திரு துளசிதரன் வே. தில்லைஅகத்து எழுதியுள்ள காலம் செய்த கோலமடி என்னும் புதினத்தின் அறிமுக விழா சென்னையில் நாளை (17 ஜுன் 2018, எலியட்ஸ் கடற்கரை Schmidt Memorial அருகில், மாலை 5.00 அளவில்) நடைபெறவுள்ள நிலையில் அந்நூலுக்கு நான் வழங்கிய அணிந்துரையைப் பகிர்வதில் மகிழ்கிறேன். நூல் வெளியீட்டு விழா சிறப்பாக அமைய என் மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.
அணிந்துரை
புதினம்
என்ற சொல்லுக்கு புதுமை, நூதனம், செய்தி, அதிசயம் என்ற பொருள்களைத் தருகிறது தமிழ்
அகராதி (Tamil Lexicon, Vol V,
University of Madras, Rpt. 1982). Novel என்ற ஆங்கிலச் சொல்லுக்கு அகலப் புனைகதை,
இத்தாலிய கலைஞர் பொக்காசியோ இயற்றிய டெக்காமெரான் என்ற கதைத்தொடரில் ஒரு கதை, பண்டை
ரோமர் சட்டத் திரட்டில் இணைக்கப்பட்ட புதுக்கட்டளை, புதிய, புதுமை வாய்ந்த, புதுவகையான,
வியப்பளிக்கிற, முன்னம் அறிந்திராத என்ற பொருள்களைத் தருகிறது ஆங்கிலம்-தமிழ்ச் சொற்களஞ்சியம்.
(English-Tamil Dictionary,
University of Madras, Rpt 2010). நாவல் என்ற
சொல்லுக்கு ஒரு கதையை உரைநடையில் விரிவாகக் கூறும் ஓர் இலக்கிய வடிவம் என்றும், புதினம்
என்ற சொல்லுக்கு புதுமை, வேடிக்கை, (புதிய) செய்தி என்றும் பொருள்களைக் கூறுகிறது க்ரியா.
(க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி, மறுபதிப்பு
2009).
தமிழ் இலக்கிய வரலாறு (நறுமலர்ப்பதிப்பகம்,
சென்னை, 1992, 21ஆம் பதிப்பு) என்னும் தன்னுடைய
நூலில் தமிழறிஞர் முனைவர் சி.பாலசுப்பிரமணியன், “தமிழில் வரலாற்றுப் புதினங்களை முதன்
முதல் சிறக்க எழுதிப் பின் வந்தோர்க்கு வழிகாட்டியாய் விளங்கியவர் கல்கியே. இத்துறையின்
தந்தை இவரே. முதலில் இவர் எழுதிய வரலாற்றுப்புதினம் பார்த்திபன் கனவு ஆகும்.,,,,…கல்கியை அடியொற்றிப் பலர் சரித்திர நாவல்களை
எழுதி வருகின்றனர்” என்கிறார். அவர் நாவல் என்ற சொல்லையும், புதினம் என்ற சொல்லையும்
பயன்படுத்துவதை இதன்மூலம் அறியமுடிகிறது.
நாவல்
என்ற சொல்லுக்கு ஈடாக தமிழில் புதினம் என்ற சொல் பயன்படுத்தப்பட்டு வருகிறது. காலம் செய்த கோலமடி என்னும் இந்த புதினத்தின்
ஆசிரியரான திரு துளசிதரன் வே. தில்லைஅகத்து,
புதினம் என்ற சொல்லின் பொருளுக்கேற்றாற்போல மூன்று புதுமைகளை முன்வைக்கின்றார். முதல்
புதுமையாக இப்புதினத்தை எழுதி முடிக்க 32 ஆண்டுகள் காத்திருந்ததாகக் கூறுகிறார். அடுத்த
புதுமையாக இதில் இடம்பெற்றுள்ள முக்கியமான மூன்று கதாபாத்திரங்களின் சிந்தனைகள் மற்றும்
நினைவலைகளின் வழியாகவே எல்லா நிகழ்வுகளும் பயணிக்கின்றன என்கிறார். அவர் கூறுகின்ற
மூன்றாவதான, அதே சமயம் முக்கியமான, புதுமை வாசகரை வியப்புக்குள்ளாக்கும். 22 வயது இளைஞன்
மனதில் ஓடுவதை 22ஆம் வயதிலும், 55 வயது மனிதனின் மனதில் ஓடுவதை 55 வயதிலும் கண்டும், கேட்டும், வாசித்தும் உணர்ந்தும்
எழுத முடிந்திருக்கிறது என்று கூறுகிறார்.
