Showing posts with label தமிழ்ப்பல்கலைக்கழகம். Show all posts
Showing posts with label தமிழ்ப்பல்கலைக்கழகம். Show all posts

10 September 2026

வ.அய்.சுப்பிரமணியம் அவர்களின் பன்முக ஆற்றல்

சென்னை, கொ.கந்தசாமி நாயுடு கல்லூரியில் 2.9.2026 அன்று "வ.அய்.சுப்பிரமணியம் அவர்களின் பன்முக ஆற்றல்" என்ற தலைப்பில் மூதறிஞர் வ.அய்.சுப்பிரமணியம் நூற்றாண்டு நினைவு சிறப்புக் கருத்தரங்கம் நிகழ்ச்சி நிரலில் கண்டவாறு நடைபெற்றது.

கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள வள்ளல் சி.கந்தசாமி நாயுடு அவர்களின் திருவுருவச்சிலைக்கு துறைத்தலைவரும், முக்கிய விருந்தினர்களும் மலர் தூவி சிறப்பு செய்ததைத் தொடர்ந்து நிகழ்வு தொடங்கியது.

விழா மேடையில் வ.அய்.சுப்பிரமணியம் அவர்களின் திருவுருவப்படம் திறந்துவைக்கப்பட்டது.  

கல்லூரி முதல்வரும், தமிழ்த்துறைத்தலைவருமான முனைவர் வா.மு.சே.ஆண்டவர் தலைமையில், மொழி அறக்கட்டளையின் இயக்குநர் பேரா. பா.ரா.சுப்பிரமணியம் முதன்மைச்சிறப்புரையில்,  வ.அய்.சுப்பிரமணியம் அவர்களின் மாணவர் என்ற வகையில்  உணர்வுபூர்வமாக அந்நாளைய நினைவுகளைப் பகிர்ந்துகொண்டார். 

அனைத்திந்திய எழுத்தாளர் சங்கத்தலைவர் பேரா. இராம.குருநாதன், பச்சையப்பன் கல்லூரியின் மேனாள் வரலாற்றுத்துறைத்தலைவர் பேரா.ச.திருவேங்கடம் ஆகியோர் சிறப்புச்சொற்பொழிவாற்றினர். 

என்னுடைய உரையில், தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் வ.அய்.சு. துணைவேந்தராக இருந்த காலகட்டத்தில் பல்கலைக்கழகத்தில் பணியாற்றியபோது பெற்ற அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டேன். அவருடைய நேரடி வாய்மொழி ஆணையின்படி தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைச்சட்ட விதிகளைத் தட்டச்சு செய்தது முதல் பல்கலைக்கழகச் செய்தி மலர், காலாண்டிதழ்களை உறுப்பினர்களுக்கு அனுப்புதல், பேரா.கா.சிவத்தம்பி அவர்களுடைய தமிழில் இலக்கிய வரலாறு நூலின் ஆங்கில வரைவினைத் தட்டச்சு செய்தது, புதிதாக ஒவ்வொரு நூலும் அச்சிடப்படும்போது துணைவேந்தருக்கு அனுப்பப்படும் முறை உள்ளிட்ட பல செய்திகளைப் பகிர்ந்துகொண்டேன். 

முன்னதாக கல்லூரி ஆட்சிமன்றக்குழு உறுப்பினர் முனைவர் கு.சிவகாமி வரவேற்புரையாற்ற, நிறைவாக கல்லூரி ஆட்சிமன்றக்குழு உறுப்பினர் முனைவர் அ.ரஷிதாபானு நன்றியுரை கூறினார். நிகழ்வினை தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர் முனைவர் இரா.பிரபா தொகுத்து வழங்கினார். கல்லூரி மாணவர்கள், துறைத்தலைவர்கள், உள்ளூர்ப் பிரமுகர்கள் உள்ட்ட பலர் நிகழ்கில் கலந்துகொண்டனர்.   







நிகழ்வின் ஒரு பகுதியாக பல்வேறு போட்டிகளில் வென்ற மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. இந்த விழா  வ.அய்.சு.வின் பன்முக ஆற்றலை  அனைவரும் அறிந்துகொள்ளும் வகையில் ஒரு நல்ல வாய்ப்பினைத் தந்தது. இவ்வாறான ஒரு நிகழ்வை ஏற்பாடு செய்து அன்னாருக்குப் பெருமை சேர்த்த கல்லூரி முதல்வருக்கும், துறையினருக்கும் மனமார்ந்த நன்றி.



