15 July 2016

சங்க இலக்கியம் அறிவோம் : பத்துப்பாட்டு, எட்டுத்தொகை

முனைவர் ரெ.குமரன் (களப்பாள் குமரன்) அவர்களின் சங்க இலக்கியம் அறிவோம் : பத்துப்பாட்டு மற்றும் சங்க இலக்கியம் அறிவோம் : எட்டுத்தொகை நூல்கள் முறையே பத்துப்பாட்டு மற்றும் எட்டுத்தொகையினைப் பற்றிய சுருக்கக் களஞ்சியமாக அமைந்துள்ளன. சங்க இலக்கியம் முற்றிலும் மாறுபட்ட கோணத்தில், குறிப்பாக அறிவியல் பார்வையில், உற்றுநோக்கப்படவேண்டும் என்ற தன் அவாவினை இந்நூல்களில் மிக அருமையாக முன்வைக்கின்றார் நூலாசிரியர். இதன் முக்கியத்துவத்தை உணர்ந்த அவர் அவை ஆர்வலர்களுக்கும் அறிஞர்களுக்கும் சென்றடையவேண்டும் என்ற நன்னோக்கினை நூல்களின் முகப்பில் குறிப்பிட்டுள்ளார். இவற்றைப் படித்து நிறைவு செய்ததும் சங்க இலக்கியம் மீதான ஆர்வம் எனக்கு அதிகமாகிவிட்டது. 

சங்க இலக்கியம் அறிவோம் : பத்துப்பாட்டு
இந்நூலில் பத்துப்பாட்டான திருமுருகாற்றுப்படை, பொருநராற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக்காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப்பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம் ஆகிய 10 நூல்களைப் பற்றிய குறிப்புகளை நூலாசிரியர், நூலின் அமைப்பு, பெருமை, பதிப்பு விவரம் என்ற நிலையில் தந்துள்ளார். தொடர்ந்து ஒவ்வொரு நூலிலும் காணப்படுகின்ற முக்கியமான கூறுகளில் சிலவற்றைப் உரிய பாடல் மற்றும் பொருளுடன் தந்துள்ளார். தேவையான இடங்களில் பிற இலக்கியங்களை ஒப்புநோக்கியுள்ளார்.

வீரமங்கை 
யானை தாக்கினும் அரவு மேல் செலினும்
நீல் நிற விசும்பின் வல்வேறு சிலைப்பினும்
சூல்மகள் மாறா மறம்பூண் வாழ்க்கை
கடியலூர் உருத்திரங்கண்ணனார், பெரும்பா.4.134-135 
யானை தன்னைத் தாக்க வந்தாலும், தன்மேல் பாம்பு ஊர்ந்து சென்றாலும், இடி இடித்தாலும் கருவுற்ற பெண்கூட இவற்றிற்கெல்லாம் அஞ்சாத - மறத்தன்மை மிக்க வாழ்க்கை குறிஞ்சி நில மக்கள் வாழ்க்கை. (ப.43)

நீராடல் 
தீது நீங்க கடல் ஆடியும்
மாசு போக புனல் படிந்தும்
கடியலூர் உருத்திரங்கண்ணனார், பட்டினப், ப்பூதனார், முல்லைப்.9.99-100 
பரதவர், தங்கள் தீவினைகள் நீங்குவதற்காகக் காவிரி கடலொடு கலக்கும் இடத்தில் நீராடுவர். கடல் நீரில் குளித்தமையால் உலில் படிந்த உப்பு நீங்குவதற்காக நன்னீரில் நீராடுவர். (ப.117)
   
கவண்கல் 
பகல் நிலை தளர்க்கும் கவண் உமிழ் கடுங் கல்
இருவெதிர் ஈர்ங்கழை தத்தி கல்லெனக்....
வரும்விசை தவிராது மரம் மறையாக் கழிமின்
பெருங்குன்றூர்ப் பெருங்கௌசிகனார், மலைபடு.10.206-210 
புனத்தில் விளைந்த தினைக் கதிர்களை உண்ண வரும் யானைகளை, மலை வாழ் மக்கள், பரண் மீது நின்று கவண் கல் எறிந்துவிரட்டுவர். அக்கற்கள், மரங்களில் குட்டிகளுடன் தாவித்திரியும் குரங்குகளை அஞ்சி ஓடச்செய்யும். வழி செல்வார்க்குக் கவண்கற்களால் ஏதம் விளைதலும் கூடும் ஆதலின் மரங்களில் மறைந்து செல்க எனக் கூத்தன் உணர்த்தினான். (ப.136)

