09 April 2015

Daughter of the East: Benazir Bhutto

தனிமை சிறைச்சாலையின் உள்ளிருந்து என் அப்பா கேட்கிறார்,
"நீங்கள் ஏன் வந்தீர்கள்
என் அம்மா எதுவும் பேசவில்லை.

"இதுதான் கடைசி சந்திப்பா?" அவர் கேட்கிறார்.
என் அம்மாவால் மறுமொழி கூறமுடியவில்லை.
"அப்படித்தான் நினைக்கிறேன்" என்றேன் நான்.

அருகிலுள்ள சிறைக்கண்காணிப்பாளரை அழைக்கிறார். அவர்கள் என் தந்தையை எங்களுடன் தனியாக விட்டதேயில்லை......
"நாள் குறித்தாகிவிட்டதா?"
"நாளை காலை" என்கிறார் சிறைக்கண்காணிப்பாளர்.
"எந்நேரம்?"
"சிறைச்சாலை விதிகளின்படி காலை 5.00 மணிக்கு"
"உங்களுக்கு எப்போது தகவல் கிடைத்து?"
"நேற்றிரவு", அவர் தயக்கமாகக் கூறினார்.
என் அப்பா அவரைப் பார்க்கிறார்.

"என் குடும்பத்தாருடன் நான் எவ்வளவு நேரம் இருக்கலாம்?"
"அரை மணி நேரம்"
"சிறைச்சாலை விதிகளின்படி எங்களுக்கு ஒரு மணி நேரம் அனுமதி உண்டே?" என்கிறார் என் அப்பா.
"அரை மணி நேரம்" கண்காணிப்பாளர் மறுபடியும் திருப்பிச்சொல்கிறார், "அது எனது ஆணை"
"நாள் குளிக்கவும் முகச்சவரம் செய்துகொள்ளவும் ஏற்பாடு செய்யுங்கள்"  என்று என் அப்பா அவரிடம் கூறுகிறார். "உலகம் அழகானது. அதனை சுத்தமாக்கிவிட்டுச் செல்ல விரும்புகிறேன்".

அரை மணி நேரம். என் வாழ்க்கையில் நான் அதிகம் நேசித்தவரை வழியனுப்ப அரை மணி நேரம். என் நெஞ்சின் வலி அதிகமாகிறது. நான் அழக்கூடாது. அழுது என் அப்பாவின் வேதனையை அதிகப்படுத்திவிடக்கூடாது.
அவர் மேசையிலுள்ள விரிப்பில் அமர்ந்திருக்கிறார். அது மட்டுமே அந்த அறையில் உள்ளது. மேசை நாற்காலி அனைத்தையும் அவர்கள் எடுத்துச் சென்றுவிட்டனர், அவரது படுக்கையையும்கூட.

"இவற்றையெல்லாம் எடுத்துக்கொள்" என்று கூறி நான் முன்னர் கொண்டு வந்திருந்த நூல்களையும் இதழ்களையும் தருகிறார்.....
அவருக்காக அவரது வழக்கறிஞர்கள் வாங்கித் தந்த சில சிகரெட்டுகளை என்னிடம் தருகிறார்...அவர் தன்னுடன் சாளிமர் கலோன் பாட்டிலையும் வைத்துள்ளார்.
அவர் தன் மோதிரத்தைத் தருகிறார். ஆனால் என் அம்மாவோ அதை வைத்துக்கொள்ளும்படி அவரிடம் கூறுகிறார். "இப்போதைக்கு நான் வைத்துக் கொள்கிறேன். எனக்குப் பின் அது பெனாசிருக்குப் போகவேண்டும்" என்று என் அம்மாவிடம் கூறுகிறார்....

