10 September 2016

நலம், நலமறிய ஆவல் : எஸ் வி வேணுகோபாலன்

தி இந்து நாளிதழின் வாசகர் என்ற நிலையில் அறிமுகமானவர் திரு எஸ்.வி.வேணுகோபாலன் அவர்கள். நாளிதழ்களிலும் எனது வலைப்பூக்களிலும் வெளியாகும் எனது கட்டுரைகளைப் படித்து கருத்து கூறுவார். நானும் அவரது எழுத்துகளை தி இந்து (ஆங்கிலம் மற்றும் தமிழ்) இதழ்களில் வாசித்து எனது கருத்துகளைப் பகிர்ந்துகொள்ள ஆரம்பித்தேன். கருத்துப் பரிமாற்றத்தைத் தொடர்ந்து அவர் எழுதிய நூல்களை மார்ச் 2016 வாக்கில் அனுப்பிவைத்திருந்தார். நூல்களைப் பெற்ற உடனே படித்துவிட்டாலும் படித்ததைப் பகிர்ந்துகொள்ளும் வாய்ப்பு தற்போதுதான் கிடைத்தது. அந்நூல்களைப் பற்றிச் சுருக்கமாக அறிவோம், வாருங்கள்.

அவருடைய நான்கு நூல்களும் உடலைப் பாதுகாக்கவேண்டிய முறையையும், முக்கியத்துவத்தையும் மிகவும் எளிதாக எடுத்துக் கூறுகின்றன. இந்த நான்கு நூல்களுமே மருத்துவர் பி.வி.வெங்கட்ராமன் அவர்களுடைய ஆலோசனைக் குறிப்புகளை உதவியாகக் கொண்டு எழுதப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அல்சரே வராதே அருகினில்!, கொதிக்காதே என் ரத்தமே, நீரிழிவு இழிவல்ல, இரும்பை விரும்பு, எலும்பே எலும்பே தேயாதே, கண்ணே என் கல்லீரலே, (காலைக்) கடன்பட்டார் நெஞ்சம் போல, தோல் காப்பியம், இதயம் : உண்மையான எந்திரன், கொஞ்சம் காது கொடுத்துக் கேளுங்களேன் என்ற நிலையில் உள்ள உட்தலைப்புகள் வாசகர்களின் ஆவலை மேம்படுத்தி விடும். 

நலம், நலமறிய ஆவல்
நோய்த்தடுப்பு அம்சங்களைச் சுருக்கமாக இந்நூல் எடுத்துரைப்பதாகக் கூறுகிறார் ஆசிரியர். அந்தந்தப் பகுதியில் அந்தந்த உணவு வகையை எடுத்துக்கொள்வது இயற்கையோடு நம்மை இயைபு கொள்ளவைக்கும் (ப.6), கொலஸ்டிரால் கூடவே கூடாது என்ற தப்பெண்ணம் சமூகத்தில் உருவாக்கப்படுகிறது (ப.10), உபரி அளவு கொழுப்பைத் தவிர்த்தால் போதும், அதிகமான மாவுப்பொருள்களைத் தவிர்த்துவிடுவதும் நல்லது (ப.13), BPயில் சாதாரணமான ஏற்ற இறக்கங்களுக்காக அதன் காரணங்கள் புரியாமல் பீதி அடைவது தேவையற்றது (ப.17), ஒட்டாத தோசைக்கல் எப்படி இரும்புச்சத்தைத் தரும்? (ப.21) என்பன போன்ற கருத்துகள் நாம் மனதில் பதியவைத்துக்கொள்ளவேண்டியவை.  

