20 June 2017

பறந்த விமானத்தில் பிறந்த குழந்தை

அன்புள்ள அப்பா,
தந்தையர் தினத்தன்று இதைவிட மிகச் சிறந்த பரிசை நீங்கள் கேட்டிருக்க மாட்டீர்கள் என்பது எனக்குத் தெரியும். ஜெட் எர்வேய்ஸ் விமானத்தில் நான் பிறந்ததைப் பற்றி உலகமே வியப்போடு பேசுகிறது. உண்மையில் நான் அதிக மகிழ்ச்சியோடு இருந்தேன் (Oncloud9 என்றால் மகிழ்ச்சியில் இருந்ததாகப் பொருள். இங்கு ஆகாயத்தில் பிறந்ததையும் குறிக்கிறது). அவ்வாறே நான் பிறந்த ஜெட் எர்வேய்ஸ் விமான நிறுவனத்தினர் இரட்டிப்பு மகிழ்ச்சியில் உள்ளனர். மன உறுதியாக இருந்த அம்மாவிற்கும், நான் இந்த உலகிற்கு வர உதவி செய்த விமானப் பணியாளர்களுக்கும் என்  நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். என் வாழ்நாள் முழுவதும் இலவசமாகப் பறக்க (பயணிக்க) அனுமதித்துள்ள ஜெட் எர்வேய்ஸ் நிறுவனத்திற்கு என் நன்றி. இதன்மூலமாக உங்களுடனும், அம்மாவுடனும் மகிழ்ச்சியோடு நான் அதிகமாகப் பயணிக்கப் போகிறேன் என்பதும், இவ்வுலகைப் பற்றி அறியப்போகிறேன் என்பதும் தெரிகிறது.........
அன்புடன், 
ஆகாய விமானத்தில் பிறந்த குழந்தை.
நன்றி : ஜெட் எர்வேய்ஸ் ட்விட்டர் பக்கம்
நல்வரவு என்ற குறிப்புடன் ஜெட் எர்வேய்ஸ் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் இவ்வாறான பதிவினை விட்டுள்ளது. இதற்குக் காரணமான குழந்தை பிறந்த பின் புலத்தை அறிவோமா? 

18 சூன் 2017இல் விமானத்தில் பிறந்த குழந்தை
நம் நாட்டில் நடந்த செய்திதான். வெளிநாட்டு இதழ்களிலும் இக்குழந்தை பிறந்த செய்தி வெளியாகியுள்ளது. பறந்துகொண்டிருக்கும் விமானத்தில் பிறக்கும் குழந்தைக்கு அந்த விமானத்தில் அதன் வாழ்நாள் முழுவதும் இலவசமாகப் பயணிக்கும் வாய்ப்பு உண்டு என்று கேள்விப்பட்டுள்ளேன். தற்போது அதனைச் செய்தியாக அறியும் வாய்ப்பு கிடைத்தது. 

