Showing posts with label கும்பகோணம் நினைவுகள். Show all posts
Showing posts with label கும்பகோணம் நினைவுகள். Show all posts

05 July 2026

பொன்விழா காணும் பாரத் தட்டெழுத்து பயிற்சி நிலையம்

நான் தட்டச்சும், சுருக்கெழுத்தும் பயின்ற கும்பகோணம், பாரத் தட்டெழுத்து பயிற்சி நிலையத்தின் 50ஆவது ஆண்டு பொன்விழா கும்பகோணம், கும்பேஸ்வரர் கோயில் மேல வீதி, பாண்டியகுல நாடார்கள் உறவின்முறை திருமண மண்டபத்தில் இன்று (5.7.2026) நடைபெற்றது.



இந்த இனிய வேளையில் அக்காலத்தில் நான் அங்கு பயின்ற நாள்கள் நினைவிற்கு வருகின்றன. கும்பகோணம், அரசு ஆடவர் கல்லூரியில் புகுமுக வகுப்பு முதல் இளங்கலை பட்டப்படிப்பு வரை படித்துக்கொண்டிருந்த காலத்தில்  (1975-79) முதலில் கும்பகோணம், ரெட்டியார் குளத்தின் கீழ்க்கரையில் இருந்த ஈஸ்வரன் தட்டச்சுப் பயிற்சி நிலையத்தில் தட்டச்சு கற்க ஆரம்பித்தேன்.  பாரத் தட்டெழுத்து பயிற்சி நிலையம் ஆரம்பித்தபின்னர், அதன் ஆரம்ப கால மாணவர்களில் ஒருவனானேன். என்னுடன் ராஜசேகரன், மோகன், மதியழகன், சங்கர், ஐயப்பன், லட்சுமிகாந்தன், தயாளன், நாராயணன், ராஜு, மைனாவதி  உள்ளிட்டோர் தட்டச்சு பயின்றனர். பலருடைய பெயர் நினைவில்லை. அப்போது பயின்ற மோகன் தற்போது சென்னையில் தட்டச்சுப் பயிற்சி நிலையம் நடத்திவருகிறார். 

தமிழ், ஆங்கில தட்டச்சுப் பயிற்சி பெற்ற காலத்தில் பிழை இல்லாமல் நான் தட்டச்சு செய்த பக்கங்கள் அவ்வப்போது அறிவிப்புப் பலகையில் இடம்பெறுவது கண்டு மகிழ்வேன். உடன் பயின்ற பலரின் தட்டச்சுப் பக்கங்களும் அவ்வாறு இடம்பெற்றுள்ளது. ஒரு மணி நேரத்தில் எந்த அளவிற்கு அதிகமாக பக்கங்களைத் தட்டச்சிட முடியுமோ அந்த அளவிற்குத் தட்டச்சு செய்வேன். ரெமிங்டன், ஹால்டா, காட்ரோஜ் ஆகிய  தட்டச்சுப்பொறிகளில் தட்டச்சு பயிற்சி மேற்கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. ஹால்டாவில் தட்டச்சிடும்போது மிகவும் வேகமாக அடித்த உணர்வு ஏற்படும். 




பயிற்சி நிலையம் ஆரம்பிப்பதற்கு முன்னரே ஆசிரியர் திரு கு.பாஸ்கரன் அவர்களும், (ஜூன் 2025இல் பொன்விழா கண்ட, நான் ஆரம்பத்தில் ஹிந்தி கற்ற காந்தியடிகள் நற்பணிக்கழகத்தின் நிறுவனரும், இந்நிகழ்வில் தலைமையுரையாற்றுகின்ற) திரு.பாலுஜி என்று நாங்கள் அழைக்கும் கு.பாலசுப்ரமணியன் அவர்களும் கும்பேஸ்வரர் திருமஞ்சன வீதி ஆரம்பப்பள்ளியில் நான் படித்த காலம் முதலே எனக்கு அறிமுகம்.  எங்களுடைய வீடு சம்பிரதி வைத்தியநாதன் தெருவில் இருந்தது. பெரும்பாலான என் பள்ளி நண்பர்களின்  வீடுகள் கும்பேஸ்வரர் திருமஞ்சன வீதியிலும், பேட்டையிலும் இருந்தன. அவர்களைப் பார்க்கச் சென்ற வகையிலான தொடர்பும் ஒரு நெருக்கத்தினை ஏற்படுத்தியது.  

பயிற்சிக்காலத்தில் தட்டச்சு செய்யும்போதும், தேர்வின்போதும், வாராவாரம் நடத்தப்படும் வகுப்புத்தேர்வின்போதும் ஆசிரியர் எங்களை அக்கறையுட்ன் கவனித்து வழிகாட்டி நடத்துவார். தட்டச்சில் தினசரி காணப்படும் தவறுகளைச் சுட்டிக்காட்டி அவற்றைக் குறைப்பதற்கான ஆலோசனைகளைக் கூறுவார். மாணவர்கள் உரிய நேரத்தில் வர வேண்டும் என்பதிலும் தட்டச்சு செய்யும்போது அதில் முழு கவனமும் செலுத்தவேண்டும் என்பதிலும்  கவனமாக இருப்பார். சுருக்கெழுத்து கற்கும்போது சற்றொப்ப அத்தகைய கவனத்தைச் செலுத்தி எங்களுக்குச் சொல்லிக்கொடுத்தார். பயிற்சியுடன் நாங்கள் கடைபிடித்த ஒழுங்கு தேர்வுகளில் தேர்ச்சி பெற துணைநின்றது. 

கல்லூரிப் படிப்பு முடித்த காலகட்டத்தில் ஆங்கில மற்றும் தமிழ்த் தட்டச்சில் உயர்நிலையிலும்,  ஆங்கிலச்சுருக்கெழுத்தில் கீழ்நிலையிலும்  தேர்ச்சி பெற்றேன். இத்தகுதிகள் எனக்கு உடனே வேலை கிடைக்க உதவியாக இருந்தன. படிப்பை நிறைவு செய்த சில வாரங்களில் தட்டச்சராக சென்னையில் பணியில் சேர்ந்தேன். தொடர்ந்து தஞ்சாவூரிலும், கோயம்புத்தூரிலும் பணியாற்றியபின், தஞ்சாவூர், தமிழ்ப் பல்கலைக்கழகத்தில்  தட்டச்சுச்சுருக்கெழுத்தராகப் பணியில் சேர்ந்து, 2017இல் பணி நிறைவு பெற்றேன். இடைக்காலத்தில், 2004இல் குடும்பச்சூழல் காரணமாகத் தஞ்சாவூருக்குக் குடிபெயர்ந்தேன்.  

கும்பகோணம் செல்லும்போது மரியாதைநிமித்தம் ஆசிரியரைச் சந்தித்துவிட்டு வருவேன். ஒரு மாணவனாகச் சேர்ந்த காலகட்டத்தில் இருந்த அதே அன்பு, பரிவு ஆகிய குணங்களை இப்போதும் அவரிடம் காணலாம். என்னைப் போல பல மாணவர்களுக்கு மிகச் சிறந்த வழிகாட்டியாக அவர் இருந்துள்ளார்.  ஒரு முறை நான் சென்றபோது, பல ஆண்டுகளுக்கு முன்னர் தட்டச்சுப் பயிற்சி நடைபெறும் சூழலையே கண்டேன். அப்போதிருந்தவாறே மாணவர்களை உரியமுறையில் கண்காணித்தல், அவர்கள் தட்டச்சு செய்த தாள்களைக் கவனமாகத் திருத்துதல், பிழைகளை உரிய முறையில் சுட்டிக்காட்டல், உரிய ஆலோசனைகளைக் கூறுதல் என்றவாறு அவர் தன் பணிகளை மேற்கொண்டிருந்தார். ஆண்டுகள் பல ஆனபோதிலும் அவருடைய செயல்பாட்டில் மாற்றமில்லை என்பதை உணர்ந்தேன். இன்னும் எங்களுடைய சந்திப்பு தொடர்கிறது. 


அவரும், குடும்பத்தாரும் எல்லா நலனும் பெற்று நலமுடன் வாழவும், அவருடைய சேவை தொடரவும், பொன்விழா காணும் பாரத் தட்டெழுத்து பயிற்சி நிலையம் மென்மேலும் வளரவும் எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.  