அவள்
ஒரு தொடர்கதை திரைப்படத்தில் இயக்குநர் கே.பாலசந்தர்,
முதல் அத்தியாயம் என்று தொடங்கி, பல அத்தியாயங்களாக கதாநாயகி கவிதாவின் வாழ்க்கையைப்
பிரித்து, ஒவ்வொரு மாற்று சூழலிலும் புதிய அத்தியாயத்தை நம் முன்கொண்டு வந்து இறுதியில்
மீண்டும் முதல் அத்தியாயம் என்று நிறைவு செய்திருப்பார். திரைப்படம் பார்த்தல் என்ற
நிலைக்கு அப்பாற்பட்டு திரைப்பட ரசிகரையும் ஒரு பாத்திரமாக ஆக்கியிருப்பார் பாலசந்தர்.
அதுபோல இப்புதின ஆசிரியர் ஒவ்வொரு கதாபாத்திரத்தின் பார்வையிலும் அத்தியாயம் ஒன்றில்
துரைராஜ், அத்தியாயம் ஒன்றில் கோபால், அத்தியாயம் ஒன்றில் லதா என்று தொடங்கி இறுதி
வரை எவ்வித தொய்வுமின்றி எடுத்துச்சென்றுள்ளார். நம்மை கதாபாத்திரங்களோடு நெருக்கமாகக்
கொணர அவர் மேற்கொண்டுள்ள முயற்சியில் வெற்றி பெற்றுள்ளார். மூன்று கதாபாத்திரங்களை
முப்பரிமாணமாக வாசகர் முன் கொணர்ந்து சற்றே வித்தியாசமான நோக்கில் அவரவர் கண்ணோட்டத்தில்
நிகழ்வுகளைப் பதிந்து, வாழ்வியலின் நடப்புகளை மிகவும் அநாயாசமாக முன்வைத்துள்ளார்.
முப்பரிமாண
நிலையில் அமைந்துள்ள இப்புதினத்தை ஒவ்வொரு கதாபாத்திரத்தின் மூலமாகவும் நோக்கும்படி
நூலாசிரியர் எழுதியுள்ளார். வாசகர்கள் அந்தந்த கதாபாத்திரங்களாக மாறி அவரவர் நோக்கில்
வாசிக்கும்போது கிடைக்கின்ற வேறுபாட்டினைப் எளிமையாகப் புரிந்துகொள்ளும் சூசகத்தையும்
தந்துள்ளார் ஆசிரியர். புதினத்தைப் படிக்கும்போது சில அத்தியாயங்களில் உணர்வுகளின்
வழிமாற்றம் காரணமாக ஏற்படுகின்ற செயல்களைப் பற்றி எழுதும்போது வாசகர் சற்றே நெளியும்
நிலைக்கு தள்ளப்படுவதை உணரும் ஆசிரியர் அதற்கான யதார்த்தத்தையும் முன்வைக்கின்றார்.
அச்சூழலில் அவருடைய நியாயப்படுத்துதலையும் சற்றே நாம் நோக்கி ஏற்க வேண்டியுள்ளது.