சவுதி அரேபியாவிலிருந்து கொச்சிக்கு வந்துகொண்டிருந்த ஜெட் விமானத்தில் இருந்த பெண்மணிக்கு பிரசவ வலி எடுக்கவே, விமானம் மும்பை நோக்கி திருப்பிவிடப் படுகிறது. மும்பை நோக்கி விமானம் சென்று கொண்டிருந்தபோது அப்பெண்மணிக்கு ஓர் ஆண் குழந்தை பிறக்கிறது. விமான ஊழியர்களின் உதவியும் தாயின் மன தைரியமும் நல்ல பலனைத் தந்துள்ளது. விமானம் மும்பையில் தரையிறங்கும் முன்பே குழந்தை பிறந்துவிட்டது. தற்போது தாயும் சேயும் நலமாக உள்ளனர். இந்தியாவைச் சேர்ந்த ஒரு தனியார் விமானத்தில் இவ்வாறாக ஆகாயத்தில் குழந்தை பிறப்பது இதுவே முதல் முறை என்று கூறப்படுகிறது. அந்த விமான நிறுவனம் வாழ்நாள் முழுவதும் தம் விமானங்களில் அக்குழந்தை இலவசமாகப் பறக்கலாம் என்று கூறியுள்ளது. 
  • டம்மானிலிருந்து கொச்சிக்கு ஞாயிற்றுக்கிழமை (18 சூன் 2017) காலை 2.55க்கு விமானம் கிளம்பி பறந்துகொண்டிருந்தது.
  • விமானத்தில் 162 பயணிகள் இருந்தனர்.
  • விமானத்தில் இருந்த கேரளப்பெண்மணிக்கு பிரசவ வலி ஏற்படுகிறது.
  • விமானம் மும்பைக்குத் திருப்பிவிடப்படுகிறது.
  • திரும்பிச் செல்லும்போது அரேபியக் கடலின் மீது, 35,000 அடி உயரத்தில் (10,688 மீட்டர்) விமானம் பறந்து கொண்டிருக்கிறது. 
  • விமானப் பணியாளர்களும், கேரளாவிற்குப் பயணிக்கின்ற செவிலியரும் உதவுகின்றனர்.
  • சுகமாக ஓர் ஆண் குழந்தை பிறக்கிறது.
  • ஜெட் எர்வேய்ஸ் (9W 569) விமானத்தில் பிறக்கும் முதல் குழந்தை இதுவே. 
  • விமானம் மும்பை வந்து சேருகிறது. தாயும் சேயும் மருத்துவ மனைக்கு அழைத்துச் செல்லப்படுகின்றார்கள். இருவரும் நலம்.
  • 90 நிமிட தாமதத்திற்கு பிறகு விமானம் கொச்சி சென்று சேர்கிறது. 
ஜெட் எர்வேய்ஸ் மும்பையில் இறங்கியது, தாயும் சேயும் மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டனர்.  புகைப்படம் : என்டிடிவி (சூன் 2017)
இவ்வாறாக பல குழந்தைகள் பறந்து கொண்டிருக்கின்ற விமானத்தில் பிறந்துள்ளன. அவற்றைப் பற்றிப் பார்ப்போம்.
  • கடந்த ஆண்டு இதுபோன்று ஐந்து குழந்தைகள் பிறந்த போதிலும் அவ்வாறான வாழ்நாள் முழுவதுமான இலவச விமானப் பயண அனுமதி தரப்படவில்லை.  
  • இதற்கு முன்னர் 2009இல் ஏர் ஏசியா விமானத்தில் பிறந்த ஒரு குழந்தைக்கு அவ்வாறான சலுகை தரப்பட்டது. அந்தப் பயணி பெனாங்கிலிருந்து இரண்டு மணி நேர விமானப் பயணத்தின்போது அக்குழந்தை பிறந்தது. 
  • விர்ஜின் அட்லாண்டிக், ஆகாயத்தில் பறந்து கொண்டிருந்தபோது தன் விமானத்தில் பிறந்த ஒரு குழந்தைக்கு 21 வயது வரை இலவசமாகப் தன் விமானத்தில் பறக்கலாம் என்ற சலுகையை வழங்கியது.
  • கடந்த ஆண்டு செபு பசிபிக் எர் விமானத்தில் துபாயிலிருந்து விமானத்தில் பறந்தபோது பிறந்த குழந்தைக்கு ஒட்டு மொத்த இலவசப் பயணம் என்பதற்கு மாறாக ஒரு மில்லியன் மைல் பறப்பதற்கான சலுகை வழங்கப்பட்டது. 
  • 1990இல் கானாவிலிருந்து லண்டனுக்கு பிரிட்டிஷ் எர்வேய்ஸ் விமானத்தில் பிறந்த ஷோனா ஓவன் என்ற குழந்தைக்கு அதனுடைய 18ஆவது பிறந்த நாளின்போது முதல் வகுப்பு பயணச்சீட்டில் இலவசமாகச் செல்ல சலுகையளிக்கப்பட்டது.
  • 2016இன் ஆரம்பத்தில் சிங்கப்பூரிலிருந்து ரங்கூனுக்கு ஜெட்ஸ்டார் ஏசியா விமானத்தில் பிறந்த குழந்தைக்கு அந்த விமான நிறுவனத்தால் குழந்தைகளுக்குரிய 1100 டாலர் மதிப்புள்ள பொருள்கள் வெகுமதியாகத் தரப்பட்டது.
ஏப்ரல் 2017இல் விமானத்தில் பிறந்த குழந்தை

