24 July 2014

ராஜராஜன் நேருவின் பார்வையில்

---------------------------------------------------------------------------------------------------
இன்றும் (24-7-2014) நாளையும் (25-7-2014) கங்கை கொண்ட சோழபுரத்தில் நடைபெறும் முதலாம் ராஜேந்திரசோழன் 1000ஆவது ஆண்டு விழாவின் நினைவாக (கி.பி.1014-2014) ராஜராஜன் 1000ஆவது ஆண்டு விழாவில் ராஜராஜன் நேருவின் பார்வையில் என்ற தலைப்பில் 26.9.2010 நாளிட்ட தினமணி இதழில் வெளியான கட்டுரை
---------------------------------------------------------------------------------------------------


ல்கியின் "பொன்னியின் செல்வன்' வரலாற்றுப் புதினத்தைப் படிக்கும் வாசகர்கள் அக்காலகட்டத்துக்கே செல்லும் உணர்வைப் பெறுவர்.ஒவ்வொரு கதாபாத்திரமும் வாசகர்களுக்கு மிகவும் நெருக்க மாவதோடு நிகழ்வு நடைபெறும் இடங்களுக்கே அழைத்துச் சென்றுவிடும். இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு, தனது மகள் இந்திரா பிரியதர்ஷினிக்கு எழுதிய கடிதங்களைப் படிக்கும்போதும் இவ்வுணர்வு ஏற்படும். இக்கடிதத் தொகுப்பைக் கொண்ட  "உலக வரலாறு' (Glimpses of World History) என்ற நூலைப் படிக்கும் வாசகர்கள் அந்தந்த இடங்களுக்கே சென்ற உணர்வைத் தரும்படி அவர் எழுதியுள்ளார்.

""பள்ளியிலோ, கல்லூரியிலோ நாம் அறிந்துகொள்ளும் வரலாறு போதுமானதல்ல. மற்றவர்கள் எப்படியோ எனக்குத் தெரியாது. ஆனால், நான் பள்ளிக்காலத்தில் ஓரளவே கற்றுக் கொண்டுள்ளேன். சிறிதளவே இந்திய வரலாற்றையும், இங்கிலாந்து வரலாற்றையும் கற்றேன். இன்னும் சொல்லப்போனால் நான் படித்தவை அதிகமாக நம் நாட்டைப் பற்றிய தவறான மற்றும் திரித்துவிடப்பட்ட செய்திகளே. கல்லூரியை விட்டு வெளியே வந்த பின்னர்தான் சில உண்மையான வரலாற்றைப் படிக்க ஆரம்பித்தேன். அதிர்ஷ்டவசமாக என்னுடைய சிறைவாசம் என் அறிவைப் பெருக்கிக் கொள்ள வாய்ப்பளித்தது''.

ஒவ்வொரு கடிதத்தின் ஆரம்பத்திலோ முடிவிலோ இவ்வாறான கருத்துக்ளைத் தெரிவித்து மகளை தன் கடிதத்துடன் நேரு பிணைக்கிறார். உலக அரங்கில் அவர் தொடாத துறையே இல்லை என்று கூறுமளவு அனைத்துச் செய்திகளைப் பற்றிய கடிதங்களை எழுதியுள்ள நேரு, தன் நூலில் மாமன்னன் இராஜராஜனைப் பற்றியும், இராஜேந்திரனைப் பற்றியும் குறிப்பிடுகிறார்.

தென்னிந்தியா பல மன்னர்களையும், போராளிகளையும் ஒரு பெரும் மனிதனையும் உருவாக்கியுள்ளது என்ற தலைப்பில் 13.5.1932 அன்று எழுதியுள்ள கடிதத்தில் ஹர்ஷரின் மரணம் தொடங்கி பல செய்திகளைக் குறிப்பிடுகிறார். பல்லவர், பாண்டியர் பற்றி எழுதியபின் சோழர்களைப் பற்றி எழுதுகிறார்.

""சோழராட்சி 9-ம் நூற்றாண்டின் நடுவில் தென்னகம் முழுதும் பரவ ஆரம்பித்தது. கடலிலும், அதன் ஆதிக்கம் இருந்தது. வங்காள விரிகுடாவிலும் அரபிக்கடலிலும் பெரிய கடற்படையைக் கொண்டிருந்தது. சோழர்களின் முக்கிய துறைமுகம் காவிரிப்பூம்பட்டினம். சோழராட்சிக்கு அடிகோலிய விஜயாலயன் மிகப்பெரிய மன்னன். சோழர்கள் வடக்கே தம் எல்லையை விரிவுப்படுத்தத் தொடங்கியபோது திடீரென ராஷ்ட்ர கூடர்களால் தோற்கடிக்கப்பட்டனர். ஆனால், மறுபடியும் இராஜராஜன் காலத்தில் எல்லை விரிவடைய ஆரம்பித்ததுடன் பழம்பெருமையும் தக்கவைக்கப்பட்டது.

இது 10-ம் நூற்றாண்டின் இறுதிக்கட்டம். அக்காலகட்டத்தில் வட இந்தியாவில் முகலாயர் படையெடுப்பு நடைபெற்றது. வடக்கே நடந்த நிகழ்வுகளால் ராஜராஜனுக்கு எவ்விதப் பாதிப்பும் இல்லை. தொடர்ந்து, படையெடுப்புகளில் அவர் ஈடுபட்டார். இலங்கையை வென்றார். அங்கு சோழர்கள் 70 ஆண்டுகள் ஆட்சி செய்தனர். அவரது மகன் இராஜேந்திரன் தந்தையைப் போலவே போர்க்குணம் மிக்கவன். தன் யானைகளை கப்பலில் எடுத்துச் சென்று தென் பர்மாவை வென்றான். வடஇந்தியா சென்று வங்காள மன்னனைத் தோற்கடித்தான். குப்தர்களுக்குப்பின் இக்காலகட்டத்தில் சோழராட்சி விரிவடைய ஆரம்பித்தது.

ஆனால், அது நெடுநாள் நீடிக்கவில்லை. தான் வென்ற நாடுகளைத் தக்க வைக்கும் முயற்சியில் இராஜேந்திரன் ஈடுபடவில்லை. கி.பி. 1013 முதல் 1044 வரை அவன் அரசாட்சி செய்தான். அவனது மரணத்திற்குப்பின் சோழராட்சி சரிய ஆரம்பித்தது.

சோழர்கள் போர் வெற்றிகளில் மட்டும் சிறந்தவர்கள் அல்லர். கடல் வணிகத்திலும் பெயர் பெற்றவர்கள். காவிரிப்பூம்பட்டினத்தில் வணிகப் பொருள்களின் ஏற்றுமதியும், இறக்குமதியும் நடைபெற்றது. கடல் வழியாக வெகுதூரம் வரை வணிகப் பொருள்கள் அனுப்பப்பட்டன. யவனர்கள் அல்லது கிரேக்கர்களின் குடியிருப்பு அங்கு இருந்தது.

இதே கடிதத்தில் தொடர்ந்து இந்திரா பிரியதர்ஷினிக்கு ஒரு செய்தி கூறிவிட்டு மறுபடியும் சோழர்களைப் பற்றி எழுதுகிறார். மகளுக்கு அவர் எழுதும் குறிப்பு வாசகரையும் தெளிவுப்படுத்துகிறது.

""பல நூற்றாண்டு கால தென்னிந்திய வரலாற்றை உனக்குச் சுருக்கமாகச் சொல்ல முயன்றுள்ளேன். என் இந்த முயற்சி உனக்குச் சிறிய குழப்பத்தைக்கூட உண்டாக்கலாம். அப்போது பல மன்னர்களைப் பற்றியும், வம்சங்களைப் பற்றியும் அறிய எண்ணும்போது குழப்பத்தில் ஆழ்ந்துவிடக்கூடாது.