முதல் அத்தியாயத்தின்
கதாபாத்திரமான துரைராஜ் தளத்தில் இருந்து நடப்பனவற்றைச் சற்றே பார்ப்போம். நன்றியோடு
நினைத்தல் (“தாத்தா! உங்க ஆசிர்வாதம்! வாழ்க்கையில நான் கொஞ்சம் கொஞ்சமா முன்னேறிக்கிட்டிருக்கேன்.”), நெருக்கத்தை உண்டாக்கல் (இந்தக் கல்லூரி வெறும்
கல்விக்கூடம் மட்டுமல்ல. உங்களில் ஒவ்வொருவருக்கும் இது உங்கள் வீடேதான்.), சூழலை முன் கொணர்தல் (1961லிருந்து ஹாஸ்டலில் தங்கிப்
படித்த இறுதி வருட மாணவர்கள் என்றெழுதிய புகைப்படங்கள் மாட்டப்பட்டிருந்தன.), பயத்தைத்
தெளிவுபடுத்துதல் (“அட அசடே! கனவுதானே! அப்படி எல்லாம் வரும்.”), மாணவர்களின்மீதான
அக்கரை (கேட்டல், பேசுதல், வாசித்தல், எழுதுதல் போன்ற நான்கிலும் மாணவர்களுக்குப் பயிற்சி
தேவை.), காமத்தின் விளைவு (காமத்தால் மனிதனுக்குப் பகுத்தறிவுக் கண் குருடாகி விடுகிறது.),
தனிமையின் துயரம் (கடந்து போன கசந்த நாட்கள் பல வேளைகளில் தனிமையில் என் இதயத்தைத்
துளைக்கத் தவறுவதே இல்லைதான்.), திருந்த வாய்ப்பு (“அப்ப உன்னை நம்பலாம். இனிமேல அந்தத்
தப்பைப் பண்ண மாட்டேல்ல.”), எதிர்பாரா அதிர்ச்சி (வாழ்க்கையே திடீரென பாலைவனமாய் மாறியது
போல் ஓர் உணர்வு. உயிருடன் இருக்கும் போதே இறந்த மனிதனாய் என்ன செய்வதென்று தெரியாமல்
தத்தளித்தேன்.) என்ற வகையில் வெளிப்படுத்தியுள்ளார் ஆசிரியர். இறுதிப்பகுதியில் 30
ஆண்டு கால இடைவெளியினை மிகவும் நுணுக்கமாக இணைத்து அவர் உடன் பழகுகின்ற, அவருடைய எழுத்துக்கு
ஊக்கம் தருகின்ற நண்பர்களையும் அறிமுகப்படுத்தி அவர்களையும் கதாபாத்திரங்களாக ஆக்கியுள்ளார்.
இரண்டாம் அத்தியாயத்தின்
ஒட்டுமொத்த நிகழ்வுகளையும் 33 ஆண்டுகளுக்குப் பின்னர், லதா, கோபாலைப் பார்க்கும்போது
அவள் மனம் படும் பாடு, ஏக்கம், வருத்தம் ஆகியவற்றில் மிகவும் நுணுக்கமாக வெளிப்படுத்தியுள்ள
விதம் பாராட்டத்தக்கது. முரண்பாடான உறவு, துரோக வெளிப்பாடு, மாறுபட்ட உணர்வு, வேறுபட்ட
எண்ணங்கள், தவறான சிந்தனைகள் என்ற அடிப்படையில் ஒரு காலகட்டத்தில் பார்க்க விரும்பாத
முகத்தை இப்போது, மீண்டும் பார்க்கமாட்டோமா என்ற ஏக்கத்திலும் தவிப்பிலும் பார்க்க
ஆசைப்படும் நிலையும் அதற்குத் துணையாக இறைவனை அழைப்பதும் வாசகர்களின் மனதில் ஏற்படுகின்ற
பாரத்தினைக் குறைத்துவிடுகிறது. கட்டாய சூழலில், அபாண்டமான தவறைச் செய்த ஒருவர் 33
ஆண்டு காலத்திற்குப் பின்னர் சந்திப்போது ஏற்படுகின்ற எண்ண அலைகளை அருமையாகப் பதிந்துள்ளார்.
மூன்றாம் அத்தியாயமானது நல்ல கனவுகளோடு வந்த ஒருவன்
தடம் மாறிச் சென்று, கூடா நட்பாலும், தவறான போக்கினாலும் மன்னிக்க முடியாத குற்றத்தைச்
செய்து அதனால் மனம் தவிப்பதைக் கொண்டு அமைந்துள்ளது. அத்தகைய தவறிழைத்தவன் பல வருடங்களுக்குப்
பின் கோயிலில் பொற்றாமரைக் குளத்தருகில் தன்னால் பாதிக்கப்பட்டவளைக் கண்டபோது, படியில்
உட்கார்ந்துபேசவேண்டும் என்ற தன் ஆசையை வெளிப்படுத்தும் போது அவள் அதனை ஏற்பது வாசகருக்கு
ஒரு நிம்மதியைத் தருகிறது. எதிர்ப்பேதும் இல்லாமல்
அவள் அதே படியில் இடைவெளி விட்டு லதாவும் உட்கார்வதை
நன்கு படம்பிடித்துள்ளார். “நித்யா என் பொண்ணுதான்” என்று சொல்லி, பின்னர், “என் பொண்ணு
மட்டுமில்ல!……….. உங்க பொண்ணும்தான்!” என்றபடி கைகளால் முகத்தை மூடித் தேம்பி அழ ஆரம்பிக்கும்போது
புதினத்தின் இறுதிப்பகுதியை நாம் அடைகிறோம். அவ்விடத்தில் அவர்கள் ஒன்று சேரல் என்பதானது
காலத்தின் கோலமாக அமைவதை ஆசிரியர் நன்றாக அமைத்துள்ளார். காலத்தின் கோலமடி என்ற தலைப்பும்,
உள்ளே காணப்படுகின்ற பல செயன்மைகளும் எதிர்மறைப் பண்புகளாகக் காட்டப்பெற்றாலும் சமூகத்தின்
அவலங்களாகவே அவை நமக்குப் புலப்படுகின்றன. இதற்கெல்லாம் அப்பாற்பட்டு அருமையான நடையில்
முக்கோண பாணியில் புதினத்தை அமைத்துள்ளார் ஆசிரியர்.
