Showing posts with label கோயில் உலா. Show all posts
Showing posts with label கோயில் உலா. Show all posts

06 June 2026

கோயில் உலா

தனியாகவும், குடும்பத்தினருடனும், ஆய்வாளர்களுடனும், தேவாரப்பாடல் பெற்ற தலங்கள், மங்களாசாசனம் பெற்ற தலங்கள்,  வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்கள் உள்ளிட்ட பல இடங்ளுக்கும் சென்றுவந்ததை அவ்வப்போது வலைப்பூவில் எழுதிவந்துள்ளேன். அவை தொடர்பாக தமிழ் விக்கிப்பீடியாவிலும், ஆங்கில விக்கிப்பீடியாவிலும் நூற்றுக்கணக்கான பதிவுகளை எழுதியுள்ளேன். மேலும் ஆயிரக்கணக்கான புகைப்படங்களைப் பதிவேற்றியுள்ளேன். வாசகர்களின் எளிமையான வாசிப்புக்காக அவற்றை கீழே தந்துள்ளேன். உங்கள் அனைவருடைய ஒத்துழைப்புடன் பயணமும், பதிவுகளும் தொடரும். 

தனியாகவும், குடும்பத்தினருடன், ஆய்வாளர்களுடனும்

முனைவர் வீ.ஜெயபால் குழுவினருடன்
  • 2014-2017 (சுருக்கம்)
  • ஏப்ரல் 2014 திருவாய்ப்பாடி, சேய்ஞலூர், மேலக்கடம்பூர், ஓமாம்புலியூர், கானாட்டுமுள்ளூர், திருநாரையூர், திருக்குருக்காவூர், திருமுல்லைவாயில், காழிச்சீம விண்ணகரம்
  • செப்டம்பர் 2014 கடம்பந்துறை, ஐயர்மலை, திருப்பராய்த்துறை, கற்குடி, உறையூர், முக்கீச்சுரம்
  • நவம்பர் 2014 கண்டியூர், திருப்பூந்துருத்தி, திருஆலம்பொழில், திருக்காட்டுப்பள்ளி, திருப்பேர்நகர், திருவானைக்காவல், திருச்சி, திருவெறும்பியூர்
  • ஜூன் 2015 திட்டை, திருக்கருக்காவூர், ஆவூர், சத்திமுற்றம், பட்டீஸ்வரம், திருவலஞ்சுழி, நந்திபுரவிண்ணகரம், திருஆதனூர், காவலூர், பஞ்சவன்மாதேவீச்சரம்
  • ஜூலை 2015 பந்தணைநல்லூர், பழமண்ணிப்படிக்கரை, திருவாழ்கொளிப்புத்தூர், திருக்குரக்குக்கா, திருக்கருப்பறியலூர், திருப்புன்கூர், குருமாணக்குடி, கீழையூர், திருநின்றியூர், கஞ்சனூர், திருஇந்தளூர்
  • மார்ச் 2016 திருமங்கலக்குடி, திருக்கோடிக்கா, வேள்விக்குடி, எதிர்கொள்பாடி, திருமணஞ்சேரி, குத்தாலம், கொருக்கை, அன்னியூர், தேரழுந்தூர்,  உப்பிலியப்பன் கோயில்
  • நவம்பர் 2016 மயூரநாதர் கோயில், திருவிளநகர், கீழப்பரசலூர், செம்பொனார்கோவில், நனிப்பள்ளி, மேலப்பெரும்பள்ளம், தலைச்சங்காடு, ஆக்கூர், தலைச்சங்காடு, திருநகரி, திருவாலி, திருத்தேவனார்தொகை 
  • டிசம்பர் 2016 திருப்பாலைத்துறை, தென்குரங்காடுதுறை, திருநீலக்குடி, வைகல், திருநல்லம், கோழம்பியம், தேரழுந்தூர், திருவாவடுதுறை, நாச்சியார்கோயில், திருச்சேறை 