3.9.2026 தினமணி, சென்னை பதிப்பு

-----------------------------------------------------------
நன்றி: சொ.கந்தசாமி நாயுடு கல்லூரி, தமிழ்த்துறை
(மூதறிஞர் வ.அய்.சுப்பிரமணியம் நூற்றாண்டு நினைவு 
சிறப்புக் கருத்தரங்கம், 2.9.2026)
-----------------------------------------------------------

29 July 2026

முதுமுனைவர் வ.அய்.சுப்பிரமணியம் நூற்றாண்டு விழா: உலகத் தமிழர் பேரமைப்பு

தஞ்சாவூர், முள்ளிவாய்க்கால் முற்றத்தில் உலகத்தமிழர் பேரமைப்பின் சார்பாக 26.7.2026 அன்று தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் முதல் துணைவேந்தர் முதுமுனைவர் வ.அய்.சுப்பிரமணியம் அவர்களின் நூற்றாண்டு விழா, நிகழ்ச்சி நிரலில் கண்டபடி சிறப்பாக நடைபெற்றது. நிகழ்வில் ஒரு பார்வையாளராகக் கலந்துகொண்டு, கல்வியாளர்கள் உள்ளிட்ட பெருமக்களின் உரையைக் கேட்கும்  வாய்ப்பினைப் பெற்றேன். 

இரண்டு அமர்வுகள், பொது அரங்கு என்ற வகையில் நடைபெற்ற கூட்டத்தில் அன்னாரின் ஆளுமையை பல்வேறு துறைகளைச் சேர்ந்த அறிஞர்களும், நண்பர்களும், துறைசார்ந்தோரும் எடுத்துக்கூறி பெருமைப்படுத்திய விதம் சிறப்பாக இருந்தது. அவரை நினைவுகூர்ந்தபோது அக்காலத்தில் நான் பணியாற்றிய நாள்கள் நினைவிற்கு வந்தன. இந்நிகழ்வில் ஆய்வாளர்கள், மாணவர்கள், அறிஞர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

இவ்விழாவினை நடத்திய உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் திரு பழ.நெடுமாறன் ஐயா அவர்கள், துணைநின்ற அனைத்து பெருமக்களின் பெருமுயற்சி போற்றத்தக்கதாகும். 



நூற்றாண்டு விழா நினைவாக அதன் தலைவர் திரு பழ.நெடுமாறன் ஐயா அவர்களிடம் என்னுடைய "சோழ நாட்டில் பௌத்தம்" (புது எழுத்து, காவேரிப்பட்டிணம், 9842647101) நூலை வழங்கி, பௌத்தம் தொடர்பாக சில மணித்துளிகள் உரையாடும் வாய்ப்பினைப் பெற்றேன்.


விழாவின்போது, அக்காலத்தில் பணியாற்றிய சகப் பணியாளர்களுடன் [இ-வ: பா.செல்வபாண்டியன், வ.கோசலை (முதல் துணைவேந்தரின் உதவியாளர்), பா.ஜம்புலிங்கம், அர.கோபாலகிருஷ்ணன் (முதல் துணைவேந்தரின் நேர்முக உதவியாளர்), தி.நெடுஞ்செழியன்] உரையாடும் இனிய பொழுதாக அந்நாள் அமைந்தது. 




விழாவின்போது, அக்காலகட்டத்தில் துணைவேந்தர் செயலகத்தில் பணியாற்றிய திருமதி வ.கோசலை, திரு அர.கோபாலகிருஷ்ணன், திரு வடிவேலு ஆகிய மூவருக்கும் ஐயா பழ.நெடுமாறன் அவர்கள் சிறப்புச் செய்து பாராட்டினார். (நான் தட்டச்சு சுருக்கெழுத்தராக 16.8.1982இல் பணியில் சேர்ந்து பணியாற்றிக்கொண்டிருந்தேன்.)