ஒவ்வொரு பகுப்பிலும்
பல முடிச்சுகள், அதனை அவிழ்க்க எடுக்கப்படும் முயற்சிகள், அதில் கிடைக்கின்ற வெற்றிகள்
என்ற வகையில் புதினத்தை புதுமையாகப் படைத்துள்ளார் ஆசிரியர் திரு துளசிதரன் வே.தில்லைஅகத்து.
கால இடைவெளியையும், வயது வேறுபாட்டு உணர்வினையும், அதற்கேற்றாற்போல சமுதாயப் போக்கையும்
மிகவும் சிரமப்பட்டு ஒன்றிணைத்து அதில் வெற்றியும் பெற்றுள்ளார். ஒரு முறை படித்துவிட்டு இல்ல நூலகத்தில் பாதுகாப்பாகவும்
அழகாகவும் வைக்கப்படும் புதினம் என்பதற்கு மாறாக இப்புதினம் அமைந்துள்ளதே இதன் சிறப்பாகும்.
மாறுபட்ட நிலையில் தொடர்ந்து அவ்வப்போது வாசிக்கத் தூண்டும் வகையில் எழுதியுள்ளார்
ஆசிரியர். ஒவ்வொரு வாசிப்பின்போதும் வாசகனின் மன நிலையில் முற்றிலும் மாறுபட்ட எண்ணங்கள்
வெளிப்படும் அளவிற்கு நிகழ்வுகள் சித்தரிக்கப்பட்டுள்ளன. நூலாசிரியரின் வித்தியாசமான
முயற்சியைப் பாராட்டுகிறேன். அவர் மென்மேலும் பல நூல்களைப் படைக்க மனம் நிறைந்த வாழ்த்துகளைத்
தெரிவித்துக்கொள்கிறேன். பா.ஜம்புலிங்கம்
நூல் வெளியீட்டு விழா சிறப்பாக அமைய என் மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.
நூல் வெளியீட்டு விழா சிறப்பாக அமைய என் மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.
நூல் : காலம் செய்த கோலமடி
ஆசிரியர் : துளசிதரன் வே. தில்லையகத்து (94475 35880)
பதிப்பகம் : ஸ்ரீ பாலகங்கை பப்ளிகேஷன்ஸ், 32/1, கங்கையம்மன் கோயில் தெரு,
வட பழனி, சென்னை 600 026, (98843 34821)
முதல் பதிப்பு : மே 2018
விலை : ரூ.200
நூலாசிரியரின் வலைப்பூ : Thillaiakathu chronicles
19 டிசம்பர் 2019இல் மேம்படுத்தப்பட்டது.
நூலாசிரியரின் வலைப்பூ : Thillaiakathu chronicles
நூல் அறிமுக விழாவில் கலந்துகொண்டதைப் பற்றி
என் மகன் 17 ஜுன் 2018 அன்று தன் முகநூல் பக்கத்தில் எழுதிய பதிவு
நாளைக்கா புத்தக வெளியீட்டு விழா ! மனமார்ந்த வாழ்த்துக்கள் துளசி அண்ணா
ReplyDeleteஅழகிய அணிந்துரை முனைவர் ஐயா .புதினம் ,நாவல் விளக்கம் அருமை
ReplyDeleteஅணிந்துரை நல்லா இருக்கு. இன்று புத்தக வெளியீடு சிறப்பாக நடக்க வாழ்த்துகள்.
ReplyDeleteமுனைவர் அவர்களின் அணிந்துரை அருமை.
ReplyDeleteதில்லைஅகத்தாரின் புத்தக வெளியீடு வெற்றிகரமாய் நிகழ்ந்திட எமது மனம் நிறைந்த வாழ்த்துகள்.