மன்னர்களையும் அவர்களுடைய வெற்றியையும்விட மிகவும் முக்கியமானது அந்நாளைய பண்பாடு மற்றும் கலை தொடர்பான பதிவே. கலையியல் நோக்கில் எடுத்துக் கொண்டால் அதில் வடஇந்தியாவைவிட தென்னிந்தியாவின் பங்களிப்பே அதிகம். வடஇந்தியாவில் பெரும்பாலான மரபுச் சின்னங்களும், கவின்மிகு கட்டடங்களும், சிற்பங்களும் போரின் காரணமாகவும், முகலாயர்களின் படையெடுப்புகளாலும் அதிக பாதிப்புக்குள்ளாயின.

இக்காலகட்டத்தில் சோழமன்னன் இராஜராஜனால் ஓர் அழகான கோயில் தஞ்சாவூரில் கட்டப்பட்டது. பாதமியிலும், காஞ்சிபுரத்திலும் கூட அழகான கோயில்கள் இருந்தன. எட்டாம் நூற்றாண்டின் பிற்பாதி நிலை இதுவே. ராஜராஜன் காலத்தில் அழகான செப்புத்திருமேனிகளும் காணப்பட்டன. அவற்றுள் மிக முக்கியமானது நடராஜர் சிற்பமே.

கங்கைகொண்ட சோழபுரத்தில் சோழமன்னன் முதலாம் இராஜேந்திரன் பல நீர்ப்பாசன வசதிகளைச் செய்தான். அவற்றுள் முக்கியமானது 16 மைல் நீளமுள்ள நீர்த்தேக்கமாகும். இது கட்டப்பட்டு 100 ஆண்டுகளுக்குபின் அங்கு வந்த அரேபியப் பயணி அல்பெரூனி அதைக் கண்டு வியக்கிறார். தம் மக்கள் அதைக் கண்டால் வியந்து போவார்கள்'' என்றும் கூறி இதுபோன்ற கட்டுமானத்தை அவர்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை என்றும் புகழாரம் சூட்டுகிறார்.

அங்கோர்வாட் (கம்போடியா) மற்றும் ஸ்ரீவிஜயம் (இந்தோனேசியா) என்னும் தலைப்பில் அமைந்த 17.5.1932-ம் நாளிட்ட கடிதத்தில் நேரு ஸ்ரீவிஜயத்துடன் சோழர்கள் கொண்ட தொடர்பு பற்றியும், தென்னிந்தியாவில் சோழப்பேரரசு 11-ம் நூற்றாண்டில் உச்சநிலையில்  இருந்தபோது ஸ்ரீவிஜயமும் அத்தகு நிலையில் இருந்தது பற்றியும், இரு பேரரசுகளுக்கும் இடையே இருந்த நட்புறவு பற்றியும் குறிப்பிடுகிறார்.

11-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இவர்களுக்கிடையே போர் மூண்டது பற்றியும், அக்காலகட்டத்தில் சோழமன்னன் முதலாம் இராஜேந்திரன் கடற்பயணம் மேற்கொண்டு ஸ்ரீவிஜயத்தைக் கைப்பற்ற முயன்றதையும் விரைவில் அந்த அதிர்ச்சியில் இருந்து ஸ்ரீவிஜயம் மீண்டது பற்றியும் குறிப்பிடுகிறார்.

சோழர்களைப் பற்றிய ஒரு பறவைப் பார்வையை தன் கடிதங்களில் நேரு குறிப்பிட்டுள்ளதன் மூலமாக அவர் உலக வரலாற்றில் சோழர்களுக்குத் தந்துள்ள முக்கியத்துவத்தை உணரமுடிகிறது. 

 நன்றி :  தினமணி, 26.9.2010

13 July 2014

வாசிப்பை நேசிப்போம் : ஜ. பாக்கியவதி*


 

ஒரு விடுமுறையின்போது படிக்கும் பழக்கம் எனக்கு ஆரம்பித்தது. தற்போது தொடர்ந்து செய்தித்தாளை படிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளேன். எட்டாம் வகுப்பு வரை படித்துள்ள எனக்கு, வாசிப்புப் பழக்கம் பல பயன்களைத் தந்துள்ளது என்பது மறக்க முடியாத உண்மை.

