10 March 2018

Yours sincerely : K. Natwar Singh

கடந்த இரு வாரங்களாக கோயில் உலாவும், வரலாற்று உலாவும் சென்று வந்துள்ள நிலையில் இந்த வாரம் வாசிப்பு அனுபவத்தைக் காண்போம். நான் ரசித்துப் படித்த நூல்களில் கே.நட்வர்சிங் எழுதிய Yours Sincerely என்ற நூலும் ஒன்றாகும். நட்வர்சிங்கின் கட்டுரைகளை அவ்வப்போது The Hindu இதழில் படித்துள்ளேன். பல்வேறு பொறுப்புகளில் அவர் இருந்தபோது எழுதிய கடிதங்களும், அவருக்கு வந்த கடிதங்களும் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. அவருடைய Walking with lions நூலை மிகவும் விரும்பிப் படித்துள்ளேன். 

அவருடைய மொழிநடையை நான் அதிகம் ரசித்ததுண்டு. நூலின் முன்னுரையில் பின்வரும் சொற்றொடர் என்னை மிகவும் கவர்ந்தது. ஒரே சொற்றொடரில் தன்னுடன் தொடர்புள்ளவர்களின் குணாதிசயங்களை மிக அழகாகக் கூறியுள்ளார். "In my mind are stored the memories of Indira Gandhi's grace and gravitas, Forster's subtlety of mind, his genuine gift for friendship, His Holiness the Dalai Lama's luminous spirituality, Rajaji's calm self-awareness, Morarji Desai's refrigerated acerbity, P.N.Haksar's equanimity and wit, Mountbatten's cynosural narcissism, Julius Nyerere's Calvinism, J.R.Jawardhane's composure, Kenneth Kaunda's Afracanised Gandhism, Hiren Mukherjee's Marxist prose, Mulk Raj Anand and Ahmed Ali's benign prolixity, Raja Rao's sublime impractibility, Vijayalakshmi Pandit's staggering candour, her sister Krishna Hutheesing's valetudinarianism, Thakazhi Sivasankara Pillai's rural charm, Han Suyin's ruffled disquiet, R.K.Narayanan's anti-hero stance, Husain's artistic genius, Nirad C.Chaudhari's schadenfreude, Nadine Gordimer's literary triumphs............." (p.viii). இனி அவருக்குப் பிறர் எழுதிய கடிதங்களிலிருந்து சிலவற்றைப் பார்ப்போம். (எழுதியவர் பெயரும், எழுதிய நாளும் தரப்பட்டுள்ளன)

இந்திரா காந்தி/7.11.1970
...எங்களைவிட நீங்கள் அருமையாகத் திட்டமிடுகின்றீர்கள்... எனக்கு ஒரு மகள் வேண்டும் என்ற ஆசையுண்டு. ஆகையால் ஜகத்துக்கு தங்கை பிறந்திருக்கிறாள் என்பதை அறியும்போது நீங்கள் எந்த அளவு மகிழ்ச்சியடைந்திருப்பீர்கள் என்பதை என்னால் கற்பனை செய்து பார்க்கமுடிகிறது...... (ப.5)


இந்திரா காந்தி/13.10.1974
...உலகின் பல பகுதிகளில் மக்கள் என்ன நினைத்துக்கொண்டிருக்கிறார்கள் என்பதை நீங்கள் பகிர்வதற்கு நன்றி...உள்நாட்டுக் குழப்பம் அதிகம் இருப்பதாக நான் உணர்கிறேன்....அதிக நூல்களை சேகரிக்கிறேன், ஆனால் சில மாதங்களாக படிக்க எனக்கு நேரமில்லை... (ப.12)

ஈ.எம்.போர்ஸ்டெர்/31.3.1959
...இப்பொழுதுதான் பி.ராஜன் எழுதிய The Dark Dancer நூலைப் படித்து முடித்தேன். அதைப் பற்றி என்ன நினைக்கின்றீர்கள். எனக்கு அந்த நூல் மிகவும் பிடித்துவிட்டது..சௌத்ரியின் Passage to England நூலின் மெய்ப்பினைப் பார்த்தேன்......  (ப.102)

விஜயலட்சுமி பண்டிட்/24.1.1966
...இறுதியில் உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடு ஒரு பெண்ணைத் தலைவராகத் தேர்ந்தெடுத்துள்ளது. இந்துவின் வெற்றி பெரிய வரலாற்றைப் படைத்துவிட்டது......இந்தத் தேர்தலை உலகம் பாராட்டியவிதம் இதயத்திற்கு இதமளிக்கிறது.... (ப.102)


