19 May 2025

மனதில் நிற்கும் இந்தி வகுப்புகள் (1977-79)

1970களின் இடையில்..கும்பகோணம் கும்பேஸ்வரர் திருமஞ்சன வீதியில் காவிரியாற்றுக்குச் செல்லும் வழியில் மூர்த்திச்செட்டித் தெரு, பாட்றாச்சாரியார் தெரு தெருக்களை அடுத்து இடது புறத்தில் கரும்பாயிரம் பிள்ளையார் கோயில் உள்ளது. அங்கிருந்து சிறிது தூரத்தில் வலது புறத்தில்  நாங்கள் தட்டச்சுக்குச் சென்ற ஈஸ்வரன் தட்டச்சுப் பயிற்சி நிறுவனம் ஒரு வீட்டின் மாடியில் இயங்கிவந்தது. அதன் எதிரே வலது புறத்தில் கும்பகோணம் கூட்டுறவு பால் சொஸைட்டியும், இடது புறத்தில் ரேஷன் கடையும் இருந்தன. தட்டச்சுப் பயிற்சி முடிந்தபின் கீழே இறங்கிவருவோம். முதலில் ஆங்கிலத் தட்டச்சு கற்றுக்கொண்டோம். என்னுடைய ஆரம்பக் காலத் தட்டச்சுப் பயிற்சி இங்குதான். பின்னர் கும்பேஸ்வரர் திருமஞ்சன வீதியில் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட, பாரத் தட்டச்சுப் பயிற்சி நிறுவனத்தில் (தற்போது கும்பேஸ்வரர் வடக்கு வீதியில் உள்ளது) சேர்ந்து ஆங்கில, தமிழ் தட்டச்சிலும், ஆங்கில, தமிழ் சுருக்கெழுத்திலும் தேர்ச்சி பெற்றேன். அது ஒரு தனி அனுபவம்.

தட்டச்சு நிறுவனம் இயங்கிய வீட்டின் கீழே திண்ணையில் ஒருவர் இந்தி வகுப்பு நடத்திக்கொண்டிருந்தார். அவரிடம் நானும், செல்வம் (பழைய அரண்மனைத்தெரு), ஐயப்பன் (முத்துப்பிள்ளைமண்டபம்), உள்ளிட்ட பல நண்பர்களும் ஆரம்ப காலத்தில் இந்தி கற்றுக்கொண்டோம். 

எங்கள் அப்பா என்னை பல ஆங்கில, இந்தித் திரைப்படங்களுக்கு அழைத்துச்சென்றுள்ளார். நண்பர்களுடன் சேர்ந்து, மொழி தெரியாமல் பாபி, ஷோலே, தீவார் போன்ற இந்தித் திரைப்படங்களைப் பார்த்த சில ஆண்டுகளில்தான் இந்தி வகுப்புக்குச் சென்றோம்.  ஆசிரியர் நடத்திய விதம் எங்களுக்கு எளிதாகப் புரிந்தது. தெரியாத சொற்களுக்கு அவ்வப்போது பொருள் கேட்டுத் தெரிந்துகொள்வோம். நாங்கள் கேட்கும் அனைத்துக் கேள்விகளுக்கும் பொறுமையாகப் பொருள் கூறுவார். 

காந்தியடிகள் நற்பணிக்கழகம், காலசந்தி கட்டளை
(ஏப்ரல் 2025இல் சென்றபோது எடுத்த ஒளிப்படம்)

பிறகு, 1970களின் இடையில் கும்பகோணத்தில் கும்பேஸ்வரர் திருமஞ்சன வீதியில் ஆரம்பிக்கப்பட்ட காந்தியடிகள் நற்பணிக்கழகத்தில் (தற்போது காலசந்தி கட்டளையில் செயல்பட்டுவருகின்றது) இந்தி வகுப்பினைத் தொடர்ந்தேன். என்னுடன் பள்ளி நண்பர்களான  ராஜசேகரன் (16 கட்டு, திருமஞ்சன வீதி)மதியழகன் (திருமஞ்சன வீதி), மோகன் (சிங்காரம் செட்டித்தெரு), ஐயப்பன் (முத்துப்பிள்ளை மண்டபம்) படித்த நினைவு.  

நான் ப்ராத்மிக் (பிப்ரவரி 1978), மத்யமா (ஆகஸ்டு 1978), ராஷ்ட்ரபாஷா (பிப்ரவரி 1979)  ஆகியவற்றில் தேர்ச்சி பெற்றேன். பணிக்குச் சென்றபின்னர் பிரவேசிகாவில் தேர்ச்சி பெற்றேன். சிலர் இடையிலே நின்றுவிட்டனர். எங்களில் மோகன் மட்டும் ப்ரவின் வரை படித்தார். பின்னர் நான் தனியார் நிறுவனங்களில் பணியாற்றியபோது மோகன் எனக்கு  இந்தியில் கடிதம் எழுதியதும் நான் பதில் எழுதியதும் நினைவில் உள்ளது. 