  • ஜனவரி 2017 திருநெய்வெணை, திருவெண்ணெய்நல்லூர், திருமுண்டீச்சரம், திருஇடையார் 
  • ஜூன் 2017 கீழ்வேளூர், நாகப்பட்டினம், திருநள்ளாறு, திருத்தெளிச்சேரி, தருமபுரம், கொட்டாரம், வேட்டக்குடி, திருக்கடையூர்
  • ஜூலை 2017 திருக்கலயநல்லூர், மருதாநல்லூர், சிவபுரம், அரிசிற்கரைப்புத்தூர், திருநரையூர்ச்சித்தீஸ்வரம், திருப்பந்துறை, வாஞ்சியம், திருவீழிமிழலை, அன்னியூர், கருவேலி, குடவாசல், கருவாய்க்கரைப்புத்தூர், நாலூர் மயானம், திருச்சேறை, திருநாகேஸ்வரம்
  • மார்ச் 2018 திருநல்லூர், திருக்கண்ணமங்கை, நன்னிலம், திருக்கண்டீச்சரம், பனையூர், விற்குடி, கூத்தனூர், திலகைபதி, அம்பர்மாகாளம், அம்பல், திருமீயச்சூர்
  • மார்ச் 2019 சக்கராப்பள்ளி, திருப்பாம்புரம், செருகுடி, திருச்சோற்றுத்துறை, சிறுபுலியூர்,  திருமழபாடியில் நந்தி திருமணம் 
  • ஏப்ரல் 2019 அவிநாசி, திருமுருகன்பூண்டி, பவானி, திருச்செங்கோடு, வெஞ்சமாக்கூடல், கொடுமுடி, கரூர்
  • செப்டம்பர் 2019 திருமருகல், திருப்புகலூர், இராமநந்தீச்சரம், திருச்செங்காட்டாங்குடி, சீயாத்தமங்கை, திருப்பயத்தங்குடி, கரவீரம்
  • மே 2022 விளமல், பெருவேளூர், தலையாலங்காடு, சிக்கல், எண்கண், தேவூர், திருப்பள்ளிமுக்கூடல், திருவாரூர்
  • ஜூன் 2022 அவளிவணல்லூர், அரித்துவாரமங்கலம், ஆலங்குடி, கொள்ளம்புதூர், திருவிடைவாயில், கோடியக்கரை, அகத்தியான்பள்ளி, வேதாரண்யம், இடும்பாவனம், உசாத்தானம்
  • ஜூலை 2022 பரிதிநியமம், கோட்டூர், திருக்களர், சித்தாய்மூர், எட்டுக்குடி, வலிவலம், கன்றாப்பூர், கச்சினம், தண்டலை நீள்நெறி, கற்பகநாதர்குளம் , தில்லைவிளாகம்
  • ஆகஸ்டு 2022 திருவஞ்சைக்களம், கொடுங்கல்லூர், திருச்சூர்
  • செப்டம்பர் 2022 ஓகையூர், திருவிடைமருதூர், கும்பகோணம், திருவேதிகுடி, திருவையாறு
  • 2023 திருநெல்வேலி, நவதிருப்பதி, திருப்பூவணம், திருப்புத்தூர், திருச்சுழி, உத்தரகோசமங்கை, திருப்புல்லாணி, சேதுக்கரை, ராமேஸ்வரம், தனுஷ்கோடி
  • 2025 விருத்தாச்சலம், திருவட்டத்துறை, பெண்ணாகடம், திருக்கூடலையாற்றூர், எருக்கத்தம்புலியூர், ஸ்ரீமுஷ்ணம், காஞ்சிபுரம் கோயில்கள், குரங்கணில்முட்டம், திருமாகறல், திருவன்பார்த்தான்பனங்காட்டூர், அச்சிறுப்பாக்கம், திருத்தண்கா, திருவேளுக்கை, திருப்பாடகம், திருப்புட்குழி, திருவெக்கா
  • 2026 நவகைலாசம், வானமாமலை, திருக்குறுங்குடி, குற்றாலம்

