Showing posts with label அயலக வாசிப்பு. Show all posts
Showing posts with label அயலக வாசிப்பு. Show all posts

01 July 2026

அரை நூற்றாண்டுக்கும் மேலான வாசிப்புப் பழக்கம்

இளம் வயதில் தோன்றிய வாசிப்பானது பல பரிமாணங்களில் தடம் பதிக்க எனக்கு உதவியதை அனுபவம் மூலமாக உணர்ந்துள்ளேன். மேம்போக்காக இல்லாமல் முழுமையான ஈடுபாட்டோடு வாசிக்கப்படும்போது கற்கின்ற நுட்பங்களும், பெறுகின்ற அனுபவங்களும் எண்ணற்றவையாகும். வாசிப்பானது பல துறை அறிவை ஊட்டும். நினைவாற்றலை மேம்படுத்தும். சிந்திக்கும் திறனை வளர்க்கும். அவ்வகையில் நான் கடந்துவந்த பாதையைத் திரும்பிப் பார்க்கிறேன். 50 ஆண்டுகள் சற்றே பின்னோக்கிச் செல்வோம். 

1960கள். எங்களுடைய தாத்தா திரு ரெத்தினசாமி அவர்களின் நாத்திகம், நவசக்தி இதழ்களின் வாசிப்பானது பள்ளிக்காலத்தில் என்னுடைய வாசிப்புக்கு ஓர் ஆரம்பமானது. தாத்தாவின் நண்பர் நம்மை மேம்படுத்த வாசிப்புப்பழக்கம் உதவும் என்பார். அவ்வப்போது அவ்விதழ்களைப் படிப்பேன். 

எங்கள் தங்க ராஜா படத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நவசக்தி இதழுடன்
நன்றி : கோல்டன் சினிமா

1970கள். எஸ்.எஸ்.எல்.சி. படித்தபோது என் நண்பரின் தந்தை ஆங்கிலச்சொற்றொடர்களைக் கூறி அதற்கான பொருளையும் கூறுவார். அப்போது ஆங்கில இதழை வாசிக்கவேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. அண்டை வீட்டில் இருந்த தி இந்து வாசகர் வீட்டிற்குச் சென்று அதனை வாசிப்பேன்.  

கல்லூரியில் படித்தபோது தட்டச்சு போன்றவற்றைக்கற்றேன். புதிய சொற்களைத் தட்டச்சிடும்போது அதற்கான பொருளை அகராதிகளில் பார்த்துத் தெரிந்துகொள்வேன். வகுப்பில் ஆசிரியர் பாடமெடுக்கும்போது தெரியாத சொற்களுக்கு விளக்கம் கேட்பேன். இல்லம், தட்டச்சுப் பயிற்சி நிலையம்,  கல்லூரி என்ற  வகைகளில் தேடலைத் தொடர்ந்தேன்.  

நாளிதழ்களில் புதிய சொற்கள் பயன்படுத்தும்விதம், தலைப்புச் செய்திக்கான எழுத்துரு வடிவமைப்பு, பக்க அமைப்பு, பத்திப் பிரிப்பு, உரிய படங்கள் அமைக்கப்படல், பெட்டிச்செய்திகள் போன்றவற்றையும்,  ஒரே செய்தி பிற இதழ்களில் பல நடைகளில் அமையும் விதத்தையும் கவனிப்பேன்.  

1980கள். வெளியூர்களில் பணியாற்றியபோதும்  நாளிதழ் வாசிப்பு தொடர்ந்தது. வாசகர் கடிதம் எழுத ஆரம்பித்தேன்.  வங்கித்தேர்வு தொடர்பாக நான் எழுதிய கடிதம் இந்தியன் எக்ஸ்பிரஸ் இதழில்  வெளியானது. தி இந்துவில் உங்கள் ஆங்கிலத்தைத் தெரிந்துகொள்ளுங்கள் என்ற பகுதியில் சில சொற்களுக்கான பொருளைக் கேட்டு நான் எழுதிய கடிதங்கள் என் பெயருடன் வெளியாயின.  


இந்திரா காந்தி இறந்தபோது தி இந்துவில் இந்திரா காந்தி அசாசினேட்டட் என்றும், இந்தியன் எக்ஸ்பிரஸ் இதழில் இந்திரா காந்தி ஷாட் டெட் என்றும் முதல் பக்கச் செய்தி வெளியாகியிருந்தது.  தி இந்து இதழின் சகோதர இதழாக அறிமுகமான பிரண்ட்லைன் இதழின் வாசகனானேன். அதிலும், இந்தியா டுடே உள்ளிட்ட பருவ இதழ்களிலும் நான் எழுதிய கடிதங்கள் வெளியாயின.  

1990கள். அடுத்து, சிறுகதை எழுத முயற்சி எடுத்தேன். முதல் சிறுகதை குங்குமம் இதழிலும், தொடர்ந்து பாக்யா, சாவி, குங்குமம், தின பூமி, கதைபூமி, மங்கையர் பூமி, இதயம் பேசுகிறது, தமிழரசி, வாசுகி, மேகலா, டி.ராஜேந்தரின் உஷா, ராஜரிஷி உள்ளிட்ட இதழ்களிலும் வெளியாயின. சிலவற்றுக்கு காசோலை, மணியார்டர்  மூலமாக மதிப்பூதியம் பெற்ற அனுபவமும் உண்டு. 




ஒரு முறை தி இந்து நாளிதழில் வந்த, அல்லாடி கிருஷ்ணசாமி கட்டுரையை முதல் முதலாக நேரடியாக சுமார் 65 நிமிடங்களில் தமிழ்த் தட்டச்சுப்பொறியில் தட்டச்சு செய்தேன். பின்னர் இம்முறையில் பல கட்டுரைகளை தமிழில் மொழியாக்கம் செய்தேன். வாசிப்பு அனுபவமானது மொழியாக்க ஆர்வத்தை மேம்படுத்தியது.  

2000கள். தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்ட ஆய்வினை நிறைவு செய்து பல கருத்தரங்குகளில் கலந்துகொண்டு ஆய்வுக்கட்டுரைகள் வழங்கினேன். கதை எழுதுவதிலிருந்து சற்றே மாறுபட்டு, உரிய மேற்கோள்கள், சான்றுடன் எழுதும் முறையை அறிந்தேன். இக்கட்டுரைகளை கருத்தரங்குகளில் வாசித்தபோது மேடைப் பேச்சு அனுபவம் கிடைத்தது. 

2010கள். ஒவ்வொரு ஆங்கில அகராதியும் ஒவ்வோராண்டும் ஆண்டின் சிறந்த சொல்லைத் தெரிவு செய்வர். அதனைக் கட்டுரைகளாக மொழிபெயர்த்தேன். 2017ல் சிறந்த சொல் என்ற கட்டுரை தி இந்து தமிழ்ப்பதிப்பிலும், தொடர்ந்து தினமணி உள்ளிட்ட இதழ்களிலும் வெளியாயின.  இதே காலகட்டத்தில் தி தி கார்டியன், டெய்லி மெயில், டெய்லி எக்ஸ்பிரஸ், தி டைம்ஸ், டெய்லி மிர்ரர், இன்டிபென்டன்ட், தி டெலிகிராப், தி சன், தி நியூயார்க் டைம்ஸ், வாஷிங்டன் போஸ்ட், பில்ட், டான் போன்ற வெளிநாட்டு இதழ்களில் வெளியான கட்டுரைகளில் செய்திகளை மொழிபெயர்த்து முன்னணி தமிழ் இதழ்களில் எழுதினேன். 