உடலும் உள்ளமும் நலம் தானா?
முந்தைய நூலைப் போலவே இந்நூலும் அச்சத்திற்கு பதிலாக அக்கறையைப் பேசுகிறது என்கிறார் நூலாசிரியர். சர்க்கரை பிரச்சனை, நோய் அல்ல. ஒரு சமன்பாடு தவறிய நிலை. அவ்வளவுதான் (ப.7),  உறக்கத்தைத் தவிர்க்க மாத்திரைகள் போடுவது தவறானது (ப.22), கிராமங்களில் உளுத்தங்களி செய்து கொடுப்பது புரோட்டீன் சத்துக்காகத்தான். பெண் குழந்தைகள் தானிம், பயறு வகைகளில் தான் தங்கள் உடல் நலத்தைத் தேட முடியும். சோயா பீன்ஸ் மட்டும் கூடவே கூடாது (ப.31), மாதவிடாய் காலத்திலும், மெனோபாஸ் சமயத்திலும், பெண்ணுக்குள் ஏற்படும் உளச்சோர்வும் உளைச்சலும் எழுத்தில் கொண்டுவர முடியாதது. கருப்பை அகற்றுதல் அவளை கூடுதலாகவே உளரீதியாகப் பாதிக்கும் (ப.37) என்ற நிலையில் தேவையான இடங்களில் எச்சரிக்கையாகவும், புரிந்துகொள்ளும் நிலையிலும் வெளிப்படுத்தியுள்ள விதம் அருமை. 

எல்லோரும் நலமுற்றிருக்க...
விவரமறிந்த தாய்மார்கள் குழந்தையை மடியில் நீளவாக்கில் படுத்தமேனிக்கு வைத்து பாலூட்டுவதில்லை. தலைப்பாகத்தைச் சற்று உயர்த்திக் கையணைப்பாக வைத்துப் பிடித்துக்கொண்டு குழந்தையைப் பாலருந்த வைக்கிறபோது, காற்று அதிகம் உட்புக விடாமல் செய்தபடி தேவையான அளவிற்குப் பாலை ஆசைதீர உட்கொள்ளுகிறது குழந்தை (ப.11), ஏப்பம் பந்தால் சலிக்கவும் வேண்டாம். அதை ஒரு அன்றாட நடவடிக்கையாக வைத்துக்கொண்டிருக்கவும் வேண்டாம். தவிர்க்க முடிந்தால் தவிர்த்துவிடுவது அல்லது தானாக ஏற்பட்டால் அனுமதித்துவிடுவது என்று பழகலாம் (ப.13), தலைவலி வந்தால் உடனே நிவாரணி என்று மாத்திரைகளை அடுக்கிக் கொண்டு போவது நாள்பட நாள்பட வேறு தீவிர பிரச்சனைகளை உருவாக்கும் (ப.18), உடலின் செல்கள் ஒவ்வொன்றிற்கும் தோற்றம், வளர்ச்சி, அழிவு என்ற மூன்று பருவங்கள் உண்டு. பழையன கழிதலும், புதியன புகுதலும் சங்கிலித் தொடராக நிகழ்கிற வரை பிரச்சனை இல்லை. இந்த ஒழுங்கமைவுத் தன்மை சிதைந்து செல்கள் கன்னாபின்னாவென்று பெருகுவது அல்லது வளர்ச்சி முடமாகிப்போவது என்பதுதான் கேன்சர் (ப.46) என்றவாறான கருத்துகள் முன்வைக்கப்பட்டுள்ளன.  