     
முதுமுனைவர் குடவாயில் பாலசுப்ரமணியன்/முனைவர் மணி.மாறன் உடன்

ஏடகம் குழுவினருடன்
பிற இடங்கள்

பயணம் மேற்கொண்ட இடங்கள், கலந்துகொண்ட விழாக்கள் தொடர்பாக பல பதிவுகளை, நான் எடுத்த புகைப்படங்களை இணைத்து, ஆரம்பித்துள்ளேன். கீழ்க்கண்ட இணைப்புகளைச் சொடுக்கி நான் சென்ற கோயில்கள், விழாக்கள் தொடர்பான பதிவுகளை வாசிக்க அழைக்கிறேன். 

18 September 2022

கோயில் உலா: திருவஞ்சைக்களம்

5 ஆகஸ்டு 2022 கோயில் உலாவின்போது முனைவர் வீ.ஜெயபால் அவர்கள் தலைமையில் கேரளாவில் உள்ள ஒரே தேவாரப் பாடல் பெற்ற தலமான, திருச்சூர் மாவட்டத்தில் உள்ள, திருவஞ்சைக்களம் சென்றோம். சுந்தரமூர்த்தி சுவாமிகள், சேரமான் பெருமான் நாயனார் ஆகியோரின் குரு பூஜை நாளன்று சென்ற வகையில் எங்களின் இப்பயணம் குறிப்பிடத்தக்கதாக அமைந்தது. 

கோயிலுக்கு முன் வீதியின் நடுவில் உள்ள மேடையை யானை வந்த மேடை என்று கூறுகின்றனர். கோயிலின் முதன்மை வாயில் மேற்கு நோக்கியதாக இருந்தபோதிலும், மூலவர் சன்னதி கிழக்கு நோக்கி உள்ளது. கேரள முறைப்படி இத்தலத்திலும் வெடி வெடித்து பிரார்த்தனை செய்யும் வழக்கம் உள்ளதாகக் கூறினர்.

சுந்தரர் பாடல் பெற்ற இத்தலத்தின் மூலவர் அஞ்சைக்களத்தீஸ்வரர், மகாதேவர் என்று அழைக்கப்படுகிறார். உமையம்மை என்றழைக்கப்படும் இறைவிக்குத் தனிச் சன்னதி கிடையாது. மூலவர் வழக்கமாக தமிழ்நாட்டுக் கோயில்களில் காணப்படுவதைப் போலன்றி சற்று வித்தியாசமாக இருப்பதைக் காணமுடிந்தது. கோயில் அமைப்பும் கேரள பாணியில் உள்ளது. 

சுந்தரர் கயிலை சென்ற ஆடி சுவாதி நன்னாளில் சுந்தரருக்கும் சேரமானுக்கும் சிறப்புப் பூஜை செய்வதைக் காணமுடிந்தது. அந்நாளில் மட்டும் தமிழ்நாட்டு முறைப்படி பூஜை செய்யப்படுகிறது. திருச்சுற்றில் உள்ள சுந்தரர், சேரமானின் திருமேனிகளைக் கொண்ட சன்னதியில் உள்ளே நுழைய முடியாத அளவிற்குக் கூட்டம் காணப்பட்டது.  இச்சன்னதி கோயிலில் காணப்பட்ட பிற சன்னதிகளைப் போலன்றி சுற்று மண்டபத்தில் அமைந்திருந்தது.








கோயில் வளாகம் முழுவதும் சைவ அன்பர்கள் தேவாரம் ஓதுதல் ஆங்காங்கே தனியாகவும், குழுவாகவும் ஈடுபட்டிருந்தனர். நாதஸ்வர இசை உள்ளிட்ட இசை காதில் ஒலித்துக்கொண்டே இருந்தது. கோயில் வளாகத்தில் சொற்பொழிவு நடைபெற்றுக்கொண்டிருந்ததைக் காணமுடிந்தது. வரிசையாகச் சென்று கருவறையில் இறைவனைப் பார்த்துவிட்டுத் திரும்ப சற்றே சிரமப்பட்டோம். இறைவனைக் காணவேண்டும் என்ற ஆவல் பக்தர்களிடம் இருப்பதைக் காணமுடிந்தது.

திருவஞ்சிக்குளம் செல்வதற்கு முன்பாக திருச்சூர் மாவட்டத்திலுள்ள கொடுங்கல்லூர் பகவதி அம்மன் கோயிலுக்குச் சென்றோம்.   இக்கோயில் வடக்கு பார்த்த நிலையில் உள்ளது. வடக்கு நோக்கிய கருவறையில் பகவதி எட்டு கரங்களுடன் இருந்து அருள் பாலிக்கிறார். இவரை கொடுங்கல்லூர் அம்மை என்றும் அழைக்கின்றனர்.







அடுத்து திருச்சூரிலுள்ள வடக்குநாதர் கோயிலுக்குச் சென்றோம். இங்கு பூரம் திருவிழா வாண வேடிக்கைகளுடன் சிறப்பாகக் கொண்டாடப் படுகிறது. இத்தலத்து லிங்கத்திருமேனி முழுவதும் நெய்யால் ஆனதால் நெய்லிங்கம் என்றழைக்கின்றனர். சிவராத்திரியின்போது கோயிலைச் -சுற்றி லட்சதீபம் ஏற்றப்படுகிறது. 



நாங்கள் சென்ற நாளில் அவ்வப்போது மழை பெய்த போதிலும் எவ்வித பாதிப்பும் இன்றி வழிபாட்டினைத் தொடர்ந்தோம். பயணத்தின் ஒரு கூறாக அன்பர்கள் கடற்கரையில் சென்று மணலால் லிங்கத்திருமேனியை அமைத்து வழிபட்டனர்.

முதல் நாள் இரவு தஞ்சையிலிருந்து கிளம்பி நேரடியாக திருச்சூர் சென்று அங்கு பயணத்தை நிறைவு செய்து மறுநாள் இரவு அங்கிருந்து புறப்பட்டோம். பிற மாநிலத்திற்குச் சென்ற முதல் உலாவாக இவ்வுலா அமைந்தது.  உடன் வந்த அனைவருக்கும் மன நிறைவினை இப்பயணம் தந்தது. மகாதேவரைத் தரிசிக்கச் சென்று, உடன் வடக்குநாதரையும், பகவதியம்மனையும் தரிசித்த தருணங்கள் எங்கள் மனதில் நன்கு பதிந்தன.  இதற்கு முன்னர் இக்கோயில்களுக்கு நான் தனியாகவும், சபரிமலை பயணத்தின்போதும் சென்றபோதிலும் குழுவாகச் சென்று இறைவனைத் தரிசிப்பதில் கிடைக்கும் அனுபவம் சற்றே வித்தியாசமானதாக உள்ளதை உணரமுடிந்தது.  




3 செப்டம்பர் 2022
3 செப்டம்பர் 2022 கோயில் உலாவின்போது திருவாரூர் மாவட்டம் ஓகையூர் ஜகதீஸ்வரர் கோயில், திருவிடைமருதூர் மகாலிங்கசுவாமி கோயில், தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் கும்பேஸ்வரர் கோயில், நாகேஸ்வரர் கோயில், சோமேஸ்வரர் கோயில், திருவேதிகுடி வேதபுரீஸ்வரர் கோயில், திருவையாறு ஐயாறப்பர் கோயில் ஆகிய கோயில்களுக்குச் சென்றோம். இதில் ஓகையூர் தவிர பிற கோயில்கள் நான் பல முறை சென்ற கோயில்களாகும்.


