13 October 2018

மனதில் நிற்கும் நவராத்திரி

1960களின் இறுதியும் 1970களும் என்னுள் உண்டாக்கிய தாக்கங்களில் ஒன்று நவராத்திரி. வீட்டுக்கொலு, தெருக்கொலு, கோயில் கொலு என்ற வகைகளில் நவராத்திரி என்றாலே எங்களுக்குக் கொண்டாட்டம்தான். 

சம்பிரதி வைத்தியநாதய்யர் அக்கிரகாரமாக இருந்த எங்கள் தெருவின் பெயர் பின்னர் சம்பிரதி வைத்தியநாதய்யர் தெரு என்று மாறி பின்னர் கே.ஜி.கே.தெரு என்று ஆனது. வீட்டில் கொலுவைப்பதென்பதே தனி ரசனைதான். கொலுவிற்கான ஏற்பாடும் தொடர்ந்து நண்பர்களையும், அண்டை வீட்டார்களையும் அழைப்பதும், உபசரிப்பதும் சுண்டல் கொடுப்பதும் தனி சுகம். அவ்வாறே எங்கள் தெருவிலும் அருகில் உள்ள தெருக்களிலும் கொலு பார்க்கச் செல்வதும், கும்பேஸ்வரர் கோயிலுக்கும் பிற கோயில்களுக்கும் செல்வதும் தனி அனுபவம். 

இளமைக்காலத்தில் எங்கள் தெருவிலுள்ள வீடுகளுக்கும், அருகிலுள்ள வீடுகளுக்கும் கொலு பார்க்கச் சென்ற அனுபவம் என்றும் மறக்கமுடியாதது. 10 அக்டோபர் 2018 அன்று கும்பேஸ்வரர் கோயிலுக்குக் கொலு பார்க்கச் சென்றபோது கோயிலில் நவராத்திரிக்காக அதிகமான கொலுக்கடைகள் வைத்திருந்தார்கள். அதைப் பார்த்ததும் எங்கள் தெருவில் நாங்கள் கொலு பார்க்கச் சென்ற நினைவுகள் மனதிற்கு வந்தன.  முதலில் அந்நாளைய அனுபவத்தை நினைவுகூர்ந்துவிட்டு, பின்னர் இந்நாள் நிகழ்வுக்கு வருவோம். 









நாங்கள் படித்த கும்பேஸ்வரர் திருமஞ்சன வீதி பள்ளியில் நவராத்திரியை அனுசரித்தே விடுமுறை விடுவார்கள். பள்ளி நாள்களில் பிற கோயில் விழாக்களைப் போல நவராத்திரிக்காகக் காத்திருப்போம். எங்கள் தெருவில் பல வீடுகளில் கொலு வைக்கப்பட்டிருந்தாலும் எங்கள் வீடு உட்பட சில வீடுகளில்தான்  பழைய அழகிய பெரிய கொலு பொம்மைகள் இருக்கும். பார்த்தசாரதி, அலமேலு, சாஸ்திரியார், ஒன்பத்துவேலி, சக்கரபாணி, சுந்தர், சோமு, ஆறுமுகம், மணி, முகுந்தன் ஆகியோருடைய வீடுகள் உள்ளிட்ட பல வீடுகளில் கொலுக்களைப் பார்க்கச் செல்வோம். நவராத்திரியின்போது கொலு கொலு சுண்டல் என்று சத்தமிட்டுக்கொண்டே ஒவ்வொரு வீடாகச் செல்வோம். சிலருடைய வீடுகளில் ஆடம்பரமாகவும், சில வீடுகளில் மின் விளக்குகள் போட்டு பூங்காக்கள் அமைத்தும், சில வீடுகளில் எளிமையாகவும் கொலு வைத்திருப்பர். கொடுக்கும் சுண்டலையோ, பொறியையோ போட்டுக்கொள்ள கையில் சிறு சிறு டப்பாக்களையோ,   தாள்களையோ வைத்திருப்போம். 

கொலு பார்ப்பதைவிட போட்டி போட்டுக்கொண்டு சுண்டலை வாங்குவதிலேயே எங்கள் எண்ணம் இருக்கும். சிலருடைய வீட்டில் அன்பாகத் தருவார்கள். சிலர் விரட்டுவதுபோலத் தருவார்கள். ஒரே வீட்டில் இரு முறை சுண்டல் வாங்கியதும் உண்டு. எங்களுக்கு அனைத்துமே விளையாட்டாகத்தான் இருக்கும். ஒரு வீட்டிலிருந்து அடுத்த வீட்டு கொலுவிற்குச் செல்வதற்குள் அந்த சுண்டலைத் தின்றுவிட்டு அதன் குறைநிறைகளை பேசிக்கொண்டே செல்வோம். சுண்டல் நன்றாக இல்லாவிட்டாலோ, குறைவாகத் தந்தாலோ திட்டிவிட்டு வருவதும் உண்டு. ஒரு வீட்டில் சுண்டல் இல்லை என்று கூறிவிட்டால் அடுத்து வருவோரிடம் கூறிவிடுவோம். அவர்கள் அனாவசியமாக அலையக்கூடாது அல்லவா?