இந்நூலில் சுமார் 50 அரிய நூல்களைப் பற்றிய குறிப்புகள் நூலின் பெயர், நூலாசிரியர் பெயர், பதிப்பாண்டு, பதிப்பகம் உள்ளிட்ட விவரங்கள் அட்டைப்படத்தில் உள்ளபடி தரப்பட்டுள்ளன. இதில் 100 ஆண்டுகளுக்கு முந்தைய நூல்களும் அடங்கும் என்பது வியப்பிற்குரியது. தமிழர் அறிவியல் பல்லாண்டுகளுக்கு முன்பே வளர்ந்திருந்த திறத்தை மேற்கோள் காட்டி இன்றைய சூழலோடு நூலாசிரியர் ஒப்பிட்டுக் காட்டும் விதம் அருமையாக உள்ளது. இந்நூலின் முக்கியப் பகுதியில் இதுவும் ஒன்றாகும்.

சங்க இலக்கியம் அறிவோம் : எட்டுத்தொகை 
இந்நூலில் எட்டுத்தொகையான நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு ஆகிய எட்டு நூல்களைப் பற்றிய குறிப்புகளையும், ஒவ்வொரு நூலிலும் காணப்படுகின்ற முக்கியமான கூறுகளில் சிலவற்றையும் உரிய பாடல் மற்றும் பொருளுடன் தந்துள்ளார். தேவையான இடங்களில் பிற இலக்கியங்களை ஒப்புநோக்கியுள்ளார்.

மழை அறிவியல் 
இரு விசும்பு அதிர மின்னி
கருவி மாமழை கடல முகந்தனவே
மதுரை மருதங்கிழார் மகனார் சொகுத்தனார், நற்.329.11-12 
கருமை மிக்க வானம் ஒலியுண்டாகுமாறு இடித்து மின்னி மழைக்குரிய மேகக் கூட்டத்தோடு கடலில் சென்று நீர் முகந்து எழுந்த கார்காலம் வந்துற்றது.   (ப.35)

மண நாள் 
கார் அரும்பு அவிழ்ந்த கணி வாய் வேங்கை...
கபிலர், நற்.376.6 
கரிய நிறத்தைக் கொண்ட  அரும்புகள் மலர்ந்த கணியனைப் போலக் காறும் கூறும் வேங்கை. (திருமணம் செய்வதற்கு ஏற்ற காலமாக வேங்கை பூக்கும் பருவத்தைக் கொள்வர்)  (ப.40)

ஆழிப்பேரலை - சுனாமி 
துஞ்சல் உறூஉம் பகல் புகு மாலை
நிலம் பொறை ஒராஅ நிர் ஞெமர வந்து ஈண்டி
உரவுத் திரை கடுகிய உருத்து எழு வெள்ளம்
வரையா மாதிரத்து இருள் சேர்பு பரந்து
அரிசில்கிழார், பதிற்.72.8-11 
எல்லா உயிர்களும் இறக்கின்ற ஊழிக்காலத்தின் இறுதி புகுகின்றபோது, நிலவுலகின் பாரம் நீங்க, நீரானது எங்கும் பரவும்படி வந்து நெருங்கும். அந்நீரில் மோதும் அலைகள் விரைந்து வீசும். இவ்வாறு உயிர்களைக் கொல்வதற்குச் சினந்து எழுகின்ற வெள்ளம் எல்லை இன்னதென்று வரையறுத்து அறிதற்கு இயலாத திசைகளில் இருளொடு சேர்ந்து பரவும்.  (ப.88)

தாலி 
ஈகை அரிய இழை அணி மகளிரொடு
சாயின்று என்ப ஆஅய் கோயில்
உறையூர் ஏணிச்சேரி முடமோசியார், புறநா.127.5-6 
பிறிதோர் அணிகலமின்றிக் கொடுத்தற்கரிய மங்கல நானை அணிந்த மகளிருடன் நின், (ஆய் அண்டிரன்) அரண்மனை பொலிவழிந்து காணப்பட்டது என்று சொல்லுவர். (ப.215)

