26 November 2016

இலக்கிய மாமணி திரு அழகிரி விசுவநாதன்

தஞ்சாவூரிலுள்ள மூத்த எழுத்தாளர் திரு அழகிரி விசுவநாதன் அவர்களைச் சந்தித்து நெடுநாள் ஆகியிருந்தது. 19 நவம்பர் 2016 காலை சென்னையிலுள்ள அவரது மகன் திரு சோமசுந்தரம் (டி.வி.எஸ்.சோமு) என்னிடம் பேசினார். அவர் பேசியபின் ஐயாவை சந்திக்க வேண்டும் என்ற ஆர்வம் அதிகமானது. தொலைபேசியில் தொடர்புகொண்டு "சந்திக்க வரலாமா" என்று கேட்டேன். "வாருங்கள், நீங்கள் வருவது மகிழ்ச்சியே" என்றார். 

86 வயதாகும் அவர், 200க்கும் மேற்பட்ட சிறுகதைகளை பிரபல வார இதழ்களில் எழுதியவர். கவிதை, நாடகம், புதினம், சிறுகதை என்ற அனைத்து நிலைகளிலும் தடம் பதித்தவர். என்னுடைய ஆய்வினை மனம் திறந்து பாராட்டும் பெரியோரில் ஒருவர். அவரது மறதி வாழ்க (நாடகங்கள்)தமிழ் மொழி சீர்திருத்தம் வேண்டும் (கட்டுரைகள்) கமலி, இந்த எறும்புகள், ஆயிரம் ரூபாய் நோட்டு உள்ளிட்ட பல நூல்களைப் பற்றி நாம் முன்னர் விவாதித்துள்ளோம். எப்பொழுது சந்தித்தாலும் அரசியல், நாட்டு நடப்பு, நட்பு, எழுத்து, வாசிப்பு என்ற பல தளங்களில் பேசுவார். அவரிடம் பேச ஆரம்பித்தால் நேரம் போவதே தெரியாது. தான் மேற்கொள்ளவுள்ள பிற திட்டங்களைப் பற்றி பேசுவார். ரயில்வேத்துறையில் பணியாற்றி பணி நிறைவு பெற்ற அவர் நேர்மைக்கு ஓர் இலக்கணம். அவர் ஒரு திறந்த புத்தகம். அவரை வாசித்து நாம் கற்கவேண்டியது ஏராளம்.    

இவ்வாறான சிந்தனைகளோடு அவரிடமிருந்து மறுமொழி கிடைத்த 10 நிமிடத்தில் அவரது இல்லத்தில் நான். "நான் ஓட்டுப் போட்டு வந்துவிட்டேன். நீங்கள் ஓட்டு போட்டீர்களா? ஜனநாயகக் கடமையைச் செய்துவிட்டீர்களா?" என்றார். நேர்மறையான எனது பதிலுக்குப் பின் அவரைப் பற்றி அண்மையில் ஒருவர் ஆய்வு மேற்கொண்டதாகக் கூறி அந்த ஆய்வேட்டைக் காண்பித்தார். "அழகிரி விஸ்வநாதன் சிறுகதைகள் - ஓர் ஆய்வு" (திருச்சிராப்பள்ளி பாரதிதாசன் பல்கலைக்கழகத் தமிழ் முனைவர் பட்டத்திற்காக தஞ்சாவூர் அ.வீரையா வாண்டையார் நினைவு திரு புட்பம் கல்லூரியில் மேற்கொள்ளப்பட்டது) என்ற தலைப்பில்    த.கண்ணகி என்பவர் ஐயாவின் சிறுகதைகளைப் பற்றி ஆய்வினை மேற்கொண்டு நிறைவு செய்துள்ளார். முன்னுரை, முடிவுரை உட்பட பல இயல்களைக் கொண்டு அமைந்திருந்த அவ்வேட்டில் அவரிடம் ஆய்வாளர் எடுத்த பேட்டியும் இடம் பெற்றிருந்தது. தன் எழுத்தின் பெருமை ஆய்வேடாக வந்ததைப் பெருமையுடன் பகிர்ந்த அவர், தன் பெயர் விசுவநாதன் என்று குறிப்பிடப்பட்டிருக்கவேண்டும் என்றார்.   
அடுத்ததாக மற்றொரு இனிய செய்தி என்று கூறி, தன்னுடைய ரயிலே நில்லு நூல் இரண்டாம் பதிப்பு அண்மையில் வெளியானதைப் பகிர்ந்துகொண்டு, அந்நூலின் படியை என்னிடம் தந்தார். "முதல் பதிப்பு என்னிடம் உள்ளது" என்றபோது, "உங்களுக்கு ஒரு படி என் அன்பளிப்பாக வைத்துக்கொள்ளுங்கள். உங்களைப் போல எழுதுபவர்களையும் வாசிப்பவர்களையும் பார்க்கும்போது மனதிற்கு நிறைவாக இருக்கிறது" என்று கூறி அதில் கையொப்பமிட்டுத் தந்தார். நூலிற்கான தொகையைக் கொடுத்தபோது அன்புடன் மறுத்துவிட்டார். 

13 சிறுகதைகளைக் கொண்ட ரயிலே நில்லு இரண்டாம் பதிப்பின் முன்னுரையில் பின்வருமாறு குறிப்பிடுகிறார்.

