23 January 2020

பேனாவின் கைப்பிடித்து... : டி.வி.எஸ்.சோமு

திரு டி.வி.எஸ்.சோமு அவர்கள், வாழ்வில் எதிர்கொண்ட நிகழ்வுகளை ஊடகத்துறையில் பெற்று வரும் அனுபவப் பின்புலத்தோடு “பேனாவின் கைப்பிடித்து...” என்ற தலைப்பில் நூலாக எழுதியுள்ளார். 

பல துறையைச் சார்ந்த கலைஞர்கள், எழுத்தாளர்கள், அரசியல் பிரமுகர்களுடனான நேர்காணல்களையும், அவர்களோடு பழகிய தருணங்களையும் அவர் நினைவுகூர்ந்த விதம் சிறப்பாக உள்ளது.
பட்டினியாய்க் கிடப்பது பத்திரிக்கையாளர் வாழ்வில் சகஜம்தான் என்ற ஒரு யதார்த்தத்தைக் கண்டபோது அவர் வெளிப்படுத்துகின்ற உணர்வு நமக்கும் அந்த பசி வந்துவிட்டதுபோன்ற எண்ணம். (பத்மா என்கிற தாய்)
வி.ஐ.பி. ஜாதகம் என்று கூறி, இயற்கையெய்தியவரின் ஜாதகத்திற்கு பலவித கணிப்புகள் பெறப்படுவதும், கணிப்புக்கு அவர்கள் மறுப்போ விளக்கமோ சொல்லவில்லை என்பதும் தரும் வியப்பு. (அதிர வைத்த சோதிடர்கள்)  
உடையார்பாளையம் அரண்மனைக்குச் சென்றபோது, அங்கு வாழ்ந்து தாழ்ந்தவர்களின் கொடுமையையும், ஆற்றாமையையும் வாசிக்கும்போது கரைந்து போகிறது வாசகரின் உள்ளம். (காலம் சிதைத்த கோட்டை)
காஷ்மீரில் பணியாற்றி வந்த இராணுவ வீரர்கள் சிலரை நேர்காணல் எடுத்தபோது அவர்கள் சொன்ன செய்திகள் அவரை மட்டும் உறைய வைத்துவிடவில்லை. நம்மையும் சேர்த்துத்தான். (உறைய வைக்கும் உண்மை)
கூச்சப்பட்டுக்கொண்டே குறைவாகச் சாப்பிட்டபோது ஆசிரியர் சாவி அவர்கள்,  அவரையும் பிறரையும் நன்கு சாப்பிட வைப்பதற்காக தனி மேசைக்கு அனுப்பிய உத்தியை எண்ணி வியந்தது அவர் மட்டுமல்ல, நாமும்.  (மனிதர்கள் பலவிதம்..சாவி ஐயா ஒருவிதம்)
தன் தந்தை அனுப்பி மணியார்டர் தொகையை அவருக்கே திருப்பியனுப்ப, நேரில் தந்தை சென்னையில் கொண்டுவந்து அதனைத் தந்தபோது அப்பாக்கள் வரம் என்று கூறி வியக்கும் தந்தைமீதான பாசம். (அப்பா அனுப்பிய மணியார்டர்)
ஒரு குழந்தை மாதிரி அம்மாவை பார்த்துக்கொண்டேன் என்று கூறி தனக்கு வரமும், சாபமுமான காலம் என நினைத்த வேளையில் எல்லோரையும் தவிக்கவிட்டு அம்மா சென்றபோது, அம்மாக்களே..நாங்கள் உங்களுக்கு எப்படி முக்கியமோ, அதேபோல நீங்கள் எங்களுக்கு முக்கியம் என்று ஏங்கித் தவிக்கும் தவிப்பு. (அம்மாக்கள் கவனிக்கவும்)ஒவ்வொரு பதிவிலும் தன் அனுபவத்தை மிகவும் அருமையாக முன்வைத்துள்ளார் நூலாசிரியர். முகநூல் பதிவிற்கும் நாளிதழ் செய்திக்கும் இடையேயான வேறுபாடு, அனாவசியமான பொது விடுமுறைகள், சாதியின் பெயரால் பிரிவினை என்பன போன்ற பலவற்றை ஆழமாகப் பதிந்துள்ள நூலாசிரியர், தான் எடுத்து வெளிவராத மிகச் சில பேட்டிகளில் சிவாஜி கணேசனின் பேட்டியும் ஒன்றாகிவிட்டது என்று தன் ஆதங்கத்தை வெளிப்படுத்துகிறார்.      
    ஒரு இதழாளர் தன் எழுத்துகளை ஆவணப்படுத்தப்படும்போது அது அவர்  தன்னை சுய மதிப்பீடு செய்துகொள்வதற்கான தருணமாக அமையும். உண்மை வெளிவர வேண்டும், சமூகத்திற்கு நல்லவற்றைக் கொண்டு செல்ல வேண்டும், அறிந்தவற்றைப் பகிர வேண்டும் என்பன போன்ற உணர்வுகளைக் கொண்டு அதனை கடைபிடித்து வருபவர் நூலாசிரியர்.
தமிழக எழுத்தாளர்களில் ஒருவரான தஞ்சாவூரைச் சேர்ந்த திரு அழகிரி விசுவநாதன் (1931-2018) அவர்களின் மகனான இந்நூலாசிரியரை  கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக நான் அறிவேன். முகநூலில் அவ்வப்போது சில பதிவுகளைப் பகிர்ந்தபோது, அவை நூல் வடிவம் பெறவேண்டும் என்று நான் வெளிப்படுத்திய ஆர்வத்தினை பெருமுயற்சி மேற்கொண்டு நிறைவேற்றியுள்ளார். அவர் மென்மேலும் பல நூல்களை எழுதுவதற்கு இது ஓர் இனிய ஆரம்பமாக இருக்கும் என நம்புகிறேன் அவருக்கு என்னுடைய மனம் நிறைந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். 