இதே காலத்தில் தமிழ், ஆங்கில விக்கிப்பீடியாக்களில் கட்டுரைகள் எழுதினேன். அவற்றில் மொழிபெயர்ப்புக் கட்டுரைகளும் அடங்கும்.  நண்பர்கள், ஆய்வாளர்களின் நூல்களைப் பற்றிய மதிப்புரையினை புக் டே தளத்தில் எழுத ஆரம்பித்தேன்.

2020கள். இதழ்களின் வடிவமைப்பின் மூலமாக, இதழ்கள் வாசகர்களைச் சென்றடைய மேற்கொள்ளும் ரசனை உத்தியை அறியமுடியும். வெளிநாட்டு இதழ்களின் வடிவமைப்பு, டேப்ளாய்ட் இதழ்களின் முக்கியத்துவம், பெரிய எழுத்து பயன்பாடு, ஆக்ஸ்போர்டு காற்புள்ளி போன்ற பதிப்பு, அச்சு நடை தொடர்பாகக் கட்டுரைகள் எழுதினேன்.   


தி இந்து நாளிதழை 50+ வருடங்களாகவும், கார்டியன் இதழை 15+ வருடங்களாகவும் வாசிக்கிறேன். வெளிநாட்டு செய்திகளில் காணப்படுகின்ற நம் நாட்டு செய்திகளைக் கவனமாக வாசிப்பேன்.

கைப்பேசியிலும், மடிக்கணினியிலும் பல முன்னணி தமிழ், ஆங்கில நாளிதழ்களை வாசிக்கிறேன். குறிப்பிட்ட அரசியல் கட்சி, தலைவர் என்பனவற்றுக்கு அப்பாற்பட்டு செய்திகளை அணுகுகிறேன். இந்தியக் குடியரசுத் தலைவர், இந்தியப் பிரதமர், தமிழக முதலமைச்சர் உள்ளிட்டோரின் சமூக இணையதள பக்கங்களைத் தொடர்கிறேன்.     

இதுவரை 2,000+ கட்டுரைகளையும், ஐந்து மொழிபெயர்ப்பு நூல்கள் உள்ளிட்ட 10 நூல்களையும் எழுதியுள்ளேன். தாத்தா மூலமாக ஆரம்பமான வாசிப்புப்பழக்கமானது, வாசகர் கடிதத்தில் தொடங்கி தற்போது குடியரசு தலைவர், குடியரசுத் துணைத்தலவர் ஆகியோரிடமிருந்து பாராட்டுக்கடிதங்கள் வாங்கும் வரை என்னை முன்னேற்றியுள்ளது. என்னுடைய வாசிப்பும், மொழிபெயர்ப்பும், எழுத்துப்பணியும் தொடரும். வாசிப்பை நேசிப்போம்.

-------------------------------------------------------------------------------------------

நன்றி: பாயும் ஒளி 100ஆவது இதழ்
-------------------------------------------------------------------------------------------

28 May 2026

மொழியாக்கம்

கும்பகோணத்தில் பேட்டைத்தெருப்பள்ளி என்று அழைக்கப்பட்ட, தற்போது அறிஞர் அண்ணா அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்தபோது (1972-75)  எங்கள் நண்பரின் தந்தை அவ்வப்போது என்னை அழைத்து, திண்ணையில் உட்காரவைத்து படிப்பைப் பற்றியும், பள்ளிப்படிப்பிற்குப் பின் உள்ள இலக்கினைப் பற்றியும் பொறுமையாகப் பேசுவார். அவ்வாறு ஒரு முறை பேசும்போது “ரயில் போகிறது” என்பதை ஆங்கிலத்தில் கூறும்படி கேட்டார். அதற்காக நான் அளித்த மறுமொழியே பின்னாளில் என்னுடைய மொழிபெயர்ப்பு ஆர்வத்திற்கு ஆரம்பமாக அமைந்தது.  

மொழியாக்கத்திற்கான ஆரம்பம்


தேடலும், வாசிப்பும்

ஆண்டின் சிறந்த சொல்

தலைவர்கள்

அரசியல், வரலாறு

பிற துறை பிரமுகர்கள்

பிற பொருண்மைகள்
இதழ் பதிப்பு, நடை



அயலக இதழ்களின் செய்தி நறுக்குகள்
Pudhu Ezuthu, Kaveripattinam



7.7.2026இல் மேம்படுத்தப்பட்டது.

30 December 2021

2021ஆம் ஆண்டின் சிறந்த சொல்

2021இன் சிறந்த சொல்லை (WOTY/Word of the year) ஆங்கில அகராதிகளும், டிஸ்னரி இணையதளமும் தெரிவு செய்துள்ளன. இவ்வாண்டின் சிறந்த ஆங்கிலச் சொற்களையும், அதற்கான  பின்னணியையும் காண்போம். 

ஆக்ஸ்போடு அகராதி

2021இன் சிறந்த சொல்லாக Vax (தடுப்பூசி) என்ற சொல்லை ஆக்ஸ்போர்டு அகராதி தேர்ந்தெடுத்துள்ளது. ஆக்ஸ்போர்டு அகராதியியலாளர்கள் ஆங்கில மொழித் தொகுப்பினைத் தேடியபோது அச்சொல் அவர்களால் குறிப்பிட்ட வகையில் அதிகமாக ஈர்த்ததாகவும், இந்த ஆண்டு வரை இச்சொல் மிகவும் அரிதாகவே பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும், செப்டம்பர் வாக்கில் அதன் பயன்பாடானது கடந்த ஆண்டோடு ஒப்பிடும்போது 72 பங்கு அதிகரித்தாகவும் இவ்வகராதி கூறியுள்ளது. இச்சொல் vax sites (தடுப்பூசி போடப்படும் இடங்கள்), vax cards (தடுப்பூசி அட்டைகள்), to getting vaxxed (தடுப்பூசி போடப்படுதல்), being fully vaxxed (முழுமையாகத் தடுப்பூசி போடப்பட்டிருத்தல்) என்பன பல சார்புச்சொற்களையும் உருவாக்கியுள்ளதாகவும், அவை அலுவல்சாரா முறையில் பயன்படுத்தப்படுவதாகவும், இச்சொல்லைத் தவிர வேறு எந்தசொல்லும் கடந்த ஆண்டு சூழலை இந்த அளவிற்கு ஈர்க்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது என்கிறது இவ்வகராதி. 

