08 October 2024

திண்டுக்கல் தனபாலன் அவர்களுக்கு நீங்களும் உதவலாம்.

 நண்பர்களுக்கு வணக்கம். தேவியர் இல்லம் திரு ஜோதிஜி அவர்களின் பதிவினைத் தந்துள்ளேன். நம்மால் ஆன உதவியை திரு திண்டுக்கல் தனபாலன் அவர்களுக்குச் செய்வோம்...பா.ஜம்புலிங்கம்

திண்டுக்கல் தனபாலன் அவர்களுக்கு நீங்களும் உதவலாம்.



ஜனவரி 2024 க்குப் பிறகு இன்று தான் இங்கே உள்ளே வந்துள்ளேன். வலைபதிவில் எழுதியது போதும் என்ற மனநிலை உருவானது.  2009 ஜுலையில் வலைபதிவு எழுத்துப் பயணத்தை தொடங்கினேன். முழுமையாக 15 வருடங்கள். மனதில் இருந்த, உருவான விருப்பங்கள் அனைத்தையும் நிறைவேற்றிக் கொண்டேன்.

தொடர்ந்து ஃபேஸ்புக்கில் எழுதிக் கொண்டு வந்தேன்.  மே 4  2024 அன்று கடைசியாக எழுதினேன்.  மே 5 அதிகாலை செய்தி வந்தது.  அம்மா காலமாகிவிட்டார்.  ஃபேஸ்புக்கில் எழுதுவதையும் நிறுத்திவிட்டேன்.  எழுத்துலகில் இருந்து முழுமையாக 150 நாட்களாக என்னை துண்டித்துக் கொண்டு விட்டேன்.

சென்ற வாரம் வரை பல்வேறு காரணங்களுக்காக தொடர்ந்து ஊருக்கு பயணம் செய்வதில் முக்கால்வாசி நேரம் முழுங்கி விடுகின்றது. மே தொடங்கி நேற்று வரை எங்கும் எதிலும் எதைப்பற்றியும் எழுதவில்லை. எல்லாவற்றிலும் இருந்து ஒதுங்கி விட்டேன். மிக நெருக்கமானவர்கள் அழைத்துக் கேட்ட போதும் கூட இங்கு இப்போது எழுதும் தகவல்களை எவரிடமும் பகிர்ந்து கொள்ளவில்லை.  காரணம் எல்லாவற்றிலும் இருந்து விலகியிருக்க விரும்பினேன்.  அடுத்த ஒரு வருடம் இப்படியே இருந்து விட வேண்டும் என்ற எண்ணத்தின் காரணமாக.

கடந்த 15 வருடங்களை பின்னோக்கி திரும்பிப் பார்க்கையில் உணர்ச்சி, உணர்வு, அறிவு இவை மூன்றும் என்னை வழி நடத்தியிருப்பதை உணர்ந்து கொள்ள முடிந்தது.  நான் சார்ந்துள்ள தொழில் வாழ்க்கையில் கிடைக்காத நண்பர்கள் அனைவரும் என் எழுத்துலக வாழ்க்கையின் மூலம் தான் கிடைத்தார்கள்.  அதில் ஒருவர் திண்டுக்கல் தனபாலன்.

உலகம் முழுக்க குறைந்த பட்சம் 5000 க்கும் மேற்பட்ட வலைபதிவர்களின் வாழ்க்கையோடு, அவர்களின் நம்பிக்கையோடு, எழுத்துலக வளர்ச்சியோடு தொடர்புடையவர். அசாத்தியமான திறமைசாலி. எதையும் எவரிடமிருந்து எதிர்பார்க்காத தன்னலம் கருதாத யோகி.  அதனால் தான் அவரை வலையுலக சித்தர் என்று அனைவரும் அழைத்தனர். பொருத்தமான பட்டமிது.

சமூகவலைதளங்கள் பக்கம் அதிகம் செல்லாமல் இருந்த எனக்கு நண்பர் ஒருவர் முரளி அவர்கள் திண்டுக்கல் தனபாலன் குறித்து எழுதியிருந்த கடித வடிவத்தை எனக்கு அனுப்பியிருந்தார்.  தனபாலன் கடைசியாக என்னிடம் பேசியது என் அம்மா இறந்த அதே மே மாதம். வீடு கட்டியிருந்தார். புதுமனைபுகுவிழாவிற்கு வாட்ஸ் அப் வாயிலாக அழைத்து இருந்தார். அப்போதே பேச முடியாத நிலையில் இருந்தார் என்பதனை சென்ற வாரம் தான் உணர்ந்து கொண்டேன். 

அப்போது கூட அவர் எதையும் தெரிவிக்கவில்லை.