50 ஆண்டுகளாக நமக்கு அவர் வழங்கிய வழிகாட்டுதல், ஆதரவு, அர்ப்பணிப்புகளை நினைவுகூறும் வகையில் முன்னாள் மாணவர்களுடன் இணைந்து அவரை கௌரவிப்பதில் ஆரம்ப கால மாணவன் என்பதில் பெருமையடைகிறேன்.  


நாங்கள் பயின்ற காலத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் இருக்கிறதா என்று ஆசிரியர் திரு கு.பாஸ்கரன் அவர்களிடம் கேட்டபோது உடன் இப்படத்தையும், மேலும் சில படங்களையும் திரு குருகிரி மூலமாக அனுப்பிவைத்தார். படத்தில் அமர்ந்திருப்போரில் நான் (இடமிருந்து) நான்காவதாக உள்ளேன். இப்படம் அக்கால நினைவுகளை மீட்டுக்கொடுத்தது. 

-------------------------------------------------------------------------------------------
விழா நிகழ்வு
-------------------------------------------------------------------------------------------

மாலை நடைபெற்ற நிகழ்வில் காந்தியடிகள் நற்பணிக் கழகத்தின் அமைப்பாளர் திரு கு. பாலசுப்ரமணியன் தலைமை தாங்கினார். முனைவர் பஞ்சநதம், முனைவர் லட்சுமி காந்தன், திரு ராஜாராமன், திருமதி ராஜேஸ்வரி, திரு சாகுல் ஹமீது, திரு. மணிவண்ணன் உள்ளிட்ட முன்னாள் மாணவர்களுடன் நானும் வாழ்த்துரை நல்கும் அரிய வாய்ப்பினைப் பெற்றேன். பாரத் தட்டெழுத்து பயிற்சி நிலையத்தின் நிறுவனர் திரு கு. பாஸ்கரன் ஏற்புரை வழங்கினார். திருமதி. பிரபாவதி நன்றியுரை ஆற்றினார். 





ஆரம்ப காலத்தில் பயிற்சி நிலையத்தினை நால்வராக இணைந்து பணியாற்றத் தொடங்கி இன்றுவரை நட்பிலிருக்கும் நண்பர்களின் அக்காலப் புகைப்படத்தைக் கண்டு வியந்த நாங்கள் இந்நாளில் அவர்களை நேரில் கண்டு, அவர்கள் புகைப்படம் எடுக்கும்போது மகிழ்ந்தோம். 50 ஆண்டு கால நட்பின் இலக்கணம் எங்களை நெகிழ வைத்தது. 








விழா நிகழ்வு மிகவும் சிறப்பாக இருந்தது. முதல் பிரிவில் 1976இல் தட்டச்சில் சேர்ந்து தொடர்ந்து சுருக்கெழுத்தும் பயின்ற நிலையில் இதில் கலந்துகொண்டதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி. என்னுடைய உரையில் கூறியதைச் சுருக்கமாகப் பகிர்கிறேன்.

"இவ்வாறான ஒரு நிகழ்வினை ஏற்பாடு செய்த சக முன்னாள் மாணவர்கள் அனைவருக்கும் முதலில் என்னுடைய மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். அவர்கள் மேற்கொண்ட பெரும் முயற்சி மிகவும் பாராட்டத்தது. கும்பகோணத்தில் எங்கள் தாத்தா, கும்பேஸ்வரர் திருமஞ்சன வீதி பள்ளியின் பெரிய வாத்தியார், சிவகுருநாதன் செந்தமிழ் நூலகத்தில் பெரியவர், ஆகியவர்களைத் தொடர்ந்து திரு பாலுஜி, ஆசிரியர் திரு பாஸ்கரன் மூலமாகப் பண்பினையும், நன்னடத்தையும் கற்றுக்கொண்டேன்.

இங்கு படித்து நான் பல நிறுவனங்களில் தட்டச்சாளராகவும், சுருக்கெழுத்தாளராகவும் பணிக்கு அமர்த்தப்படும் முன்பாக நேர்முகத் தேர்வில் எதிர்கொண்ட சூழலில் பாரத் தட்டெழுத்துப் பயிற்சி நிலையத்தில் ஆரம்ப காலத்தில் கற்ற கல்வி துணை நின்றது. அது எனக்குப் பெருமையே.

எந்தவொரு நிகழ்விற்கும் முன்கூட்டியே வருவது மிகவும் முக்கியமானது. அதனையும் இங்குதான் கற்றேன். பயிற்சிக்காலத்தில் பயிற்சியுடன் நான் கற்ற ஒழுங்கு, நேரந்தவறாமை உள்ளிட்ட பழக்கங்கள் என்னை உயர்த்தின. பணியில் சேர்ந்த பின் தொடர்ந்து மேற்கொண்ட தட்டச்சுப் பணியும் அதன் மேலான ஈடுபாடும் என்னை அடுத்த நிலைக்குக் கொண்டு சென்றது.

நான் 50 ஆண்டு காலமாக படித்து வரும் 'தி இந்து' நாளிதழ் வாசிப்பு மொழிபெயர்ப்பு ஆர்வத்தைத் தூண்டியதன் காரணமாக அகராதிகளின் துணையின்றி நேரடியாக மொழிபெயர்ப்பினை செய்யும் ஓர் அரிய கலையைக் கற்றேன். இளந்தலைமுறையினர் முற்றிலும் கூகுளை நம்பியிராமல் இவ்வாறு பழக்கத்தினை மேற்கொண்டால் நினைவாற்றலும், மொழியறிவும் மேலும் வளரும்.

நேரத்தின் அருமை கருதி உரையை நிறைவு செய்கிறேன். என் சார்பாகவும், சக மாணவர்கள் சார்பாகவும் நிறுவனத்திற்கும் நிறுவனருக்கும் மனம் நிறைந்த வாழ்த்துகள். உரையாற்ற வாய்ப்பு தந்த ஏற்பட்டாளர்களுக்கு என் மனமார்ந்த நன்றி."

விழா நிகழ்வினை டியூப்பில் காண: Bharath 50 Celebration
-------------------------------------------------------------------------------------------
நன்றி:
அந்நாளைய குரூப் புகைப்படங்கள்: பாரத் தட்டெழுத்து பயிற்சி நிலையம் 
விழா புகைப்படங்கள்: முன்னாள் மாணவ-மாணவிகள்
யுட்யூப் பதிவு: காவியம் டிஜிட்டல் ஸ்டுடியோ
-------------------------------------------------------------------------------------------
16.7.2026இல் மேம்படுத்தப்பட்டது.

26 October 2025

தேனுகா: 11ஆம் ஆண்டு நினைவு

தேனுகா அவர்களின் 11ஆவது ஆண்டு நினைவு நாள் நேற்று (25.10.2025) மாலை கும்பகோணம், காந்தியடிகள் நற்பணிக்கழகத்தில் கழக அமைப்பாளர் திரு பாலுஜி என்றழைக்கப்படும் பாலசுப்பிரமணியம் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

கவிஞர்கள், எழுத்தாளர்கள், நண்பர்கள், காந்தியடிகள் நற்பணிக்கழக ஆசிரியர்கள், மாணவர்கள், உள்ளூர்ப்பெருமக்கள்  கலந்துகொண்டு அவருடைய பெருந்தன்மை, கலை ரசனை, விட்டுக்கொடுத்துப்பேசும் தன்மை, மாற்றுக்கருத்துக்கொண்டோரிடமும் இன்முகத்துடன் பழகும் பாங்கு, அவருடைய நட்பினால் தாம் பெற்ற அனுபவம் என்ற பல நிலைகளில் தம் கருத்துகளைப் பகிர்ந்துகொண்டனர். அவருடனான என்னுடைய நட்பினைப் பற்றிப் பேசும் நல்வாய்ப்பினைப் பெற்றேன். 



ஒளிப்படம் : (இ-வ) பா.ஜம்புலிங்கம், பாலுஜி, மோகன்



"தேனுகா என்ற பெயரைக் கேட்டாலே அவருடைய சாதனைகள் நினைவிற்கு வரும். அவரைப் பற்றி சில அனுபவங்களைப் பகிர்வதில்  மகிழ்கிறேன். அவருடைய கலைத்துறை சார்ந்த செயல்பாடு, என்னுடைய ஆய்வு தொடர்பின் காரணமாக ஏற்பட்ட பிணைப்பு என்ற வகையில் அவருடைய நட்பு அமைந்தது. அவ்வப்போது நாளிதழ்களில் அவருடைய செய்தியையும், புகைப்படங்களையும் பார்த்தபோதுதான் அவரைப் பற்றி அறிந்தேன். அதனடிப்படையில் அவரை முதன்முதலாக அவர் பணியாற்றிய, கும்பகோணம் பொற்றாமரைக்களக்கரையில், மூர்த்திக்கலையரங்கை அடுத்திருந்த பாரத மாநில வங்கி அலுவலகத்தில் சந்தித்தேன். பரஸ்பர அறிமுகத்திற்குப் பின் என் பௌத்த ஆய்வினைப் பாராட்டினார். திருவலஞ்சுழியிலும், புகழ்பெற்ற களம்கரி ஓவியக்கலைஞர் இருந்த சிக்கல்நாயக்கன்பேட்டை (நான் பேசும்போது இவ்விடத்தில் பெயரை மறந்துவிட்டேன். பின்னர் திரு ஆடலரசன் அவ்வூரின் பெயரை நினைவுபடுத்தினார்) அருகிலும் புத்தர் சிலைகள் இருந்ததாகத் தான் கேள்விப்பட்டதாகக் கூறினார். 

அவர் கூறிய திருவலஞ்சுழி சிலை சென்னையிலுள்ள அரசு அருங்காட்சியகத்தில் உள்ளதை, 1940இல் மயிலை சீனி வேங்கடசாமி பௌத்தமும் தமிழும் நூலில் குறிப்பிட்டிருந்ததை அவரிடம் கூறினேன். பிறிதொரு பயணத்தில் அவர் சொன்ன மற்றொரு சிலையைப் பார்க்கச் சிக்கல்நாயக்கன்பேட்டைக்குச் சென்றபோது பல வருடங்களுக்கு முன் அம்மணசாமி என்ற ஒரு சிலை இருந்ததாகவும், தற்போது இல்லை என்றும் கூறினர். பின்னர் அங்கு ஓவியக்கலைஞரைச் சந்தித்துவிட்டு அங்கிருந்து திரும்பினேன். 

தமிழ் விக்கிப்பீடியாவில் தஞ்சாவூர் மாவட்டக் கோயில்கள், தஞ்சாவூர் மாவட்ட முக்கிய நபர்கள், நான் படித்த பள்ளி, கல்லூரி, நூலகம் என்ற நிலைகளில் பதிவுகளைப் பதிய ஆரம்பித்தபோது முக்கிய நபர்கள் என்ற வகையில் முதலில் மனதிற்கு வந்தவர் தேனுகா. அவரிடம் சில விவரங்களைப் பெற்று விக்கிப்பீடியாவில் அவரைப் பற்றிய பதிவினை செப்டம்பர் 2014இல் தொடங்கினேன்.  ஒவ்வொன்றாகப் பதிந்துவரும்போது அவருடைய புகைப்படத்தையும் பதிவில் இணைத்தேன். சக விக்கிப்பீடியர்கள் புகைப்படத்தைப் பதியும்போது சில நெறிமுறைகளைக் கடைபிடிக்கவேண்டும் என்று கூறி அவரிடம் எழுத்து அனுமதி பெற்றுப் பதிவில் இணைத்தால் காப்புரிமை சிக்கல் எழாது என்று கூறவே அவரிடம் அதை அனுப்பும்படிக் கேட்டேன். 

வாய்ப்பிருப்பின் நேராகவே கும்பகோணம் வந்து அவரைப் புகைப்படம் எடுப்பதாகக் கூறினேன்.  மறுநாள் அனுப்புவதாகக் கூறினார். நான் புகைப்படத்தை எதிர்ப்பார்த்த வேளையில் அவர் இயற்கையெய்திய செய்தி இடியாய் வந்தது. கும்பகோணத்தில் அவருடைய வீட்டிற்குச் சென்று இறுதி அஞ்சலி செலுத்திவிட்டுத் திரும்பினேன். அவர் பற்றிய பக்கத்தை ஆரம்பித்து அவருடைய மரணச்செய்தியைப் பதிவில் சேர்க்கவேண்டிய சூழல் எனக்கு ஆழ்ந்த வேதனையைத் தந்தது. நான் பதிய எண்ணி அவருடைய பக்கத்தைத் திறந்தபோது சக விக்கிப்பீடியர், கலை இலக்கிய விமர்சகர் தேனுகா காலமானார் என்ற தலைப்பில் 25.10.2014இல் தினமணி நாளிதழில் வெளியான செய்தியை மேற்கோள் காட்டி அவர் இயற்கையெய்திய செய்தியை இணைத்திருந்தார். அவருடைய புகைப்படமும் பிறிதொரு விதியின் அடிப்படையில் சேர்க்கப்பட்டிருந்ததைக் கண்டேன்.

தினமணி நாளிதழில் அவர் எழுதிய தொடரைப் பற்றி அவ்வப்போது கருத்துகளைப் பரிமாறிக்கொண்டேன். அப்போது நான் கூறிய சில தகவல்களை கூடுதல் தகவல்கள் என்று கூறி மனம் மகிழ்ந்தார். அவருடைய இவ்வாறான மற்றவர்களின் கருத்தைக் கூர்ந்து கேட்டு, ஏற்கும் பழக்கம் என்னை அதிசயிக்கவைத்தது.

தஞ்சாவூர், தென்னகப் பண்பாட்டு மையத்திற்கு ஒரு விழாவிற்காக வந்திருந்த அவரைக் காணச் சென்றேன். நிகழ்வு ஆரம்பிக்கும் முன்பாக அவர் என்னை அவ்விடத்தைச் சுற்றி அழைத்துச்சென்று அங்குள்ள சிற்பங்களின் பெருமைகளை எடுத்துக்கூறினார். 

தி இந்து நாளிதழின் சகோதர இதழான ப்ரண்ட்லைன் இதழை அவ்வப்போது வடிவமைப்பு மாற்றம் செய்வார்கள். ஒரு முறை அவ்வாறு மாற்றம் பெற்றபோது சத்யஜித்ரே இருந்தால் இந்த வடிவமைப்பை வரவேற்றிருப்பார் என்ற குறிப்பு அவ்விதழில் இடம்பெற்றிருந்தது. அவ்வாறே தற்போது தேனுகா இருந்திருந்தால் என்னுடைய சோழ நாட்டில் பௌத்தம் நூலின் வடிவமைப்பைப் பாராட்டியிருப்பார். அவருடைய கலை ரசனை அத்தகையது.

இத்தகு புகழ் பெற்ற கலைஞரின் நினைவை அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு எடுத்துச்செல்வது நம் அனைவரின் கடமை."

ஒளிப்படம் : நிற்போர்: (இ-வ) அயூப்கான், கோபாலகிருஷ்ணன், தமிழ்ச்செல்வி, சூரியசந்திரன், மோகனகிருஷ்ணன், எம்.எஸ்.பாலு, ஆடலரசன், ரமேஷ்பாபு, ........,ராதாகிருஷ்ணன்
அமர்ந்திருப்போர்: (இ-வ) பா.ஜம்புலிங்கம், பாலுஜி, மோகன்

கழகம் வெளியிடும் மாத இதழ் பாலுஜியின் கவிதையுடன், தேனுகா சிறப்பிதழாக அன்னாரை நினைவுகூரும் வகையில் சிறப்பாக அமைந்திருந்தது. அவ்விதழ் மேடையில் வெளியிடப்பட்டதோடு, நிகழ்விற்கு வந்திருந்த பார்வையாளர்களுக்கு வழங்கப்பட்டன. 

முன்னதாக தேனுகா நினைவாக நடைபெற்ற ஓவியப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சிறப்புப்பரிசுகள் வழங்கப்பட்டன.

திரு பாலுஜி அவர்களுக்கும், நண்பர்களுக்கும்  நன்றி கூறிவிட்டு அவரைப் பற்றிய எண்ணங்களோடு  கிளம்பினேன். அந்த நினைவானது என்னைத் தொடர்ந்து வந்துகொண்டேயிருந்தது. அம்மாமனிதரை மறக்கமுடியுமா?

-----------------------------------------------------------
புகைப்படங்கள் நன்றி : திரு ஆடலரசன், 
திரு அயூப்கான்/களஞ்சியம் இதழ்
-----------------------------------------------------------

தொடர்புடைய பதிவுகள்

28.10.2025இல் மேம்படுத்தப்பட்டது.