நிகழ்வு நடைபெற்ற முள்ளிவாய்க்கால் முற்றம்







தொடர்புடைய பதிவுகள்

-----------------------------------------------------------------------------------
முதுமுனைவர் வ.அய்.சுப்பிரமணியம் நூற்றாண்டு (18.2.1926-29.6.2009)
-----------------------------------------------------------------------------------

29 June 2026

முதுமுனைவர் வ.அய்.சுப்பிரமணியம்: நினைவுகூர்வோம், நினைவு நாளில்

தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் தட்டச்சுச்சுருக்கெழுத்தராக 16.8.1982இல் பணியில் சேர்ந்து, உதவிப்பதிவாளராக 2017இல் பணி நிறைவு பெற்றேன்.   

நான் பணியில் சேர்ந்தபோது முதுமுனைவர் வ.அய்.சுப்பிரமணியம் அவர்கள் முதல் துணைவேந்தராக இருந்தார். அவருடைய காலகட்டத்தில்  அங்கு பணியாற்றியது என் வாழ்வில் மறக்க முடியாத தருணங்களாகும். அவருடைய நேரடி வாய்மொழி ஆணைப்படி தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைச்சட்ட விதிகளைத்  தட்டச்சு செய்யும் அரிய வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. சுமார் 100+ பக்கங்களை  ஆங்கிலத்தில் ஸ்டென்சிலில் தட்டச்சு செய்து, 150 படிகள் செராக்ஸ் எடுத்து அப்பணியை நிறைவு செய்தேன். தட்டச்சு செய்யும்போது பல புதிய ஆங்கிலச்சொற்களையும், விதிகள் தொடர்பாக பல நுணுக்கங்களையும் அறியும் வாய்ப்பினைப் பெற்றேன். அப்போதிருந்த துணைப்பதிவாளரும், பதிவாளரும் இந்தப் பணிக்கு எனக்கு ஊக்கம் தந்தனர்.  இருக்கைப் பணிகளுடன் இதனை மேற்கொண்டேன். 

இந்த பின்புலத்தோடு நூற்றாண்டு நினைவாக அவர் எழுதிய கடிதங்களில் சிலவற்றை. அன்னாரின் நினைவு நாளில் (29.6.2009)  நினைவுகூர்வோம்.

1.1.83இல் அவர் எங்களுக்கு அனுப்பிய கடிதம் அவருடைய திட்டங்களை முன்வைத்ததோடு, எங்களுக்குப் பணியாற்ற ஊக்கம் தந்தது.

“இன்று ஆங்கில ஆண்டுப்பிறப்பு. பல்கலைக்கழகம் பயன்பெறுமாறு உழைத்தற்கு, எல்லா நலன்களையும் தங்களுக்குத் தருமாறு இறைவனை வேண்டுகிறேன். போன ஆண்டில் பல்கலைக்கழக அமைப்பில் பல முனைகளில் முன்னேற்றமும் சில முனைகளில் சடைவும் நாம் கண்டோம். பல நிறுவனங்களின் ஒத்துழைப்பும், பல குழுக்களின் அனுமதியும், தனி மனிதர்கள் பலரின் மனம் நிறைந்த உழைப்பும் இன்றியமையாத தேவையாக இருந்ததால் சில துறைகளிற் போதிய முன்னேற்றத்தை நாம் பெறவில்லை. இந்தக் குறையை இந்த ஆண்டு சரி செய்ய நாம் எல்லா முயற்சியும் மேற்கொள்ள வேண்டும்.

என் கால வரம்பில் 492 பணி நாட்கள்தான் எஞ்சியுள்ளன. இதுவரை 362 பணிநாட்கள் அதாவது 45% கழிந்துள்ளன. மீதமுள்ள நாட்களில் பெரும்பகுதியும் 1983-இல் அடங்கியிருப்பதால் கட்டிடங்கள் முழு உருவம் பெற்று, பல்கலைக்கழகத் துறைகள் அனைத்தும் முழுமையாக இயங்கி, பல்கலைக்கழக மானியக் குழுவின் உதவி பெற்று, உலகத்தில் குறிப்பிடத்தக்க ஆய்வு மையங்களுள் ஒன்றாக தமிழ்ப் பல்கலைக்கழகம் திகழுமாறு செய்யவேண்டும். பல்கலைக்கழக ஆய்வு நூற்கள் பல வெளிவந்து பாராட்டப்பட வேண்டும். அருங்காட்சியகமும், நூலகமும் அறிஞர்களுக்குப் பயன் பெறுமாறு அமைதல் வேண்டும்.