உடலும் உள்ளமும் கொண்டாடும் இடத்திலே
மஞ்சட்காமாலை என்பது நோயல்ல, கல்லீரல் நோயுற்று இருப்பதன் அறிகுறி. விதவிதமான நோய்கள் கல்லீரலின் பாதிப்பை வெளிப்படுத்தக்கூடும் (ப.10), ஆண் குழந்தைகளுக்கு 14-16 வயதுக்கட்டமும், பெண் குழந்தைகளுக்கு 12-14 வயதுக்காலமும் வீச்சான வளர்ச்சி காணும் பருவம். இந்த நேரத்தில் அவர்கள் பச்சைக்காய்கறிகள், கனிவகைகள் போன்வற்றை உவப்போடு உண்ணவேண்டியது அவசியம் (ப.15), காலைக்கடன்களை முடிக்க அவரவருக்குரிய திட்டப்படி செயல்படுவதில் தவறில்லை. இது குடல் தன்னை தகவமைத்துக்கொள்ள உதவும். (ப.21), வைட்டமின் D பற்றாக்குறை இருக்கும்போது நாம் எவ்வளவு கால்சியம் சேர்த்துக்கொண்டாலும், கால்சியம் மாத்திரைகளாகவே உட்கொண்டாலும் அதை உடல் பயன்படுத்திக்கொள்ள முடியாது என்பது இயற்கையின் நுட்பமான அம்சம் (ப.25), மண்டை வெடிக்கும் வரை, சன் ஸ்ட்ரோக் வரும் வரை வெயிலில் அலையவேண்டாம், நியாயம்தான்,ஆனால் வெயில் படாத திருமேனி என்ற பட்டம் நமக்கு எதற்கு? (ப.28). நாம் பராமரிக்கும் அளவே உடல் நமக்கு உதவும் என்ற நிலையிலான கருத்துகள் தெளிவாக விவாதிக்கப்பட்டுள்ளன.

விழிப்புணர்வினை உண்டாக்கும் கருத்துகள்
இந்த நான்கு நூல்களிலும் ஆங்காங்கே நமக்கு விழிப்புணர்வினைத் தரும் அளவிலான கருத்துகளையும், யதார்த்தத்தையும், திருத்திக்கொள்ளும் வழிகளையும் ஆங்காங்கே தந்துள்ளார் நூலாசிரியர். நம்மை வைத்து பணம் பண்ண முயல்வோரைச் சாடுகிறார். சுகாதாரமும் கல்வியும் சுதந்திர இந்தியாவின் பட்ஜெட்டில் எப்போதும் முன்னுரிமை பெறவில்லை (நலம், ப.4), தேவையற்ற பயத்தை பணமாக்கத்தான் போட்டி விற்பனையாளர்கள் கொலஸ்டிரால் இல்லாத எண்ணெய் என்று விளம்பரம் செய்கின்றனர் (நலம், ப.11), 'நார்மல்' பிரசவம் நடக்கக்கூடியதை 'சிசேரியன்' ஆக்குவது வன்முறைதானே? (உடலும்..நலம்தானா, ப.7), அணைத்த அடுப்பில் அஞ்சு நாள் சமைக்கலாம் போல தீ, தீ என்று எரிகிற தீயின் உச்சபட்ச வெப்பத்தில் திணறத்திணற உருவாகிறது வேக உணவு (Fast Food) (உடலும்..நலம்தானா, ப.12), உணவுக்கட்டுப்பாட்டைக் கடைபிடித்தால், உடல் அசர வேலை செய்தால் தொப்பை தானே கரையும். எதற்கு காசு கொடுத்து பெல்ட், ஸ்டிக்கர், வைப்ரேட்டர் என்று வாங்கி ஏமாற வேண்டும்? அது விளம்பரக் கம்பெனி ஆசாமிகளது தொப்பைக்குத்தானே போகும்? (உடலும்..நலம்தானா, ப.16), பொதுவாக ஓட்டல் சாம்பாரிலும், இதர உணவுப்பொருள்களிலும் 200 சதவீதத்திற்கும் அதிகமாக உப்பு சேர்க்கப்பட்டிருக்கும். அது உணவுப்பொருள்கள் கெடாமல் இருப்பதற்காகவும், வாடிக்கையாளர்கள் அதிகம் சாப்பிட இயலாதவாறு இருப்பதற்குமான பிரத்தியேக ஏற்பாடு (எல்லோரும்..ப.23), மாற்று சிறுநீரக விவகாரம் மோசடியாகவும், சட்ட விரோதமாகவும் நடக்கிறது....பாதிப்புற்ற நோயாளியைவிடவும் அவருக்கான சிறுநீரகம் வழங்கும் முன்பின் அறிமுகம் இல்லாத கொடையாளரைவிடவும் இடையில் தரகுவேலை செய்வோர் அடையும் லாபமே அதிகம். நெறியற்ற மருத்துவர்கள் உள்ளிட்ட இத்தகைய நீசச்செயலில் இறங்குவோரின் கொள்ளை லாப வெறியில் என்னென்ன அத்துமீறல்கள் நடக்கின்றன என்பதும் தெரியும் (எல்லோரும்..ப.24), சுரங்கங்களிலும் நச்சு வேதியல் கழிவுகளுக்கிடையில் பணியாற்றவேண்டிய இடங்களிலும் தொழிலாளியின் மூச்சுப்பாதைக்குப் பாதுகாப்பு ஏற்பாடு செய்துகொடுக்க வேண்டியதைப் பெரும்பாலும் எஜமானர்கள் எவரும் மதிப்பதில்லை. அவர்களது நுரையீரல் படும் பாடு சொல்ல முடியாதது (எல்லோரும்..ப.28), மலம் கழிப்பதைப் பற்றிப் பேச மிகவும் யோசிக்க வேண்டியிருக்கிற சமூக நிலையை என்னவென்று சொல்வது?    (உடலும் உள்ளமும்..ப.20)