நூல் வேண்டுவோர் தொடர்புகொள்ள வேண்டிய எண்.

நூலட்டை, பிற புகைப்படங்கள் நன்றி : திரு டி.வி.எஸ்.சோமு முகநூல் பக்கம்

04 January 2020

மொழியாக்கம் ஒரு கலை : தினமணி, தமிழ் மொழித் திருவிழா

தினமணி நாளிதழின் தமிழ் மொழித் திருவிழாவில் 24 டிசம்பர் 2019 அன்று வெளியான, மொழியாக்கம் ஒரு கலை என்ற என் கட்டுரையின் மேம்பட்ட வடிவத்தைப் பகிர்வதில் மகிழ்கிறேன், அவ்விதழுக்கு நன்றியுடன். 


தினமணி நாளிதழுடன் கடந்த 10 ஆண்டுகளாக கார்டியன் (இலண்டன்), நியூயார்க் டைம்ஸ் (அமெரிக்கா), டான் (பாகிஸ்தான்) உள்ளிட்ட பல வெளிநாட்டு நாளிதழ்களைப் படித்து வரும்போது அவற்றில் வெளியான சில கட்டுரைகளை தமிழில் மொழியாக்கம் செய்யும் வாய்ப்பு கிடைத்தது.
ஆங்கில இதழ்களைப் படித்து தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்ட “நிதான வாசிப்பு ஒரு கலை”, “தமிழில் இந்த ஆண்டில் சொல் எது? ”, “அமெரிக்கா-கியூபா உறவு இப்படியும் ஒரு ராஜதந்திரம்”, “புளோரிடாவிலிருந்து ஹவானாவிற்கு”, “என்றென்றும் நாயகன் சே குவாரா”, “2017இன் சிறந்த சொல்” என்ற தலைப்பிலான கட்டுரைகள் தமிழ் இந்து நாளிதழில் வெளியாயின.
“நெல்சன் மண்டேலாவின் சுயசரிதையைப் பற்றிய மதிப்புரை” (எனக்குப் பிடித்த புத்தகம், தினமணி கதிர், 14 டிசம்பர் 2014) ஒரு மொழியாக்கமாகும். தொடர்ந்து “கடிதம் செய்த மாற்றம்” (தினமணி, 7 அக்டோபர் 2018), இலக்கை நோக்கும் உயரமான பெண் (தினமணி, 29 நவம்பர் 2018),   “உலக அரசியல் களத்தில் மகளிர்” (தினமணி, 17 ஏப்ரல் 2019), “மாற்றத்திற்கான மங்கை கிரேட்டா தன்பர்க்” (தினமணி, 4 செப்டம்பர் 2019) போன்ற கட்டுரைகள் வெளிநாட்டு இதழ்களில் வெளியான ஆங்கிலக் கட்டுரைகளிலிருந்து திரட்டப்பட்ட செய்திகளைக் கொண்டதாகும்.
இதற்கெல்லாம் மூல காரணமாக அமைந்தது இராஜராஜன் ஆயிரமாவது ஆண்டு விழாவின்போது வெளியான “ராஜராஜன் நேருவின் பார்வையில் (தினமணி கொண்டாட்டம், 26 செப்டம்பர் 2010) என்ற தலைப்பிலான கட்டுரை ஆகும். அக்கட்டுரை ஜவஹர்லால் நேரு எழுதிய உலக வரலாறு என்னும் ஆங்கில நூலில் காணப்பட்ட ராஜராஜ சோழன் மற்றும் ராஜேந்திர சோழனின் பெருமைகளைப் பற்றிய மொழியாக்கம் செய்யப்பட்ட செய்திகளைக் கொண்டதாகும்.
இவ்வாறாக பல ஆண்டுகளாக மொழியாக்கம் செய்துவரும் நிலையில் பல அனுபவங்களைக் காணமுடிந்தது. இந்த அனுபவங்கள் மொழியாக்கம் ஒரு கலை என்பதை உணர்த்தின.
அக்டோபர் 1984இல், இந்திரா காந்தி அவரது மெய்க்காப்பாளர்களால் சுடப்பட்டு இறந்தபோது ஓர் ஆங்கில நாளிதழில் இந்திரா காந்தி அசாசினேட்டட் என்றும் மற்றோர் ஆங்கில இதழில் இந்திரா காந்தி ஷாட் டெட் என்றும் செய்திகள் வெளியாகின. இரண்டு சொற்றொடர்களுமே இந்திரா காந்தியின் மரண நிகழ்வினைக் குறிப்பிட்டபோதும் அசாசினேட்டட் என்ற சொல்லானது சற்று கூடுதலான பொருளைத் தரும் வகையில் அமைந்திருந்தது. அசாசினேட் என்பதற்கு படுகொலை செய், மறைந்திருந்து தாக்கிக் கொல்லு, வஞ்சகமாகக்கொல்லு (ஆங்கிலம் தமிழ் சொற்களஞ்சியம், சென்னைப்பல்கலைக்கழகம், 2010) என்றும், முக்கிய நபரை குறிப்பாக அரசியல் காரணங்களுக்காக கொலை செய்தல் (ஆக்ஸ்போர்டு ஆங்கில அகராதி, 2010) என்றும் அகராதிகள் கூறுகின்றன. ஷாட் டெட் என்பதற்கு சுட்டுக்கொல்லு என்பது பொருளாகும். இவ்வாறாக சில சொற்கள் மூல மொழியில் அமையும்போதே முழுப்பொருளையும் தரும் வகையில் அமைந்துவிடுகின்றன.
மொழிபெயர்ப்பு என்பதிலிருந்து மொழியாக்கம் என்பது சற்று வேறு நிலையில் அமைகிறது. மொழியாக்கம் செய்யப்படும் செய்தியானது அனைத்துநிலை வாசகர்களுக்கும் சென்றடைய வாய்ப்புள்ளது. மொழிபெயர்ப்பு என்ற தளத்தில் நின்று மொழியாக்கம் செய்ய ஆரம்பித்தால் சொல்லுக்குச் சொல் என்பதே சாத்தியமாகும். மொழியாக்கத்தின்போது எல்லை சற்றே விரிய ஆரம்பிக்கிறது. மூல மொழியில் உள்ள மொழியாக்கம் செய்யப்படுகின்ற பொருண்மையினை முழுமையாக வாசித்து பின்னர் அதனைக் கிரகித்துக் கொண்டு, இலக்கு மொழிக்கு (மொழியாக்கம் செய்யப்படுகின்ற மொழி) அதனைக் கொண்டு செல்வது மொழிபெயர்ப்பாளரின் முக்கியமான கடமையாகிறது. அவ்வாறு செய்யும்போது அதனை எளிதாக வாசகர்கள் புரிந்துகொள்ளும் வகையில் அமைத்துக் கொள்ள வேண்டியது அவசியமாகும். மொழியாக்கத்தின்போது பொருத்தமான சொற்களைத் தெரிவு செய்து பயன்படுத்தவேண்டும். குழப்பம் தருகின்ற, மயக்கம் தருகின்ற, மாற்றுப்பொருள் தருகின்ற சொற்களைப் பயன்படுத்தாமல் இருப்பது மொழிபெயர்ப்பின் தரத்தினை மேம்படுத்தும்.

