17 February 2018

விக்கிரம சோழனுலா : பதிப்பாசிரியர் தில்லை. கோவிந்தராஜன்

சரசுவதி மகால் நூலகம் வெளியிட்டுள்ள நூல்களில் ஒன்றான விக்கிரம சோழனுலா (பதிப்பாசிரியர் திரு கோ.தில்லை கோவிந்தராஜன்) என்னும் நூலை அண்மையில் வாசித்தேன். விக்கிர சோழனுலாவை வாசிப்போம், வாருங்கள்.

விக்கிரம சோழனுலா, விக்கிரமசோழன் (கி.பி.1118-1133), இரண்டாம் குலோத்துங்கசோழன் (கி.பி.1133-1150), இரண்டாம் ராஜராஜசோழன் (கி.பி.1146-1163) எனும் மூன்று சோழ மன்னர்களின் அவையில் அவைக்களப் புலவராக விளங்கிய ஒட்டக்கூத்தரால் பாடப்பட்டதாகும். அவர் இந்த மூன்று மன்னர்களைப் பற்றியும் மூவருலா பாடியுள்ளபோதிலும் அவற்றில் விக்கிரம சோழனுலா (கி.பி.12ஆம் நூற்றாண்டு) சிறந்ததாகப் போற்றப்படுகிறது. 
சரஸ்வதி மகால் நூலகத்தில் விக்கிரமசோழன் உலா என்ற பெயரில் இரு சுவடிகள் உள்ளதாகவும் அவற்றில் ஆசிரியர் குறிப்புகள் இல்லாமல் மூலம் மட்டுமே உள்ளதாகவும், அவை சுவடி எண்.1890இல் சொக்கநாதர் சுவாமி திருவிளையாடல் என்ற தலைப்பில் தொகுப்பட்டுள்ளதாகவும் பதிப்பாசிரியர் கூறுகிறார். (ப.56) இந்நூலில் உலாவிற்கான விளக்கம், உலாவிற்கான வேறு பெயர்கள், உலாவிற்கான ஊர்தி, அமைப்பு முறைகள், உலாவினைக் காணும் பெண்களின் இயல்பு நிலைகள், வளர்ச்சி நிலைகள் எனவும், சங்க, சமய, பிற்கால இலக்கியங்கள், ரகுவம்சம்சம் ஆகியவற்றில் காணும்உலாவின் வளர்ச்சி நிலைகள் தரப்பட்டுள்ளன. புலவரைப் பற்றிய குறிப்புகளும், பருவப் பெண்களின் வயது வளர்ச்சியைப் பற்றிய குறிப்புகளும் தொகுத்துரைக்கப்பட்டுள்ளன.  உலாவில் காணும் சோழ அரசர்களின் மரபு பட்டியலுடன் இதுவரை வந்துள்ள சோழர்களின் செப்பேடுகளின் துணை கொண்டு ஒப்பாய்வு செய்யப்பட்டுள்ளது. 

ஒட்டக்கூத்தரால் இயற்றப்பட்ட விக்கிரம சோழனுலா 343 கண்ணிகளைக் (இரண்டு வரி) கொண்டமைந்துள்ளது. இவ்வுலாவில் உள்ள ஒரு கண்ணியை ஒட்டி ஒரு செய்யுள் இயற்றும்படி அரசன் வேண்டிக்கொள்ள அவ்வாறே பாட விரைந்து பாடியதால் கூத்தருக்கு ஒட்டக்கூத்தர் என்ற பெயர் வழங்கப்படுகிறது. அவருடய இந்நூலில் கீழ்க்கண்டவை உள்ளிட்டவை பற்றி பேசப்படுகின்றன.
  • விக்கிரம சோழனின் முன்னோரின் பெருமை
  • விக்கிரம சோழனின் பிறப்பு, பள்ளி எழுதல், நீராடல், இறைவனை வணங்குதல்
  • சோழன் அலங்காரம் செய்து கொள்ளல்
  • பட்டத்து யானையின் பெருமை
  • சிற்றரசர்களின் விவரங்கள், பரிவாரங்கள்
  • பேதை, பெதம்பை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை, பேரிளம்பெண் என்ற எழுவகைப் பருவ மகளிர் மற்றும் அவர்கள் சோழ மன்னரைக் கண்டு காதல் கொள்ளல்      
சிவ வழிபாடு :
பொன்னித் (புதுமஞ் சனமாடிப்) பூசுரர்கைக்
கன்னித் தளிரறுகின் காப்பணிந்து - முன்னை (41)
மறைக் கொழுந்தை வெள்ளி மலைக் கொழுந்தை  (மௌவுலி)
பிறைக் கொழுந்தை வைத்த பிரானைக்-கறைக் களத்துச் (42)
செக்கர்ப் பனிவிசும்பைத் தெய்வத் தனிச்சுடரை
முக்கட் கனியை முடிவணங்கி - மிக்குணர்ந்த (43) 
துயில் எழுந்தவுடன் விக்கிரம சோழன் வானம் பொய்த்தாலும், தாய் பொய்யாத காவிரியில் நீராடிய பின்னர் அந்தணர்கள் மந்திரம் ஓதிக் கொடுத்த அருகம்புல்லின் தளிரை காப்பாகத் தன் கைகளில் அணிந்துகொண்டான். பழமைக்கும் பழமையான வேதத்தின் கொழுந்தையும், வெள்ளி மலையின் கொழுந்தையும், தலையில்பிறையின் கொழுந்தையும் அணிந்துள்ளவனும், விஷத்தினைக் கண்டத்தில் சுமந்திருப்பவனும், செவ்வானத்தின் சிவந்த நிறத்தினைக் கொண்ட திருமேனியையும் மூன்று கண்களை உடையவனானச் சிவபெருமானை வணங்கினான்.  