திருமணத்திற்கு முன்பாக நான் ரேடியோவில் பாட்டுகள், செய்திகள், ஒலிச்சித்திரம் போன்றவற்றை ஆர்வமாகக் கேட்பதைப் பழக்கமாகக் கொண்டிருந்தேன். வாரம் ஒரு முறை எனது சகோதரர்கள் கதைப்புத்தகம் வாங்கித் தருவார்கள். அதை சகோதர - சகோதரிகள், அண்ணிகள் போட்டி போட்டுக் கொண்டு படிப்போம். என் தந்தை அவ்வப்போது செய்தித்தாளை வாங்கிப் படிப்பார்கள். அப்போது வாசிக்கும் பழக்கம் மிகக் குறைவாகவே இருந்தது.

எங்களது திருமணத்திற்குப் பின் நாளிதழ் படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளச் சொன்னார் என் கணவர். எனக்கு அப்போது படிப்பில் கவனம் இல்லை. குடும்பத்தைக் கவனிப்பதும் தொடர்ந்து மகன்களை வளர்ப்பதிலும்தான் கவனம் இருந்தது. படிப்பு என்பது ஏதோ ஒரு அனாவசிய சுமை போல எனக்கு அப்போது இருந்தது. என் கணவரோ பல ஆண்டுகளாக ஆங்கில நாளிதழ் வாசகர். நாங்கள் வீட்டில் மகன்களோடு நாளிதழைப் படிப்போம். விடுமுறை நாள்களில் எங்களது வாசிப்பின் நேரம் அதிகமாக இருக்கும். என் கணவர் எனக்கும் என் மகன்களுக்கும் ஆங்கில நாளிதழை வாசித்து அதைத் தமிழில் அப்படியே சொல்லித் தருவார்.

எங்களது இரு மகன்களும் அவ்வாறு படிக்கும் திறனை வளர்த்துக் கொண்டுள்ளார்கள் என்பது மகிழ்ச்சிகரமான செய்தியாகும். இரு மகன்களும் தினமும் மாறி மாறி ஆங்கில இதழைத் தமிழில் படித்துக் காண்பிப்பர். இவர்கள் பேசுவதையும் வாசிப்பதையும் நான் தொடர்ந்து கேட்பேன். நான் இவ்வாறு கேட்கும்போது வீட்டில் ரேடியோ மற்றும் தொலைக்காட்சியை அணைத்துவிடுவோம். புதிய சொல், புதிய செய்தி, புதிய சம்பவம் என சுவாரசியமாக எங்களது வாசிப்பு தொடரும். மகன்கள் படித்து வேலைக்குச் சென்றவுடன் செய்தித்தாள் வாசிப்பைத் தொடர ஆரம்பித்தேன். எங்கள் குடும்ப நண்பர் ஒருமுறை ஏதாவது ஒரு செய்தித்தாளை தினமும் படிக்க வேண்டும் என்ற ஆர்வத்தை என்னுள் உண்டாக்கினார். ஐந்து வருடங்களாகத் தான் தமிழ் நாளிதழ் (தினமணி) படித்துவருகிறேன்.

முன்பு தொலைக்காட்சி எங்காவது ஒரு வீட்டில் இருக்கும். அதில் செய்திகள், பாட்டு கேட்பது வித்தியாசமாக இருந்தது. தொலைக்காட்சியில் செய்தி கேட்கும்போது சமயத்தில் படத்துடன் பார்க்க வாய்ப்பு உள்ளது. சில செய்திகளைத் திரும்பத் திரும்பப் போட்டுக் காண்பிப்பர். விபத்து போன்ற செய்திகளை அவ்வாறு காண்பிக்கும்போது கஷ்டமாக இருக்கும். இவ்வகையான பாதிப்பினை செய்தித்தாள் ஏற்படுத்தாது. தற்போது மாணவ - மாணவிகள் முதற்கொண்டு டச்போன், நெட், பேஸ்புக் என்ற நிலையில் பேசிக்கொள்கிறார்கள். அவை தொடர்பான செய்திகளைக் கூறுகிறார்கள். ஆனால் செய்தித்தாள்களில் வந்த செய்திகளைப் பற்றிக் கேட்டால் விழிக்கிறார்கள். எட்டாவது படித்த என்னால் அவர்கள் கேட்கும் நாட்டு நடப்புகளுக்குப் பதில் கூறமுடியாது.