வல்லுநர்களிடம் உரையாடல், அகராதிகளைப் பார்த்து உறுதிசெய்தல்
மொழியாக்கம் செய்யப்படும்போது பலவிதமான சிக்கல்கள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. அவ்வாறு எழும்போது உரிய துறைசார் வல்லுநர்களோடு தொடர்பு கொள்ளலாம். அகராதிகள் மற்றும் தொடர்பான நூல்களைப் பார்த்து பொருத்தமானவற்றை எடுத்துக்கொண்டு பயன்படுத்தலாம். அவ்வாறு மொழியாக்கத்தின்போது தெளிவான பொருளைத் தருகின்ற வகையில் சொற்றொடர் அமைவதை உறுதி செய்துகொள்ள வேண்டியது அவசியம்.

சொல்லுக்குச் சொல் மொழியாக்கம்
சொல்லுக்குச்சொல் மொழியாக்கம் செய்யும்போது தெளிவின்மையையோ, மிகைப்படுத்தலோ அமையும். சில சமயங்களில் பொருத்தமாக இருக்கவேண்டும் என்பதற்காக சில சொற்களை விட்டுவிடவும் வாய்ப்பு உள்ளது. ஆதலால் சொல்லுக்குச் சொல் உள்ளது உள்ளபடியே மொழியாக்கம் செய்தும் உத்தியைத் தவிர்ப்பது நலம் பயக்கும். முழுமையாக வாசித்து, பொருளைப்புரிந்து பின்னர் சொல்வாரியாகவோ, சொற்றொடர்வாரியாகவோ, பத்திவாரியாகவோ இடத்திற்குத் தக்கவாறு மொழியாக்கம் செய்யலாம்.

இருமொழித் திறன்
மூல மொழியிலும் இலக்கு மொழியிலும் சமமான அளவு திறன் இல்லாவிட்டாலும்கூட, கிட்டத்தட்ட பொருளை விளக்குகின்ற அளவிற்கான மொழியறிவு இருப்பது அவசியமாகும். அவ்வாறு இல்லாத நிலையில் மொழியாக்கத்தில் ஒரு தெளினைக் காண்பது சிரமமாகும்.

சிறப்புக்கூறுகள்
மொழிக்கே உரிய சிறப்புக்கூறுகள், பதங்கள், சொல்லாடல்கள் அமையும்போது  அதனை மொழியாக்கம் செய்வது  எளிதன்று. உதாரணமாக மூல மொழி தமிழ் என்றும் இலக்கு ஆங்கிலம் என்றும் வைத்துக்கொள்வோம். அப்போது தமிழ் மொழிக்கே உள்ள தனித்தன்மை வாய்ந்த சொற்களையோ, சிறப்பான கூறுகளையோ, சொல்லாடல்களையோ, பழமொழிகளையோ அப்படியே பொருளைத் தரும்வண்ணம் மொழியாக்கம் செய்வது எளிதல்ல. தமிழ் மொழியின் இலக்கணம், இலக்கியம் போன்றவற்றில் அடிப்படையாக சிலவற்றை அறிந்திருந்தால் மட்டுமே மொழியாக்கம் செய்வது சாத்தியமாகும்.  ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழியாக்கம் செய்யும்போதும் இதனை மனதில் கொள்ளவேண்டும்.