 கேம்பிரிட்ஜ் அகராதி


2021இன் சிறந்த சொல்லாக perseverence (விடாமுயற்சி) என்ற சொல்லைத் தேர்ந்தெடுத்து இன்று அறிவித்துள்ளதுகேம்பிரிட்ஜ் அகராதி. Perseverance என்றால் ஒன்றை சாதிக்க, நிறைவேற்ற சில சமயங்களில் ஆதிக நேரம் ஆனாலும்கூட, மேற்கொள்ளப்படுகின்ற தொடர் முயற்சி எனப்படும் என்றும் 2021இல் உலகம் முழுவதும் கோவிட்19 மற்றும் பல பிரச்னைகளை வாழ்வில் எதிர்கொண்டபோது தொடர்முயற்சி எடுத்து அதனை எதிர்கொண்டனர் என்றும் இவ்வகராதி கூறுகிறது. "கடினமான சூழலை மக்கள் எதிர்கொள்ளும்போது அவர்களைப் புகழ்கிறோம். அவ்வகையில் இச்சொல் ஓர் நேர்மறைச்சொல்லாகிறது. கேம்பிரிட்ஜ் அகராதியின் வலைப்பக்க வாசகர்கள் தம் ஆங்கில அறிவை வளர்த்துக்கொள்ள அதனைத் தொடர்ந்து வாசித்தும், பகிர்ந்தும், அதில் இடப்படுகின்ற பதிவுகளுக்கு மறுமொழி தந்தும் தம் மன உறுதியைக் கடைபிடித்துவந்துள்ளதைக் காண்கிறோம். வாசகர்களின் ஆதரவு எங்களுக்கு வெற்றியை ஈட்டித் தந்துள்ளது. நீங்கள் எங்கள் அகராதியை நாடுவதற்குக் காரணம் நாங்கள் தருகின்ற விளக்கங்கள் குறிப்பாக ஆங்கிலம் கற்போருக்காகவே அமைந்துள்ளன. அவை ஆங்கிலம் எந்த வகையில் உண்மையாகப் பயன்படுத்தப்படுகிறது என்ற ஆழமான ஆய்வின்மூலமாகவும் அமைக்கப்பட்டுள்ளன. கற்போரால் இச்சொல் அதிகமாகப் பயன்படுத்தாவிட்டாலும், உலகளாவிய நிலையில் இச்சொல்லானது 2021இல் 2,43,000 முறை பயன்படுத்தப்பட்டதை எங்களின் புள்ளிவிவரப்படி அறியமுடிகிறது. செவ்வாய்க்கிரகத்தில் நாசாவின் ரோவர் தரையிறங்கியபின்னர், 18 பிப்ரவரி முதல் 24 பிப்ரவரி வரை 30,847 முறை இச்சொல் தேடப்பட்டது. இச்சூழலில் 2021இன் சிறந்த சொல்லாக இச்சொல் தேர்ந்தெடுக்க இக்காரணிகள் துணையாக இருந்தன" என்கிறது இவ்வகராதி. நாங்கள் பயன்படுத்துகின்ற மொழியானது எந்த அளவிற்கு நடப்பு நிகழ்வுகளில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை இவை போன்ற காரணிகளே நிர்ணயிக்கின்றன.

மெரியம் வெப்ஸ்டர் அகராதி

2021இன் சிறந்த சொல்லாக Vaccine (தடுப்பூசி) என்ற சொல்லை மெரியம் வெப்ஸ்டர் அகராதி தேர்ந்தெடுத்துள்ளது. "நம் மதிப்பீடுகளை, எண்ணங்களை, ஆசைகளை வெளிப்படுத்த நாம் தினமும் சொற்களைப் பயன்படுத்துகிறோம். கருத்தியல்ரீதி்யிலான மோதலில் அவை முக்கியமான பங்காற்றுகின்றன. 2021இல் இதுதான் நிகழ்ந்தது. 2020இல் வாழ்வில் பெரும் தாக்கத்தினை ஏற்படுத்திய கொரோனா பரவலானது அரசியல்ரீதியான விவாதத்தையும், பிரிவிற்கான ஓர் ஆதாரத்தையும் உண்டாக்கியது. நம் காலத்திய பெரிய அறிவியல் நிகழ்வானது விவாதப்பொருளாக மாறியது. இச்சூழலில் தடுப்பூசி என்ற சொல் முக்கியமான இடத்தைப் பெறுகிறது" என்கிறது மெரியம் வெப்ஸ்டர் அகராதி.

 

காலின்ஸ் அகராதி

காலின்ஸ் அகராதி NTF என்ற சொல்லை இவ்வாண்டின் சிறந்த சொல்லாக அறிவித்துள்ளது. Non-fungible token என்பதன் சுருக்கமான NFT டிஜிட்டல் வடிவிலான அடையாளம் ஆகும். அதிகம் நாடப்படுகின்ற ஒளிப்படங்கள், வீடியோக்களுக்காக வர்த்தகத்தின்போது பரிமாறப்படுகின்ற டிஜிட்டல் விலைமதிப்பினை இது குறிக்கிறது. இதனை டிஜிட்டல் சொத்து என்று கூறலாம். .இவ்வகராதி இவ்வாண்டு தேர்ந்தெடுத்த 10 சொற்களில் இச்சொல் உள்ளிட்ட தொழில்நுட்பம் சார்ந்த மூன்று சொற்களும் அடங்கும் என்கிறது இவ்வகராதி.

டிஸ்னரி இணைய தளம்


2020ஆம் ஆண்டின் துருவப்படுத்தப்பட்ட நிலையும், இருத்தல் அல்லது சர்வதேசப்பரவல் காரணமான தாக்கங்களும் அவற்றை எதிர்கொள்ள பல வழிமுறைகளை நாம் 2021இல் கையாண்ட வகையில், alllyship (கூட்டு அல்லது கூட்டணி) என்ற சொல்லைத் தெரிவு செய்துள்ளது டிஸ்னரி இணையதளம். "ஓர் ஆண்டில் காணப்பட்ட பரவலை ஒற்றைய சொல்லில் அடக்கிவிடமுடியாது. இருந்தபோதிலும் இச்சொல் பலவற்றுடன் பின்னிப்பிணைந்த ஒரே சொல்லாகும். இந்த ஆண்டின் சிறந்த சொல்லாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட இச்சொல் எங்கள் அகராதிக்குப் புதியது என்ற வகையில் சிறப்பினைப் பெறுகிறது. சமுதாயத்தின் அனைத்து நிலைகளிலும் உள்ள பாதிக்கப்பட்ட அல்லது குறிப்பிட்ட வகையிலான பிரிவிற்காக குழுவின் ஓர் உறுப்பினர் என்ற நிலையிலன்றி ஒன்றிணைந்து தம் தலைமைப்பொறுப்பிலும், பார்வையிலும் செயல்படுவதை இச்சொல் குறிக்கிறது" என்கிறது இவ்வகராதி.

2020இன் சிறந்த சொல்லாக "க்வாரன்டைன்" (கேம்பிரிட்ஜ்), "பான்டெமிக்" (மெரியம் வெப்ஸ்டர் மற்றும் டிஸ்னரி இணையதளம்),  "லாக் டவுன்" (காலின்ஸ்) ஆகியவை தேர்ந்தெடுக்கப்பட்டன. சிறந்த சொல்லைத் தெரிவு செய்ய இயலா நிலையைக் கூறியிருந்தது ஆக்ஸ்போர்டு அகராதி.

