14 July 2018

அயலக வாசிப்பு : ஜுன் 2018

ஜுன் 2018இல் கார்டியன், இன்டிபென்டன்ட், டெய்லி மெயில், என்சிபிநியூஸ் ஆகிய அயலக இதழ்களில் வெளியான செய்திகளில் சிலவற்றைக் காண்போம். இவற்றில் இரு கட்டுரைகள் இந்தியா தொடர்பானவையாகும். கார்டியனில் வெளியான கட்டுரை இந்தியாவில் உள்ள தண்ணீர்ப் பிரச்னையைப் பற்றியும், டெய்லி மெயிலில் இதழில் வெளியான கட்டுரை இந்தியாவில் உள்ள உயரமான நபரைப் பற்றியும் விவாதிக்கிறது. 

நவீனத் தொழில்நுட்பம் குழந்தைகளைப் பாதிப்பதை முன்வைக்கிறது டெய்லிமெயில். குழந்தைகள் இரவில் படுக்கச் செல்வதற்கு முன் பெற்றோர்கள், அவர்களிடமிருந்து போனை வாங்கி வைத்துவிடவேண்டும். அதற்குப் பதிலாக சிறிய அலார்ம் கெடிகாரத்தை வாங்கி வைத்துவிடவேண்டும். இரவு நேரங்களில் தாமதித்துத் தூங்குவதால் உள்ள அசதியை குழந்தைகள் உணர மாட்டார்கள். ஸ்மார்ட்போன் அவர்களின் கவனத்தைத் திசை திருப்புகின்றன.எதிர்காலத்தில் குழந்தைகளின் அறிவுத்தன்மைகூட இதனால் மழுங்கடிக்கப்பட்டுவிடும். நவீனத் தொழில்நுட்பம் என்பதானது மக்களின் மூளையை அதிகம் பாதிப்புக்குள்ளாக்குகிறது.

ஸ்பெயின் நாட்டு நாளிதழான El País தன் 42 வருட வரலாற்றில் முதன்முதலாக ஒரு பெண்மணியை அவ்விதழின் ஆசிரியராக நியமித்துள்ளது. அண்மையில் இந்நாட்டில் அமைச்சரவை அமைக்கப்பட்டபோது அதில் அதிகமான பெண்கள் இடம் பெற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 67 வயதாகும் சோல்டாட் காலேகோ டயாஸ் (Soledad Gallego-Díaz), 1976இல் அவ்விதழ் ஆரம்பிக்கப்பட்ட காலகட்டத்தில் பணியில் சேர்ந்துள்ளார். புருஸ்ஸேல்ஸ், லண்டன், பாரிஸ், புவனஸ் அயர்ஸ் மற்றும் நியூயார்க் ஆகிய இடங்களின் அவ்விதழின் நிருபராக இருந்ததோடு, துணை ஆசிரியராகவும் ஆம்பட்ஸ்மேனாகவும் பணியாற்றியுள்ளார்.
உலகின் மிகவும் உயரமான, 7 அடி 6 அங்குலம் உயரமுள்ள, போலீஸ் இந்தியாவில் பஞ்சாப் மாநிலத்தில் உள்ளார். தினசரி வாழ்வில் ஜகதீப்சிங் எதிர்கொள்ளும் அனுபவங்களைக் காண்போம். 190 கிலோ எடையுள்ள அவர், தன்னுடைய யூனிபார்மை தனியாக ஒரு டெய்லரிடம் தைக்கவேண்டியுள்ளதாகவும், அவருடைய அளவு ஷுவினை (19) வெளிநாட்டிலிருந்து வரவழைப்பதாகவும் கூறுகிறார். உள்ளூரில் அவரைத் தெரியாதவர்கள் யாருமே கிடையாதாம். அவருடன் பலர் விரும்பி செல்பி எடுத்துக்கொள்கிறார்களாம். இதற்கு முன்பு உயரமான போலீஸ்காரராக கருதப்பட்டவர் இந்தியாவில் ஹரியானா மாவட்டத்தினைச் சேர்ந்த ராஜேஷ்குமார் என்பவராவார். அவர் இவரை விட இரண்டு அங்குலம் சிறியவர்.   

நாத்திகர்களைவிட சமய நம்பிக்கை உள்ளவர்கள் நீண்ட நாள்கள் வாழ்வதாக ஓர் ஆய்வு கூறுகிறது. நாத்திகர்களோடு ஒத்துநோக்கும்போது சராசரியாக நான்கு ஆண்டுகள் அதிகமாகவே அவர்கள் வாழ்கின்றார்களாம். சமூக அரவணைப்பு, அழுத்தத்தை விடுவிக்கும் பழக்கங்கள், ஆரோக்கியமற்ற வழக்கங்களைக் கடைபிடிக்காமையே அதற்குக் காரணங்களாக அமைகின்றனவாம்.
 
