07 January 2014

தாராசுரம் ஐராவதீசுவரர் திருக்கோயில் (இராசராசேச்சரம்) : குடவாயில் பாலசுப்ரமணியன்

வாசிப்பை நேசிப்போமே : கும்பகோணம் கோயில்கள், தஞ்சாவூர் பெரிய கோயில், திருவலஞ்சுழி பலகணி, ஆவுடையார்கோயில் கொடுங்கை, திருவீழிமிழலை வௌவால் நத்தி மண்டபம், திருவாரூர் தேர் என ஒவவொரு ஊரின் பெயரைச் சொல்லும்போது உடனடியாக அவ்வூரின் புகழ் பெற்ற இடங்கள் நம் நினைவிற்கு வருவது இயற்கையே. அவ்வகையில் தாராசுரம் என்றால் நம் நினைவிற்கு வருவது ஐராவதீசுவரர் கோயிலும் அங்குள்ள நாயன்மார் சிற்பங்களுமே. கல்லூரி  நாள்களில் (1975-79) அக்கோயிலுக்கு நண்பர்களுடன் செல்லும்போது கோயிலின் பல பகுதிகள் புதையுண்டும், மண்மூடியும் இருந்ததைப் பார்த்துள்ளோம். தொடர்ந்து நடைபெற்ற புனரமைப்பில் கோயிலின் பல பகுதிகள் வெளிவுலகிற்குத் தெரிய ஆரம்பித்ததை எண்ணி மகிழ்ச்சியுற்றோம். அக்கோயிலைப் பற்றிய ஓர் அற்புதப்படைப்பாக வெளிவந்துள்ளது குடவாயில் பாலசுப்ரமணியன் அவர்களின் தாராசுரம் ஐராவதீசுவரர் திருக்கோயில் என்னும் நூல்.

தமிழகத்தில் தஞ்சாவூர் மாவட்டத்தில் கும்பகோணம் நகருக்குத் தென்மேற்கில் அரிசிலாற்றின் தென் கரையில் அமைந்துள்ள தாராசுரம் என்று ஊரை அறிமுகப்படுத்தும் ஆசிரியர், இன்றைக்கு 1500 ஆண்டுகளுக்கு முன்பு நிறுவப்பெற்ற பழையாறையின் சிறப்பு, இக்கற்றளியைக் கட்டிய இரண்டாம் இராசராசோழனின் சிறப்பு, . தொடர்ந்து திருக்கோயிலின் அமைப்பு மற்றும் கட்டடக்கலைச்சிறப்பு, கோஷ்ட சிற்பங்கள் ஆகியவற்றை எடுத்துக் கூறிவிட்டு, திருத்தொண்டர் புராணத் தொடர் சிற்பக்காட்சிகளைப் பற்றிக் கூறுகிறார்.
"சேக்கிழார் பெருமானையும், கவிச்சக்கரவர்த்தி ஒட்டக்கூத்தரையும் ஞானாசிரியர்களாகப் பெற்ற காரணத்தால், தான் பேரரசனாக முடி சூடியதும் தான் தோற்றுவித்த இராசராசபுரியின் (தாராசுரத்தின்) இராசராசேச்சரம் என்னும் திருக்கோயிலில் பெரிய புராணத்தை அப்படியே காட்சியாக வடித்து உலகம் என்றென்றும் அடியார்கள் வரலாற்றை கண்குளிரக் கண்டு மகிழ்ந்து போற்றுவேண்டும் என விரும்பினான். சேக்கிழார் பெருமானின் வழிகாட்டலும், ஒட்டக்கூத்தரின் உறுதுணையும் அக்கோயிலில் உள்ள கல்லெல்லாம் கவி பேசவைத்தன" (ப.93) என்று குறிப்பிடுகிறார். 

"தேவார மூவரைச் சிறப்பிக்கும் முகமாக, சிற்பக் காட்சிகளின் தொடக்கமாக விளங்கும் தடுத்தாட்கொண்ட புராண காட்சித் தொடரினை அடுத்து திருஞானசம்பந்தரின் வாழ்வின் நிகழ்ந்த அற்புதக் காட்சிகள் சிலவற்றையும், திருநாவுக்கரசர் வாழ்வில் நிகழ்ந்த அற்புதக் காட்சிகள் சிலவற்றையும், அப்பர் தேவாரப்பதிகம் ஒன்றைக் காட்சிப்படுததியும் காட்டிய பின்னரே திருத்தொண்டத்தொகை பட்டியலிடும் அடியார்களின் வரிசைப்படி பெரிய புராணச் சிற்பக் காட்சிகள் தொடர்கின்றன" என்றும், "இவற்றில் பெரும்பாலான சிற்பங்களுக்கு மேலாக சோழர் கால கல்வெட்டுப் பொறிப்புகளில் காட்சி விளக்கம் எழுதப்பட்டுள்ளன" என்றும் கூறுகிறார் நூல்சிரியர். (ப.94)

சிற்பக்காட்சி, தொடர்புடைய பாடல் அடிகள், அதனைப் பற்றிய சிறு குறிப்பு, சிற்பம் தொடர்பான பெரிய புராண விளக்கம், சிற்ப நுட்பம்   என்ற நிலையில் பெரிய புராணச் சிற்பங்களைக் கதையுடன் ஆசிரியர் விளக்கும் விதம் மிகவும் சிறப்பாக அமைந்துள்ளது. 

பல இடங்களில் பதிவுகளுக்குக் கீழ் குறிப்பிடத்தக்க சிற்பங்களின் புகைப்படங்களை அனைவரும் எளிதில் புரிந்துகொள்ளும் வகையில் தந்துள்ளார். அடுத்து, ராஜகம்பீரன் திருமண்டபம் (பக்.304-351), மேற்தளத்து விமான மண்டப ஏழு நதித் தெய்வங்கள் மற்றும் கயிலைக்காட்சி (பக்.352-361), கங்காளமூர்த்தி மண்டபம் (பக்.378-382), வடபுறத் திருச்சுற்று மாளிகையின் சுவரில் காணப்படும் ஓதுவார் நூற்றெண்மர் (பக்.383-396), ஆடற்கலை (பக்.397-410) என பல நிலைகளில் உள்ள சிற்பங்களைப் பற்றி ஆழமாக விவாதிக்கிறார்.

நாயன்மார் சிற்பங்களில் காணப்படும் கோயில்கள் என்ற நிலையில் தில்லையம்பலம், திருவெண்ணெய்நல்லூர், திருக்கோலக்கா, நல்லூர்ப்பெருமணம், பழையாறை வடதளி, திருவையாறு, தில்லை திருப்புலீச்சரம், தேவாசிரிய மண்டபம் மற்றும் திருவாரூர்ப் பூங்கோயில், ஆலவாய் (மதுரை), திருப்புகலூர் வர்த்தமானீச்சரம், திருப்பழனம், திருச்சாத்தமங்கை (சீயாத்தமங்கை), திருவாரூர் திருவரநெறி, திருவாவடுதுறை, திருவொற்றியூர், அரிசிற்கரைப்புத்தூர் (அழகாபுத்தூர்), திருநின்றவூர், திருவானைக்கா, கண்டியூர், அவிநாசி உள்ளிட்ட பல கோயில்களை (பக்.411-437) நம் முன் கொண்டுவருகிறார் ஆசிரியர்.

சிற்பக்களஞ்சியத்தில் அற்புதப் படைப்புகளாக உள்ள சிற்பங்களை உரிய சூழலோடு கூறும் ஆசிரியர்  (பக்.438-455). இக்கோயிலின் வழிபாட்டின் உள்ள செப்புத்திருமேனிகள், திருச்சுற்று மண்டபத்துத் திருப்பணியில் இரண்டாம் முறை கிடைத்த சோழர் காலச் செப்புத்திருமேனிகள் (பக்.456-472), வெற்றியால் வந்த கலைச்செல்வங்களாக சோழ மன்னர்கள் கொண்டுவந்த சிற்பங்கள் (பக்.473-477) ஆகியவற்றைப் புகைப்படங்களுடன் வர்ணிக்கிறார். தாராசுரம் கோயிலிலிருந்து இடம்பெயர்ந்து தஞ்சாவூர் கலைக்கூடத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள சிற்பங்களையும் உரிய அழகியல் உணர்வோடு பகிர்ந்துகொள்கிறார்.

 எந்த ஒரு சிற்பத்தை நாம் நினைக்கின்றோமோ அந்த சிற்பத்தை உரிய விளக்கத்துடன் இந்நூலில் காணமுடியும். புராணக்காட்சிகள், சண்டைக் காட்சிகள், நாட்டியக்காட்சிகள் என அனைத்துவகையான காட்சிகளையும் கொண்ட சிற்பங்களைப் பற்றியும், அவற்றின் அமைப்பைப் பற்றியும் மிகவும் நுணுக்கமாக விளக்குகிறார். கோயிலைப் பல கோணங்களில் இந்நூலில் நாம் காணமுடியும்.

நூலின் முன்னுரையில் ஆசிரியர் 1970இல் தொடங்கிய தாராசுரம் கோயில் பற்றிய தன் ஆய்வு நாற்பதாண்டுகளுக்கும் மேலாக நீடித்ததாகக் கூறுகிறார். இவ்வாறான தனது அனுபவத்தை இந்நூலில் அரிதின் முயன்று அனைவரும் பயனுறும் வகையில் அழகான வகையில் தந்துள்ளார். 