கொரோனா தீநுண்மியின் தாக்கம் இன்னும் குறையவில்லை என்பதை உணர்த்தும் வகையில் 2021இலும் அது தொடர்பான சொற்கள் அகராதிகளால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. தமிழில் இவ்வாறாக ஆண்டின் சிறந்த சொல் தேர்ந்தெடுக்கப்படுகின்ற ஒரு முயற்சி மேற்கொள்ளப்படும் நாள் விரைவில் வரும் என நம்புவோம்.      


துணை நின்றவை: மேற்கண்ட அகராதிகளின் தளங்கள்

22 August 2021

ஜெர்மானிய இளைஞர்களின் 2020ஆம் ஆண்டின் சிறந்த ஆங்கிலச்சொல்

வாசகர்களின் வாழ்வில் முக்கியமான இடத்தை அகராதிகள் பெறுகின்றன. காலச்சூழலுக்கேற்ப பயன்பாட்டு நிலை மற்றும் பயன்படுத்தப்படும் சூழல் என்ற வகையில் புதிய சொற்கள் அகராதியில் இடம் பெற ஆரம்பிக்கின்றன. இதனைத் தவிர குறிப்பிட்ட சில சொற்கள் ஓர் ஆண்டில் ஒரு குறிப்பிட்ட காரணத்தின் அடிப்படையில் அதிகம் பயன்படுத்தப்படுகின்ற சொற்களாக அமைந்துவிடுகின்றன.  அந்த வகையில் அந்தந்த ஆண்டிற்கான அந்த மொழியின் சிறந்த சொல் தெரிவு செய்யப்பட்டு வருகிறது. ஜெர்மனி (1971), ஜப்பான் (1995), ரஷ்யா (2007),  டென்மார்க் (2008), போர்ச்சுக்கல் (2009), நார்வே (2012), உக்ரைன் (2013) உள்ளிட்ட நாடுகள் ஆண்டின் தத்தம் மொழிக்கான சிறந்த சொல்லைத் தெரிவு செய்து அவ்வப்போது அறிவிக்கின்றன. 




மெரியம் வெப்ஸ்டர் அகராதி (2003), ஆக்ஸ்போர்டு அகராதி (2004), ஆஸ்திரேலிய தேசிய அகராதி மையம் (2006), ஆஸ்திரேலிய ஆங்கிலேய மொழிக்கான மக்கையர் அகராதி (2006), கேம்பிரிட்ஜ் அகராதி, டிக்ஸனரி இணைய தளம் (2010), காலின்ஸ் அகராதி  (2013) உள்ளிட்ட ஆங்கில அகராதிகளும், அகராதிகளின் இணையதளங்களும் சிறந்த ஆங்கிலச்சொல்லை பல ஆண்டுகளாகத் தெரிவு செய்கின்றன. 

ஜெர்மனியில் ஒவ்வோராண்டும் சொல் தேர்வில் மூன்று நடைமுறைகள் கடைபிடிக்கப்பட்டு வருகின்றன. 1971 முதல் சிறந்த ஜெர்மானியச்சொல்லும் (Word of the Year : Germany), 1991 முதல் பொருத்தமற்ற ஜெர்மானியச் சொல்லும் (Un-word of the Year : Germany), 2008 முதல் இளம் ஜெர்மானியரால் சிறந்த ஆங்கிலச் சொல்லும் (German Youth Word of the Year) தேர்ந்தெடுக்கப்பட்டு வருகின்றன. 2020ஆம் ஆண்டிற்கான சிறந்த சொல்லும், பொருத்தமற்ற சொல்லும் விரைவில் அறிவிக்கப்படவுள்ளன. 2020ஆம் ஆண்டிற்கான இளம் ஜெர்மானியரின் சிறந்த ஆங்கிலச் சொல் அண்மையில் அறிவிக்கப்பட்டுள்ளது. 

2008ஆம் ஆண்டு ஜெர்மனிய இளைஞர்கள் தமக்குப் பிடித்த சொல்லைத் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பினைப் பெறுகின்றார்கள். அன்றாட மொழியில் இளைஞர்களின் உறவை வெளிப்படுத்துவதற்காக லாங்கென்சேடிட் (Langenscheidt) என்ற பதிப்பகம் இந்தப் போட்டியை ஆரம்பித்தது. 2019ஆம் ஆண்டு முதல் பொன்ஸ் பதிப்பகம் (Pons publishing house) இதனைத் தொடர்கிறது.  லாஸ்ட் (Lost) என்ற ஆங்கிலச் சொல் 2020இன் ஜெர்மானிய இளைஞர்களுக்கான சிறந்த சொல்லாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜெர்மானிய மொழியில் இதன் பொருள் உறுதியற்ற தன்மை அல்லது சிலவற்றைப் புரிந்துகொள்ள இயலாநிலை என்பதாகும். பொன்ஸ் பதிப்பகம்  இளைஞர்களை 2020ஆம் ஆண்டுக்கான சிறந்த சொல்லைத் தேர்ந்தெடுக்கும்படி கேட்டுக்கொண்டபோது 48 விழுக்காட்டினர் வாக்களித்த வகையில் இந்த சொல் தெரிவு செய்யப்பட்டுள்ளது. 

ஜெர்மன் மொழியியலாளரான நில்ஸ் பாஹ்லோ (Nils Bahlo) இவ்வாறான சொல் தெரிவு பற்றி பின்வருமாறு கூறுகிறார்: “ஆங்கிலத்தை ஒரு நாகரிகமான மொழியாக கருதுவதால் அன்றாட வாழ்க்கையில் ஜெர்மனியில் உள்ள இளைஞர்கள் ஆங்கிலச் சொற்களைத் தொடர்ந்து பயன்படுத்தி வருகின்றார்கள். தமக்கு சமமான நிலையில் பாவித்து தொடர்புகொள்வதும், அதாவது ஒத்த கருத்துள்ளோரையோ, நண்பர்களையோ அடையாளம் காண்பதும் இளைஞர்களுக்கு அவசியமாகிறது. மொழியுடனான தொடர்பும் இங்கு முக்கிய இடத்தைப் பெறுகிறது. ஒரு குழந்தையானது நடக்க ஆரம்பிப்பதைப் போல இளைஞர்கள் மொழியைத் திறமையாகப் பயன்படுத்துவதை நன்கறிய வேண்டும்.  தம்மைப் பற்றி வெளிப்படுத்திக்கொள்ள மொழியை ஒரு தூண்டுகோலாகவே  இளைஞர்கள்  நினைக்கின்றார்கள். அயலகத் தாக்கத்தினால் ஜெர்மானிய மொழி தரம் தாழ்ந்துகொண்டிருப்பதாக நினைக்கின்றார்கள். ஆனால் உண்மை அதுவல்ல. தாக்கம் இருப்பது உண்மைதான், ஆனால் அதன் விழுக்காடு மிகவும் குறைவே. மொழியைப் பற்றி சிந்திக்கவும், நம் மொழியுடன் இணைந்து பணியாற்றவும் இளைஞரின் சொல் தேர்வுத் தெரிவு அவசியமாகிறது.” 

கடந்த 300 ஆண்டுகளுக்கும் மேலாக இளைஞர்களுக்கான மொழியில் பெரிய அளவிலான மாற்றம் இல்லை. மொழியின் குணநலன் மாறிவிட்டாலும்கூட, சண்டையிட்டுக்கொள்ளல், குடித்தல், பள்ளிக்குச் செல்லல், இசையை ரசித்தல், பழக்க வழக்கங்களை கடைபிடித்தல் போன்றவற்றில் பெரிய மாற்றத்தைக் காணமுடியவில்லை. 