இந்த நூல்கள் படிப்பதற்கு மட்டுமல்ல. பாதுகாப்பதற்கும் கூட. தேவையானபோது அவசரத்திற்கு வீட்டில் உள்ள ஒரு மருத்துவராக இந்நூல்களை நாம் பயன்படுத்திக்கொள்ளலாம். நம் வீட்டுப் பாட்டியைப் போல புத்தி சொல்லும் பாங்கு, அனாவசியமாகப் பயந்து மனதைக் குழப்பிக்கொள்ளக்கூடாது என்ற நிலையில் நமக்குத் தரும் மனத் தைரியம், நமக்கு நாமே மேற்கொள்ளும் உணவு முறையும் உடற்பயிற்சியும் நம் வாழ்விற்கான ஆதாரம் என்ற நிலையில் எடுத்துக்கூறும் பக்குவமான போக்கு என்ற நிலையில் பல கோணங்களில் நூலாசிரியர், மருத்துவரின் ஆலோசனைப்படி வழங்கியுள்ளார். மருத்துவர் பி.வி.வெங்கட்ராமன் அவர்களுக்கு நன்றி கூறி, ஆரோக்கியமான மன நிலையையும், உடல் நிலையையும் வைத்துக்கொள்வதற்காக நூலாசிரியர் கூறியுள்ள கருத்துகளைச் சற்றே உணர்ந்து, புரிந்து, கடைபிடிக்க முயற்சிப்போம், பலன் பெறுவோம். 

நோயர் (நேயர்) விருப்பம் என்ற தலைப்பிலான டாக்டர் ஜி.ராமானுஜம் அவர்களின் நூலுக்கு அளித்துள்ள அணிந்துரையில் "நிலத்தடி நீரைத் தொலைத்த தலைமுறையினர் லாரிகளில் தண்ணீர் வரக் காத்திருக்கிறோம். மருத்துவம் ஜி.ராமானுஜம் அப்படி துணுக்குகளை சப்ளை செய்து சிரிக்க வைக்காமல், நமது கேணியில் ஊறிக்கொண்டிருக்கும் கல்கண்டு நீரை நாமாக எடுத்து அருந்திக் கொண்டாடக் கற்கும் வண்ணம் எழுதுகிறார். மனநல மருத்துவராக இருக்கும் அவர், நம் கேட்காமலே எழுதித்தரும் பிரிஸ்கிருப்ஷன், மனம் விட்டுச் சிரியுங்கள் என்பதுதான்". நூலாசிரியரோ நகைச்சுவை உணர்வு ததும்ப "இந்நூலை என்னை நம்பி உடலையும், மனதையும் ஒப்படைத்த நான் குணமாக்கிய/மோசமாக்கிய நோயாளிகள் அனைவருக்கும் காணிக்கையாக்குகிறேன்" என்கிறார். வாருங்கள், நகைச்சுவையை ரசிக்க இந்நூலையும் படிப்போம். 

