13 September 2026

சைவம் காட்டும் அற்புதங்கள்: குடந்தை கே.என்.நாகராஜன்

திரு குடந்தை கே.என்.நாகராஜன்,   "சைவம் காட்டும் அற்புதங்கள்" நூல் மூலமாக   63 நாயன்மார்களின் பெருமையை கவிதை வடிவில் எடுத்துக்கூறுகிறார். 


விநாயகர் வணக்கம்,  சுந்தரரின் திருத்தொண்டத்தொகை ஆகியவற்றின் தொடக்கத்துடன் உள்ள இந்த நூலில் நாயன்மார்களின் வரலாற்றை மிகவும் தெளிவாகத் தந்துள்ளார். எளிய நடை, அனைவரும் புரிந்துகொள்ளும் வகையிலான சுருக்கமான, அதே சமயம் செய்திகளைத் தருகின்ற வகையில் அமைந்துள்ள கவிதை வரிகள் மூலமாக நாயன்மார்களின் பிறப்பு தொடங்கி அவர்களின் சிவத்தொண்டினை எடுத்துக்கூறும் விதம் வாசிப்போரை அதில் முற்றிலுமாக லயித்துவிட வைக்குமளவு உள்ளது. 


கவிதையைப் படிக்கும்போது அவர் எவ்வளவு சிரமப்பட்டு சரியான சொற்களைத் தேர்ந்தெடுத்துள்ளார் என்பதை உணரமுடிகிறது. அனைத்திற்கும் முத்தாய்ப்பாக அந்தந்த நாயன்மார்களின் கதையைப் பற்றி கவிதையை வடிக்கின்ற அதே சமயத்தில் அது தொடர்பான ஓவியங்களை ஆங்காங்கே அமைத்துள்ளவிதம் நூலுக்கு அழகு சேர்க்கிறது. அவை, வெளிப்படுத்தும் எண்ணங்களை  வாசகரின் மனதில் மிகவும் விரைவாக சென்று சேர்க்கின்றன.

நாயன்மார்களைப் பற்றி மட்டுமன்றி மாணிக்கவாசகர், நம்பியாண்டார் நம்பிகள், சேக்கிழார், இராஜராஜசோழன் (திருமுறைகண்டசோழன்)  உள்ளிட்டோரைப் பற்றியும் கவிதை படைத்துள்ளார். 

சைவத்திற்கான இவருடைய தொண்டு தொடர்வதை இந்நூல் புலப்படுத்துகிறது. அறுபடை வீடு கொண்ட திருமுருகா! என்ற பாடலைக் கேட்கும்போது அறுபத்துமூவரைப் பற்றி அதுபோல் முடியுமா! என்று எண்ணியதன் விளைவே இந்நூல் என்று கூறும் நூலாசிரியர், ஈசன் திருவருளால் மென்மேலும் பல நூல்களைப் படைக்க மனம் நிறைந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.  

தலைப்பு: சைவம் காட்டும் அற்புதங்கள் (கவிதைகள்) 
ஆசிரியர்: குடந்தை கே.என்.நாகராஜன்
பதிப்பகம்: அஞ்சலை வெளியீட்டகம், 4/54, கொத்தத் தெரு, மேல கபிஸ்தலம் 614 203, பாபநாசம் வட்டம், தஞ்சாவூர் மாவட்டம், அலைபேசி 94868 83504 பதிப்பாண்டு: முதல் பதிப்பு, ஜூலை 2026
விலை: ரூ.150

10 September 2026

வ.அய்.சுப்பிரமணியம் அவர்களின் பன்முக ஆற்றல்

சென்னை, கொ.கந்தசாமி நாயுடு கல்லூரியில் 2.9.2026 அன்று "வ.அய்.சுப்பிரமணியம் அவர்களின் பன்முக ஆற்றல்" என்ற தலைப்பில் மூதறிஞர் வ.அய்.சுப்பிரமணியம் நூற்றாண்டு நினைவு சிறப்புக் கருத்தரங்கம் நிகழ்ச்சி நிரலில் கண்டவாறு நடைபெற்றது.

கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள வள்ளல் சி.கந்தசாமி நாயுடு அவர்களின் திருவுருவச்சிலைக்கு துறைத்தலைவரும், முக்கிய விருந்தினர்களும் மலர் தூவி சிறப்பு செய்ததைத் தொடர்ந்து நிகழ்வு தொடங்கியது.

விழா மேடையில் வ.அய்.சுப்பிரமணியம் அவர்களின் திருவுருவப்படம் திறந்துவைக்கப்பட்டது.  