ஜுன் 2020இல் ஆரம்பித்த இந்தத் தேர்வில் 10 லட்சத்திற்கும் மேல் வாக்களித்துள்ளனர். இணையம் மூலமாக தம் கருத்துகளை அறிவிக்கும்படி இளைஞர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டனர். அவ்வாறு வந்தவற்றில் 10 சொற்கள் தெரிவு செய்யப்பட்டு, அதிலிருந்து ஒரு சொல் தேர்ந்தெடுக்கப்பட்டது. சொல்லைத் தேர்ந்தெடுக்கப்பட்ட குழுவில் இருந்த முக்கியமான மூவரும், முந்தைய போட்டிகளில் பெற்றி பெற்றோரும் ஆங்கில மொழியினைப் பின்புலமாகக் கொண்டவர்கள் ஆவர். 

இளைஞர்கள், தம்மை மூத்தோரிடம் வேறுபடுத்திக் காண்பிக்கும்பொருட்டு வித்தியாசமான சொற்களைப் பயன்படுத்துகின்றார்கள் என்றும், அவர்கள் பெரும்பாலான நேரத்தை சமூக வலைதளங்களில் பயன்படுத்தும்போது, அதில் அதிகமாக கையாளப்படுகின்ற ஆங்கில மொழியையே பயன்படுத்துகின்றார்கள் என்றும், அதனை அவர்கள் நாகரிகமாகக் கருதுவதாகவும் கூறுகிறார் பெர்லின் பல்கலைக்கழக ஆங்கில மொழியியல் பேராசிரியரான அலெக்சியாடோ (Alexiadou).

2020ஆம் ஆண்டிற்கான சிறந்த ஜெர்மானியச்சொல்லும் பொருத்தமற்ற ஜெர்மானியச்சொல்லும், பிற மொழிகளில் ஆண்டிற்கான சிறந்த சொல்லும் அறிவிக்கப்பட்டு வருகின்ற நிலையில் தமிழில் ஆண்டின் சிறந்த சொல் அறிவிக்கப்படும் நாளுக்காகக் காத்திருப்போம்.  

துணை நின்றவை

Word of the Year, Wikipedia
Word of the Year (Germany), Wikipedia
Un-word of the Year (Germany), Wikipedia
This is the German youth word of the year for 2020, The Local De, The Local Germany, 15 October 2020
‘Lost’ is Germany’s youth word of the year 2020, Germany DW, 15 October 2020
Youth word of the year : Lost prevails, en24 news, 15 October 2020

நன்றி : திகிரி ஏடு 3, அகம் 2, ஜூலை-செப்டம்பர் 2021 

-------------------------------------------------------------------------------------------
நன்றி: திகிரி, ஜூலை-செப்டம்பர் 2021
-------------------------------------------------------------------------------------------
பிற கட்டுரைகளை வாசிக்க: கட்டுரைகள்
-------------------------------------------------------------------------------------------

19.6.2026இல் மேம்படுத்தப்பட்டது.

15 May 2021

2020ஆம் ஆண்டின் சிறந்த சொல்: கொரோனா தீநுண்மி

2020இன் சிறந்த சொற்களை (WOTY/Word of the year) ஆங்கில அகராதிகள் அறிவித்துள்ளன. ஜெர்மனி (1971), ஜப்பான் (1995), ரஷ்யா (2007),  டென்மார்க் (2008), போர்ச்சுக்கல் (2009), நார்வே (2012), உக்ரைன் (2013) உள்ளிட்ட நாடுகள் ஆண்டின் தத்தம் மொழிக்கான சிறந்த சொல்லைத் தெரிவு செய்து அவ்வப்போது அறிவிக்கின்றன. ஜெர்மனியில் ஒவ்வோராண்டும் சொல் தேர்வில் மூன்று நடைமுறைகள் கடைபிடிக்கப்பட்டு வருகின்றன. 1971 முதல் சிறந்த ஜெர்மானியச்சொல்லும் (Word of the Year : Germany), 1991 முதல் பொருத்தமற்ற ஜெர்மானியச் சொல்லும் (Un-word of the Year : Germany), 2008 முதல் இளம் ஜெர்மானியரால் சிறந்த ஆங்கிலச் சொல்லும் (German Youth Word of the Year) தேர்ந்தெடுக்கப்பட்டு வருகின்றன.

ஆக்ஸ்போர்டு அகராதி, 2020ஆம் ஆண்டை ஒரு சொல்லுக்குள் அடக்கிவிடமுடியாது என்றுகூறி எதிர்பாரா ஆண்டின் சொற்களை (Words of an unprecedented year) வெளியிட்டுள்ளது. “க்வாரன்டைன்” (கேம்பிரிட்ஜ்), “பாண்டமிக்” (மெரியம் வெப்ஸ்டர்), “லாக் டவுன்” (காலின்ஸ்) ஆகிய சொற்களை அகராதிகளும், “பான்டெமிக்” என்ற சொல்லை டிஸ்னரி இணைய தளமும், “செல்ப் ஐசோலேஷன்”  என்ற சொல்லை ஆஸ்திரேலிய தேசிய அகராதி மையமும் தெரிவு செய்துள்ளன. 

கொரோனாவின் பரவலும் பாதிப்பும் இப்பூமிப்பந்தில் எந்த அளவு விரவியுள்ளன என்பதை இந்த ஆண்டிற்கான சிறந்த சொற்கள் தெரிவிலிருந்து அறிந்துகொள்ளலாம். கொரோனாவின் கோரத்தாண்டவத்தினால் ஆண்டின் சிறந்த சொற்களாக கொரோனா தொடர்புடைய சொற்களே அகராதிகளாலும், அகராதிகளின் தளங்களாலும் சிறந்த சொற்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் இந்த ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட சொற்களை ஆண்டின் சிறந்த சொற்கள் என்பதைவிட என்றும் மறக்கவேண்டிய சிறந்த சொற்கள் (Words to be forgotten ever) என்றுகூடச் சொல்லலாம்.

தொடர்ந்து எதிர்கொண்ட மோசமான விளைவுகளைக் குறிக்கின்ற கோவிட்19 என்ற சொல் 2020இல் உருவானது அதனைத் தொடர்ந்து அச்சொல்லுடன் தொடர்புடைய கொரோனா தீநுண்மி, தனிமைப்படுத்தப்படல், சமூக இடைவெளி, முகக்கவசம், தடுப்பூசி போன்ற சொற்கள் அதிகமாக புழக்கத்திற்கு வந்தன. இந்தச் சூழலில் இதுபோன்ற பல நிகழ்வுகளை எதிர்கொண்ட ஆண்டைக் குறிக்கின்ற 2020 என்பதே அனைத்து மொழிகளிலும் இந்த ஆண்டின் சிறந்த சொல்லாகக் கருதப்பட வாய்ப்புண்டு என்றது எக்கனாமிக் டைம்ஸ். 