சம்பிரதி வைத்தியநாதய்யர் அக்கிரகாரத்தில் தொடங்கும் எங்கள் பயணம் சிங்காரம் செட்டித்தெரு, மேட்டுத்தெரு, மேல மேட்டுத்தெரு, வியாசராவ் அக்கிரகாரம், ரெட்டியார் குளக்கரைகள், சோலையப்பன் தெரு, பேட்டை, திருமஞ்சன வீதி என்ற வகையில் தொடரும். ஒரே நாள்களில் அனைத்து தெருக்களுக்கும் செல்ல முடியாது. நேரத்திற்குத் தகுந்தாற்போல எங்களது திட்டத்தை அமைத்துக்கொள்வோம். சில நாள்களில் குழுக்களாகப் பிரிந்துவிடுவதும் உண்டு. பள்ளி நாள்களில் எனக்குத் தெரிந்து உறவினர் என்ற வகையில் வேறு யாருடைய வீட்டிலும் கொலு வைத்திருக்கவில்லை. ஆனால் பல நண்பர்களின் வீட்டில் பார்த்துள்ளேன். எங்களுடைய கொலு கொலு சுண்டல் பயணம் என்பதானது பக்தி என்பதற்கு அப்பாற்பட்டு,  நட்பு, மகிழ்ச்சி, கொண்டாட்டம் என்ற வகையிலேயே இருந்தது. கொலு விடுமுறை முடிந்து மறுநாள் பள்ளிக்குச் செல்லவேண்டும் என்று நினைக்கும்போது வயிற்றில் புளியைக் கரைப்பது போல இருக்கும்.  பள்ளி திறந்தபின் ஓரிரு நாட்கள் கொலுவைப் பற்றிய பேச்சாகவே இருக்கும். பெரிய வாத்தியாரைக் கண்டதும் கொலு பற்றிய எண்ணங்கள் ஓடி விடும், படிப்பு மட்டுமே நினைவிற்கு வந்துவிடும்.  

நாளாக ஆக,  வீட்டில் வைக்கப்படும் கொலுவிற்கே முக்கியத்துவம் கொடுத்தோம். இருந்தாலும் கோயிலுக்குச் செல்வது தொடர்ந்தது. குடும்ப சூழலால் தஞ்சைக்கு வந்தபின்னரும் நவராத்திரியின்போது கோயில்களுக்குச் செல்வது இன்னும் தொடர்கிறது. வீட்டுக்கொலுவும், தெருக்கொலுவும் இன்னும் மனதில் நினைவுகளாக உள்ளன. 


கும்பகோணம் கும்பேஸ்வரர் கோயில்
கும்பேஸ்வரர் கோயிலில் இந்த ஆண்டு புதிய கொலு பொம்மைகளைக் கூடுதலாகக் காட்சிப்படுத்தியிருந்ததைக் காணமுடிந்தது. முதல் நாள் சிறப்பு அலங்காரமாக அம்மன் தவக்கோலத்தில் இருந்தார். 







முன் மண்டபத்தில் வலது புறத்தில் விநாயகர், பூதகணங்களுடன் அம்மையப்பன், வள்ளி தெய்வானையுடன் முருகன், லிங்கத்திருமேனிக்கு முருகன் விநாயகர் பூஜை, தேவியர், அஷ்டலட்சுமி ஆகியோர் உள்ளனர். 





இடது புறத்தில் சிம்மவாஹினி, சரஸ்வதி, லட்சுமி, அம்மையப்பன், அலமேலு, தசாவதாரம் ஆகியோர் உள்ளனர்.





வழக்கமாக உள்ள இந்திர சபை எப்போதும் இருக்கும் இடத்திலேயே காணப்பட்டது. முந்தைய ஆண்டுகளில் காட்சிப்படுத்தப்படும் பொம்மைகளை புதிதாக நந்திக்கு வலப்புறத்திலும், நவக்கிரக சன்னதி அருகிலும் வைத்துள்ளனர்.
 





ஒவ்வோராண்டும் சன்னதியில் இரு புறமும் நவராத்திரிக்காக தற்காலிகமாக வைக்கப்படுகின்ற கடைகளைக் காணமுடிவில்லை. பெரிய அளவிலான பொம்மைகளை அதிகமாகக் காணமுடியவில்லை. நடுத்தர அளவிலும், சிறிய அளவிலும் உள்ள பொம்மைகளே அதிகமாக உள்ளன. 

கொலு பார்க்க வருகின்ற கூட்டம் ஒவ்வோராண்டும் அதிகமாகிக் கொண்டே வருவதைக் காணமுடிந்தது. கொலு பார்த்தபின் கும்பேஸ்வரரையும், மங்களாம்பிகையையும் தரிசித்துவிட்டு மன நிறைவோடு திரும்பினேன்.

