30 June 2018

தஞ்சையில் சமணம் : நன்றி

தஞ்சையில் சமணம் நூலின் வெளியீட்டு விழா நேற்று (29 ஜுன் 2018) மாலை தஞ்சாவூர் பெசன்ட் அரங்கத்தில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.  வரவேற்புரையில் அனைவரையும் வரவேற்ற பின்னர், இந்நூல் உருவாக அமைந்த பின் புலத்தைப் பகிர்ந்துகொண்டேன். 
திரு மணி.மாறன், முனைவர் பா.ஜம்புலிங்கம், முனைவர் அ.இலட்சுமிதத்தை, ஸ்வஸ்திஸ்ரீஇலட்சுமிசேன பட்டாரக பட்டாச்சார்யவர்ய ஸ்வாமிகள்,  திரு ச.அப்பாண்டைராஜ், திரு இரா.செழியன், திரு தில்லை கோவிந்தராஜன்
புகைப்படம் நன்றி : திரு வீரமணி

 
விழா மேடையில் பெற்ற அன்பளிப்பு
1993-2018
என்னுடைய பௌத்த ஆய்வு தொடர்பாக  1993 முதல் மேற்கொண்ட வந்த களப்பணியின்போது புத்தர் சிலைகளுடன் சமண தீர்த்தங்கரர் சிலைகளையும் கண்டேன். கடந்த 25 ஆண்டுகளாக 16 புத்தர் சிலைகளையும், 13 சமண தீர்த்தங்கரர் சிலைகளையும் தனியாகவும், நண்பர்கள் மற்றும் அறிஞர்களின் துணையோடும் கண்டேன். இவற்றில் ஒருங்கிணைந்த தஞ்சாவூர் மாவட்டத்தைச் சார்ந்த சிலைகளும் பிற மாவட்ட சிலைகளும் அடங்கும்.


சமண தீர்த்தங்கரர் சிலைகளை ஜெயங்கொண்டம் (டிசம்பர் 1998), தப்ளாம்புலியூர் (நவம்பர் 1998),  ஆலங்குடிப்பட்டி (மே 1999),  செங்கங்காடு (பிப்ரவரி 1999), தஞ்சாவூர் (ஜுன் 1999), பெருமத்தூர் (மார்ச் 1999), அடஞ்சூர் (மார்ச் 2003) ஆகிய இடங்களில் தனியாகவும், செருமாக்கநல்லூர் (ஜுன் 2009), சுரைக்குடிப்பட்டி (பிப்ரவரி 2010), பஞ்சநதிக்குளம் (ஆகஸ்டு 2010), தோலி (நவம்பர் 2011) ஆகிய இடங்களில் திரு தில்லை கோவிந்தராஜன் உடன் இணைந்தும், கவிநாடு (அக்டோபர் 2013) என்னுமிடத்தில் முனைவர் சந்திரபோஸ் உடன் இணைந்தும், நாட்டாணி (மார்ச் 2015) என்னுமிடத்தில் திரு மணி.மாறன் உடன் இணைந்தும் கண்டேன்.


டிசம்பர் 1998
டிசம்பர் 1998இல் ஜெயங்கொண்டத்தில் முதல் களப்பணியின்போது நான் பார்த்த சிற்பம் அடுத்த களப்பணியின்போது அங்கு காணப்பெறவில்லை. ஜெயங்கொண்டத்தில் இருந்த புத்தரைக் காணச் சென்றபோது இந்த சமணர் சிலையைக் கண்டேன். சிலையின் அளவினையும் எடுத்தேன். இருந்தாலும் முதலில் போகும்போது புகைப்படக் கருவியினை எடுத்துச்செல்லாத நிலையில் அச்சிற்பத்தை புகைப்படம் எடுக்கவில்லை. அதனை ஒரு பெரிய இழப்பாகக் கருதினேன். முதலில் பார்த்த சிற்பத்தை ஆவணப்படுத்தப் பட இயலா நிலை என்னை அடுத்தடுத்த சிற்பங்களைப் பார்த்தபோது ஆவணப்படுத்த உதவியது. 