இந்தியாவின் தண்ணீர் பிரச்னையை அலசுகின்ற இக்கட்டுரை 2030 வாக்கில் இந்தியாவின் தேவையில் பாதியளவிற்கான தண்ணீர்தான் கிடைக்கும் என்றும் தற்போது சிம்லாவில் இந்த பிரச்னை ஆரம்பித்துவிட்டது என்று கூறுகிறது. மே, ஜுன் மாதங்களில் 15 நாள்கள் கிட்டத்தட்ட குடிதண்ணீர்க் குழாய்களில் தண்ணீர் வரவில்லையாம். வரலாற்றிலேயே இந்தியா மிக மோசமான அளவிலான தண்ணீர்ப்பிரச்னையை தற்போது எதிர்கொள்கிறது என்றும், சுத்தமான நீர் கிடைக்காத நிலையில் 600 மில்லியன் இந்தியர்கள் தண்ணீர் பிரச்னை தொடர்பான அழுத்தத்திற்கு ஆளாவார்கள் என்றும், ஒவ்வோராண்டும் சுமார் 2,00,000 பேர் மரணமடைவார்கள் என்றும் அக்கட்டுரை எச்சரிக்கிறது. 
இரு வயது குழந்தை பெற்றோரிடமிருந்து பிரிக்கப்பட்டவள் அல்ல என்று டைம்ஸ் இதழ் திருத்தம் வெளியிட்டதைக் கூறுகிறது என்பிசி நியூஸ். ஹோண்டுராவைச் சேர்ந்த அழுகின்ற, இரண்டு வயதுக் குழந்தையின் புகைப்படம், பெற்றோரிடமிருந்து பிரிக்கப்பட்டதாகச் செய்தியுடன் அவ்விதழில் வெளியானது.  


டைம்ஸ் இதழின் அட்டையில் டிரம்பைப் பார்த்து அழுவது போல அக்குழந்தையின் புகைப்படம் இருந்தது. டிரம்பின் கொள்கையை எதிர்க்கும் அளவினை உணர்த்த இப்படம் வெளியிடப்பட்டிருந்தது.  வலிந்து பெற்றோரிடமிருந்து குழந்தைகளைப் பிரிப்பதைக் கொண்டிருந்த டிரம்ப் தன் கொள்கையை மாற்றிக்கொள்வதற்கு முன்பாக அந்த புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. அக்குழந்தை தாயைவிட்டுப் பிரிக்கப்பட்ட குழந்தை இல்லை என்பது பின்னர்தான் தெரிந்ததாம்இவ்வாறாக பாதிக்கப்பட்ட 2,300 குழந்தைகளைப் பற்றி அக்கட்டுரையில் விவாதிக்கப்பட்டுள்ளது. இதழில் வெளியானதைப் பார்த்த, அந்தக் குழந்தையின் புகைப்படத்தை எடுத்த, கெட்டி இமேஜசைச் சேர்ந்த புகைப்பட நிபுணர் ஜான் மூர் டைம் இதழுடன் தொடர்பு கொண்டு உரிய திருத்தம் வெளியிட கேட்டுக்கொண்டுள்ளார். அக்குழந்தையின் தந்தை டெய்லி மெயில் இதழிடம் அக்குழந்தை தன் தாயாரிடமிருந்து பிரிக்கப்படவில்லை என்றும், இருவரும் ஒரே இடத்தில் இருந்ததாகவும் தெரிவித்தார். "என் குழந்தையின் புகைப்படத்தை அவ்வாறு நான் பார்த்தபோது என் மனம் எவ்வளவு பாடுபட்டிருக்கும் என நினைத்துப்பாருங்கள். என் இதயமே சுக்குநூறாக நொறுங்கிவிட்டது. ஒரு தந்தையாக அதனைப் பார்ப்பது மிகவும் சிரமமே. ஆனால் நான் அவள் அபாயகட்டத்தில் இல்லை என்பதை உணர்ந்தேன். அவர்கள் இப்போது பாதுகாப்பாக இருப்பதோடு எல்லையை நோக்கி பத்திரமாக தம் பயணத்தைத் தொடர்ந்துகொண்டிருக்கின்றனர்என்றார் அவருடைய தந்தை.

13 comments:

  1. பல செய்திகள் படிக்க சுவராய்மாக இருந்தன தொகுத்து அளித்த உங்களின் முயற்சிக்கு பாராட்டுக்கள்

    ReplyDelete
  2. அருமையான தகவல்
    சிந்திக்க வைக்கிறது
    தங்கள் பதிவு

    ReplyDelete
  3. 190 கிலோ எடையா? அடேங்கப்பா... உயரம் அதிகம்தான். ஆனாலும் எடை அதிகம்.