திண்டுக்கல்லுக்கு குடும்பத்தோடு செல்ல தயாராக இருந்தோம்.  அம்மா இறந்த செய்தி வர அவரிடம் தெரிவித்து விட்டு மறந்து விட்டோம்.  முரளி கடிதம் பார்த்து தனபாலனை அழைத்து பேசினேன்.  கோவை  மெடிக்கல் சென்டர் மருத்துவமனையில் இதயம் சார்ந்த சிகிட்சை எடுத்து சில மாதங்களாக முழு ஓய்வில் இருப்பதை புரிந்து கொள்ள முடிந்தது.  அவரே என்னிடம் சொன்னது.  ஒரு நிமிடம் கூட என்னால் பேச முடியாத நிலையில் இருந்தேன்.  உங்களுடன் இவ்வளவு நேரம் பேசியிருக்கிறேன். எனக்கே ஆச்சரியமாக உள்ளது என்றார்.  அந்த அளவுக்கு உடல் பலகீனப்பட்டு உள்ளதை உணர்ந்து கொண்டேன்.

அவர் செய்து கொண்டு இருந்த தொழிலை இனி தொடர முடியாது.  தறி மூலம் நெய்யப்பட்ட பருத்தி சேலைகள் தொடங்கி பலவிதமான சேலைகள் வரைக்கும் தமிழகம் எங்கும் பெரிய மற்றும் சிறிய ஜவுளிக்கடைகளுக்கு வழங்கிக் கொண்டு இருந்தார்.  சிறிய முதலீடு என்ற போதிலும் அவருக்கு ஏற்கனவே நிரந்தரமாக இருந்த சர்க்கரை நோய் காரணமாக தொழிலை சுருக்கி வேலையாட்கள் மூலம் செய்து கொண்டு இருந்தார்.  

ஓரே மகள் பொறியியல் படிப்பு முடித்து பெங்களூரில் பணியாற்றிவிட்டு இப்போது பணிமாறுதல் கேட்டு கோவையில் பணியாற்றிக் கொண்டு இருக்கின்றார். இப்போது தான் பணியைத் தொடங்கியிருப்பதால் இயல்பான சம்பளம் தான்.  நிச்சயம் தனபாலன் போன்றவர்களுக்கு வாழும் போதே வலையுலகம் அவரை அங்கீகரிக்க வேண்டும் என்பதே என் நோக்கம். காரணம் அவர் வலையுலகத்திற்கு செய்துள்ள பணி என்பது தமிழ்த்தாத்தா உவேசா போன்றதற்கு சமமானதாகவே நான் கருதுகிறேன்.  அவர் ஐம்பெரும் காப்பியங்களை தமிழ் கூறும் நல்லுலகத்திற்கு கொண்டு வந்து சேர்க்க அல்லும் பகலும் அயராது பாடுபட்டார்.

தனபாலன் ஆயிரக்கணக்கான பேர்களை நம்பிக்கையூட்டி வலையுலகத்தில் பயணிக்க வைத்தார். அவர்கள் கேட்ட தொழில் நுட்ப பிரச்சனைகளை தீர்த்து உதவினார்.  புதுப்புது வலையுலக ரகசியங்களை வெளியுலகத்திற்கு அப்படியே வெளிப்படையாக எழுதி புரிய வைத்தார். தன்னுடைய பொன்னான நேரத்தை பின்னூட்டம் மூலம் ஆக்கபூர்வமான கருத்துக்களை எழுதி எழுதியவருக்கு உற்சாகத்தை உருவாக்கி தொடர்ந்து எழுத்துலகில் பயணிக்க வைத்த பெருமை தனபாலன் ஒருவருக்கே உண்டு என்றால் அது மிகையல்ல.

பொருளாதார ரீதியாக மிகவும் சிரமத்தில் உள்ளார் என்பதனை உணர்ந்து கொண்டேன்.  கடந்த சில மாதங்களில் அவர் மருத்துவமனைகளில் செலவளித்த தொகை என்பது மிகவும் பெரியது.  தொடர்ந்து தொழிலில் இருந்து தேக்கம் என்பது அவரை கடந்த சில வருடங்களாக திக்குமுக்காட வைத்துக் கொண்டு இருந்தது என்பதனை நான் தனிப்பட்ட முறையில் அறிவேன்.  அவர் எதையும் என்னைப் போல தனிப்பட்ட பிரச்சனைகளை பொதுவெளியில் வைப்பதில்லை.

அண்ணே எங்கேயாவது உட்கார்ந்து வேலை செய்யும்படி ஒரு வேலை அமைந்தால் கொஞ்சம் நல்லாயிருக்கும் என்று அவர் சொன்னபோது திட்டி அலைபேசியை துண்டித்தேன்.  அவர் உடல்நிலை இனி ஒத்துழைக்காது. அடுத்த வருடம் நிச்சயம் மகளுக்கு திருமணம் செய்தே ஆக வேண்டும் என்ற சூழலில் உள்ளார். தொடர்ந்து செய்தே ஆக வேண்டிய மருத்துவ செலவுகள் ஒரு பக்கம். மற்றொருபுறம் அடிப்படை வாழ்வாதாரத்திற்குத் தேவைப்படும் விசயங்கள் என்று இரண்டு பக்கமும் அவரை இனி வரும் காலம் துரத்தும்.