போர்க்காலத்தில், படையினரிடையே எவ்வளவு ஒத்துழைப்புத் தேவையோ அதைப்போல் பல்கலைக்கழக வாழ்வுப் போராட்டத்தில் உங்கள் முழு ஒத்துழைப்பும் வெற்றிக்குத் தேவை. இந்த ஆண்டில் அதனைப் பரிசாகத் தருமாறு வேண்டி உங்களை வாழ்த்துகிறேன். இங்ஙனம், அன்பன், வ.அய்.சுப்பிரமணியம்”.

19.6.84இல், முதல் மூன்றாண்டு பணிக்கால நிறைவு நாளில் “பெறுநர் எல்லா உடனுழைப்போர்களும்” என்று முகவரியிட்டு அனுப்பிய கடிதம் பல்கலைக்கழகத்தோடு அவர் இருந்த ஆத்மார்த்த நெருக்கத்தை வெளிப்படுத்துகிறது.



“ஏறத்தாழ மூன்றாண்டுக் காலமாக, எல்லோரும் இணைந்து, தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் மேம்பாட்டு வளர்ச்சிக்கு உழைத்து உதவியதற்கு முதன் முதலாக நான் நன்றி தெரிவிக்கக் கடமைப்பட்டுள்ளேன். தமிழ்மொழி உணர்வால், தஞ்சையிலும், பிற இடங்களிலும் பொறுப்பேற்ற ஒவ்வொருவரும் தமது கடமையைச் செம்மையாகச் செய்துள்ளனர் என்ற நினைவு எனக்குப் பெருமை தருகிறது.

தமிழ்ப் பல்கலைக்கழகத்திற் செய்தன சிலவாயினும் செய்யவிரும்புவன மிகப் பலவாகும். ஒரு நிறுவனத்திலுழைப்பவர்களுக்குக் குறைகள், மனத்தாங்கல்கள் இல்லாமல் இருக்காது. அவற்றைப் பெரிதாக்கிப் பகைமையை வளர்த்து, செயற்திறமையை குறைப்பது ஒன்று. அவற்றை மறந்து, இணைந்து, ஆக்க வேலைகளுக்குத் துணை நின்று உழைப்பது மற்றொன்று. இரு வழிகளில், இதுவரை இரண்டாவது வழியைப் பின்பற்றிப் பணியாற்றிய நீங்களனைவரும் தொடர்ந்து உழைக்க வேண்டுகிறேன்..... என்றேனும் தனி மனித வாழ்வு அல்லது நிறுவனம் என்ற இரண்டில் ஒன்றை அழிக்கும் நிலை ஏற்பட்டால், நம்மையே நாம் அழித்து நிறுவனத்தைக் காத்த பெரு நிலையை உலகறியச் செய்ய வேண்டும். இதை மறந்துவிடாதீர்கள்.

தமிழ்ப் பல்கலைக்கழக ஆய்வாளர்கள், ஆசிரியர்கள், அலுவலர்கள் அனைவரும் ஒரே குடும்பத்தின் உறுப்பினர் என்று நான் அடிக்கடி கூறுவதுண்டு. மணமான பெண்களை அவளுடைய கணவன் வீட்டிற்கு அனுப்பும் தாய், தந்தையரைப் போல் இன்று நான் நிற்கின்றேன். பிறந்தகத்தின் பெருமை பேசாது, புக்ககத்தின் பெருமை பேசி, கணவனையும், அவனைச் சார்ந்தோரையும் பேணி, அறவுணர்வுடன் வாழுமாறு கூறி வழியனுப்பும் பெற்றோர் போன்று, புதிய துணைவேந்தரின் நிர்வாகத்திற்கு எல்லா வகையான ஒத்துழைப்பையும் தந்து என்னைப் பெருமைப்படுத்துக. தொண்டால் தமிழ்ப் பல்கலைக்கழகம் வளர்ந்துள்ளது என்ற இன்சொல்லைக் கேட்டு மகிழுமாறு எனக்குதவுக. தமிழுலகம் உங்களை நன்றியுடன் பாராட்டும். தெய்வம் துணை நிற்கும்”.