நலம், நலமறிய ஆவல் (ரூ.20)
உடலும் உள்ளமும் நலம் தானா?  (ரூ.25)
எல்லோரும் நலமுற்றிருக்க... (ரூ.25)
உடலும் உள்ளமும் கொண்டாடும் இடத்திலே  (ரூ.30)
நோயர் (நேயர்) விருப்பம் (டாக்டர் ஜி.ராமானுஜம்) (ரூ.50)

பாரதி புத்தகாலயம், 7 இளங்கோ சாலை, தேனாம்பேட்டை, சென்னை 600 018
மின்னஞ்சல் : thamizhbooks@gmail.com/www.thamizhbooks.com

17 comments:

  1. அவசியம் அனைவரும் வாங்கிப் பயில வேண்டிய நூல்கள்
    அவசியம் வாங்கிப் படிப்பேன்
    நன்றி ஐயா

    ReplyDelete
  2. தலைப்புகள் உண்மையிலேயே மிகவும் கவர்கின்றன. ரசனை.

    தம +1


    நல்ல பகிர்வு.

    ReplyDelete
  3. தற்போது மதுரையில் நடக்கும் புத்தகக் கண்காட்சியில் இநநூல்கள் கிடைக்குமென நினைக்கிறேன் ,வாங்கிப் படிக்கிறேன் !

    ReplyDelete
  4. Great works of my dear SVV Will be useful for ever..
    .Simple way, humble opinion,.new style of writing..
    Vimalavidya

    ReplyDelete
  5. பயனுள்ள நூல்களின் அறிமுகம் அருமை..

    வாழ்க நலம்..

    ReplyDelete
  6. அருமையான கருத்துக்களை, தேவையான கருத்துக்களை கொண்ட புத்தகங்கள் விலையும் மலிவாய் இருக்கிறது.

    தேவையானதை தொகுத்து புத்தகம் வாங்கி படிக்கும் ஆசையை ஏற்படுத்தும் விமர்சனம்.
    நன்றி.

    ReplyDelete
  7. அனைவருக்கும் பயனுள்ள நூல்களை அறிமுகப்படுத்தியதற்கு நன்றிகள் பல. அருமையான விமர்சனம்.
    த ம 4

    ReplyDelete
  8. நல்லதோர் அறிமுகம். நன்றி ஐயா.

    ReplyDelete
  9. நல்ல நூல்கள்...
    நல்ல அறிமுகம்...
    அருமை ஐயா...

    ReplyDelete
  10. நல்ல நூல்களை அறிமுகப் படுத்தியதற்கு நன்றிகள் ஐயா

    ReplyDelete
  11. அருமையான புத்தகங்களை அறிமுகப்படுத்தியுள்ளீர்கள். அவசியம் வாங்கிப்படிக்க வேண்டியவை.

    ReplyDelete
  12. நல்ல பயனுள்ள பதிவு.

    ReplyDelete
  13. ஒரே பதிவினில் நூல்கள் விமர்சனம் + உடல் நலம் மற்றும் உளம் நலக் குறிப்புகள். முனைவருக்கு நன்றி.

    ReplyDelete
  14. வணக்கம் முனைவர் ஐயா !

    தங்கள் பதிவுகளே அந்த நூல்களை வாங்கிப் படிக்கும் எண்ணத்தை ஊக்குவிக்கின்றன நன்றி ! நல்லாரைக் காண்பதுவும் நன்றே நலமிக்க நல்லார் சொல் கேட்பதுவும் நன்றே ,,,ஔவை வாக்கு ! நன்றி ஐயா
    கண்டிப்பாக வாகிப் படிக்கிறோம்
    வாழ்க வளத்துடன்
    தம +1

    ReplyDelete
  15. அன்பின் முனைவர் பா ஜம்புலிங்கம் அவர்களுக்கு

    உடல் நலம் தொடர்பான நான்கு புத்தகங்கள், மருத்துவர் ஜி ராமானுஜம் அவர்களது அருமையான நகைச்சுவை கட்டுரைகளின் தொகுப்பு "நோயர் விருப்பம்" என்று ஐந்து நூல்களுக்கும் இத்தனை செறிவாக ஓர் அறிமுகம் செய்த விதம் வித்தியாசமாகவும் வியப்புறும் வண்ணமும் அமைந்திருக்கிறது.