சிறையில் ஒரே இருட்டு. அவரை நான் தெளிவாகப் பார்க்கமுடியவில்லை.  ஒவ்வொரு முறையும் நாங்கள் வரும்போது சிறையில் அவருடன் இருக்க அனுமதிப்பார்கள். ஆனால் இன்று அவ்வாறில்லை.  நானும் அம்மாவும் சிறைக் கதவின் கம்பிகளுக்கிடையே முணுமுணுத்து பேசுகிறோம்.

"நீங்கள் அனைவரும் அதிகம் கஷ்டப்பட்டுவிட்டீர்கள்" அவர் கூறுகிறார், "இன்றிரவு அவர்கள் என்னை கொல்லப் போகிறார்கள். நீங்கள் விரும்பினால் அரசியலமைப்புச்சட்டம் நீக்கப்பட்ட நிலையில் பாகிஸ்தானை விட்டுச் சென்றுவிடலாம்.  உங்களுக்கு அமைதி தேவை என்று புதிய வாழ்க்கை வாழவிரும்பினால்  ஐரோப்பா சென்றுவிடலாம். நாங்கள் உங்களை அனுமதிக்கிறேன். நீங்கள் போகலாம். 

எங்கள் இதயம் சுக்குநூறாக உடைய ஆரம்பித்தது. "இல்லை, முடியாது" என்றார் அம்மா. "நாங்கள் போகமுடியாது, போகமாட்டோம். ஜெனரல்கள் நாங்கள் தோற்றதாக நினைத்துவிடக்கூடாது....நாங்கள் போய்விட்டால் நீங்கள் ஆரம்பித்த கட்சியை வழிநடத்திச்செல்ல ஒருவருமில்லை."
"பிங்கி நீ?" அப்பா கேட்கிறார்.
"நான் போகவே மாட்டேன் அப்பா" என்றேன் நான்.
அவர் சிரிக்கிறார். "எனக்கு மகிழ்ச்சியே. நான் உன்னை எவ்வளவு நேசித்தேன் என வார்த்தைகளால் கூற முடியாது.  நான் உன்னை அதிகம் நேசித்தேன். நீ எனக்கு ஒரு அணிகலன், எப்போதுமே."
"உம். நேரமாகிவிட்டது" என்கிறார் சிறைக் கண்காணிப்பாளர்.

சிறைக்கதவின் கம்பிகளை நான் இறுக்கமாகப் பிடித்தேன்.
"தயவு செய்து கதவைத் திறந்துவிடுங்கள். நான் என் அப்பாவுக்குப் பிரியாவிடை கொடுக்க விழைகின்றேன்" என்றேன் நான்.
சிறைக்கண்காணிப்பாளர் மறுக்கிறார்.

"தயவுசெய்து திறந்துவிடுங்கள்" என்கிறேன். பாகிஸ்தானின் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதம மந்திரி என் அப்பா. நான் அவரது மகள். இது எங்களது கடைசி சந்திப்பு. நான் அவரை அன்பாகப் பிடிக்க ஆசைப்படுகிறேன்."
சிறைக்கண்காணிப்பாளர் மறுக்கிறார்.   

கம்பிகளுக்கிடையே நான் என் அப்பாவின் கையைப் பிடிக்க முயற்சிக்கிறேன். மலேரியா, வயிற்றுப்போக்கினால் பாதிக்கப்பட்டு மெலிந்த தேகத்தோடு அவர் இருக்கிறார். நேராக நிமிர்ந்து என் கையை வாஞ்சையாகப் பிடிக்கிறார்.
"இன்று இரவு நான் இவ்வுலகிலிருந்து விடுதலை பெறுவேன்.  என் அப்பா, என் அம்மா, முன்னோர்களுடன் சேர்ந்துவிடுவேன்....." என்கிறார் என் அப்பா.
சிறையதிகாரிகள் அங்கு வருகிறார்கள்.