கல்லூரி முதல்வரும், தமிழ்த்துறைத்தலைவருமான முனைவர் வா.மு.சே.ஆண்டவர் தலைமையில், மொழி அறக்கட்டளையின் இயக்குநர் பேரா. பா.ரா.சுப்பிரமணியம் முதன்மைச்சிறப்புரையில்,  வ.அய்.சுப்பிரமணியம் அவர்களின் மாணவர் என்ற வகையில்  உணர்வுபூர்வமாக அந்நாளைய நினைவுகளைப் பகிர்ந்துகொண்டார். 

அனைத்திந்திய எழுத்தாளர் சங்கத்தலைவர் பேரா. இராம.குருநாதன், பச்சையப்பன் கல்லூரியின் மேனாள் வரலாற்றுத்துறைத்தலைவர் பேரா.ச.திருவேங்கடம் ஆகியோர் சிறப்புச்சொற்பொழிவாற்றினர். 

என்னுடைய உரையில், தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் வ.அய்.சு. துணைவேந்தராக இருந்த காலகட்டத்தில் பல்கலைக்கழகத்தில் பணியாற்றியபோது பெற்ற அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டேன். அவருடைய நேரடி வாய்மொழி ஆணையின்படி தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைச்சட்ட விதிகளைத் தட்டச்சு செய்தது முதல் பல்கலைக்கழகச் செய்தி மலர், காலாண்டிதழ்களை உறுப்பினர்களுக்கு அனுப்புதல், பேரா.கா.சிவத்தம்பி அவர்களுடைய தமிழில் இலக்கிய வரலாறு நூலின் ஆங்கில வரைவினைத் தட்டச்சு செய்தது, புதிதாக ஒவ்வொரு நூலும் அச்சிடப்படும்போது துணைவேந்தருக்கு அனுப்பப்படும் முறை உள்ளிட்ட பல செய்திகளைப் பகிர்ந்துகொண்டேன். 

முன்னதாக கல்லூரி ஆட்சிமன்றக்குழு உறுப்பினர் முனைவர் கு.சிவகாமி வரவேற்புரையாற்ற, நிறைவாக கல்லூரி ஆட்சிமன்றக்குழு உறுப்பினர் முனைவர் அ.ரஷிதாபானு நன்றியுரை கூறினார். நிகழ்வினை தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர் முனைவர் இரா.பிரபா தொகுத்து வழங்கினார். கல்லூரி மாணவர்கள், துறைத்தலைவர்கள், உள்ளூர்ப் பிரமுகர்கள் உள்ட்ட பலர் நிகழ்கில் கலந்துகொண்டனர்.   







நிகழ்வின் ஒரு பகுதியாக பல்வேறு போட்டிகளில் வென்ற மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. இந்த விழா  வ.அய்.சு.வின் பன்முக ஆற்றலை  அனைவரும் அறிந்துகொள்ளும் வகையில் ஒரு நல்ல வாய்ப்பினைத் தந்தது. இவ்வாறான ஒரு நிகழ்வை ஏற்பாடு செய்து அன்னாருக்குப் பெருமை சேர்த்த கல்லூரி முதல்வருக்கும், துறையினருக்கும் மனமார்ந்த நன்றி.



3.9.2026 தினமணி, சென்னை பதிப்பு

-----------------------------------------------------------
நன்றி: சொ.கந்தசாமி நாயுடு கல்லூரி, தமிழ்த்துறை
(மூதறிஞர் வ.அய்.சுப்பிரமணியம் நூற்றாண்டு நினைவு 
சிறப்புக் கருத்தரங்கம், 2.9.2026)
-----------------------------------------------------------

20 August 2026

வடசேரி அய்யம்பெருமாள் சுப்பிரமணியம் நூற்றாண்டு சித்திரம்: தென்னவன் வெற்றிச்செல்வன்

தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் முதல் துணைவேந்தர் முதுமுனைவர் வ.அய்.சுப்பிரமணியம் அவர்களைப் பற்றி தென்னவன் வெற்றிச்செல்வன் தொகுத்துள்ள “வடசேரி அய்யம்பெருமாள் சுப்பிரமணியம் நூற்றாண்டு சித்திரம்” என்னும் நூல் வ.அய்.சு.வின் பன்முகத்தன்மையை வாசகர்களுக்குத் தருகிறது. அண்மையில் அவருடைய நூற்றாண்டின்போது (18.2.1926-29.6.2009) அவரைப் பற்றி பல கட்டுரைகளும், நூல்களும் வெளிவந்துள்ளன. அவரை நினைவுகூர்ந்து பல கருத்தரங்குகள் நடைபெற்றுவருகின்றன. இந்தச்சூழலில் இந்நூலானது அவருக்குப் பெருமை சேர்க்கின்ற மற்றொரு படைப்பாக அமைகிறது. 164 பக்கங்களைக் கொண்ட இந்நூலில் சுமார் 40 பக்கங்களைக் கொண்ட 18 பிற்சேர்க்கைகள் முக்கிய இடத்தைப் பெறுகின்றன. தகவலாளர்களுக்கும், படங்களும் ஆவணங்களும் தந்தவர்களுக்கும் உரிய ஒப்புகை தந்தவிதம் சிறப்பு.


