"மச்சான், நான் எங்கப் போனாலும் கண்டுபிடிச்சு வந்துடுவியா?" என்ற அவளுடைய கேள்விக்குப் பதில் கூறும் வகையில் அவன், "ஏழு கடல் தாண்டி, ஏழு மலை தாண்டி நீ போனாக்கூட நான் உன்னைத் தேடிக் கண்டுபிடிச்சு வந்துடுவேன்" என்பது போன்ற நெஞ்சத்தில் நினைவுகளைத் தேக்கிவைத்துள்ள உணர்வுபூர்வமான கதைகளையும், "ராஜாவோட உயிரு உயரத்துல மலை மேல இருக்கிற குகையில இருக்கிற பொந்துக்குள்ள கிளியோட கழுத்துல இருக்காம்" என்று ஆர்வத்தையும் அதிசயத்தையும் நம்முள் உண்டாக்கும் கதைகளையும் இளம் வயது முதலே நாம் கேட்டு வளர்ந்து வந்துள்ளோம். அவை நம்மை நன்னெறிப்படுத்துவதோடு, நல்ல வாழ்விற்குத் துணையாக அமைகின்றன. ஒரு செய்தியை நேரடியாகச் சொல்வதற்கும் கதையாகச் சொல்வதற்கும் அதிக வேறுபாடுகள் காணப்படுகின்றன. கதையாகச் சொல்லும் நிலையில் மனதில் பெரும் தாக்கத்தை உணரமுடியும். அவ்வாறான ஒரு வகை கதைதான் மணி.மாறனின் தமிழறி மடந்தை கதை.
கதை
கதை
அளகாபுரி மன்னனான அளகேஸ்வரனின் மகள் ஏலாங்குழலாள். பாடலிபுத்திர அதிபதியான பத்திரகிரியின் மகன் சந்தனகுமாரன். படிப்பில் ஈடுபாடின்றி வீட்டைவிட்டு வெளியேறிய அவன், ஏலாங்குழலாளைக் கண்டு தன் மனதைப் பறி கொடுக்கிறான். அவளும் தன் மனதை பறி கொடுக்கிறாள். அவள் தன் எண்ணத்தை அவனிடம் வெளிப்படுத்த எடுக்கும் முயற்சி தோற்று, இருவரும் ஒன்றுசேரா நிலை ஏற்படுகிறது. அரசகுமாரி தன் உயிரை மாய்த்துக்கொள்ள, அதையறிந்த அரசகுமாரனும் தற்கொலை செய்துகொள்கிறான். இதிலிருந்து அவர்களுடைய மறுபிறவி கதை தொடங்குகின்றது.மறுபிறவிக் கதையில் தமிழ்ச்சங்கப் புலவன் நக்கீரன், கரிகாற்சோழ பெருவளத்தான், ஔவைப் பிராட்டியார், பாண்டிய மன்னன் ஆகியோர் பாத்திரப் படைப்புகளாக வந்து நம் மனதில் பதிந்துவிடுகின்றனர்.
அற்ப ஆயுளில் இறந்த இளவரசியும், இளவரசனும் சாவடியில் இருந்துகொண்டு அங்கு வருபவர்களைத் தங்கவிடாமல் பயமுறுத்திக்கொண்டுவந்தபோது ஔவையார் வந்து தங்குகிறார். பேய் வடிவில் வந்த அவர்களிடம் கதையைக் கேட்ட ஔவையார் அவர்கள் வாழ்ந்த விதத்தைக் கேட்டுத் தெரிந்துகொள்கிறார். பின்னர் ஔவையார், உறையூரில் கரிகாற்சோழனிடம் இருக்கும் பன்னீராயிரம் பெண்களில் முதல்வியான மரகதவடிவுக்கு மகளாகப் பிறக்கப்போவதையும், அவளுக்கு மன்னன் தமிழறி மடந்தை எனப் பெயர் சூட்டப்போவதையும் கூறுகிறாள். பின் நடக்கவிருப்பனவற்றையும் ஔவையார் கூறுகிறாள். இவ்வாறாகக் கதையின் போக்கு அமைகின்றது.ஔவையாரின் வாக்குப்படி அவர்களுடைய வாழ்வு அமைந்ததா என்பதும், அவ்வாழ்வினை எதிர்கொள்ள நிகழ்ந்த நிகழ்வுகளும் கற்பனை நயத்தோடு மனதில் பதியும் வகையில் மிகவும் சிறப்பாக தரப்பட்டுள்ளன.