துணை நின்றவை
  • பு.மா.ஜெயசெந்தில்நாதன், திருமுறைத்தலங்கள், வர்த்தமானன் பதிப்பகம்,  சென்னை, 2009
  • விக்கிப்பீடியா, திருவஞ்சிக்குளம் மகாதேவர் கோயில் (இக்கட்டுரையில் உள்ள ஒளிப்படங்கள் என்னால் இணைக்கப்பட்டவையாகும்)
  • தினமலர் கோயில்கள், அருள்மிகு வடக்குநாதர் கோயில்
  • வீ.ஜெயபால், சைவ நால்வரால் பாடல் பெற்ற திருத்தலங்கள்சைவ சித்தாந்த ஆய்வு மையம், 28 அம்மையப்பா இல்லம், கோவிந்தராஜ் நகர், சீனிவாசபுரம் விரிவாக்கம், தஞ்சாவூர் 613 009, டிசம்பர் 2014

21 July 2022

கோயில் உலா: 2 ஜூலை 2022

2 ஜூலை 2022இல் அன்று முனைவர் வீ.ஜெயபால் அவர்களின் குழுவோடு கோயில் உலா சென்றோம். இந்த, இவ்வாண்டின் மூன்றாவது கோயில் உலாவில் பரிதிநியமம், கோட்டூர், திருக்களர், சித்தாய்மூர், எட்டுக்குடி,  வலிவலம்,  கன்றாப்பூர், கச்சினம், தண்டலை நீள்நெறி, கற்பகநாதர்குளம் , தில்லைவிளாகம் ஆகிய இடங்களிலுள்ள கோயில்களுக்குச் சென்றோம். இவற்றில் எட்டுக்குடி (சுப்பிரமணியசுவாமி) மற்றும் தில்லைவிளாகம் (வீரகோதண்டராமர்) ஆகிய கோயில்கள் தவிர பிற கோயில்கள் தேவாரப்பாடல் பெற்ற காவிரியின் தென்கரைத் தலங்களாகும். தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் அமைந்துள்ள இக்கோயில்கள் அனைத்தும் நான் முதல் முறை பார்க்கின்ற கோயில்களாகும். 

பரிதிநியமத்தில் குழுவினர் சிவ புராணம் ஓத அங்கிருந்து கோட்டூர் சென்றோம். வளரும் இளம் நாதஸ்வரக்கலைஞர்களின் திறமையைக் கண்டு ரசித்தோம். பின் பயணத்தைத் தொடர்ந்தோம். எட்டுக்குடியில் மதிய உணவுக்குப் பின் சற்றே ஓய்வெடுத்தோம்.

1) பரிதிநியமம், தஞ்சாவூர் மாவட்டம்  
பரிதியப்பர்-மங்களநாயகி 
ஞானசம்பந்தர் பாடல் பெற்றது
தஞ்சாவூர்-பட்டுக்கோட்டை சாலையில் மேல உளூர் அருகில் உள்ள தலம். 

2) கோட்டூர், திருவாரூர் மாவட்டம்  
கொழுந்தீஸ்வரர்-தேனார்மொழியாள் 
ஞானசம்பந்தர் பாடல் பெற்றது
திருத்துறைப்பூண்டியிலிருந்தும், மன்னார்குடியிலிருந்தும் இத்தலத்திற்கு வரலாம். 



3) திருக்களர், திருவாரூர் மாவட்டம்  
களர்முளைநாதர்-இளங்கொம்பன்னாள் 
ஞானசம்பந்தர் பாடல் பெற்றது
திருத்துறைப்பூண்டி மன்னார்குடி சாலையில்  உள்ள தலம். 