“கம்பீரமான யானையின் சித்திரத்தைத் துதிக்கையிலிருந்து வரையத் தொடங்குவது போல, வ.அய்.சுப்பிரமணியம் என்கிற வடசேரி அய்யம்பெருமாள் சுப்பிரமணியம் எனும் ஆளுமைச் சித்திரத்தை, எங்கிருந்து தொடங்கி வரைவது என யோசித்தால், சுயமரியாதைச் சுடர்விடும் நிமிர்ந்த நன்னடையும் நேர்கொண்ட பார்வையும் நிலத்தில் யார்க்கும் அஞ்சாத துணிவும் கொண்ட அவரது ஆளுமைப் பண்பிலிருந்து வரைவதுதான் சரியாக இருக்கும் என்று தோன்றுகிறது” என்று நூலாசிரியர் கூறுவது நூற்றுக்கு நூறு உண்மை என்பதை அவருடன் பயணித்தவர்கள் உணர்வர்.

அன்னாரைப் பற்றி வெளிவந்த நூல்களையும், கட்டுரைகளையும், இணையதளங்களையும், அவருடன் தொடர்பிலிருந்த ஆசிரியர்கள், அலுவலர்கள், நண்பர்கள் மூலமாகப் பெற்ற தரவுகளையும் அடிப்படையாகக் கொண்டு, தேவையானவற்றைத் தெரிவு செய்து ஒருங்கிணைந்துத் தந்துள்ள நூலாசிரியரின் முயற்சி போற்றத்தக்கதாகும். அந்நாள் நினைவுகளுடன், இந்நாளில் வெளியான இப்படைப்பிலிருந்து சில பகுதிகளைப் பகிர்வதில் மகிழ்கிறேன். இவற்றுள் பெரும்பாலானவை பிற நூல்களில் இடம்பெற்ற, பல பெருமக்கள் சுட்டிய மேற்கோள்களாகும்.

“ஆய்வுத்திட்டம் ஒன்றுக்காக, நிதிவேண்டி புதுதில்லி சென்று நடுவண் அரசிடம் நிதி கேட்டிருக்கிறார், வ.அய்.சுப்பிரமணியம். “திட்ட வரைவில் ‘திராவிட’ என்பதை எடுத்துவிடுங்கள் நிதி தருகின்றோம்” என்று, காவிக்கறை தெரிய சிரித்த அமைச்சரிடம், “ஜனகனமன பாடலில் வரும் திராவிட என்ற சொல்லை நீங்கள் எடுங்கள். அப்புறம் நானும் ஆய்வுத் திட்டத்தில் திராவிட என்பதை எடுத்துவிடுகிறேன்” என முகத்துக்கு நேராக, நீடி நின்று நிமிர்ந்தெழுந்து முழங்கியவர்…” (ப.7)

“…வெளித்தோற்றத்துக்குக் கெடுபிடியாளராகத் தோன்றினாலும், உரிய சமயங்களில் தமது மனநெகிழ்வை உணர்வுபூர்வமாக வெளிப்படுத்தத் தயங்கமாட்டார்…” (ப.10)

“…தமிழ்ப் பல்கலைக்கழகம் பழமையாளர்களால் நடத்தப்படும் ஒன்றாக கருதிடாமல், நமது நாட்டுமக்கள் வளர்ச்சிக்குத் தேவையான புதுமையான நிறுவனம் மற்றும் எண்ணத்தெளிவு அதிகாரத்தில் உள்ளவர்களின் மனதில் வளர வேண்டும். உறைக்க வேண்டும்…” (ப.14)

“காவிரிப் பிரச்சனை முற்றிய காலகட்டத்தில், அப்பிரச்சனை குறித்து தமிழக அரசு, நமது தரப்பு நியாயங்களை எடுத்துரைப்பதற்காக, தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் சார்பில் சங்க இலக்கியத்திலும், தற்கால இலக்கியத்திலும், கல்வெட்டுகளிலும் காவிரி குறித்து வெளியான செய்திகள் அத்தனையும் தொகுத்து, நூல் ஒன்றினை வெளியிட ஏற்பாடு செய்தார். இதன் விளைவாக, நியாயமான உரிமைகள் அழுத்தமாக முன்வைக்கப்பட்டன.” (ப.18)