அவரால் தொடர்ந்து பேச முடியாது. மூச்சு இழைப்பு, தடுமாற்றம் வரலாம். அழைத்து தொந்தரவு செய்ய வேண்டாம். 

அவர் எந்த உதவியையும் யாரிடமும் கேட்கவில்லை. நான் இப்போது இங்கு எழுதுவதும் அவருக்குத் தெரியாது. அவர் அனுமதியில்லாமல் என் விருப்பத்தின் அடிப்படையில் தான் எழுதுகிறேன். அவருடைய இரண்டு  அலைபேசி எண்களை இங்கே எழுதியுள்ளேன்.  இரண்டிலும் ஜிபே வழியாக பணம் அனுப்ப வசதியுள்ளது என்பதனை உணர்ந்து கொண்டேன்.  

வெளிநாட்டில் வாழ்கின்ற நண்பர்கள் நிச்சயம் இந்த பணியை உங்களை சார்பாக தொடங்கலாம். தொடரலாம். அனுப்பியவர்களை வாட்ஸ்அப் வழியாக தகவல் தெரிவிக்கலாம்.  நீங்கள் செய்யக்கூடிய உதவி என்பது மீண்டும் அவரை இயல்பு நிலைக்கு வெகு விரைவில் கொண்டுவரக்கூடும்.  மனச்சிக்கலில் அதிகமாக இருப்பது பணச்சிக்கல் தான்.  இது தீர்ந்து போனால் உளச் சிக்கலில் எவ்வித பிரச்சனைகளும் உருவாகாது என்று நம்புகின்றேன்.

இந்தப் பதிவு எத்தனை பேர்களின் பார்வைக்குச் சென்று சேரும் என்பது எனக்குத் தெரியாது.  நான் ஏன் நீண்ட காலம் எழுதாமல் இருந்த காரணத்தை வலைபதிவு மற்றும் ஃபேஸ்புக் நண்பர்கள் தொடர்ந்து கேட்டுக் கொண்டே இருந்தார்கள்?  இனி இவர் எழுதவே மாட்டார் என்று கேட்பதையும் நிறுத்திவிட்டார்கள். எனவே இதை வாசித்து முடித்தவர்கள் உங்களுக்குத் தெரிந்த நண்பர்களிடம் தெரிவிக்கலாம். அதுவும் ஒரு உதவி தான்.

இந்த செய்தியை ஃபேஸ்புக்கில் எழுதவிரும்பவில்லை. காரணம் அவ்வுலகம் வேறு. மனிதர்களை அரசியல் ரீதியாக பிரித்து வைத்து இருப்பதும் அநாகரிகத்தை அடிப்படையாக கொண்டு இருப்பதே அதன் முதன்மை நோக்கமாக உள்ளது.  உணர்வுகள் மழுங்கிப் போய் வன்மத்தை வகைதொகையில்லாமல் வளர்த்து வைத்திருப்பவர்களிடம் என்ன பேசினாலும் எடுபடாது. வலையுலகம் வேறு. மற்ற சமூக ஊடகங்கள் உலகம் வேறு.

ஏன் திண்டுக்கல் தனபாலன் போன்றவர்களுக்கு நாம் உதவ வேண்டும் என்ற கேள்வி உங்கள் மனதில் உருவானால் இப்படிப்பட்ட மனிதர்கள் தான் வெவ்வேறு காலகட்டத்தில் தன் குடும்பம் தங்கள் வசதி என்பதனையும் கடந்து அவர்களுக்குத் தெரிந்த வகையில் சமூகத்தின் ஏதோவொரு அசைவில் அடுத்த அடி நகர பலரும் முன்னேற காரணமாக இருந்து உள்ளனர் என்பதனை உங்கள் இதயம் உணரட்டும்.  உங்கள் உதவிகள் மூலம் பலவீனப்பட்டு இருக்கும் தனபாலன் இதயத்தில் மலர்ச்சி உருவாகட்டும்.  

எல்லாம் வல்ல பரம்பொருளை பிரார்த்திக்கின்றேன்.

திண்டுக்கல் தனபாலன் அவர்களுக்கு யூபிஐ வழியாக அனுப்ப விரும்பினால் கீழ்கண்ட அலைபேசி எண்களை பயன்படுத்திக் கொள்ளுங்கள். 

99443 45233   90439 30051

 வங்கி பரிவர்த்தனை மூலம் அனுப்ப முடியும் என்பவர்கள் இந்தியாவில் உள்ள மற்ற நண்பர்களை அனுப்பச் செய்து அவர்களுக்கு நீங்கள் கொடுத்துக் கொள்ளுங்கள்.  அவர் தற்போது இருக்கும் சூழலில் அதிக நேரம் பேச இயலாது என்பதால், இப்படியொரு ஒரு காரியம் செய்யப்போகின்றேன் என்று சொன்னால் நிச்சயம் மறுப்பார் என்பதால் நான் எதையும் கேட்கவில்லை.

(இந்த பதிவை பகிர்ந்து கொள்ளுங்கள். சிறிய உதவி என்று யோசித்துக் கொண்டு இருக்காமல் தயங்காமல் உதவுங்கள்)