சொற்றொடர் அமைப்பு
சில சமயங்களில் மூல மொழியில் குறைவான சொற்களைக்கொண்ட சொற்றொடர் அதிகமான சொற்களைக் கொண்டும், அதிகமான சொற்களைக் கொண்ட சொற்றொடர் குறைவான சொற்களைக்கொண்டும்  இலக்கு மொழியில் மொழியாக்கம் செய்யப்படும். அந்நிலையில் விடுபாடோ என்றோ, கூடுதல் என்றோ கருதாமல் பொருள் விளங்கும் வகையில் மொழியாக்கம் அமைந்துள்ளதா என்பதை உறுதி செய்தல் அவசியமாகும். நீண்ட சொற்றொடர்களாக அமைப்பதைவிட எளிதில் புரியும் வகையில் சிறிய சொற்றொடர்களாக பிரித்து அமைக்கும்போது வாசகர்கள் எளிதில் புரிந்துகொள்ள வாய்ப்பு உண்டு.

சமூகம் மற்றும் பிற சூழல்
சமூகம் மற்றும் பண்பாடு என்ற சூழலிலும், கடினமான பொருள் தரும் சொல் பிற மொழிச்சொல் என்ற நிலையிலும் தெளிவற்ற நிலையில் ஒரு சொல் அமையவோ, தவறாகப் புரிந்துகொள்ளவோ வாய்ப்புள்ளது. அப்போது மூல மொழியில் சொல்லப்பட்ட பொருண்மையின் பின்புலத்தை முழுமையாக அறிந்துகொண்டு மொழியாக்கத்தில் ஈடுபட்டு, பொருத்தமான சொல்லாக மொழியாக்கம் செய்யவேண்டும்.  அப்போது மூல மொழியில் வெளிப்படுத்தப்பட்டுள்ள நோக்கத்தையும், பின்னணியையும் மனதில் கொள்ளவேண்டும்.

குறியீடுகள் பயன்பாடு
தடித்த எழுத்து பயன்பாட்டினை உள்ளடக்கிய செய்திகளை மொழியாக்கம் செய்யும்போது இடத்தின் தன்மையினை அறிந்து உணர்வினை கவனமாக வெளிப்படுத்த வேண்டியது அவசியமாகும். தமிழிலும், ஆங்கிலத்திலும் குறிப்பிட்ட செய்தியை வலியுறுத்திச்சொல்லும்போது தடித்த எழுத்துகள் பயன்படுத்தப்படுகின்றன.  தமிழில் குறிக்கும்போது அவ்வாறான சொற்களுக்குப் பக்கத்தில் அடைப்புக்குறிக்குள் அழுத்திப்படிக்கவும் என்று இருப்பதைக் காணலாம். ஆங்கிலத்தில் எம்பசிஸ் ஆடட் என்றவாறு கூறப்பட்டிருக்கும். 
நவம்பர் 2019இல்  தமிழ் விக்கிப்பீடியா ஆசிய மாதக் கட்டுரைப் போட்டியினை அறிவித்திருந்தது. அதில் ஆசிய நாடுகள் தொடர்பாக ஆங்கில விக்கிப்பீடியாவில் உள்ள, தமிழில் இல்லாத கட்டுரைகளை மொழியாக்கம் செய்யும் வகையில் ஒரு விதி இருந்தது.   அந்தப் போட்டியில் கலந்துகொண்டு இந்தோனேசியா தொடர்பாக 150க்கும் மேற்பட்ட கட்டுரைகளை எழுதும் வாய்ப்பு கிடைத்தது. ஆங்கில விக்கிபீடியாவிலிருந்து தமிழ் விக்கிபீடியாவிற்கு மொழியாக்கம் செய்தபோது பெற்ற அனுபவங்களில் ஒன்று கோயில் தொடர்பானதாகும். தமிழகத்தில் அந்தந்த கோயிலைப் பற்றி எழுதும்போது அடைமொழியாக கோயில் என்று இடுகின்றோம். அவர்கள் புரா, கண்டி, கோயில்  என்று வேறுபடுத்துகின்றனர்.
ஒரு புரா என்பது ஒரு பாலினிய இந்துக் கோயிலாகும். இது இந்தோனேசியாவில் பாலினிய இந்து சமயத்தைப் பின்பற்றுபவர்களுக்கான வழிபாட்டுத் தலமாகும். பாலினிய கட்டிடக்கலையில் காணப்படும் விதிகள், நடை, வழிகாட்டுதல் மற்றும் சடங்குகளுக்கு ஏற்ப புராக்கள் கட்டப்பட்டுள்ளன. பாலி தீவில் பெரும்பாலான புராக்கள் காணப்படுகின்றன. பாலி, "ஆயிரம் புராக்களின் தீவு" என்று பெயரிடப்பட்டது.
ண்டி  என்பது இந்தோனேசியாவில் உள்ள ஒரு இந்து அல்லது பௌத்தக் கோயிலாகும். இது பெரும்பாலும் இந்து-பௌத்தக் காலமான கி.பி.4 மற்றும் கி.பி.15 ஆம் நூற்றாண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் கட்டப்பட்டது. வழிபாட்டிற்காக அல்லது தகனம் செய்யப்பட்ட இந்து அல்லது பௌத்த மன்னர்கள் மற்றும் பிக்குகளின் அஸ்தியை சேமிப்பதற்காக பயன்படுத்தப்படும் ஒரு பழங்கால கல் கட்டிடம் என்று வரையறுக்கிறது. பண்டைய மதச்சார்பற்ற கட்டமைப்புகளான வாயில்கள், நகர்ப்புற இடிபாடுகள், குளங்கள் மற்றும் குளியல் இடங்கள் பெரும்பாலும் கண்டி என்று அழைக்கப்படுகின்றன.
          கோயில் அல்லது கோவில் என்பது திராவிட கட்டிடக்கலை கொண்ட இந்து கோவிலின் தனித்துவமான பாணிக்கான தமிழ் சொல்லாகும்.