“ஒழுங்கு, கட்டுப்பாடு, காலந்தவறாமை, நடுநிலைமை, தியாகம், நேர்மை, வாய்மை, பரிவு, கண்டிப்பு, தன்னடக்கம், நிறுவனத்தின் செயல்பாடுகளுக்கு முழுப்பொறுப்பேற்றல் ஆகிய பண்புநலன்கள் கொண்டு மற்றவர்களுக்கு வழிகாட்டியாகத் திகழ்ந்தார்…” (ப.37)

“தமிழ்நாட்டு ஆளுநர் திரு கே.கே.ஷா அவர்கள், தம்மை ஒரு திராவிடன் அல்லன் என்றும், இந்தோ ஆரியமொழியான குஜராத்தி பேசுபவர் என்றும் குறிப்பிட்டார். எனவே, தான் ஒரு ஆரியன் என்றார். ஆனால் ஆளுநர் அவர்கள், திராவிட இனத்தைதச் சேர்ந்தவர்தான் என்று அழுத்தமாகக் கூற விரும்புகிறேன். திராவிட இனத்தினுள்ளும் மிகப்பழமையான மொழி ஒன்றின் பிரதிநிதி என்று நான் கூறுவது உண்மைக்குப் புறம்பாகாது…” (ப.65)

“ஆரம்பப்பள்ளியில்கூட தமிழ்வழிக்கல்வி வேண்டும் என போராட வேண்டிய இச்சூழலில், மருத்துவம், பொறியியல் முதலிய படிப்புகளைத் தமிழிலேயே நடத்தத் துணிந்து திட்டமிட்டார்…” (ப.90)

“வ.அய்.சு. கட்டுரைகளில், பிறர் யாரும் பயன்படுத்தாத, அரிதினும் அரிதான சில சொல் வழக்குகளைப் பயன்படுத்துவார். அவற்றில் நான் கண்டது ‘பூநிலை’ என்பார். பூகோளம் என்பதன் நல்ல தமிழாட்சியாக அவர் மட்டுமே பயன்படுத்துகிற சொல்லாடலாக இருக்கிறது…” (ப.112)

இந்நூலைப் படித்தபோது அவர் துணைவேந்தராகப் பொறுப்பில் இருந்தபோது, தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் தட்டச்சுச் சுருக்கெழுத்தராகப் பணியில் சேர்ந்து பணியாற்றிய நாள்கள் நினைவிற்கு வந்தன. துணைவேந்தர், தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் துணைச்சட்ட விதிகளைத் தட்டச்சிடும் பொறுப்பினை என்னிடம் தந்து, “மிகவும் கவனம். இதைப் பற்றி யாரிடமும் விவாதிக்கக்கூடாது. நுணுக்கமாகத் தவறின்றிச் செய்யவேண்டும்” என்றார். துணைப்பதிவாளர் முனைவர் முத்துக்குமாரசுவாமி அவர்களின் வழிகாட்டலில், பூல்ஸ்கேப் வடிவத் தாளில் சுமார் 120 பக்கங்கள் ஸ்டென்சில் தட்டச்சிட்டு, படியெடுத்தோம். பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி அவர்களுடைய ‘தமிழில் இலக்கிய வரலாறு’ என்னும் நூலின் ஆங்கிலப்பதிப்பின் வரைவைத் தட்டச்சு செய்தது மனதில் நிற்கும் மற்றொரு அனுபவமாகும். 1.9.1985இல் தஞ்சாவூரில் என் திருமணம் நடைபெற்றது. அவர், வந்து காத்துக்கொண்டிருந்ததாக உறவினர்கள் கூறினர். ஆமை வேகத்தில் வந்த மாப்பிள்ளை ஊர்வலம் திருமண மண்டபத்தை அடையும்போது தாமதமாகிவிட்டது. "வந்து, காத்திருந்ததாகச் சொல்லுங்கள்" என்று கூறிவிட்டு அவர் திரும்பிச்சென்றதாக அறிந்தேன். விடுப்பு முடிந்து பணியில் சேர்ந்தபின்னர் துணைவேந்தர் செயலகத்தில் சென்று தாமதத்திற்கான காரணத்தைத் தெரிவித்தேன்.

“அவர் சிறந்த நிர்வாகி மட்டுமல்ல சிறந்த கல்வியாளரும்தான் என்று நிறுவும் முயற்சியை வெளிக்கொண்டு வரவேண்டும் என்ற நோக்கம்தான் இந்த நூலின் பயணம்” (ப.115) என்ற வகையில் நூலாசிரியர், தன் இலக்கில் வெற்றி பெற்றுள்ளார் என்று கூறலாம். ஓர் அரிய மனிதரைப் பற்றிய நூலை வெளியிட்டு வரலாற்றுக்கும், வரும் தலைமுறையினருக்கும் பெரும்தொண்டாற்றியுள்ள அவருக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள்.