19 May 2025

மனதில் நிற்கும் இந்தி வகுப்புகள் (1977-79)

1970களின் இடையில்..கும்பகோணம் கும்பேஸ்வரர் திருமஞ்சன வீதியில் காவிரியாற்றுக்குச் செல்லும் வழியில் மூர்த்திச்செட்டித் தெரு, பாட்றாச்சாரியார் தெரு தெருக்களை அடுத்து இடது புறத்தில் கரும்பாயிரம் பிள்ளையார் கோயில் உள்ளது. அங்கிருந்து சிறிது தூரத்தில் வலது புறத்தில்  நாங்கள் தட்டச்சுக்குச் சென்ற ஈஸ்வரன் தட்டச்சுப் பயிற்சி நிறுவனம் ஒரு வீட்டின் மாடியில் இயங்கிவந்தது. அதன் எதிரே வலது புறத்தில் கும்பகோணம் கூட்டுறவு பால் சொஸைட்டியும், இடது புறத்தில் ரேஷன் கடையும் இருந்தன. தட்டச்சுப் பயிற்சி முடிந்தபின் கீழே இறங்கிவருவோம். முதலில் ஆங்கிலத் தட்டச்சு கற்றுக்கொண்டோம். என்னுடைய ஆரம்பக் காலத் தட்டச்சுப் பயிற்சி இங்குதான். பின்னர் கும்பேஸ்வரர் திருமஞ்சன வீதியில் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட, பாரத் தட்டச்சுப் பயிற்சி நிறுவனத்தில் (தற்போது கும்பேஸ்வரர் வடக்கு வீதியில் உள்ளது) சேர்ந்து ஆங்கில, தமிழ் தட்டச்சிலும், ஆங்கில, தமிழ் சுருக்கெழுத்திலும் தேர்ச்சி பெற்றேன். அது ஒரு தனி அனுபவம்.

தட்டச்சு நிறுவனம் இயங்கிய வீட்டின் கீழே திண்ணையில் ஒருவர் இந்தி வகுப்பு நடத்திக்கொண்டிருந்தார். அவரிடம் நானும், செல்வம் (பழைய அரண்மனைத்தெரு), ஐயப்பன் (முத்துப்பிள்ளைமண்டபம்), உள்ளிட்ட பல நண்பர்களும் ஆரம்ப காலத்தில் இந்தி கற்றுக்கொண்டோம். 

எங்கள் அப்பா என்னை பல ஆங்கில, இந்தித் திரைப்படங்களுக்கு அழைத்துச்சென்றுள்ளார். நண்பர்களுடன் சேர்ந்து, மொழி தெரியாமல் பாபி, ஷோலே, தீவார் போன்ற இந்தித் திரைப்படங்களைப் பார்த்த சில ஆண்டுகளில்தான் இந்தி வகுப்புக்குச் சென்றோம்.  ஆசிரியர் நடத்திய விதம் எங்களுக்கு எளிதாகப் புரிந்தது. தெரியாத சொற்களுக்கு அவ்வப்போது பொருள் கேட்டுத் தெரிந்துகொள்வோம். நாங்கள் கேட்கும் அனைத்துக் கேள்விகளுக்கும் பொறுமையாகப் பொருள் கூறுவார். 

காந்தியடிகள் நற்பணிக்கழகம், காலசந்தி கட்டளை
(ஏப்ரல் 2025இல் சென்றபோது எடுத்த ஒளிப்படம்)

பிறகு, 1970களின் இடையில் கும்பகோணத்தில் கும்பேஸ்வரர் திருமஞ்சன வீதியில் ஆரம்பிக்கப்பட்ட காந்தியடிகள் நற்பணிக்கழகத்தில் (தற்போது காலசந்தி கட்டளையில் செயல்பட்டுவருகின்றது) இந்தி வகுப்பினைத் தொடர்ந்தேன். என்னுடன் பள்ளி நண்பர்களான  ராஜசேகரன் (16 கட்டு, திருமஞ்சன வீதி),  மதியழகன் (திருமஞ்சன வீதி), மோகன் (சிங்காரம் செட்டித்தெரு), ஐயப்பன் (முத்துப்பிள்ளை மண்டபம்) படித்த நினைவு.  

நான் ப்ராத்மிக் (பிப்ரவரி 1978), மத்யமா (ஆகஸ்டு 1978), ராஷ்ட்ரபாஷா (பிப்ரவரி 1979)  ஆகியவற்றில் தேர்ச்சி பெற்றேன். பணிக்குச் சென்றபின்னர் பிரவேசிகாவில் தேர்ச்சி பெற்றேன். சிலர் இடையிலே நின்றுவிட்டனர். எங்களில் மோகன் மட்டும் ப்ரவின் வரை படித்தார். பின்னர் நான் தனியார் நிறுவனங்களில் பணியாற்றியபோது மோகன் எனக்கு  இந்தியில் கடிதம் எழுதியதும் நான் பதில் எழுதியதும் நினைவில் உள்ளது. 

1979இல் சென்னையில்  முதன்முதலாக ஒரு தனியார் நிறுவனத்தில் பணியில் சேர்ந்த போது அங்கு ஆங்கிலமும், இந்தியும் பெரும்பாலும் பயன்படுத்தப்பட்டதைக் கண்டேன். நான் கற்ற இந்தி எனக்கு அப்போது கைகொடுத்தது. சேர்ந்த சில நாள்களில் அந்நிறுவன மேலாளர் என்னிடம்  டில்லியில் உள்ள அந்நிறுவனத்தின் தலைமையலுவலகத்திலிருந்து  அவ்வப்போது தொலைபேசி அழைப்பு வருமென்றும், பெறப்படும் செய்தியைத் தட்டச்சுச் செய்துதரவேண்டும் என்றும் கூறினார். அதற்கு முன்னர் ஓரிரு முறை தான் நான் தொலைபேசியில் பேசியுள்ளேன். அதிகம் நான் தொலைபேசியில் பேசியது வழக்கமில்லை என்று கூறியபோது அவர் என்னை ஊக்கப்படுத்தி அனுபவத்தில் அனைத்தையும் அறிந்துகொள்ளலாம் என்றார். அவர்கள் இந்தியில் பேசக்கூட வாய்ப்புள்ளது என்றார். அவ்வாறான ஒரு சூழலை எதிர்கொள்ளத் தயாராக இருந்தேன். 

அவர் சொன்ன மறுநாளே புதுதில்லி அலுவலகத்திலிருந்து தொலைபேசியில் ஒரு செய்தி வந்தது. மேலாளர் தொலைபேசியை என்னிடம் கொடுத்து அவர்கள் பேசுவதைக் கேட்டு, சுருக்கெழுத்தில் குறித்துக்கொண்டு, அதனைத் தட்டச்சிட்டு வரும்படிக் கூறினார். டெல்லியிலிருந்து வந்த, ஆங்கிலத்திலும் இந்தியிலும் ஒருவர் தொலைபேசியில் பேசிய அலுவலகச் செய்தியை அப்படியே உள்வாங்கிக்கொண்டு சுருக்கெழுத்தில் எழுதி, (தெரியாத, புரியாத இடங்களில் புள்ளி வைத்தும், இடைவெளிவிட்டும் சமாளித்து) அதனை ஆங்கிலத்தில் தட்டச்சு செய்தேன். மேலாளர் அதனைப் பார்த்துத் திருத்தித் தரவே மறுபடியும் அதனைத் தட்டச்சிட்டேன். அவர் என்னுடைய முதல் முயற்சியை அதிகம் பாராட்டினார். 

அவ்வாறே கோயம்புத்தூரில் ஒரு தனியார் நிறுவனத்தில் நேர்முகத்தேர்விற்குச் சென்றபோது வித்தியாசமான அனுபவத்தைப் பெற்றேன். பம்பாயிலிருந்து வந்த அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் முழுக்க முழுக்க ஆங்கிலத்தில் கேள்வி கேட்டார். அவ்வப்போது இந்தியிலும் பேசினார். எதிர்கொள்ள சற்றே சிரமப்பட்டாலும், சமாளித்து விடையளித்தேன். வந்திருந்த சுமார் 20க்கும் மேற்பட்டோரில் மூவரைத் தேர்ந்தெடுத்தனர். அம்மூவரில் என்னை முதலாவதாகத் தெரிவு செய்து தலைமையலுவலகத்தில் தட்டச்சுச்சுருக்கெழுத்தராகப் பணியாற்ற ஆணை தந்தனர். மற்ற இருவரும் கேரளாவிற்கும், ஆந்திராவிற்கும் சென்றனர். வந்திருந்தோரில் இந்தி மொழியறிவு, ஆங்கிலத் தட்டச்சு, ஆங்கிலச் சுருக்கெழுத்து ஆகிய தகுதிகளுடன் நான் மட்டுமே இருந்ததாகக் கூறினர்.  ரேஸ் கோர்ஸ் சாலையில் உள்ள, நான் நேர்முகத்தேர்வினை எதிர்கொண்ட, அதே அலுவலகத்தில் பின்னர் ஒன்றரை ஆண்டுகள் பணியாற்றினேன். 

தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் சோழ நாட்டில் பௌத்தம் (1999) என்ற தலைப்பில் நான் மேற்கொண்ட முனைவர்ப் பட்ட ஆய்விற்காக  இந்திய, வெளிநாட்டு அருங்காட்சியகங்களிலிருந்து நாகப்பட்டின புத்தர் செப்புத்திருமேனிகளின் ஒளிப்படங்களைக் கேட்டு ஆங்கிலத்தில் நான் கடிதம் எழுதியபோது சில அருங்காட்சியகத்தார் இந்தியில் மறுமொழியினை அனுப்பியிருந்தனர். எப்போதோ நான் கற்ற இந்தி அப்போது எனக்குப் பெரிதும் உதவியது.  அதனடிப்படையில் அவர்களிடமிருந்து பெற்ற நாகப்பட்டின புத்தர் சிற்பங்கள் தொடர்பான விவரங்களை என் ஆய்வேட்டில் இணைத்தேன்.

சில ஆண்டுகளுக்குப் பிறகு வட இந்தியாவிலுள்ள கோயில்களுக்குச் சென்றபோது பெயர்ப்பலகைகளில் உள்ள இந்தி எழுத்துகள் தொடங்கி அனைத்து இடங்களிலும் இருந்த இந்தி எழுத்துகளை மிக எளிதாகப் படிக்கவும், புரிந்துகொள்ளவும் பெரிதும் உதவியது. சுமார் 20 பேர் கொண்ட குழுவில் நானும், எங்களை அழைத்துச்சென்றவரும் மட்டுமே இந்தி அறிந்திருந்தோம். 

தற்போதெல்லாம் அவ்வப்போது இந்தி செய்தியினைக் கேட்கிறேன். ஓரளவு புரிந்துகொள்ள முடிகிறது. தெரியாத சொற்களுக்கு, ஆரம்பத்தில் ஆங்கில நாளிதழை வாசித்தபோது பயன்படுத்திய உத்தியின் அடிப்படையில், அகராதிகளை நாடுகின்றேன்.  1977இல் கற்க ஆரம்பித்து, பிரவேஷிகா வரை கற்றபோதிலும் அரிதாகப் பயன்படுத்துவதால் சற்று சிரமம் இருப்பதை உணர்கிறேன். இருப்பினும் நான் அப்போது கற்ற இந்தி அவ்வப்போது கைகொடுப்பதை அனுபவபூர்வமாக உணர்கிறேன்.  

ஆரம்பத்தில் திண்ணையில் நான் கற்ற இந்தியானது தொடர்ந்து கும்பகோணம் காந்தியடிகள் நற்பணிக்கழகத்தின் மூலமாக   பிரவேஷிகா வரை தேர்ச்சியடையவும், பணிக்காலத்தில் பல நிலைகளிலும், ஆய்வின்போதும் பெரிதும் உதவியது. இந்நாளில், அப்போது எனக்குக் கற்பித்த திண்ணை இந்தி வகுப்பு ஆசிரியரையும், காந்தியடிகள் நற்பணிக்கழகத்தின் பாலுஜி அவர்களையும் நன்றியோடு நினைவுகூர்கிறேன். 

20 மே 2025இல் மேம்படுத்தப்பட்டது.

12 May 2025

வேலைக்கு முதல் விண்ணப்பம் 12 மே 1976

“படிக்காட்டி முச்சந்தியில்தான் நிப்பே, படி” என்று கும்பகோணத்தில் வீட்டில் எங்கள் தாத்தா அடிக்கடி கூறுவார். எப்போதாவது அன்பாகவும் அறிவுரை சொல்வார். இவை சொந்தக்காலில் நிற்கவேண்டும், நேர்மையாக நடக்கவேண்டும், நல்ல பழக்கவழக்கங்களைக் கடைபிடிக்கவேண்டும் என்பன போன்ற எண்ணங்களை பள்ளிக்காலத்தில் விதைத்தது. 


மார்ச் 1975இல், கும்பகோணம் அறிஞர் அண்ணா அரசு மேல்நிலைப்பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவினை எதிர்பார்த்த நேரத்தில் வீட்டுச்சூழல் காரணமாக வேலையில் சேரவேண்டிய கட்டாயம் இருந்தது.  எந்நேரத்திலும் வேலையில் சேரத் தயாராக வேண்டும் என்ற இலக்கினை மனதில் கொண்டேன்.

2017இல், நான் படித்த பள்ளியின் நுழைவாயிலில்

அதற்காக என்னை ஆயத்தப்படுத்திக்கொள்ள ஆரம்பித்தேன். எஸ்.எஸ்.எல்.சி. தேர்வின் விடுமுறையில் கும்பகோணம், ஈஸ்வரன் தட்டச்சுப் பயிற்சி நிலையத்திலும், தொடர்ந்து பாரத் தட்டச்சுப் பயிற்சி நிலையத்திலும் ஆங்கிலத் தட்டச்சுக் கற்க ஆரம்பித்தேன். அதற்கு சற்று முன்பாக இந்தி பிராத்மிக் சேர்ந்து கற்க ஆரம்பித்திருந்தேன். கல்லூரிப் படிப்பைவிட இவை போன்ற கூடுதல் தகுதிகள் பணியில் சேருவதற்கு மிகவும் உதவியாக இருக்கும் என்று நண்பர்கள் கூறினர்.  அவ்வாறு நான் கற்ற ஆங்கிலமும், இந்தியும் பின்னாளில் நான் பணியில் சேர்ந்தபோது மிகவும் உதவின. அதே காலகட்டத்தில் நான் ஆங்கில இந்து நாளிதழ் வாசிக்க ஆரம்பித்துவிட்டேன்.

ஏப்ரல் 1975இல் நடைபெற்ற தேர்வில் 600க்கு 311 மதிப்பெண்கள் பெற்று எஸ்.எஸ்.எல்.சி.யில் தேர்ச்சி பெற்றேன். கும்பகோணம் அரசு ஆடவர் கல்லூரியில் பி.யு.சி. சேர்ந்துபடிக்கவேண்டும் என்ற ஆசை என் மனதுள் ஓடிக்கொண்டிருந்தது.  படிக்க வசதியில்லை என்று கூறி, எங்கள் வீட்டில் என்னை கும்பகோணம், பெரிய தெருவிலுள்ள இருளப்பன் மிளகாய் மண்டியில் சேர்த்துவிட்டார்கள். என்னுடன் பள்ளியில் படித்த பல மாணவர்கள் கல்லூரியில் பி.யு.சி. சேர்ந்து படிக்கவிட்டார்கள்.  தொடர்ந்து மிளகாய் மண்டியில் வேலை பார்த்துவந்தேன். கல்லூரிக்குச் சென்ற நண்பர்களைப் பார்த்ததும் படிக்கும் ஆசை அதிகமானது. வீட்டைவிட்டு ஓடிவிடுவேன், காவிரியாற்றில் விழுந்துவிடுவேன் என்றெல்லாம் வீட்டிலுள்ளோருக்குப் பலவகையில் தொந்தரவு கொடுத்து பி.யு.சி.யில் சேர்ந்தேன். 

சேர்வதற்கு முன்பாக சிலர் தஞ்சாவூர் வேலை வாய்ப்பகத்தில்  பதிந்துவிட்டால் வேலை கிடைக்கு வாய்ப்புண்டு என்று கூறினர். அதன்படி வேலை வாய்ப்பகத்தில் பதிவு செய்தேன். 1975இல் பதிவு செய்தபின்னர் தொடர்ந்து ஒவ்வொரு வருடமும் நேரில் சென்று புதுப்பித்துக்கொண்டேயிருந்தேன்.

கும்பகோணம் கல்லூரியில் பி.யு.சி. சேர்ந்து, மார்ச் 1976இல் நடைபெற்ற தேர்வில் மூன்றாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றேன். பின்னர் பி.ஏ. பொருளாதாரம் படித்ததும், வேலைக்குச் சேர்ந்ததும் தனிக்கதை.