4) சித்தாய்மூர் (திருச்சிற்றேமம்), நாகப்பட்டினம் மாவட்டம்  
பொன்வைத்தநாதர்-அகிலாண்டேஸ்வரி 
ஞானசம்பந்தர் பாடல் பெற்றது
திருவாரூர் திருத்துறைப்பூண்டி சாலையில் ஆலத்தம்பாடியிலிருந்து  3 கிமீ தொலைவில் உள்ள தலம். 

5) எட்டுக்குடி , நாகப்பட்டினம் மாவட்டம்  
சுப்பிரமணியசுவாமி  

6) வலிவலம், நாகப்பட்டினம் மாவட்டம் 
மனத்துணைநாதர்-வாளையங்கண்ணி 
ஞானசம்பந்தர், நாவுக்கரசர், சுந்தரர் பாடல் பெற்றது
திருவாரூர் திருத்துறைப்பூண்டி சாலையில் கீவளூர் வழி சென்று இத்தலத்தை அடையலாம்.


7) கன்றாப்பூர் (கோயில் கண்ணாப்பூர்), திருவாரூர் மாவட்டம் 
நடுதறியப்பர்-மாதுமையம்மை 
நாவுக்கரசர் பாடல் பெற்றது
நாகப்பட்டினம் திருத்துறைப்பூண்டி சாலையில் சாட்டியக்குடி கூட்டுரோட்டில் பிரியும் சாலையில் 2 கிமீ சென்று ஆதமங்கலம் அடுத்து கோயில்கண்ணாப்பூர் கூட்டுரோடு என விசாரித்து அங்கிருந்து வலப்புறம் பிரியும் சாலையில் 1 கிமீ சென்றால் தலத்தை அடையலாம்.

8) கச்சினம் (கைச்சினம்), திருவாரூர் மாவட்டம்  
கைச்சினேஸ்வரர்-வெள்வளைநாயகி 
ஞானசம்பந்தர் பாடல் பெற்றது
திருவாரூர் திருத்துறைப்பூண்டி சாலையில் உள்ள தலம்.


9) தண்டளை நீள்நெறி (தண்டலச்சேரி), திருவாரூர் மாவட்டம்  
நீள்நெறிநாதர்-ஞானாம்பிகை 
ஞானசம்பந்தர், பாடல் பெற்றது
திருத்துறைப்பூண்டியிலிருந்து 3 கிமீ தொலைவில் உள்ள தலம்.


10) கற்பகநாதர்குளம் (கடிக்குளம்), திருவாரூர் மாவட்டம் 
கற்பகநாதர்-சௌந்தரநாயகி 
ஞானசம்பந்தர் பாடல் பெற்றது
திருத்துறைப்பூண்டி தொண்டியக்காடு சாலையில் இத்தலம் உள்ளது.



11) தில்லைவிளாகம், திருவாரூர் மாவட்டம்  
வீர கோதண்டராமர் 


ஒவ்வொரு பயணத்திலும் கிடைக்கின்ற அனுபவங்கள் மனதில் நிற்கும் வகையில் உள்ளன. இந்த உலாவும் அவ்வாறே அமைந்தது.