"இந்தப் புத்தகத்தின் முதற்பதிப்பு 1997ஆம் ஆண்டு வெளியானது. இடையில் நீண்ட இடைவெளி. 20 வருடங்கள் சென்றுவிட்டன...முதற்பதிப்பு நாகப்பட்டினம் குமரி பதிப்பகத்தில் திரு ஜவஹர் வெளியிட்டார்கள். இந்த புத்தகம் வருடம் 50 பிரதிகள் ட்டும் விற்பனை ஆகியது. 1000 பிரதிகள் விற்பனை ஆக 20 வருடங்கள் பிடித்து இருக்கிறது. அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா முதலிய நாடுகளில் ஒரு எழுத்தாளர் ஒரு புத்தகம் எழுதினால் கோடீஸ்வரர் ஆகிவிடுகிறார். ஆனால் நமது நாட்டில் ஒரு எழுத்தாளர் 10 புத்தகங்கள் எழுதினாலும்கூட சோத்துக்கு லாட்டரி தான்.  ஏன் என்றால் வறுமைக் கோட்டிற்குக் கீழே 50 விழுக்காடு மக்கள் இருக்கிறார்கள். இந்த தமிழ் மக்கள் கையில் 40 ரூபாய் இருந்தல் ஒரு புத்கம் வாங்கலாம் என்று நினைக்க மாட்டார்கள். ஒரு கிலோ அரிசி வாங்கினால் இரண்டு நாட்கள் பொழுது போகுமே என்று நினைப்பார்கள். இப்படி தமிழ் மக்கள் இருக்கும்பொழுது எப்படி புத்தகம் விற்கும்? சந்தேகம் தான். அமெரிக்காவில் நியூயார்க் நகரில் ஒரு புத்தகம் வெளியாகிறது என்றால் இரவு மூன்று அல்லது நான்கு மணியிலிருந்து கியூவில் நிற்கிறார்கள் கையில் காசை வைத்துக்கொண்டு. புத்தகக்கடை காலை 9.00 மணிக்கு திறக்கப்படுகிறது. புத்தகத்தை வாங்கிக்கொண்டு செல்கிறார்கள். தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் நாம் அதனை எதிர்பார்க்கமுடியாது..."

நீண்ட நாள் சந்திப்புக்குப் பின் அவரிடமிருந்து விடை பெற்றேன். வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருக்கும்போது எனது அடுத்த திட்டங்களை என் மனம் பட்டியலிட ஆரம்பித்தது. அவருடன் பேசிய சில நிமிடங்கள் தந்த உத்வேகத்தை எண்ணி வியந்துகொண்டே இல்லம் வந்து சேர்ந்தேன். 
அவரைப் பற்றி விக்கிபீடியாவில் நான் ஆரம்பித்த பக்கம்

அவரது நூலைப் பெறவோ, கருத்து தெரிவிக்கவோ விரும்பும் நண்பர்கள் அவரது முகவரியிலோ (திரு அழகிரி விசுவநாதன், அழகுமலை பதிப்பகம், 114, கோயில் தெரு, டபீர் குளம் சாலை, கீழ வாசல், தஞ்சாவூர் 613 001)  அலைபேசி வழியாகவோ (9442871071) தொடர்புகொள்ளலாம். 

11 comments:

 1. இனிய சந்திப்பு.

  ReplyDelete
 2. "அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா முதலிய நாடுகளில் ஒரு எழுத்தாளர் ஒரு புத்தகம் எழுதினால் கோடீஸ்வரர் ஆகிவிடுகிறார். ஆனால் நமது நாட்டில் ஒரு எழுத்தாளர் 10 புத்தகங்கள் எழுதினாலும்கூட சோத்துக்கு லாட்டரி தான்." என்ற நிலை தான் இலங்கையிலும் நிலவுகிறது.

  தங்கள் பதிவு பலருக்கு வழிகாட்டலாக அமையும்.
  தொடருங்கள்
  தொடருகிறேன்

  ReplyDelete
 3. திரு.அழகிரி விசுவநாதன் அவர்கள் பற்றி தெரிந்து கொண்டேன்.
  நன்றி.

  ReplyDelete
 4. சிறந்த தகவலுக்கு நன்றி ஐயா...

  ReplyDelete
 5. இனியதோர் சந்திப்பு.

  ReplyDelete
 6. # 10 புத்தகங்கள் எழுதினாலும்கூட சோத்துக்கு லாட்டரி தான்#
  இருபதாண்டுக்கு முன்னால் சொன்னது இன்றைக்கும் பொருந்துகிறதே :)

  ReplyDelete
 7. எழுத்தாளரைப் பற்றி அறிய செய்தமைக்கு நன்றி அய்யா!

  ReplyDelete
 8. அருமையான சந்திப்பு.
  அவர் சொல்லியிருப்பது நிதர்சனம் ஐயா....

  ReplyDelete
 9. Mr.Balasubramaniam G.M (thro email: gmbat1649@gmail.com)பதிவில் பின்னூட்டம் எழுதி பப்லிஷ் என்று க்ளிக்கும் போது செர்வர் கிடைகக வில்லை என்று பதில் வருகிறது ஒரு எழுத்தாளரை அறிமுகம் செய்ததற்கு நன்றி.

  ReplyDelete
 10. இனிமையான சந்திப்பு! அவர் சொல்லியிருப்பது யதார்த்தம். அதுவும் பல ஆண்டுகளுக்கு முன்பு சொன்னது இப்போதும் அப்படித்தானே..ஐயா...பகிர்விற்கு மிக்க நன்றி ஐயா

  ReplyDelete