நூல்: வடசேரி அய்யம்பெருமாள் சுப்பிரமணியம் நூற்றாண்டுச் சித்திரம்
ஆக்கமும் தொகுப்பும்: தென்னவன் வெற்றிச்செல்வன்
பதிப்பகம்: ஆம்பல் பதிப்பகம், சென்னை-8, அலைபேசி 78689 34995
பதிப்பாண்டு: 2026
விலை: ரூ.180
-----------------------------------------------------------
-----------------------------------------------------------

எங்கள் இல்ல நூலகத்தில், 
நூலாசிரியரிடம் நூலைப் பெற்ற இனிய தருணம் (16.8.2026)


தொடர்புடைய பதிவுகள்

-----------------------------------------------------------------------------------
முதுமுனைவர் வ.அய்.சுப்பிரமணியம் நூற்றாண்டு (18.2.1926-29.6.2009)
-----------------------------------------------------------------------------------

29.8.2026இல் மேம்படுத்தப்பட்டது.

13 August 2026

சோழ மண்டல வரலாற்றுத் தேடல் குழு: இராஜராஜ சோழர் முடிசூடிய 1041ஆவது ஆண்டு விழா

சோழ மண்டல வரலாற்றுத் தேடல் குழு, தஞ்சாவூர் தமிழ்ச்சங்கம்ஆகிய அமைப்புகள் சார்பாக 3 ஆகஸ்டு 2026ஆம் நாள் ஆடிப்பெருக்கன்று மாமன்னர் இராஜராஜ சோழர் முடிசூடிய 1041ஆவது ஆண்டு விழா தஞ்சாவூர் பெருவுடையார் கோயில் வளாகத்தில் பெத்தண்ணன் கலையரங்கில் நடைபெற்றது.


தமிழ்த்தாய் வாழ்த்துடன் விழா இனிதே துவங்கிய விழாவிற்குத் தமிழ்நாடு கலை பண்பாட்டு மைய மண்டல உதவி இயக்குநர்  திரு.ராஜாராமன் முன்னிலை வகித்தார்.  இராஜராஜசோழர் புகழுரையை வரலாற்றறிஞர் முனைவர் கோ.தெய்வநாயகம் எடுத்துரைத்தார். முனைவர் மணி.மாறன், திரு தங்கதுரை, திரு அறம் கிருஷ்ணன், முனைவர் நா.சேதுராமன், திரு யோகம் செழியன், திரு செ.ராமநாதன் உள்ளிட்டோர் சிறப்புரையாற்றினர். நோக்கவுரையை மருத்துவர் சா.உதயசங்கர் எடுத்துரைத்தார்.

நிகழ்வின்போது அமரர் K.A.நீலகண்ட சாஸ்திரி, அமரர் கோவிந்தராசனார் போன்ற வரலாற்று மாமேதைகள் குடும்பத்தாருக்கு இராஜராஜர் விருதும், திரு.வேதாச்சலம், திரு.கரு.ராஜேந்திரன் ஆகியோருக்குச் சிறந்த வரலாற்றறிஞர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதும் வழங்கப்பட்டன. 
 



முனைவர்.ஜெ.ஆர்.சிவராமகிருஷ்ணன் எழுதிய "நிலவியல் நோக்கில் கங்கை கொண்ட சோழபுரம் வரலாறு" என்ற நூலை உதவி இயக்குநர்  திரு.ராஜாராமன் வெளியிட, அதன் முதல் படியைப் பெறுகின்ற அரிய நல்வாய்ப்பினைப் பெற்றேன். 



முன்னதாக திரு ஆண்டவர் கனி வரவேற்புரையாற்றினார். நிறைவாக திரு கபிலன் நன்றியுரை கூறினார். ஸ்ரீநந்தா நாட்டியக்குழுவினரின் நாட்டியாஞ்சலி பார்வையாளர்களைக் கவர்ந்தது. தொடர்ந்து ஆண்டுதோறும் நிகழ்வினைச் சிறப்பாக நடத்திவருகின்ற சோழ மண்டல வரலாற்றுத் தேடல் குழுவினரின் முயற்சியும், ஈடுபாடும் போற்றத்தக்கது. 