வீட்டில் இருக்கும் பெண்மணிகள்கூட செய்திகளைப் பார்ப்பது, கேட்பது போன்றவற்றைத் தெரிந்து வைத்திருக்கிறார்கல். என் தாயார், வயது 83. வீட்டில் தொலைக்காட்சியில் செய்தி கேட்கிறார்கள். செய்தித்தாளைப் புரட்டி தலைப்புச் செய்திகளைப் பார்க்கிறார்கள். அந்தக் காலத்து ஐந்தாம் வகுப்பு படித்த அவர்கள் செய்தித்தாள் படிப்பதில் கவனம் செலுத்துகிறார்கள். அவர்கள் கேட்டும் கேள்விகளுக்கு பேரன் பேத்திகளால் பதில் கூறமுடியவில்லை.

என் மாமியார், வயது 70. ஆறாம் வகுப்பு வரை படித்தவர்கள். 10 வருடங்களுக்கு முன்பே தன் பேத்தியின் கணவர் ஜம்முவில் ராணுவத்தில் பணியாற்றிய இடமான ரஜோரிக்குத் தனியாகச் சென்றார்கள். திரும்பி வரும்போது பேத்தியின் குடும்பத்தோடு வந்தார்கள். அவர்கள் ராமாயணம், மகாபாரதம் போன்றவற்றை ஈடுபாட்டோடு படிப்பார்கள்.

வேலைக்குப் செல்பவர்கள் வீட்டிற்கு வந்ததும் பிள்ளைகளிடம் அன்பாகப் பேசி அதற்குப் பின் படிப்பைப் பற்றியும், வாசிப்பைப் பற்றியும் சொல்லிக் கொடுக்க வேண்டும். வீட்டில் இருப்போர் உரிய நேரத்தை அதற்காக ஒதுக்க வேண்டும். பொது அறிவைப் பற்றியும் குழந்தைகளிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும். தற்போதைய தலைமுறையினர் பேஸ்புக், பிளாக், டச்போன், ஐபேட் போன்றவற்றை தம் அறிவை வளர்த்துக் கொள்ளும் ஒரு சாதனமாகப் பயன்படுத்திக் கொள்ள முயலவேண்டும். 

தமிழகத்தில் இந்தியாவில், வெளிநாட்டில் நடந்த மற்றும் நடக்கின்ற அரசியல் உள்ளிட்ட அன்றாட நிகழ்வுகளை உன்னிப்பாகக் கவனிக்க வேண்டும். அதனைப் பற்றி நண்பர்களோடும், உறவினர்களோடும் கலந்துபேச வேண்டும். பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் ஆசிரியர்கள் நல்ல நூல்களை வாசித்தல், செய்தித்தாள் வாசித்தல் போன்ற பழக்கங்களை உண்டாக்க வேண்டும். அவர்களும் இதற்காக நேரம் ஒதுக்க வேண்டும். 

இதுபோன்ற வாசிப்பின் முக்கியத்துவத்தை நம் தலைமுறையினருக்கு எடுத்துச் செல்லும் நிலையில் அவர்கள் சரியான வாழ்க்கைப் பாதையில் செல்வதோடு மற்றவர்களுக்கும் முன்னுதாரணமாகவும் அமைவர்.