மொழியாக்கம் செய்வோர் அப்பணியில் முழுமையாக தம்மை ஈடுபடுத்திக்கொள்ளவேண்டும். தாம் புரிந்துகொண்டதை அப்படியே வாசகர்களுக்கு கடத்துவது மொழியாக்கம் இல்லை.  வாசகர்கள் புரிந்துகொள்ளும் அளவில் மொழியாக்கம் அமைய வேண்டும். மொழியாக்கத்திற்கு அடிப்படையாக அமைவனவற்றில் வாசிப்பு முக்கியமானது. குறிப்பாக, தமிழ் மற்றும் ஆங்கில நாளிதழ்களை  தொடர்ந்து விடுபாடின்றி படிப்பதன் மூலம் மொழியாக்கத்திற்கான ஆர்வத்தை வளர்த்துக் கொள்ளலாம். துறை சார்ந்த நூல்களை வாசிப்பதன் மூலமும், துறை சார்ந்த அறிஞர்களுடன் உரையாடுவதன்மூலமாக மொழியாக்கம் தொடர்பான சிக்கல்களைத் தெளிவுபடுத்திக்கொள்ள முடியும்.
ஆங்கிலத்தில் மட்டுமே காணப்படுகின்ற பதிவுகளையும், கட்டுரைகளையும் தமிழில் மொழியாக்கம் செய்வதன் மூலமாக தமிழ் மொழிக்கு சிறப்பான பங்களிப்பினைச் செய்ய பல வாய்ப்புகள் காத்திருக்கின்றன. அவ்வாறே தமிழில் உள்ளவற்றை ஆங்கிலத்திலோ, பிற மொழிகளிலோ மொழியாக்கம் செய்யும்போது தமிழின் பெருமைகளை பிற மொழியினரும் அறிந்துகொள்ளலாம்.  மொழியாக்கத்தை ஒரு கலையாக எண்ணி மேற்கொள்ள ஆரம்பித்தால் பல புதியனவற்றை தமிழ் மொழிக்கும், தமிழ் மொழியிலிருந்து பிற மொழிகளுக்கும் கொண்டுசெல்வதற்கு மொழியாக்கம் ஒரு பாலமாக அமையும்.