அந்நாள், இந்நாள்  வரலாற்றறிஞர்களுக்கு சிறப்பு செய்தது மிகவும் போற்றத்தக்கதாகும். வளரும் இளைஞர்களுக்கும், ஆய்வாளர்களுக்கும் தாமும் ஒரு வரலாற்றுச் சாதனையை படைக்கவேண்டும் என்ற ஓர் எண்ணத்தை உண்டாக்க இந்த நிகழ்வு  ஒரு பெரிய தூண்டுகோலாக அமையும். 



-----------------------------------------------------------------------------------
புகைப்படங்கள் நன்றி: சோழ மண்டல வரலாற்றுத் தேடல் குழு
-----------------------------------------------------------------------------------

29 July 2026

முதுமுனைவர் வ.அய்.சுப்பிரமணியம் நூற்றாண்டு விழா: உலகத் தமிழர் பேரமைப்பு

தஞ்சாவூர், முள்ளிவாய்க்கால் முற்றத்தில் உலகத்தமிழர் பேரமைப்பின் சார்பாக 26.7.2026 அன்று தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் முதல் துணைவேந்தர் முதுமுனைவர் வ.அய்.சுப்பிரமணியம் அவர்களின் நூற்றாண்டு விழா, நிகழ்ச்சி நிரலில் கண்டபடி சிறப்பாக நடைபெற்றது. நிகழ்வில் ஒரு பார்வையாளராகக் கலந்துகொண்டு, கல்வியாளர்கள் உள்ளிட்ட பெருமக்களின் உரையைக் கேட்கும்  வாய்ப்பினைப் பெற்றேன். 

இரண்டு அமர்வுகள், பொது அரங்கு என்ற வகையில் நடைபெற்ற கூட்டத்தில் அன்னாரின் ஆளுமையை பல்வேறு துறைகளைச் சேர்ந்த அறிஞர்களும், நண்பர்களும், துறைசார்ந்தோரும் எடுத்துக்கூறி பெருமைப்படுத்திய விதம் சிறப்பாக இருந்தது. அவரை நினைவுகூர்ந்தபோது அக்காலத்தில் நான் பணியாற்றிய நாள்கள் நினைவிற்கு வந்தன. இந்நிகழ்வில் ஆய்வாளர்கள், மாணவர்கள், அறிஞர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

இவ்விழாவினை நடத்திய உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் திரு பழ.நெடுமாறன் ஐயா அவர்கள், துணைநின்ற அனைத்து பெருமக்களின் பெருமுயற்சி போற்றத்தக்கதாகும். 



நூற்றாண்டு விழா நினைவாக அதன் தலைவர் திரு பழ.நெடுமாறன் ஐயா அவர்களிடம் என்னுடைய "சோழ நாட்டில் பௌத்தம்" (புது எழுத்து, காவேரிப்பட்டிணம், 9842647101) நூலை வழங்கி, பௌத்தம் தொடர்பாக சில மணித்துளிகள் உரையாடும் வாய்ப்பினைப் பெற்றேன்.


விழாவின்போது, அக்காலத்தில் பணியாற்றிய சகப் பணியாளர்களுடன் [இ-வ: பா.செல்வபாண்டியன், வ.கோசலை (முதல் துணைவேந்தரின் உதவியாளர்), பா.ஜம்புலிங்கம், அர.கோபாலகிருஷ்ணன் (முதல் துணைவேந்தரின் நேர்முக உதவியாளர்), தி.நெடுஞ்செழியன்] உரையாடும் இனிய பொழுதாக அந்நாள் அமைந்தது. 




விழாவின்போது, அக்காலகட்டத்தில் துணைவேந்தர் செயலகத்தில் பணியாற்றிய திருமதி வ.கோசலை, திரு அர.கோபாலகிருஷ்ணன், திரு வடிவேலு ஆகிய மூவருக்கும் ஐயா பழ.நெடுமாறன் அவர்கள் சிறப்புச் செய்து பாராட்டினார். (நான் தட்டச்சு சுருக்கெழுத்தராக 16.8.1982இல் பணியில் சேர்ந்து பணியாற்றிக்கொண்டிருந்தேன்.)

நிகழ்வு நடைபெற்ற முள்ளிவாய்க்கால் முற்றம்







தொடர்புடைய பதிவுகள்

-----------------------------------------------------------------------------------
முதுமுனைவர் வ.அய்.சுப்பிரமணியம் நூற்றாண்டு (18.2.1926-29.6.2009)
-----------------------------------------------------------------------------------

24 July 2026

A Writing on Reading

தி இந்து, பிரண்ட்லைன், வெளிநாட்டு இதழ்கள் வாசிப்பு மற்றும் மொழிபெயர்ப்பு  அனுபவ அடிப்படையில் நான் எழுதிய ஆங்கிலக்கட்டுரை (A Writing on Reading) "இன்றைய மொழியியல்"  என்ற தேசிய கருத்தரங்கிற்காக அளிக்கப்பட்டு, "பேரா.ச.இராசேந்திரன் மணிவிழா மற்றும் பணியாற்றிய பேராசிரியர்களுக்கு பாராட்டு விழா மலர், தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர், 2012" என்ற கருத்தரங்கத் தொகுப்பில் இடம்பெற்றது.  