1979இல் சென்னையில்  முதன்முதலாக ஒரு தனியார் நிறுவனத்தில் பணியில் சேர்ந்த போது அங்கு ஆங்கிலமும், இந்தியும் பெரும்பாலும் பயன்படுத்தப்பட்டதைக் கண்டேன். நான் கற்ற இந்தி எனக்கு அப்போது கைகொடுத்தது. சேர்ந்த சில நாள்களில் அந்நிறுவன மேலாளர் என்னிடம்  டில்லியில் உள்ள அந்நிறுவனத்தின் தலைமையலுவலகத்திலிருந்து  அவ்வப்போது தொலைபேசி அழைப்பு வருமென்றும், பெறப்படும் செய்தியைத் தட்டச்சுச் செய்துதரவேண்டும் என்றும் கூறினார். அதற்கு முன்னர் ஓரிரு முறை தான் நான் தொலைபேசியில் பேசியுள்ளேன். அதிகம் நான் தொலைபேசியில் பேசியது வழக்கமில்லை என்று கூறியபோது அவர் என்னை ஊக்கப்படுத்தி அனுபவத்தில் அனைத்தையும் அறிந்துகொள்ளலாம் என்றார். அவர்கள் இந்தியில் பேசக்கூட வாய்ப்புள்ளது என்றார். அவ்வாறான ஒரு சூழலை எதிர்கொள்ளத் தயாராக இருந்தேன். 

அவர் சொன்ன மறுநாளே புதுதில்லி அலுவலகத்திலிருந்து தொலைபேசியில் ஒரு செய்தி வந்தது. மேலாளர் தொலைபேசியை என்னிடம் கொடுத்து அவர்கள் பேசுவதைக் கேட்டு, சுருக்கெழுத்தில் குறித்துக்கொண்டு, அதனைத் தட்டச்சிட்டு வரும்படிக் கூறினார். டெல்லியிலிருந்து வந்த, ஆங்கிலத்திலும் இந்தியிலும் ஒருவர் தொலைபேசியில் பேசிய அலுவலகச் செய்தியை அப்படியே உள்வாங்கிக்கொண்டு சுருக்கெழுத்தில் எழுதி, (தெரியாத, புரியாத இடங்களில் புள்ளி வைத்தும், இடைவெளிவிட்டும் சமாளித்து) அதனை ஆங்கிலத்தில் தட்டச்சு செய்தேன். மேலாளர் அதனைப் பார்த்துத் திருத்தித் தரவே மறுபடியும் அதனைத் தட்டச்சிட்டேன். அவர் என்னுடைய முதல் முயற்சியை அதிகம் பாராட்டினார். 

அவ்வாறே கோயம்புத்தூரில் ஒரு தனியார் நிறுவனத்தில் நேர்முகத்தேர்விற்குச் சென்றபோது வித்தியாசமான அனுபவத்தைப் பெற்றேன். பம்பாயிலிருந்து வந்த அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் முழுக்க முழுக்க ஆங்கிலத்தில் கேள்வி கேட்டார். அவ்வப்போது இந்தியிலும் பேசினார். எதிர்கொள்ள சற்றே சிரமப்பட்டாலும், சமாளித்து விடையளித்தேன். வந்திருந்த சுமார் 20க்கும் மேற்பட்டோரில் மூவரைத் தேர்ந்தெடுத்தனர். அம்மூவரில் என்னை முதலாவதாகத் தெரிவு செய்து தலைமையலுவலகத்தில் தட்டச்சுச்சுருக்கெழுத்தராகப் பணியாற்ற ஆணை தந்தனர். மற்ற இருவரும் கேரளாவிற்கும், ஆந்திராவிற்கும் சென்றனர். வந்திருந்தோரில் இந்தி மொழியறிவு, ஆங்கிலத் தட்டச்சு, ஆங்கிலச் சுருக்கெழுத்து ஆகிய தகுதிகளுடன் நான் மட்டுமே இருந்ததாகக் கூறினர்.  ரேஸ் கோர்ஸ் சாலையில் உள்ள, நான் நேர்முகத்தேர்வினை எதிர்கொண்ட, அதே அலுவலகத்தில் பின்னர் ஒன்றரை ஆண்டுகள் பணியாற்றினேன். 

தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் சோழ நாட்டில் பௌத்தம் (1999) என்ற தலைப்பில் நான் மேற்கொண்ட முனைவர்ப் பட்ட ஆய்விற்காக  இந்திய, வெளிநாட்டு அருங்காட்சியகங்களிலிருந்து நாகப்பட்டின புத்தர் செப்புத்திருமேனிகளின் ஒளிப்படங்களைக் கேட்டு ஆங்கிலத்தில் நான் கடிதம் எழுதியபோது சில அருங்காட்சியகத்தார் இந்தியில் மறுமொழியினை அனுப்பியிருந்தனர். எப்போதோ நான் கற்ற இந்தி அப்போது எனக்குப் பெரிதும் உதவியது.  அதனடிப்படையில் அவர்களிடமிருந்து பெற்ற நாகப்பட்டின புத்தர் சிற்பங்கள் தொடர்பான விவரங்களை என் ஆய்வேட்டில் இணைத்தேன்.

சில ஆண்டுகளுக்குப் பிறகு வட இந்தியாவிலுள்ள கோயில்களுக்குச் சென்றபோது பெயர்ப்பலகைகளில் உள்ள இந்தி எழுத்துகள் தொடங்கி அனைத்து இடங்களிலும் இருந்த இந்தி எழுத்துகளை மிக எளிதாகப் படிக்கவும், புரிந்துகொள்ளவும் பெரிதும் உதவியது. சுமார் 20 பேர் கொண்ட குழுவில் நானும், எங்களை அழைத்துச்சென்றவரும் மட்டுமே இந்தி அறிந்திருந்தோம். 

தற்போதெல்லாம் அவ்வப்போது இந்தி செய்தியினைக் கேட்கிறேன். ஓரளவு புரிந்துகொள்ள முடிகிறது. தெரியாத சொற்களுக்கு, ஆரம்பத்தில் ஆங்கில நாளிதழை வாசித்தபோது பயன்படுத்திய உத்தியின் அடிப்படையில், அகராதிகளை நாடுகின்றேன்.  1977இல் கற்க ஆரம்பித்து, பிரவேஷிகா வரை கற்றபோதிலும் அரிதாகப் பயன்படுத்துவதால் சற்று சிரமம் இருப்பதை உணர்கிறேன். இருப்பினும் நான் அப்போது கற்ற இந்தி அவ்வப்போது கைகொடுப்பதை அனுபவபூர்வமாக உணர்கிறேன்.  

ஆரம்பத்தில் திண்ணையில் நான் கற்ற இந்தியானது தொடர்ந்து கும்பகோணம் காந்தியடிகள் நற்பணிக்கழகத்தின் மூலமாக   பிரவேஷிகா வரை தேர்ச்சியடையவும், பணிக்காலத்தில் பல நிலைகளிலும், ஆய்வின்போதும் பெரிதும் உதவியது. இந்நாளில், அப்போது எனக்குக் கற்பித்த திண்ணை இந்தி வகுப்பு ஆசிரியரையும், காந்தியடிகள் நற்பணிக்கழகத்தின் பாலுஜி அவர்களையும் நன்றியோடு நினைவுகூர்கிறேன். 

20 மே 2025இல் மேம்படுத்தப்பட்டது.

4 comments:

  1. நம் தாய்மொழியை விட மற்றொரு மொழியையும் அறிந்திருப்பது தொழில் ரீதியில் பல விதங்களில் உதவும். நல்ல பதிவு.

    ReplyDelete
  2. நல்ல அனுபவங்கள்.  இனிமையான நினைவுகள். 

    தாய்மொழி தானாக வந்துவிடும்.  ஆங்கிலம் தொடர்பு கொள்ளும் மொழியாக வந்து விடும்.  இப்படி வெவ்வேறு மொழிகளைக் கற்றுக் கொள்வது எப்போதுமே நமக்கு உதவும்.  

    ReplyDelete
  3. நல்ல அனுபவம் கும்பகோணத்தில் நீங்கள் சொல்லியிருக்கும் இடங்களை மனக்கண்ணால் பார்த்துக்கொண்டேன். நான் கற்ற தட்டச்சு எனக்கு மிக மிக உபயோகமாக இருந்தது. எது கற்றாலும் அது வாழ்க்கைக்கு பிரயோசனப்படும்.

    ReplyDelete
  4. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. உங்களது நல்ல இனிமையான அனுபவங்கள் அனைவருக்கும் உற்சாகமளிப்பவை. படிக்கும் போதே மனதுக்குள் சந்தோஷம் வருகிறது. மேலும் பல மொழிகளை கற்றுக் கொள்வதென்பது மிகவும் பயனுள்ளவை. இங்குள்ள பள்ளிகளில் இவ்விதம் தாய் மொழியுடன் பிற மொழிகளையும் கற்ப்பிக்கிறார்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete