12 May 2018

நாலாயிர திவ்யப் பிரபந்தம் : இரண்டாம் திருவந்தாதி : பூதத்தாழ்வார்

பூதத்தாழ்வார் அருளிய இரண்டாம் திருவந்தாதியை (2182-2281) அண்மையில் நிறைவு செய்தேன். அவற்றில் சில பாடல்களைப் பொருளுடன் காண்போம். அடி மூன்றில் இவ் உலகம் அன்று அளந்தாய் போலும்; 
அடி மூன்று இரந்து அவனி கொண்டாய்; - படிநின்ற
நீர் ஓத மேனி நெடு மாலே! நின் அடியை
யார் ஓத வல்லார் அறிந்து?  (2182)
பூமியிலே அவதரித்து நின்ற கடல் வண்ணனான பெருமானே! முன்பு ஒரு காலத்தில் இவ்வுலகத்தை மூவடியாலே அளந்துகொள்பவன் போலே மூவடி நிலத்தை யாசித்துப் பெற்றாய்; இப்படிப்பட்ட உனது திருவடிகளை நன்றாகத் தெரிந்து கொண்டு பேசவல்லவர் யாவர் உளர்? (ஒருவருமில்லை).

திரிந்தது வெம் சமத்துத் தேர் கடவி; அன்று
பிரிந்தது சீதையை, மான் பின் போய்; புரிந்ததுவும்
பண் பள்ளி கொள்ள - அழகியதே நாகத்தின்
தண் பள்ளி கொள்வான் - தனக்கு. (2196)
கொடிய பாரதப் போரிலே தேரை நடத்திக் கொண்டு அலைந்ததும், இராமனாகத் திருவவதரித்த காலத்து மாயமானின் பின்னே சென்று பிராட்டியைப் பிரிந்து அலைச்சல்பட்டதும், தரையிலே படுத்துக் கொள்ளும்படி ஆசை கொண்டதும் (ஆகிய இச்செயல்கள் யாவும்) திருவனந்தாழ்வான் மீது பள்ளிகொண்டிருக்கும் பெருமானுக்கு ஏற்றவையோ?

சுருக்காக வாங்கிச், சுவாவி நின்று, ஐயார்
நெருக்கா முன், நீர் நினைமின் கண்டீர் - திருப் பொலிந்த
ஆகத்தான் பாதம்; அறிந்தும், அறியாத
போகத்தால் இல்லை பொருள். (2221)
கோழையானது உடலைச் சுருங்க வலித்து, உடம்பு முழுவதும் சூழ்ந்து கொண்டு நின்று (உயிர் போகும்போது கழுத்தளவிலே வந்து கூடி) நெருக்குவதற்கு முன்பே, பிராட்டி விளங்கும் திருமார்பையுடைய பெருமானுடைய திருவடிகளை நீங்கள் சிந்தியுங்கள். பகவத் விஷயத்தை அறிந்தவர்களாய் இருந்தும் அறியாதவர்களாகவே உங்களைச் செய்யவல்ல ஐம்பொறிகளால் உண்டாகும் இன்பங்களால் ஒரு பயனுமில்லை. 

கண்டேன் திருமேனி யான் கனவில்; ஆங்கு அவன் கைக்
கண்டேன் கனலும் சுடர் ஆழி; - கண்டேன்
உறு நோய் வினை இரண்டும் ஓட்டு வித்து, பின்னும்,
மறு நோய் செறுவான் வலி. (2248)
அடியேன் கனவு போன்ற சுய அனுபவத்திலே திருமேனியைச் சேவிக்கப் பெற்றேன். அப்போது அவனது திருக்கையிலே ஒளிவீசும் சுடர் மயமான திருவாழியைக் கண்டேன்; மிக்க நோய்களுக்குக் காரணமான புண்ணிய பாவங்களென்கின்ற இரு கருமங்களையும் தொலைத்துவிட்டுப் பின்னையும் ருசி வாசனைகளையும் அகன்றொழிந்தன; இவற்றைத் தொலைத்து அருளுபவனான எம்பெருமானுடைய மிடுக்கையும் காணப் பெற்றேன். 