"போய் வருகிறேன், அப்பா" அப்பாவிடம் கூறுகிறேன். அம்மா, அப்பாவை கம்பிகளுக்கிடையே தொட முயற்சிக்கிறார். அங்கிருந்து நகர்கிறோம். நான் திரும்பிப் பார்க்க ஆசைப்படுகிறேன். எனக்குத் தெரியும், என்னால் கட்டுப்படுத்த முடியாது என்று.
"மறுபடியும் நாம் சந்திக்கும்வரை" என்ற அவரது சொற்கள் என் காதில் விழுவது போல் உள்ளன.

எப்படியோ என் கால்கள் நகர்கின்றன. ஆனால் உணரமுடியவில்லை. நான் கல்லாகிப்போனேன். ஆனால் நகர்கிறேன்.... என் தலைப்பகுதி மட்டுமே உணர்வோடு இருப்பதுபோல் உள்ளது. நான் தலையை உயர்த்திய நிலையில் இருக்க வேண்டும். அவர்கள் அனைவரும் எங்களை கவனித்துக்கொண்டிருக்கின்றார்கள்.

பூட்டப்பட்ட கதவுகளின் அருகே கார் காத்திருக்கிறது. வெளியே காத்திருக்கும் கூட்டம் எங்களைப் பார்க்கமுடியாது.....வாசலின் வழியாக கார் வேகமாக நகர்கிறது.....
5.00 மணியாயிற்று. 6.00  மணியாயிற்று. நான் விடும் ஒவ்வொரு மூச்சும் என் அப்பாவின் கடைசி மூச்சினை நினைவூட்டின.  "இறைவா, ஏதாவது அதிசயம் நிகழக்கூடாதா?" என்று நானும் என் அம்மாவும் வேண்டுகிறோம்.  "ஏதாவது நல்லது நடக்கவேண்டும்".... .... ....

இறப்பை நோக்கிய அந்த நிமிடங்கள் நகர்வது என்பதானது.. கொடுமை... நானும் அம்மாவும் அமர்ந்திருந்தோம். சில நேரங்களில் அழுதோம்........அந்த அறையில் என் அப்பா தனிமையில் எப்படி உணர்வார்? ஒருவருமே அவர் அருகில் இல்லையே? அவர் எந்த நூல்களையும் வைத்துக்கொள்ளவில்லையே? ஒரே ஒரு சிகரெட்தானே இருந்தது..... ... .... "அம்மா, என்னால் பொறுத்துக்கொள்ளமுடியவில்லை. மணி 1.30. கடைசியில் அழுதுவிட்டேன். .... "தூங்க முயற்சி செய்" என்றார்.

அரை மணி நேரத்தில் நான் படுக்கையில். என் உணர்வோ என் அப்பாவின் கழுத்தை இறுக்கும் கயிற்றைப் பற்றியே.
அன்று இரவு வானமே அழுதது....


தன் தந்தை தூக்கிலிடப்படுவதற்கு முதல் நாள் பெனாசிர் தன் அம்மாவுடன் சிறைச்சாலை சென்று அவருடன் பேசியதை அவர் எழுதியுள்ளவிதம் மிகவும் உணர்வுபூர்வமாக இருக்கும்.  இவ்வாறான பல நிகழ்வுகளைக் கொண்டது பெனாசிர் பூட்டோவின் சுயசரிதை. இந்நூலின் புதிய பதிப்பின் முன்னுரையில் அவர் கூறுகிறார்: "I did n't choose this life; it chose me". (p.xi) பிற அரசியல் தலைவர்களின் சுயசரிதையை நான் படித்துள்ளேன். 

இவரது எழுத்தில் அவரது துணிவு, தன் மக்கள் மீதான நேசம், நாட்டின் மீதான பற்று, உறுதியாக முடிவெடுக்கும் திறன், நாடு நடப்புகளை நன்கு மனதில் உள் வாங்கிக் கொள்ளும் ஆற்றல், பெண்ணால் சாதிக்க முடியும் என்று கூறி சாதித்த பெருமை, குடும்பத்தில் பலரை இழந்த மன வேதனையிலும் நெஞ்சுறுதியோடு இருந்தமை என அவருடைய குணங்களைப் பலவாறாகக் கூறலாம். 