வர்ணனையும் கற்பனையும்
அவளுக்கான அரண்மனை பற்றிய வர்ணனை மிகவும் ரசிக்கும்படி உள்ளது. அந்த அரண்மனையில் ஏழு மாடியும், அறுபத்து நான்கு வாசலும் இருப்பது பற்றியும் அந்த ஒவ்வொரு வாசலுக்கும் இருக்கும் சிறப்பு மற்றும் புதுமை பற்றியும் கூறப்பட்டுள்ள விதம் பாராட்டத்தக்க வகையில் உள்ளது. (ப.14)
சோழ மாமன்னன் கொலுவிற்குச் சென்றுவிட்டு தமிழறி மடந்தை வருவதைப் படிக்கும்போது நாமும் அங்கே அவளை எதிர்கொண்டு அழைப்பதை போன்ற ஓர் உணர்வு ஏற்படுகிறது. "...இவள் தமிழறி மடந்தை என்னும் பெயர் கொண்டு, முன்னர் ஔவையார் கூறியதுபோல் சோழ மாமன்னனால் சகல வசதிகளும், நன்மைகளும் பெற்று, வாழ்ந்து வருகின்ற காலத்தில் ஒர நாள் பச்சை பல்லக்கின் மீது ஏறிக்கொண்டு பனிரெண்டாயிரம் பெண்களும் தொழுதுவர, பகலில் பந்தம் பிடிக்க, வெண் சாமரம் வீச தோழிமார்கள் இரண்டு பக்கத்திலும் தாவிக்கொண்டு வர கட்டியக்காரர் கட்டியங்கூறி எச்சரிக்கை செய்ய, பதினெட்டு மேள வாத்தியங்கள் முழங்க, தும்புரு வீணை, கின்னரி, இராவணாதிரம், குடமுழர் போன்ற பலவித சங்கீதம் முழங்கிவர, மிகவும் அழகு நிரம்பிய அவள் பவனி வருவதைக் கண்ட இளைஞர்கள் எல்லாம் மூர்ச்சையாய் விழுந்திட சோழ மாமன்னன் கொலுவிற்குச் சென்று அங்கே அவர் முகம் பெற்றுத் திரும்பி வருகின்றாள்....." (ப.20)
நூல்முழுவதும் இவ்வாறான நிகழ்வுகள் நம் கண் முன் நடப்பதைப் போல காட்டப்பட்டுள்ள விதம் படிப்பவர் மனதில் தங்கிவிடும்.
நடக்கும் நிகழ்வுகள் வெண்பா வடிவில் தரப்பட்டு உரிய விளக்கங்கள் ஆங்காங்கே தரப்பட்டுள்ளன.
தூக்கம் நீங்கி ஔவையார் அருளிச்செய்த வெண்பா.
வெண்பாவிருக்காலிற் கல்லானை வெள்ளோலைக்
கண்பார்த்துக் கையாலெழுதானைப் - பெண்பாவி
பெற்றாளோ பெற்றாள் பிறர்நகைக்கப் பெற்றாளோ
பெற்றோமற் றெற்றோமற் றெற்று.
இதனைக் கேட்டு அது கல்வி கற்ற பேயானதால் இந்தக் கல்வியின் பொருளை அறிந்துகொண்டு நம்முடைய பூர்வோத்திரம் எல்லாம் அறிந்து சொன்ன இவள் தேவியே என்று பயந்து சென்றது. (ப.8)
நக்கீர தேவர் வாழைத்தண்டை விறகாகக் கட்டிக் கொண்டு சமூகச்சாலையில் போய் முதல் கட்டு வாசலிலே கற்றுச் சொல்லிப் பெண்கள் இருப்பதைக் கண்டு பிறகு விலை கூறின வெண்பா.
வெய்யோன்கதிரெரிப்ப வேற்கண்ணாள்பிற்றொடரப்
பையவருதென்றற் பயனறியேன்-துய்ய
மலர்த்தடங்கண் வாய்ந்த மயிலனையீர் கொள்வீர்
விலைக்குவிறகோ விறகு.
இதனைக் கேட்ட கற்றுச்சொல்லிப் பெண்கள் இதுநாள் வரையில் நம் நாச்சியாருக்கு எதிராளி யாரும் வந்து நம்மிடம் கவி சொன்னதில்லையே, என்று வியக்கின்றனர். (ப.44)
தமிழறிவானவளுக்கும் நக்கீரருக்கும் நடக்கும் விவாதம் வெண்பா, சந்தவிருத்தம், கவி என்ற நிலைகளில் யார் வெற்றி பெறப் போகின்றார்களோ என்ற ஆர்வத்தைத் தூண்டுவதுடன் விறுவிறுப்பாகவும் அமைந்துள்ளது. அவற்றைப் படிக்கும்போதுதான் உணரமுடியும்.
சொல்லுக்கான பொருள்
புதிய சொற்களுக்கு பொருள்கள் தரப்பட்டுள்ளன. ஆவேசம்-பேய் (ப.7), அநத்தல்-தூக்கம் (ப.8), அரதேசி-உள்நாட்டைச் சேர்ந்த யாசகன் (அகதேசி, அரதேசி என மருவியது) (ப.16), மொண்ணச்சிகள்-திருநங்கைகளாக இருக்கலாம் (ப.29), சமூகச்சாலை-வாசல்(ப.44), ஆகடியம்-கிண்டல் (ப.57), அஸ்தகடகம்-கைவளையல் (ப.69), மொத்தார்த்தமாக-மலுப்பலாக (ப.86), பூராயமாய்-ஆராய்ந்து (ப.89)
கதை கேட்பது, படிப்பது என்பது அனைவருக்கும் பிடித்ததேயாகும். இவ்வாறான பல சிறப்புக்கூறுகளைக் கொண்டு அமைந்துள்ள இந்த நூலைப் படிப்போமே. வாசிப்பை நேசிப்போமே.
தமிழறி மடந்தை கதை, பதிப்பாசிரியர் மணி.மாறன் (9443476597), தஞ்சாவூர் மகாராஜா சரபோஜியின் சரசுவதி மகால் நூலகம் மற்றும் ஆய்வு மையம், தஞ்சாவூர், 2013, ரூ.80
நாம் முன்பு வாசித்த மணி.மாறன் நூல்கள்