நர்கீஸ் சுனில் தத்/10.7.1976
....என்னை நேசித்த மக்களே தற்போது என்னைப் பற்றி தவறாகப் பேச ஆரம்பித்துவிட்டார்கள்....நான் ஒரு குற்றவாளியைப் போல உணர்கிறேன்...எனக்காக நீங்கள் செய்த உதவிக்கு நன்றி கூறுகிறேன்.  நீங்கள் மட்டும் முயற்சி எடுத்திராவிட்டால் என் மக்களாலேயே நான் கொல்லப்பட்டிருப்பேன். அல்லது அவமானத்தைத் தாங்க முடியாமல் நானே இறந்திருப்பேன்...தங்கள் முயற்சிக்காக நான் நன்றிக்கடன் பட்டுள்ளேன். நான் திருமதி இந்திரா காந்தியை சென்று பார்த்து நடந்தனவற்றைக் கூறுவேன்.....  (ப.106)

ஷப்னா ஆஸ்மி/13.5.1999
...இதுவரை அறிந்திரப்படாத புகழ்பெற்ற பல ஆண்களைப் பற்றியும், பெண்களைப் பற்றியும் உங்கள் நூலில் அதிகமான செய்திகள் உள்ளன. குறிப்பாகச் சொல்லப்போனால் ஆர்.கே.நாராயணனின் Refrigerator Storyஐ நான் மிகவும் ரசித்தேன்....(ப.122)

ஆர்.கே.நாராயணன்
....நீங்கள் எழுதிய Tiger of Malgudi கட்டுரையைப் படித்தேன். மிக அருமை. 1955இல் மறக்க முடியாத நாளான நம் சந்திப்பிலிருந்து நம் தொடர்பைப் பற்றி அழகாக நினைவுகூர்ந்து எழுதியுள்ளீர்கள். அந்த இனிமையான நிகழ்வு நடந்து 30 வருடங்கள் ஓடிவிட்டன என்பதை என்னால் நம்பமுடியவில்லை.. நீங்கள் எழுதும் நடை சிறப்பாக உள்ளது...உங்களுக்கு நேரம் கிடைக்கும்போது எனக்கு எழுதுங்கள்...(ப.123)


ஆர்னால்டு டாய்ன்பி/13.10.1964
...நேருவைப் பற்றி நீங்கள் எழுதவுள்ள நூலுக்கு நான் கட்டுரை அனுப்ப விழைகின்றேன்....இப்போது உள்ள அதிகமான பணிப்பளுவின் காரணமாக புதிதாக எழுத இயலா நிலையில் உள்ளேன். எனவே, நீங்கள் கேட்டுக்கொண்டபடி முன்னர் நான் எழுதிய ஒரு கட்டுரையை அனுப்புவேன்.... (ப.130)

தகழி சிவசங்கர பிள்ளை/28.10.1964
...14 அல்லது 15 வயதில் நான் எழுத ஆரம்பித்தேன். அது நானாக எடுத்த முடிவல்ல. எழுதினேன், எழுதினேன், எழுதிக்கொண்டே இருந்தேன்...இன்னும் எழுதுகிறேன். என் மேல் தாக்கத்தை ஏற்படுத்தியவர்கள் பிரெஞ்சு எழுத்தாளர்களான Flaubert, Balzac,Mauppasant, Hugo, ரஷ்ய எழுத்தாளர்களான Dostoyevsky, Gogol,. Turgenev, Tolstoy மற்றும் பலர். என் எழுத்துக்கு எந்த இந்திய எழுத்தாளரும் காரணமல்ல. காரணம் மலையாளம் தவிர எனக்கு எந்தமொழியும் தெரியாது....(ப.132)

அபு அப்ரஹாம்/26.8.1967
...The Statesman மார்ச் இதழில் வெளியான முன்னாள் ஜனாதிபதிகள் மற்றும் பிரதம மந்திரிகளின் படங்களை நீங்கள் பார்த்திருப்பீர்கள் என நம்புகிறேன். சுதந்திர தினத்தன்று The Guardian இதழில் இந்திரா காந்தி வரைந்திருந்த படம் வெளியாகியிருந்தது....(ப.137)

ஜுபின் மேதா/8.3.1984
...நான் புதுதில்லி வருவதற்கான நேரம் நெருங்கிவிட்டது...என் இசைக் குழுவினருடன் புதுதில்லி வரவுள்ளேன்..தற்போது அங்குள்ள நிலை குறித்து எழுதவேண்டுகிறேன். நான் வருவதற்கான ஏற்பாடுகள் தயாராகிவிட்டன. இது தொடர்பாக அவ்வப்போது நியூயார்க்கில் புபுல் ஜயகரைச் சந்தித்துவருகிறேன்...(ப.148)

புரியாத அல்லது ஊகிக்க முடியாத இடங்களில்...........என்று புள்ளி வைத்துள்ளார். சில இடங்களில்------------என்று கோடிட்டுள்ளார்.  காலவரிசைப்படி எழுதியிருந்தால் வரலாற்றுரீதியாகச் செய்திகளைப் புரிந்துகொள்ள எளிதாக இருந்திருக்கும். சில கடிதங்களில் நபரைப் பற்றிய குறிப்பும், சில கடிதங்களில் நாளும் காணப்படவில்லை. இருப்பினும் இவ்வாறாக பல ஆண்டுகளாகத் தொகுத்துவைத்த கடிதங்களைத் தொகுத்துத் தெரிவு செய்து வெளியிட்டது ஓர் அரிய முயற்சியாகும். அம்முயற்சியைப் பாராட்டும் வகையில் இந்நூலை வாசிப்போம். 

நூல் : Yours Sincerely, 
ஆசிரியர் : K.Natwar Singh
பதிப்பகம் :  Rupa & Co., New Delhi
ஆண்டு :  2010
விலை :  Rs.395

இதற்கு முன் நாம் வாசித்த இவருடைய நூல்கள் தொடர்பான பதிவுகள்
மனிதரில் மாணிக்கங்கள் : தினமணி புத்தாண்டு மலர் 2014 Walking with lions Tales from a diplomatic past: K. Natwar Singh

10 comments:

 1. அரசியல்வாதியாக அறியப்பட்டவரை ஒரு எழுத்தாளராக அறிமுகப்படுத்தி உள்ளீர்கள். கடிதங்கள் சுவாரஸ்யம். நர்கீஸுக்கு வந்த சோதனை என்ன என்று நினைவில்லை. தகழியின் கடிதமும் சுவாரஸ்யம். இந்திரா காந்தி அவ்வளவு வேலைகளுக்கு நடுவிலும் நிறைய படிப்பவர் என்பது ஆச்சர்யம். அவர் படமும் வரைவார் என்பது அதைவிட!

  ReplyDelete
 2. நிறைய விஷயங்கள் தெரிந்து கொள்ள முடிந்தது.

  நன்றி முனைவர் ஐயா.

  ReplyDelete
 3. தங்களின் பரந்த வாசிப்பு போற்றுதலுக்கு உரியது ஐயா

  ReplyDelete
 4. தங்களது வாசிப்பில் எங்களுக்கும் பலன்.

  ReplyDelete
 5. தங்கள் பதிவால் புது புது தகவல்கள் தெரிந்து கொள்ள முடிகிறது.
  பகிர்வுக்கு நன்றி சார்.

  ReplyDelete
 6. நல்லெண்ணங்களை
  நம் உள்ளங்களில் விதைக்கும்
  தங்கள் பணி தொடர வாழ்த்துகள்!

  ReplyDelete
 7. வணக்கம் சகோதரரே

  தங்களது வாசிப்பு அனுபவங்களினால் நாங்களும் நிறைய தகவல்களையும், தெரியாத செய்திகளையும் தெரிந்து கொள்ள முடிகிறது. பகிர்ந்தமைக்கு மிக்கநன்றிகள்.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்

  ReplyDelete
 8. வித்தியாசமானவர்களைப் பற்றிய வித்தியாசமான பதிவு.
  சுவரஸ்யங்களுக்கு கேட்பானேன்?..

  ReplyDelete
 9. ஒரு டயறிக் குறிப்புக்கள்போல எழுதப்பட்டிருக்கும் கடிதங்கள் படிக்கப் படிக்க இனிமை. அக்காலம் என்பதால் கடிதம் எழுதினார்கள்.. அவை பொக்கிசங்களாக பாதுகாக்கப்பட்டன.. மக்களின் கைகளுக்கும் கிடைத்தன.

  ஆனா இனிமேல் காலங்களில்.. எல்லாமே ஈ மெயில்கள் என்பதால்.. குறிப்பிட்ட நபர் இறந்துவிட்டால் அப்படியே மெயில்களும் அழிந்துவிடும்...:(.

  ReplyDelete
 10. நிறைய தகவல்களையும், தெரியாத செய்திகளையும் தெரிந்து கொள்ள முடிகிறது. பகிர்ந்தமைக்கு மிக்கநன்றிகள்.
  https://kovaikkothai.wordpress.com/

  ReplyDelete