01 September 2025

கே.ஏ.குணசேகரன்: இரா. காமராசு

இரா. காமராசு எழுதியுள்ள  கே.ஏ.குணசேகரன் என்னும் நூல்  வந்தனம்னா வந்தனம், நாக்குச் சிவந்த குயில், அட்ரா சக்கே, வன்மங்களின் ஆறா வடு, தொட்டில் தொடங்கித் தொடுவானம் வரை,  தொட்டுக் கொள்ளலாம் வாங்க!, கலிகெழு துணங்கை ஆடிய மருங்கு, மனுசங்கடா…நாங்க மனுசங்கடா! என்ற உட்தலைப்புகளைக் கொண்டு அமைந்துள்ளது. பின்னிணைப்புகளாக கே.ஏ.குணசேகரன் வாழ்க்கைக் குறிப்பு, வெளியிட்ட நூல்கள், எழுதிய நூல்கள், இயக்கிய நாடகங்கள், வெளிவந்துள்ள ஒலி நாடாக்கள், பெற்ற விருதுகள்/சிறப்புகள் ஆகியவை தரப்பட்டுள்ளன.

தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றிய காலத்தில் நூலின் நாயகரான கே.ஏ.குணசேகரனைக் காணவும், அவ்வப்போது பேசவும் எனக்கு வாய்ப்புகள் கிடைத்தன. இயல்பாகப் பேசுபவர், நன்கு பழகுபவர், சிரித்த முகம், எப்போதும் சுறுசுறுப்பாகக் காணப்படுபவர் என்ற வகையில் அவர் என் மனதில் ஆழப்பதிந்தார். இந்நூல் அவரைப் பற்றிய துறை சார்ந்த பல முன்னெடுப்புகளை மிகவும் அழகாக எடுத்துரைக்கிறது. இவ்வாறாகச் சாதனை படைத்த ஓர் அரிய மனிதரைக் காண கிடைத்த வாய்ப்பைப் பெருமையாகக் கருதுகிறேன். இளமைக்காலத்தில் அவர் எதிர்கொண்ட பல நிகழ்வுகளே பிற்காலத்தில் மாபெரும் கலைஞனாக உருவெடுக்க உதவியதை இந்நூல் மூலம் அறியமுடிகிறது. கே.ஏ.ஜி. என்றழைக்கப்படுகின்ற குணசேகரனைப் பற்றி அறிந்துகொள்ள நூலின் சில பகுதிகளைக் காண்போம்.



“இளம் வயதில் முறையாக, கட்டணம் செலுத்தி, கலையோ, இசையோ பயில வாய்ப்பு அவருக்கு அமையவில்லை. ஏகலைவனைப் போலத் தாமே முயன்று கற்றுத் தேர்ந்தவர். எந்தச் சூழலிலும் ‘கட்டை விரலை’க் காவு தராத, ஞானச்செருக்கு அவரிடம் இருந்தது.” (ப.11)

“கே.ஏ.ஜி. ஒரு குழந்தையைப் போல எப்போதும் பரவசமாக இருப்பார். விடாமுயற்சி, கடும் உழைப்பு ஆகியவை அவரின் உடன் பிறந்தவை. எதற்கும் அஞ்சாத துணிச்சல்காரர். உயரம் குறைந்தவர்தான், ஆனால் உள்ளத்தால் உயர்ந்தவர். கோபம் வரும். அது நிலைக்காது. அடுத்த கணம் மென் புன்னகை வரும். சாந்தமாகிவிடுவார்…” (ப.20)

“கே.ஏ.ஜி. புகழ்பெறாத பொழுதே அவரின் முதல் பேட்டியை வெளியிட்டது தஞ்சையிலிருந்து வெளிவந்த ‘நடப்பு’ இதழ். பா.செல்வபாண்டியன் பேட்டி எடுத்திருந்தார்…” (ப.24)

“கே.ஏ.ஜி. சங்க இலக்கிய ஆய்வு, உரைகளில் ஈடுபட்டது போலவே, ஆர்வம் காரணமாகவும், அவருக்குள் இருந்த கிராமியப் படைப்பு மனத்தின் வெளிப்பாடாகவும் கவிதைகள் எழுதினார். அவை சில இதழ்களில் வெளிவந்தன. மொழிபெயர்க்கவும் பட்டன…” (ப.40)