பி.யு.சி. தேர்வெழுதி, தேர்வு முடிவிற்காகக் காத்திருந்தபோது வேலைக்கு விண்ணப்பங்கள் அனுப்ப ஆரம்பித்தேன்.  அவ்வாறாக முதன்முதலாக நான் தட்டச்சு செய்து அனுப்பிய விண்ணப்பத்தின் நகல் (கார்பன் காப்பி) இன்னும் என் கோப்பில் இருந்துகொண்டு, அந்நாள்களை நினைவுபடுத்திக் கொண்டிருக்கிறது. எதிர்பார்ப்பு, ஏக்கம் என்ற பல நிலைகளில் எப்படியும் வேலை கிடைத்துவிடும் என்ற நம்பிக்கை தொடர்ந்தது. சுமார்  50 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் நான் எதிர்கொண்ட முதல் தட்டச்சு அனுபவம் வித்தியாசமானது. 17 வயதில் நான் தட்டச்சிட்ட கடிதம் இன்னும் என்னை வியப்பில் ஆழ்த்துகிறது. ஃபூல்ஸ்கேப் அளவுள்ள இரு தாள்களுக்கு இடையே அதே அளவு கார்பன் பேப்பரை ஆங்கிலத் தட்டச்சுப்பொறியில் வைத்து 1+1 தட்டச்சு செய்தேன். ஆசிரியர்களிடமும், சக நண்பர்களிடமும் கடிதத்திற்கான வரைவினைப் பற்றி அறிந்தேன். ஆங்கிலத்தட்டச்சுத் தேர்விற்காக நான் தட்டச்சிட்ட இரண்டாம் தாள் (I Paper Speed, Second Paper: Letters & Others) மூலமாக கடித அமைப்பைத் தெரிந்துகொண்டேன். அப்போதெல்லாம் ஏ4 அளவு தாள் பயன்பாடு கிடையாது.  கூகுளும் கிடையாது. 

பத்தியின் முதல் வாக்கியத்திற்கு அதிக இடைவெளிவிட்டது (ஐந்து எழுத்து இடைவெளி அல்லது ஒரு டேப் போதும்), எழுதிய சொற்கள் (“Having come to understand…”, “…abovesaid Factory, “…your Honour’s control”, ”Dear” என்பதற்குப் பதிலாக ”Respected”), வேலை வாய்ப்பக எண்ணைத் தந்தால் உடன் வேலை கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் அந்த எண்ணைப் பதிவு செய்தல் போன்ற உத்திகளைக் கடிதத்தில் பயன்படுத்தியதைப் பார்க்கும்போது எனக்கு வியப்பாக உள்ளது. எந்த பதவிக்கு விண்ணப்பிக்கிறேன் என்றோ, முடித்திருந்த பி.யு.சி. தேர்ச்சி, தட்டச்சு அறிவு போன்ற தகுதிகளையோகூட நான் குறிப்பிடவில்லை. அப்படியிருந்தும், முதன்முதலாக நண்பன் வேலைக்காக தட்டச்சிட்ட கடிதம் என்ற வகையில் நண்பர்களும், தட்டச்சு நிறுவனத்தினரும் அதிகம் பாராட்டினர்.  அன்று முதல் இன்றுவரை தட்டச்சினை நான் ஒரு கலையாகவே கருதி வருகிறேன்.

தாத்தா, ஆத்தா, பெற்றோர், வளர்த்தவர்கள் ஆரம்ப காலத்தில் போட்ட வித்தானது படித்து முடித்து வேலையில் சேர்ந்தது முதல் என்னை பல வழிகளில் நன்னெறியில் நடத்திச்சென்றதை உணர ஆரம்பித்தேன். நான் பெற்ற இந்தப் பாடமே பின்னர் என் மகன்களை வாழ்வில் மூன்று Dக்கள் (Discipline, Decency மற்றும் Decorum) இருக்கவேண்டும் என்று கூறி வளர்க்க உதவியாக இருந்தது. வளரும் காலத்தில் தரப்படுகின்ற முக்கியத்துவம் வளர்ப்பவர்களுக்கு பெருமை சேர்ப்பதோடு, பிள்ளைகளை நன்னெறிக்கு இட்டுச்செல்லும்.

இன்னும் பாதுகாத்து வருகின்ற அதன் நகலைப் பார்க்கும்போதெல்லாம் நண்பர்களுடன்  அரட்டையடித்த நாள்களும்,  அதனை அனுப்பிவிட்டு பணி ஆணைக்காக தபால்காரரை எதிர்பார்த்த நாள்களும், கும்பகோணம், கே.ஜி.கே.தெருவின் அழகான எங்கள் வீடும் நினைவிற்கு வந்துவிடும்.  

02 January 2025

ஆவணப்படுத்தல்: 50ஆம் ஆண்டு

கும்பகோணத்தில் வீட்டிற்கு வரும் கடிதங்கள், வீட்டு வரி, மின்சார வரி ரசீதுகள், திருமண அழைப்புகள் போன்றவற்றை எங்கள் தாத்தா கம்பியில் குத்தி வைத்திருப்பார்.  சில சமயங்களில் முக்கியமான கடிதங்களை அதில் தேடிக் கண்டுபிடித்துவிடுவார். அந்த கடிதக் கம்பியில் எங்கள் தாத்தாவிற்கு பெருந்தலைவர் காமராஜர் எழுதிய கடிதத்தையும் நான் பார்த்துள்ளேன். தற்போது அது எதுவுமே இல்லை. நினைவில் மட்டுமே.


1976இல், எங்கள் தாத்தாவைப் பார்த்து அந்தப் பழக்கத்தை நான் ஆரம்பித்த நான் தற்போது 50ஆம் ஆண்டில் தொடர்கிறேன். நான் செய்துவருகின்ற முக்கியமான பணிகளில் ஒன்று கடிதங்களை அவ்வப்போது கோப்பிலிடுதல் ஆகும்.  ஒவ்வொருவருடைய வாழ்வின் நிகழ்வுகளும் ஆவணப்படுத்தப்பட வேண்டியது அவசியமானது.

1976இல் வேலை வேண்டி விண்ணப்பித்த கடிதத்தின் நகலிலிருந்து என்னுடைய ஆவணக்கோப்பு தொடங்குகிறது. பின்னர் இலக்கியம் (1983 முதல்), மொழிபெயர்ப்பு (1999 முதல்), ஆய்வு (1994 முதல்) என்று பல தலைப்புகளில் வகைப்படுத்தப்பட்டது. ஆய்வு தொடர்பானவற்றை களப்பணி, ஆதாரங்கள், கண்டுபிடிப்புகள், கட்டுரைகள், நாளிதழ் செய்திகள் என்ற வகையில் பிரித்துள்ளேன்.

அவ்வப்போதைய நிகழ்வுகளைப் பதிவதோடு, அந்தந்த பகுப்பில் சேர்த்துவிடுவதால், எளிதில் கண்டுபிடித்துவிடலாம். நேரத்தை பயனுள்ள பிற பணிகளில் பயன்படுத்தலாம். இந்த அடிப்படை ஒழுங்கு பல நிலைகளில் நம்மை மேம்படுத்திக்கொள்ள உதவும். என் குடும்பத்தாருக்கும் இதனைப் பழக்கப்படுத்தி உள்ளேன். அவர்களும், என்னைப் பார்த்து சில நண்பர்களும் இந்தமுறையைக் கடைபிடித்து வருகின்றார்கள்.

வேலைக்கு அனுப்பிய முதல் விண்ணப்பம், எனக்கு வேலை கிடைத்ததாக வந்த முதல் தந்தி, பல்வேறு நிறுவனங்களுக்கு நான் வேலைக்காக அனுப்பிய விண்ணப்பங்கள், அதற்கான பணியாணைகள், முதன்முதலாக சைக்கிள் வாங்கியது, என் திருமண அழைப்பு தொடங்கி இல்லத்தின் முக்கிய நிகழ்வுகள் தொடர்பான அழைப்பிதழ்கள், நாளிதழ் வார இதழ்கள், முக்கியப் பிரமுகர்களுடனான கடிதப்போக்குவரத்து என்ற வகையில் இவற்றில் ஆவணங்கள் உள்ளன. ஆரம்ப காலத்தில் பொருளடக்கம் அமைக்காமல் இருந்தேன். பின்னர் எளிதில் கண்டுபிடிக்க வசதியாக அந்தந்த ஆண்டிற்கான பொருளடக்கத்தை பொருண்மைவாரியாக அமைக்க ஆரம்பித்தேன்.