சிறப்பான அணிந்துரை.
ReplyDeleteபுத்தக வெளியீடு விழா சிறப்புற மனம் நிறைந்த வாழ்த்துகள்.
வணக்கம் சகோதரரே
ReplyDeleteநல்ல சிறப்பான அணிந்துரை. மிக அழகாக எழுதி இருக்கிறீர்கள்.. அருமையாக உள்ளது.
சகோதரர் துளசிதரன் அவர்களின் புத்தக வெளியீட்டு விழா சிறப்புடன் நடந்திட மனம் நிறைந்த நல்வாழ்த்துக்கள்.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வாழ்த்துகள்
ReplyDeleteவெளியீட்டு விழாவில் நானும் கலந்துகொள்ளக்கூடும் என்று தோன்றுகிறது. அதனாலென்ன, விழா நன்கு நடந்தேற இப்போதே வாழ்த்திவிட்டால் அதில் தவறில்லையே! துளசிதரன் இன்னும் பல நூல்கள் எழுதவேண்டும் என்று வாழ்த்துவோமாக!
ReplyDelete-இராய செல்லப்பா சென்னை
புத்தக அணிந்துரை நன்றாக இருக்கிறது சார்.
ReplyDeleteசகோதரர் துளசிதரன் அவர்களின் புத்தக வெளியீட்டுவிழாவிற்கு வாழ்த்துக்கள்.
விழா சிறப்புற மனம் நிறைந்த வாழ்த்துகள்
ReplyDeleteவாழ்த்துக்கள்.
ReplyDeleteசிறப்பான அணிந்துரை. இந்நேரம் புத்தக வெளியீட்டு விழா இனிதே நிறைவடைந்திருக்கும்.
ReplyDeleteNovel - நாவல் என்பதை விட
ReplyDeleteபுதினம் அல்லது தொடர்கதை என்பதே சிறந்தது.
நூலாசிரியருக்குப் பாராட்டுகள்!
நண்பருக்கு வாழ்த்துகள்
ReplyDeleteதில்லையகத்து துளசிதரனுக்கு நாடகங்கள் எழுதி இயக்கிய அனுபவம் உண்டு புதினமெழுதுவதிலும் வெற்றி பெற்றிருக்கிறார் என்றே தோன்றுகிறது வாழ்த்துகள்
ReplyDeleteஇன்முகம் காட்டும் தில்லை அகத்தினுள்ளே நுழைந்தால் அல்லவோ தெரிகிறது அவரின் பன்முகங்கள்.பாராட்டுக்கள்.
ReplyDeleteஅழகான அணிந்துரை.வாழ்த்துகள்.
ReplyDeleteஅணிந்துரை அழகு . வெளியீடு வெகு அழகு. தந்தையர் தினத்தில் மகனைக் கௌரவித்த கீதா , துளசிக்கு வந்தனங்கள். :)
ReplyDelete33 ஆண்டுகள் கழித்து லதாவும், கோபாலும் என்ன பேசியிருப்பார்கள். நாவல் சற்று ஆழமானதாக இருக்கும் போல் தோன்றுகிறது. படிக்கும் ஆவல் தூண்டுகிறது. நாவலாசிரியருக்கு வாழ்த்துக்கள்.
ReplyDeleteமிகச் சிறந்த புத்தகத்திற்கு மிகச்சிறந்த விரிவான அற்புதமான விமர்சனம்.சுருக்கமாக என்றாலும் புலியை நினைக்க வைக்கும்படியாக அற்புதமான நிகழ்வு குறித்த பதிவைத்தந்த புலிக்குட்டிக்கு நல்வாழ்த்துக்கள்
ReplyDeleteமிக்க நன்றி ஜம்புலிங்கம் ஐயா இங்கு வெளியிட்டுச் சிறப்பித்தமைக்கு.
ReplyDeleteகருத்திட்ட நண்பர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் அனைவரது அன்பும் என்னை மெய்சிலிர்க்க வைக்கிறது.
ஐயா அவர்கள் தன் மகனை அனுப்பி அறிமுகத்தைச் சிறப்பித்தமைக்கும் மிக்க நன்றி. எத்தனை ஊக்கம் எனக்கு. மனம் மகிழ்ச்சியில் திளைக்கிறது. மிக்க நன்றி மீண்டும் ஐயாவுக்கு அனைவருக்கும்.
துளசிதரன்