*தினமணி சென்னைப்பதிப்பில்  என் மனைவி திருமதி பாக்கியவதி எழுதியுள்ள கட்டுரை
நன்றி : தினமணி, சென்னை, 7 ஜூலை 2014, கருத்துப்பேழை, பக்கம் 6

07 July 2014

நாலாயிர திவ்யப் பிரபந்தம் : திருமாலை, திருப்பள்ளி எழுச்சி

நாலாயிர திவ்யப் பிரபந்தத்தில் திருச்சந்தவிருத்தத்தைத் தொடர்ந்து தொண்டரடிப்பொடியாழ்வார் அருளிய திருமாலை மற்றும் திருப்பள்ளியெழுச்சியை நேற்று நிறைவு செய்தேன். 

சோழ நாட்டுத் தலமான புள்ளம்பூதங்குடிக்கு அருகிலுள்ள மண்டபங்குடியில்  பிறந்த விப்ரநாராயணர் திருவரங்கத்தில் நந்தவனம் அமைத்து பெருமாளுக்குத் தொண்டு செய்துவந்தார். அப்போது உத்தமர்கோயிலில் பிறந்த தேவதேவி தம் தமக்கையோடும் தோழிகளோடும் உறையூர் சென்று அரசன் முன் ஆடல் பாடல் நிகழ்த்திப் பரிசு பெற்றுத் திரும்பும்போது இவருடைய சோலையில் தங்கினாள். அவர் இவளை ஏறெடுத்தும் பார்க்கவில்லை. இவரைத் தன் வலையில் வீழ்த்துவதாகச் சபதம் செய்து அவ்வாறே செய்தாள். பின்னர் இவரைப் பிரிந்து தன் ஊரை அடைந்தாள். இவர் அவள் வீட்டை அடைய பணம் இல்லாதவரை வெளியில் நிறுத்தினாள். இவரைத் தடுத்தாட்கொள்ள விரும்பிய பெருமான், ஆலயப் பொன்வட்டிலைக் கொண்டு சென்று அவருடைய தோழன் என்று கூறி அவளிடம் தர, அவள் இவரை உள்ளே அனுமதித்தாள். ஆலய வட்டில் காணவிலை என்று கோயில் அர்ச்சகர் அரசனிடம் கூற, அவன் விசாரணை செய்ய இவர்தான் களவாடினார் என்று சிறைப்படுத்தினான். பெருமான் அன்றிரவு அரசனின் கனவில் நிகழ்ந்தது கூற, மறுநாள் அரசன் இவரை விடுவித்தான். தான் தவறியதற்குப் பரிகாரமாக அரங்கனடியார்களுடைய பாத தீர்த்தத்தைப் பருகி தூயரானார். பின்னர் தொண்டரடிப்பொடி என்னும் பெயர் பெற்று, திருமாலை, திருப்பள்ளி எழுச்சி என்கிற இரு திவ்யப் பிரபந்தங்களை அருளினார். அவர் இயற்றிய பிரபந்தங்களிலிருந்து சில பாடல்களை உரையுடன் படிப்போம்.  

திருமாலை
பச்சை மா மலைபோல் மேனி,
பவளவாய் கமலச் செங்கண்
அச்சுதா! அமரர் ஏறே!
ஆயர் தம் கொழுந்தே! என்னும்
இச்சுவை தவிர, யான் போய்
இந்திர லோகம் ஆளும்
அச்சுவை பெறினும் வேண்டேன்,
அரங்கமா நகருளானே!
(எண்.873)

அடியவர்களுக்காகத் திருவரங்கத்தில் நித்தியவாசம் செய்பவனே! பசுமை நிறமுள்ள பெரிய மலை போன்ற திருமேனியையும், பவளம் போன்ற திருவாயையும், செந்தாமலை மலர் போன்ற திருக்கண்களையும் உடையவனாய், அடியாரை ஒருநாளும் நழுவ விடாதவனே! நித்தியசூரிகளுக்குத் தலைவ்னே!  இடையர்களுக்குத் தலைவனே!  என்னும்படியான இச்சுவையை விட்டு (உன் திருநாமங்களைச் சொல்லும்) நான் வெகுடதூரம் போய் பரமபதத்தை ஆளும்படியான அச்செல்வத்தைப் பெறுவதாயினும் (அதை) விரும்பமாட்டேன். 

