26 March 2016

தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் நூல் கொடை இயக்கம் : 300 நூல்கள் அன்பளிப்பு

16 ஆகஸ்டு 1982இல் தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் பணியில் சேர்ந்து 34 ஆண்டுகள் நிறைவுறவுள்ள நிலையில் (1 மார்ச் 2016 வரை) 300 நூல்களை அன்பளிப்பாக வழங்கியுள்ளேன் என்பதைத் தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகின்றேன். தட்டச்சுச்சுருக்கெழுத்தாளராகப் பணியில் சேர்ந்த என்னை ஓர் ஆய்வாளனாக ஆக்கிய நான் பணியாற்றும் பல்கலைக்கழகத்தை நன்றியோடு நினைவுகூறுகிறேன்.
வழங்கிய நூல்கள்
வரலாறு, இலக்கியம், தத்துவம், கலை, கதை, கட்டுரை, கருத்தரங்கத் தொகுப்புகள், ஆண்டு நூல்கள் (Yearbook), தமிழ்ச்சுருக்கெழுத்து, ஆங்கிலச்சுருக்கெழுத்து என்ற நிலையில் நான் நூல்களை வழங்கியுள்ளேன். நானும், என் குடும்பத்தாரும், நண்பர்களும் படித்த எங்கள் இல்ல நூலகத்தில் இருந்த நூல்கள் அனைவருக்கும் பயன்படவேண்டும் என்ற எண்ணமே நான் தமிழ்ப்பல்கலைக்கழகத்திற்கு நூல்களை வழங்க உதவியாக இருந்தது.   

எங்கள் இல்ல நூலகம்
1975-76இல் கும்பகோணம் அரசு ஆடவர் கல்லூரியில் புகுமுக வகுப்பில் சேர்ந்த காலகட்டத்தில் தட்டச்சுச் சுருக்கெழுத்தில் ஈடுபட ஆரம்பித்ததன் தாக்கம் என்னை அப்பொழுது The Hindu இதழின் வாசகனாக்கியது. புதிய ஆங்கிலச்சொற்களுக்கான பொருளைத் தேட அகராதியைப் பார்க்க ஆரம்பித்தேன். சுமார் 40 ஆண்டுகளுக்கு முன் ஆரம்பித்த முயற்சி இன்னும் தொடர்கிறது. எனது அலுவலக மேசையில் இன்றும் ஒரு பெரிய அகராதியையும், கையடக்க அகராதியையும் வைத்துள்ளேன். அகராதியில் ஆரம்பித்த தேடல் என்பது வாசிப்பு நிலைக்கு உயர்த்தியது.  

எங்கள் இல்ல நூலகம்

என் மூத்த மகன் ஜ.பாரத், இளையமகன் ஜ.சிவகுரு ஆகிய இருவரையும் வாசிப்பில் ஈடுபடுத்தினேன். அன்பளிப்பாகவும், பணம் கொடுத்தும் வாங்கும் நூல்களை எண்ணிட்டு ஒரு பதிவேட்டில் பதிவு செய்து இல்ல நூலகத்தில் சேர்த்துவிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளோம். இப்பணியில் என் இரு மகன்களும் துணைக்கு உள்ளனர். அவர்களும் வரலாற்றுப்புதினம், ஆங்கிலப்புதினம் என்ற பல தலைப்புகளில் நூல்களை வாங்கி எங்களது இல்லத்தில் சேர்த்துள்ளனர். இந்த ஆண்டு இதுவரை மட்டுமே எங்களது நூலகத்தில் 54 நூல்கள் சேர்ந்துள்ளன. 

இந்நிலையில் தமிழ்ப்பல்கலைக்கழகத்திற்கு நூல்களை அன்பளிப்பாகத் தர முடிவெடுத்து இன்றுவரை 300 நூல்களை அன்பளிப்பாகத் தந்துள்ளேன். பணி நிறைவு பெறுவதற்குள் (30.4.2017) இன்னும் நூல்களைத் தொடர்ந்து வழங்கவுள்ளேன். 300 நூல்களை வழங்கியமைக்கு துணைவேந்தர் அளித்துள்ள 24.3.2016 நாளிட்ட கடிதத்தை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சியடைகிறேன். 
அன்புடையீர்,
வணக்கம்.
தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் தொடங்கப்பட்டுள்ள நூல் கொடை இயக்கத்தில் தங்களின் பங்களிப்பாக 300 நூல்களை அன்பளிப்பாக வழங்கியமைக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம். தாங்கள் வழங்கியுள்ள நூல்கள் அனைத்திலும் தங்கள் பெயர் மற்றும் முகவரி அச்சிடப்படுவதோடு, முறையாகப் பராமரிக்கப்பட்டு ஆய்வாளர்களுக்கும், மாணவர்களுக்கும் பயனளிக்கும் வகையில் பயன்படுத்தப்பெறும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம். 
அன்புடன்,
(ஒம்)...........
தமிழ்ப்பல்கலைக்கழக நூல் கொடை இயக்கம்
தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் அண்மையில் நூல் கொடை இயக்கம்  அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது. நவம்பர் 2015இல் தமிழ்ப்பல்கலைக்கழகத் துணைவேந்தர் தமிழ்ப்பல்கலைக்கழத்துடன் மக்களுக்கு உணர்வுபூர்வமான நேரடித்தொடர்பை ஏற்படுத்தும் வகையில் ஒவ்வொருவரும் குறைந்தது ஒரு நூலை அளித்து பல்கலைக்கழகத்துடன் தங்களை இணைத்துக்கொள்ளலாம் என்றும் அதன்மூலம் லட்சக்கணக்கான நூல்கள் ஆய்வு மாணவர்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும் என்றும் தெரிவித்து, நூல் கொடை இயக்கத்தைத் தொடங்கி வைத்தார். நூல்களில் கொடையாளர்களின் பெயர்கள் எழுதப்படும் என்றும் 100க்கு மேல் நூல் அளிப்பவர்களின் பெயர் நூலகப்பெயர்ப்பலகையில் குறிக்கப்படும் என்றும் கூறியிருந்தார். 

தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் தற்போது 1,70,327 நூல்களும், 275 காலமுறை இதழ்களும் உள்ளன. இதில்  26,787 நூல்கள் மறைந்த மற்றும் வாழும் அறிஞர்களின் வீடுகளைத் தேடிச் சென்று பணம் கொடுத்தும், அன்பளிப்பாகவும் பெறப்பட்டவையாகும். இதில் 18,000 அரிய நூல்கள் உள்ளன. 
அறிவுக்கொடையாக 1 இலட்சம் நூல்களைப் பெற  தமிழ்ப்பல்கலைக்கழகம் மேற்கொண்டுள்ள முயற்சியில் உங்களை இணைத்துக்கொள்ள அன்போடு அழைக்கிறேன். தானத்தில் சிறந்தது அறிவு தானம். நீங்கள் படித்து, பயன்படுத்திய நூல்களைக் கொடையாகத் தர பல்கலைக்கழகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. அவ்வேண்டுகோளை உங்கள் முன் வைக்கிறேன். 

தொடர்புக்கு துணைவேந்தர் செயலகத் தொலைபேசி எண்.04362-227040

நூல் கொடை இயக்கம் தொடர்பான செய்தி நறுக்குகள்

20 comments:

  1. அருமையான திட்டம்
    விரைவில் என் புத்தகங்களையும் அனுப்புகின்றேன் ஐயா
    நன்றி

    ReplyDelete

  2. மகிழ்வளிக்கும் செய்தி
    அனைவரும் இந்த பெருமிதப் படத்தக்க
    இந்த விஷயத்தில் பங்கேற்கும் விதமாக
    முழுத் தகவல்களுடன்
    பதிவிட்டமைக்கு மிக்க நன்றி

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும்
    மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. மகிழ்ச்சியான செய்தி..

    தங்கள் பணி மகத்தானது..
    மேலும் சிறக்க வாழ்த்துகின்றேன்..

    ReplyDelete
  4. வணக்கம் முனைவரே தங்களது குடும்பத்தாரின் உயர்ந்த செயலுக்கு எனது ராயல் சல்யூட்
    தங்களைப் பின்பற்ற வேண்டய அருமையான விடயங்கள் இது
    தங்களது குடும்பத்தினர் அனைவரும் எழுத்து துறையில் ஈடுபட்டு இருப்பது இறைவனின் பாக்கியமே தொடரட்டும் தங்களது எழுத்துப்பணி
    பணியில் ஓய்வு பெறப்போகும் தங்களுக்கு எமது வணக்கங்கள்
    தமிழ் மணம் 3

    ReplyDelete
  5. அருமையான பணித் திட்டம்
    தாங்களே 300 நூல் அன்பளிப்புச் செய்து
    பணித் திட்டத்திற்கு வலுச் சேர்த்துள்ளீர்கள்
    பாராட்டுகள்!

    ReplyDelete
  6. ஒன்றே செய்! நன்றே செய்! இன்றே செய்! என்றபடி உடனே ஒரு நற்காரியம் தொடர்ந்து செய்து வரும் தங்களுக்கு எனது பாராட்டுக்கள். எனக்கும் உங்கள் பதிவு ஒரு நல்ல எண்ணத்தை விதைத்து இருக்கிறது.

    ReplyDelete
  7. ஓங்குக! காலத்தால் அழியாவகையில் செய்தல் வேண்டும் என்ற பேராவலில் தமிழ் விக்கிமீடிய நண்பர்கள் சிலர் இணைந்து, தற்போது நாட்டுடமை நூல்களை இணையத்தில் அமைப்பதற்கான முயற்சியை மூன்று மாதங்களாக செய்து வருகிறோம். முதற்கட்டமாக இதுவரை 3 இலட்சம் பக்கங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இன்னும் 2இலகர பக்கங்கள் உருவாகலாம். அடுத்து இதனை மெய்ப்புப் பார்க்கும் பரிசு திட்டத்தை அறிமுகப் படுத்தி, செம்மை படுத்த உள்ளோம். அப்பொழுது உங்களது வழிகாட்டலும், ஒத்துழைப்பும் தேவை. விரிவாக அறிய காண்க. https://ta.wikisource.org/s/4kx

    ReplyDelete
  8. வாழ்த்துக்கள் ஐயா...

    ReplyDelete
  9. திரு முத்துநிலவன் (muthunilavanpdk@gmail.com மின்னஞ்சல் வழியாக)
    முனைவர் அய்யா, ஜம்புலிங்கம் அவர்களுக்கு வணக்கமும், தங்களின் உயர்நோக்கத்திற்கு எனது வாழ்த்துகளும். 34ஆம் பணிஆண்டு நிறைவில் 300 புத்தகங்கள் கொடுத்த தங்கள் உயர்பணிகள் தொடர எனது நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள் அய்யா.
    அடுத்த ஆண்டு, இப்படி முடிவெடுத்திருப்பதை முன்னதாக அறிவித்து, அதை உங்கள் வலைப்பக்கத்தில் தெரிவித்து, நன்மனத்தார் தரும் நன்கொடை நூல்களைச் சேர்த்து -35ஆம் பணிஆண்டில் 3500 நூல்களை நன்கொடை வழங்கிடத் திட்டமிட வேண்டுகிறேன். நானும் அதில் தங்கள்பணிக்கு உதவ உறுதியளிக்கிறேன். நன்றி வணக்கம்.

    ReplyDelete
    Replies
    1. பின்னூட்டத்தில் ஒரு பிழை நேர்ந்தமையால் நான்தான் நீக்கினேன் அய்யா, பொறுத்தருள்க. எனது மின்னஞ்சலை வெளியிட்டதும் நல்லதுதான் நன்றி. அதை அடுத்த ஆண்டு முன்கூட்டியே அறிவித்துச் செயற்படுத்த வேண்டுகிறேன். அதற்கு முன்னதாக, வரும் ஏப்.10ஆம் தேதி, தஞ்சைக்கு ஒரு நிகழ்ச்சிக்காக வரும்போது கொஞ்சம் புத்தகங்களை நூலகக் கொடைத்திட்டத்திற்காக உங்களிடம் தர விரும்புகிறேன் அய்யா. நேரில் வந்து தருவேன்.
      இதைவிட வேறு புண்ணியமென்ன இருக்கிறது?