ஏப்ரல் 2017இல் கினியாவிலிருந்து பர்கினா பாசோவிற்கு டர்கிஷ் எர்லைன்சில் பறந்தபோது 28 வாரங்களுக்கு முன்பாகவே பிறந்த பெண் குழந்தைக்கு எவ்வித பரிசும் அறிவிக்கப்படவில்லை. விமான நிறுவனத்தினர் தாயை குழந்தைப் பேற்றிற்காக மருத்துவ மனைக்கு அனுப்ப மட்டுமே செய்தனர். 



புகைப்படம் : நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் (ஏப்ரல் 2017இல் பிறந்த குழந்தை)

ஆகாயத்தில் குறிப்பிட்ட ஒரு இடத்தில் எந்த ஒரு நாடும் தனக்கான பகுதியாகக் கோராத நிலையில் உள்ள இடங்களில் பிறக்கின்ற குழந்தைக்கு அதன் பிறந்த இடமாக "ஆகாயம்" (In the Air)  என்று குறிப்பர். அந்தந்த நாட்டுக் கடல் எல்லையில் குழந்தைகள் பிறந்தால் உரிய நாட்டின் பெயரைக் குறிப்பிடுகின்றனர். அவ்வாறின்றி அக்குழந்தை அவ்வாறு உரிமை கோரப்படாத கடல் பகுதியில் (international waters) பிறந்தால் அதன் பிறந்த இடமாக  "கடல்" (In the Sea) என்று குறிப்பர். (அமெரிக்க மாநிலத்துறை வழிகாட்டி) அந்த வகையில் பார்க்கும்போது இக்குழந்தை அரபிக்கடலின் மீது விமானம் பறக்கும்போது பிறந்துள்ளதால் இந்தியா என்று குறிப்பார்களா அல்லது கடலில் பிறந்த குழந்தை என்று குறிப்பார்களா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.

நன்றி
நடுவானத்தில் பிறந்த ஆண் குழந்தை, தினமணி, 19 சூன் 2017
Baby on Jet Airways flight gifted free air tickets for life, Independent, 19 June 2017 
India's Jet Airways gifts free lifetime flights to baby born mid-air, BBC News19 June 2017  
Premature baby delivered by cabin crew during flight, Independent9 April 2017  
Baby born on flight to get free lifetime air travel, says Jet Airways, NDTV19 June 2017  
Woman gives birth to baby girl mid-flight on Turkish Airlines; see adorable pics here, Indian Express, 10th April 2017

24 comments:

  1. சந்தோஷமான தகவல் இதைப்போல அந்தக் குழந்தைக்கு இண்டர் நேஷணல் பாஸ்போர்ட் கிடைக்கும்தானே ?

    இது அரபு நாடுகளில் மலையாளிகளுக்கு பெருமையான விடயம் தகவல் தந்த முனைவருக்கு நன்றி
    த.ம.1

    ReplyDelete
  2. வித்தியாசமான தொகுப்பு. பகிர்வுக்கு நன்றிப்பா

    ReplyDelete
  3. நானறிந்திராத பலப் புதிய தகவல்களை சுவாரஸ்யத்தோடு வாசித்தறிந்தேன் 😇 நன்றி ஐயா 😊 அருமையான எழுத்து நடை 😊

    ReplyDelete
  4. //இந்தியாவைச் சேர்ந்த ஒரு தனியார் விமானத்தில் இவ்வாறாக ஆகாயத்தில் குழந்தை பிறப்பது இதுவே முதல் முறை என்று கூறப்படுகிறது. அந்த விமான நிறுவனம் வாழ்நாள் முழுவதும் தம் விமானங்களில் அக்குழந்தை இலவசமாகப் பறக்கலாம் என்று கூறியுள்ளது. //

    மகிழ்ச்சியான தகவல்.
    தாய், சேய்க்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  5. இதுபோன்ற அபூர்வமான அதிசயமான செய்திகளை அறிய முடிந்ததில் மகிழ்ச்சி. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  6. வியக்க வைக்கும் தகவல்கள்...

