09 November 2019

காரியாபட்டி வட்டார மண்ணின் பெருமை : ஆர்.பரதன்



அண்மையில் நான் வாசித்த நூல் ஆர்.பரதன் எழுதியுள்ள காரியாபட்டி வட்டார மண்ணின் பெருமை என்பதாகும். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள காரியாபட்டி வட்டாரத்தின் பறவைப் பார்வையைக் கொண்டமைந்த இந்நூல் விருதுநகர் மாவட்ட சிறப்புகள், காரியாபட்டி வட்டார ஊர்களின் பெயர்களும், சிறப்புகளும் என்ற மூன்று தலைப்புகளைக் கொண்டு அமைந்துள்ளது.

“வானம் பார்த்த பூமி, மழை குறைவு, நதி ஓடும் பிற இடங்களைப் போலச் செழிப்பில்லை. முட்செடிகள் மட்டும் நிறைந்த வளமற்ற பூமி என்று மட்டுமே நமது ஊர்களைப் பற்றி அறிந்திருக்கும் நம் சந்ததியினருக்கு இங்கு வாழ்ந்த நன்மக்கள், ஈகைக்குணத்துடன் கொடுத்த கொடையாளிகள், வாழ்வினை வளமாக வைத்துக்கொள்ள நல்லறிவு தந்த பெருந்தகைகள், நோய்தீர்த்த கிரம மருத்துவர்கள், புகழ்மிக்க பதவி வகித்தோரையும் இம்மண்ணுக்குப் பெருமை தேடித் தந்தவர்களையும் பற்றித் தெளிவாக எடுத்துக்கூற முற்பட்டுள்ளது வெற்றி பெற்றுள்ளது என்பதைவிட ஓர் உந்துததல் தந்துள்ளது என்று பெருமைப்படலாம்.”  என்று நூலாசிரியர் தம் மண்ணின் பெருமையையும் இந்நூலின் முக்கியத்துவத்தையும் முன்வைக்கிறார்.

“காரியாபட்டி வட்டாரத்தின் முதன்மைத்தொழில் விவசாயமே. விவசாயம் அழிந்துவிடாமல் அதற்கென அமைப்புகள் ஆரம்பிக்கப்பட்டுப் பாதுகாக்கப்படவேண்டும். புன்செய்ப் பயிர்களான கம்பு, சோளம், கேழ்வரகு, எள், நிலக்கடலை போன்றவற்றிற்கு முக்கியத்துவம் கொடுத்துப் பயிரிட வேண்டும். வானம் பார்த்த பூமியையும் வளம் கொழிக்கச் செய்யப் புன்செய்ப் பயிர்கள் நிச்சயம் உதவும்….பல ஊர்களில் இருந்து வந்த பனைஓலைத் தொழில் மீண்டும் ஊக்குவிக்கப்படவேண்டும். மண்பாண்டத்தொழில், நெசவுத்தொழில், சிற்ப வேலைப்பாடுகள், பால் பண்ணைத்தொழில் போன்ற பாரம்பரியத்தைப் பறைசாற்றும் தொழில்கள் மலர இளைய தலைமுறை முன்வர வேண்டும்” என்று ஆசிரியர் குழுவினர் தம் எண்ணத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 11 வட்டாரங்களில் காரியாபட்டி வட்டாரம் ஒன்றாகும். 2228 ச.கி.மீ.பரப்பளவு கொண்ட இவ்வட்டாரத்தில் 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி சுமார் 1,05,428 மக்கள் வசிக்கின்றார்கள். 1 செப்டம்பர் 1998இல் இவ்வட்டாரம் உருவாகியுள்ளது. (ப.19)

அழகியநல்லூர், அல்லாளப்பேரி, அரசகுளம், ஆவியூர், சத்திரம்புளியங்குளம், டி.கடம்பங்குளம், ஜோகில்பட்டி, கல்குறிச்சி, கம்பிக்குடி, கிழவனேரி, குரண்டி, மாங்குளம், மாந்தோப்பு, முடுக்கன்குளம், முஷ்டக்குறிச்சி,  மேலக்கள்ளங்குளம், நந்திக்குண்டு, பந்தனேந்தல், பனிக்குறிப்பு, பாப்பணம், பாம்பாட்டி, பி.புதுப்பட்டி, பிசிண்டி, எஸ்.கல்லுப்பட்டி, எஸ்.மரைக்குளம், சூரனூர், டி.செட்டிக்குளம்,  டி.வேப்பங்குளம், தண்டியரேந்தல், தோணுகால், எஸ்.தோப்பூர், துலுக்கன்குளம், வி.நாங்கூர், வக்கணாங்குண்டு, வலுக்கலொட்டி, வரலொட்டி ஆகிய ஊராட்சிகள், மற்றும் காரியாபட்டி, மல்லாங்கிணர் ஆகிய பேரூராட்சிகளில் உள்ள கிராமங்களைப் பற்றிய அதன் சிறப்புகளைப் பற்றியும் நூலாசிரியர் விவாதித்துள்ளார்.  

ஒவ்வொரு ஊரின் மக்கள் தொகை, ஊரின் பெயர்க்காரணம், கல்வி நிலை, மருத்துவ வசதி, கலைஞர்கள், வாழ்ந்த பெருமக்கள் மற்றும் சான்றோர்கள், வழிபாட்டுத்தலங்கள் உள்ளிட்டவை பற்றி விவாதிப்பதோடு அந்த கிராமங்களுக்கான தேவையினையும் ஆங்காங்கே குறிப்பிடுகின்றார் நூலாசிரியர்.