பாடலுக்குப் பொருள் கூறும்போது பல இடங்களில் அந்தந்தப் பொருண்மைக்குத் தகுந்தவாறு கீழ்க்கண்டவாறு கருத்துகளை நூலாசிரியர் தருகிறார். இவ்வாறான கருத்துகள் பிற அறிஞர்களுக்கும், ஆய்வாளர்களுக்கும் பலநோக்குப் பார்வையில் சங்க இலக்கியத்தை முன் எடுத்துச்செல்ல மிகவும் உதவியாக இருக்கும்.
...காப்புக்கட்டுதல் இன்று கிராமக் கோயில் சடங்கு. இன்று காசு முடிந்து போடுதல் உண்டு. இச்சடங்குகளின் வளர்ச்சி நிலையை ஆய்க. (ப.54)
...இவ்வழக்கம் உண்மையா/இலக்கியப்புனைவா? எச்சங்கள் இன்று உள்ளனவா? குறிஞ்சி வாழ் மக்களின் வாழ்வியலை ஆய்க. (ப.54)
...உலகத்தோற்றம் ஒடுக்கம் குறித்த செய்திகளை இன்றைய அறிவியலோடு ஒப்பிட்டு ஆய்க. (ப.94)
...இதன்கண் உள்ள புராணக்கதைகளை மீட்டுருவாக்கி அறிவியல் உண்மைகளை அறியுமாறு ஆய்க.  (ப.95)
...காலமே கடவுள் ஆம் தன்மை குறித்து ஆய்க.  (ப.111)


மேற்கண்ட இரு நூல்களிலிருந்து முற்றிலும் மாறுபட்ட நிலையில் அல்லித்தீவு என்ற புனைகதையைப் படைத்துள்ளார் இந்நூலாசிரியர். ஆண்கள் பெண்களாக, பெண்கள் ஆண்களாக வாழும்  நிலமான கற்பனை உலகிற்கு அழைத்துச்சென்று நம்மை பிரமிக்கவைக்கிறார். படிக்கும்போது நாம் வேற்றுலகில் இருப்பதுபோன்ற உணர்வை அடையலாம். முதலில் நாம் படித்த இரு நூல்களின் ஆசிரியர் இவரா என்று வியக்குமளவு முழுக்க முழுக்க வித்தியாசமாக அல்லித்தீவைப் படைத்துள்ளார்.   

சங்க இலக்கியத்தின் அருமை பெருமைகளை அறிந்துகொள்ள மேற்கண்ட இரு நூல்களையும், கற்பனையின் வளத்தை அறிந்து வேறோர் உலகிற்குச் செல்ல அல்லித்தீவையும் வாசிப்போம். வாருங்கள்.

சங்க இலக்கியம் அறிவோம் பத்துப்பாட்டு (ரூ.150)
சங்க இலக்கியம் அறிவோம் எட்டுத்தொகை (ரூ.200)
அல்லித்தீவு (ரூ.100)
நூலாசிரியர் : முனைவர் இரெ.குமரன் (பேசி 9443340426)
மின்னஞ்சல் kalappiran@gmail.com
பதிப்பகம் : கவின் பதிப்பகம், 18/17 காத்தூன் நகர், மூன்றாம் தெரு,
நாஞ்சிக்கோட்டை சாலை, தஞ்சாவூர் 613 006 (பேசி 9962721280)

16 comments:

  1. ஐயா , தாங்கள் ஆற்றிவரும் அரும்பணிகளுக்கிடையே என் நூல்களையும் படித்து அருமையான திறனுரை எழுதியமைக்கு என்றும் நன்றியுடையன்.. தாங்கள் எனக்கு அளித்துவரும் ஊக்கம் தமிழுக்கு ஆக்கமாக அமையுமாறுபேணுவேன்... நன்றியுடன்.. வணக்கம்.

    ReplyDelete
  2. அன்பின் அய்யாவிற்கு,
    திரு.குமரன் அவர்களின் மூன்று நூல்களின் அறிமுகத்தினை அழகாக பதிவிட்டு நூல்களை வாசிக்க ஆர்வமூட்டியதற்கு நன்றி.

    ReplyDelete
  3. நூல் அறிமுகம் நன்று.