    ReplyDelete
  7. இவ்வளவு பெரிய சலுகை தொடருமானால் ,ஆகாயத்தில் பிறக்கும் குழந்தைகள் எண்ணிக்கை அதிகரிக்கும் :)

    ReplyDelete
    Replies
    1. இதனால்தான் பெரும்பாலும் கர்ப்பிணி பெண்களுக்கு பயணம் மறுக்கப்படுகிறது ஜி

      Delete
  8. பிறந்த இடம் குறிப்பது பற்றிய தகவல்கள் புதிது + சுவாரஸ்யம். நானும் செய்தித்தாளில் இந்தச் செய்தி படித்தேன். தம +1

    ReplyDelete
  9. இந்த செய்தியை தொலைக்காட்சியில் பார்த்த போது எனக்கு வேறொன்று நினைவில் வந்தது. ஜாதகம் பார்ப்பவர் என்றால் இந்தக்குழந்தைக்கு பிறந்த இடம் என்று எதனை குறிப்பிடுவார்கள்?

    ReplyDelete
  10. வியப்பிற்குரிய செய்தி ஐயா
    நன்றி
    தம +1

    ReplyDelete
  11. காலத்தின் நிகழ்தகவாக இதுபோன்ற அறிய விஷயங்கள் நிகழ்ந்து விடுகின்றன

    ReplyDelete
  12. இப்படியான செய்திகளை வாசித்திருக்கிறோம் என்றாலும்பல நினைவில் இல்லாமல் இப்படித் தொகுப்பாக வாசிக்கும் போது பல தகவல்கள் அறிய முடிகிறது. அருமையான தகவல்ள்தொகுப்பு!!!

    துளசி, கீதா

    ReplyDelete
  13. உங்கள் பதிவை மும்முறை படித்தேன். தகவல்கள் அவற்றைச் சொல்லிய விதம் எல்லாமே அருமை. இதற்கு முன்னால் இப்படிப் பிறந்த குழந்தைகளின் தகவல்களை எப்படிக் கொடுக்க முடிந்தது? வியப்பின் உச்சியில் நிற்கிறேன்.

    ReplyDelete
  14. பிறக்கும் போதே ஆகாயப் பயணம், வாழ்த்துகள் விமான பணிப்பெண்களுக்கும் விமான நிறுவனத்திற்கும்

    ReplyDelete
  15. செய்தித் தாளில் நானு ம் வாசித்தேன் 35 வார கர்ப்பிணிகள் வரை பயணம் அனுமதிக்கப் படுகிறது இந்தப் பெண்மணிக்கு 30 வாரட்த்திஏயே குழந்தை ப்ரிமசூராகப் பிறந்ததாம் பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  16. வணக்கம்
    ஐயா
    அறியமுடியாத புதிய தகவலை தந்தமைக்கு நன்றி ஐயா.
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  17. பறந்தே பிறந்தவன். எங்கோ ஒன்று நடக்கிறது. உயர்வானவன். அன்புடன்

    ReplyDelete
  18. குறிப்பிட்ட காலத்துக்கு பின் விமானப்பயணம் மறுக்கப்பட்டாலும் முன்கூட்டியே இப்படியும் குழந்தைகள் பிறந்து விடுகின்றார்கள். நமக்கு ஆச்சரியம் தரும் செய்தியாக இருந்தாலும் அந்த நேரத்தில் விமானப்பணியாளர்களின் பதட்டம் எத்தகையதாக இருந்திருக்கும் என நினைக்க முடியவில்லை. சுகப்பிரசவம் என்பது கடவுள் செயலே!

    ReplyDelete
  19. I am a fan of Readers Digest. For a long time I did not have opportunity to it. But it was Tamil journal that made me a fan of RD, because that Tamil journal carried a article how RD painstakingly makes up an article. Your article on airborne children a gives me a "Readers Digest" feeling. RD is a big army of journalists & stringers but you are a one man army. EXCELLANT

    ReplyDelete
  20. விந்தைச் செய்தி
    வியப்பில் ஆழ்த்தியது

    ReplyDelete
  21. விரிவான பதிவு பலவற்றை அறிந்தேன் நன்றி முனைவரே

    ReplyDelete