09 September 2017

அயலக வாசிப்பு : ஆகஸ்டு 2017

இம்மாத அயலக வாசிப்பில் வழக்கம்போல் கார்டியன், இன்டிபென்டன்ட், டெலிகிராப், டான் ஆகியவை இடம் பெற்றுள்ளன. சீனாவிலிருந்து வரும் குளோபல் டைம்ஸ் இதழிலிருந்து ஒரு செய்தியைக் காண முடிந்தது. மற்ற அனைத்தும் வழக்கமாக படிக்கும் இதழ்களே. பணியாளர்களிடம் சிப்பினை அமைத்தல் தொடர்பான செய்தியைப் படிக்கும்போது 1991இல் நான் பார்த்த திரைப்படம் நினைவிற்கு வந்தது. 

இந்தியாவின் 70ஆவது விடுதலை நாளை நினைவுகூறும் வகையில் கெட்டி இமேஜஸ் கேலரி (Getty Images Gallery) இந்தியாவின் அக்கால புகைப்படங்களைக் கொண்ட கண்காட்சியை பிரிட்டனில் நடத்துகிறது. புதுதில்லி நுழைவாயில் (1858), யமுனையிலிருந்து தாஜ் மகால் (1859), டார்ஜிலிங்கில் பௌத்த இசை வல்லுநர்கள் (1870கள்), காசியில் கங்கைக்கரையோரத்தில் மயானப் படித்துறை அருகே விஷ்ணு மற்றும் பிற கோயில்கள் (1865), இமயமலையில் லகாவூல் பள்ளத்தாக்கு (1866), உல்வார் மகாராஜா ஜெய்சிங் (1877), பம்பாயில் கிர்காம் சாலை (1890-1910) உள்ளிட்ட பல புகைப்படங்கள் அக்கண்காட்சியில் இடம்பெறவுள்ளன. (நன்றி : கார்டியன்) அமெரிக்காவில் விஸ்கான்சில் உள்ள த்ரிஸ்கொயர் மார்க்கெட் (Three Square Market) என்ற நிறுவனம் தன்னிடம் பணியாற்றும் 40 பணியாளர்களிடம் மைக்ரோசிப்புகளைச் செலுத்தியுள்ளது. அந்த பணியாளர் அறைக்குள் செல்லும்போது அங்கு பணியாற்றும் சக பணியாளர்களுடைய மைக்ரோசிப்புகளுடன் இணைப்பு கிடைக்கும். திரையில் அவர்களைப் பார்க்கலாம், அவர்களுடைய பணிகள், குணநலன்கள், நடந்துகொள்ளும் முறை, குறைகள் நிறைகள் உள்ளிட்டவற்றை அறியலாம். "இது ஒரு மைக்ரோசிப் மட்டுமே. ஒருவர் நாள் முழுதும் 24 மணி நேரத்திற்கு ஒரு தொலைபேசியை வைத்திருந்தாலே அவர் மைக்ரோசிப் வைத்துள்ளதாக பொருள் கொள்ளலாம். அவ்வகையில் இதனைப் பற்றி எவரும் கவலை கொள்ளவேண்டாம்" என்று அந்நிறுவனம் கூறுகிறது. (நன்றி : இன்டிபென்டன்ட்) இந்த மைக்ரோசிப் பற்றிய செய்தியைப் படித்தபோது 1991இல் நான் பார்த்த The Black Cat மற்றும் அண்மையில் ஜெயம் ரவி நடித்து வெளியான திரைப்படங்கள் நினைவிற்கு வந்தன. அவற்றைப் பற்றி தனியாக ஒரு பதிவில் பார்ப்போம்.  
பாகிஸ்தானைச் சேர்ந்த, அரிய இதய நோயைக் கொண்ட மூன்று வயது குழந்தை இந்தியாவில் சிகிச்சை பெற்று புதிய வாழ்வினைப் பெற்றுள்ளது. 2,00,000இல் ஒரு குழந்தைக்கு இந்நோய் வருவதற்கான சாத்தியக்கூறு உள்ளதாம். நோயுறும் பல பாகிஸ்தானியர்கள் மருத்துவ விசாவினைப் பெற்று இந்தியா வந்து செல்கின்றனர். டெல்லியிலுள்ள அப்பல்லோ போன்ற பல மருத்துவமனைகளுக்கு ஒவ்வொரு மாதமும் 500 நோயாளிகள் வந்துள்ளனர். பல நோயாளிகள் இதய நோய் சிகிச்சைக்காக சென்னைக்கு வந்து குணமாகின்றனர். (நன்றி : டான்) 

கேம் ஆப் த்ரோன்ஸ் (Game of Thrones) நட்சத்திரங்களைப் பற்றிய சொந்த தகவல்கள் கசியவிடப்பட்டுள்ளதாகவும், தொடர்ந்து இந்நிகழ்ச்சியின் பல காட்சிகளை முன்கூட்டியே கசியவிடப்போவதாகவும் அதனை ஹேக் செய்தவர்கள் கூறியுள்ளனர். எச்பிஓ (HBO) நிறுவனத்திற்கு அனுப்பியுள்ள ஐந்து நிமிட வீடியோ கடிதத்தில் 1.5 டெர்ராபைட்டுகளை திருடிய அவர்கள் தாம் ஓராண்டிற்கு 12 மில்லியன் டாலர் முதல் 15 மில்லியன் டாலர் வரை சம்பாதிப்பதாகவும், தமக்குரிய ஆறுமாத ஊதியத்தை பிட்காயினாக மூன்று நாள்களுக்குள் தரவேண்டும் என்றும் மிரட்டியுள்ளனர். எச்பிஓ நெட்வொர்க்கை உடைத்துப் புக அவர்களுக்கு ஆறு மாதங்கள் ஆனதாகவும் கூறியுள்ளனர். (நன்றி : கார்டியன்)
 