மே 2010
தஞ்சாவூரில் பௌத்தம் என்ற என்னுடைய ஆய்வியல் நிறைஞர் பட்ட ஆய்வினை அடியொற்றி, தஞ்சையில் சமணம் என்ற தலைப்பில் திரு தில்லை கோவிந்தராஜன் அவர்களை ஒரு திட்டத்தினை மேற்கொள்ளக் கூறியபோது அவரும் இசைந்தார். அவருக்கு நெறியாளராக இருந்து புதுதில்லி நேரு டிரஸ்ட் உதவியுடன் இத்திட்டம் நிறைவேற்றப்பட்டது.   
 
டிசம்பர் 2011
தீபங்குடியில் 25 டிசம்பர் 2011இல் நடைபெற்ற நல்ஞான தீபத் திருவிழாவில் நானும் திரு தில்லை கோவிந்தராஜன் அவர்களும் சிறப்பு சொற்பொழிவாளர்களாகக் கலந்துகொண்டோம். (முக்குடை, ஜனவரி 2012. ப.26)  அப்போது சோழ நாட்டில் உள்ள சமணத் தடயங்களைப் பற்றிய ஆய்வினைப் பற்றி எடுத்துரைத்தோம். விழாவின்போது திரு அப்பாண்டைராஜன் உள்ளிட்ட பெருமக்களின் விருப்பத்திற்கு ஏற்ப எங்களது ஆய்வினை நூலாகக் கொணர்வோம் என்று நாங்கள் கூறினோம். 

அக்டோபர் 2017
அக்டோபர் 2017இல் தஞ்சாவூரில் ஏடகம் அமைப்பு தொடங்கப்பட்டபோது  திரு மணி.மாறன் அவர்களிடம் திரு அப்பாண்டைராஜன் அவர்கள் தன் ஏக்கத்தினை வெளிப்படுத்தியதை நூலின் ஆசியுரையில் குறிப்பிட்டுள்ளார். அவ்வப்போது நாங்களும் நூலாக்க முயற்சி பற்றி பேச ஆரம்பித்தோம். எங்களது முயற்சி கைகூட இது ஒரு வாய்ப்பாக அமைந்தது.


நவம்பர்  2017
நாங்கள் முன்பு களப்பணியில் கண்ட சுரைக்குடிப்பட்டி, ஒரத்தூர், நாட்டாணி ஆகிய இடங்களில் காணப்படுகின்ற சமண தீர்த்தங்கரர் சிலைகளை 19 நவம்பர் 2017இல் திரு அப்பாண்டைராஜன் அவர்களின் தலைமையில் அகிம்சை நடையின்போது காணும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது நூலாக்கத்திற்கான ஆர்வம் அதிகமானது. 


பிப்ரவரி  2018
புதுச்சேரி பிரெஞ்சு ஆய்வு நிறுவனம் 5 பிப்ரவரி 2018இல் வெளியிட்ட பிரெஞ்சு தமிழக சமணர் தளங்களைக் கொண்ட குறுந்தகட்டிலுள்ள புகைப்படத் தொகுப்பில் தமிழகத்தில் உள்ள 82 சமணர் துணைத் தளங்கள் உள்பட 464 சமணர் தளங்கள் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. இதில் களப்பணியின்போது எங்களால் கண்டுபிடிக்கப்பட்ட சமணர் சிலைகள் உரிய ஒப்புகையுடன் இடம் பெற்றுள்ளன. சுரைக்குடிப்பட்டி சமணர் சிலை பற்றிய குறிப்பில் சோழ நாட்டில் பௌத்தம் வலைப்பூ மேற்கோளாகக் காட்டப்பட்டுள்ளது.