28 December 2019

ஏடகம் வரலாற்று உலா : 7 டிசம்பர் 2019 : கல்வெட்டுகள் கண்டெடுப்பு

கடந்த வாரம் கோயில் உலா சென்ற நாம், இந்த வாரம் வரலாற்று உலா செல்வோம். வாருங்கள்.
தஞ்சாவூரில் இயங்கி வருகின்ற கல்வி சமூக மேம்பாட்டு மையமான ஏடகம் அமைப்பின் சார்பாக கானாடுகாத்தான் அரண்மனை, ஆத்தங்குடி அரண்மனை, ஆத்தங்குடி மீனாட்சிசுந்தரேசுவரர் கோயில், அரண்மனை சிறுவயல் மருதுபாண்டியர் கோட்டை, மருதுபாண்டியர் நினைவிடம், காளையார்கோயில் சொர்ணகாளீஸ்வரர் கோயில் ஆகிய இடங்களுக்கு வரலாற்று உலா சென்றோம். அப்போது இரு பாண்டியர் காலக் கல்வெட்டுகளைக் கண்டோம். கல்வெட்டு கண்ட அனுபவத்தை இப்பதிவில் காண்போம்.
எங்கள் உலாவின்போது கானாடுகாத்தான் தொடங்கி பல ஊர்களுக்குச் சென்றோம். மருதுபாண்டியர் நினைவிடத்தைப் பார்த்துக்கொண்டிருக்கும்போது உள்ளூரைச் சேர்ந்த திரு பாரதிதாசன் என்பவர் எங்களுக்கு அறிமுகம் ஆனார். அவர் அப்பகுதியில் இரு கல்வெட்டுகள் இருப்பதாகக் கூறினார். எங்களின் வரலாற்று உலா, தேடல் உலாவாக மாறியது.  
அவருடைய வழிகாட்டலில் சுமார் 1 கிமீ தொலைவிற்கு நடந்து சென்றோம். உலாவின் போது வந்த பல நண்பர்கள் கல்வெட்டினைக் காணும் ஆர்வத்தோடு உடன் வந்தனர். பாதையே தெரியாமல் செடிகளுக்குள் புகுந்து சென்றது வித்தியாசமான அனுபவமாக இருந்தது. சிறிது தூரம் சென்றபின்னர் அவர் அங்கு இடிபாடான நிலையிலிருந்த ஒரு கட்டடத்தைக் காண்பித்தார். 
முன்னரே அந்தக் கல்வெட்டைப் பார்த்தாகக் கூறிய அவர், எங்கிருக்கிறது என்பதை மறந்துவிட்டார். பின்னர் அவருடன் நாங்களுக்கும் அந்தக் கட்டடத்தைச் சுற்றி வந்தும், உள்ளே சென்றும் தேடினோம். இறுதியில் அதனைக் கண்டோம்.  அவ்வாறே அங்கிருந்து மற்றொரு இடத்திற்கு எங்களை அவர் அழைத்துச்சென்று அங்கும் ஒரு கல்வெட்டினைக் காண்பித்தார். எங்களோடு அவர் ஆர்வமாக வந்ததும், கல்வெட்டினைப் பற்றிக் கூறியதும், தேடியதும் எங்களை வியக்க வைத்தன. கல்வெட்டுகளைச் சுத்தம் செய்து அவற்றிலிருந்து குறிப்புகளை எடுக்க அவரும் நண்பர்களும் பெரிதும் உதவினர். அவருக்கு நாங்கள் நன்றி கூறிவிட்டு எங்கள் பயணத்தைத் தொடர்ந்தோம்.  சிவகங்கையிலிருந்து கிழக்கில் 18 கி.மீ. தொலைவிலும், காரைக்குடியிலிருந்து தெற்கில் 30 கி.மீ. தொலைவிலும் காளையார்கோயில் உள்ளது. இவ்வூரின் பழம் பெயர் கானப்பேரெயில், திருக்கானப்பேர், தலையிலங்கானம் என்பனவாகும். சங்க காலத்தில் வேங்கைமார்பன் என்ற மன்னனால் ஆட்சி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து பாண்டியர்களாலும், மதுரை நாயக்க மன்னர்களாலும், ராமநாதபுரம் சேதுபதி மன்னர்களாலும், சிவகங்கை மன்னர்களாலும் ஆட்சி செய்யப்பட்டது. மருது சகோதரர்களுக்கு பலமிக்க கோட்டையாகத் திகழ்ந்தது. பிறகு ஆங்கிலேயர்களால் கைப்பற்றப்பட்டது.
பாண்டிய நாட்டின் பாடல் பெற்ற தலங்களில் திருக்கானப்பேர் என்று அழைக்கப்படும் காளையார் கோயிலில் உள்ள சிவாலயத்தில் காளீஸ்வரர், சோமேஸ்வரர், சுந்தரேஸ்வரர் என்ற மூன்று சன்னதிகள் உள்ளன. சோமேஸ்வரர் சன்னதிக்கு எதிரே அமைந்துள்ள ராஜகோபுரம் மருது சகோதரர்களால் கட்டப்பட்டது. சுந்தரேசர் ஆலயமும், காளீஸ்வரர் ஆலயம் முன்னுள்ள கோபுரமும் வரகுணபாண்டியனால் தோற்றம் பெற்றதாகும்.
சங்க காலத்தில் பாண்டிய நாட்டில் கானப்பேரெயில் என்ற அரண் அமைத்து சிங்களப்படைகளை வென்று ஆட்சி செய்த மன்னன் வேங்கைமார்பன் ஆவான். இம்மன்னன் காலத்தில் ஆழம் நிறைந்த அகழியினையும், நிகர்ந்த பெரும் மதில்களையும், அடர்ந்த காவற்காட்டினையும் உருவாக்கி பகைவர் எளிதில் கைப்பற்ற முடியாத ஒரு பேரூராக காளையார்கோயிலைத் தோற்றுவித்தான். கடைச்சங்க காலப் பாண்டிய மன்னன் விக்கிரபெருவழுதி, பெரும்படையுடன் கானப்பேரெயிலைக் கைப்பற்றினான். கானப்பேரெயிலை சுற்றி இருக்கும் காடுகளின் அடர்த்தி தமிழக வரலாற்றில் முக்கியத்துவம் பெற்ற ஒன்றாகும். சோழப் பேரரசு காலத்திலும் இக்காட்டுப் பகுதி பரந்து விரிந்திருந்தது. புதுக்கோட்டை மாவட்டம் திருமெய்யம் வரையிலும், அதேபோல் திண்டுக்கல், அழகர்கோயில் வரையிலும் பரந்த பகுதியாகும். இதன் வடக்கு எல்லையாய் கானாடுகாத்தான் அமைந்துள்ளது.
மாமன்னன் ராஜராஜனும் ராஜேந்திரனும் தங்களின் பெரும் படையினை இவ்வூரின் வழியே வழிநடத்தி ஈழம் சென்றிருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். கி.பி.1325இல் வருகை தந்த அரபு நாட்டுப் பயணி திமிஸ்கி என்பார் இவ்வூரை காய்ன் என்ற பெயரால் குறிப்பிட்டுள்ளார். அவர்தம் பயணக்குறிப்பில் தென்னகத்தின் சிறந்த ஊர்களில் ஓர் ஊராக இவ்வூரினைப் பதிவு செய்துள்ளார்.

முதல் கல்வெட்டு:
காளையார்கோயில் சிவன் கோயிலிலிருந்து 1 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள மிகப்பெரும் கண்மாயின் உள் பகுதியில்,  பிற்காலத்தில் மருதுபாண்டியர்களால் கட்டப்பெற்ற நாணயசாலைக் கட்டடம் பழுதுற்று புதர் மண்டிக் கிடக்கின்றது. அதன் வாயிற்படியில் பாண்டியர் காலத்தைச் சேர்ந்த, உடைந்த நிலையில் உள்ள துண்டுக் கல்வெட்டு கண்டறியப்பட்டது. இக்கல்வெட்டு 13ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகும்.

வலமிருந்து:  ஜம்புலிங்கம், மணி.மாறன், பாரதிதாசன், தில்லை கோவிந்தராஜன்

  


இக்கல்வெட்டின் வரிகள் பின்வருமாறு உள்ளது.   
1.    ……………….கும் நெய்யமுது
2.    ஞ் திண்புறமாக(ம்)
3.    தொம் உடையார்
4.    டிஇமமாள்ளான அகொர
5.    பிர மா காரயன் எழுத்து
6.    இப்படிக்கு பாண்டியதேவ பிரமராயன்
உள்ளது. இது கோயிலுக்கு நெய்யமுது போன்ற தானம் வழங்கப்பட்டதைக் குறிப்பிடுகின்றது.