வண்டினம் முரலும் சோலை, மயிலினம் ஆலும் சோலை,
கொண்டல் மீது அணவும் சோலை, குயிலினம் கூவும் சோலை
அண்டர்கோன் அமரும் சோலை, அணி திருவரங்கம் என்னா
மிண்டர் பாய்ந்து உண்ணும் சோற்றை விலக்கி நாய்க்கு இடுமின் நீரே
(எண்.885)

திருவரங்கத்தின் வண்டுகளின் கூட்டங்கள் சோலைகளில் ரீங்காரம் செய்கின்றன; மயில் கூட்டங்கள் நடனமாடுகின்றன; மேகங்கள் மேலே வந்து அணைந்து நிற்கின்றன; குயில் கூட்டங்கள் ஒன்றையொன்று அழைக்கின்றன; தேவாதி தேவனான சர்வேஸ்வரன் நித்தியவாசம் செய்கிறான். சம்சாரத்திற்கு ஆபரணமாகவுள்ள (இப்படிப்பட்ட பெருமைகளையுடைய) திருவரங்கம் என்று வாயால் சொல்லாத, நன்றி இல்லாத மூர்க்கர்கள் மேல் விழுந்து சாப்பிடும் சோற்றை விலக்கி, நீங்கள் நாய்க்குப் போடுங்கள். 
 


 


திருப்பள்ளியெழுச்சி
கடி - மலர்க் கமலங்கள் மலர்ந்தன, இவையோ?
கதிரவன் கனைகடல் முளைத்தனன், இவனோ?
துடியிடையார் சுரி குழல் பிழிந்து உதறித்
துகில் உடுத்து ஏறினர், சூழ் புனல் அரங்கா!
தொடை ஒத்த துவளமும் கூடையும் பொலிந்து
தோன்றிய தோள் தொண்டரடிப் பொடி என்னும்
அடியனை அளியன் என்று அருளி உன் அடியார்க்கு
ஆட்படுத்தாய்! பள்ளி எழுந்தருளாயே. 
(எண்.926)

சோலைகளின் நடுவிலுள்ள நீர்நிலைகளில் தாமரை மலர்கள் மலர்ந்தன. கதிரவனும் கடலின் மேற்பரப்பில் தோன்றிவிட்டான். அழகிய இடையுள்ள பெண்கள் காவிரியில் நீராடி தம் குழல்களைப் பிழிந்து உதறி ஆடை உடுத்திக் கரையேறினர். காவிரி சூழ்ந்த திருவரங்கத்தில் பள்ளி கொண்ட பெருமானே! தொண்டரடிப் பொடி என்னும் திருநாமமுடைய அடியேன், துளசி மாலையைத் தொடுத்து எடுத்துக்கொண்டு தங்களுக்கு அணிவிக்க வருகின்றேன். அடியவனான என்னை இரங்கத்தக்கவன் என்று அருள் செய்து உன் அடியார்க்கு ஆட்படுத்த அருள் செய்வாயாக. அரவணைவிட்டுப் பள்ளி எழுந்தருள்க.

நாலாயிர திவ்யப் பிரபந்தம், மூலமும் தெளிவுரையும், முதல் தொகுதி, உரையாசிரியர் முனைவர் இரா.வ.கமலக்கண்ணன், வர்த்தமானன் பதிப்பகம், சென்னை, 2011, (நான்கு தொகுதிகள்) ரூ.1200, தொலைபேசி: 9941863542, 9094963125, 9380630192, 28144995, 28140347, 43502995

இதுவரை நாம் நிறைவு செய்த பிரபந்தங்கள்
பெரியாழ்வார் திருமொழி
திருப்பாவை
நாச்சியார் திருமொழி
பெருமாள் திருமொழி
திருச்சந்தவிருத்தம்