ஜுன்  2018
இந்நூலின் ஆசிரியர்களில் ஒருவராக அமைந்ததை பெரும் பேறாகக் கருதுகிறேன். நூலாக்கத்தில் உதவிய நண்பர்கள் திரு தில்லை கோவிந்தராஜன், திரு மணி.மாறன் ஆகியோருக்கும், இந்நூலினை முதல் வெளியீடாகக் கொணர்ந்தமைக்காக ஏடகத்திற்கும் பொறுப்பாளர்களுக்கும் என் நன்றி. நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு சிறப்பாக அமைய உதவிய அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

14 comments:

  1. முனைவர் அவர்களோடு, இணைந்து நூல் உருவாக்கிய திரு. தில்லை கோவிந்தராஜன் மற்றும் திரு. மணிமாறன் அவர்களுக்கும் எமது வாழ்த்துகள்.

    ReplyDelete
  2. அருமையான பதிவு வாழ்த்துக்கள் ஸார்

    ReplyDelete
  3. வாழ்த்துகளும், பாராட்டுகளும்.

    ReplyDelete
  4. ஐயா இது தங்கள் வாழ்நாள் சாதனை எனலாம். வாழ்த்துகள்.

    ‘சமணமும் தமிழும்’ குறித்து மயிலை சீனி.வேங்கடசாமி கூறிய கருத்துகளை இங்கு பகிர்ந்து கொள்ளட்டுமா?

    ‘சமணமும் தமிழும்’ என்னும் இந்நூலை எழுதத் தொடங்கிப் பதினான்கு ஆண்டுகள் ஆயின. இதனை எழுத இத்தனை ஆண்டு பிடித்ததா என்று கருதாதீர்கள். எழுதுவதற்கு மூன்று நான்கு ஆண்டுகள்தான் கொண்டன. ஆனால், ஊழ் இதனை இதுகாறும் வெளிவராமல் செய்துவிட்டது!.

    பத்து ஆண்டுகள் கடந்தன. இந்நூல் எழுதுவது பற்றிப் பலரும் முன்னமே அறிந்திருந்தபடியினால், பல நண்பர்கள் நேரிலும் கடிதம் எழுதியும் இதைப் பற்றிக் கேட்டார்கள்.

    சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தின் ஆட்சிப் பொறுப்பாளர் திரு.வ.சுப்பையா பிள்ளை அவர்கள் இந்நூலை அச்சிடுவதாகக் கூறிக் கையெழுத்துப் பிரதியைக் கேட்டார்கள். அதற்கு இணங்கிக் கையெழுத்துப் பிரதியைத் தேடினேன். அந்தோ நான் கண்டதென்ன! பெட்டியினுள் சிதல் அரித்த ஏடுகள்! தாள்கள் பெரும்பாலும் மறைத்துவிட்டன. சில தாள்களே அரைகுறையாகச் செல்லரிக்கப்பட்டுக் கிடந்தன. எனது சில ஆண்டு உழைப்பு வீணாய்ப் போயிற்று. மீண்டும் எழுத வேண்டியதாயிற்று. இயன்றவரையில் சான்றுகளையும் ஆதாரங்களையும் தேடி மறுபடியும் எழுதினேன்.

    ReplyDelete
  5. இனிய வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  6. எனது இனிய வாழ்த்துகள். நூல் கிடைக்கும் விவரத்தை தெரிவிக்கவும்.

    ReplyDelete
  7. தஞ்சையில் சமணம் நூலைச் சிறப்பாக வெளிக்கொணர்ந்த தங்கள் மூவருக்கும் தமிழக சமணர்கள் நன்றிக் கடன்பட்டுள்ளனர், நன்றி அய்யா

    ReplyDelete
  8. வாழ்நாளில் முக்கியமானது இந்த தினம்.

    ReplyDelete
  9. பல செய்திகள் பதிவுகளில் படித்தது இப்போது நூல்வடிவாக ஒரு நூல் வெளியிட ஏற்படும் சங்கடங்கள் அறிவேன் வாழ்த்துகள்

    ReplyDelete
  10. அருமை ஐயா.

    ReplyDelete
  11. அருமை. தங்கள் தொடர் உழைப்புக்கும் புத்தக வெளியீட்டுக்கும் வாழ்த்துக்கள் ஜம்பு சார்.

    ReplyDelete
  12. Mr S Dhananjayan S (thro: dhanjaymansbridge@gmail.com)
    Great sir.

    ReplyDelete