இரண்டாவது கல்வெட்டு:
இவ்வூரில் முத்துவடுகநாத தேவர் நினைவிடத்திற்கு அருகில் மற்றொரு பாண்டியர் காலத்து கல்வெட்டு ஒன்றின் உடைந்த பகுதி கண்டறியப்பட்டது. இக்கல்வெட்டின் வரிகள் பின்வருமாறு உள்ளது.   


1.    ஸ்வதிஸ்ரீ ஸ்ரீதிரிபுவன……………
2.    கொனெரிமை கொண்டான்……………
3.    சதுர்போதி மங்கலம் உ……………
4.    தெவர்கு யாண்டு இரண்டு…………..
5.    ஙய கூல பொகம்…………
6.    திருவிடையாட்டம்………

உள்ளது. பாண்டியர் காலத்தில் வழங்கப்பட்ட திருவிடையாட்டம் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.
காளையார்கோயிலில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் மூலம் புதிய இரண்டு துண்டுக் கல்வெட்டுகளைக் கண்டறிய முடிந்தது. இவை முழுமையாக இல்லை. இதன்மூலம் வரலாற்று ஆர்வலர்களுக்கும், ஆய்வாளர்களுக்கும் புதிய செய்திகள் கிடைக்க வாய்ப்பு ஏற்படும் என்ற நம்பிக்கையோடு அங்கிருந்து கிளம்பினோம். அன்றைய நாளில் நாங்கள் உலா சென்றதைப் பற்றிய அனுபவங்களை பிறிதொரு பதிவில் காண்போம். 

 


நன்றி:
  • ஏடகம் நிறுவனர் முனைவர் மணி.மாறன்
  • திரு தில்லை. கோவிந்தராஜன்
  • கல்வெட்டுகளைக் கண்டுபிடிக்க உதவிய திரு பாரதிதாசன்
  • உடன் வந்ததோடு, புகைப்படம் எடுத்து உதவிய நண்பர்கள்
  • செய்திகளை வெளியிட்ட நாளிதழ்கள்
31.12.2019 அன்று மேம்படுத்தப்பட்டது

21 December 2019

கோயில் உலா : 21 செப்டம்பர் 2019

21 செப்டம்பர் 2019 அன்று முனைவர் ஜெயபால் அவர்களின் குழுவோடு கோயில் உலா சென்றோம். இந்த உலாவின்போது 10 கோயில்களுக்குச் சென்றோம். அவற்றில் திருக்கண்ணபுரம் சௌரிராஜப்பெருமாள், திருக்கண்ணமங்கை பக்தவத்சலப்பெருமாள் ஆகிய இரு கோயில்களும் முன்னர் நான் பார்த்த கோயில்களாகும்.
காலை 6.30 மணி வாக்கில் தஞ்சையைவிட்டுக் கிளம்பினோம். எங்களது காலைச்சிற்றுண்டியினை  தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் வட்டத்திலுள்ள ஆண்டலாம்பேட்டை மூங்கிலாண்டவர் கோயிலில் நிறைவு செய்தோம்.

தொடர்ந்து நாகப்பட்டினம் மாவட்டம் திருமருகல் ரத்னகிரீஸ்வரர் கோயில்,  திருப்புகலூர் அக்னீஸ்வரர் கோயில், அதே கோயில் வளாகத்தில் உள்ள திருப்புகலூர்  வர்த்தமானீசுவரர் கோயில் (வர்த்தமானீச்சரம்), இராமநந்தீச்சரம் ராமநாதசுவாமி கோயில்,  திருக்கண்ணபுரம் சௌரிராஜப்பெருமாள் ஆகிய கோயில்களுக்குச் சென்றோம்.  திருக்கண்ணபுரம் பெருமாள் கோயில் தரிசனத்திற்குப் பின் மதிய உணவு உண்டோம். பின் அருகேயிருந்த  அங்காளபரமேஸ்வரி அம்மன் கோயிலில் சிறிது நேரம் இளைப்பாறினோம்.
மாலை நாகப்பட்டினம் மாவட்டம் திருச்செங்காட்டாங்குடி உத்திராபதீஸ்வரர் கோயில், சீயாத்தமங்கை அயவந்தீசுவரர் கோயில், திருப்பயத்தங்குடி திருப்பயற்றுநாதர் கோயில், திருவாரூர் மாவட்டம் கரவீரம் கரவீரநாதர் கோயில், திருக்கண்ணமங்கை பக்தவத்சலப்பெருமாள் கோயில் ஆகிய கோயில்களுக்குச் சென்றோம். அங்கிருந்து புறப்பட்டு, இரவு 11.30 மணியளவில் தஞ்சாவூர் திரும்பினோம். 

திருமருகல், நாகப்பட்டினம் மாவட்டம்  
(மாணிக்கவண்ணர்-வண்டுவார்குழலி) (ஞானசம்பந்தர், அப்பர் பாடியது)
இக்கோயில் ஒரு மாடக்கோயிலாகும். இக்கோயிலின் இடப்புறம் மேடையுடன் வன்னி மரம் உள்ளது. இந்த மரத்தின் அடியில்தான் ஞானசம்பந்தர் விஷம் தீர்ந்து எழுப்யி செட்டி மகனுக்கும் செட்டிப் பெண்ணுக்கும் திருமணத்தை நடத்தி வைத்ததாகக் கூறுவர். இந்த ஊரில் பாம்பு கடித்து எவரும் இறப்பதில்லை என்று கூறுவர். 