    தண்ணீர்ப்பிரச்னை மோசமாகிக்கொண்டே வருகிறது என்பது உண்மை. 2020 இல் சென்னையில் நிலத்தடி நீரே இருக்காதாம்!

    செய்திக்காக பலரும் தவறான தகவல்களை அளிப்பதும், ​அதையும் பலரும் நம்பி விடுவதும் நவீன ஊடக விபசாரத்தில், மன்னிக்கவும் வியாபாரத்தில் சகஜமாகிக்கொண்டு வருகிறது.

    சுவாரஸ்யமான தகவல்கள்.

    ReplyDelete
  4. தண்ணீர் பிரச்னை தலையாய பிரச்னை...

    ReplyDelete
  5. தண்ணீர் பிரச்சனையை மக்கள் உணரும் தருணமிது.

    ReplyDelete
  6. தண்ணீர் பிர்சனை வரப் போகிறது என்கிறார்கள். அதற்கு என்ன செய்யபோகிறோம் ஏதாவது செய்ய வேண்டும். நினைத்துப் பார்க்கவே பயமாய் இருக்கிறது தகவல் படிக்கும் போது.

    ReplyDelete
  7. உயரம் அதிகமான மனிதர் அவரது எடை கொஞ்சம் கூடுதலோ.

    தண்னீர்ப்பிரச்சனை மழை இல்லாமல் ஆகிவிடுமோ? அதனால்தான் இந்தியா முழுவதும் பாதிக்கப்படும் என்று சொல்லப்படுகிறதோ. மூன்றாவது உலகப் போர் தண்ணீரினால்தான் வரும் என்று சொல்லப்படுகிறது. பயமாய்த்தான் இருக்கிறது.

    ஊடகங்கள் செய்திகள் வெளியிடும் போது கவனமாக இருக்க வேண்டும். ஆனால் வியாபாரத்திற்காக பரபரப்பை ஏற்படுத்த என்று தவறான செய்திகளை வெளியிடுதல் என்று நடக்கிறது.

    அனைத்தும் அருமையான செய்தித் தொகுப்பு

    ReplyDelete
  8. ஸ்வாரஸ்யமான செய்திகள். உங்களால் நாங்களும் படித்தோம். நன்றி முனைவர் ஐயா.

    ReplyDelete
  9. வணக்கம் சகோதரரே

    அருமையான, சில அவசியமான தகவல் தொகுப்புகள்... உங்கள் பதிவின் மூலம் தங்களது அயலக வாசிப்பின் நன்மையில் தெரிந்து கொண்டேன். உயரம், எடை அதிமான மனிதர் அவர் தம் பிரச்சனையை எவ்வாறு சமாளிக்கிறாறோ? முதலில் தண்ணீர் பிரச்சனை இந்தியாவில் வராமல் இருக்க இறைவனை பிரார்த்திக்க வேண்டும். அதை நினைத்தாலே பயமாகத்தான் உள்ளது. மற்ற செய்திகளும் சுவாரஸ்யம்.பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
  10. ஹையா இந்தியாவில் தண்ணீர் பிரச்சனை பற்றிஅயல் நாடுகள் அதிகம்பயமுறுத்துகிறதோ

    ReplyDelete
  11. சுவாரஸ்யமாக செய்திகளைத் தேர்ந்தெடுத்திருக்கிறீர்கள்.
    ஏழடி ப்ளஸ்ஸில் நமது போலீஸ்காரர் இருப்பதுபற்றி, நமது நாட்டு மீடியாக்களே கண்டுகொள்ளவில்லை.

    டைம்-இன் அந்த அழுகின்ற குழந்தை படம் அப்பா, அம்மாவை எப்படித் துன்புறுத்தியிருக்கும்? காலத்தின் கோலம்.

    தடாலடியாக முயற்சிக்கிறார் ட்ரம்ப் என்றாலும், அமெரிக்காவின் இம்மிக்ரண்ட்ஸ் பிரச்னை அவ்வளவு எளிதாகத் தீர்வடையாது.

    ReplyDelete
  12. சுருக்கமான கச்சிதமான சுவாரஸ்யமான தொகுப்பு.
    தண்ணீர் பிரச்னையை நினைத்தால் பயமாகத்தான் இருக்கிறது.
    உயரமான மனிதர் உடை தைத்துக் இருக்கட்டும், படுத்துக்கொள்வது எப்படி? மேட் டு ஆர்டர் கட்டிலா? கூரை விசிறி சரிபடுமா?

    ReplyDelete