    மருத்துவ சிகிச்சைக்காக சந்தித்த ஓமியோபதி மருத்துவர் பி வி வெங்கடராமன் அவர்களோடு வாய்த்த நட்பு, ஒரு தருணத்தில் அவர் அளித்த டாக்டர் ஹெக்டே அவர்களது நூலில் இருந்த முதல் கட்டுரையை (சிரிப்பின் மகத்துவம்) வாசித்து தமிழ் வாசகர்களுக்கு அதன் மருத்துவச் செய்திகளை எனது புரிதலில் எழுதிய முதல் கட்டுரை பேங்க் ஒர்க்கர்ஸ் யூனிட்டி இதழில் வெளியானதும், தொடர்ந்து எழுதத் தூண்டியது.

    பிவிவி அவர்கள் உடல் நலம் குறித்து வெவ்வேறு அம்சங்களை அவ்வப்பொழுது என்னிடம் எடுத்துச் சொல்வதும், அந்தக் குறிப்புகளை எனது மொழிநடையில் நான் எழுதவுமாக "நலம் நலம் அறிய ஆவல்" என்ற முதல் புத்தகம் வந்ததற்கு பாரதி புத்தகாலய மேலாளர் தோழர் நாகராஜன் அவர்களே முக்கிய காரணம். அந்தப் புத்தகம் 2005 உலக புத்தக தினத்தை ஒட்டி மலிவான விலைக்கு வெளியிடப்பட்ட நூறு நூல்களுள் ஒன்று. ஐந்து ரூபாய் விலையில் அந்தப் புத்தகத்தின் பிரதிகள் ஒரு லட்சம் வாசகரைச் சென்றடைந்ததாகச் சொல்கின்றனர். பல குடும்ப நிகழ்வுகள், திருமணங்களில் தாம்பூலப் பைகளில் இடம் பிடித்துக் கொண்டிருக்கிறது இந்தப் புத்தகம். எல்லாப் புகழும் மருத்துவர் பி வி வி அவர்களது சமூக அக்கறையோடு திகழும் மருத்துவ ஞானத்திற்குச் சொந்தம்...

    உங்களது வலைப்பூ பார்த்த அன்பர்கள் பலரும் நூல்களை வாங்க விரும்புவது கூடுதல் உற்சாகம் அளிக்கிறது. மருத்துவர் ஜி ராமானுஜம் அவர்களது நையாண்டிக் கட்டுரைகள் "புதிய ஆசிரியன்" என்னும் அருமையான மாத இதழில் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன. அவற்றின் முதல் தொகுப்புதான் நோயர் விருப்பம்......ஆரோக்கியமான நகைச்சுவை எழுத்து அவருடையது......பல இதழ்களும் நூலைப் பாராட்டி எழுதி இருந்தனர்.

    ஆய்வாளராக, நுட்பமிக்க வாசகராக, எழுத்தாளராக, தேடல் மிகுந்த பயணக்கட்டுரையாளராக, புலமை சான்ற நுண்மாண் நுழைபுலம் இருந்தும் ஆன்றவிந்து அடக்கமுடன் பழகும் பண்பாளராக விளங்கும் உங்களுக்கு மிக்க நன்றி, மீண்டும் மீண்டும்

    எஸ் வி வேணுகோபாலன்
    சென்னை 24

    94452 59691

    ReplyDelete
  16. தகவலுக்கு நன்றி! அய்யா...

    ReplyDelete
  17. தகவலுக்கு நன்றி! அய்யா...

    ReplyDelete