காரியாபட்டி வட்டாரத்தைப் பற்றிய ஒரு களஞ்சியமாக இந்நூல் உள்ளது. பகுதியில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் சென்று தகவல்களைத் திரட்டி தொகுத்துத் தந்துள்ள விதம் பாராட்டத்தக்கது. தேவையான இடங்களில் நிழற்படங்களும் தரப்பட்டுள்ளன. தம் மண்ணிற்கு அருமையான நூலைத் தந்து பெருமை சேர்த்துள்ள நூலாசிரியரைப் பாராட்டுவோம். ஊரின் பெருமையைவ, வரலாற்றை எழுதுவதற்கு ஒரு முன்னுதாரணமான அமைந்துள்ள இந்நூல் படிக்கப்படவேண்டியது மட்டுமல்ல, பாதுகாக்கப்படவேண்டிய ஆவணமும் ஆகும்.

இந்நூலாசிரியர் ஆர்.பரதன் காரியாபட்டியில் மனு நூல் நிலையம் என்ற பெயரில் ஒரு நூலகத்தை நடத்திவருகிறார். நம் மூதாதையர்களைப் பற்றி அறிந்துகொள்ள இந்த நூல் நிலையம் முற்பட்டுள்ளது என்கிறார் அவர். அவருடைய பணி சிறக்க வாழ்த்துவோம்.

நூல் : காரியாபட்டி வட்டார மண்ணின் பெருமை
ஆசிரியர் : ஆர்.பரதன்
வெளியீட்டாளர் : உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம், இரண்டாம் முதன்மைச்சாலை, மையத் தொழில்நுட்பப் பயிலக வளாகம், தரமணி, சென்னை 600 113, தொலைபேசி : 044-22452992
பதிப்பாண்டு : 2018
விலை : ரூ.140 

17 comments:

  1. விருதுநகரில் கொஞ்சகாலம் நான் வேலைபார்த்திருக்கிறேன்.  அப்போது காரியாபட்டி பற்றி பெயர் கேள்விப்பட்டிருக்கிறேன்.  விவரங்கள் அறிந்தேன்.   பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  2. நூலைக்குறித்த விவரிப்பு அருமை.

    ReplyDelete
  3. ஆர்.பரதன் அவர்களின் சிறப்பான எண்ணம் நிறைவேறட்டும்...

    ReplyDelete
  4. நன்று.
    ஐயா உங்கள் ஊர் எது? அது குறித்து ஒரு நூல் எழுத வேண்டுகிறேன். என் சொந்த ஊர் ஜெயங்கொண்டத்திற்கும் ஆண்டிமடத்திற்கும் நடுவில் உள்ள கூவத்தூர். இந்த ஊர் குறித்து ஒரு சிறு நூல் எழுதும் எண்ணம் உள்ளது.

    ReplyDelete
  5. பிறந்த மண் கும்பகோணம். கும்பகோணத்தைப் பற்றி பல நூல்கள் வெளிவந்துள்ளன. கூறியது கூறல் என்பது தவிர்க்கப்படவேண்டும் என்பது என் எண்ணம். பிறிதொரு தலைப்பில் எழுதவுள்ளேன் ஐயா.

    ReplyDelete
  6. வணக்கம் சகோதரரே

    நல்ல நூலைப்பற்றிய அறிமுகம்.
    நாங்கள் திருமங்கலத்தில் இருந்த போது இந்தப் பெயரில் (காரியாபட்டி) ஊர் இருப்பதை அறிந்து கொண்டிருக்கிறேன். அந்த கிராமத்தில் அடங்கியுள்ள ஊராட்சிகளின் அனைத்துப் பேர்களையும் இப்போது தெரிந்து கொண்டேன். இந் நூலை எழுதிய ஆசிரியர் அவர்களுக்கும், அவரைப் பற்றி பகிர்நதளித்த தங்களுக்கும் மிக்க நன்றிகள். அனைத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
  7. நூலறிமுகம் சிறப்பு

    ReplyDelete
  8. தங்கள் நூலறிமுகம் சிறப்பாக அமைந்திருக்கிறது.

    ReplyDelete
  9. நல்லதொரு நூல் விமர்சனம்!

    ReplyDelete
  10. நூல் அறிமுகம் சிறப்பு

    ReplyDelete
  11. ஒவ்வொருவரும் தாங்கள் பணிபுரிந்த தொழில், தாங்கள் பணிபுரிந்த நிறுவனம், பிறந்த ஊர் குறித்து அவசியம் எழுத வேண்டும். வாழ்த்துகள்.

    ReplyDelete
  12. ஊரில் உள்ளவற்றை பதிவாக்கும் அதே வேளை தேவைகளைத் தெரிய வைப்பதும் வரவேற்ப்புக்குரியது-உடுவை.எஸ்.தில்லைநடராசா-இலங்கை

    ReplyDelete
  13. காரியாபட்டி வட்டார மண்ணின் பெருமை - இந்த புத்தகம் PDF வடிவில் கிடைக்குமா?

    ReplyDelete
    Replies
    1. பதிவில் தரப்பட்டுள்ள வெளியீட்டாளர் முகவரியில் தொடர்பு கொள்ள வேண்டுகிறேன்.

      Delete
  14. kamuthi vattara murai patri eluthavendum enru neenda naal ennul uranki kondirutha mannin thagam enru niraiverumo

    ReplyDelete