இதில் நான் வாசித்த இதழ்களின் தலைப்புகள்,  மனதில் பதிந்த சொற்கள் குறித்த கருத்துகள் இடம்பெற்றுள்ளன. அவ்வப்போது நண்பர்களிடம் விவாதிக்கும் சொற்களை ஒரு கட்டுரையாகக் கொணர வேண்டும் என்ற முயற்சி இதன்மூலம் நிறைவேறியது. ஆங்கிலத்தில் நான் எழுதியுள்ள கட்டுரைகளில் மிக முககியமானதாக இதைக்  கருதுகிறேன். 







-------------------------------------------------------------------------------------------
நன்றி: Current trends in Linguistics (இன்றைய மொழியியல்)
பதிப்பாசிரியர்கள்: முனைவர் கி.விஸ்வநாதன், முனைவர் ப.மங்கையர்க்கரசி
-------------------------------------------------------------------------------------------

21 July 2026

சிவனைப் பற்றிய சிந்தனைகள்: குடந்தை கே.என்.நாகராஜன்

குடந்தை கே.என்.நாகராஜன் எழுதியுள்ள “சிவனைப் பற்றிய சிந்தனைகள்” என்னும் நூல், இறைவனைப் பற்றிய சிந்தனைகளைக் கவிதை வடிவில் கொண்டுள்ள நூலாகும். எண்ணுவதையும், எழுதுவதையும் பேரின்பமாக நினைக்கும் நூலாசிரியர் சிவனை எண்ணுவதும், எழுதுவதும் பேரின்பம் என்றும், அவனை நாடுவதும் பாடுவதும் புண்ணியமே என்றும், அதனால் கூடுவது ஆனந்த இன்பமே என்றும் கூறி தன் உள்ளக்கிடக்கையைப் பகிர்கிறார்.


சிவனைப் பற்றி மட்டுமன்றி, பார்வதி, முருகன், துர்க்கை, அம்மன் ஆகியோரைப் பற்றியும், குறிப்பிடத்தக்க பாடல் பெற்ற தலங்கள், பஞ்சபூதத்தலங்களில் உறையும் இறைவன், நால்வர், ஆகியோரின் பெருமைகளைப் பற்றியும் தான் உணர்ந்த வகையில் எழுதுகிறார். மனதில் பட்ட இறையுணர்வானது அனைவருக்கும் சென்று சேரவேண்டும் என்ற எண்ணத்தில் எழுதியுள்ள அவருடைய முயற்சி மிகவும் போற்றத்தக்கதாகும். உருப்பெறுகின்ற கவிதை வரிகள் மிகவும் ரசனையாகவும், புரிந்துகொள்ளும்படி எளிதாகவும் உள்ளது.

தமிழகத்தில் காணப்படுகின்ற முக்கியமான கோயில்களின் புகைப்படங்களை ஆங்காங்கே இணைத்துள்ளவிதம் நூலின் அழகினை மேம்படுத்துவதோடு அங்கு நாம் சென்றுவந்த உணர்வினைத் தருகிறது. அவருடைய சிந்தனைகளில் சிலவற்றைக் காண்போம்.

"விண்ணில் உறையும் சிவனை வேண்டி!
மண்ணில் வாழும் மனிதர் சொல்வதே!
தென்னாடுடைய சிவனே போற்றி!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!" (ப.17)

"தினமும் உன்னை எண்ணும் மனதில்
திகழும் சிவனே! தில்லைக் கூத்தனே!
காமமும் கோபமும் கடந்து உன்னை
நெருங்கும் நெஞ்சைக் கொடுப்பாய் சிவனே!" (ப.24)

"தாயிடம் சென்று காலடி விழுந்தேன்! என்
நோயினைச் சொல்லி அவளிடம் அழுதேன்!
காய்ந்த நிலத்தில் பாய்ந்த நதியாய்
காத்திடுவாள்! என்னை துர்க்கை அம்மனே!" (ப.44)

"என்னைக் கவர்ந்த எழில் முருகனே!
அழகைக் கண்டால் கண்களில் இன்பம்!
உன்னைக் கண்டால் நெஞ்சிலே இன்பம்!
நெஞ்சினிலே இன்பம்! நினைவிலே இன்பம்!" (ப.50)

