21 May 2022

செஞ்சி வேங்கடரமணர் கோயில் : அனந்தபுரம் கோ.கிருட்டினமூர்த்தி

அனந்தபுரம் கோ.கிருட்டினமூர்த்தி எழுதியுள்ள செஞ்சி வேங்கடரமணர் கோயில் என்னும் நூல் செஞ்சி வேங்கடரமணர் கோயில், கோயில் மண்டபமும் தூண்களும், தூண் சிற்பங்கள், கோயில் உள்ளமைப்பு ஆகிய உட்தலைப்புகளையும், இணைப்புகளையும் கொண்டுள்ளது.



கோயில் உள்கட்டட அமைப்பைத் தெரிந்துகொள்வதற்கு முன்பாக விஜயநகர அரசர்கள், செஞ்சி நாயக்கர் அரசர்களின் மண்டபம், தூண்கள் அமைப்பைத் தெரிந்துகொள்வது அவசியம் என்று கூறி, நூலாசிரியர் அவற்றை விளக்கமாகத் தந்துள்ள விதம் சிறப்பாக உள்ளது. அபிசேக மண்டபம் தொடங்கி 19 வகையான மண்டபங்கள், ருசகம் தொடங்கி 70 தூண்களின் பெயர்கள், பிரம்மத்தூண் தொடங்கி 36 வகையான தூண்கள் ஆகியவற்றைப் பற்றிச் சுருக்கமாக அவர் தந்துள்ளார். கோயில் சார்ந்த தூண்களிலும், மண்டபங்களிலும் உள்ள சிற்பங்களை சமயம், சமயம் சார்ந்த புராணம், வேதங்கள் சார்ந்த சமயம், அரசு மற்றும் அரசர் கால நிகழ்வுகள், அரசு கால (அரசர்களைக் குறித்த) வரலாறு, மக்கள் வாழ்க்கையின் பண்பாடு, கற்பனை, வானியல், மாந்திரீகம், தாந்திரீகம், காமம் தொடர்பான சிற்பங்கள் என்று வகைப்படுத்தி உரிய குறிப்புகளைத் தந்துள்ளார். இக்கோயிலைப் பற்றி மட்டுமன்றி பிற கோயில்களைப் பற்றி வாசிப்போருக்கும் இப்பகுதி துணையாக இருக்கும்.

நூலின் பின்னிணைப்பில் உள்ள, கோயில் மற்றும் விழாக்கள் தொடர்பான ஒளிப்படங்கள் கோயிலுக்கு சென்றுவந்த ஓர் உணர்வை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளன. கோயிலைப் பற்றிய சில குறிப்பிடத்தக்கனவற்றைக் காண்போம்.

தமிழ்நாட்டில் விழுப்புரம் மாவட்டத்தில் செஞ்சி வட்டத்தில் அமைந்துள்ள, திருவேங்கடமுடையான் கோயில் என்றழைக்கப்படுகின்ற வேங்கடரமணர் கோயில் செஞ்சிக் கோட்டையில் உள்ள கோயில்களில் குறிப்பிடத்தக்கதாகும். இக்கோயில் 11 மார்ச் 2014க்கு முன் முழுமையான வழிபாடு இல்லாதிருந்தது. (.13)

விஜயநகர அரசர்கள் காலத்தில் கட்டப்பட்ட இக்கோயில் விஜயநகர அரசின் கலையமைப்பை மிகுதியாகக் கொண்டுள்ளது. விஜயநகர அரசர்களின்கீழ் அரசோச்சிய நாயக்கர்கள் காலத்தில் பல அமைப்புகள் கட்டப்பட்டு விரிவாக்கப்பட்டது என்பது இக்கோயிலுக்குரிய தனித்தன்மைகளில் ஒன்று. செஞ்சி வட்டத்தில் உள்ள நாயக்கர் காலக் கோயில்களில் இது பெரியதாகும். இக்கோயில் முத்தியாலு நாயக்கர் ஆட்சிக்காலத்தில் (கி.பி.1540-1550) கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது. அவருக்குப் பிறகு செஞ்சியை ஆண்ட அடுத்தடுத்த நாயக்கர்கள் கோயிலின் வளர்ச்சியில் தனிக்கவனம்  செலுத்திவந்துள்ளனர். (.14)

ஏறக்குறைய 10,000 மீட்டர் பரப்பளவில் கோயிலும், கோயிலுக்குரிய மண்டபமும் உள்ளிட்ட பல அமைப்புகளும் உள்ளன. கொடி மரம், பலி பீடம் அமைப்புடன் தொடக்கத்தில் அமைக்கப்பட்டு, பின்னர் விரிவு பெற்றுள்ளது. (.18)

கோயிலின் சில சன்னதிகளில் படிமங்கள் அமைக்கப்படவேண்டும் என்ற மக்களின் விருப்பம் நிறைவேறும் என நம்புவோம். செஞ்சியைப் பற்றிய ஒரு பொதுப்பார்வைக்கும், கோயிலைப் பற்றிய சிறப்புப்பார்வைக்கும் இந்நூல் பெரிதும் உதவும். கல்வெட்டு, இலக்கியச்சான்றுகள் இல்லாததன் காரணமாக செய்திகளைச் சுருக்கமாகத் தெரிவிக்க வேண்டியதாக அமைந்தது என்கிறார் நூலாசிரியர். இருப்பினும் முடிந்தவரை தொடர்புடைய செய்திகளைத் திரட்டி சிறப்பாக நூலாகத் தந்துள்ள விதம் போற்றத்தக்கதாகும்.

நூல் : செஞ்சி வேங்கடரமணர் கோயில்    ஆசிரியர் : அனந்தபுரம் கோ.கிருட்டினமூர்த்தி (அலைபேசி 94421 35516)                    பதிப்பகம்: ஸ்ரீரங்கபூபதி பதிப்பகம், 13, 3ஆவது மாடி, விசுவல் அடுக்ககம், 4ஆவது முதன்மைச்சாலை (விரிவாக்கம்), கோட்டூர் கார்டன், கோட்டூர்புரம், சென்னை 600 085, அலைபேசி 94435 39539

பதிப்பாண்டு: அக்டோபர் 2018
விலை ரூ.170