உலா வந்த அரசனைக் கண்ட பெதும்பையின் நிலை :
அரச னபய னகளங்க னெங்கோன்
புரசை மதவரைமேற் போத - முரசம் (149)
தழுங்கு மறுகிற் றமரோடு மோடி
முழங்கு மணிமாட முன்றிற் - கெழங்கயற்கட் (150)
பொன்னென வெல்லா வழகும் புனைவதொரு
மின்னென வந்து வெளிப்பட்டு - மன்னருயிர் (151)
தாயார் வாழ்த்திக் கொண்டிருக்கும்போது அரசன், அபயன், அகளங்கன் எனப் பெயர் பெற்ற விக்கிரம சோழன் கழுத்தில் மணிக்கயிறு கட்டிய மத யானை மேல் உலாவச் சென்றான். அவன் வருவதனை தெரிவிக்கும் முரசுகளின் ஒலியினைக் கேட்டு தன் சுற்றத்தோடு ஓடினாள். அவள் மேகங்கள் சூழ்ந்திருந்த வாசலில் மீன் போன்ற விழிகளையுடைய திருமகள் போலவும், அழகு முழுவதும் நிறைந்த மின்னல் போலவும் தோன்றினாள்.

மங்கையின் அலங்காரத்தோற்றம் :
வருகின்றா னென்று மணியணிகள் யாவும்
தருகென்றாள் வாங்கித் தரித்தாள்-விரிகோதை (166)
சூடினாள் பைம்பொற் றுலகிலடுத்தாள் சந்தனச்சே
றாடினாள் தன்பே ரணியணிந்தாள்-சேடியர் (167)
வலிமை மிகுந்த பெரிய போர் யானையின் மீது பூமாலையினை அணிந்து கொண்டு விக்கிரம சோழன் உலா வருகிறான் என்ற செய்தியினை மங்கைப்பருவத்துப் பெண் அறிந்தாள். மணிகள் பதித்த அணிகளைக் கொண்டுவரச் செய்து வாங்கி அணிந்தாள். பூத்த மலர்களாலான மலர் மாலையை சூடினாள். சந்தனக் குழம்பை பூசிக்கொண்டாள். மாதணி என்கின்ற பதக்கத்தையும் அணிந்துகொண்டாள்.

பந்து விளையாடுதல் :
சொல்லி யொரு மடந்தை தோழியைத் தோள் வருந்தப்
புல்லிநிலா முற்றம் போயேறி-வல்லிநாம் (195)
சேடிய ரொப்ப வருத்துத் திரள்பந்து
கோடியர் கண்டுவப்பக் கொண்டாடி - (ஆடினால்) (196)
(லென்மாலை) நீகொள்வ தியாங் கொள்வ தெங்கோமான்
தன்மாலை வாங்கித்தருகென்று - மின்னனையாள் (197)
மடந்தைப் பருவத்துப் பெண் தோழியைத் தோளில் வருத்தம் ஏற்படுமாறு தழுவி நிலா முற்றத்தில் ஏறினாள். தோழியிடம் வல்லிக்கொடி போன்றவளே நாம் பாங்கியர் போல இரண்டு பக்கமாக நின்று உருண்டையான பந்தினை எடுத்து கூத்தர்கள் மகிழும்படி பந்தாடுவோம் என்றாள். பந்தாடலின்போது நான் தோற்றுவிட்டால்  என்னுடைய மாலையினை எடுத்துக் கொள்வாயாக எனவும், நீ தோற்றுவிட்டால் மன்னவர் மாலையை வாங்கித் தருக எனவும் பந்தயம் கூறினாள்.