"நாளும் நாம் சொல்லும் ஓம் நமசிவாய!
மூளும் முன் வினைகளை முறியடிக்கும்! நம்மை
ஆளும் ஓம் நமசிவாய! நமக்குப்
பாலும் தேனுமாய் பரவசமாகும்!" (ப.64)

எங்கள் இல்ல நூலகத்தில் நூலாசிரியருடன் (நாள் 20.7.2026)

இறைவனை வணங்குவதால் கிடைக்கின்ற பயன்களான மன நிம்மதி, வினையிலிருந்து விடுபாடு, பெற்ற பிறவிப்பயன், தீர்ந்திடும் பழிபாவம், நீங்கும் மனச்சுமை, அவதி இல்லா வாழ்வு உள்ளிட்ட பல சிறப்புக்கூறுகளை மிக அருமையான எடுத்துக்கூறியுள்ள நூலாசிரியரின் பெருமுயற்சி போற்றத்தக்கது. அடுத்து "சைவம் காட்டும் அற்புதங்கள்" என்னும் நூலினை எழுதிவருகிறார். அவருடைய எழுத்துப்பணி சிறக்க எல்லாம் வல்ல இறையருளை வேண்டுகிறேன்.   
 
தலைப்பு: சிவனைப் பற்றிய சிந்தனைகள் (கவிதைகள்)
ஆசிரியர்: குடந்தை கே.என்.நாகராஜன்
பதிப்பகம்: அஞ்சலை வெளியீட்டகம், 4/54, கொத்தத் தெரு, மேல கபிஸ்தலம் 614 203, பாபநாசம் வட்டம், தஞ்சாவூர் மாவட்டம், அலைபேசி 94868 83504 பதிப்பாண்டு: முதல் பதிப்பு, ஆகஸ்டு 2025
விலை: ரூ.120

நூலாசிரியரின் "சைவம் காட்டும் அற்புதங்கள்"

திரு குடந்தை கே.என்.நாகராஜன்,   "சைவம் காட்டும் அற்புதங்கள்" நூல் மூலமாக   63 நாயன்மார்களின் பெருமையை கவிதை வடிவில் எடுத்துக்கூறுகிறார். 

விநாயகர் வணக்கம்,  சுந்தரரின் திருத்தொண்டத்தொகை ஆகியவற்றின் தொடக்கத்துடன் உள்ள இந்த நூலில் நாயன்மார்களின் வரலாற்றை மிகவும் தெளிவாகத் தந்துள்ளார். எளிய நடை, அனைவரும் புரிந்துகொள்ளும் வகையிலான சுருக்கமான, அதே சமயம் செய்திகளைத் தருகின்ற வகையில் அமைந்துள்ள கவிதை வரிகள் மூலமாக நாயன்மார்களின் பிறப்பு தொடங்கி அவர்களின் சிவத்தொண்டினை நூலாசிரியர் எடுத்துக்கூறும் விதம் வாசிப்போரை அதில் முற்றிலுமாக லயித்துவிட வைக்குமளவு உள்ளது. 

கவிதையைப் படிக்கும்போது அவர் எவ்வளவு சிரமப்பட்டு சரியான சொற்களைத் தேர்ந்தெடுத்துள்ளார் என்பதை உணரமுடிகிறது. அனைத்திற்கும் முத்தாய்ப்பாக அந்தந்த நாயன்மார்களின் கதையைப் பற்றி கவிதையை வடிக்கின்ற அதே சமயத்தில் அது தொடர்பான ஓவியங்களை ஆங்காங்கே அமைத்துள்ளவிதம் நூலுக்கு அழகு சேர்க்கிறது. அவை, வெளிப்படுத்தும் எண்ணங்களை  வாசகரின் மனதில் மிகவும் விரைவாக சென்று சேர்க்கின்றன.

சைவத்திற்கான இவருடைய தொண்டு தொடர்வதை இந்நூல் புலப்படுத்துகிறது. ஈசன் திருவருளால் நூலாசிரியர் மென்மேலும் பல நூல்களைப் படைக்க மனம் நிறைந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.  

சைவத்திற்கான இவருடைய தொண்டு தொடர்வதை இந்நூல் புலப்படுத்துகிறது.



(சைவம் காட்டும் அற்புதங்கள்-கவிதைகள், குடந்தை கே.என்.நாகராஜன், அஞ்சலை வெளியீட்டகம், 4/54, கொத்தத் தெரு, மேல கபிஸ்தலம் 614 203, பாபநாசம் வட்டம், தஞ்சாவூர் மாவட்டம், அலைபேசி 94868 83504, ஜூலை 2026, ரூ.150)
22.7.2026இல் மேம்படுத்தப்பட்டது.