ஆக்ஸ்போடு அகராதி

இதுவரை ஆண்டின் சிறந்த சொல்லைத் (Word of the year) தெரிவு செய்த ஆக்ஸ்போர்டு அகராதி 2020ஆம் ஆண்டுக்குச் சிறந்த சொல் தெரிவு செய்ய இயலா நிலையைக் குறிப்பிட்டு, ஒரு சொல்லுக்குள் இந்த ஆண்டை அடக்கமுடியாது என்றுகூறி எதிர்பாரா ஆண்டின் சொற்கள் (Words of an unprecedented year) என்ற ஓர் அறிக்கையை வழங்கியுள்ளது. (அதனை முந்தைய பதிவில் படித்தோம்)

கேம்பிரிட்ஜ் அகராதி

கேம்பிரிட்ஜ் அகராதி தேர்ந்தெடுத்த சொல் “க்வாரன்டைன்” (quarantine/ தனிமைப்படுத்துதல்) என்பதாகும்.  கேம்பிரிட்ஜ் அகராதியானது தமக்குக் கிடைத்த புள்ளிவிவரங்களின் அடிப்படையில் தம் அகராதியில் அதிகமாக தேடப்பட்ட சொற்களில் ஒன்றாக க்வாரன்டைன் என்ற சொல் அமைந்ததாகவும், ஆய்வின்போதான தேடலில் பொதுமக்கள் இச் சொல்லைப் பயன்படுத்தியதை நோக்கும்போது தாம் அச்சொல்லிற்கான புதிய பொருள் உருவாவதைக் கண்டறிந்ததாகவும் கூறியுள்ளது. நோய்த்தொற்று ஏற்படாமல் இருக்கவும், நோயினைப் பரவவிடாமல் இருக்கவும் ஒரு குறிப்பிட்ட கால எல்லையளவிற்கு பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியேறவும், சுதந்திரமாகப் பயணிக்கவும் அனுமதிக்கப்படா நிலை என்ற வகையில் அச்சொல்லுக்கான புதிய பொருள் அமைந்துள்ளதாகவும் நோய்த்தொற்றிலிருந்து தவிர்ப்பதற்காக பொதுமக்கள் வீட்டிலேயே இருந்த நிலையைக் குறிக்கின்ற லாக் டவுன் என்ற சொல்லுக்கு இணையாக இச்சொல் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவ்வகராதி கூறியுள்ளது. சொல்லுக்கான கூடுதல் விளக்கமானது தற்போது அகராதியில் இணைக்கப்பட்டுள்ளதாகவும், முன்பு பரவலாக கூறப்பட்டு வந்த பொருளிலிருந்து சற்று மாறுபட்ட நிலையில் அவ்விளக்கம் அமைந்ததாகவும் கூறியுள்ளது.   


மெரியம் வெப்ஸ்டர் அகராதி

மெரியம் வெப்ஸ்டர் அகராதி தேர்ந்தெடுத்த சொல் “பான்டெமிக்” (pandemic/சர்வதேச அளவில் பரவி வருகின்ற தொற்றுநோய்) என்பதாகும். சில சமயங்களில் குறிப்பிட்ட ஒரு சொல்லானது ஒரு சகாப்தத்தையேக் குறிக்கும் வகையில் முக்கியத்துவம் பெறும் என்றும், அந்த வகையில் வழக்கத்திற்கு மாறான இந்த ஆண்டில் தமக்குக் கிடைத்தப் புள்ளிவிவரங்களின்படி ஒரு குறிப்பிட்ட சொல்லே ஆண்டின் சிறந்த சொல்லாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அதிக அளவில் தம் இணையதளத்தில் பயன்படுத்தப்பட்ட அந்த சொல் பான்டெமிக் என்றும் அந்த அகராதி கூறியுள்ளது. அமெரிக்காவில் சீட்டில் மருத்துவமனையிலிருந்து முதல் கோவிட்-19 நோயாளி வெளியேறிய 3 பிப்ரவரி 2020ஆம் நாளன்று முதல் இச்சொல்லுக்கான தேடல் அதிகமானது என்றும், அதற்கு முந்தைய ஆண்டு அதே நாளில் தேடப்பட்டதைவிட 1621 விழுக்காடு அதிகமாக தேடப்பட்டதாகவும், இருந்தபோதிலும் முதன்முதலாக கோவிட் பாசிட்டிவ் கொண்ட நோயாளியைப் பற்றிய செய்தி வெளியான 20 ஜனவரி 2020 நாள் முதல் இச்சொல்லின் தேடலானது ஆரம்பமானது என்றும் அவ்வகராதி கூறியுள்ளது.


காலின்ஸ் அகராதி

காலின்ஸ் அகராதி தேர்ந்தெடுத்த சொல் “லாக்டவுன்” (lockdown/பொது முடக்கம்) என்பதாகும். கோவிட்-19 பரவலைத் தடுப்பதற்காக உலகம் முழுவதும் அரசுகளால் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளில் ஒன்றான ஊரடங்கினை இச்சொல் குறிக்கிறது. நோய்ப் பரவலைத் தடுப்பதற்காக உலகில் கோடிக்கணக்கான மக்கள் ஒட்டுமொத்தமாக எதிர்கொண்ட அனுபவத்தை இச்சொல் குறிக்கிறது என்றும் கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டில் இச்சொல் அதிகம் தேடப்பட்டதாகவும் இந்த அகராதி கூறுகிறது.

 

டிக்ஷனரி இணையதளம்

டிக்ஷனரி இணையதளமும் “பான்டெமிக்” என்ற சொல்லையே தெரிவு செய்துள்ளது. இச்சொல் இருத்தல்  மற்றும் மனித இருத்தல் தொடர்பானவற்றைக் குறிக்கிறது. 1600களின் இறுதியில் ஒருவரின்/ஒன்றின் இருத்தலுக்கான ஆபத்தை, குறிப்பாக ஓர் இனம் எதிர்கொள்கின்ற பேரழிவினை இச்சொல் குறித்தது. லத்தீன் மொழியில் வினைச்சொல்லான இச்சொல் ஜெர்மன் பெயரைக் கொண்ட, முதன்முதலில் 1919இல் பதிவான,  தத்துவ இயக்கம் என்பதிலிருந்து ஆங்கிலத்திற்கு வந்ததாகும். 2019இல் இருத்தலியல் என்பதானது காலநிலை மாற்றம், துப்பாக்கிக் கலாச்சாரம், ஜனநாயக நிறுவனங்கள் என்ற பரந்துபட்ட அளவில் விவாதிக்கப்பட்டது. பிப்ரவரி 25இல் அமெரிக்க ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரான பெர்னி சாண்டர்ஸ் பருவ நிலை மாற்றம் பற்றி விவாதித்தபோது இருத்தலியலுக்கான தேடல் 179 விழுக்காட்டிற்கு உயர்ந்தது. உலகளவில் நடைபெற்ற பருவ நிலை ஆர்ப்பாட்டங்களின்போதும், தன்னுடைய உரைகளின்போதும் செப்டம்பர் 2019இல் சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரேட்டா தன்பர்க் கூறியதையும் நினைவில் கொள்ளவேண்டும். குறிப்பாக அமெரிக்க காங்கிரசிடம் அவர் தனக்கு ஒரு கனவு உள்ளதாகவும், ஆட்சிப்பொறுப்பில் உள்ளவர்களும், ஊடகங்களும் பருவநிலை ஆபத்தை  இருத்தலியலின் அவசர நிலையாகக் கொண்டு செயல்பட ஆரம்பிக்கவேண்டும் என்று கூறியிருந்தார்.