தமர் உள்ளம், தஞ்சை, தலை அரங்கம், தண் கால்,
தமர் உள்ளும் தண் பொருப்பு, வேலை, தமர் உள்ளும்
மாமல்லை, கோவல் மதிள் குடந்தை என்பரே,
ஏ வல்ல எந்தைக்கு இடம். (2251)
பக்தர்களுடைய இதயம் - தஞ்சை மாமணிக் கோயில், சிறந்ததான திருவரங்கம், திருத்தண்கால், பக்தர்கள் தியானிக்கின்ற அழகிய திருமலை, திருப்பாற்கடல், பக்தர்கள் சிந்திக்கிற திருக்கடல்மல்லை, திருக்கோவலூர், திருமதில்களோடு கூடிய திருக்குடந்தை (ஆகிய இத்தலங்களெல்லாம்) எதிரிகளை முடிக்க வல்லவனான எம்பெருமானுக்கு இருப்பிடமென்பர். 

பின்னல் அரு நரகம் சேராமல், பேதுறுவீர்!
முன்னால் வணங்க முயல்மினோ - பல் நூல்
அளந்தானைக் கார்க்கடல் சூழ் ஞாலத்தை எல்லாம் 
அளந்தான் - அவன் சேவடி. (2272)
உடல் விழுந்த பின்பு கடினமான நரகத்தை அடையாமலிருக்கும்படிக்கு மனம் கலங்கியிருக்கும் மனிதர்களே! பலவகைப்பட்ட சாத்திரங்களினால் நிச்சயிக்கப் படுபவனும் கடல் சூழப்பட்ட பூமியையெல்லாம் அளந்த கொண்டவனுமான எம்பெருமானுடைய செவ்விய திருவடிகளை இப்போதே வணங்குமாறு செய்யுங்கள்.

எங்கள் பெருமான், இமையேர் தலைமகன் நீ!
செங்கண் நெடு மால்! திருமார்பா! - பொங்கு
பட மூக்கின் ஆயிரவாய்ப் பாம்பு அணைமேல் சேர்ந்தாய்
குடமூக்கில் கோயிலாக் கொண்டு. (2278)
சிவந்த திருக்கண்களை உடைய பெருமானே! பிராட்டியைத் திருமார்பில் உடையவனே! நித்தியசூரிகளுக்கத் தலைவனான நீ எங்களைப் பாதுகாப்பவனாய்க் கும்பகோணத் திருத்தலத்திலே கோயில் கொள்ளத் திருவுள்ளம் பற்றி, விளங்கும் படங்களையும் மூக்கையும் உடையவனும் ஆயிரம் வாயையுடையவனுமான ஆதிசேனடாகிய படுக்கையின் மீது பள்ளி கொண்டருளினாய்.

நாலாயிரத் திவ்யப் பிரபந்தம் : தொகுதி 3
உரையாசிரியர் :  முனைவர் இரா.வ.கமலக்கண்ணன்
வர்த்தமானன் பதிப்பகம், 21, இராமகிருஷ்ணா தெரு, தியாகராய நகர், 
சென்னை 600 017, முதற்பதிப்பு 2011
தொலைபேசி : 99418 63542, 90949 63125, 93806 30192, 2814 4995, 2814 0347,
43502995