பொதுவாக நாங்கள் அலுவலகக்குறிப்பினை அனுப்பும்போது அலுவலர்களின் பெயர்களை வரிசையாகத் தட்டச்சிட்டுவிட்டு, மாண்புமிகு துணைவேந்தரவர்கள் என்று தட்டச்சிடுவோம். இரண்டாவது பணிக்காலத்தில் அவர் எங்களுக்கு அனுப்பிய 1.10.1984 நாளிட்ட சுற்றறிக்கையில்  “துணைவேந்தர் பதவிக்கு முன் ‘மாண்புமிகு’ என்றும் ஆங்கிலத்தில் ‘ஆணரபிள்’ என்றும் அச்சடிப்பதையும், தட்டச்சு செய்வதையும், மேடையில் கூறுவதையும் அருள்கூர்ந்து நிறுத்திவிடுமாறு, கலைமகள் விழா தொடங்குவதற்குமுன் தமிழ்ப் பல்கலைக்கழகப் பணியாளர்கள் ஒவ்வொருவரிடமும் கேட்டுக்கொள்கிறேன்.” பின்னர் நாங்கள் அலுவலகக்குறிப்பு தட்டச்சிடும்போது துணைவேந்தரவர்கள் என்றே குறிப்பிட ஆரம்பித்தோம்.  


இரண்டாவது முறை பொறுப்பேற்று சில மாதங்களுக்குப் பின் அனைத்துப்பணியாளர்களுக்கும் அனுப்பிய 24.12.84 நாளிட்ட சுற்றறிக்கையில் நிறுவனத்திற்காகத் தன்னை அழித்துக்கொள்ளல் என்ற உணர்வினை வெளிப்படுத்தியிருந்தார். 

“22.9.84 பிற்பகல் முதல் எனது இரண்டாந் தவணைப் பொறுப்பேற்றவுடன் உங்களனைவருக்கும் எழுத நினைத்திருந்தேன். விடுப்பிற் சென்ற நாட்களில் நடந்த நிகழ்ச்சிகள் ’ஏன் இவ்வாறு நடந்தது, நான் செய்த தவறு யாது? ’ என்ற மனப்போராட்டம் தணியச் சில வாரம் தேவைப்பட்டன. ’என்னாய்வு வாழ்வு பாழாய்விட்டதே என்ற குற்ற உணர்வும்’ ஓரளவு தொல்லை தந்தது. என்னைப் பற்றியே நான் அறிந்துகொள்ளாத நிலையால் ஏற்பட்ட தளர்ச்சி நிலை. இனிவரும் முப்பத்து மூன்று மாதங்களிற் சில குறிக்கோளை உங்கள் ஒத்துழைப்புடன் நான் நிறைவேற்றியாக வேண்டும்…….

…….சென்ற தவணை என் கொள்கைகளிலும், செயற்பாட்டிலும் இணங்காத எவரும், என் பதவி விலகல் கடிதத்தை, நாளிட்டு, வேந்தருக்கு அனுப்பும் உரிமையுண்டெனத் தெரிவித்து நேர்முக உதவியாளரின் அறையில் வைக்கப்பட்டிருந்தது. ஒருவரும் பயன்படுத்தவில்லையே என்ற வருத்தம் உண்டு. இந்தத் தவணையும் அவ்வாறு பதவி விலகல் கடிதம் அஞ்சல் தலையுடன் வைக்கப்பட்டுள்ளது. கொள்கையில் மாறுபடுவோர் யார் வேண்டுமானாலும், நாளிட்டு அதனை அஞ்சற் பெட்டியில் இடலாம். இம்முறை மற்றொரு உரிமையை உங்களிடம் நான் பெற விரும்புகிறேன். ஆய்வாளர், அலுவலகப்பணியாளர் முதலியவர்களின் பணி எனக்கு மன நிறைவு தராது இருப்பின் நானே அந்த பதவி விலகல் கடிதத்தை அஞ்சல் பெட்டியில் இடும் உரிமையையும் நான் மேற்கொள்ள விரும்புகிறேன்………..

’நிறுவனத்தைக் காத்தற்குத் தன்னையே அழித்துக்கொண்டான்’ என்ற புதிய அறநெறியை இன்று முதல் நாம் தோற்றுவிப்போம்”.

பொறுப்பை ஒப்படைத்த 31.7.1986இல், அவர் ஆய்வாளர்கள், அலுவலர்கள் அனைவருக்கும் அனுப்பிய வாழ்த்துக்கடிதம் வாசிப்போரை மனம் நெகிழவைக்கும்படி இருந்தது.



