02 June 2018

சித்தப்பா : கரந்தை ஜெயக்குமார்

வலையுலகில் தனக்கென ஒரு சிறப்பான இடத்தைப் பிடித்து, தொடர்ந்து எழுதிவருபவர் நண்பர் திரு கரந்தை ஜெயக்குமார். வரலாறு, கலை, அறிவியல், தனிநபர் வாழ்க்கை, சமூக அவலம் என்ற அனைத்துத் துறைகளிலும் பதிவுகளைத் தொடர்ந்து எழுதி சிறந்த வாசகர் வட்டத்தைக் கொண்டுள்ளவர். கடந்த மாதம் ராஜராஜன் விருது பெற்றவர். அவர், தன்னுடைய சித்தப்பா நினைவாக அண்மையில் எழுதியுள்ள நூல் அவருடைய சித்தப்பா அமரர் திரு சி.திருவேங்கடனார் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு நாளில் (25 மே 2018) வெளியிடப்பட்டது.

அமரர் சி. திருவேங்கடனாரின் முதலாம் ஆண்டு நினைவு நாளில்
திருவையாற்றில் வெளியிடப்பட்ட நினைவு மலரின் முகப்பட்டை
விட்டுவிட்டு மழை பெய்துகொண்டிருந்தது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் தொடர்பாக அன்று கடையடைப்பு. இருந்தாலும் திருவேங்கடனாரை நினைவுகூற அவருடைய நண்பர்களும், அறிஞர்களும் திருவையாற்றில் திருமஞ்சன வீதியில் அமைந்துள்ள பாபு திருமண மண்டபம் நோக்கிப் பயணித்துக்கொண்டிருப்பதைக் காணமுடிந்தது. நேரம் ஆக ஆக, அரங்கமே நிரம்பி வழிய ஆரம்பித்தது. இளங்கோ கம்பன் இலக்கியக் கழகம் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்ட அவ்விழாவில் திருவேங்கடனாரைப் பற்றி அதிகமாக அறிந்துகொள்ளமுடிந்தது.  





அரிதின்முயன்று கட்டுரைகளையும், கவிதைகளையும், அனுபவங்களையும் திரட்டி இந்நூலை நூலாசிரியர் தொகுத்தளித்துள்ளார்.  திருவேங்கடனாரின் பன்முக குணங்களையும், சிறப்பையும் இதில் காணமுடிந்தது.
  • நல்லாசிரியர், மனித நேயப்பண்பாளர்
  • வாழ்நாள் முழுவதும் ஆசிரியப்பணி மேற்கொண்டவர் 
  • சிறந்த ஓவியர்
  • கவிதைகள் எழுதுவதில் வல்லவர்
  • ஆடம்பரம் விரும்பாதவர்
  • சாதி, மதம், இனம், ஏழை, பணக்காரன் என்ற வேறுபாடு காணாதவர் 
  • தமிழிசை மன்றம் தோற்றுவித்தவர்களில் ஒருவர்
  • தமிழிசை மேடையினை கோயிலின் கருவறை போலக் காக்கவேண்டும் என்றவர்
  • எந்த சூழலிலும் எவரையும் அலட்சியப்படுத்தாதவர்
  • இளங்கலை அறிவியல், ஆசிரியர் பயிற்சிப் பட்டம் பெற்றவர்
  • மாணவர்களுக்கு எளிதாகப் பாடம் சொல்லித் தந்தவர்
  • மாணவர்களுக்கு ஆங்கிலம், கணிதம், அறிவியல் பயிற்றும்போதே தமிழ் இலக்கியச் சொல்வளம் நிரம்பியவர்
  • மாநில நல்லாசிரியர் விருது பெற்றவர்
  • அடித்தட்டு மக்களுக்கு சேவை செய்தவர் 
  • தியாகராசர் தெலுங்குப் பாட்டிசை விழாவைக் கண்டித்து சுவரொட்டி ஒட்டியவர்
  • அரசியல் போராட்டத்தில் வெளிப்படையாகத் தொடர்புபடுத்திக்கொள்ளாதவர்
  • முற்போக்கு எழுத்தாளர் சங்கம், பாவேந்தர் திறனாய்வு மன்றம், பாவலர் மன்றம் உள்ளிட்ட அரங்குகளில் பங்கேற்றவர்
  • நட்பை கற்பு போல காத்தவர்
  • பிறர் துன்பம் கண்டு துடித்தவர்
  • தன் துன்பம் கண்டு துவளாதவர்
  • நிறைந்த ஞானம், இனிய சொற்கள், எளிய வாழ்க்கை என்று வாழ்ந்தவர்
  • தன் கணையாழியை பிணையம் வைத்து கலைஞர்களுக்கு உதவி செய்தவர் 
  • பணி நிறைவுக்குப் பின்னரும் கல்விப்பணியாற்றியவர்
  • அழகான கையெழுத்தினைக் கொண்டவர்
  • பொதுவுடைமையில் கோட்பாட்டில் ஈடுபாடு கொண்டவர்
ஓர் அரிய மாமனிதரை சித்தப்பாவாகக் கொண்டிருந்த நூலாசிரியர், அவருடைய புகழையும், சிறப்பையும் இவ்வுலகிற்கு எடுத்துக் கூறும் வகையில் இந்நூலினை சிறப்பாகக் கொணர்ந்துள்ளார். அவரோடு தொடர்பு கொண்டோரிடம் செய்திகளைப் பெற்று தொகுத்துத் தந்துள்ள விதம் மிகவும் போற்றத்தக்கதாகும். திருவேங்கடனாரின் புகழை வெளிக்கொணர்ந்து, அவரைப் பற்றி அறிந்துகொள்ளும் வாய்ப்பு தந்த நண்பர் திரு கரந்தை ஜெயக்குமாரைப் பாராட்டவேண்டியது நம் கடமையாகும்.