      Delete
  10. Mr Balaji Dhandapani (thro' email: cryobalaji@gmail.com)
    Congrats and appreciate your noble gesture - Balaji

    ReplyDelete
  11. திரு அன்பன் (anbumalar89@gmail.com மின்னஞ்சல் வழியாக)அய்யா, வணக்கம். வாழ்த்துக்கள்.
    என்னிடம் ஆங்கில நூல்கள் உள்ளது மகிழ்வுடன் வழங்க தயார். என் போன்ற சென்னை நண்பர்கள் இணைந்து சேகரித்து பல்கலை எடுத்து செல்ல திட்டமிடுங்களேன். நன்றி வணக்கம். அன்புடன், அன்பன்

    ReplyDelete
    Replies
    1. நூல்களின் பெயரைப் பட்டியலிட்டு, துணைவேந்தர், தமிழ்ப்பல்கலைக்கழகம், தஞ்சாவூர் 613 010 என்ற முகவரிக்கு அனுப்பிவைக்கலாம். ஐயத்திற்கு துணைவேந்தர் அலுவலகத் தொலைபேசியில் (04362-227040) தொடர்புகொள்ளலாம். தங்களின் பெருமனதிற்கு நன்றி.

      Delete
  12. உயர்ந்த நோக்கம் நல்ல செயல். வாழ்த்துக்கள்

    ReplyDelete
  13. நல்ல செயல். நாங்களும் புனுகீஸ்வரர் கோவிலை சேர்ந்த நூலகத்திற்கு புத்தங்களை கொஞ்சம் கொடுத்து இருக்கிறோம்.
    உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினர்களுக்கும் வாழ்த்துக்கள்.
    நூல்கொடை இயக்கம் வாழ்க!

    ReplyDelete
  14. தங்களுடைய செயல் மிகுந்த பாராட்டுக்குரியது. தங்கள் பிள்ளைகளும் உதவுவது பெருமைக்குரிய விஷயம். தங்களுக்கும் குடும்பத்தார்க்கும் மனமார்ந்த பாராட்டுகள் ஐயா.

    ReplyDelete
  15. Mr.SV Venugopalan (sv.venu@gmail.com மின்னஞ்சல் வழியாக)
    அடேங்கப்பா...ஆத்தாடி....கொண்டாடிக் கொண்டாடிக் களிப்புறும் செய்திக்கு வாழ்த்துக்களும், நன்றியும், வணக்கங்களும், சார்....
    எஸ் வி வேணுகோபாலன்

    ReplyDelete
  16. தங்களுடைய செயல் மிகவும் போற்றுதற்குரிய ஒன்று ஐயா. மிக மிக உயரிய நோக்கம். தானத்தில் சிறந்தது அன்ன தானம் என்பார்கள் பலரும். இருக்கலாம். அதைவிடச் சிறந்தது அறிவுதானம். அதை நாம் எந்தவிதத்திலும் பகிர்ந்து கொள்ளலாம் இல்லையா. புத்தகங்களின் வடிவில், நாம் கற்பதைப் பிறருக்குச் சொல்லிக் கொடுத்தல், எழுதுதல் என்பது போன்று.

    கீதா: மேற்கூறிய கருத்துடன்...நாங்கள் எங்கள் வீட்டிலும் வேறு சொத்துகள் சேர்த்தது இல்லை. புத்தகங்கள்தான். அவற்றில் பலவற்றை அவ்வப்போது நாங்கள் இருந்த ஊரில் உள்ள பொது நூலகத்திற்கு வழங்கியதுண்டு. இப்போது கூட இங்கு சென்னையில் அறிஞர் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் சில புத்தகங்களை வழங்க வேண்டி கேட்க உள்ளோம். அவை ஆங்கிலத்தில் உள்ள புத்தகங்கள். தஞ்சை பல்கலைக்கழக நூலகத்தில் தமிழ்ப்புத்தகங்கள் மட்டும்தான் எடுத்துக் கொள்ளப்படுமா இல்லை ஆங்கில மொழியும் எடுத்துக் கொள்வார்களா ஐயா?

    எவ்வகையான புத்தகங்கள்?

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார்க்கும் எங்கள் சிரம் தாழ்ந்த வணக்கங்கள் ஐயா!

    ReplyDelete
    Replies
    1. ஆங்கிலப்புத்தகங்களும் எடுத்துக்கொள்வார்கள். ஏதேனும் ஐயமிருப்பின் துணைவேந்தர் அலுவலகத் தொலைபேசியில் (04362-227040) தொடர்புகொள்ளலாம். தங்களின் பெருமனதிற்கு நன்றி.

      Delete
  17. வணக்கம்..ஐயா.. அன்று படிக்க வேண்டிய காலத்தில் படிக்க இயலாமல் போனது...இன்று படிக்க வேண்டி புத்தகங்களுக்கு அலைந்து கொண்டு இருக்கிறேன்...

    ReplyDelete