vட்டுக்குடி சுப்பிரமணியசுவாமி கோயிலில் மூலவராக முருகன், வள்ளி தெய்வானையுடன் மயிலின்மீது அமர்ந்த கோலத்தில் உள்ளார். மூலவர் சன்னதிக்கு வலது புறத்தில் சௌந்திரேஸ்வரர் சன்னதியும், இடது புறத்தில் ஆனந்தவல்லியம்மன் சன்னதியும் உள்ளன. (எண்கண்ணில் மூலவராக  பிரம்மபுரீஸ்வரர் உள்ளார். முருகனுக்கு தனி சன்னதி உள்ளது.) வலிவலம் கோயிலைப் பார்த்தபோது கீவளூர் கேடிலியப்பர் கோயில் நினைவிற்கு வந்தது. சற்றொப்ப அக்கோயிலைப் போலவே இருந்தது. கற்பகநாதர் கோயிலில் நந்தி மண்டபம் கோயிலுக்கு முன் இருந்ததைக் கண்டோம். தில்லைவிளாகம் ராமர் கோயில் இப்பகுதியிலுள்ள பஞ்சராமர் தலங்களில் (முடிகொண்டான் ராமர், அதம்பார் கோதண்டராமர், பருத்தியூர் ராமர், வடுவூர் கோதண்டராமர் ஆகியவை பிற ராமர் கோயில்கள்). கருவறையில் உலோகத்திருமேனியாக இருந்த ராமர், சீதை, லட்சுமணர், அனுமார் சிற்பங்கள் எங்களை அதிகம் ஈர்த்துவிட்டன. முதன்முதலாக கருவறையில் இங்குதான் உலோகத் திருமேனியை பார்த்தேன். ராமபிரானை வழிபட்டுவிட்டு, உலாவினை நிறைவு செய்தோம். அங்கிருந்து கிளம்பி இரவு சுமார் 10.30 மணியளவில் தஞ்சாவூர் வந்து சேர்ந்தோம்.

துணை நின்றவை
  • வீ.ஜெயபால், சைவ நால்வரால் பாடல் பெற்ற திருத்தலங்கள்சைவ சித்தாந்த ஆய்வு மையம், 28 அம்மையப்பா இல்லம், கோவிந்தராஜ் நகர், சீனிவாசபுரம் விரிவாக்கம், தஞ்சாவூர் 613 009, டிசம்பர் 2014
  • சிவ.ஆ.பக்தவச்சலம், தேவாரத் திருத்தலங்கள் வழிகாட்டி, குடியேற்றம், வேலூர் மாவட்டம், 2005
  • பு.மா.ஜெயசெந்தில்நாதன், திருமுறைத்தலங்கள், வர்த்தமானன் பதிப்பகம், சென்னை, 2009 
  • விக்கிப்பீடியா

14 July 2022

கும்பகோணம் வட்டார வரலாற்று ஆய்வுச்சங்கம் மரபு நடை

கும்பகோணத்தை மையமாகக் கொண்டு கும்பகோணம் வட்டார வரலாற்று ஆய்வுச்சங்கம் என்ற அமைப்பானது அண்மையில் கும்பகோணத்தில் ஆரம்பிக்கப்பட்டது. அச்சங்க நிர்வாகிகள் அறிமுக விழாவும் ஆலயம் அறிவோம் வரிசையில் முதல் மரபு நடையும் 3.7.2022 ஞாயிற்றுக்கிழமை காலை கும்பகோணம் நாகேஸ்வரர் கோயில் வளாகத்தில் நடைபெற்றது. 


சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட தஞ்சாவூர் தமிழ்ச்சங்கத் தலைவர் பேராசிரியர் கோ. தெய்வநாயகம் குத்துவிளக்கேற்றி நிகழ்வினைத் தொடங்கி வைத்தார். பக்தி இயக்க காலம் தொடங்கி சோழர் காலம் வரையிலும் பின்னர் தொடர்ந்து தற்போது வரையிலும் கும்பகோணம் தமிழக வரலாற்றில் ஓர் முக்கிய அங்கமாகத் திகழ்ந்து வருவதையும், அவ்வாறே திருநாவுக்கரசரால் பாடப்பெற்ற இக்கோயிலும் பல்வேறு கால கட்டங்களில் பல மாற்றங்களைக் கடந்து வந்ததையும்  எடுத்துக் கூறினார்.  