  
திருப்புகலூர், நாகப்பட்டினம் மாவட்டம்  
(அக்னிபுரீஸ்வரர்-கருந்தார்குழலி) (ஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர் பாடியது)
கோயிலுக்குள் கோயில் என்ற வகையில் இக்கோயிலில் இரு கோயில்கள் உள்ளன. இங்கிருந்த முருக நாயனார் மடத்தில் சம்பந்தர், அப்பர், சிறுத்தொண்டர், திருநீலநக்கர் முதலியோர் கூடியிருந்து மகிழ்ந்ததாகக் கூறுகின்றனர்.

  


திருப்புகலூர் கோயிலிலுள்ள மற்றொரு கோயிலான திருப்புகலூர் வர்த்தமானீச்சரம்
(வர்த்தமானீஸ்வரர்-கருந்தார்குழலி) (ஞானசம்பந்தர் பாடியது)  
அக்னிபுரீஸ்வரர் சன்னதியை ஒட்டி, மூலவர் சன்னதியின் வட புறத்தில் வர்த்தமானீச்சரம் அமைந்துள்ளது. அக்னிபுரீஸ்வரர் சன்னதியில் மூலவர் அறைக்கு நுழையும்போதே அதே வாயில் வழியாக வர்த்தமானீச்சரம் செல்லலாம். 

இராமநந்தீச்சரம், நாகப்பட்டினம் மாவட்டம்  (ஞானசம்பந்தர் பாடியது)  
(ராமநதீஸ்வரர்-கருவார்குழலி) 
கண்ணபுரம் என்று அழைக்கப்படுகின்ற இந்த தலம், இராமன், இராவணனைக் கொன்ற கொலைப்பாவம் நீங்க இறைவனை வழிபட்ட தலம் என்ற பெருமையுடையது. ஆதலால் இராமநந்தீச்சரம் என்றழைக்கப்படுகிறது.   
திருச்செங்காட்டாங்குடி, நாகப்பட்டினம் மாவட்டம்  

(உத்தராபதீஸ்வரர்-குழலம்மை) (ஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர் பாடியது)
பிள்ளைக்கறியமுது அளித்து முக்தியடைந்த சிறுத்தொண்ட நாயனார் அவதரித்த தலமாகும். ஐயடிகள் காடவர்கோன் என்னும் பல்லவ மன்னன் சிறுத்தொண்டருக்கு இறைவன் அருள் செய்ததை அறிந்து, இங்கு வந்து, வழிபட்டு, உத்திராபதியாரின் தோற்றத்தைக் காண விரும்பினார். இறைவன், கோயிலை திருப்பணி செய்து உத்தராபதியார் திருவுருவம் அமைத்து சித்திரைத் திருவோணத்தில் குடமுழுக்கு செய்தால் தான் சண்பகப்பூ மணம் வீசக் காட்சி தருவாகக் கூறி, அவ்வாறே அருள் தந்ததாகக் கூறுவர். சீயாத்தமங்கை, நாகப்பட்டினம் மாவட்டம்  


(அயவந்தீஸ்வரர்-இருமலர்க்கண்ணம்மை) (ஞானசம்பந்தர் பாடியது)
ஊர் சீயாத்தமங்கை என்றும், கோயில் அயவந்தீசம் என்றும் அழைக்கப்படுகிறது. திருநீலநக்க நாயனார் அவதரித்த பெருமையுடைய தலமாகும்.

  
திருப்பயத்தங்குடி, திருவாரூர் மாவட்டம்
(திருப்பயற்றுநாதர்-காவியங்கண்ணி) (அப்பர் பாடியது)
நாற்கோண வடிவில் உள்ள ஆவுடையார் பார்ப்பதற்கு மிகவும் அழகாக உள்ளார். இத்தலம் பைரவ மகரிஷி வழிபட்ட தலமாகும்.

கரவீரம், திருவாரூர் மாவட்டம்
(கரவீரநாதர்-பிரத்யட்சமின்னம்மை)  (ஞானசம்பந்தர் பாடியது) 
கர வீரம் என்றால் பொன் அலரி என்று பொருளாகும். அலரியைத் தல மரமாகக் கொண்டதால் இந்த தலம் இப்பெயரைப் பெற்றது.

திருவாரூரில் கோயிலுக்குள் கோயில் கண்டுள்ளோம். அவ்வாறே, இந்த உலாவின்போது திருப்புகலூரில் கோயிலுக்குள் கோயிலைக் கண்டோம். இறைவன் இறைவி ஊடல் கொண்ட நிலையிலான சிற்பங்களை ஒரே நாளில் இரு கோயில்களில் கண்டோம். இந்தப் பயணத்தின்போது நாங்கள் கண்ட இறைவியின் பெயர்கள் மிகவும் அழகாக இருந்ததைக் கண்டோம். வழக்கம்போல இந்த உலா ஒரு மன நிறைவான உலாவாக இருந்தது. அடுத்து, பிறிதொரு உலாவில் சந்திப்போம்.
எங்களை அழைத்துச் சென்ற முனைவர் வீ.ஜெயபால் மற்றும் குழுவினருடன்

துணை நின்றவை
பு.மா.ஜெயசெந்தில்நாதன், திருமுறைத்தலங்கள், வர்த்தமானன் பதிப்பகம், சென்னை, 2009
வீ.ஜெயபால், சைவ நால்வரால் பாடப்பெற்ற திருத்தலங்கள், சைவ சித்தாந்த ஆய்வு மையம், தஞ்சாவூர் 613 009, 2014
சிவ.ஆ.பக்தவத்சலம், தேவாரத் திருத்தலங்கள் வழிகாட்டி, குடியேற்றம், 2005
விக்கிபீடியா