    ReplyDelete
  4. அருமையான நூல்கள் அறிமுகம்.

    ReplyDelete
  5. நூல் அறிமுகம் நன்று..
    தாங்கள் எடுத்துக் காட்டியுள்ள சில செய்திகளால் வியப்பு மேலிடுகின்றது..

    ReplyDelete
  6. நூலின் விரிவான அறிமுகம் தந்த முனைவருக்கு நன்றி
    நூலாசிரியர் குமரன் அவர்களுக்கு வாழ்த்துகள்
    த.ம. 3

    ReplyDelete
  7. சூப்பர்

    ReplyDelete
  8. 'அல்லித் தீவு' கதைக்கரு மனதைக் கவருகிறது. சங்க காலத்தில் அறிவியல் திறனுக்கு எடுத்துக் காட்டாக ஓரிரு சங்கப்பாடல்களை எடுத்துச் சொல்லியிருக்கலாம், ஐயார்!

    ReplyDelete
  9. விரிவான நூல் அறிமுகம் ஐயா...

    ReplyDelete
  10. நூல் அறிமுகம் நன்று. பகிர்ந்து கொண்டதற்கு நன்றி ஐயா.

    ReplyDelete
  11. ஐயா வணக்கம். தஞ்சையில் ஆயுள்காப்பீட்டுக் கழகத்தில் பணியாற்றும் நண்பர் ராஜா, ஏற்கெனவே களப்பிரன் எனும் பெயரில் எழுதியும் தமுஎகசவில் மாநிலச் செயலராக இயங்கியும் வருகிறார். அவர் வேறு இவர் வேறா அல்லது இருவரும் ஒருவர்தானா என அறிய விரும்புகிறேன். (இதுபோலவே ஜீவி எனும் பெயரில் அறந்தாங்கியில் கவிஞர் ஒருவர் இருக்கிறார். அவர் சிறுகதைகள் எழுதியதில்லை. சிறுகதைகள் எழுதும் ஜீவி என எங்கள் ப்ளாக் வழியும் இந்த உங்கள் பதிவின் பின்னூட்டத்திலும் ஒருவரை அறிந்தேன். இதுபோலவே நந்தலாலா என திரைப்படக் கவிஞர் ஒருவரும், திருச்சியில் பேச்சாளர் மற்றும் தமுஎகச துணைத்தலைவருமான என் நண்பர் ஒருவருண்டு. ஒரே பெயரில் ஏன் இப்படி...?

    ReplyDelete
  12. நல்ல இலக்கிய ஈர்ப்பை ஏற்படுத்தும் நூல்களை அறிமுகப் படுத்தியமைக்கு நன்றி

    ReplyDelete
  13. மூல நூல்களைப் படித்தறியாத எம்மனோர்க்கு இவை எடுத்துக்காட்டல்கள் வாழ்த்துகள்.

    ReplyDelete
  14. வணக்கம்
    ஐயா
    நூல்கள் சிறப்பான விளக்கம் தந்தமைக்கு நன்றிகள் பல.
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  15. அய்யா வணக்கம்

    எனது பெயர் மணி எனக்கு ஒரு பாடல் வேண்டும் சங்க இலக்கியத்திலிருந்து

    எனது நண்பர் படம் எடுக்க தயாராக உள்ளார் என்னையும் உதவி இயக்குனராக சேர்த்து கொள்வேன் என்று கூறினார் இப்பொழுது படப்பூஜை நடக்க உள்ளது

    எனக்கு சங்க இலக்கியத்திலிருந்து ஒரு பாடல் வேண்டும் அவரை புகழ்வது போல் இருக்க வேண்டும் அவரது முயற்சி வெற்றி அடைய வாழ்த்தும் கூற வேண்டும்
    ஏதாவது சங்க இலக்கியத்திலிருந்து வாழ்த்து பாடல் இருந்தால் அதன் பாடல் அல்லது இனைய link அனுப்பவும் சங்க இலக்கியம்

    நன்றி என்றும் அன்புடன்
    மணி

    ReplyDelete
  16. வணக்கம். நூலாசிரியர் திரு இரெ.குமரன் அவர்களை (9443340426, kalappiran@gmail.com) தொடர்புகொள்ள வேண்டுகிறேன். அன்புக்கு நன்றி.

    ReplyDelete