சங்கத்தின் தலைவர் திரு பால.சிவகோவிந்தன் தலைமை தாங்கினார்.  நிறுவனரும் செயலாளருமான கும்பகோணம் ஆ.கோபிநாத் கும்பகோணத்திலும், அருகிலும் உள்ள கோயில்களைப் பற்றிய முக்கியத்துவத்தினை உள்ளூர் வாசிகளான அந்தந்த பகுதி மக்களிடம் கொண்டு சேர்த்தல், கோயில்களைப் பாதுகாக்கவேண்டிய முக்கியத்துவத்தினை வலியுறுத்துதல், ஒவ்வொரு கோயிலுக்கும் உள்ள தனித் தன்மைகளையும் சிறப்புத் தன்மைகளையும் வெளியுலகிற்குக் கொணர்தல், கோயிலிலுள்ள கல்வெட்டுச் செய்திகளை அனைவரும் அறிந்துகொள்ளும் வண்ணம் எடுத்துக்கூறல், கோயிலை நன்கு பராமரித்தல்  உள்ளிட்ட சங்க நோக்கங்களை  எடுத்துக்கூறினார். 

சங்கத்தின் முக்கிய நோக்கங்களில் ஒன்றான ஆலயம் அறிவோம் என்ற வரிசையில் நாகேஸ்வரன் கோயிலில் நடைபெற்ற முதல் மரபு நடையின்போது கோயில் விமானத்தின் சிறப்பான அமைப்பு, திருச்சுற்றிலும், கோட்டங்களிலும், பிற இடங்களிலும் உள்ள சிற்பங்கள், சிற்றுருவ ராமாயணச் சிற்பங்கள் ஆகியவற்றின் நுணுக்கங்களை தெய்வநாயகம் எடுத்துரைத்தார். சிற்பங்களை நுட்பமாக ஆழ்ந்து பார்க்கும்போது பல புதிய பரிமாணங்களைப் பெறலாம் என்றும் ஆழ்ந்து நோக்கலும், உற்றுநோக்கலும் தெளிவான புரிதலுக்கு வழிவகுக்கும் என்றும் கூறினார். 

கோயிலில் உள்ள கல்வெட்டுகளைப் படித்துக்காட்டி அனைவரையும் சோழர் காலத்திற்கு அழைத்துச் சென்றார், கும்பகோணம் கோபிநாத்.

நிகழ்வின் நிறைவில் பொருளாளர் முனைவர் சீ.தங்கராசு சங்கம் தொடர்ந்து மரபு நடையினை நடத்தும் என்று கூறி அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். விழாவில் உள்ளூர் பிரமுகர்கள், வரலாற்று ஆர்வலர்கள், தொல்லியல் மாணவர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர் ஆர்வமுடன் கலந்துகொண்டனர். 

சிறப்பு விருந்தினருக்கு பொன்னாடை அணிவித்தல்  (இடமிருந்து) சீ.தங்கராசு, கோ.தெய்வநாயகம், பால. சிவகோவிந்தன், கும்பகோணம் கோபிநாத்.



நிகழ்வின்போது, பார்வையாளராகச் சென்றிருந்த என்னை சங்கத்தார் மேடைக்கு அழைத்து அறிமுகப்படுத்தி, நெகிழவைத்தனர். கும்பகோணத்தில் பிறந்து, வளர்ந்து வாழ்ந்து அனைத்துக் கோயில்களுக்கும் சென்ற அனுபவத்தையும், தமிழ் விக்கிப்பீடியாவிலும், ஆங்கில விக்கிப்பீடியாவிலும் கும்பகோணத்திலுள்ள பெரும்பாலான கோயில்களைப் பற்றி எழுதிய அனுபவத்தையும் குறிப்பிட்டுப் பேசி, வாய்ப்பு தந்தமைக்காக நன்றி கூறினேன்.



தொடர்ந்து சங்கம் மென்மேலும் வளர்ந்து வரலாற்றுக்கு முக்கியமான பங்கினை அளிக்கவும், மரபு நடை சிறக்கவும்  என் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

ஒளிப்படங்கள் நன்றி : கும்பகோணம் வட்டார வரலாற்று ஆய்வுச்சங்கம்

11 டிசம்பர் 2022இல் மேம்படுத்தப்பட்டது.