ஆஸ்திரேலிய தேசிய அகராதி மையம்

ஆஸ்திரேலிய தேசிய அகராதி மையம் இவ்வாண்டின் சிறந்த சொல்லாக “ஐசோ” (Iso: self-isolation/தன்னை தனிமைப்படுத்திக்கொள்ளல்) என்ற சொல்லைத் தேர்ந்தெடுத்துள்ளது. செல்ப் ஐசோலேஷன் என்ற சொல்லின் சுருக்கமாக ஐசோ என்ற சொல் அமைவதாக அந்த மையம் கூறியுள்ளது. பிற அகராதிகளைப் போலவே இந்த சொல்லும் கொரோனா தொடர்புடையாக அமைந்துவிட்டது 

2004 முதல் ஒவ்வோராண்டும் சிறந்த சொல்லை அறிவித்துவருகின்ற ஆக்ஸ்போர்டு அகராதியை 2020ஆம் ஆண்டிற்கான சிறந்த ஒரு சொல்லைத் தெரிவு செய்ய முடியவில்லை என்று அறிவிக்க இட்டுச்செல்லும் நிலைக்குத் தள்ளியுள்ளது கொரோனா. பிற அகராதிகள் கொரோனா தொடர்பான சொற்களையே தேர்ந்தெடுத்துள்ளன. தமிழிலும் ஆண்டின் சிறந்த தமிழ்ச்சொல் தேர்ந்தெடுக்கப்படும் சூழல் அமையும் என்று நம்புவோம். தமிழகக் கல்வி நிறுவனங்கள், அகராதி அமைப்புகள் இதற்கான முன்னெடுப்புகளை மேற்கொள்ளலாம். அவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்டால்  2020ஆம் ஆண்டைப் பொறுத்தவரை தமிழில் கொரோனா தீநுண்மி என்ற சொல்லே இந்த ஆண்டின் சிறந்த தமிழ்ச் சொல்லாக அமைய வாய்ப்புள்ளது. போகிற போக்கினைப் பார்க்கும்போது அனைத்து மொழிகளிலும் 2021ஆம் ஆண்டிலும் இச்சொல் இடம் பெற்றுவிடுமோ என்ற ஐயத்தைத் தற்போதைய கொரோனா சூழல் ஆக்கிவிட்டுள்ளது. 

துணை நின்றவை

  • Word of the Year, Wikipedia
  • Word of the Year (Germany), Wikipedia
  • Un-word of the Year (Germany), Wikipedia
  • Not 'pandemic', 'corona' or 'Covid-19', but '2020' could be the word of the year, Economic Times, 10 August 2020
  • Word of the Year 2020, Oxford Languages 2020, Words of an Unprecedented Year
  • Oxford English Dictionary couldn't pick just one 'word of the year' for 2020, CNN, 23 November,2020
  • Cambridge Dictionary’s Word of the Year 2020,  A blog from Cambridge University, Quarantine, 24 November 2020 
  • Merriam-Webster’s Word of the Year 2020, Pandemic 
  • Collins’s Word of the Year 2020 is lockdown

***************************
1993 முதல் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற சோழ நாட்டில் பௌத்தம் என்ற பொருண்மையிலான என்னுடைய ஆய்வினை நூலாக்கம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டுவருவதால் வலைப்பூவில் கட்டுரைகள் எழுதுவதிலும், நண்பர்களின் பதிவுகளைப் பார்த்து கருத்தினைப் பதிவதிலும் சற்று சுணக்கம் ஏற்பட்டுள்ளது. நூலாக்கத்திற்குப் பிறகு இவை முன்போலத் தொடரும். நண்பர்கள் அன்புகூர்ந்து பொறுத்துக்கொள்ளவேண்டுகிறேன்.  
***************************





17 April 2021

ஆக்ஸ்போர்டு அகராதியின் எதிர்பாரா ஆண்டின் (2020) சொற்கள்

ஒவ்வோராண்டும் ஆக்ஸ்போர்டு ஆங்கில அகராதியும், பிற அகராதிகளும் அந்த ஆண்டுக்கான சிறந்த சொல்லைத் தெரிவு செய்கின்றன. ஆக்ஸ்போர்டு ஆங்கில அகராதி 2018இன் சிறந்த சொல்லாக டாக்சிக் என்ற சொல்லையும், 2019இன் சிறந்த சொல்லாக கிளைமேட் எமர்ஜென்சி என்ற சொல்லையும் தெரிவு செய்திருந்தது. 2020ஆம் ஆண்டிற்கான சிறந்த சொல்லைத் தெரிவு செய்ய இயலா நிலை உள்ளதாகவும், ஒரு சொல்லுக்குள் இந்த ஆண்டை அடக்கமுடியாது என்றும் அந்த அகராதி தெரிவித்ததோடு, சிறந்த சொல் என்பதற்கு மாறாக, எதிர்பாரா ஆண்டிற்கான சொற்களை அளித்துள்ளது.


2020ஆம் ஆண்டிற்கான சொல்லை ஆக்ஸ்போர்டு அகராதி 2004ஆம் ஆண்டு முதல் ஆக்ஸ்போர்டு அகராதிகளுடைய இவ்வாண்டின் சிறந்த ஐக்கியப் பேரரசுச் சொல் (Oxford Dictionaries UK Word of the Year) என்றும், ஆக்ஸ்போர்டு அகராதிகளுடைய இவ்வாண்டின் சிறந்த அமெரிக்கச் சொல் (Oxford Dictionaries US Word of the Year) என்றும் ஆண்டிற்கான சிறந்த ஆங்கிலச்சொல்லைத் தெரிவு செய்து வருகிறது. சில சமயங்களில் ஐக்கிய நாடுகள் மற்றும் அமெரிக்காவிற்கான சொற்கள் ஒரே சொல்லாக அமைவதும் உண்டு. அவ்வாறாக தெரிவு செய்யப்படுகின்ற ஆண்டின் சிறந்த சொல் அந்த அகராதிகள் சேர்த்துக்கொள்ளப்படும் என்று உறுதியாகக் கூற முடியாது. ஆக்ஸ்போர்டு அகராதிப்பிரிவின் மொழியியலாளர்கள், கருத்தியலாளர்கள், மற்றும் ஆசிரியர்கள், விநியோகஸ்தர்கள், விளம்பரப்பிரிவினர் உள்ளிட்ட குழுவினரால் இவ்வாறாக சொற்கள் தெரிவு செய்யப்படுகின்றன.

