிலைகளில் திறம்படச் செயலாற்றி வருகிறது. (ப.xv)
நமது பாட்டன் சொத்தான வேம்புக்கும் மஞ்சளுக்குமான காப்புரிமையை அயல் நாட்டினர் கோருவதன் மர்மமே நமது மருந்துகளுக்கு உள்ள மகத்துவம்தான் என்பதை இனியாவது நாம் உணர வேண்டும். (ப.xx)

37 வகை மருந்துகள்
இந்நூலில் சௌபாக்ய லேகியம், சீனக்கிருத லேகியம், ஜன்னி மாத்திரை, சஞ்சீவிக்கிருதம், அகஸ்தியர் குழம்பு, சிவனார் வேம்பு தைலம், மனமோகன சிந்தாமணி உள்ளிட்ட 37 வகையான மருந்தின் பெயர்கள் தரப்பட்டுள்ளன. ஒவ்வொன்றையும் தயாரிப்பதற்கு தேவைப்படும் பொருள்கள், செய்முறை, பிரமாணம் (அளவு), அனுமானம் (மருந்துக்குத் துணையானது), உபயோகம், பத்தியம் போன்ற அனைத்து விவரங்களும் தரப்பட்டுள்ளன.  (பக்.1-103). 


 


நூலில் உள்ள நவ மூல சஞ்சீவி தொடர்பான பக்கங்கள் (பக்.70,71)
 வைத்திய திருப்புகழ் அகராதி
146 சொற்களைக் கொண்ட தமிழ் மருத்துவ முறைகள் (வைத்திய திருப்புகழ்) அகராதி இந்நூலில் இடம் பெற்றுள்ளது.   (பக்.104-108) அதிமது-அதிமதுரம், அரசவிதி-அரச மர விதை, எருகிலை-எருக்கிலை, கடு-கடுக்காய்-கடுகு-விஷம்-நாபி, கணி-காணி, பொன்னாங்கன்னி, கற்றளை-சோற்றுக்கற்றாழை, கனினாரி-தேன், குறுவேர்-வெட்டி வேர், சவுரி-முதியாள் கூந்தல், சிற்றாதனத்த நங்கை-குன்றிமணி-சிறியாநங்கை என்பன போன்ற 146 சொற்களைக் கொண்டு இவ்வகராதி அமைந்துள்ளது. 

மூலிகை விளக்கம்
மூலிகை விளக்கம் என்ற தலைப்பில் 52 மூலிகைகளைப் பற்றிய விளக்கங்கள் அதனதன் தாவரப்பெயருடன் தரப்பட்டுள்ளன. (பக்.109-136). கசாகசாவைப் பற்றி பின்வருமாறு தரப்பட்டுள்ளது.
தாவரவியல் பெயர் :  Papaver Somniferum L; Papaveraceae
சிறு செடி இனமான இது விதைக்கவும் பாலுக்காகவும் பயிரிடப்பெறுகிறது. இதன் காயிலிருந்து வடியும் பாலே அபின் எனப்படும். இரத்தப்போக்கைக் கட்டுப்படுத்துதல், உடலுக்கு உரமூட்டுதல், திசுக்களை இறுகச் செய்தல் போன்ற மருத்துவ குணங்களை உடையது. தேங்காய்த் துவையலில் கசகசாவை சேர்த்தரைத்து உணவுடன் நெய் சேர்த்து உண்டு வந்தால் மலம் கட்டுப்படும். தாது பலம் மிகும். (ப.117)

பாராட்டத்தக்கப்பட வேண்டிய முயற்சி
8.7.2016 முதல் 28.7.2016 வரை சரசுவதி மகால் நூலகத்தில் நடைபெற்ற தமிழ்ச் சுவடியியியல் பயிலரங்கில் பயிற்சி பெற்ற மாணவர்களைக் கொண்டு பதிப்பிக்கும் முயற்சியாக ஒவ்வொரு மாணாக்கருக்கும் ஒவ்வொரு ஏடுகள் வழங்கப்பட்டு அதிலுள்ள மருத்துவக் குறிப்புகளை எழுதச் செய்து அவற்றைத் தொகுத்து, அவர்கள் எழுதியதைச் சரிபார்த்து முழு நூலாக வெளியிட்டுள்ள சரசுவதி மகால் நூலகத்தையும், இவ்வாறான ஒரு பணியை துணிவோடு மேற்கொள்ள துணைநின்ற தலைமைப்பதிப்பாசிரியர் உள்ளிட்ட அனைவரையும் பாராட்டுவோம். 