“இன்று (31.7.86) மாலை ஐந்து மணியுடன் என் பொறுப்பை ஒப்புவித்து ஆய்விற்காக நான் திருவனந்தபுரம் செல்கிறேன். பரதன் பாதுகாத்த பாதுகையைப் போல் பிறர்கையில்  மகிழ்ச்சியுடன் விட்டுச்செல்லும் உணர்வு ஏற்படுகிறது. கடந்த ஐந்து ஆண்டுகளாக உங்களனைவருடன் உழைத்துத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தைப் படிப்படியாக உருவாக்குவதில் ஒரு பெருமிதம் எனக்கு இருந்தது. இணைந்த செயல்பாடும் உறவுமுறையும், தமிழுக்காகச் செய்கின்றோம் என்ற மன நிலையும் இந்த வளர்ச்சிக்குக் காரணம். இவற்றிற்கு நான் நன்றி சொல்ல வேண்டும்…..

……தமிழ்ப் பல்கலைக்கழக வளர்ச்சியை தமிழர் அனைவரும், ஏன், பிற மாநிலத்தவர்கூட  உன்னிப்பாகக் கவனித்து வருவர். அயல்மாநிலத்தில் வாழ்ந்த தமிழ் மகன் என்ற முறையில் அகலவிருந்து பார்த்து உங்கள் வளர்ச்சியை என் மனம் வாழ்த்தும். தளர்ச்சியிருப்பின் என் முகம் வாடும்.

அன்றுள்ள பல்கலைக்கழக அதிகாரிகள் அனுமதித்தால் நான் காலமானபின் என்னுடற் சாம்பலின் இம்மியளவைத் தஞ்சை தென் வளாகத்தில் ஒரு மூலையில் என் கண் முன்னே வளர்ந்த மரத்தடியிலும், காஞ்சி, உதகை, மண்டப மையங்களில் வளரும் மரத்தடியிலும் புதைத்திட என் குழந்தைகள் அனுப்புவர். புதைத்திடுக. நீங்களனைவரும் வளமுற வாழ்த்துகிறேன்.”


அன்னாருடைய அஸ்தியின் ஒரு பகுதி அவர் விருப்பப்படி துணைவேந்தர் இல்ல வளாகத்தின் அருகேயுள்ள மரத்தடியில் புதைக்கப்பட்டு அதில் கல்வெட்டு அமைக்கப்பட்டுள்ளது.

அவருடைய கடிதம் கல்வெட்டில் பொறிக்கப்பட்டு, தமிழ்ப் பல்கலைக்கழக நிர்வாகக் கட்டட முகப்பில் நினைவுச் சின்னமாக வைக்கப்பட்டுள்ளது. 

தமிழ்ப் பல்கலைக்கழகம் தழைத்தோங்க வித்திட்ட அம்மாமனிதரை இந்நாளில் நினைவுகூர்வோம். 

தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் 24.5.2001இல் நடைபெற்ற இரண்டாவது பொதுப் பட்டமளிப்பு விழாவின்போது, அவர் முதுமுனைவர் பட்டம் பெற்ற அதே நாளில் அதே மேடையில் முனைவர் பட்டம் பெற்றதைப் பெருமையாகக் கருதுகிறேன். 


பட்டமளிப்பு விழாவிற்கு முன்பாக வந்த நாளிதழ் செய்தி 
(நன்றி :The Hindu,  22.5.2001)


பட்டமளிப்பு விழாவிற்கு அடுத்த வந்த நாளிதழ் செய்தி 
(நன்றி :The Hindu , 25.5.2001)



தமிழ்ப் பல்கலைக்கழக முகப்பு, புகைப்படங்கள் நன்றி: 
Tamil University-A Profile, 1983 
தமிழ்ப் பல்கலைக்கழக வரலாறு (1981-2006), 2006 

முதுமுனைவர் வ.அய்.சுப்பிரமணியம் நூற்றாண்டு (18.2.1926-29.6.2009)
-----------------------------------------------------------------------------------
29.7.2026இல் மேம்படுத்தப்பட்டது.

21 June 2026

தஞ்சாவூர் மாவட்டக் கற்றளிகளுக்கு புதுக்கோட்டை மாவட்டப் பங்களிப்பு

 







-------------------------------------------------------------------------------------------
நன்றி: தமிழ்ப்பொழில், ஜூன் 2003
-------------------------------------------------------------------------------------------