முந்தைய ஆண்டுகளிலிருந்து இந்த ஆண்டு சற்றே மாறுபட்டுவிட்டதாகத் தோன்றுகிறது என்றும், ஆங்கில மொழியானது இந்த ஆண்டு வழக்கம்போல தன் வளர்ச்சிக்கு ஏற்றவாறு தன்னைத் தகவமைத்துக் கொண்டுள்ளது என்றும், அந்தச் சூழலில் தமக்குக் கிடைத்த புள்ளிவிவரங்களின்படி மொழியியலாளர்கள் ஆராய்ந்தபோது ஆண்டின் சிறந்த சொல் என்ற வரையறைக்குள் அடங்குகின்ற அளவிற்கு 2020ஆம் ஆண்டு அமையவில்லை என்றும் ஆக்ஸ்போர்டு அகராதியினர் தெரிவித்துள்ளனர்.  2020ஆம் ஆண்டிற்கான சொல் தெரிவு செய்ய இயலாத நிலையில் அவர்கள், வழக்கத்திற்கு மாறாக, 2020இல் மொழியில் ஏற்பட்ட மாற்றம் மற்றும் வளர்ச்சியை அடிப்படையாக வைத்து எதிர்பாரா ஆண்டிற்கான சொற்கள் (Words of an Unprecedented Year ) என்ற ஓர் அறிக்கையைத் தயாரித்துள்ளனர்.

பொதுவாக ஆக்ஸ்போர்டின் ஆண்டின் சிறந்த சொல் என்பதானது வழக்கம்போல இந்த ஆண்டும் ஓர் ஆர்வத்தினைத் தூண்டிவிட்டிருந்தது என்றும், ஒவ்வோராண்டும் பண்பாட்டு முக்கியத்துவத்தினை அடிப்படையாகக் கொண்ட, ஒரு முக்கியமான தாக்கத்தினை உண்டாக்குகின்ற, ஒரு சொல்லைத் தெரிவு செய்வது தொடர்பாக விவாதித்தாகவும் அவ்வகராதியினர் கூறியிருந்தனர். நிறைவாக அவர்கள் ஒரு குறிப்பிட்ட சொல்லைத் தெரிவு செய்ய இயலா நிலையைக் குறிப்பிட்டு ஆக்ஸ்போர்டு அகராதிகளின் 2020க்கான எதிர்பாரா ஆண்டின் சொற்களைக் குறிப்பிட்டுள்ளனர்.   

அந்த அறிக்கையில் முக்கிய இடத்தைப் பெற்றது 2020ஆம் ஆண்டில் உலகெங்கும் முக்கிய இடத்தைப் பெற்ற பெயரடையாகும். "எதிர்பாராத வகையில் ஆங்கிலம் பேசுகின்ற உலகில் கொரோனா தொடர்பாக பல புதிய சொற்கள் இடம்பெற்றதோடு, மொழியின் முக்கியமான இடத்தைப் பெற ஆரம்பித்தன," என்கிறது அந்த அறிக்கை. கொரோனாவின் பாதிப்பானது மொழியைக்கூட விட்டுவைக்கவில்லை என்பதை இதன்மூலம் உணரமுடிகிறது.

அந்த அறிக்கையில் பல சொற்கள் (“bushfire”, “acquittal”, “covid-19”, “Black Lives Matter”, “Mail-in”, “Belaurusian”, “Moonshot”, “net zero”, “superspreader”) மாதவாரியாக விவாதிக்கப்பட்டுள்ளன. அவற்றுள் ஆஸ்திரேலியா எதிர்கொண்ட காட்டுத்தீ (ஜனவரி/புஷ்பயர்), அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் குற்றச்சாட்டு விசாரணையிலிருந்து விடுவிப்பு மற்றும் 11 பிப்ரவரி 2020 முதன்முதலில் பதிவான கோவிட்-19 என்ற சொல்லைத் தொடர்ந்து அதன் தொடர்பான ஊரடங்கு, சமூக இடைவெளி, தனிமைப்படுத்துதல், முகக்கவசம், நோய்ப்பரவல், பாதுகாப்பு கவச உடை, வீட்டிலிருந்து பணியாற்றல், இணையவழி கருத்தரங்கு போன்றவை (பிப்ரவரி/அக்குவைட்டல், கோவிட்-19), கருப்பு இனத்தவருக்கான நீதி (ஜுன்/ப்ளாக் லிவ்ஸ் மேட்டர்), அமெரிக்காவில் அஞ்சல்வழி வாக்குகள், பெலாரஸ் நாட்டில் ஜனாதிபதியின்  சர்ச்சைக்குரிய மறுதேர்தல் (ஆகஸ்ட்/மெயில்-இன், பெலாருசியன்), ஐக்கிய ராஜ்ஜிய அரசின் பெருமளவிலான கொரோனா பரிசோதனைத்திட்டம் (செப்டம்பர்/மூன்ஷாட்), 2060க்குள் கார்பன் நடுநிலை என்ற சீன அதிபர் சீ சின்பிங்கின் உறுதிமொழி மற்றும் வெள்ளை மாளிகையில் அதிக அளவிலான கொரோனா பரவல் (அக்டோபர்/நெட்ஜீரோ, சூப்பர்ஸ்பிரெட்டர்)   போன்றவை அடங்கும். நோய்ப்பரவல் என்ற சொல்லானது கடந்த ஆண்டைவிட 57,000 விழுக்காடு அதிகம் பயன்பாட்டில் உள்ளதாகக் கூறப்படுகிறது. கோவிட்டுக்கு முன், கோவிட்டுக்குப் பின் என்ற பயன்பாடுகளும் அதிகம் காணப்பட்டுள்ளது.


தொடர்ந்து ஒவ்வோராண்டும் சிறந்த சொல்லை அறிவித்த இந்த அகராதியானது, திங்களன்று (23 நவம்பர் 2020) 2020ஆம் ஆண்டிற்கான சிறந்த ஒரு சொல்லைத் தெரிவு செய்ய முடியவில்லை என்பதை முதன்முதலாக அறிவித்துள்ளது. 2020இன் சிறந்த சொல்லாக லாக் டவுன் என்ற சொல்லை காலின்ஸ் அகராதியும் க்வாரன்டைன் என்ற சொல்லை கேம்பிரிட்ஜ் அகராதியும் அறிவித்துள்ளன. 2020ஆம் ஆண்டை எதிர்பாராத ஓர் ஆண்டு என்று அந்த அகராதி கூறியுள்ளதைக் காணும்போது 2020இல் உலகையே உலுக்கிய கொரோனாவைக் குறிக்கின்ற வகையில் 2020 என்ற சொல்லே இவ்வாண்டின் சிறந்த சொல்லாக அமைய வாய்ப்புள்ளது. பொறுத்திருந்து பார்ப்போம்.

துணை நின்றவை

Word of the Year, Wikipedia

Word of the Year 2020, Oxford Languages 2020, Words of an Unprecedented Year

Oxford English Dictionary couldn't pick just one 'word of the year' for 2020, CNN, 23 November, 2020

Can you describe the year 2020 in one word? Neither can the Oxford Dictionary, Windsorstar, 24 November 2020

Cambridge Dictionary’s Word of the Year 2020,  A blog from Cambridge University, Quarantine, 24 November 2020




-------------------------------------------------------------------------------------------
நன்றி: திகிரி, ஏப்ரல்-ஜூன் 2021
-------------------------------------------------------------------------------------------
பிற கட்டுரைகளை வாசிக்க: கட்டுரைகள்
-------------------------------------------------------------------------------------------

19.6.2026இல் மேம்படுத்தப்பட்டது