ஃபூல்ஸ்கேப் அளவு தாளில் ஆரம்பித்த அக்கோப்புகள் நாளடைவில் ஏ4 அளவிற்கு மாறின. அவ்வாறே சாதா அட்டை நூற்கட்டில் (wrapper binding) இருந்து தற்போது ஸ்பைரலுக்கு (spiral binding) மாறிவிட்டது. பல ஆண்டுகளுக்கு முன்பு எழுதிய கடிதத்தையோ, குறிப்பிட்ட ஆவணத்தையோ பார்க்கும்போது அடைகின்ற மன நிறைவு அளவிடமுடியாதாதது. அது நம்மை அக்காலகட்டத்திற்கு அழைத்துச் சென்றுவிடும். ஒவ்வொரு முறை நூற்கட்டு செய்தபின்னர் அதனை ஒரு முறை முழுமையாகப் புரட்டிப் பார்த்துவிட்டு பாதுகாப்பாக வைக்கும்போது ஒரு பெரிய சாதனையைப் படைத்த நினைவு மனதில் தோன்றும். எழுத்து, வாசிப்பு, ஆய்வு என்ற பல நிலைகளில் என்னைத் திரும்பிப் பார்த்துக்கொள்ளவும்,  சுய மதிப்பீடு செய்துகொள்ளவும் இந்த முறை உதவுகிறது. 50 ஆண்டுகளாக மேற்கொள்ளும் இப்பணியை இனியும் தொடர்வேன்.

18 December 2024

அரசினர் கலைக்கல்லூரி (தன்னாட்சி): பட்டப்படிப்பு 1976-79

அண்மையில் கும்பகோணத்திற்குச் சென்றபோது அந்நாள் நண்பர்களைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது சுமார் 50 ஆண்டுகளுக்கு முந்தைய, கல்லூரிக்கால நினைவுகளை அவர்களுடன் பகிர்ந்துகொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. அந்த இனிமையான நினைவுகளைத் தேடிச் சற்றே பின்னோக்கிச் செல்வோமா?

இளங்கலை (1976-79) படிக்கும்போது கல்லூரிக்கு
எடுத்துச்சென்ற கோப்பு அட்டை

கும்பேஸ்வரர் திருமஞ்சன வீதி ஆரம்பப்பள்ளியில் முதல் வகுப்பு தொடங்கி கும்பகோணம் அரசினர் ஆடவர் கல்லூரியில் புகுமுக வகுப்பு (P.U.C.,) வரை தமிழ் வழியிலேயே (Tamil medium) படித்தேன். புகுமுக வகுப்பில் தேர்ச்சி பெற்றபின்னர் இளங்கலைக்கு (B.A.,) விண்ணப்பிக்க வேண்டிய நேரம். அப்போது நண்பர்கள் இளங்கலை வகுப்பினை ஆங்கில வழி படித்தால்தான் வேலை எளிதாகக் கிடைக்கும் என்றனர். கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தபோதே இந்தியும்,  தட்டச்சும், சுருக்கெழுத்தும் கற்க ஆரம்பித்தேன். 

ஆங்கிலவழிப் படிக்கவேண்டும் என்ற எண்ணம் வருவதற்கு கீழ்க்கண்டவை உள்ளிட்ட பல காரணங்கள் இருந்தன.

  • படித்துமுடித்தபின் வேலைக்கு விண்ணப்பிக்கவேண்டும் என்ற ஆர்வம்.
  • வேலைக்கான விண்ணப்பத்தையே ஆங்கிலத்தில்தான் அனுப்பவேண்டும் என்ற நிலை. 
  • வேலையில் சேர்ந்தே ஆகவேண்டிய கட்டாயம்.
  • வேலை பெறும் அளவிற்கு தகுதியை உயர்த்திக்கொள்ளல்.
  • ஆங்கில வழியில் படிப்பது சிரமம் என்று நண்பர்கள் கூறிய சவாலை ஏற்றல்.
  • படித்த படிப்பிற்கு உள்ளூரில் வேலை கிடைக்குமா என்ற ஐயம்.
  • 1974இல் தொடங்கிய தட்டச்சு, அனுபவம், தி இந்து (ஆங்கிலம்) வாசிப்பனுபவம்.  
தமிழ்வழிப் படித்த மாணவருக்கு  ஆங்கில வழி வகுப்பில் இடம் கிடைக்குமா என்ற ஐயம் எழவே இளங்கலை பொருளாதாரம் ஆங்கில வழி (B.A. Economics/English medium) மற்றும் தமிழ் வழி (B.A. Economics/Tamil medium) என்ற வகையில் இரு விண்ணப்பங்கள் போட்டேன். இரண்டிற்கும் நேர்காணல் வந்தது. ஆங்கிலவழி வகுப்பில் சேர்ந்தேன்.

முதலாண்டு (Part I Tamil Paper I, Part II English Paper I, Ancillary: History of India). இரண்டாமாண்டு (Part I Tamil Paper II, Part II English Paper II, Ancillary: Outlines of Political Theory, Main: Economic Thought). மூன்றாமாண்டு (Main: Micro Economic Theory, Macro Economic Theory, Monetary and International Economics, Fiscal Economics, Indian Economic Development) என்ற வகையில் பாடங்கள் அமைந்தன. ஆரம்பத்தில் மாணவர்கள் ஆங்கிலவழி படிப்பதாகக் கூறுவர், ஆனால் தேர்வு தமிழில் எழுதுவர் பல நண்பர்கள் ஆங்கிலத்தில் பாடங்களைப் படிப்பது சிரமம் என்று சில ஆசிரியர்கள் கூறினர். புதிய நண்பர்களோ ஆங்கிலவழிப் படித்தால் தேர்ச்சி பெறமுடியாது என்றனர். முதல் ஒரு மாதம் எதுவுமே புரியவில்லை. வகுப்பிலிருந்து எழுந்து ஓடிவிடலாமா என்றுகூட நினைத்ததுண்டு. பொறுமையாக ஆழ்ந்து கவனிக்க ஆரம்பித்தபோது சற்றுப் புரிய ஆரம்பித்தது. கல்லூரியில் இளங்கலை படிக்கும்போது அழகான கோப்பு அட்டையை எடுத்துச்சென்றேன். தாளை வாங்கி அதில் அடுக்கிவைத்துக்கொள்வேன். புல்ஸ்கேப் (fool's cap) தாளில் மூலையில் ஒரு துளையிட்டு (Single punch hole, inserting tag) பாடவாரியாகப் பிரித்துக்கொண்டு குறிப்பெடுத்துக்கொள்வேன். சமயத்தில் சுருக்கெழுத்திலும்கூட (English  shorthand) குறித்துக்கொள்வேன். அப்போதே ஆசிரியர்கள் சுருக்கெழுத்திலேயே குறிப்பெடுப்பதை வியப்போடு பாராட்டினர். வீட்டில் வந்தபின் அந்தந்த பாடத்திற்குரிய தாள்களை தனியாகக் கோர்த்துவைப்பேன். இவ்வாறு வகுப்பு நடக்கும்போது நான் எடுத்து பாதுகாத்த குறிப்புகள் தேர்வுக்காலத்தில் எனக்கு அதிகம் உதவின.

கல்லூரி நூலகத்தில் சென்று பாடங்களுக்கான (Source books for the Main subject and ancillary subjects) நூல்களை எடுத்துப் பார்க்க ஆரம்பித்தேன். சில நூல்களை சாத்தாரத்தெரு மூலையிலும், டவுன் ஹைஸ்கூல் எதிரிலும் உள்ள பழைய புத்தகக்கடைகளில் குறைவான விலைக்கு வாங்கினேன். பெரிய நூல்களாக அவை இருந்தன. தலைப்புகள், உள் தலைப்புகள், தேவையான இடங்களில் படங்கள் என்ற வகையில் பிரமிப்பை உண்டாக்கின. பல சொற்கள் புதியனவாக இருந்தன. 