அண்ணன், அக்காவைவிட, தம்பி தங்கைகளே மிகச் சிறந்த ஓட்டுநர்களாகின்றார்களாம். மூத்த குழந்தைகள் வேகமாக காரை ஓட்டுவார்களாம், அபராதம் கட்டுவார்களாம், பெரும்பாலான சாலை விபத்துக்குக் காரணமாவார்களாம். மாறாக இளையவர்கள் காரை ஓட்டிச் செல்லும்போது மிகவும் கவனமாக இருப்பார்களாம். (நன்றி : இன்டிபென்டன்ட்)

38 வயதாகும் மாஷா-தாஷா மாஸ்கோவில் வசிக்கும் இரட்டையர். ஒரே உடலைக் கொண்டுள்ள இச்சகோதரிகளின் வாழ்வினைப் பின்புலமாகக் கொண்டு புதினத்தை எழுதியுள்ள நூலாசிரியர் தன் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்கின்றார். (சில ஆண்டுகளுக்கு முன் வெளியான தமிழ்த்திரைப்படம் மாற்றான் நினைவிற்கு வருகிறதா? சற்றொப்ப அதைப்போலவே) (நன்றி : டெலிகிராப்)
 
குறைந்த செலவில் சிகிச்சை, உயர் தர மருத்துவம், அதிநவீன மருந்து போன்றவை காரணமாக சீன நோயாளிகள் சிகிச்சை பெற இந்தியா வருகின்றனர். (நன்றி : குளோபல் டைம்ஸ்)

--------------------------------------------------------------------------------------
என்னுடைய சோழ நாட்டில் பௌத்தம் வலைப்பூவில் 
செப்டம்பர் 2017 மாதப் பதிவு
--------------------------------------------------------------------------------------

15 comments:

 1. தங்களின் வாசிப்பு போற்றுதலுக்கு உரியது ஐயா
  ஒவ்வொரு செய்தியும் வியக்க வைக்கிறது
  ஒட்டிப் பிறந்த இரட்டையர்கள் படம்
  வியக்க வைத்தாலும், அவர்களின் வாழ்வை எண்ணும்போது வேதனையைத் தருகின்றது

  ReplyDelete
 2. அரியவகை செய்திகள் பிரமிக்க வைக்கின்றது.
  தொடர்ந்து வரட்டும் தங்களது வாசிப்பு அனுபவங்கள்.

  ReplyDelete
 3. தகவல் தொகுப்பு அருமை..

  வாழ்க நலம்..

  ReplyDelete
 4. தங்களின் அயலக வாசிப்பு மூலமாக அரிய தகவல்களை அறிந்துகொள்ள முடிகின்றது. வாழ்த்துகள் அய்யா
  நட்பின் வழியில்
  சோலச்சி புதுக்கோட்டை

  ReplyDelete
 5. அயலக செய்தித் தொகுப்பு நன்று. சில புதிய விஷயங்களைத் தெரிந்து கொள்ள முடிந்தது. நன்றி முனைவர் ஐயா.

  ReplyDelete
 6. விவரங்களுக்கு நன்றி . சுவாரஸ்யம்.

  ReplyDelete
 7. சீன நோயாளிகள் மட்டுமின்றி ஆப்பிரிக்க, பாகிஸ்தான், பங்களாதேஷ் ஏன் அமெரிக்கர் கூட இங்கு வருகின்றனர் மருத்துவ சிகிச்சைக்கு...

  பல செய்தித் தொகுப்பு அறிய முடிந்தது. நன்றி முனைவர் ஐயா..

  துளசி, கீதா

  ReplyDelete
 8. உடலுள் மின்தகடு தைத்த செய்தி படித்து நானும் சற்று அசந்து தான் போனேன். முதலில் பரபரப்பாக இருந்த நிகழ்வை இப்போது யாரும் கண்டு கொள்வதாகவே தெரியவில்லை.
  இந்தியாவில் மருத்துவ சிகிச்சை மலிவாகவும் தரமாகவும் இருக்கிறது இப்போதைக்கு.

  ReplyDelete
 9. அனைத்து தகவல்களும் சுவாரஸ்யமானவை!!

  ReplyDelete
 10. அயலக வாசிப்பின் தொகுப்பு அருமை ஐயா...

  ReplyDelete
 11. மிகவும் அருமையான தொகுப்பு.
  பகிர்வுக்கு நன்றி.

  ReplyDelete
 12. அருமையாக தொகுத்து வழங்கியமைக்கு மிக்க மகிழ்ச்சியும் நன்றியும் உரித்தாகட்டும். மேலும் ச்சும்மா கவிதையும் தங்கள் தளத்தில் இணைத்திருப்பதற்கு நன்றி

  ReplyDelete
 13. நம்ம ஊர் அப்போலோ சிகிச்சை நமக்கே காஸ்ட்லி ,பாகிஸ்தானில் இருந்து வருகிறார்கள் என்றால் ,அங்கே செலவு இன்னும் அதிகம் போலிருக்கே :)

  ReplyDelete