 
 
நன்றி :
புகைப்படங்கள் கும்பேஸ்வரர் கும்பேஸ்வரர் கோயில் கொலுக்கடைகளில் கடையினரின் அனுமதியோடு எடுக்கப்பட்டன. அனுமதித்த அவர்களுக்கு நன்றி.

நவராத்திரி தொடர்பான முந்தைய பதிவு :  
கும்பேஸ்வரர் கோயில் நவராத்திரி 17.10.2015

17 அக்டோபர் 2018 அன்று மேம்படுத்தப்பட்டது.

15 comments:

  1. சிறுவயதில் கரந்தையில் கொலு பார்த்த நினைவுகள் மனதில் வலம் வருகின்றன.
    கரந்தை கந்தப்ப செட்டியார் சத்திரத்தில், ஆளுயர பொம்மைகளை வைத்து கொலுவைத்திருப்பார்கள்.
    இன்று மண்டபமே பாழடைந்து கிடைக்கிறது
    நன்றி ஐயா

    ReplyDelete
  2. சுவாரஸ்யமான நினைவுகள். அழகிய படங்கள்.

    ReplyDelete
  3. இளமையில் நானும் எனது சகோதரியும் உங்களைப் போலவே 'சுண்டல் விஜயம்' செய்தது உண்டு. கடைசியாக ஒரு வீட்டில் கிடைத்த சுண்டல் மிகுந்த காரமாக இருந்ததும் அதைத் தணிக்க உடனடியாகத் தண்ணீர் கிடைக்காமல் தவித்ததும் இப்போதும் நினைவில் உள்ளன. - இராய செல்லப்பா சென்னை

    ReplyDelete
  4. பொருள் பொதிந்த நடை இனிது.தங்கள் உணர்வுகளின் உலா உன்னதம்.மலரும் நினைவுகளால் கடந்த காலத்தை கண்முன்னே கொண்டுவந்தமை கனகச்சிதம். நன்றி.

    ReplyDelete
  5. சிறு வயது நினைவோட்டங்களை சொல்லிச் சென்ற விதம் ரசிக்க வைத்தது.

    ReplyDelete
  6. கும்பேஸ்வரர் கோயில் கொலு மிக நன்றாஅக இருக்கும் இரண்டு முரை சென்று இருக்கிறேன் என்று இப்போதுதான் உங்களுக்கு என் தளத்தில் பதில் அளித்தேன்.

    உங்கள் தளத்தில் கண்டுவிட்டேன்.
    மலரும் நினைவுகள் மிகவும் அருமை.
    படங்கள் எல்லாம் மிக அருமை.

    ReplyDelete
  7. கொலு நினைவலைகள் கிளப்பி விட்டது. தமிழ்நாட்டில் கும்பகோணம், தஞ்சாவூர் போன்ற ஊர்களில் இன்னும் ஆர்வமாக கொலு வைக்கிறார்களா. ஆசிரியர் கரந்தை ஜெயகுமார் அவர்கள் குறிப்பிட்டது போல கரந்தை கந்தப்ப செட்டியார் சத்திரம் கொலு மிகவும் விஷேசம். மும்பையில் நான் வசிக்கும் மாதுங்காவில் கொலு களைக்கட்டுகிறது வழக்கம் போல்.

    ReplyDelete
  8. கண் கொள்ளாக் காட்சி... அழகிய கொலுக்கள்.. படங்கள்.

    ReplyDelete
  9. படங்களுடன் கூடிய ஒரு சுவாரஸ்யமான கனவு. அது ஒரு கனாக் காலம். மீண்டும் வருமோ?

    ReplyDelete
  10. ஆனந்த விகடனில் திரு .மெரினா அவர்கள் எழுதிய "சின்ன வயதினிலே " வை போல் அழகாய் நினைவு கூர்ந்தீர்கள் .

    ReplyDelete
  11. அருமை ஐயா - தாயு.செந்தில்குமார், நாகப்பட்டினம்.

    ReplyDelete
  12. தமிழ் நாட்டைப் போல் கர்நாடகத்தில் கொலு வைப்பது அத்தனைமுக்கியத்துவம்தரப்படுவது இல்லை இருந்தாலும் ஹொம்பே ஹப்பா என்று கூறி கொலு வைப்பதாக அறிகிறேன்

    ReplyDelete
  13. பள்ளி நாட்களில் நவராத்திரியை இரசிக்காமல் இருந்திருக்க முடியாது. ஒன்பது நாட்களுக்குக் கொண்டாடப்படும் மிக நீண்ட பண்டிகை. உடன் படிக்கும் நண்பன் நண்பி வீடுகளுக்கு தவறாமல் சென்றுவர எளிதில் அமைந்த வாய்ப்பு. கோவிலுக்குச் செல்லுதலும் இது போன்றதே. தங்களின் கும்பகோணம் தினங்களும் நவராத்திரிக் கொண்டாட்டங்களும் பற்றிய விரிவான செய்திகளை இந்தப் பதிவில் புகைப்படங்களுடன் பகிர்ந்தமைக்கு நன்றி.

    ReplyDelete
  14. அருமையான கொலுக் காட்சி. நன்றி

    ReplyDelete