ஏட்டினை அடிப்படையாக வைத்து நூலைப் படைத்தல் என்ற நிலையில் முன்மாதிரியாக அமைந்துள்ள,  தமிழ் மருத்துவ முறைகளின் பெருமையை உணர்த்துகின்ற நூலைப் பற்றி அறிவோம், முறைகளைச் செயல்படுத்த முயற்சிப்போம், வாருங்கள். 
---------------------------------------------------------------------------------------------------
நூல் : தமிழ் மருத்துவ முறைகள்
பதிப்பாசிரியர் : தலைமைப்பதிப்பாசிரியர் திரு மணி.மாறன் மற்றும் தமிழ்ச்சுவடியியல் பயிற்சி மாணவர்கள் 
பதிப்பகம் : தஞ்சாவூர் மகாராஜா சரபோஜியின் சரசுவதி மகால் நூலகம் மற்றும் ஆய்வு மையம், தஞ்சாவூர்
ஆண்டு : 2017
விலை : ரூ.100
---------------------------------------------------------------------------------------------------

14 comments:

  1. வைத்திய திருப்புகழ் அகராதிக்காக இந்நூலை வாங்க வேண்டும் ஐயா...

    ReplyDelete
  2. அவசியம் ஒவ்வொரு வீட்டிலும் இருக்க வேண்டிய நூல்
    நன்றி ஐயா
    திரு மணிமாறன் அவர்களின் பணி போற்றுதலுக்கு உரியது
    போற்றுவோம்

    ReplyDelete
  3. அறிய நூலைக்குறித்து விடயம் தந்த முனைவர் அவர்களுக்கு நன்றி
    த.ம.4

    ReplyDelete
  4. நல்லதொரு பகிர்வு. நான் கூட மூலிகை மருத்துவத்திலும், சித்த மருத்துவத்திலும் சில பழைய நூல்கள் வைத்திருந்தேன். அவற்றை அவ்வப்போது பகிர்ப் போகிறேன் என்று ஃபேஸ்புக்கில் அறிவிப்பும் செய்தேன்! இப்போது அந்தப் புத்தகங்கள் எங்கே என்று தேடிக் கொண்டிருக்கிறேன்!!!

    தம +1

    :)))

    ReplyDelete
  5. தமிழ் மருத்துவ முறைகள் நூல் விமர்சனம் அருமை.
    மீண்டும் தமிழ் மருத்துவம் துளிர்க்க துவங்கி விட்டதே! வீடுகளில் தொலைக்காட்சி வழியாக.

    ReplyDelete
  6. நல்லதொரு புத்தக அறிமுகம்ப்பா.

    ReplyDelete
  7. வணக்கம்
    ஐயா

    நூல்பற்றி சிறப்பாக சொல்லியுள்ளீர்கள் படித்து மகிழ்ந்தேன் வாழ்த்துக்கள் ஐயா த.ம 7

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  8. துறைதோறும் துறைதோறும் தொண்டு செய்வீர் தமிழுக்கு- என்றார் பாரதிதாசன். திரு மணிமாறன் மற்றும் அவரது மாணவர்களின் முயற்சியான இந்நூலும் அதைப் பற்றிய விளக்கமான அறிமுகம் வழங்கிய தங்களின் எழுத்தும் பாரதிதாசனாரின் விருப்பத்தை நிறைவேற்றியுள்ளன என்பேன். - இராய செல்லப்பா சென்னையில் இருந்து.

    ReplyDelete
  9. சரசுவதி மகால் நூலகம் மற்றும் ஆய்வு மையத்தின் பதிப்பகச் சேவை மிகுந்த பாராட்டுக்குரியது :)

    ReplyDelete
  10. 'நல்ல புத்தக அறிமுகம். ஆனால் இந்தப் புத்தகம் வைத்தியர்களுக்கல்லவா உபயோகப்படும். பாதிக்குமேல் என்ன பொருட்கள் என்றே பெயர் தெரியாதே? ஆனாலும் புத்தக வடிவில் இருந்தால், எல்லா சித்த வைத்தியர்களுக்கும் மிகவும் உபயோகமானது.

    ReplyDelete
  11. தோட்டத்துப் பச்சிலை மகிமை யாருக்கும் தெரியவில்லையே

    ReplyDelete
  12. ஐயாவிற்கு வணக்கம்.

    புத்தக ஆசிரியருக்கும் அவர்தம் சீரிய மாணாக்கருக்கும் எனது வாழ்த்துக்களும் வணக்கங்களும்.

    எளிய மருத்துவமாக தோன்றினாலும் அதற்கான மூலப்பொருட்களும் செய்முறையும், காத்திருத்தல், பொறுமையும் மிக கடினமாக தோன்றுகின்றது.
    குறிப்பாக 70 ஆம் பக்கத்தில் உள்ள மூல பொருட்களில் பல என்ன / எங்கே கிடைக்கும் என்பது கேள்விக்குரியதாக இருக்கின்றது.
    இவை வைத்தியர்களுக்கு வேண்டுமானால் உதவலாமே தவிர சாமானியனுக்கு எந்த அளவிற்கு உதவும் என்பது தெரியவில்லை.

    பகிர்விற்கு மிக்க நன்றிகள்.

    கோ

    ReplyDelete