“நாட்டுப்புறப்பாடல்கள் காதல், பக்தி, பொழுதுபோக்கு என்ற நிலையில் மேடையேற்றப்பட்டன. அத் தருணத்தில் கே.ஏ.ஜி. நாட்டுப்புறப்பாடல்களின் சமூகச் சாரத்துக்கு அழுத்தம் கொடுத்தார். உழைப்பு, பகுத்தறிவு, கல்வி விழிப்புணர்வு, சாதி சமத்துவம், பொருளியல் விடுதலை, பெண் அடிமை ஒழிப்புப் போன்ற கருத்துகள் முதன்மை பெற்றன. நாட்டுப்புறக் கலைநிகழ்வுகளில் பிற இசைக்கருவிகளைக் காட்டிலும், நாட்டுப்புற இசைக்கருவிகளுக்கு முக்கியத்துவம் அளித்தார். குறிப்பாகப் ‘பறை’ எனும் ஆதி இசையைப் ‘சாப்பறை’யாக்கிய சதியிலிருந்து மீட்டு மீண்டும் ‘போர்ப்பறை’யாக முழங்கச் செய்ததில் கே.ஏ.ஜி.க்குப் பெரும்பங்குண்டு…” (ப.59)

“கே.ஏ.ஜி. நாட்டுப்புறவியல் புலத்தில் அதிகம் ஆர்வம் காட்டி ஈடுபட்டது ‘நாட்டுப்புறக் கலைகள்’ பற்றித்தான். இது குறித்துப் பல ஆய்வுகளில் ஈடுபட்டு, நூல்களையும் தந்துள்ளார்…..நாட்டுப்புறக்கலைகளை அறிமுகம் செய்தல், நாட்டுப்புறக்கலைகளை இலக்கணப்படுத்துதல், சமூகப் பயன்பாட்டை உறுதி செய்தல் ஆகிய வகைகளில் இந்நூற்களின் கருத்துகள் அமைந்துள்ளன.” (ப.68)

“கே.ஏ.ஜியின் நாட்டுப்புறவியல் துறைப் பங்களிப்பில் நாட்டுப்புற இலக்கியங்கள், நாட்டுப்புறக்கலைகள் ஆகியவற்றுக்கு அடுத்தபடியாக நாட்டுப்புறப் பண்பாடு அமைகிறது. குறிப்பாக இரண்டு கருத்து நிலைகள் முக்கியத்துவம் பெறுகின்றன. ஒன்று அதுவரை அதிகம் கவனம் பெறாத பழங்குடி மக்களின் வாழ்வியல். அடுத்து நாட்டுப்புறத்தாரில் பெரும்பான்மையினராகிய ஒடுக்கப்பட்டோர்-தலித்துகளின் பண்பாட்டு நிலை. நாட்டுப்புறவியலை-சேரிப்புறவியல் எனும் அளவுக்கு கே.ஏ.ஜி. சிந்திக்கிறார்.” (ப.74)

“…நாடக உலகில் நுழையும்போது கவனம் பெற்ற கலைஞராக அவர் விளங்கினார். இசைக்கலைஞர், பாடகர், நடிகர், நாடக இயக்குநர், நாடக எழுத்தாளர், நாடகத் தயாரிப்பாளர், நாடகக் கல்வியாளர், நாடகப் பயிற்றுநர் என கே.ஏ.ஜி ஒரு ‘All rounder’ ஆக விளங்கினார்…” (ப.82)

குணசேகரனுடைய குடும்பத்தார், நண்பர்கள், துறைசார்ந்த அறிஞர்கள், கலைஞர்களைச் சந்தித்து விவரங்களைத் தொகுத்தும், அவருடைய, அவரைப் பற்றிய நூல்கள் மூலமாகத் தரவுகளைத் திரட்டியும் ஓர் அருமையான படைப்பினைத் தந்துள்ள நூலாசிரியரின் முயற்சி மிகவும் பாராட்டத்தக்கதாகும்.

நூல் : கே.ஏ.குணசேகரன்
ஆசிரியர் : இரா.காமராசு
பதிப்பகம் : சாகித்திய அகாதெமி, தொலைபேசி 044-24311741/24354815
ஆண்டு : முதல் பதிப்பு, 2025
விலை : ரூ.100

-----------------------------------------------------------
----------------------------------------------------------- 

No comments:

Post a Comment