தி இந்து ஆங்கில நாளிதழை வாசிக்க ஆரம்பித்த அக்காலகட்டத்தில் முதலில் எளிதாக உள்ளவற்றைப் படித்துவிட்டு, பின்னர் சற்று சிரமமானவற்றைப் படிப்பேன். அதே உத்தியைக் கொண்டு பாடங்களைப் படித்தேன். நான் எடுத்த நூல்களில் எனக்குத் தெரிந்த எளிய வார்த்தைகளைக் கொண்ட பாடங்களை முதலில் படிக்க ஆரம்பித்து, பின்னர் மற்றவற்றைத் தொடர்ந்தேன். சில சமயங்களில் ஆசிரியர் கூறுகின்ற, அப்போதுதான் முதன்முதலாக அறிந்த, ஆங்கிலச்சொற்களைக் குறித்துக்கொண்டேன். இந்த முறை மூலமாக ஒவ்வொரு நாளும் புதிய சொற்களையும், அவற்றுக்கான பொருளையும் அறிய ஆரம்பித்தேன். பாடங்களில் வரும் சில சொற்கள் (fiscal, inflation, budget, poverty line) தி இந்து நாளிதழில் இருப்பதைக் கண்டு வியந்தேன். பொருளாதாரம் தொடர்பான பல சொற்களை நாளிதழ் மூலமாக அறிந்தேன். படிக்கின்ற பாடத்தில் அவை வரும்போது மிகவும் வியந்துபோவேன். ஆங்கில மொழி  மீதான பயம் நீங்க ஆரம்பித்தது.  

முதலாண்டில் தமிழ், ஆங்கிலத்துடன் ஒரு துணைப்பாடமாக இந்திய வரலாறு ஆங்கிலத்தில் எழுதவேண்டியிருந்தது. அதனை ஆங்கிலத்தில் எப்படியும் எழுத முடிவெடுத்தேன். முதன்முதலாக மொழியல்லாத ஒரு பாடத்தில் ஆங்கிலத்தில் எழுதுவது அப்போதுதான். அதில் தேர்ச்சி பெற்ற துணிவு அடுத்தடுத்த ஆண்டுகளில் அவ்வாறே எழுதவும், வெற்றி பெறவும் உதவின.  புகுமுக வகுப்பில் மூன்றாம் வகுப்பில் வெற்றி பெற்றதைப்போலவே பட்டப்படிப்பிலும் மூன்றாம் வகுப்பில் வெற்றி பெற்றேன்.  

இவ்வாறாக மூன்றாண்டுகளை நிறைவு செய்தேன். தமிழ்வழிப் பயின்ற மாணவர்களுடன் தொடர்பு வைத்திருந்ததால் அந்தந்த பாடத்திற்குரியனவற்றில் பயன்படுத்தப்படுகின்ற தமிழ் சொற்களையும் எளிமையாக அறியமுடிந்தது. தமிழ்வழிப் படித்திருந்தால் இன்னும் அதிகமாக மதிப்பெண் எடுத்திருக்கலாமோ என்ற ஓர் எண்ணம் இருந்துகொண்டேயிருந்தது.

கல்லூரியில் படித்த காலகட்டத்தில் குடும்பத்தின் இயல்பு நிலை அதிகம் பாதிக்கப்பட்டது. முதலாண்டில் மாமாவும் (அப்பாவின் தங்கையின் கணவர்), இரண்டாம் ஆண்டில் தாத்தாவும் (அப்பாவின் அப்பா), மூன்றாம் ஆண்டில் அப்பாவும் இயற்கையெய்தனர். இடி மேல் இடி. எங்கள் தாத்தாவுக்கு (அவர் கணக்குப்பிள்ளையாக வேலை பார்த்த அவருடைய மைத்துனரின்) கடையிலிருந்து வந்துகொண்டிருந்த உதவிப்பணம் நின்றது. நாங்கள் அனைவரும் அனாதையானது போல் உணர்ந்தோம். வீடு மட்டுமே சொத்து. மற்றபடி வருமானம் எதுவுமில்லை. எங்கள் அம்மா வீட்டில் மேலும் சில பகுதிகளை வாடகைக்குவிட்டு அதில் வரும் வருமானத்தைக் கொண்டு குடும்பத்தை நடத்த வேண்டிய சூழல்.  

இவ்வாறான சூழலில் நான் பல இடங்களுக்கு வேலைக்கு விண்ணப்பித்துக்கொண்டிருந்தேன். என் தந்தை இறந்தபோது வந்திருந்த எங்கள் சிறிய தாத்தாவின் மருமகன் என் கல்வித்தகுதிகளைக் கேட்டபின்  சென்னையில் விடுப்புப்பணியிடத்தில் (leave vacancy) நான் பணியில் சேர உதவினார்.  இளங்கலை தேர்வு முடிவு எதிர்பார்த்த நிலையில் ஆங்கிலத்தட்டச்சு உயர்நிலை, தமிழ்த் தட்டச்சு உயர்நிலை, ஆங்கிலச்சுருக்கெழுத்து கீழ்நிலை, இந்தி பிராத்மிக் தேர்ச்சி ஆகியவையே எனக்கு அப்போது வேலை கிடைக்க உதவியது. இளங்கலை மட்டுமே படித்திருந்தால் நான் அதிகம் சிரமப்படவேண்டியிருந்திருக்கும்.  நான் சேர்ந்த நிறுவனத்தில் இந்தியும் ஆங்கிலமும் மட்டுமே பயன்படுத்தப்பட்டதால், நான் அப்போது பெற்றிருந்த பிற தகுதிகள் அங்கு நான் சிறப்பாகப் பணியாற்ற உதவியதை இன்றும் நினைத்துப் பார்க்கிறேன்.   

இக்காலகட்டத்தில்தான் ஏதோ ஒரு பாடப்பிரிவிற்காக முதன்முதலில் மாணவிகள் இக்கல்லூரியில் சேர்ந்தனர். 

வகுப்பு நண்பர் ஜெனத்தீன்ராஜ், மாணவர் தலைவராகப் போட்டியிட்டபோது அவருக்கு வாக்குக் கேட்டோம்.

முதலாண்டில் ஒரு ஆசிரியை (Fiscal Economics) ஆறு வகுப்புகள் மட்டும் எடுத்தார். மற்றபடி அனைவரும் ஆசிரியர்களே.

ப்ளானிங் பார்ம் (Planning Forum) என்ற அமைப்பில் நானும் நண்பர் சந்திரசேகரும் போட்டியிட்டு இருவரும் ஒரே எண்ணிக்கையிலான வாக்கினைப் பெற குலுக்கல் முறையில் அவர் தலைவராகவும், நான் துணைத்தலைவராகவும் செயல்பட்டோம். இத்தேர்தலுக்கான நோட்டீசை நாங்கள் இருவருமே சென்று தனித்தனியாக அச்சடிக்கக் கேட்டு, கும்பேஸ்வரர் திருமஞ்சன வீதியில் இருந்த கலாநிதி பிரஸில் தந்தோம். 

சம்பிரதி வைத்தியநாதன்தெருவிலிருந்த எங்கள் வீட்டிலிருந்து கல்லூரிக்கு நடந்தே சென்றேன். சைக்கிள், ரேடியோ போன்றவை எங்களுக்கு மிகவும் தூரம். 

இளங்கலை வணிகம் படித்த நண்பர் திரு கே.எஸ்.சந்தானகிருஷ்ணனின் நட்பு கிடைத்தது இக்காலகட்டத்தில்தான்.

அரங்கேற்றம், அவள் ஒரு தொடங்கதை,  அபூர்வ ராகங்கள் படங்களில் ஆரம்பித்த பாலசந்தர் திரைப்படங்களின் மீதான ஈர்ப்பு தொடர்ந்து இன்னும் அதிகமானது.

அதற்கெல்லாம் மேலாக என் வாழ்வில் இக்காலகட்டம் போதிய கல்வித்தகுதி, துணைத்தகுதி, தன் காலில் நிற்றல், யாரையும் சாரா பண்பு, போன்ற பல அனுபவங்களைத் தந்தது. 

நான் படித்த கும்பகோணம் கல்லூரி தொடர்பான பிற பதிவுகள்:

    நான் எழுதிய நூலை நான் படித்த கல்லூரி நூலகத்திற்கு வழங்கிய இனிமையான தருணங்கள்.

    13 மார்ச் 2023இல் கல்லூரி முதல்வர் நா.தனராஜன் அவர்களிடம் சோழ நாட்டில் பௌத்தம் நூலினை வழங்கல்


    5 ஜனவரி 2025இல், கல்லூரி முதல்வர் அ.மாதவி அவர்களிடம் சோழ நாட்டில் பௌத்தம் ஆங்கிலப்பதிப்பினை வழங்கல், உடன் நண்பர் ராஜசேகரன்


    27 .5.2025இல் மேம்படுத்தப்பட்டது.