இதற்கு முன்னர் நாம் வாசித்தது: முதல் திருவந்தாதி : பொய்கையாழ்வார்

பகிர்ந்துகொள்ள மற்றொரு செய்தி
திரு செந்தில்குமார் அவர்களுடன், 14 மே 2018

தமிழை நேசிக்கும் இதயத்துடன் (தஞ்சாவூர் காவல்துறை கண்காணிப்பாளர் முனைவர் த.செந்தில் குமார் அவர்களுடன்) இனிய மாலைப்பொழுது. பரந்துபட்ட அவருடைய வாசிப்பும், பேச்சும் வியக்க வைத்தன. வாழ்வியல் களஞ்சியம், அறிவியல் களஞ்சியம் உள்ளிட்ட தமிழ்ப்பல்கலைக்கழகப் பல்கலைக்கழக வெளியீடுகளின் முக்கியத்துவம், தமிழ் இலக்கியங்களை தமிழார்வத்தை இளைய தலைமுறையிடம் எடுத்துச் செல்லும் பரந்துபட்ட எண்ணம், மாணவர்களை ஊக்குவிக்கின்ற பேச்சு ஆகியவற்றில் தொடங்கி விக்கிபீடியா தொடர்பான என் பதிவுகள், பௌத்தக் களப்பணி மற்றும் ஆய்வு தொடர்பாக நல்லதொரு விவாதம். (நன்றி: திரு கரந்தை ஜெயக்குமார்)


14 மே 2018இல் மேம்படுத்தப்பட்டது

12 comments:

 1. நல்ல அறிமுகம், நல்ல பகிர்வு.​

  ReplyDelete
 2. கோழையானது உடலைச் சுருங்க வலித்து, உடம்பு முழுவதும் சூழ்ந்து கொண்டு நின்று (உயிர் போகும்போது கழுத்தளவிலே வந்து கூடி) நெருக்குவதற்கு முன்பே, பிராட்டி விளங்கும் திருமார்பையுடைய பெருமானுடைய திருவடிகளை நீங்கள் சிந்தியுங்கள்.//

  இப்போதே சிந்திப்போம்.
  திருவடிகளை வணங்குவோம்.
  பகிர்வு அருமை.

  ReplyDelete
 3. தங்களது படிப்பனுபவத்தை விளக்கமுடன் பகிர்ந்த விதம் அருமை.

  ReplyDelete
 4. இரண்டாம் திருவந்தாதியை நிறைவு செய்ததிலும், அதில் சில பாடல்களைப் பகிர்ந்துகொண்டதிலும் மிக்க மகிழ்ச்சி.

  பின்னல் அரு நரகம் - பின்னால் அரு நரகம் என்று வரவேண்டும்.

  ReplyDelete
  Replies
  1. இந்நூலில் பக்கம் 1138இல் பாடல் எண்.2272இல் முதல் அடி பின்னல் அரு.....என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. அதிலுள்ளவாறே குறிப்பிட்டுள்ளேன். இருப்பினும் தாங்கள் சுட்டிக்காட்டியமைக்கு நன்றி.

   Delete
 5. மற்றவர்களுக்கு சொல்வது தான் உங்களுக்கும் சொல்கிறேன். அடுத்த ஐந்து வருடத்தில் இந்த வலைதள வடிவமைப்பு கூகுள் மக்களால் எப்படி மாற்றம் பெறும்? இருக்குமா? இருக்காதா? என்று தெரியாது. உங்கள் எழுத்துக்களை மின் நூலாக மாற்றி விடுங்க.

  ReplyDelete
  Replies
  1. அவ்வாறான எண்ணத்தில் நானும் உள்ளேன். தங்களின் கருத்திற்கு நன்றி.

   Delete
 6. வணக்கம் சகோதரரே

  பூதத்தாழ்வார் அருளிய நாலாயிர திவ்ய பிரபந்தத்தில்,இரண்டாம் திருவந்தாதியை அவற்றின் சில பாடல்களை நன்கு பொருளுணரும்படி, எங்களுக்கு பகிர்ந்ததற்கு மிகவும் நன்றிகள். மிகவும் அருமை. நாராயணனின் நாமம் நாளும் நம் எண்ணத்தில் நிறைந்திருக்கட்டும்.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  ReplyDelete
 7. நல்ல பகிர்வு. பூதத்தாழ்வாரின் இரண்டாம் திருவந்தாதியின் சில பாடல்களைப்பகிர்ந்து தாங்கள் படித்த விளகக்த்தினையும் இங்கு பகிர்ந்தமை சிறப்பு. மிக்க நன்றி ஐயா..

  கீதா

  ReplyDelete
 8. தெரிந்து கொண்டேன். நல்ல போஸ்ட்.

  ReplyDelete