அவரது நூலைப் படிக்கும்போது ஏதோ நமக்கும் ஓர் இழப்பு ஏற்பட்டது போல, மகிழ்ச்சி ஏற்பட்டதுபோல உள்ளது. நாட்டுக்காகவே தன் உயிரைப் பணயம் வைத்து, நாட்டுக்காகவே தன் உயிரைத் தந்துள்ளார். 

படிக்கும்போது பல இடங்களில் மனம் உறைந்துவிட்டது. குடும்ப வாழ்க்கையையும், அரசியல் வாழ்க்கையையும் முற்றிலும் நேசித்து தன் பங்கினை அளித்துள்ளார் பெனாசிர். படிக்கப்பட வேண்டிய சுயசரிதைகளில் இதனையும் முக்கியமானதாகக் கொள்ளலாம். 

Daughter of the East: An Autobiography, Benazir Bhutto, Pocket Books, 2008, pp.444+xx

முன்னர் முகநூலில் எழுதிய பதிவின் மேம்படுத்தப்பட்ட வடிவம்.

19 comments:

  1. வணக்கம் முனைவரே ஒவ்வொரு வரிகளும் படிக்கும்போதே கண்கள் கசிந்து விடத்தொடங்கி விட்டது.... எவ்வளவு வேதனையைத் தந்திருக்கும் அந்த நொடிகள். எதிரிக்கும் வரக்கூடாது இந்த நிலைகள்.
    தமிழ் மணம் 1

    ReplyDelete
  2. எதிர்த்து நிற்கும் நாட்டின் அதிபர் என்ற போதும் -
    பூட்டோவின் கடைசி நிமிடங்கள்..
    மனதை ரணமாக்கியது..

    பெனாஸிர் மற்றும் அவரது தாயாரின் - இதயங்கள் எப்படித் துடித்திருக்கும்?..

    ReplyDelete
  3. வணக்கம்
    ஐயா

    கதையை படித்த போது கண்களில் கண்ணீர் மல்கியது... உணர்வு மிக்க வரிகள்... இப்படியான சோதனைகள் யாருக்கும் வரக்கூடாது.. உண்மையில் படிக்க வேண்டும் என்று மனம் துடிக்கிறது... சிறப்பாக சொல்லியமைக்கு வாழ்த்துக்கள் ஐயா.த.ம3

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  4. அருமையான பதிவு! யாராக இருந்தாலும் மரணம் கண் முன்னே காத்திருப்பதை உணரும் நிமிடங்கள் கொடுமையானவை. அதுவும் தன் அன்பிற்குரியவர்கள் மறையப்போகிறர்கள் என்பதை உணர்ந்து வலியுடன் காத்திருப்பது மிகவும் கொடுமை!

    ReplyDelete
  5. படிக்கும்போது பல இடங்களில் மனம் உறைந்துவிட்டது. குடும்ப வாழ்க்கையையும், அரசியல் வாழ்க்கையையும் முற்றிலும் நேசித்து தன் பங்கினை அளித்துள்ளார் பெனாசிர். படிக்கப்பட வேண்டிய சுயசரிதைகளில்,
    இது மிகவும் முக்கியமானது எனபதில் மாற்றுக் கருத்துக்கு இடமே இல்லை அய்யா!
    த ம +1
    நட்புடன்,
    புதுவை வேலு

    ReplyDelete
  6. முடிவு வரை மனம் பதபதைத்தது...

    ReplyDelete
  7. அன்புள்ள அய்யா,


    Daughter of the East: Benazir Bhutto ஓர் அருமையான தன் தந்தை தூக்கிலிடப்படுவதற்கு முதல் நாள் பெனாசிர் தன் அம்மாவுடன் சிறைச்சாலை சென்று அவருடன் பேசியதை அவர் எழுதியுள்ளவிதம் மிகவும் உணர்வுபூர்வமாக உள்ளது.