4 ஜுன் 2018இல் மேம்படுத்தப்பட்டது.

10 comments:

  1. நண்பரது நூலைக்குறித்த விளக்கவுரை அருமை கண்டிப்பாக வாங்க வேண்டும்.

    திரு. கரந்தையார் அவர்களுக்கு வாழ்த்துகள்.

    ReplyDelete
  2. நிகழ்ச்சியை உங்கள் பாணியில் சிறப்பாக எழுதியிருக்கிறீர்கள்.

    கரந்தை ஜெயகுமார் சாருக்கு பாராட்டுகள்.

    ReplyDelete
  3. ஐயாவிற்கு வாழ்த்துகள்...

    ReplyDelete
  4. நண்பர்/சகோ கரந்தையார் அவர்களின் நூல் பற்றிய அறிமுகம் சிறப்பு.

    கரந்தையார் அவர்களுக்கு வாழ்த்துகள்!

    ReplyDelete
  5. மாமனிதரை அறிந்து கொள்ள உதவியது உங்கள் விமர்சனம். அவரை வணங்கி கொள்கிறேன்.

    சகோ கரந்தை ஜெயக்குமார் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  6. வணக்கம் சகோதரரே

    அருமையான நூல் விமர்சனம். உங்களால் தங்களின் பதிவின் மூலம் நாங்களும் அறியப் பெற்று மகிழ்வடைந்தோம். மிக்க நன்றி.

    சகோதரர் திரு. கரந்தை ஜெயக்குமார் அவர்களுக்கு வணக்கங்களுடன் வாழ்த்துக்களும்...

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
  7. தங்களின் பதிவு கண்டு
    மகிழ்ந்தேன்
    நெகிழ்ந்தேன்
    நன்றி ஐயா

    ReplyDelete
  8. ஆசிரியர் கரந்தை ஜெயக்குமாரின் 'சித்தப்பா' நூல் பற்றிய விமர்சனம் சுருக்கமாகவும் விளக்கமாகவும் அமைந்துள்ளது. நூல் வெளியீட்டு விழா பற்றிய நிகழ்ச்சியையும் கோர்வையாகச் சொன்னதற்கு நன்றி.

    ReplyDelete
  9. கரந்தையாரின் எழுத்தாற்றல் பற்றிச் சொல்லவும் வேண்டுமோ? நூலைப் படிக்கவேண்டும் என்னும் ஆரவம் மிகுதியாகிறது.

    -இராய செல்லப்பா சென்னை

    ReplyDelete
  10. மிக மகிழ்ச்சி..ஐயா..

    கரந்தை ஐயாவிற்கு எனது வாழ்த்துகளும்...

    ReplyDelete