மன்னனைக் காணல் :
புலருந் தனையும் புலம்பினா ளாங்குப்
பலரும் பணிந்து பரவக் - குலகிரிசூழ் (282)
ஆழிப் புவன மடைய வுடையபிரான்
சூழிக் கடாயானை தோன்றுதலும் - யாழின் (283)
காதல் நோயினால் புலம்பிக் கொண்டிருந்த தெரிவை, பலரும் பணிந்து வணங்கும் மலையும் கடலும் சூழ்ந்த உலக முழுவதும் ஆளும் விக்கிரம சோழன் முகபடாம் அணிந்த யானையின் மேல் உலா வரக் கண்டு யாழின் இசை, தென்றல் பனி, உடுக்கை, நிலவு முதலிய அனைத்திற்கும் வருந்தியவள் உயிர் பிழைத்தவள் போல் மன்னனைக் காண ஓடினாள்.

சோழன் உலா வருகை :
வேரிக் கமழ்கோதை வேறாகத் தன்மனத்திற்
பூரித்த மெய்யுவகை பொய்யாகப் -  பாரித்த (319)
தாமக் கவிதை நிழற்றச் சயதுங்கன்
நாமக் கடாக்களிற்று நண்ணுதலும் - தேமொழியும் (320)
வண்டுகள் சூழ்ந்த மணம் கமழும் கூந்தலையுடைய அப்பேரிளம் பெண் விக்கிரம சோழனைப் புணர்ந்ததாக எண்ணி மகிழ்ந்திருக்கும்பொழுது மாலையணிந்த வெண்கொற்றக் குடை நிழ செய்ய வெற்றியால் உயர்ந்தவனாகிய அச்சோழன் அச்சத்தைத் தரும் மத யானைமேல் உலா வந்தான்.

நூல் : விக்கிரம சோழனுலா
பதிப்பாசிரியர் : கோ.தில்லை கோவிந்தராஜன் (9442148246)
பதிப்பகம் : தஞ்சாவூர் மகாராஜா சரபோஜியின் சரசுவதி மகால் நூலகம் மற்றும் ஆய்வு மையம், தஞ்சாவூர் 
ஆண்டு : 2017
விலை : ரூ.100   

16 comments:

  1. சுவாரஸ்யமான புத்தகம் என்று தெரிகிறது. வான் பொய்த்தாலும் தான் பொய்யாத காவிரி.... ஹூம்... பெருமூச்சுதான் வருகிறது!

    ReplyDelete
  2. பாடலின் பொருளாக்கம் தந்தது படிக்க மகிழ்வாய் இருந்தது

    ReplyDelete
  3. ஒட்டக்கூத்தரைப் பற்றி ஒரு கட்டுரை எழுதுங்களேன் அய்யா

    ReplyDelete
  4. அருமையான கவிதைப் பகிர்வு. புத்தகம் படிக்கும் எண்ணத்தைத் தூண்டுகிறது.

    ReplyDelete
  5. அருமையான கவிதைப் பகிர்வு. புத்தகம் படிக்கும் எண்ணத்தைத் தூண்டுகிறது.

    ReplyDelete
  6. பாடலுடன் அதன் பொருளையும் இங்கே வழங்கியமை சிறப்பு..

    வாழ்க நலம்..

    ReplyDelete
  7. அவசியம் வாங்கிப் படிப்பேன் ஐயா
    நன்றி

    ReplyDelete
  8. // வானம் பொய்த்தாலும், தாய் பொய்யாத காவிரியில் நீராடிய//

    தான் பொய்யாத

    ReplyDelete
  9. ஒட்டக்கூத்தன் பாட்டுக்கு ரெட்டைத் தாழ்ப்பாள் என்று சொல்வார்கள்.. அவ்வளவு திறமை உள்ளவர், 'விக்கிரம சோழனுலா..'வின் இந்தப் பகுதியைப் படித்து விட்டு நொந்து போனேன்..

    ReplyDelete
  10. விக்கிரம சோழனுலா புத்தக விமர்சனம் நன்று.

    ReplyDelete
  11. வணக்கம் சகோதரரே

    விக்கரம சோழனுலா புத்தக விமர்சனம் படிக்க மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது. பாடலின் ஒவ்வொரு வார்த்தைக்கும் விளக்கங்களுடன் தந்திருப்பது மிக சிறப்பு. நன்கு பொருளுணர்ந்து படிக்க முடிந்தது.மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
  12. புத்தக விமர்சனம் மிக நன்று ஐயா. பாடல்களும் அதன் விளக்கமும் அருமை.

    ReplyDelete
  13. தான் பொய்யா காவேரி - பெருமூச்சு தான் இப்போது.

    பாடல்களும் விளக்கமும் நன்று. பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

    ReplyDelete
  14. விக்கிரம சோழன் கதை நன்றாக இருக்கு..

    ReplyDelete
  15. நல்லதொரு புத்தகம் பற்றிய பகிர்வு....
    காவிரி இன்னும் சில வருடங்களில் கானலாகிப் போய்விடுவாள் போலும்...
    நல்ல பகிர்வு ஐயா....

    ReplyDelete
  16. விக்கிரம சோழனின் வரலாற்று நூல் தமிழ் இலக்கிய உலகுக்கு நல்வரவே ஆகும்.

    ReplyDelete