    தூக்கிலப்படுவதற்கு முன்னால் அவரின் மனநிலை... குடும்பத்தினரின் மனிநிலை...நிரந்தரப்பிரிவு... பாசம்...
    "தயவுசெய்து திறந்துவிடுங்கள்" என்கிறேன். பாகிஸ்தானின் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதம மந்திரி என் அப்பா. நான் அவரது மகள். இது எங்களது கடைசி சந்திப்பு. நான் அவரை அன்பாகப் பிடிக்க ஆசைப்படுகிறேன்." தந்தை மகள் பாசத்தின் உச்சம்.

    ஒவ்வொரு நொடியும் யுகமாக...

    அருமையான பதிவு.
    -நன்றி.
    த.ம. 6.

    ReplyDelete
  8. மனம் கனத்துத்தான் போய்விட்டது ஐயா
    தம +1

    ReplyDelete
  9. வார்த்தைகளினால் சொல்ல முடியாத சோகம்.

    ReplyDelete
  10. அன்பின் அய்யா,
    ஒரு தந்தைக்கும் மகளுக்குமான பாசம் தோய்ந்த, மரணத்தினை எதிர்நோக்கிய, உணர்வுப் போராட்டத்தினை தெளிவாக வெளிப்படுத்தியுள்ளது இந்தப் பதிவு.

    ReplyDelete
  11. எத்தனை கஷ்டங்கள்......

    சிறப்பான புத்தகம் பற்ற்ய பதிவு. படிக்கத் தூண்டியது உங்கள் பகிர்வு.

    ReplyDelete
  12. பதவியில் இருந்தபோது பூட்டோ ஆடிய ஆட்டம் கொஞ்சமல்ல. இந்தியர்களை நாய்கள் என்று வர்ணித்ததாக படித்த ஞாபகம். யாராக இருந்தாலும் தூக்கிலிடப்பட்டு இறப்பது கொடுமையானது அதை உருக்கமாக விவரித்துள்ளார் பேனசீர்.
    அதை உள்வாங்கி அற்புதமாக எழுதி இருக்கிறீர்கள்

    ReplyDelete
  13. வணக்கம் ஜம்புலிங்கம் ஐயா. தங்களுக்கும், குடும்பத்தாருக்கும் என் இனிய தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துக்கள்!

    ReplyDelete

  14. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் எனது இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் !!

    ReplyDelete
  15. இறப்பு என்பது அறியாமல் நிகழவேண்டும் மரணம் பற்றிய பய ம் கொடுமையானது மரணிப்பவருக்கும் சரி அதை எதிர்கொள்ள வேண்டிய உறவுகளுக்கும்சரி பெனஜிர் புட்டோவின் பதிவு நெஞ்சை குலைக்கிறது. பகிர்ந்தமைக்கு நன்றி. .

    ReplyDelete
  16. பதிவு அருமை! ஆனால் நெஞ்சை உலுக்குகின்றது. பூட்டோ எப்படிப்பட்ட மனிதராக இருந்தாலும், மரணம் என்பது நம் கண் முன் னிதர்சனமாகத் தெரியும் போது அதன் கொடுமை இறப்பவருக்கு மட்டுமல்ல அவரது உற்றார் உறவினருக்கும் அந்த நிமிடங்கள் மனதை மரணிக்க வைக்கும் ஒரு நிகழ்வு. மரணம் என்பது இயற்கையாகச் சம்பவிக்க வேண்டும்.

    புத்தகத்தைப் பற்றி பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி ஐயா!

    ReplyDelete
  17. Great sir...very good...really heart touching. Sivakumar Ramasamy (thro email : rams_shiva@yahoo.com)

    ReplyDelete