ஆயிரம் ஆண்டு கால வரலாற்றைத் தன்னுள் கொண்டுள்ள இந்த கலைப் பெட்டகத்தைக் காணவும், அதன் மிக நுண்ணிய கூறுகளைத் தெரிந்துகொள்ளவும் உதவும் வகையில் அமைந்துள்ள இந்நூலை வாசிப்போமே.  தாராசுரம் ஐராவதீசுவரர் திருக்கோயில் (இராசராசேச்சரம்), குடவாயில் பாலசுப்ரமணியன் (அலைபேசி 9843666921), சுவாமி தயானந்தா கல்வி அறக்கட்டளை, மஞ்சக்குடி, திருவாரூர் மாவட்டம் 612 610, website: www.sdet.in, பக்.16+552+20, 2013, ரூ.1000]

(இந்நூல் 2013இல் எங்கள் இல்ல நூலகத்தில் சேர்ந்துள்ள 100 ஆவது நூல்)

14 comments:

 1. தாராசுரம் ஐராவதீசுவரர் திருக்கோயில் (இராசராசேச்சரம்) : குடவாயில் பாலசுப்ரமணியன்
  புத்தகம் பற்றிய அருமையான மதிப்புரை.
  எனது பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி Dr B Jambulingam

  ReplyDelete
  Replies
  1. வழிகாட்டியின் துணையின்றி கோயிலின் சிற்பங்களை எளிதாகக் காணும் வகையில் அமைந்துள்ள நூல். தாங்கள் பகிர்வதற்கு நன்றி.

   Delete
 2. அருகில் இருக்கும் தாராசுரம் கோயில் சிற்பங்களைப் பற்றிய அரிய தகவல்களை அறிந்துகொள்ளும் அமைந்துள்ளது இப்புத்தகம் - இரமேசுபாபு

  ReplyDelete
  Replies
  1. அதிக விளக்கங்கள் மற்றும் வண்ணப்படங்களுடன் அருமையான நூல். நன்றி.

   Delete
 3. இம்மாதிரியான நல்ல நூல்களை அறிமுகப்படுத்தும் தங்கள் முயற்சி பாராட்டுதற்குரியது.

  ReplyDelete
  Replies
  1. பிற்காலச் சோழர் கோயில்களில் மிகவும் முக்கியத்துவம் பெற்ற இக்கோயிலைப் பற்றி எழுதியதைப் பெருமையாகக் கருதுகிறேன். நன்றி.

   Delete
 4. தாராசுரம் ஐராவதீசுவரர் திருக்கோயில் (இராசராசேச்சரம்) : குடவாயில் பாலசுப்ரமணியன்
  புத்தகம் பற்றிய அருமையான மதிப்புரை.
  நன்றி ஐயா

  ReplyDelete
  Replies
  1. என் கல்லூரி நாள்களில் இக்கோயிலுக்கு நண்பர்களுடன் வந்தபோது அகழாய்வுப் பணிகள் நடைபெற்றன. அப்போது பெரிய செங்கற்களைக் கொண்ட கட்டுமானங்களைக் காணமுடிந்தது. முன்னர் புத்தர் விகாரம் அங்கிருந்ததாகக் கூறிக்கொண்டார்கள். அக்காலகட்டத்திலிருந்தே எனக்கும் நண்பர்களுக்கு இக்கோயிலின்மீதான ஈடுபாடு அதிகரித்தது. நன்றி.

   Delete
 5. அருமையான நூலை
  அற்புதமாக அறிமுகப்படுத்தியமைக்கு
  மனமார்ந்த நன்றி

  ReplyDelete
  Replies
  1. ஒரு கலைப்பெட்டகத்தைப் பற்றி எழுதும் வாய்ப்பு கிடைத்ததைப் பெரும் பேறாகக்கருதுகிறேன். நன்றி.

   Delete
 6. சென்ற இடம்தான் என்றாலும் தங்களின் மதிப்புரையை படித்தவுடன் மறுபடியும் ஐராவதீஸ்வரர் கோயிலுக்கு அப்புத்தகத்துடன் சென்று தரிசிக்கும் ஆவல் உண்டாகிறது

  ReplyDelete
 7. ஒவ்வொரு முறை செல்லும்போதும் புதிதாகச் செல்வது போன்ற உணர்வு ஏற்படும். எனது எழுத்து தங்களது ஆவலைத் தூண்டிவிட்டதறிந்து மகிழ்ச்சி. நன்றி.

  ReplyDelete
 8. வழிகாட்டித்துணையின்றி கோவிலின் தகவல்களைத் தரும் நூல் விலை ரூ.1000-/மட்டும்தான். இசைக்கும் படிக்கட்டுகள் இருக்கும் இடம் என்று கேள்விப்பட்டு ஒரு முறை அங்கு சென்று தேடி அலைந்தேன். மேலும் ஏதோ புனர் நிர்மாணம் நடந்து கொண்டிருந்தபடியால் எதையும் கவனிக்க முடியவில்லை. மறு முறை என்று ஒன்றிருந்தால் கவனமாகப் பார்க்கவேண்டும் தகவல்களுக்கு நன்றி.

  ReplyDelete
  Replies
  1. இரண்டாம் கோபுரத்திற்கு முன்பாக பலிபீடமும் இடபக்கொட்டிலும் உள்ளன. பலிபீடத்தையொட்டி இசைக்கும் படிக்கட்டுகள் உள்ளன. தற்போது மிகச் சிறப்பாக கோயில் காட்சியளிக்கிறது. மறுமுறை என்று உண்டு. தாஙகள் அதனைப் பார்ப்பீர்கள், ரசிப்பீர்கள். நன்றி.

   Delete